e-mozi

மடல் 053: ஆலிலை மேல் ஒரு பாலகன்Date of publication: 11 March 1999

அது ஒரு மகப்பேறு மருத்துவ மனை. நண்பன் மருத்துவன். புதிய வரவை உலகம் காணும் இடம். குழந்தை பிறப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. குழந்தை உருவாவது கூட சாதாரண விஷயமில்லை என்பது திருமந்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அண்டத்தில் சக்தி என்பது அழிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுகிறது. அதன் உச்ச படிமம்தான் குழந்தை. குழந்தை தன் மென்மையால், தன் கள்ளமில்லாத் தன்மையால், அண்டி இருக்கும் தகைவால், ஒரு சின்ன புன்னகையால் உலகை வசியம் செய்து விடுகிறது. கோபக்கார விச்வாமித்திரர்கள் கூட குழந்தையைக் கண்டால் மெல்லிய புன்னகையாவது விடாமல் போவது கடினம்.

குழந்தை தாயின் மடியில் கிடப்பதும், தாய் உச்சி முகர்வதும், குழந்தை முலைப்பாலுக்கு அலைவதும் காணக்கிடைக்காத காட்சிகள். அந்த வாத்சல்யம் மனதை நெகிழ வைக்கக் கூடியது. பிறந்த குழந்தைக்கு வாயைச் சப்பி பால் குடிக்க எப்படித் தெரிகிறது என்பது பிரம்ம இரகசியம். அன்றும் இப்படித்தான்,அந்தக் குழந்தை முலையெல்லாம் தடவி, வாயை விரித்துக் கொண்டு நின்றது. கண் முன்னே பறவைகள் உணயூட்டும் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. சின்னப்பறவை குய்யோ, முறையோ என்று கீச்சிட்டிக் கொண்டு, வாயை, வாயைத் திறக்க தாய் அலகால் ஊட்டும் காட்சி. வாயைக் கிழித்து விடுமோ என்று சில நேரம் நமக்கு பயம் வருவதுண்டு. ஆனால் குத்தாமல், வாயைக் கிழிக்காமல்தான் தாய் பறவை குஞ்சிற்கு ஊட்டுகிறது. கல்லினில் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவல் யாரோ நிற்கின்றனர்.

அப்புறம், இந்த பன்றி பால் ஊட்டுவது. நம்ம ஊர் சின்ன கருப்புப் பன்றி அல்ல. ஐரோப்பியர் பன்றிகள். பக்கத்திற்கு ஒரு வரிசை என்று பல வரிசைகளில் வெள்ளைப்பன்றிகள் பால் குடிப்பது வேடிக்கையாய் இருக்கும். அவை முனங்கும் முனங்கல் ஊர் பூராக் கேட்கும். கன்னுக் குட்டி பால் குடிப்பது ஒரு அழகு. அது முட்டுகிற முட்டைப் பார்த்தால் தாய்க்கு வலிக்காதோ எனக் கேட்கத் தோன்றும்."மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?" என்று பின் தோன்றும்.
ஆக இந்த உணவிடுதல் என்பது ரொம்பவும் சுவாரசியமான விஷயம்தான்.

உணவு என்பது உலகிற்கு பிரதானம். உயிருக்கு பிரதானம். அதனால்தான் "உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது பழமொழி. பசித்தவனுக்கு முன்,"கஞ்சி வரதப்பா!" என்று பெருமாளைச் சேவித்தால் "எங்கப்பா வருது?" என்றகேள்வி கூடவே வருவது தவிர்க்க முடியாதது:-) உணவில்லையேல் உயிரில்லை, உலகின் அழகில்லை.

செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா? இல்லையா? என்று ஆராய முற்பட்டபோதுதான் விஞ்ஞானிகளுக்கு உயிர் என்றால் என்ன? அதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழுந்தது. தூங்கி எழுந்தால் நாம் உயிருள்ள உலகில் வாழ்கிறோம், எனவே உயிர் என்றால் என்ன என்று நாம் கேட்பதில்லை. உயிரைக்கண்டு பிடி என்று யாராவது சொல்லும் போதுதான் உயிர் என்றால் என்ன? என்று விளக்கம் சொல்ல வேண்டியது வருகிறது. அப்படித் தேடியபோது கிடைத்த சுவாரசியமான விளக்கம், "உயிர் என்றால் உண்ணக் கூடியது, உண்ணப் படக் கூடியது" என்பதாகும். பசுமையான தாவரங்கள்/நுண் உயிர்கள் ஒரு சங்கிலியை ஆரம்பித்து வைக்கின்றன. அப்போது சூரியன் உண்ணக் கூடியவனாக மாறுகிறான்! அதன் பின் ஒன்றைத் தின்று, ஒன்று என்று ஒரே சாப்பாடுதான்! (கல்யாண சமையல் சாதம்,காய் கறிகளும் பிரமாதம், இந்த கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்-மாயா பஜார்).

ஆக, உண்ணுதல் என்பது உயிர்ப் பண்பு. வாழ்வின் அடிப்படைக் கூறு. "விருந்து புறத்தா, சாவா மருந்தெனினும் வேண்டல்" என்கிறான் வள்ளுவன். சாப்பாடு கொடுப்பது உயர்ந்த பண்பு-எல்லா கலாச்சாரங்களிலும்.

குழந்தைக்கு உணவு கொடுப்பது என்பது ஒரு பெரிய கலாச்சார விழுமியமாகவே தமிழ் மண்ணில் இருந்து வருகிறது. கிண்ணத்தில் அன்று தின்ற பருப்பு அமுது இன்றும் ஏனோ இனிக்கிறது.


தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதித் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலாறா கண்டாய். உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மாமதீ! விரைந் தோடிவா!

என்பது பெரியாழ்வார் திருமொழி. அடடா! இந்தச் சந்திரன் என்பது குழந்தைப்பருவத்திலிருந்து, பருவமேயும் வரை கூடவே வரச் செய்து விட்டனர், தமிழர்கள்!ஞான சம்மந்தருக்கு பால் ஊட்டிய பராசக்தியும், விண்ணின் மாமதியைக் கூப்பிட்டுஇருப்பாள்! குழந்தைகள் ஒரு வயதுக்கு மேல் கொஞ்சம் அடம் பண்ணத் தொடங்கும். அப்போது உணயூட்டுவது பெரிய செப்பிடி வித்தை. யசோதைப் பிள்ளையின் அடம்பாருங்கள்:

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்த திருண்ட குழல் வாராய்! அக்காக்காய்!
மாயவன் தன் குழல் வாராய் அக்காக்காய்!


நம்ம ஊர் அம்மாக்களுக்கு குழந்தைக்கு வேடிக்கை காட்ட காக்காவிலிருந்து குருவி வரை எல்லாம் வேண்டி இருக்கிறது. அந்தக் காலத்தில் பேய்க்குக் கூடசோறு வைக்கும் அளவிற்கு தமிழகத்தில் பாலும், தேனும் பெருகி ஓடியிருப்பது இதனால் தெரிகிறது :-)

விட்டு சித்தரும், வேண்டிப் பார்க்கிறார், கேலி செய்து பார்க்கிறார், அடித்தும் பார்க்கிறார். இந்தப் பிள்ளை எதற்கும் மசிவதாய் தெரியவில்லை. பயம் என்பது துளிக் கூட இருந்தால்தானே? வேறு வழியே இல்லாமல் கண்ணனிடம் "கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா!" என்று முறையிட்டு, கொஞ்சம் சாப்பிடு அப்பா! என்கிறார். வைணவ வியாக்கியானம் கேட்டுப் பழகியவர்களுக்கு,"கொஞ்சம் பயந்த மாதிரியாவது, காட்ட மாட்டாயா?" என்று கண்ணனிடம் யசோதை கெஞ்சியது ஞாபகம் வரலாம். பயம் என்றால் என்னவென்று அறியாத இறைவனுக்கு பயம் காட்ட (அதாவது, பயப்படுவது எவ்வாறு என்று காட்ட:-)"பயம்" வந்ததாம். இறைவனுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கே என்று அது பயந்த, பயத்தைப் பார்த்து கண்ணன் கற்றுக் கொண்டானாம், பயப்படுவது எப்படி என்று!!

