e-mozi

மடல் 054: சிங்கப் பெருமாள் கதை

First published on: Tue, 30 Mar 99 08:46AM PST

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய்முலையுண்டானே! சப்பாணி !


(பெரியாழ்வார் திருமொழி-83)


அப்போது எனக்கு ஆப்பிரிக்க கண்டதிலுள்ள கென்யாவிற்கு மாற்றலாகியிருந்தது. காடும் காடு சேர்ந்த நிலப் பரப்பு. பையன் குமாரும், பெண் கனகாவும் கதை கேட்கும் பருவத்தில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் நாட்டுக் கதை சொல்வதில் எனக்கும், குழந்தைகளுக்கும் ஆனந்தம். அடுப்படி வேலை முடிந்த வேளைகளில் என் மனைவியும் வந்து கதை கேட்பாள். ஆனால் கேட்பதை விட அவள் சொல்வது கடைசியில் மிகுதியாகிப் போய்விடுவதால் அவள் வெளியே போயிருக்கும் சமயங்களில் நான் கதையை ஆரம்பிப்பது உண்டு. அவள் சொல்லி நாங்கள் கேட்டுப் பழகிவிட்டதால் அவளால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது என்று வைத்துக் கொள்ளுங்கள்!

மழை கொட்டி ஓய்ந்திருந்த ஒரு மாலை. மண்ணின் வாசனையும், மலர்களின் வாசனையும் சேர்ந்து ஒரு ஆப்பிரிக்க மணத்தை கொடுத்தது. பசங்களுக்கு கதை கேட்டும் ஆசைவந்து விட்டது. சின்ன, சின்ன போர்வைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் காதை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டு என் முன் உட்கார்ந்தனர்.

ரொம்ப, ரொம்ப காலத்துக்கு முன்னே, காடுகள் நிறைந்த பகுதியை தமிழர்கள் முல்லை என்று அழைத்தனர். முல்லைக்கென்று தனியாக மலர் உண்டு, செடி உண்டு, மரமுண்டு,கொடியுண்டு, பறவையுண்டு, விலங்கு உண்டு, முல்லை மக்களை இடையர்கள் என்பார்கள், இந்த இடையர்களுக்கு ஒரு தெய்வமும் உண்டு என்று சொன்னேன். ஆர்வமுடன் கேட்டனர். யார் அந்தத் தெய்வமென்றால் அதுதான் திருமால் என்றேன். இவர் கெட்டவர்களை அழித்து நல்லதை முல்லையில் நிலை நாட்ட அடிக்கடி அவதாரமெடுப்பார் என்றேன்.

அவதாரமென்றால் என்ன அப்பா? எனக் கேட்டாள் கனகா. அவதாரமென்றால் மேலேயிருந்து இறங்கி வருதல் என்றேன். அப்படின்னா? என்றாள். அதாவது தெய்வமென்பது உச்சியில் உட்கார்ந்து மக்களை அரசாளும் அரசனன்று. தெய்வமென்பது தாய் போல. நீங்கள் ஆற்றில் நீச்சலடிக்கும் போது தவறி ஆற்றோடு போய் விட்டால் அம்மா ஓடோடி வந்து ஆற்றில் குதித்து உங்களைக் கரைசேர்க்க மாட்டாளா? அதுபோல் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவதுதான் தெய்வம். அதன்உயர்ந்த நிலையிலிருந்து அன்பின் காரணமாக கீழே இறங்கி வருவதை அவதாரம் என்று சொல்வார்கள் என்றேன். புரிந்தது என்று இருவரும் தலையாட்டினர்.

இப்படித்தான் ஒரு நாள், பிரகலாதன் என்றொரு சிறுவன். அவனுக்கு தெய்வத்தின் மேல் நல்ல நம்பிக்கை உண்டு. உலகில் இருக்கும் பொருளெல்லாம் தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்று அவன் பார்த்தான். அதனால் அவனுக்கு தெய்வம் இல்லாத இடமே இல்லை என்றாகியது. செடியைக் கண்டால் அன்பாக வருடுவான். மலருடன் பேசுவான். பறவைக்கு தானியம் போடுவான். மானுக்கு புல் கொடுப்பான். கன்றுடன் விளையாடுவான். இப்படிப்பட்ட பையனுக்கு தறுதலையாக ஒரு அப்பா இருந்தார். அவர் பெயர் இரணிய கசிபு என்பது. அவனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. உலகில் எல்லாமே தன் அரசாட்சிக்கு கீழ் என்ற நம்பிக்கை.அவன் பலம் கொண்ட அரசனாக இருந்ததால் அவன் சொல்லை யாராலும் மீற முடியாது.தெய்வக் கோயில்களையெல்லாம் அடைத்து விட்டு அவன் தன் பெயரையே எல்லோரும் புகழ்ந்து பாட வேண்டும் என்றான்.

"தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மாதிரின்னு சொல்லுங்க"என்றவாறே என் மனைவி திண்ணைக்கு வந்தாள். சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன். எல்லோரும் இரணியன் பெயர் சொல்ல, பிரகலாதன் மட்டும், தன் தந்தை இப்பிரபஞ்சத்தை படைத்து காக்கவில்லை என்பது தெரிந்ததால் அதை நம்பவில்லை. அப்பா சொல்லி மலை நிற்கவில்லை. அப்பா சொல்லி மழை அங்கு பெய்யவில்லை. சூரியன் அப்பாவைக் கேட்டு உதிப்பதில்லை. சந்திரன் அப்பாவிற்காக வருவதில்லை. எனவே, எங்குமிருப்பது தெய்வம்தானே தவிர அப்பா இல்லை என்று சொன்னான். இரணியனுக்கு கடும் கோபம் வந்து விட்டது. "என்னடா சொன்னாய்? உன் தெய்வம் இந்த தூணில் இருக்குமா?" என்று அரண்மனைத் தூணைக் காட்டினான். பெரிய தூண். அஞ்சு பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவு பெரிய தூண். அதற்கு பிரகலாதன், தெய்வம் தூணிலும் இருக்கும், இந்தத் துரும்பிலும் இருக்கும் என்று காலைத் தரையில் தட்டினான். தூசு பறந்தது. இரணியனுக்கோ கோபம் பறந்தது.

"மண்டுப் பையா! இதோ, பார் இந்தத் தூணை உடைக்கிறேன். உன் தெய்வம் வருகிறதா எனப்பார்ப்போம்" என்று சொல்லி தண்டாயுதத்தால் தூணில் ஒரு போடு போட்டான். அவன் பராக்கிரமசாலியாக இருந்ததால் தூண் உடைந்தது. தூசும், மண்ணும் எங்கும் பரவி கண்ணை அடைத்தது. இரணியன் கட, கடவென்று சிரித்தான். "பாரடா! மண்டுப்பையா! ஒன்றுமில்லை" என்றான். அப்போது, எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ச்சனைகேட்டது, என்று சொல்லி சிங்கம் போல் கர்ச்சித்தேன். என் மனைவியே பயந்து போனாள்.பெரிய சிம்மக்குரலோன் சிவாஜின்னு நினைப்பு. குழந்தைகள் பயப்படுது பாருங்க! என்று சொல்லி குழந்தைகளை கட்டிக் கொண்டாள்.குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பில் சுகந்து கொண்டே காதை கதைக்கு திருப்பினர்.

சிங்கம் வந்ததா! ஆமாம் பெரிய சிங்கம். இரணியன் பெரிய வீரன்தான்,ஆனாலும் அவனே பார்த்திராத சிங்கம். வந்து அவனுடன் மோதி பிராண்டியது. அவன் சண்டை போட்டான், ஆனாலும் சிங்கத்தின் பலம் அதிகமாக இருந்தது. அவனை அங்கம், அங்கமாக கடித்துக்குதறி.....என்று சொல்லும் போதே பசங்கள் பயந்து நடுங்கினர். மனைவி, சீக்கிரம் கதையைக் கொண்டு போங்க, பிராண்டுவதிலேயே நிக்காமல் என்று கண்ணடித்தாள். அது அம்மா,அப்பா பாஷை. குழந்தைகளுக்கு அவசியமில்லை. கதையைத் தொடர்ந்தேன். சிங்கம் குடலைத்திறந்தது. பொளக்கென்று குடல் சரிந்தது. குடலை எடுத்து மலை போட்டுக் கொண்டு பிரகலாதன் இருந்த பக்கம் வந்தது.


