e-mozi

மடல் 049: குறையொன்றும் இல்லாத கோவிந்தா!

Date published in tamil.net:18 Feb. 1999

பண்டைய தமிழக நில அமைவை பல்வேறு திணைகளாகப் பிரித்த தமிழன், ஒவ்வொரு திணைக்கும் ஒரு தெய்வத்தை வைத்தான். குறிஞ்சித் தலைவன் கந்தன் தமிழ்க் கடவுள் என்று பலரும் பேசக் கேட்கிறோம். முல்லைத் தெய்வமான கண்ணன் முருகன் போல் சேயோன் அல்லன். கருத்த பயல் அவன். காடு மேடுகளில் திரிந்து அலையும் கருப்பன். காடுகள் திரித்தி கழனிகள் ஆகும் முன்பு இந்த "மாயோனும், சேயோனும்" தமிழ் நில
அமைவின் உளவியல் பரிமாணமாக உயர்வு பெற்றனர். வருணனும், இந்திரனும் கடை நிலைக்குப் போயினர். முல்லையும், குறிஞ்சியும் திரிந்து பாலையாகும் போது அதற்கும் ஓர் தெய்வம் வேண்டி இருந்தது. சுடு மணல், வெறித்த நிலம், மழை காணா மக்கள். ஆதித்தியன் என்ற கதிரோன் அல்லது கொற்றவை என்ற கொடுந் தெய்வம் இந்நில அமைவிற்கு தெய்வப் பொறுப்பேற்றனர். கொடு நிலத்தில் கண்ணனையோ, முருகனையோ தெய்வமாக வைக்காத பாங்கு நோக்கற்கு அரியது.


தெய்வம் என்பது உருவகமாக (metaphor) அமைவதால் உள்ள சிறப்பு அது காலத்தைக் கடந்து நின்று காலம் காலமாக பொருள் உள்ளதாக அமைவதுதான். கவிதை ஒரு உருவக ஊடகம். கம்பனுக்கு இன்றும்தான் பொருள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். மொழியே உருவகமாகத்தான் நிற்கிறது. அதனால்தான் தோண்டத் தோண்ட வரும் மண் ஊற்று போல்
கற்றவர்க்குப் பொருள் தருவதாய் உள்ளது உருவகம். இதை மிக அழகாகப் புரிந்து கொண்டவர்கள் ஆழ்வார்கள். இதன் வளர்ச்சி நோக்கத் தக்கது.
காடும், காடு சார்ந்த நில அமைவின் கடவுளான கண்ணனை வர்ணிக்கும் போது மரம் என்ற உருவகத்தைப் பயன் படுத்துகிறார் நம்மாழ்வார். இவர் தமிழ் வளர்த்த மதுரை சங்கத்தாரால் வணங்கப் பட்டு பெரும் புலவர், ஞானி என்று பட்டம் பெற்றவர். இவர் சங்கத்தாருக்குச் செய்வித்த பாடலில் "தொன்மிகு பெரு மர" என்று இறைவனைச் சொல்கிறார். இந்தியா போன்ற சூடான பிரதேசத்தில் மரத்தின் பயன் அதிகம். அது வருவோர்க்கு நிழல் தந்து, யார், எவர் என்ற பாரபட்சமின்றி கனி தருவது. மரம் நிலத்தில் வேர் ஊன்றி வானத்தைத் தொடுவது. வானத்தைத் தொட்டாலும் அதன் வேர் என்னவோ மண்ணில்தான். இறைவன் உச்சாணிக் கொப்பாகத் தெரிந்தாலும் அவனது உயிர் கீழ் நிலத்தில் உள்ளது. அதாவது அடி வேரில் புண் வரும் போது உச்சாணிக் கொழுந்துவாடி விடும். அதுபோல்தான் இறைவன் அடியவர்க்கு அடியனாய் கீழ் நிலை மாந்தருடன் உள்ளான் என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

இதனை பிரதிபலிக்கும் வண்ணம் கண்ணனை "பச்சை மா மலை" என்கிறார் தொண்டர் அடிப்பொடி. "ஆயர் தம் கொழுந்தே" என்றும் சொல்கிறார். ஆயர் தலைவனாக உள்ள கண்ணன் கோகுலத்தில் ஒரு சிறுவனுக்குத் துன்பம் என்றாலும் வாடிவிடும் தன்மை உடையவன். அதனால்தான் அவன் அவர்கள் கொழுந்து.

தமிழகப் பார்வைக்கும், யூதர்களின் பார்வைக்குமுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைய யூத தெய்வமான யஹோவா மேலிருந்த படியே ஆணையிடும் தெய்வம். தன் ஆணைக்கு பணியாதோரை தயங்காமல் கொன்றுவிடும் தெய்வம். உச்சாணிக் கொப்பில் உள்ள தெய்வம். அடிநிலை மாந்தரின் தெய்வமன்று. தெய்வத்தை எளிமை படுத்துவது மிக முக்கியம் என்பதை உணர்ந்துதான் பாண்டிய சபையில் பர தத்துவத்தை நிறுவிய பெரியாழ்வார், கடைசிவரை கண்ணனை "கன்னக் குடம் திறந்தால்" வழியும் சிரிப்பு கொள்ளும் சிறுவனாகப் பார்த்தார். தன்னைத் தாயாகப் பாவித்து இறைவனை தன் சேயாக வைத்தார். இறைவனை குழந்தையாகப் பார்ப்பதில் பெரிய சௌகர்யம் உள்ளது. "குழல் இனிதோ? யாழ் இனிதோ?" என்று நம்மை கேள்வி கேட்டு வளையவரும் மழழை எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. இதை நன்றாகப் பயன்படுத்தி பின் "பிள்ளைத் தமிழ்" பாடினர் பெரும் புலவர் பலர்.

பெரியாழ்வாரின் கண்ணன் காடு சுற்றும் சிறுவன். அவன் உடல் வாடுமே என்ற பரிவில்,

"ஆனிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட"


என்கிறார். கண்ணனின் கரிய திருமேனி பற்றி நிறையப் பேசுகிறார்.

"காயமலர் நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும் சுந்தர! என் சிறுவா!"

இவன் சிறுவன்தானோ? இவன் திரு உடையவன், இவன்தான் திருவரங்கத்தில் கிடக்கும் பிரான். மெல்ல, மெல்ல நம்மை இட்டுச் செல்கிறார் பெரியாழ்வார்-இறைவனை நோக்கி.

"கருவுடைமேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்.
திருவுடையாள் மணவாளா! திருவரங்கத்தே கிடந்தாய்.
மருவிமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்."


திருப்பாணாழ்வார் தனது இறுதி மூச்சு இறைவனுடன் கலக்கும் காலையும் அவனை ஹோ! ஓஹோ! என்று பராக்கிரமம் பாடாமல் வெண்ணெய் உண்ணும் சிறுவனாகவே பார்ப்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது!

