e-mozi

மடல் 057 - மணவாள மாமுனியின் கனவு

First published on: Tue, 7 Sep 1999 08:26:01 -0400

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒரு ஸ்ரீநிவாசப்பெருமாளையோ, ஒரு பூரி ஜெகநாத்தையோ தரிசித்து மகிழும் பாக்கியத்தை நமெக்கெல்லாம் வழங்கும் திராவிடர்களையும், பெரியவர் பிரபுபாதாவையும் நாம் என்றும் நினைத்துப் போற்ற வேண்டும். தமிழ் மண்ணில் தோன்றிய பாசுரங்கள் இன்று பசுபிக் கரையில் ஒலிக்கவும், ஆழ்வார்கள் ஆழ்ந்து அனுபவித்த பக்தி யோகம் இன்று உலகெலாம் பரவி உலகை பரவசப் படுத்தவும் முடிகிறது என்றால் அதற்கு இவர்கள் அன்றி வேறு யார் காரணம்?


எல்லே பெரு நகர் (Los Angeles) மைய கேந்திரத்தில் அச்சான பிரபுபாதா- சிலையாக இருக்க, கரிய திருமேனி கொண்ட அமெரிக்கர் பகவத் கீதையை சமிஸ்கிருதத்தில் (?) சொல்லி ஆங்கிலத்தில் விளக்கிக் கோண்டிருந்தார்,திருக்குருகூர் சடகோபன் செய்வித்த திருவாய் மொழியனைத்தும் நம் தலையில் நிற்கும் படி எம்பெருமானார் ஏற்பாடு செய்வித்த “சடாரி” வழக்கம் அதன் காரணம் தெரியாமல் அந்த வைணவக் கோவிலிலும் நம் தலையில் வைக்கப்பட்டது.காரணம் புரிந்தவற்கோ? “காலாழும், நெஞ்சழியும், கண் சுழலும்”!ஒரு இந்துக் குடும்பம் அன்று வந்தவர் அனைவருக்கும் உணவு வழங்கிக்கோண்டிருந்தது. அமெரிக்கப் பெண்டிர் பிருந்தாவனத்து கோபியர் போல் இங்கும் அங்கும் ஓடிக் கோண்டிருக்க, அரைக் குடுமி சிறார்களும், இளைஞர்களும் பஞ்சகச்சத்தில் உலாவ, இருப்பது கோகுலமா? அமெரிக்காவா? என்பது பல சமயம் விளங்கவே இல்லை!

அவர்களைப் போலவே, அவர்கள் வரையும் ஓவியங்கள் மிக, மிக அழகாக அமைகின்றன. புத்தககங்களை வருடிக் கோண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு வைணவர் கேட்டார். “உங்களுக்கு ஒரு குரு உண்டா?”. சர்வ வியாபியாக பரவியிருக்கும் நாராயணனைத் தவிர நமக்கு குரு யார்? “ஸ்ரீமத் நாராயணன்” என்றேன். இப்படிச் சொல்வதில் ஒரு சூட்சுமம் உள்ளது! “ஸ்ரீ” பதத்தின் மீது “மது ப்ரத்யயம்” ஏறி “ஸ்ரீமத்” ஆகிறது. இப்படிச் சொல்வதால், “பிராட்டியோடு நித்ய சம்மந்தம்” என்றாகிறது. இதனால் பலன் என்னவெனில், மகா காருண்யம் கொண்ட அன்னை, அல்ப புத்தியுள்ள அசடர்களுக்கும் ஒரு சிறு பொழுதேனும் இறைவன் பால் ஈடுபாடு வந்துவிட்டால் போதும், அந்த புத்தி மாறுவதற்குள் (அந்த ருசி மாறுவதற்குள்) அவர்களை அநுகிரகிக்கும்படி செய்து விடும் படி நித்ய சம்மந்தம் இருப்பது என்றாகிறது. இதனால் இறைச் சரண் செய்ய தேசம், காலம் என்ற நியமம் இல்லை என்றாகிறது!“நீங்கள் தினம் எப்படி ஆர்த்தி செய்வீர்கள்?” என்று கேட்டார். அதாவது நமது தென் தமிழக வழிபாடு எப்படி என்று. சொன்னேன்.