இதைச் சொன்னவுடன், கனகா கத்தத் தொடங்கினாள்."இல்லை, இல்லை...அவன் பக்கமில்லை. அது அவனைக் கடிக்கும். அது வேண்டாம்!"என்று முறையிட்டாள். நான் அவர்களை தைர்யப்படுத்தி. கதை அப்படியில்லை. அதில் சிங்கம் இரணியனைத்தான் கடிக்கும், பிரகலாதனைக் கடிக்காது என்றேன். உடனே,குமார் விவரமாக, "அதெப்படி? சிங்கம் எல்லோரையும்தான் கடிக்கும். பிரகலாதனையும் கடிக்கும். இது நல்ல கதையில்லை" என்று என் கதையை முடிக்கப் பார்த்தான். நானா முடிப்பேன்? தொடர்ந்தேன். அப்படியில்லை குமார். பிரகலாதன் நம்பிக்கைப்படி அங்கு வந்தது சிங்கமில்லை. தெய்வம். தெய்வம் கெட்டவர்களைத்தான் அழிக்கும், நல்லவர்களைக் காக்கும். அதனால் பிரகாலாதனிடம் வந்து இரத்தமான வாயால் நக்கிக்கொடுத்து விட்டு வெளியே போய்விட்டது என்றேன். ஆனால் இதை குழந்தைகள் நம்புவதாய் இல்லை. கதைக்கு காலுண்டா என்று இவர்கள் ஆர்வத்தை நம்பிக்கை என்ற சுத்தியால் அடிக்க எனக்கு மனமில்லை. சரி, கடவுள் ஒருவழி காட்டுவார் என்று இருந்து விட்டேன்.

அடுத்த நாள், காட்டு அதிகாரி வீட்டிற்கு வந்திருந்தார். காட்டில் மனிதர்களைக் கொல்லும் சிங்கமொன்று அலைவதாகவும், இரவில் கவனமாக இருக்குமாறும் சொல்லிச் சென்றார். கடவுள் நம்பிக்கை இருந்தாலும் எங்களுக்கெல்லாம் ஒரே கிலி. இரவில் எல்லாக் கதவுகளையும் நன்கு மூடிவைத்தோம். சில நேரங்களில் சிம்ம கர்ஜனை கேட்பது போல் தோன்றும். குழந்தைகள் எங்கள் படுக்கைக்கு வந்துவிடுவர் உடனே.இப்படியாக சில நாட்கள் போன பின்னே, ஒருநாள் அதிகாரி வீட்டிற்கு வந்தார். அந்தசிங்கத்தை சுட்டு கொன்று விட்டதாகவும். அந்த சமரில் ஒரு சிம்மமும் (தாய் சிங்கம்) இறந்து விட்டதாகவும். அப்போது மூன்று சிங்கக் குட்டிகள் கிடைத்தாகவும், வேண்டுமானால் நாங்கள் அவைகளை வளர்க்கலாமென்றும் சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

"என்னது சிங்கத்தை வீட்டில் வளர்ப்பதா? என பயந்து கொண்டே கேட்டேன். குமார் இடை மறித்து. "அப்பா, நீங்கள்தானே சொன்னீர்கள், தெய்வ நம்பிக்கை உள்ள இடத்தில் சிங்கம் ஒன்றும் செய்யாது என்று. நாம் சிங்கக் குட்டியை வளர்ப்போம் அப்பா" என்றான். கூடவே கனகாவும் சரி, சரி என்றது. அதற்கு ஏதோ சிங்கம் வளர்ப்பது ஆட்டுக்குட்டி வளர்ப்பது போல் தோன்றியிருக்கலாம்! நான் என் மனைவியைப் பார்த்தேன். அவள்தானே வீட்டின் ராணி! தமிழ் நாட்டுப் பெண்கள் பயந்த சுபாவமுடையவர்கள் என்பது என் எண்ணம். பயந்து போய் வேண்டாம் இந்த வம்பு என்று சொல்லப் போகிறாள் என நம்பினேன். அவள் என்னடாவென்றால், "சரி, வளர்ப்போம்" என்று அதிகாரியிடம் சொல்லிவிட்டாள்.