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன் என் னமுதினைக்
கண்ட கண்கள், மற் றொன்றினைக் காணாவே"


இப்படி இறைவனை எளிமை படுத்தி எல்லோரிடமும் சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு அளப்பரியது. வைணவ தத்துவத்தின் ஆணிவேராய் நிற்கும் மாறன் பாராங்குசன் நாரணனின் அளப்பரிய சக்தியில் மதி மயங்க ஒட்டு, கண்ணனின் எளிமை கண்டு மதி மயங்குகிறார்."பத்துடை அடியவர்க்கு எளியவன்" என்ற பாசுரத்தைத் தொடங்கிவிட்டு ஆறு மாதம் நினைவிழந்து விட்டதாகக் கூறும் குரு பரம்பரைக் கதைகள்.

பெரியாழ்வார் கண்ணனை பிள்ளையாகப் பார்த்தால் அவர் பெண் ஆண்டாள், இறைவனைக் காதலானகவே பார்க்கிறாள்! கருநிறமுடைய எதைக் கண்டாலும் மயங்குகிறாள்!

"கருவிளை யொண்மலர்காள்!
காயாமலர் காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர்
எனக்குய்வழக் கொன்றுரையீர்,
திருவிளை யாடுதிண்டோள்
திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து
வந்திபற்றும் வழக்குளதே!"

ஆண்டாள் செய்வித்த நாச்சியார் திருமொழி வாசித்து, வாசித்து இன்புறத்தக்கது.

கிருஷ்ணமாச்சாரி என்ற "குவளைக் கண்ணனின்" தூண்டுதலின் பேரில் "கண்ணன் பாட்டு"எழுதும் சுப்பிரமணிய பாரதி ஆழ்வார்கள் வழியில் கண்ணனைத் தரிசித்து அவர்களையும் தாண்டிச் செல்கிறான். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக, தன்குல தெய்வமாகப் பார்க்கிறான். அவன் வாயால் சொல்வதானால்,

"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி என்று சொன்னான்"


தெய்வத்தின் உருவகத் தன்மையைப் பாரதியைப் போல் புரிந்து கொண்டவர் வேறு யார் உண்டு? தெய்வத்துடன் தோள் கோர்த்துச் செல்லும் அவன் பாங்கு என்னே? பாரதியின் சிந்தனைப் பரப்பு ஆச்சர்யமானது. கண்ணனை ஆண்டானாகவும், தன்னை தலித்தாகவும் பார்த்து உள்ளம் உருகியவனும் பாரதிதான்.

"பண்ணைப் பறையர்தங் கூட்டத்திலேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்
கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற்றிங்கு வந்தேன்"

என்கிறான் பாரதி. பாரதிக்குப் பின் இவ்வுருவகச் செம்மையை நன்றாகப் பயன் படுத்தியவன் கண்ணதாசன். ஆனாலும் பாரதி எட்டிய எல்லையைக் கண்ணதாசன் தொடவில்லை. ஜெயகாந்தன் சொல்வது போல் இது பாரதி யுகம். பாரதி மீண்டும், மீண்டும் பிறக்கிறான். சமீபத்தில்இது இணையத்தில் நடந்தது December 16, 1998 அன்று ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் புதிய கண்ணன் பாட்டு எழுதினார். கண்ணனின் தேவை காலத்திற்குக் காலம் வித்தியாசப் படுகிறது. பௌத்தரும், சமணரும் அறனை வலியுறுத்தி வாழ்வைப் புறம் தள்ளிய போது வாழ்வின் சிறப்புச் சொல்ல கண்ணன் காதலனாக, சேயாக வேண்டியிருந்தது. பாரதி காலத்தில் இறைவனை எல்லோரிடத்திலும், எல்லா மதத்திலும் பார்த்து, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருந்தது. ஆனால் ஜெயபாலன் காலத்தில் தலித்தியம் தலை எடுக்கிறது; ஈழம் தீப்பற்றி எரிகிறது. கவிஞனின் வார்த்தைகளில் கனல் தெரிக்கிறது.

"நீலக் கோனாரப் பயலே.
கறுத்தத் திரவிடத் தலித்தனே.
நல்லதும் கெட்டதும்
நஞ்சு வண்ணனின் அமுத நெஞ்சறியும் என
உன்னையே நம்பி
அன்னியர் புகுந்த வன்னியில் தரித்த என்
அன்னைக்கு ஏனடா ஓலம்
"

என்று கேட்க வைக்கிறது.

"ஈழத்தில் தமிழர்கள்
தாடகை வனத்துத் தேவராய் அழிதலைக் காண்டிடாது
உண்ட ஆழ்வார் அமுதுக்கும் நன்றி கெட்டவனே
அதர்மம் அழிக்க
யுகங்களைக் கடப்பேன் என்ற பொய்யா
எங்கே தொலைந்தனை
."

என்று ஒரு பழியை கண்ணனின் மீது வீசுகிறார்! ஈழம் சைவ உலகம். அங்கு கண்ணன் வழிபாடு அதிகம் கிடையாது. ஆனால் அங்கும் பழி ஏற்க கண்ணன் வருகிறான்.

"தாய்க்கு இனி மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா, கர்ணா!
நானும் உன் பழி கொள்வேனடா!

(கர்ணன் திரைப்படம்)

என்று மாபாரதத்தில் எல்லோர் பழியையும் ஏற்கும் கண்ணனால் ஜெயபாலனின் பழியை ஏற்கவா முடியாது? ஆழ்வார்களும் பழி சுமத்துகின்றனர். பெரியாழ்வார், "வாழ ஒட்டான் மது சூதனன்" என்றும், "தீமைகள் செய்யும் சிரீதரா" என்றும் பழிக்கின்றார் (அவன்செய்யும் குரும்புத்தனம் தாங்காமல்). ஆண்டாளோ, ஒரு பெண்ணை வதை செய்தான் என்ற பழி வந்து சேரும் என்று வெண் சங்கிடம் எச்சரிக்கிறாள்!

இப்படி கண்ணனிடம் வம்பு செய்வதற்குக் காரணமென்ன? அவன் காட்சிக்கு எளியவனாக இருப்பதால்தான். ஆழ்வார் வழியில் ஜெயபாலனும் அந்த உரிமையைக் கோருகிறார்,

"வேங்குழலாக இசைக்கிற அந்த
மாய இடைச் சிறான்
துயருறும் என்னுள்ளும் ஸ்வரங்களாய் நிறைகிறான்
."