“மகா மந்திரம் எத்தனை முறை சொல்வீர்கள்?” என்று கேட்டார். அதாவது, “ஹரே ராம! ஹரே ராம, ராம, ராம ஹரே, ஹரே! ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே, ஹரே” என்பது மஹா மந்திரம். நான் “குலம் தரும், செல்வம் தந்திடும்” பாசுரம் சோல்லி விளக்கினேன். அவருக்கு இப்படி ஒரு வைணவம் இருப்பது அன்றுதான் தெரிந்தது! பகவத் கீதையின் அவசியமில்லாமல் கூட கிருஷ்ணனை வழிபடும் மார்க்கம் ஒன்று உண்டு என்பது கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட அவருக்கு இருந்திருக்கலாம். (பகவத் கீதை என்பது ஒரு மத நூல் அல்ல என்பதும் ஒரு கருத்து – வாசிக்க காலச்சுவடில் வந்த குரு சைதன்ய யதியின் பேட்டி)

அவரது குரு பிரபுபாதா,ஆண்டாள் மரபில், மீரா, கிருஷ்ண சைதன்யர் என்று வழி, வழியாக வந்திருப்பது அவருக்குத் தெரியாது. இன்று அனைத்து சாதியினரும், இனத்தினரும் கிருஷ்ணனை வழிபடும்படி அதை ஒரு பெரு நெறியாக ஆக்கித் தந்த பெரும் தொண்டு பல்லாண்டு காலமாக தமிழக மண்ணில் நடந்திருப்பதும் அவருக்குத் தெரியாது. ஏன் நம்மில் பலருக்கும் தெரியாதுதானே?

இதிஹாசங்களும், புராணங்களும், வேதங்களும் எத்தனைதான் இருந்தாலும் அதன் சாரத்தை எடுத்து காலத்திற்கு ஏற்ற வகையில் கொடுத்து, சமூக சமன் பாடு குலையாமல் காக்க வேண்டியது சமயக் குரவர்களின் கடமை. இதை மிக நன்கு உணர்ந்து செயல்பட்ட விதம் வைணைவ சரித்திரதில் கிடைக்கிறது. 13ம் நூற்றாண்டு! பிள்ளை லோகாச்சாரியாரும் அவரது தம்பியான மணவாள ஜீயரும் வைணவத்தின் அடிப்படை கருத்தோட்டமான, பிரபத்தி (இறைச் சரணம்) செய்வதற்கான நியமங்களை கோடிட்டுக் காட்டுகின்றனர். இதைப் படித்தால் போதும் “இஸ்கான்” ஏன் இன்று சர்வ உலக மதமாக மாறமுடிந்து இருக்கிறது என்பது புரியும்.


“ப்ரபத்திக்கு தேச நியமமும், கால நியமமும், ப்ரகார நியமமும், அதிகாரி நியமமும், பல நியமமுமில்லை, விஷய நியமேயுள்ளது”.

என்பது ரகஸ்ய கிரந்தம்.

இதற்கு படிப்படியாக விளக்கம் தருகிறார், விசதவாக்சிகாமணி என்ற பட்டம் பெற்ற மணவாள மாமுனிகள். வாசிக்க, வாசிக்க ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது. ஆனால் இன்று தமிழகம் உள்ள நிலையைப் பார்த்தால், இப்படிப்பட்டவர்கள் வந்து போன பின்பும் கீழ் நிலையில் உள்ளதே என்ற ஆற்றாமை தோன்றாமலில்லை.