எனக்குமீண்டும் கலக்கம். இவள் புரிந்து கொண்டுதான் சொல்கிறாளாவென தீர்மானிக்க, "சிங்கம்வளர்ப்பது நாய் வளர்ப்பது மாதிரியில்லே! கடிச்சு சாப்பிட்டிடும். வீட்டுப் பெண்கள் பூனை வளர்க்கலாம், சிங்கமில்லை" என்று சொன்னேன். அவள் ஒரு மந்தகாசத்துடன் சொல்லத் தொடங்கினாள். "நீங்கள் சிங்கப் பெருமாள் கதைதான் சொன்னீர்கள். துர்க்கை கதை சொல்லவில்லை. அதில் அம்பிகையின் வாகனமே சிங்கம்தான்.சங்க காலத்துப் பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை. தமிழ் தேசியப் போரில் தூப்பாக்கி பிடிக்கும் பாதிப்பேர் பெண்கள்தானே?" என்று சொன்னாள். நான் வாயடைத்துப் போனேன்.

அதிகாரி, எத்தனை குட்டிகள் வேண்டுமென்றார். ஆளை விட்டால் ஒரு கிடையே கொண்டு வந்துவிடுவார் என்ற பயத்தில் ஒன்று போதும். இருப்பதில் சாதுவான சிங்கக்குட்டியைக் குடுங்கள் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, பெண் குட்டி ஒன்றைத் தந்தார். இதுமிகவும் சூட்டிகையான குட்டி. இருப்பதில் இதுதான் சாது. மற்றதை நாங்கள் ஒரு ஆங்கில குடும்பத்திற்கு கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

இப்படியாக, சிங்கப் பெருமாள் கதை சொன்ன புண்ணியத்தில் ஒரு சிங்கக் குட்டிவீடு வந்து சேர்ந்தது. அதற்கு துர்க்கா என்று நாமகரணம் ஆனது. நாளொரு கலாட்டாவும்,பொழுதொரு அமர்க்களமுமாக அது வளர்ந்தது. குழந்தைகளிடம் அது உண்மையிலேயே ஒட்டிக் கொண்டுவிட்டது. என் மனைவிக்கோ அது இன்னொரு பெண் குழந்தை என்றாகிவிட்டது. அதன் அன்பையும், பாசத்தையும் பார்க்கும் போது நாய், பூனைக்கும் சிங்கத்திற்கும் அவ்வளவு வித்தியாசமில்லை என்று தெரிந்தது. சிம்மக்குட்டி மாமிச பட்சிணியாக இருந்தாலும் அது எங்களைச் சாப்பிடவில்லை. முதலில் அதுதான் சந்தேகம். இதன் அப்பா வேறு மனிதர்களை முழுங்கிக் கொண்டிருந்தது! இதுவும் நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளைஎன்ற பழமொழிப் படி எங்களை விழுங்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால்துர்க்கா எங்களை வேட்டையாடவில்லை. வீட்டிற்கு வருபவர்களுக்குத்தான் சிம்ம சொப்பனமாக இருந்தது!

துர்க்கா பெரியவளாகி விட்டாள். இவள் உடன் பிறப்புகளெல்லாம் வளர்ந்து நகரத்து விலங்குச் சாலைக்கு சென்றுவிட்டன. என் மனைவியும் குழந்தைகளும் துர்க்காவை பிரிவதாகத் தெரியவில்லை. ஆனாலும், கிராமத்து மக்களாலும், மற்ற விலங்கின அதிகாரிகளாலும் விரைவில் அதை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட வேண்டுமென்ற வேண்டுகோள் உரக்க கேட்கலாயிற்று. மூன்று மாதம் கெடு கொடுத்திருந்தார்கள். என் மனைவி துர்க்காவை மிருகக்காட்சியகத்திற்கு அனுப்ப உடன்படவில்லை. துர்க்கை என்பவள் சுதந்திரத்தின் சக்தி. தீமையை அழிக்க பிறந்தவள். அவளைக் கொண்டு போய் சிறையில் அடைப்பது அடுக்காது என்று சொல்லி மறுத்து விட்டாள்.