கேட்டறியாதன கேட்கிறேன் கேசவா! கோவலர் இந்திரற்கு
கட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா! உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்


திருநீலகண்டன் என்ற பெயர் சிவனுக்கு. நஞ்சு உண்டதால் வந்தது அது. கண்ணனும் நஞ்சுண்ட கண்டன் என்கிறார் பெரியாழ்வார். அது எப்படி?

வானவர்தாம் மகிழ வன் சகடமுருள
வஞ்ச முலைப்பேயின் நஞ்சமது உண்டவனே!
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே!
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன்
என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே!

அடேங்கப்பா! தன் குழந்தையின் அருமை, பெருமைகளைப் பற்றி பீத்திக்கொள்ளாத தாய்/தந்தையர் உண்டோ! கண்ணனின் வீர, பராக்கிரமங்களை எவ்வளவு அழகிய கவிதையாய் வார்க்கிறார் பாருங்கள். எத்தனை உருவகங்கள்,கண்ணன் தன் "கருநிற கன்று" அதுவே, எதிரிகளை அதிரச் செய்யும் "ஆனை"(நம்ம கிராமத்துப் பெரிசு, பெரியாழ்வார் இப்படித்தான், யானை என்பதை"ஆனை"என்பார், கல்யாணம் என்பதை "கன்னாலம்" என்பார் :-) "ஆயர்கள் போர் ஏறு!அது மட்டுமா? சும்மா, விளாம்பழம் அடிக்க இந்தப் பையன் கன்று உருவில் வந்த அசுரனை மரத்தில் எறிந்து பழம் பறிக்கிறானாம்! அடேங்கப்பா! இவ்வளவு புகழ்ச்சி எதற்கு, குழந்தை தையத் தையா! என்று ஆட வேண்டுமாம். இவ்வளவும் அதற்குத்தான்.இது எத்தகைய இன்பம் என்பதை அறிய கொஞ்சம் வள்ளுவமும், பெரியாழ்வார் திருமொழியும் வாசிக்க வேண்டும்.

நிற்க. இது வேடிக்கை போல் தோன்றினாலும் வேடிக்கை அல்ல. பெரியாழ்வார் ஒரு பாரம்பரியத்தை பின் பற்றித்தான் அப்படிச் சொல்கிறார். சங்க காலப் புலவர்கள்," நீ பகைவனைக் கொள்வதில் கண்ணனையும், வலிமையில் பலதேவனையும் ஒப்பை" என்று வாழ்த்தும் மரபு ஒன்று உண்டு.

"பானிற வுருவிற் பனைக் கொடியோனும்
நீனிற வுருவினேமி யோனுமென்
றிரு பெருந் தெய்வமுனின் றா அங்கு"
(புறம் 58/16)

கண்ணனையும், பலதேவனையும் இரு பெருந்தெய்வங்களாக வழிபட்ட செய்தி புறநானூற்றில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடல் வழி அறியலாம்.

நமக்கென ஒரு இலக்கிய பரம்பரை இருப்பது பெரிய லாபம்தான். ஒன்று,பின்னொரு கவிதைக்கு ஊற்றாக அமைகிறது. நம்மாழ்வார், "பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்" என்றால் பாரதி, "அச்சமில்லை, அச்சமில்லை,அச்சமென்பதில்லையே" என்கிறான். பெரியாழ்வார், "கேட்டறியாதன கேட்டேன் கேசவா! என்றால் பாரதி:

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்...


என்கிறான்!