இந்த ரகஸ்ய கிரந்தத்தின் பொருள் என்னவெனில், கிருஷ்ண சரண் செய்ய இந்த தேசத்தவர் என்ற பாகுபாடு கிடையாது. இந்த காலகட்டத்தில்தான் செய்ய வேண்டும் என்ற நியமம் கிடையாது, குளித்து, மடியாகத்தான் செய்ய வேண்டும் என்ற ப்ரகார நியமம் கிடையாது, இன்னவர்தான் செய்ய வேண்டும் இன்னவர் செய்யக்கூடாது என்ற அதிகாரி நியமம் கிடையாது, இன்ன பலனுக்காத்தான் செய்ய வேண்டும் என்ற பல நியமமுமில்லை. சரண் செய்தல் என்ற கருத்துதான் முதன்மை.

ஆரியத்தின் தாக்கம் இந்திய மண்ணில் வந்தபோது சுத்தம்-அசுத்தம், கெட்ட காலம்-புண்ணிய காலம், இன்னவர்தான் இன்ன காரியம் செய்யவேண்டும் போன்ற நியதிகள் உருவாகி அதுவே காலப் போக்கில் சாதியக் கட்டுமானத்திற்கு இட்டுச் சென்றது என்று நம்பப் படுகிறது. இதை மனத்தில் கொண்டு மணவாள முனியின் பரிந்துரைகளைக் கவனித்தால் அவரது புரட்சிகரத் திட்டம் வெளிப்படும். அவர் காலக் கட்டத்தில் பார்ப்பனீயமா? இல்லை வைணவமா? என்ற கேள்வி வரும் போது அவர் தெளிவாக வைணவமே முக்கியம் என்று சொல்லி விடுகிறார். மேலும் ஒரு வைணவனிடம் சாதி கேட்பது என்பது தாயின் கற்பை சோதிப்பதை விட கொடுமையானது என்று சொல்லிவிடுகிறார்.

அவர் தன் கருத்துக்களுக்கு புராண-இதிஹாசங்களில் இருந்து சான்றுகள் தருகிறார். அதாவது, கிருஷ்ண சரண் செய்வதற்கு புண்ணிய தலத்தில்தான் செய்யவெண்டும், வேறிடத்தில் செய்யலாகாது போன்ற நியதி கிடையாது என்பதை விபீஷணன் சரணாகதி மூலம் எடுத்துக்காட்டுகிறார். வீபிஷணன் கடற்கரையில்தான் சரணாகதி செய்தான். அர்ஜுனனோ நிணமும், சதையும் நிரம்பிய போர்களத்தில், நீசர்களின் நடுவில் செய்தான். எனவே “ஸ்ரீமத் நாராயண சரணம்” என்று, இருந்த இடத்தில், சொன்ன மாத்திரத்தில் “சரண்” கிடைக்கும் படி செய்ய தாயார் உதவி இருப்பதையும் முன்பு கண்டோம்!

அடுத்து, காலம்-நேரம் என்பதும் கிடையாது என்பதும் மேற்சொன்ன உதாரணத்தில் அடங்கி விடுகிறது. அர்ஜுனன் புண்ணிய காலத்தில் சரணாகதி செய்யவில்லை. மேலும், குளித்து, மடியாகத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. பாஞ்சாலி “கோவிந்தா! கண்ணா! சரணம்” என்று கை தூக்கியபோது அவள் மாதவிடாய் காலத்தில் இருந்தாள். இராமனிடம் சரணம் கேட்டு வந்த விபீஷணன் ஒரு குளி-குளித்துவிட்டு வரவில்லை. எனவே, ப்ரபத்தி பண்ணுவார் சுத்தராய் பண்ணவேண்டுமென்ற நியமமில்லை.