மிருகக்காட்சியகத்திற்கு அனுப்பக் கூடாது. வீட்டிலும் வைத்திருக்கவும் கூடாது. பிறகு என்ன செய்வது? நீண்ட யோசனைக்குப் பிறகு, துர்க்காவை காட்டில் விட்டு விடலாமெனமுடிவானது. வீட்டில் வளர்ந்த பிராணியை காட்டில் விட முடியுமா? காட்டு விலங்குகளோடு சண்டை போட்டு தைர்யமாக வாழுமாவென யாருக்கும் தெரியவில்லை. தினம் துர்க்காவை காட்டில் விட்டு பழக்கினோம். முதலில் ஒரு காட்டுப் பன்றியை வேட்டையாட பழக்கினோம்.துர்க்கா வேகமாய் போய் விரட்டினாலும், அதை வெறும் விளையாட்டுப் பொருளாகப் பார்த்ததே தவிர, வேட்டையாடவில்லை. சரி, தனியாக சில நாட்கள் காட்டில்விட்டு வந்தால் தானாக வேட்டையாடும் என்று தொலை தூரத்தில் விட்டு வந்தோம்.ஒரு வாரம் கழித்து போனபோது துர்க்கா இளைத்து துரும்பாய் இருந்தது. என் மனைவி துடித்து விட்டாள். எனக்கும் கோபம்தான். "நீ துர்க்காவை விலங்ககத்திற்கு அனுப்பாமல் பட்டினி போட்டு கொல்லப் போகிறாய்" என்ற சண்டை போட்டேன். ஆனாலும் அவள் கொள்கையிலிருந்து அவளை மாற்ற முடியவில்லை. எப்படியாயினும் துர்க்காவை காட்டு விலங்காக மாற்ற வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தாள்.

மேலும் மூன்று மாதம் கெடு கேட்டு, துர்க்காவை காட்டிற்கு அழைத்துச் சென்றோம்.சிங்கத்திடம் பழக விட்டோம். துர்க்காவிற்கு காதல் வரவில்லை. வேட்டையில் இன்னும் ருசி வரவில்லை. இல்லாத தெய்வங்களையெல்லாம் வேண்டினோம். சிங்கப்பெருமாளையும் சேர்த்து!

ஒருநாள் தீடீரென்று துர்க்காவிற்கு வேட்டையில் நாட்டம் வந்தது. மிருகத்தனமாக வேட்டையாடி காட்டுப் பன்றியைக் கொன்றது. சிங்கங்கள் வாழும் குகையில்விட்டு வந்தோம். பெரிய சமர் நடந்தது. துர்க்கா விட்டுக் கொடுக்காமல் சண்டை போட்டாள். அவள் வெற்றி பெற வேண்டுமென நாங்கள் இறைவனிடம் மன்றாடினோம். துர்க்கா அந்த பெண் தெய்வம் போல் ஒரு நிலையில் வெற்றி கொண்டு குகைக்குள் சென்றாள். துர்க்கா காட்டிற்குப் போய் பல மாதங்களாகிவிட்டன. வீட்டில் மணப்பெண்ணை புக்ககத்திற்கு அனுப்பிய சோகம் இருந்தது. எனக்கும் வேலை மாற்றலாகிவிட்டது. கிளம்பிப் போகுமுன், துர்க்காவை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டுப் போகலாமென குடும்பத்தோடு காட்டிற்கு சென்றோம். எங்கு தேடியும் துர்க்கா தென்படவில்லை. கிளம்பும் முன் கையிலிருந்த துப்பாக்கியால் ஒரு வேட்டு வெடித்தேன்.

எங்கிருந்தோ ஒரு கர்ச்சனை கேட்டது. எங்கள் துர்க்காதான். தனியாக அல்ல. மூன்று குட்டிகளுடன். மெதுவாக எங்களை நோக்கி வந்தாள். துர்க்கா இப்போது காட்டு மனுசி. எங்களைக் கொன்று தின்றுவிடுவாளோ? அவள் இரை தின்ற வாயுடன் வந்து நின்றாள். எங்கள் எல்லோரையும் நன்றாகப் பார்த்தாள். என் கை விரல் துப்பாக்கியின் விசையில் தயாராக நின்றது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதைக் கொன்றுவிட. துர்க்கா என் மனைவியைப் பார்த்தாள்.

அவள் கண்கள் கலங்கி ஒரு தாய் தன் குழந்தையைப் பார்க்கும் போது நேர் கொள்ளும் பாவத்தில் இருந்தாள். அவள் காலை அது நக்கியது. அவள் அப்படியே துர்க்காவை அணைத்து தடவிக் கொடுத்தாள். குழந்தைகள் தைர்யமாக அதனிடம் சென்று வருடி விட்டனர். குட்டிகள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன. குமார் குட்டிகளை தடவ முன் வந்தான். அம்மா தடுத்து விட்டாள். ஒருசிங்கத்தை தடவித், தடவிக் கெடுத்தது போதும். இவள் குழந்தைகள் காட்டு விலங்காகவே வளரட்டும். தொடவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

என் மனைவியை அப்போது யாராவது பார்த்திருந்தால் ஒரு கொற்றவைத் தெய்வம் என்றே நம்பி இருப்பர். அவ்வளவு தைர்யம். அவ்வளவு தீர்மானம்.கடைசியாக துர்க்கா என்னிடம் வந்தது. எனக்கு அதற்குள் தைர்யம் வந்திருந்தது. அது என்மேல் அன்புடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து முகத்தில் நக்கியது. அது என்னைவிட உயரமாக இருந்தது. அந்த நக்கலில் அன்பும், இரத்த வாசனையும் சேர்ந்து இருந்தது!

