e-mozi

மடல் 051: தமிழ் நயமும், மெய்ப் பொருளும்

First published on: 26 Feb. 1999

தெய்வ வடிவங்கள் உருவகமா? என்ற தலைப்பில் முனைவர் லோகநாதன் ஒரு கடிதம் எழுதி அதில் சில சுவாரசியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பொது நலன் கருதி அக்கேள்விகளுக்கு இம்மடலில் பதில் தர விழைகிறேன். அவரது கேள்விகள் உருவகம் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது. அவர் உருவகம் என்தற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்:
"உருவகம் என்றால், தான் எழுதும் கவிக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைகின்ற, அவன் மனத்திலிருந்நு எழுகின்ற ஓர் கற்பனை அல்லது கற்பிதம் எனப்படும்."
இதை இப்படித்தான் பொருள் கொள்ள முடியுமாவெனப் பார்ப்போம். அவரது புரிதலின் படி இது அவரது அடுத்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. அதாவது,

"ஆக உள்ளப்படியே மரம் செடி கொடிகள் போல ஆனால் கண்களுக்குப் புலப்படாது மறையாகவே நிற்கும் மெய் பொருட்களல்ல தெய்வங்கள் என்று படும். இதனால் எல்லா தெய்வ வடிவங்களும் கற்பிதங்களே என்று மாயாவாத வேதாந்த பரமான ஓர் கருத்தினைச் சொல்லி இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்."

"எவனாவது தனது கற்பிதங்களையே தொழுவானா? கோயில் எடுத்து கும்பிடுவானா? பற் பல தவங்கள் செய்து தரிசனம் பெற முயல்வானா?" ஆக இவரது கேள்விகள் இலக்கியம், தத்துவம் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தொட்டுச் செல்கின்றன.

எனவே உருவகம் என்றால் என்ன? அதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம், உருவகம் ஒரு கற்பிதமா? உருவகத்திற்கும் மெய் பொருளுக்கும் உள்ள உறவு என்ன? உருவகம் ஒருவேதாந்த மாயாவாதமா? இறைமையை உருவகமாகப் பார்ப்பதால் நம் தொன்மையான ஆன்மீக வழிகளையக் கேலிக்குள்ளாக்குகிறோமா? என இனி ஆய்வோம்.

உருவகம் எவ்வாறு நம் சாதாரண வாழ்வில் பயன் படுகிறது என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

ஒன்றைப் போல் ஒன்று என்று சொல்லும் போது அது உவமை அணி ஆகிறது. உதாரணம்,கொடி போல் இடை, பச்சை மா மலை போல் மேனி. இவை உவமைகள். ஆனால் "இது"தான் "அது" என்னும் போது உருவக அணியாகிறது. உதாரணம், விடுதலைப் "புலிகள்", "ஐயோ! அவரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள்! அவர் பத்திரை மாத்து தங்கம்!"

இங்கு ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் "புலிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். இது கற்பிதம் என்று சொல்லலாம், இதை வெறும் வார்த்தைகளாகப் பார்த்தால். ஆனால், இந்த உருவகம் நம்முள் ஏற்படத்தும் தாக்கமோ வேறு விதமாக இருக்கிறது. பாய்ந்து வரும் புலி போல் தாக்கும், வெறி கொண்ட வீரன் நம் கண் முன் தோன்றுகிறான். உருவகம் பொய் என்றால் இக்காட்சி நமக்குத் தோன்றாது. ஒருவரைத் "தங்கம்" என்னும் போது அவரது உயர்வு, நாணயம், பண்பு உடனே நமக்குப் புரிகிறது. இதுதான், உருவகம் நம் மனத்துள் செய்யும் செயல். (வைரமுத்து பாட்டுக்கு பெண்களை "குட்டித் தீவே! 50 கிலோ தாஜ் மகாலே!" என்று உருவகப் படுத்தப் போய் இவ்வுருகங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று ஒரு சரடு இணையத்தில் போனது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்!)

எனவே உருவகம் என்பதை "ஒன்றைச் சொல்ல, ஒன்று வருவது" என்று கொள்ளலாம்.இந்த முறையை மீண்டும், மீண்டும் மெய் ஞானிகள் பயன் படுத்தி இருக்கின்றனர். ஏன்?

மெஞ்ஞானிகளில் பலர் நல்ல கவிஞர்களாக இருந்ததால்தான்! அருள் பெற்ற பின் சும்மா, "சிவனே" என்றிறாமல் இவர்கள்,

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே


(திருமந்திரம்)

என்னும் நல்லெண்ணத்தால் கவி செய்யப் புறப்படுகின்றனர். ஞானி என்றாலும் அவன்கவி அல்லவோ, எழுத ஆரம்பித்தவுடன் அவன் கவி உள்ளம் செயல் படத் தோன்றுகிறது. வடலூர் வள்ளலார் பெரும் அருளாலர். அவர் செய்வித்த திருஅருட்பாவைக் கேளுங்கள்.கவியும், ஞானியும், தமிழும், மெய்பொருளும் "கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல" கலந்து நிற்பதை!

கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும்
வகை கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே நிழல் கனிந்த கனியே!
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே!
உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே!
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே!
மென் காற்றில் விளை சுகமே, சுகத்தில் உறும் பயனே!
ஆடையிலே எனை மணந்த மணவாளா!
பொதுவில் ஆடுகின்ற அரசே! என் அலங்கள் அணிந்தருளே!