என்று சொல்கிறார். ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் நஞ்சு வண்ணன் என்று கண்ணனை வர்ணித்தது தமிழுக்குப் புதிது. காலத்துக்குக் காலம் கண்ணனுக்குப் புது மெருகு கூடுகிறது. சங்கம் தொடங்கி ஜெயபாலன் வரை கண்ணன் என்னும் உருவகம் கவிஞர்கள் மனதைத் தொட்டு இருக்கிறது.

கண்ணன் வெறும் நெகிழ்சியின் உருவகம் அல்ல. வெறும் காதலின் உருவகம் அல்ல. பரம் பொருள் தோளொடு தோள் சேர்த்து வரும் தன்மையின் பிரதிபலிப்பு அவன். கண்ணன் தன் அகத்தில் கால் வைத்த பின் நடந்த விஷயங்களைப் பாரதி பட்டியல் இடுகிறான்:

"செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
சேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!"

வைணவத்தின் அடி நாதத்தை, ஆச்சர்யமாக வைரமுத்து ஒரு சினிமாப் பாடலில் (பெரிய தம்பி) பிரதிபலிக்கிறார்.

"உள்ளம் முழுதும் நேசம் வைத்தால் குறை தெரியாது"

என்பதுதான் அவ்வரி. இதையேதான் ஆண்டாள்,

"குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
"

என்று சொல்கிறாள். அவள் சொல்வது போல் தமிழ் உள்ளளவும் கண்ணனுடன் கூடிய உறவு தமிழ் மண்ணில் ஒழிவில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கும்.

பாசுர மடல் 49 நிறை கொள்கிறது.

பிகு: அகில உலக ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் (தமிழ்) - லண்டன் ரேடியோவில் 13.02.99 அன்று கொடுத்த பேட்டியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

மடல் 050: உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார்!

Date published in tamil.net: 24 Feb. 1999

நான் பாசுர மடல்கள் எழுத ஆரம்பித்த போது இலக்கியம்தான் முன் நின்றது. நான் என்னை என்றும் சமயவாதி என்று எண்ணியதில்லை. நான் உள்ளத்தால் இலக்கியவாதி. வைணவ இலக்கியங்கள் எண்ணிக்கையில் சைவ இலக்கியங்களை விட மிகக் குறைந்தவை. அதனால் அவை சிறுபான்மை இனம் என்று சொலலாம். இலக்கியவாதியின் சார்பு
எப்போதும் பெரும்பான்மையை விட சிறுபான்மையிடம் இருப்பது இயல்புதானே. சிறுபான்மைக் குழுக்கள் பெரும்பாலும் பொது நீரொட்டத்திலிருந்து வித்தியாசமாக சிந்திப்பதால் சிறுபான்மையாக இருப்பது அவதானித்தால் புரியும். இதைச் சுட்டிக் காட்டும் சில பாசுர மடல்கள்வந்துள்ளன.நான் தத்துவவாதியும் அல்லேன். ஆழக் குழி தோண்டும் வண்டினம் அல்ல நான். இந்தியாவின் மாபெரும் தத்துவவாதியான ஆதி சங்கரனுக்கு சவால் விடும் தத்துவத்தை ஸ்ரீபெரும்புதூர்காரர் தமிழ் இலக்கியங்களை வைத்து சமைத்திருக்கிறார் என்பது இன்றளவும் எனக்கு மிகவும் சந்தோஷம் தரக்கூடிய விஷயம். நான் அத்வைதத்தை புரிந்து கொண்டால் அல்லவோ விசிஷ்ட்டாத்வைதம் பேசமுடியும்? வாசித்த அளவில் இராமானுச முனியின் பாரிய சிந்தனைப் பரப்பைக்கண்டு சொக்கிப் போனது உண்டு. அந்த ஆழங்கால் படுவதற்கு நான் ஒருஆழ்வார் ஆகவேண்டும். நான் ஆழ்வார்க்கு அடியேன்தானே! ஆழ்வார் அல்லவே!

"என்ன தவம் செய்தனை யசோதா! எங்கும் நிறை பரம், "அம்மா" வென்று அழைக்க, என்ன தவம் செய்தனை!" என்றொரு கர்னாடக கீர்தனை உண்டு. எங்கும் பரந்து இருக்கும்
அவன் சொரூபத்தைக் காண குழி தோண்டவேண்டுமாவென பல சமயம் தோன்றும். தத்துவ வித்தர்கள் இருக்கும் அதே உலகில் வெகுளியான பக்தர்களும் (பகவர்கள்) இருக்கத்தானே செய்கிறார்கள். ஆழங்கண்ட சங்கரனும் ஒரு சமயத்தில் "பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் மூட மதே!" என்று தியாகராஜர் போல் பஜனை செய்தது இங்கு நோக்கத் தக்கது.

நமக்கு எதுக்கு சார், தத்துவமெல்லாம்? அறிவுச் செறுக்கு கொள்வதுஎளிது.

"Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we have
lost in information? (T.S. Eliot, The Rock, 1934)"

என்று எலியட் சொல்வது போல்அடியும், முடியும் தேடி அலைந்து, சளைத்து, "திக்குத் தெரியாதகாட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே!" என்று பாட வேண்டிவரலாம்.

ஆய்வாளர்களைப் பற்றி எண்ணிய போது அந்த்வான்த் செந்தின் "குட்டி இளவரசன்" ஞாபகத்திற்கு வருகிறான்.


"அப்பாடி! மொத்தம் ஐம்பது கோடி பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று.
-ஐம்பது கோடி என்ன?
-என்னது? நீ இன்னும் இங்கேதான் இருக்கிறாயா? ஐம்பது கோடி பதினாறு லட்சத்து...நினைவில்லை...எனக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது! சின்ன விஷயங்களில் ஈடுபடுவதில்லை!
-கோடி என்ன?
-வானத்தில் சில சமயம் பார்க்கிறோமே, கோடிக்கணக்கான நுண்பொருட்கள், அவைதாம்.
-ஈக்களா?
-இல்லை. மின்னுகின்றனவே, அந்த நுண்பொருட்கள்.
-தேனீக்களா?
-அவை இல்லை, சோம்பேறிகளைக் கனவுலகிற்குக் கொண்டு செல்லும் பொன்னிறமான நுண்பொருட்கள். நான் கருமமே கண்ணாயிருப்பவன், தெரியுமா! எனக்கு கனவு காண நேரமில்லை.
-இந்த வின்மீண்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?
-ஒன்றுமில்லை அவை எனக்குச் சொந்தம்.
-எப்படி வின்மீன்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்?
-அவை யாருக்குச் சொந்தம்? என்று திருப்பிக் கேட்டான் அந்த முசுடு.
-எனக்குத் தெரியாது. யாருடையவையும் இல்லை.
-அப்படியென்றால் அவை என்னுடையவை. ஏனென்றால் நான்தான் முதலில் அவற்றைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். வின் மீன்கள் எனக்குச் சொந்தம். ஏனென்றால் அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று எனக்கு முன்பு யாருக்கும் தோன்றவில்லை
-உண்மைதான், அவற்றை நீ என்ன செய்கிறாய்?
-அவற்றை நிர்வகிக்கிறேன். அவற்றைக் கணக்குப் பார்க்கிறேன். மீண்டும் எண்ணிக்கையிடுகிறேன். இது கடினம்தான். ஆனாலும் நான் காரியத்தில் கண்ணாயிருப்பவன்! வின்மீன்களை வங்கியில் சேமித்து வைக்கிறேன்.
-அப்படியென்றால் என்ன?
-அதாவது, வின்மீன்களின் எண்ணிக்கையைச் சிறு காகிதத்தில் எழுதுவேன். அதை ஒரு பெட்டகத்தில் வைத்துப் பத்திரமாகப் பூட்டுவேன்.
-அவ்வளவுதானா?
-அது போதும்!

