e-mozi

மடல் 056: உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!

First published on: Mon, 10 May 1999 13:06:17 -0700 (PDT)

கங்கையிற் புனிதமான காவிரி மெல்ல, யசோதை கண்ணனை அணைத்துத் தூங்குவது போல், அடலொளி திகழ் தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மான் பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருவரங்கத்தை அணைத்துச் சென்றாள். அது காலைப் பொழுது:

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது கலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமலரெல்லாம்
வானவ அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர் திசை நிறைந்தன இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்
அரங்கத் தெம்மா! பள்ளி எழுந்தருளாயே!!
(திருமாலை 2, 1)அந்தரத்து அமரர்கள் கூட்டம் ஒரு புறம், அருந்தவ முனிகளின் கூட்டம் ஒரு புறம், இந்திரன் முதலாய வானவர் ஒருபுறம், சுந்தரர், நெருங் கவிச்சாதரர் இப்படி பலரும் எம்பெருமான் கோயில் வாசலில் திருப்பள்ளி எழுச்சி சொல்லிக் கொண்டிருக்க, கலியின் துயர் தீர்க்க தூப்புல் என்னும் ஊரில் அவதரித்து வேதாந்த தேசிகனாக மலர்ந்த வேங்கடநாத குரு தனது சிஷ்ய கோஷ்டிகளுடன் பிரபந்தம் சொல்லிக் கொண்டு கோயிலுள் நுழைகிறார்.

வானவியல், ரசவாதம், உயிரியல், மருத்துவம், கட்டிடக்கலை, இசை, லலித கலை, சட்டம், இலக்கியம், தருக்கம், மீமாம்சம், வியாக்கரணம், வேதாந்தம், என்று எந்தத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த அவருக்கு சிஷ்ய கோஷ்டி பெரும் அளவில் கூடியது ஆச்சர்யமில்லைதான். தமிழ்வானில் தாரகையாய் 120 வருடங்கள் பிரகாசித்து மறைந்த இராமானுசருக்குப் பின் 131 ஆண்டுகள் கழித்து வரும் வேதாந்த தேசிகர், இராமானுசரின் பிரதம சீடர்களில் ஒருவரான கடாம்பி ஆசான் குடும்பத்தவர். இத்தனை பெருமைகள் இருந்தும் அவரைக் கேட்டால், "சிலருக்கு பற்றிக் கொள்ள கர்மம் இருக்கிறது, சிலரோ ஞானத்தை விடாப் பிடியாய் பிடித்துள்ளனர். நமக்கு பற்றிக் கொள்ள இருப்பது அரங்கன் அடியார்களின் திருப்பாதம்தான்" என்பார்.சரியாகச் சொல்வதானால், 1327ம் ஆண்டு! தானுண்டு, தன் திருப்பணி உண்டு என்றிருந்த வேங்கடநாதனை சோதிக்க அரங்கன் திருவுள்ளம் கொண்டான். சீடர்கள் அன்று காலை சொன்ன சேதி அவ்வளவு இனிப்பாக இல்லை. அலாவுதீன் கில்ஜியின் கொடூர சேனாதிபதியான மாலிக்காபூர் திருச்சிவரை வெற்றிவாகை சூடி வந்துவிட்டான். வரும் வழியெல்லாம் கொள்ளை, கொலை, கொடூரம். அடுத்த இலக்கு, வைரமும், தங்கமும் சொரிந்து நிற்கும் திருவரங்கம்தான் என்று எல்லோரும் புலம்பினர்.

வேக, வேகமாக காரியங்கள் நடந்தன. வயது முதிர்ந்த நிலையிலும் பிள்ளை லோகாச்சாரியாரும், அவரது சீடர்களும் நம்பெருமாளை பல்லக்கில் போட்டுக் கொண்டு தெற்கு நோக்கி நகர்ந்து விட்டனர். பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் வைத்து மறைத்து விட்டனர். கொல்ல வந்த புலியை முறத்தால் விரட்டிய பெண்டிர்கள் கொண்ட தமிழகம் தன் வீரத்தை இன்னும் மறந்து விட வில்லை என்று தன் உயிரைத் திரணமாக மதித்து ஒரு கோஷ்டி வடக்கு நோக்கி நகர்ந்தது. வைணவ இலக்கியங்களை சுமந்து கொண்டு வேங்கடநாதர் வடமேற்கு திசை நகர தலைப்பட்டார்! தற்போதைய கர்நாடகாவில் இருக்கும் சத்தியமங்கலம் செல்லும் வழியில் தேசிகர் கண்டதெல்லாம் பிணக் குவியல்தான். இரத்த வெள்ளம் ஆறாய் ஓட நரியும், பிணந்தின்னிக் கழுகளும் ஆட்டம் போட்டுக் கொண்டு நின்றன.