இப்படி புரட்சிகரமாக வியாக்கியானங்கள் செய்வது வைணவ சம்பிரதாயத்தில் புதிது இல்லை என்பதை காட்ட வேண்டி மணவாள முனிகள் “இவ்விடத்திலே வேல்வெட்டிப் பிள்ளைக்குப் பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது” என்று மேற்கோள் காட்டுகிறார். அதாவது, மணவாளருக்கு முன் தோன்றிய நம்பிள்ளை ஜீயர் என்பர் இப்படி உபன்யாசம் செய்து கொண்டு இருக்கும் போது, வேல்வெட்டிப் பிள்ளை என்பவர் அவரிடம், “சக்கிரவர்த்தி திருமகன் கடலைச் சரணம் புகுகிறவிடத்தில் கிழக்கு முகமாயிருக்கை முதலிய நியமங்களோடே கூடினவராய் சரணம் புகுகையாலே மற்ற உபாயங்களுக்குப்போலே ப்ரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டியிருக்கின்றனவோ?” என்று கேட்கிறார். அதற்கு நம்பிள்ளை ஜீயர், “இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து சார சீலராய் இராமன் இருந்ததாலே தம்முடைய நியமங்களோடே தாம் சரணம் புகுந்தார். ஆனால் தன்னிடம் சரண் என்று வந்த விபீஷணன் குளித்துவிட்டு வந்தானா என்று பார்க்கவில்லை, போர்க்கால ஆலோசகர்கள் விபீஷணனை சந்தேகித்தபோதும், அவன் சரண் ஏற்கப்பட்டது! கையாலே யோக்கியனுக்கு அயோக்யதை சம்பாதிக்கவேண்டாம், அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டாம், நின்ற, நின்ற நிலைகளிலே அதிகாரிகளாமித்தனை என்று விளங்கா நின்றது” என்று விளக்குகிறார்.

இறைச்சரணம் என்று வரும் போது பிராமணருக்குத்தான் யோக்கியதை இருக்கிறது, பள்ளனுக்கு கிடையாது என்பது போன்ற “அதிகாரி நியமம்” கிடையாது என்பது அடுத்து விளக்கப்படுகிறது. “தர்ம புத்ராதிகளும், த்ரெளபதியும், காகமும், காளியனும், யானையும், வீபீஷணன் (இராக்கதன்), ஸ்ர்வ சரண்யரான பெருமாளும், இளய பெருமாளும் (இலக்குவன்) தொடக்கமானவர்கள் சரணம் புகுகையாலே அதிகாரி நியமமில்லை”. இந்த அடிப்படையில்தான் நாம் திருமாலிஞ்சோலை கள்ளழகரின் கள்ளர் தொடர்பைக் காண வேண்டும். அந்தக்காலத்திலிருந்து, வைணவத்திற்கு ஒரு ஆழமான தலித் தோடர்பு இருந்துதான் வந்திருக்கிறது. இந்தக் கள்ளர் சமூகத்தை, ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் “திருடர்கள்” என்றே வகைப்படுத்தியிருந்தனர். ஊரில் திருட்டு என்றால் விசாரணையே இல்லாமல் இவர்களைத் தூக்கி “லாக் அப்பில்” போட்டு விடுவர்! இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, இச்சமூகத்தில் போராடி மாண்டவர் உண்டு. இப்படிப்பட்ட கள்ளர்களின் தெய்வமோ, உண்மையில் பெரிய கள்ளன். இவனைத் தூக்கி “உள்ளே” போடும் திறன், ஆங்கிலேயனுக்கு இல்லை! இங்குதான், ஆங்கிலேயனுக்கும், தமிழ் வைணவர்களுக்குமுள்ள பாரிய வித்தியாசம் தெரிகிறது. ஒன்றில் மடத்தனமும், மற்றொன்றில் கவித்துவமும் தெரிகிறது. வைணவர்கள் கள்ளம் என்பதை கவித் துவத்துடன் அணுகி, அவர்களின் தெய்வத்தையே கள்ளனாக்கி அவர்களுக்கு பெருமை சேர்த்தனர், ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களை “திருடர்கள்” ஆக்கி சமூகத்திற்கு சிறுமை சேர்த்தனர். அந்த வகையில், வைணவம், அத்வைத சனாதன மடங்களிலிருந்தும், சைவ ஆதீனங்களிடமிருந்தும் வேறு பட்டு வந்திருப்பது தெரிகிறது.