"நல்ல வேடிக்கை. கவிதை போல் இருக்கிறது. ஆனால் கருத்துள்ளதாக இல்லை" என்று நினைத்தான் குட்டி இளவரசன்.

முக்கியமான விஷயங்களைப் பற்றி குட்டி இளவரசனின் கருத்துக்கள் பெரியவர்களின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.

-என்னிடம், எனக்குச் சொந்தமான ஒரு மலர் இருக்கிறது. தினந்தோறும் அதற்கு நான் நீர் ஊற்றுவேன். என்னிடம் மூன்று எரிமலைகள் இருக்கின்றன. அவற்றை வாரந்தோறும் கரிநீக்கிச் சுத்தப் படுத்துவேன். அணைந்த எரிமலையைக் கூடச் சுத்தப்படுத்துவேன். யாருக்குத் தெரியும் என்ன ஆகுமென்று. என் மலருக்கும் என் எரிமலைகளுக்கும் அவை எனக்குச் சொந்தம் என்பது பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் நீயோ வின்மீன்களுக்குப் பயன்படவில்லை." பெரியவர்கள் நிச்சயமாக முற்றிலும் அசாதரணமானவர்கள்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான்.

செருக்கு கொள்வது எளிது, எளிமையாய் இருப்பதுதான் கடினம். (எளிமையாய் இருப்பது போல் நடிப்பது எளிது என்பது வேறுவிஷயம்!) ஆழ்வார்கள் அடித்துச் சொல்வது இந்த எளிமையைத்தான்.அந்த எளிமையில்தான் இறைவனைக் கண்டு சொக்கிப் போனார்கள். அதன் பிரதிபலிப்பாகத்தான் "இழிதல்" என்ற கோட்பாடு இந்திய தத்துவ உலகிற்கு
கிடைக்கிறது. இதைத்தான் பல்வேறு "அவதாரங்கள்" சுட்டுகின்றன. இறைவன் கிடைக்கக் கூடியவான இருக்க வேண்டும்.சளைக்க வைப்பவனாக இருக்கக் கூடாது என்பது ஆழ்வார்கள் துணிபு.

முக்கியமாக, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவில் தமிழில் இலக்கியமும், ஆன்மீகமும் ஒன்றாகக் கலந்துள்ளன. பக்தி இலக்கியம் தொட்ட உச்சியைத்தமிழ் இன்னும் தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தநூற்றாண்டில் இந்த வழியில் கேட்கும் ஒரே குரல் பாரதியினுடையது. அவனுக்குப்பின் யாரும் இவ்வழியில் செல்ல
வில்லை. பக்திப் பாடல்கள் என்று இன்று கேட்கும் பாடல்கள் உண்மையில் பக்தியின் அர்த்தம் கூடப் புரிந்து கொள்ளாத பாடல்களாக இருப்பது கேட்டால் புரியும். இறைவனுக்கு நாலு போற்றி சொல்லும் தோத்திரங்கள் அவை. அதுவல்ல பக்தி.

திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,
நம்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.
(திருவாய் மொழி 2.2.1 )

என்று இருக்க வேண்டும். பக்தி என்பதும் ஒரு நோக்கு. உலகில் உறையும் இறையின் வெளிப்பாடு கண்டு மெய் சிலிர்க்க வேண்டும். நாவுக்கரசரைப் பாருங்கள். இரண்டு யானைகள் கூடும் சங்கமத்தைப் பார்க்கும் காலையும் அவருக்கு சிவ சக்தி ஞாபகம் வருகிறது.

மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போதுகாதன் மடப்பிடி
யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!

இதுதான் பக்தி. காமம், செக்ஸ், அது, இதுவென்று விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கக்கூடாது!இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஒருவகையான, செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட வறட்சி தெரிகிறது. பகுத்தறிவு என்ற ஒரு போர்வையில் நம் பக்தி இலக்கியங்கள் புறம் தள்ளப் பட்டுள்ளன. தமிழர்களை விழிக்கச் செய்ததில் பெரியாருக்கு பெரும் பங்கு உண்டு. அதை மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் அவர் கிண்டல் அடித்தது போல் "தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி" என்று சொல்லும் அளவிற்கு அதை வரண்டு போக வைத்ததில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதன் செழுமையை முழுவதும் உணராமல், இங்கொன்று அங்கொன்று என்று நுனிப்புல் மேய்ந்து வரண்டு போயினர். ஆங்கில மோகம் வந்த பிறகு"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று புலம்பும்
அளவிற்கு தமிழைத் தமிழர்கள் இட்டுச் சென்று விட்டனர். இதை நன்கு உணர்ந்துதான் கலைஞர் ஒரு பேட்டியில் சொன்னார், தனக்கு ஆழ்வார்களின் இலக்கியச் செழுமையில் பெரும் மதிப்பு உண்டு என்று. சமயம் என்ற கருத்தில் வேறு பட்டாலும் இலக்கியம் என்று வரும் போது நல்ல தமிழரான கலைஞரால் ஆழ்வார்களை ஒதுக்க முடியவில்லை.
இந்தப் பார்வையாவது நமக்குவேண்டும்.

இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்குமுள்ள உறவை ஒரு திருவாய் மொழிப் பாடல் சொல்கிறது:

செங்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்ம்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து,
என்நெஞ்சு முயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம்
என்நெஞ்சு முயிரும் அவை உண்டு தானே யாகி, நிறைந்தானே.
10.7.1""செவ்விய சொற்களையுடைய புலவர்களே! உங்களைப் பாதுகாத்துக் கொண்டு கவிபாடுக. திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வனும், மாமாயனுமான எம்பெருமான் (ஆழ்வாரே! உம்மைக்கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளப் பாராநின்றேன் என்று) ஒரு மாயம் செய்து வந்து, என் மனத்தினுள்ளும் உயிரினுள்ளும் ஒரு நீராகக் கலந்து, நிற்கின்ற பெரிய பிராட்டியார் முதலாயினாரும் அறியாத படி, என் மனத்தையும் உயிரையும் அனுபவித்து, என்னைக் காண இடமின்றித் தானேயாகி நிறைந்தவன் ஆனான். ஆதலால், உயிர் காத்து ஆட்செய்ம்மின்!"