அவர் இம்மாதிரி ஒரு காட்சியை தன் வாழ் நாளில் கண்டதில்லை. இது என்ன சோதனை?

உடம்பினால் குறைவில்லா
உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா
அசுரர் குழாம் துணிந்துகந்த
தடம் புனல் சடைமுடியன்
தனியொரு கூறமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே!

என்ற திருவாய்மொழியை நினைவு படுத்தவா இக்காட்சிகள்? எம்பெருமானே! நான் பயம் என்ற ஒன்றை இதுமுன் அறிந்ததில்லை, இதுவென்ன கடுஞ் சோதனை? என்று அலற்றியவாறு தேசிகர் கடிது நடந்து, சோர்வுற்று பிரம்ம தந்திர சுதந்திர சீயர் முதலிய முதலிகள் தொடர சத்தியமங்கலம் வந்து சேர்ந்தார்.

பயம் என்பது பல்வகையானது. தொன்று தொட்டு உயிரின் ஊடாக ஒன்றிவிட்ட உயிரிப் பயம் (biological fear) முதல். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் பயம் இது. பாலூட்டிகளுக்கு முன் தோன்றிய ஊர்வன (reptiles), பாலூட்டிகள் தோன்றிய காலத்தில் அவைகளை அழித்து உண்ட நூற்றாண்டு பயம் இரத்தில் ஊறுவதாக கார்ல் சாகன் ஒரு புத்தகத்தில் கூறுகிறார்.

புயலும், மின்னலும் இன்ன பிற இயற்கை தோற்றுவிக்கும் பயம் ஒருவகை. மனிதன் குகைகளில் ஒண்டி வாழ்ந்த காலத்திய "தொடர் கதை" போன்ற பயம்.

பின், உறவுகள் சார்ந்த பயம் பலவகை. மனைவி/கணவனைக் கண்டு பயத்தல், பிள்ளைக்குப் பயத்தல், கோல் தாங்கும் ஆசிரியருக்குப் பயத்தல், அறம் பாடும் புலவர்க்குப் பயத்தல், மந்திரம் ஏவும் மாந்தீரிகனுக்குப் பயப்படுதல், துஷ்ட தெய்வங்களுக்கு பயத்தல், கோளுக்குப் பயத்தல், எதிர் காலத்திற்குப் பயத்தல். மரண பயம், சொர்க்கம்-நரகம் பற்றிய பயம். இப்படி பயம் என்பது எண்ணெயில் ஊறிய திரியாய் நம்முள் தோய்ந்து நிற்கிறது.

தேசிகர் சத்திய மங்கலத்தில் வாழ்ந்த நாற்பது ஆண்டுகளில் பயம், அச்சம் பற்றி நிரம்ப சிந்தித்தார். அவரது தியானம் மெல்ல, மெல்ல "அபிஹிதி ஸ்தவா" என்ற நூல் ஆகியது. அதில் பயத்தின் அடிப்படைகளை ஆராய்கிறார். பயத்தை வெல்லும் உபாயங்களை நுணுக்கி ஆராய்கிறார். தெளிவு வந்தது போல் தைர்யம் வந்த பின்னும் எதிர்பாராத நேரத்தில் வந்து தாக்கும் பயம் பற்றி ஆராய்கிறார். இவரது ஆய்வுகள் தற்போதைய உளவியல் ஆய்வுகளுடன் பெரிதும் ஒத்துப் போவதாக இந்திய மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அச்சம், பயம் பற்றி தமிழக சமயங்கள் ஆதி காலம் தொட்டு பேசி வருகின்றன. மனத்தில் இருக்கும் பயத்தை நீக்கி அங்கு தைர்யத்தையும், நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் பல்வேறு தெய்வ வடிவங்களை நிறுத்தி தியானம் செய்யச் சொல்லி ஒளவை தன் "விநாயகர் கவசம்", பாலதேவராயர் தன் "கந்தர் சஷ்டி கவசம்" போன்ற நூல்களில் சொல்லி உள்ளனர். இவை இன்றளவும் உளவியல் ஆலோசனைகள் பிரபலமில்லாத தமிழகத்தில் பிரபலமாக உள்ளது அதன் பயன்பாட்டிற்கு சாட்சி. மகாகவி பாரதியும் வாய்க்கு, வாய் அச்சம் பற்றிப் பேசுகிறார். "அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" என்ற பாட்டு எல்லோருக்கும் தெரியும். ஜய பேரிகை முழக்கத்தில் முதலாவதாக "பயம் என்னும் பேய்தனை அடித்தோம்" என்று கூறுகிறார். ஓடி விளையாடு பாப்பா! என்ற பாடலில் அவர் குழந்தைக்குச் சொல்வது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா!-ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா!