அடுத்து, இன்ன பலனுக்காகத்தான் சரணம் செய்தல் என்ற நியமமும் கிடையாது. ஏனெனில், பாஞ்சாலி சேலைக்காகவும், தர்ம புத்திரர்கள் இராஜ்ஜியத்திற்காகவும், காகமும், காளியனும் உயிருக்காகவும், இராமன் கடலைத்தாண்ட வேண்டும் என்றும் சரணம் செய்தனர். எனவே ப்ரபத்திக்குப் பலனில் நியமமில்லை.

இப்படி எல்லாவற்றையும் விலக்கி, கடைசியில் பார்த்தால், சரணம் செய்தல் என்னும் காரியம், அதில் உள்ள மனத்தூய்மை இவைதான் முக்கியம் என்று படுகிறது. சரணம் செய்யும் போது “தான்” என்ற தன் முனைப்பு அடங்கி, நமக்கும் மேலுள்ள சர்வ வல்லமையின் கருணையை வேண்டும்போது காரிய அனுகூலமாகிறது.

இப்படி ஸ்ரீஇராமானுஜர் தொடங்கி, மணவாள மாமுனிவர்வரை தொடர்ந்து ஒரு சாதீய எதிர்ப்பு எடுத்தாளப்பட்டு, திருமால் வழிபாட்டை சர்வ ஜனங்களுக்கும் எடுத்துப் போகும் ஒரு பாங்கு சரித்திரத்தில் தென்படுகிறது. இது, தலித் எழுச்சி என்பது எண்ணிக்கூட பார்க்காத காலக்கட்டத்திலேயே விளிம்பு நிலை மாந்தரை மனதில் கொண்டு முன் நிலை படுத்தப் படுகிறது. மணவாள மாமுனி எதிர்பார்த்த குலத் தாழ்வு, உயர்வு அற்ற சமுதாயம் தமிழகத்தில் உருவாகவில்லை. அவர் கனவு, கஜனி முகம்மது அனுப்பிய மாலிகாப்பூரின் விஜயத்தால் தமிழகத்தில் நினைவாகாமலே போனது. அடுத்து வந்த விஜய நகர மன்னர்கள் சனாதன மார்க்கத்தில் கவனம் செலுத்தினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ பிரபுபாதாவின் வருகையாலே அக்கனவு இன்று சர்வ தேச நிலையில் நிறைவேறியுள்ளது.

“மாமேகம் சரணம் வ்ரஜ; ஸ்ர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி”

10 பின்னூட்டங்கள்:

  Anonymous

Friday, October 05, 2007

From Sridhar

kindly elucidate the word
srimath Narayanan..

yr thoughprovking article is fine
thanks..expecting more & more

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, October 05, 2007

//பாஞ்சாலி “கோவிந்தா! கண்ணா! சரணம்” என்று கை தூக்கியபோது அவள் மாதவிடாய் காலத்தில் இருந்தாள். இராமனிடம் சரணம் கேட்டு வந்த விபீஷணன் ஒரு குளி-குளித்துவிட்டு வரவில்லை. எனவே, ப்ரபத்தி பண்ணுவார் சுத்தராய் பண்ணவேண்டுமென்ற நியமமில்லை.//

ஆடி ஆடி அகம் தான் கரையச் சொன்னார்கள்; அகத் தூய்மை துலங்கும் போது புறத் தூய்மையைப் பொருட்டாக்கவில்லை வைணவம்.
பல ஆலயங்களில் திருமஞ்சனம் கூட வாரம் ஒரு முறை தான் கண்ணன் சார்! :-)