கவி செய்கின்ற பாவனையில் இறைவன் உட்புக நடக்கும் காரியத்தை திருமூலரும் பெருமையுடன்சொல்கிறார்:

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!"

நம்மாழ்வார் ஊனுடம்பு பாழ் என்று சமணர்கள் போல் ஒதுக்கச் சொல்லவில்லை. "இத்தலைஉண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களாசாசனம் செய்யவாவது?" (ஈடு) என்று உயிரைகாக்கச் சொல்கிறார். இதையே வேறு வார்த்தைகளில் திருமூலரும் சொல்கிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
(1823)

ஆழ்வார்கள் சங்க காலக் கவி மரபின் தொடர்ச்சி என்பது அவர்கள் கவி செய்யும் பாங்கிலிருந்து தெரிகிறது. மாயக் கவியாய் வந்து என்பதற்கு வியாக்கானம் "கவி என்ற காரணத்தை இட்டுக்கொண்டு வந்தான்; காதலி இருக்குமிடத்தில் "தண்ணீர்" என்று புகுமாறு போலே" என்பது. அவர்கள் சுட்டும் கலித்தொகைச் செய்யுள் இதோ!

அன்னையும் யானும் இருந்தேமா, "இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன்" என வந்தாற்
கன்னைஅடர் பொற் சிரகத்தால் வாக்கிச் "சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா" என்றாள்; எனயானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னைவளை
முன் கை பற்றி நலியத் தெருமந்திட்டு
"அன்னாய் இவன் ஒருவன் செய்ததுகாண்! என்றேனா?
(செய்.51)

இனி கவி செய்யும் போது நம் பாரம்பரியம் நினைவுக்கு வரும்தானே!

மடல் 051: தமிழ் நயமும், மெய்ப் பொருளும்

First published on: 26 Feb. 1999

தெய்வ வடிவங்கள் உருவகமா? என்ற தலைப்பில் முனைவர் லோகநாதன் ஒரு கடிதம் எழுதி அதில் சில சுவாரசியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பொது நலன் கருதி அக்கேள்விகளுக்கு இம்மடலில் பதில் தர விழைகிறேன். அவரது கேள்விகள் உருவகம் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது. அவர் உருவகம் என்தற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்:
"உருவகம் என்றால், தான் எழுதும் கவிக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைகின்ற, அவன் மனத்திலிருந்நு எழுகின்ற ஓர் கற்பனை அல்லது கற்பிதம் எனப்படும்."
இதை இப்படித்தான் பொருள் கொள்ள முடியுமாவெனப் பார்ப்போம். அவரது புரிதலின் படி இது அவரது அடுத்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. அதாவது,

"ஆக உள்ளப்படியே மரம் செடி கொடிகள் போல ஆனால் கண்களுக்குப் புலப்படாது மறையாகவே நிற்கும் மெய் பொருட்களல்ல தெய்வங்கள் என்று படும். இதனால் எல்லா தெய்வ வடிவங்களும் கற்பிதங்களே என்று மாயாவாத வேதாந்த பரமான ஓர் கருத்தினைச் சொல்லி இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்."

"எவனாவது தனது கற்பிதங்களையே தொழுவானா? கோயில் எடுத்து கும்பிடுவானா? பற் பல தவங்கள் செய்து தரிசனம் பெற முயல்வானா?" ஆக இவரது கேள்விகள் இலக்கியம், தத்துவம் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தொட்டுச் செல்கின்றன.

எனவே உருவகம் என்றால் என்ன? அதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம், உருவகம் ஒரு கற்பிதமா? உருவகத்திற்கும் மெய் பொருளுக்கும் உள்ள உறவு என்ன? உருவகம் ஒருவேதாந்த மாயாவாதமா? இறைமையை உருவகமாகப் பார்ப்பதால் நம் தொன்மையான ஆன்மீக வழிகளையக் கேலிக்குள்ளாக்குகிறோமா? என இனி ஆய்வோம்.

உருவகம் எவ்வாறு நம் சாதாரண வாழ்வில் பயன் படுகிறது என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

ஒன்றைப் போல் ஒன்று என்று சொல்லும் போது அது உவமை அணி ஆகிறது. உதாரணம்,கொடி போல் இடை, பச்சை மா மலை போல் மேனி. இவை உவமைகள். ஆனால் "இது"தான் "அது" என்னும் போது உருவக அணியாகிறது. உதாரணம், விடுதலைப் "புலிகள்", "ஐயோ! அவரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள்! அவர் பத்திரை மாத்து தங்கம்!"

இங்கு ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் "புலிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். இது கற்பிதம் என்று சொல்லலாம், இதை வெறும் வார்த்தைகளாகப் பார்த்தால். ஆனால், இந்த உருவகம் நம்முள் ஏற்படத்தும் தாக்கமோ வேறு விதமாக இருக்கிறது. பாய்ந்து வரும் புலி போல் தாக்கும், வெறி கொண்ட வீரன் நம் கண் முன் தோன்றுகிறான். உருவகம் பொய் என்றால் இக்காட்சி நமக்குத் தோன்றாது. ஒருவரைத் "தங்கம்" என்னும் போது அவரது உயர்வு, நாணயம், பண்பு உடனே நமக்குப் புரிகிறது. இதுதான், உருவகம் நம் மனத்துள் செய்யும் செயல். (வைரமுத்து பாட்டுக்கு பெண்களை "குட்டித் தீவே! 50 கிலோ தாஜ் மகாலே!" என்று உருவகப் படுத்தப் போய் இவ்வுருகங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று ஒரு சரடு இணையத்தில் போனது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்!)

எனவே உருவகம் என்பதை "ஒன்றைச் சொல்ல, ஒன்று வருவது" என்று கொள்ளலாம்.இந்த முறையை மீண்டும், மீண்டும் மெய் ஞானிகள் பயன் படுத்தி இருக்கின்றனர். ஏன்?

மெஞ்ஞானிகளில் பலர் நல்ல கவிஞர்களாக இருந்ததால்தான்! அருள் பெற்ற பின் சும்மா, "சிவனே" என்றிறாமல் இவர்கள்,

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே


(திருமந்திரம்)

என்னும் நல்லெண்ணத்தால் கவி செய்யப் புறப்படுகின்றனர். ஞானி என்றாலும் அவன்கவி அல்லவோ, எழுத ஆரம்பித்தவுடன் அவன் கவி உள்ளம் செயல் படத் தோன்றுகிறது. வடலூர் வள்ளலார் பெரும் அருளாலர். அவர் செய்வித்த திருஅருட்பாவைக் கேளுங்கள்.கவியும், ஞானியும், தமிழும், மெய்பொருளும் "கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல" கலந்து நிற்பதை!

கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே நிழல் கனிந்த கனியே!
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே!
உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே!
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே!
மென் காற்றில் விளை சுகமே, சுகத்தில் உறும் பயனே!
ஆடையிலே எனை மணந்த மணவாளா!
பொதுவில் ஆடுகின்ற அரசே! என் அலங்கள் அணிந்தருளே!

(திருஅருட்பா-409 திருக்கோயில் வழிபாடு)

எத்தனை உருவகங்கள்! தருவே! நிழலே! கனியே! மலரே! பூங்காற்றே! அத்தனையும் உருவகங்கள்! மதுரை சங்கத்தாருக்கு பரதத்துவத்தை உணர்த்த நம்மாழ்வார் செய்வித்த பாடலிலும் "தரு" என்ற உருவகத்தைப் பயன் படுத்துகிறார்:

வார்த்தைகளுக்குள் இறை அனுபவத்தை அடைக்க முடியாத போது கவி உருவகத்திற்கு தாவுகிறான். நம்மாழ்வார் படும் பாட்டைப் பாருங்கள்!

பாலென்கோ? நான்கு வேதப்
பயனென்கோ? சமய நீதி
நூலென்கோ? நுடங்கு கேள்வி
இசையென்கோ? இவற்றுள் நல்ல
மேலென்கோ? வினையின் மிக்க
பயனென்கோ? கண்ணன் என்கோ?
மாலென்கோ? மாயன் என்கோ?
வானவர் ஆதியையே!

(திருவாய்மொழி 3.4.6)

"யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!

(திருவாய் மொழி 5.8.6)

அத்தனையும் உருவகங்கள்! மாலும், கண்ணனும், மாயனும் கூட உருவகங்கள்தான்!

இப்படிச் சொல்வதால் இது மாயாவாதம் ஆகுமா? கடவுளை மரம், தண்ணீர், பூ, பால் என்று உருவகப்படத்துவதால் சிறுமைப் பட்டு போகுமா? இங்குதான் மனிதனின் "anthropomorphic view" வருகிறது. மனிதன், தேவர்கள், கடவுளர் மேல், மற்றவை கீழ் என்று யார் தீர்ப்பு சொல்வது? மரமும், மணமும் சிறுமையானதோ? யார் உசத்தி, யார் தாழ்ச்சி என்று யார் சொல்வது? அது அரசியல் நடு நிலமை கொள்ளுமோ? இதை மிக உணர்ந்துதான் நம் மெஞ்ஞானிகள் பிரபஞ்சம் முழுவதையும் இறையின் வெளிப்பாடாகவே கண்டனர்.

பகலும் இரவும் தானேயாய்ப்
பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார்!


(பெரிய திருமொழி 7.5.5)

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை கூட கண்ணன் எம்பெருமான் என்று சொல்பவர் நம்மாழ்வார் (6.7.1). அப்படியிருக்கும் போது எங்கிருந்து வருகிறது மாயாவாதம்? ஆழ்வார்கள் ஒரு இடத்திலாவது நமது வாழ்வைப் பொய் என்றனரா?

பொலிக, பொலிக, பொலிக
போயிற்று வல்லுயிர்ச் சாபம்!
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
!


(திருவாய்மொழி 5.2.1)

என்றுதான் சொல்லிப் போயினர்.

எங்கே, வாழ்வு மாயை என்று மயங்கி விடுவானோ எனப் பயந்து,

"வருந்தா திரு,நீ மட நெஞ்சே!
நம்மேல் வினைகள் வாரா!"


(பெரிய திருமொழி 8.6.6)
என்றும்,

"வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்க ஒட்டே
"

(திருவாய் மொழி 10.7.9)

என்றும் சொல்கின்றனர் ஆழ்வார்கள். எனவே இங்கு மாயாவாதம் வரவில்லை.

கடவுள் உருவகம் என்பதற்கான நல்ல சான்று நம் புராணங்களில் காணக் கிடைக்கிறது. இறை அளப்பரியது என்று ஞானிகள் உணர்ந்தனர். அதைப் புராணக் கதைகளாக்கும் போது சைவர்களும், சாக்தர்களும், வைணவர்களும் குசும்பு செய்கின்றனர். இறையின் அடியும் முடியும் காணத் தலைப்பிட்டு, காணாமல் சளைத்த கதைக்கு பல versions இருக்கின்றன. பெரியாழ்வார் versionப் பார்ப்போம்:

இந்திரனோடு பிரமன்
ஈசன் இமையவரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு
மறைந்து உவராய் வந்து நின்றார்!
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்!

(பெரியாழ்வார் திருமொழி 2.8.1)

அதாவது மாமலர் காண இந்திரன், பிரமன், ஈசன் போன்றோர் முயன்று தோற்றனர் என்கிறார். திருமூலர் விடுவாரா?

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே!

என்கிறார். பராத்பரா! பரமேஸ்வரா! பாட்டு ஞாபகம் இருக்கிறதா? "அரி, அயனும்காணா பரமஜோதி! ஆதி, அந்தம் இல்லா பழம் அனாதி!" நம்ம சாக்தர்கள் விடுவார்களா? அவர்களும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். மும்மூர்த்திகளுமே தேவியின் அடி, முடி தேடுவதாக.

பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிறுவிய பெரியாழ்வார் சொல்வது சரியா?இல்லை, சைவ சித்தாந்தத்தின் பரம குருவான திருமூலர் சொல்வது சரியா?இல்லை பரம பாகவதர்களான சாக்தர்கள் சொல்வது சரியா? எல்லோரும் ஞானிகளே! எல்லோர் சொல்வதும் சரியே! எப்படி? மால், அயன், சிவன் எல்லாம் உருவகங்கள்தான். இதைப் பின்வரும் திருவாய்மொழிப் பாடல் சொல்லும்:

துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி
துழாயலங் கல்பெருமான்
மிக்கபல் மாயங்களால்விகிர் தம் செய்து
வேண்டும் உருவுகொண்டு
நக்கபிரானே டயன்முத லாகஎல்
லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுக்க விழுங்கவல்லானைப்பெற்
றொன்றும் தளர்விலனே!


(திருவாய்மொழி 3. 10.9)

காலம், வெளி கடந்து பரந்து நிற்கும் பரம் பொருளை காலம்-வெளி பரிமாணத்தில் தருசிக்க முயலும் போது உருவகங்கள் உதவுகின்றன.