குமார் சொன்னான், "அப்பா! சிங்கப்பெருமாள் தீயவர்களுக்குதான் சிம்ம சொப்பனம். அன்புடையவர்களுக்கு குழந்தை போன்றவன். அதற்குத்தானே அவதாரம் என்று பொருள்" என்றான்.

எனக்கு தெய்வத்தின் குரலைக் கேட்டது போலிருந்தது.


&&&&&&&
பிகு: இது உண்மையாக நடந்த கதை (என்னையும், என் குடும்பத்தையும் தவிர). Born Free என்ற திரைப்படமாக வந்துள்ளது.

முதல் பதிவு: புலம் (லண்டன்) தை-மாசி 99

6 பின்னூட்டங்கள்:

  Anonymous

Saturday, October 20, 2007

Vanakkam sir,
While opening this page, I recited your SOLLI VAITHEN pdf file sloga, which starts with MATHA NARASIMACHA, i like to call you,singam valartha seeman endru, but in the end you completed the climax like a movie,but this movie is very very interesting,with nagaichuvai,excellent.AKKARAKKANI.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Saturday, October 20, 2007

அக்காரக்கனி அரங்கன்! அடடா! சொல்லும் போதே இனிக்கிறதே! மிச்ச எல்லா அவதாரங்களுக்கும் ஒரு முன்னேற்பாடு உண்டு. நரசிம்மன் ஒருவன்தான் இவன் எப்பக்கூப்பிடுவான் என்று தூணில் காத்திருந்து, கூப்பிட உடனே வந்தவன். நம்மாழ்வார் இதை மிகவும் சிலாகித்துப் பேசுகிறார். அவரைக் கண்டு பயப்படுகிறார்களே மக்கள்! அதை விளக்கவே இக்கதை!

  குமரன் (Kumaran)

Monday, December 31, 2007

ஆகா. பயங்கர செயல்கள் செய்தவனை (இரணியன் அகலம் பிளத்தல், பேய் முலை உண்ணல்) சப்பாணி கொட்ட அழைக்கிறாரே பட்டர்பிரான். இப்படி பாடிப் பாடித் தான் அவர் தம் திருமகளாருக்கு அவ்வளவு தைரியம் வந்தது போல. அவன் வந்து அனுபவிக்க வேண்டியதிருக்க இவள் சென்று அவன் துயில் உணர்த்தி அவனை அனுபவித்தாளே. யா பலாத் க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:

சிங்கப்பிரான் கதை அருமை. கடைசி வரி படிக்கும் வரை மிகப் பிரமிப்பாகத் தான் இருந்தது. :-)

  N.Kannan

Monday, December 31, 2007

நன்றி குமரன் :-)

பட்டர்பிரான் கொடுத்த் தைர்யம்தான். அது மட்டுமல்ல, அவர்தான் அவளுக்கு Time Travel எப்படி என்று கற்றுததருகிறார். அதை வைத்துதான் அவள் கலியுகத்திலிருந்து துவாபர யுகம் தாவுகிறாள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  துளசி கோபால்

Thursday, October 29, 2009

இன்னிக்குத்தான் எங்கெங்கோ சுற்றி இங்கே வந்தேன்.

(சுத்தல், பைநாகப் பாயைச் சுருட்டிக்கொள் தேடும் படலம்)

ஆஹா..... நம்மாத்துலே துர்கான்னு பூரிச்சுப்போய் படிச்சுக்கிட்டே வந்து....

கடைசி வரி!!!!!!!

  நா.கண்ணன்

Saturday, October 31, 2009

எத்தனை யுகமானாலும், இப்படி எப்போதாவது ஒரு பிரபந்நன் ஸ்வாமி சந்நிதிக்கு வரும் போதுதான் சானித்தியமே வருகிறது! நன்றி துளசி.