நம்பினார் கெடுவதில்லை என்று இந்திய சமயங்கள் சொல்கின்றன. இந்த உளவியல் உண்மையை வைணவம் தெய்வத்திடம் சரணம் அடைவதன் மூலம் அடையலாம் என்று சொல்கிறது.

சரணாகதி செய்யும் வகையை நான்காகப் பிரிக்கிறார் தேசிகர். 1. பூமி தேவி வராக மூர்த்தியிடம் செய்வித்த சராணாகதி. அதாவது, எழும்பவே முடியாது என்ற பாதாளக் குழியில் விழுந்து விடும் நேரத்திலும் தெய்வத்தின் துணையால் வாழ்வில் மேலே வருதல்,

2. இராம சரணம் - அதாவது சத்துரு என்பவன் வேறெங்கும் இல்லாமல் தன்னிடத்திலோ, தன் சுற்றார் இடத்திலோ இருக்கும் உண்மையை அறிந்த பின், சுற்றத்தை நம்புவதை விட எதிரி நல்லவன் என்று தெரிந்தால் அவனை நம்புவது. தனது படைத் தளபதிகளான சுக்ரீவன் முதலானோர் சொன்ன பின்பும் தன்னிடம் சரண் என்று வந்தவனை இராமன் ஏற்றுக் கொள்கிறான்,

3. காண்டீபம் ஏந்தி சமர் புரிய நிற்கும் அர்ச்சுனன் உறவுகளைக் கண்டு மயங்கி, போர் புரிய மறுக்கும் நிலையில் கண்ணனிடம் சரண் அடைந்து கீதை உபதேசம் பெறுவது. அதாவது, உலகின் சூத்திரதாரியாக ஒருவன் இயக்கிக் கொண்டுள்ளான் என்ற சிந்தனை மறந்து, தன் முனைவில் காரியத்தில் இறங்கி விட்டு, பின் எதிர் கொள்ள வேண்டிய சாவாலைக் கண்டு பயந்து நடுங்கும் போது சர்வமும் தெய்வத்தின் அருளால் நடை பெறுவதை உணர்ந்து செய்ய வேண்டிய காரியத்தில் மனத் தெம்புடன் செயல் படுவது,

4. கணையாழி பெற வேண்டி வந்து நிற்கும் அநுமன், ராட்சசி கூட்டத்தை கூண்டோடு அழிக்க முற்படும் போது சீதை நாச்சியார், "பகைவனுக்கு அருள்வாய்! நன் நெஞ்சே!" என்று பகைவருக்கும் அபயம் அளிக்கும் வகையைச் சொல்வது. கருணைத் தாயான ஸ்ரீதேவி பாரபட்சமில்லாமல் தனது படைப்புலகை காக்க எண்ணும் காரணத்தால் அமைவது இது. இதில் காத்தல் என்பது வேறு எந்த நோக்கும் இல்லாமல் காக்கும் கருணையால் ஆவது. இது மிக, மிக உயர்ந்தது. இந்த நிலை வரும் போது பயம் என்பது சுத்தமாக போய் விடுகிறது.

நாற்பது வருட அஞ்ஞான வாசத்திற்குப் பின் செஞ்சியைச் சார்ந்த கோபன்னராயர் திருவரங்கத்தை துருக்கியரிடமிருந்து மீட்க, தேசிகர் அவர் வேண்டிய படியே திருவரங்கம் வந்து சேர்கிறார்.

தெய்வம் என்பது பல கஷ்டங்களை வாழ்வில் கொடுப்பது, நமது மனோ திடத்தை சோதிக்கத்தான் என்று சொன்னால் மிகையாகாது.

வேதாந்த தேசிகரைப் பற்றி மேலும் அறிய:

3 பின்னூட்டங்கள்:

  செந்தழல் ரவி

Saturday, October 06, 2007

!!!!!!!!!!!

  செந்தழல் ரவி

Saturday, October 06, 2007

பாரதி பாடலின் முதல் நான்கு வரி அருமை !!!!!!!!!!!!

  குமரன் (Kumaran)

Wednesday, November 07, 2007

கண்ணன் ஐயா

துருக்கர் படையெடுப்பின் போது நடந்தவைகளை சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள். 'திருவரங்கன் உலா' படித்தது நினைவில் வந்தது.

அபீதி ஸ்தவம் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் உளவியல் நோக்கில் உள்ளவற்றைப் படிக்க இன்னும் நெருங்கிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். இணையத்தில் தேடிப் பார்க்கிறேன்.