உருவகங்கள் பொய் இல்லை என்று பார்த்தோம். "கன்னல் இனிய பிரானே! நாரணா!"என்று சொல்லும் போது சொல்லொணாப் பரிவும் பக்தியும் தானாக உள்ளத்துள் ஊறித் ததும்புகின்றன. ஒவ்வொரு உருவகங்களுக்கும் இத்தகைய சக்திகள் உண்டு."சுற்றி நில்லாதே! பகையே! துள்ளி வருகுது வேல்!" என்னும் போது முருகனின் அளப்பரிய காக்கும் சக்தி நம்மைக் காப்பதாய் உணர்கிறோம். "அன்பும்,சிவனும் வேறென்பர் அறிவிலார்" என்று திருமூலர் சொல்வது போல் உருவகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுபவர்களை என்ன செய்வது?

அன்புருகும் திருவாசகர் கூட ஒரு சமயத்தில் சளைத்திருப்பது "முக்தி நெறிஅறியாத மூர்க்கரோடு முயல்வேனே!" என்ற பாசுரத்தால் அறியலாம். நம்மாழ்வாரும் "சொன்னால் விரோதம் இது! ஆனாலும் சொல்லுவேன்" என்று சொல்கிறார்.

இம்மாதிரிக் கதை விவிலியத்தில் கூட உண்டு. ஏசுவின் சீடர்கள் ஒருநாள்அவரிடம் வந்து, "ஐயா! பரம பிதாவின் அருளாட்சி பூலோகத்தில் வரும் என்று சொல்கிறார்களே அது எப்போது வரும்?" என்று கேட்கின்றனர். அதற்கு ஏசு,"பரமனின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூடர்காள்! உங்களுக்குபார்க்கத் தெரியவில்லை!" என்றாராம்.
உருவகம் என்பது ஒரு "world view". மிகவும் ஜனநாயகமான பார்வை இது. முழுமையான பார்வையும் கூட. இப்பார்வை இல்லாத போதுதான் கடவுளின் பெயரால் நாம் சக மனிதனைக் கொடுமை செய்கிறோம்.

Metaphor என்ற ஆங்கில பதத்திற்கு திரு.லோகநாதன் "உவமானதீதம்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக அறிகிறேன். உவமானத்தின் அதீதம் என்ற சொல் அழகாகவே உள்ளது. ஆனாலும், உவமானம் என்பதற்கு"ஒன்றுக்கு ஒப்புமை காட்ட எடுத்துக் கொண்ட பொருள்" என்று சொல்லி "மீன்போன்ற கண்" என்று உதாரணம் காட்டுகிறது, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

அதற்குப் பதில் இறை வடிவங்களை "உருவகத்தின் அதீதம்" என்று கொள்ளலாம்தானே?

மடல் 052: உறங்குவது போலும் சாக்காடு

Date of publication: 4 March 1999

துக்கம் என்பது மனித வாழ்வில் முழுமையாய் விரவி நிற்கிறது. துக்கம் என்ற கடலில் இன்பம் என்பது திட்டுத் திட்டாய், சின்னத் தீவாய் தெரிகிறது. அதுதான் உண்மை. அதனால்தான் இந்தத் துக்கம் அறுப்பது என்பது பெரிய மெய்யியல்த் தேடலாய் நிற்கின்றது. துக்கத்தைப் பற்றிச் சிந்திக்காத சமயம் இல்லை. துக்கம் இல்லையேல் ஒரு வகையில் தேடுதலே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். துக்கத்தில் உழலும் ஒருவன்/ள் முன் தத்துவம் பேசுவது சரியில்லைதான். எடுத்துக்கொள்ளும் மனம் வரும் வரை மெளனமாய் உடன் இருப்பதுதான் சாலச் சிறந்தது.ஆனால் தத்துவமின்றி துக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. துக்கம் நிறைந்த வாழ்வில்தான் அதற்கான மருந்தும் இருக்கிறது. வாழ்வைக் கண்ணுரும் போதுநம் துக்கம் தணிய வாய்ப்பு இருக்கிறது.

துக்கத்தின் அருகில் இருக்கும் வரைதான் அதன் தாக்கம் அதிகமாய் இருக்கிறது. துக்கத்திலிருந்து விலக தத்துவம் உதவுகிறது. "துக்கமே இல்லாத ஒரே ஆள்" கடவுள்தான் (துக்கமில் சுடரொளி) என்கிறார் நம்மாழ்வார் . எனவே துக்கப்படும் ஒருவருக்கு, இன்னொரு துக்கத்தை அனுபவித்தவர் ஆறுதல் சொல்வது மனித வழக்கம். "இரு கோடுகள்" தத்துவம் போல் பெரிய துன்பத்தைப் பற்றிக் கேள்விப் படும் போது நம் துக்கம் சில சமயம் சின்னதாகிப் போகிறது. நம் வீட்டில் இருக்கும் போது நாம்தான் பெரிய ஆள்! வெளியே வரும் போது இந்த ஆட்டம் கொஞ்சம் அடங்குகிறது, நாட்டை விட்டே வெளியேறும் போது நாம் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுகிறோம். விலக, விலகத்தான் உண்மைப் புரிதல் வருகிறது.

வள்ளுவர் எல்லாவற்றையும் சிந்தித்தவர். நெய்யும் தறியில் விழும் ஒவ்வொருஅடிக்கும் உதிருமாம் ஒரு சொல். இவர் சொல்கிறார்:

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து உலகு
(குறள் 336)

நேத்திக்கு இருந்தவன் இன்னக்கி இல்ல, பாரு! என்ற நடைமுறை வழக்கைக் கையாளுகிறார். அதோடு நின்றிருந்தால் அது வள்ளுவம் அல்ல. ஆனால், அப்படி இருப்பதுதான் உலகிற்கு பெருமையாம்! ஈவு இரக்கமில்லாமல் சொல்வது போலில்லை? ஆனால் அன்பு பற்றி அதிகாரம் எழுதிய வள்ளுவன் அப்படிச் செய்வானா? இல்லை. அவன் நம்மை துக்கத்தை விட்டு விலகி, ஒரு சாட்டிலைட் பார்வை பார்க்கச் சொல்கிறான். உலகின் அழகே இந்த பிறப்பு-இறப்பு என்ற நிகழ்வில்தான் இருக்கிறது. உலகில் பிறக்கும் ஒன்று அழிவதுதான் விதி. அவ்விதிதான் உலகை பெருமை அடையச் செய்கிறது. வேறு எந்த உலகிலாவது இறப்பு இன்றி இருக்கிறதோ? அது இயற்பியல் விதியை (second law of thermodynamics) மீறுவதாக ஆகாதோ? வாழ்வு என்பதை அறிவியல் பூர்வமாக விளக்க முற்பட்டால் இந்த இரண்டாவது thermodynamics விதிக்கு கொஞ்ச காலம் "தண்ணி காட்டுவதுதான்" வாழ்வு என்று சொல்ல வேண்டிவரும். இந்த கொஞ்ச கால தண்ணி காட்டலில் விழிப்புற்று வாழ்வின் நியதியைப் புரிந்து கொள்பவன் ஞானி. அந்தப் புரிதல் அவனுக்கு அமரத்தன்மையை அளிக்கிறது. அவன் இந்த துக்கத்திலிந்து மீள்ந்து உலகை இயக்கும் பிரம்மாண்ட சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுகிறான். அந்தத் தேடுதலில் அவன் வாழ்வு பொருள் நிறைந்ததாய் மாறுகிறது. பிரபஞ்சத்தின் பெரு வாழ்வின் முன், மனித வாழ்வு மிகச் சிறியது. ஒரு கண் சிமிட்டல் போல். அவ்வளவுதான். அதனால் இருக்கும் வாழ்வையாவது இன்பமுடையாதாய் ஆக்க வேண்டும். அதற்கு தத்துவம் உதவுகிறது.