//ஆரியத்தின் தாக்கம் இந்திய மண்ணில் வந்தபோது சுத்தம்-அசுத்தம், கெட்ட காலம்-புண்ணிய காலம், இன்னவர்தான் இன்ன காரியம் செய்யவேண்டும் போன்ற நியதிகள் உருவாகி அதுவே காலப் போக்கில் சாதியக் கட்டுமானத்திற்கு இட்டுச் சென்றது என்று நம்பப் படுகிறது. இதை மனத்தில் கொண்டு மணவாள முனியின் பரிந்துரைகளைக் கவனித்தால் அவரது புரட்சிகரத் திட்டம் வெளிப்படும்//

மிகவும் விரித்துப் பேசப்பட வேண்டிய ஒன்று! மாமுனிகள் திருவரங்கத்தில் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளப்பரியது.
ஆழ்வார்களுக்குப் பின் வைணவத்துக்குக் கிடைத்தது போல், நாயன்மார்களுக்குப் பின் சைவத்துக்கும் இது போல் ஆசார்யர்கள் கிடைத்திருந்தால், ஒரு சமூக சமன்பாடு இன்னும் ஆழமாக ஊன்றி இருக்கும்! ஹூம்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, October 05, 2007

//“சடாரி” வழக்கம் அதன் காரணம் தெரியாமல் அந்த வைணவக் கோவிலிலும் நம் தலையில் வைக்கப்பட்டது.//

தீர்த்தம் இருக்குன்னு தெரியும்!
இஸ்கானில் சடாரி உண்டா?

இன்னொன்று கவனித்தீர்களா?
பிரபுபாதா என்று பாதா (திருவடி) சம்பந்தம் தான் அங்கும்! :-)

  நா.கண்ணன்

Friday, October 05, 2007

ஸ்ரீமத்---ம். "திரு" இல்லாமல் ஏதுமே இல்லை வைணவத்தில். சாதாரணப் பாயசம், என்ற அதுகூட "திரு"க்கண்ணமது ஆகிவிடுகிறது. பெருமாளைக் கேட்க வேண்டுமா? ஸ்ரீநிவாசன் பெயரே ஸ்ரீ+நிவாசம், திருமால்; திருவை முயங்கக்கூடிய இடமாக இருப்பவன். 'திரு' பெருமாளின் மார்பில் இருக்கிறாள். அவள் கண்ணில் தான் நாம் நேரடியாகப் படுகிறோம் (அவன்தான் நெடுமால் ஆச்சே!), அவள் நம் குற்றங்களை மன்னித்து 'நமக்கும்' சரணமளிக்குமாறு பெரியோனிடம் சிபாரிசு செய்கிறாள். தேசிகன், தனது "தத்வத்ரய சாரம்" எனும் நூலில் இதுபற்றி விரிவாகப் பேசுகிறார். கிருஷ்ணப்பிரேமி அண்ணாவின் உரையைத் தேடி எடுத்துப் போடுகிறேன்.

  நா.கண்ணன்

Friday, October 05, 2007

//ஆழ்வார்களுக்குப் பின் வைணவத்துக்குக் கிடைத்தது போல், நாயன்மார்களுக்குப் பின் சைவத்துக்கும் இது போல் ஆசார்யர்கள் கிடைத்திருந்தால், ஒரு சமூக சமன்பாடு இன்னும் ஆழமாக ஊன்றி இருக்கும்! //

வியாக்கியானங்களுக்காக பிரபந்தங்களா? இல்லை பிரபந்தங்களுக்காக வியாக்கியானமா? என்ற மருட்சி வரும் படியான புரட்சியை ஆச்சார்யர்கள் செய்துவிட்டுப் போயுள்ளனர். வைணவ உரைவளம் ஆழமானது. அது மட்டுமில்லை, மணவாள மாமுனிகள் 'ஆச்சார்யர்களுக்கு' வியாக்கியானம் செய்து மீண்டும் இதன் பரப்பை விரிவு படுத்துகிறார். Hermeneutic science என்பதன் பொருள் என்னவென்று காண வேண்டுமெனில் வைணவத்திற்குத்தான் வர வேண்டியுள்ளது. சைவத்தில் அது இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அது வேதாந்த வழிவிட்டு புறம் சென்றதே.