உண்ணுதல் என்னும் கருத்தை ஆழ்வார்கள் பல்வகையில் கையாளுகின்றனர்."உண்டியே, உடையே உகந்து ஓடும் இம்மண்டலத்தோடு கூடுவதில்லை யான்" என்று ஆரம்பித்து,

பண்டு காமரானவாறும், பாவையர் வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும், ஒக்க வுரைத் திருமி
தண்டு காலா வூன்றித் தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே!
(பெரிய திருமொழி 1.3.5)

பாவையர் வாயமுதம் உண்டு களித்து, தண்டு ஊன்றி தள்ளாடும் காலத்தில் இறைவனைப் பற்றிச் சிந்திக்காமல் காலாகாலத்தில் அறிவு பெற்று விழித்து எழுக என்கின்றனர். இதற்கு நேர் எதிரான நிலையும் ஒன்று உண்டு. அதாவது இறைவன் பால் காதல் வயப்பட்டு "உண்ணுதல்" மறந்த நிலை. அப்படிஇருக்கும் ஒரு பெண்ணின் தாய் புலம்புவதைக் கேளுங்கள்:

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ! என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்
அணியரங்க மாடுதுமோ தோழீ! என்னும்
எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இருநிலத்து ஓர் பழி படைத்தேன்! ஏபா வம்மே!
(திருநெடுந்தாண்டகம் 12)

இதுவெல்லாம் போக, உண்ணுதல் என்னும் உயிரியல் அடிப்படைத் தேவையை மிகச் சிறந்த முறையில் உருவகப் படுத்துகின்றனர் ஆழ்வார்கள். அதாவது,அண்ட சராசரமும் முடிவில் இறைவனிடம் அடங்கும் என்னும் கருத்தை உண்ணுவதாகிய உருவகத்தால் சுட்டுகின்றனர். யசோதை கண்ணனின் வாயில் அண்டம் முழுவதையும் கண்டு மிரண்ட தொன்மம் இப்படி வந்ததுதான். கவிஅழகில் செம்மையுடைய திருமங்கை ஆழ்வார் இதை எவ்வளவு கவித்துவத்துடன் சொல்கிறார் பாருங்கள்:

அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்!
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகும்
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே!
(பெரிய திருமொழி 6.3.1)

உலகம் முழுவதையும் உண்ட வாயன். பிரளயம் முடிந்த பிறகு ஒரு பாலகனாய் இலை மேல் பள்ளி கொண்டு (ஆலிலைக் கண்ணன்) வருவதாய்ச் சுட்டும் உருவகச் செம்மையை என்ன சொல்ல?

மீண்டும், மீண்டும் தாயின் பாலுக்காய் வாய் அகல, மூடிய கண்ணுடன் முலை தேடும்அந்த ஆஸ்பத்திரிக் குழந்தைதான் ஞாபகம் வருகிறது.

2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, October 30, 2007

//பிறந்த குழந்தைக்கு வாயைச் சப்பி பால் குடிக்க எப்படித் தெரிகிறது என்பது பிரம்ம இரகசியம்//

அழகான பதிவு கண்ணன் சார்!
அக்காக்காய், ஆடுக ஆடுகவே என நீங்கள் இட்ட பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் வலைப்பூ-வை மீண்டும் எழுத என்னைத் தூண்டி விட்டன!

தாய்ப்பால் எவ்வளவு பொதுவான விஷயம், உயிர்கள் அனைத்துக்கும்?
பாலூட்டிகள் என்ற பெயரே வ~ண்து விட்டதே! சில பெண்கள் தாய்ப்பால் மறுக்கின்றார்கள் என்று பரவலாகப் படித்தேன்...மிகவும் கஷ்டமாக இருந்தது!
இங்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தவுடன், மருத்துவர்கள், வசதியாகப் பாலூட்டக் கூட கற்றுத் தருகிறார்கள்!

அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்த
பதரப்படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே

  நா.கண்ணன்

Tuesday, October 30, 2007

நன்றி கண்ணபிரான்!

மாறி வரும் உலகில் இயற்கை பாதி செயற்கை பாதி என்று ஆகிவிட்டது. மீண்டும் இயற்கையின் அழகைத் திருத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது!

வாழ்வு, வாழ்விலிருந்து எழும் தெய்வம், தெய்வத்தின் உள்ளடுங்கும் வாழ்வு, மீண்டும் தெய்வத்தின் உள்ளிருந்து வெளிப்படும் வாழ்வு, வாழ்விலிருந்து தெய்வம் எனும் சுழற்சியை எவ்வளவு அழகாக நம்மவர் புரிந்து வைத்துள்ளனர்!