இறப்பு நிகழவில்லையெனில் உலகம் தாத்தா/பாட்டி களால் நிரம்பி வழியும்.இந்த மாதிரி ஒரு காட்சியை திருமங்கையாழ்வார் காட்டுகிறார்.

முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண்சு ழன்று மேற்கிளைகொண்டிருமி,
"இதுவென்னப்பர் மூத்தவா" றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே.
(1.3.2)


முதுமை மிகவும் கொடியது. அதுவும் நோய்ப்படும் முதுமை அதனினும் கொடியது."கொடியது என்ன?" என்று கேட்ட கந்தக் கடவுளுக்கு பதில் சொன்ன ஒளவைக்கிழவி "இளமையில் வறுமை" கொடியது என்கிறாள். அதுவும் சரிதான். வாழும்வாழ்வு வறுமையில் போய் விட்டால், பின் இருந்தென்ன, போய் என்ன?இதைத்தான் "கொள்ள, கொள்ள குறையாத இன்னல்கள்" என்று பெரியதிருமொழி சொல்கிறது.

கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,
தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா.
(11.8.5)அவர் கையாளும் உவமானங்களைப் பாருங்கள். வேடனின் கைக்கு அஞ்சிஓடி வரும் நரி வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டால்? விழி பிதுங்கி, மரணஅவஸ்தைப் படும் அந்த ஜீவனின் துயரை நினைத்துப் பாருங்கள். அப்படித் தாம்துக்கப் படுவதாகச் சொல்கிறார் ஆழ்வார். எனவே துக்கமில்லாத வாழ்வென்பது காண்தற்கரியதாக இருக்கிறது. எனவே துக்கத்தை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொள்வது இங்கு பயன்அளிக்கும். இன்பமும், துன்பமும் நாம் செய்யும் வினைகளால் வருபவை(தீதும், நன்றும் பிறர்தர வாரா!- கணியன் பூங்குன்றனார்). இன்பத்தை ஏற்கும் நாம் துன்பத்தை ஒதுக்கப் பார்க்கிறோம். அந்த நோக்கை விட்டு,துன்பம் நமக்களிக்கும் பாடம் எனக் கொண்டால் துன்பத்துடன் கற்றல் நடக்கிறது. இதுவெல்லாம் ஈசன் செய்யும் விளையாட்டு என்கிறார் நம்மாழ்வார்.

துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
யாய் உலகங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குகளால்,
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
றேதும் அல்லல் இலனே.


(திருவாய் மொழி 3.10.7)

இதே வார்த்தை ஆக்கத்தை நம்மாழ்வாரின் பரம இரசிகனான கம்பனும் கையாள்கிறான்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே


எனவே துன்பம் தருவது போல் தந்து, தனது சொரூபத்தைக் காட்டி நம்மை ஆட்கொள்கிறான் இறைவன் என்று சொல்கிறார் நம்மாழ்வார். நம்மை "ஆட் கொள்வது" என்பதை நாம் எப்படி வாழ்வைப் புரிந்து கொண்டு மேலான தத்துவங்களை அறிந்து கொள்கிறோம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும். இதை நேரடியாகக் காட்டி மனிதருக்கு அருளவே இறைவன் அருளாரர்களை அனுப்பியும், போதாத குறைக்கு தானும் தோன்றியும் அருளுவதாக இந்தியர்கள் நம்புகிறார்கள்.

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்
ற வண்ணம் நிற்கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலையுல
கில்புக வுய்க்குமம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யானோர்து ன்பமிலனே.

(திருவாய் மொழி 3.10.6)


நமக்கு உற்றாரை இழப்பது என்பது ஒரு கொடுமை. பின் நம் சாவை நினைத்துபயப்படுவது என்பது அடுத்த கொடுமை. ஆக இப்படி இடர் தரும் பெரும் பையாகத் தாயின் கருப்பை இருப்பதாக ஒரு ஆழ்வார் குற்றம் சாட்டுகிறார். வாழ்வு என்பது பெரும் "இடர் சுழியாக" இருக்கிறது என்கிறார் திருமழிசைப் பிரான். இந்தச் சுழியில் கவிழும் ஓட்டையுடைய நாவாய் (படகு) போல் உள்ள வாழ்விற்கு நற்கதியாக வருவது பக்தி (பத்தி) என்கிறார் இவர். வாழ்வும்-சாவும் அவன்பாடு என்று திட பக்தி கொண்டோரை துக்கம் அணுகாது என்பது ஆழ்வார்களின் துணிபு.

பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது,
இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா,
பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்,
பெறற்கரிய மாயனே. எனக்குநல்க வேண்டுமே.

(திருச்சந்த விருத்தம் 100).

வைணவம் சொல்கிறது,

ஆள்கின்றான் ஆழியான்! நமக்கு எதற்குக் குறை? மீள்தல்இல்லாத இப்பிறவித் துயர் களைய வரும் வாள்கெண்டை மீன் போன்ற கண்ணுடையநப்பின்னை கேள்வனின் தாள் கண்டு கொண்ட பின், நமக்கு என்ன குறை?

ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே.


(திருவாய் மொழி 10.4.3)


சரணாகதி என்பது மனதிற்கு ஆறுதல் தரும் ஒரு மருந்து. நம்மால் ஒன்றும்செய்ய முடியாத போது இறைவனின் பாதத்தில் விழுவது எவ்வளவு ஆறுதல் அளிக்கக் கூடியது! எப்படி நம் மீது கருணை உடைய தாயிடம் அவள் அடித்தாலும், கொஞ்சினாலும் ஒண்டிக்கொள்கிறோமே அதுபோல் நாம் இடர்படும் போதும், மகிழ்வுறும் போதும் இறைச் சிந்தனையுடன் இருப்பது நமக்கு இடர் இல்லாப் பெருவாழ்வை அளிக்கிறது.