  நா.கண்ணன்

Friday, October 05, 2007

//தீர்த்தம் இருக்குன்னு தெரியும்!
இஸ்கானில் சடாரி உண்டா?//

இஸ்கானில் சடாரி உண்டா என்று பொதுவாக எனக்குத் தெரியாது. ஆனால் நான் போன எல்.ஏ கோயிலில் இருந்தது. சூரிச் கோயிலிலும் இருந்ததாகவே நினைவு. பிரபுபாதாவின் வழிமுறை நம்மாழ்வாரின் முறைதான். தொடர்பு அறுந்து போய்க் கிடக்கிறது.

  குமரன் (Kumaran)

Saturday, October 06, 2007

கண்ணன் ஐயா. எங்கள் ஊரில் (மினியாபோலிஸ் அருகில்) அண்மையில் தான் பெரிய கோவில் கட்டினார்கள். மூலவர் வரதராஜப் பெருமாள். ஸ்ரீநிவாசப் பெருமாளும் பூரி ஜெகன்னாதரும் உண்டு.
இஸ்கான் இயக்கத்தினரின் ஓவியங்கள் மிக அருமையானவை. பல முறை அந்த ஓவியங்களைப் பார்க்கும் போது நீங்கள் சொன்னது போல் கால் இழிந்து நெஞ்சழிந்த உணர்வு பெற்றிருக்கிறேன். வெவ்வுயிர்த்துயிர்த்து என்று ஆழ்வார் சொல்லும் நிலை கொஞ்சமேனும் அந்த ஓவியங்களைக் கண்டால் வருகிறது.

  Anonymous

Saturday, October 06, 2007

Vanakkam sir,
valluvan also mentioned this SARANAGADHI in many chapters.piraviperungadal,vendudhal,pattruga,irulser,more kurals are teaching SARANAGADHI.Saranam iyyappa,we hear this in karthigai,and margazhi months.Your "sollivaithen" pdf file also you have mentioned the word Sentinel, SARANAGADHI IS GREAT THATTUVAM.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Saturday, October 06, 2007

குமரன்: உங்களால் ஆழ்வார்களின் உணர்வு நிலைக்கு அவ்வப்போது போக முடிவது எவ்வளவு பாக்கியம். இந்த இஸ்கான் படங்கள் பற்றி. எப்படி அந்த ஓவியரால், இந்தியக் கலாச்சாரத்தில் பிறக்கவில்லையெனினும் அப்படியே துவாபர யுகத்திற்குப் போய் அச்சு, அச்சாக அப்படியே அக்காட்சிகளை தத்ரூபமாக வரைய முடிகிறது? பிரபுபாதாவின் ஆங்கில மொழி பெயர்ப்பு என்பது ஆக்ஸ்போடு இங்கிலீஸ் இல்லை. அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து மனிதர். அப்படி இருப்பினும் அவரின் காருண்ய கிருபையால் இப்படியெல்லாம் மாயாஜாலம் பண்ணமுடிகிறது போலும். நாளேல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வைக்கும் ஓவியங்கள்!..ம்ம்ம்

  நா.கண்ணன்

Saturday, October 06, 2007

அன்புள்ள ஸ்ரீநிவாசன்: வள்ளுவமும், வைணவமும்எனும் பாசுரமடலை வாசிக்கவும். இரண்டு கட்டுரைகளில் இது பற்றி விரிவாகப் பேசுகிறேன்.

பகவத்கீதை வள்ளுவர் காலத்திற்கு முந்தியதாக இருக்க வேண்டும். வள்ளுவருக்கு இந்திய அறவழிப் பரிட்சயம் அதிகம். வள்ளுவம் என்பது உண்மையில் Discovery of India.