(திருஅருட்பா-409 திருக்கோயில் வழிபாடு)

எத்தனை உருவகங்கள்! தருவே! நிழலே! கனியே! மலரே! பூங்காற்றே! அத்தனையும் உருவகங்கள்! மதுரை சங்கத்தாருக்கு பரதத்துவத்தை உணர்த்த நம்மாழ்வார் செய்வித்த பாடலிலும் "தரு" என்ற உருவகத்தைப் பயன் படுத்துகிறார்:

வார்த்தைகளுக்குள் இறை அனுபவத்தை அடைக்க முடியாத போது கவி உருவகத்திற்கு தாவுகிறான். நம்மாழ்வார் படும் பாட்டைப் பாருங்கள்!

பாலென்கோ? நான்கு வேதப்
பயனென்கோ? சமய நீதி
நூலென்கோ? நுடங்கு கேள்வி
இசையென்கோ? இவற்றுள் நல்ல
மேலென்கோ? வினையின் மிக்க
பயனென்கோ? கண்ணன் என்கோ?
மாலென்கோ? மாயன் என்கோ?
வானவர் ஆதியையே!

(திருவாய்மொழி 3.4.6)

"யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!

(திருவாய் மொழி 5.8.6)

அத்தனையும் உருவகங்கள்! மாலும், கண்ணனும், மாயனும் கூட உருவகங்கள்தான்!

இப்படிச் சொல்வதால் இது மாயாவாதம் ஆகுமா? கடவுளை மரம், தண்ணீர், பூ, பால் என்று உருவகப்படத்துவதால் சிறுமைப் பட்டு போகுமா? இங்குதான் மனிதனின் "anthropomorphic view" வருகிறது. மனிதன், தேவர்கள், கடவுளர் மேல், மற்றவை கீழ் என்று யார் தீர்ப்பு சொல்வது? மரமும், மணமும் சிறுமையானதோ? யார் உசத்தி, யார் தாழ்ச்சி என்று யார் சொல்வது? அது அரசியல் நடு நிலமை கொள்ளுமோ? இதை மிக உணர்ந்துதான் நம் மெஞ்ஞானிகள் பிரபஞ்சம் முழுவதையும் இறையின் வெளிப்பாடாகவே கண்டனர்.

பகலும் இரவும் தானேயாய்ப்
பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார்!


(பெரிய திருமொழி 7.5.5)

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை கூட கண்ணன் எம்பெருமான் என்று சொல்பவர் நம்மாழ்வார் (6.7.1). அப்படியிருக்கும் போது எங்கிருந்து வருகிறது மாயாவாதம்? ஆழ்வார்கள் ஒரு இடத்திலாவது நமது வாழ்வைப் பொய் என்றனரா?

பொலிக, பொலிக, பொலிக
போயிற்று வல்லுயிர்ச் சாபம்!
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
!


(திருவாய்மொழி 5.2.1)

என்றுதான் சொல்லிப் போயினர்.

எங்கே, வாழ்வு மாயை என்று மயங்கி விடுவானோ எனப் பயந்து,

"வருந்தா திரு,நீ மட நெஞ்சே!
நம்மேல் வினைகள் வாரா!"


(பெரிய திருமொழி 8.6.6)
என்றும்,

"வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்க ஒட்டே
"

(திருவாய் மொழி 10.7.9)

என்றும் சொல்கின்றனர் ஆழ்வார்கள். எனவே இங்கு மாயாவாதம் வரவில்லை.

கடவுள் உருவகம் என்பதற்கான நல்ல சான்று நம் புராணங்களில் காணக் கிடைக்கிறது. இறை அளப்பரியது என்று ஞானிகள் உணர்ந்தனர். அதைப் புராணக் கதைகளாக்கும் போது சைவர்களும், சாக்தர்களும், வைணவர்களும் குசும்பு செய்கின்றனர். இறையின் அடியும் முடியும் காணத் தலைப்பிட்டு, காணாமல் சளைத்த கதைக்கு பல versions இருக்கின்றன. பெரியாழ்வார் versionப் பார்ப்போம்:

இந்திரனோடு பிரமன்
ஈசன் இமையவரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு
மறைந்து உவராய் வந்து நின்றார்!
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதிது வாகும்
அழகனே! காப்பிட வாராய்!

(பெரியாழ்வார் திருமொழி 2.8.1)

அதாவது மாமலர் காண இந்திரன், பிரமன், ஈசன் போன்றோர் முயன்று தோற்றனர் என்கிறார். திருமூலர் விடுவாரா?

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே!

என்கிறார். பராத்பரா! பரமேஸ்வரா! பாட்டு ஞாபகம் இருக்கிறதா? "அரி, அயனும்காணா பரமஜோதி! ஆதி, அந்தம் இல்லா பழம் அனாதி!" நம்ம சாக்தர்கள் விடுவார்களா? அவர்களும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். மும்மூர்த்திகளுமே தேவியின் அடி, முடி தேடுவதாக.

பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிறுவிய பெரியாழ்வார் சொல்வது சரியா?இல்லை, சைவ சித்தாந்தத்தின் பரம குருவான திருமூலர் சொல்வது சரியா?இல்லை பரம பாகவதர்களான சாக்தர்கள் சொல்வது சரியா? எல்லோரும் ஞானிகளே! எல்லோர் சொல்வதும் சரியே! எப்படி? மால், அயன், சிவன் எல்லாம் உருவகங்கள்தான். இதைப் பின்வரும் திருவாய்மொழிப் பாடல் சொல்லும்:

துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி
துழாயலங் கல்பெருமான்
மிக்கபல் மாயங்களால்விகிர் தம் செய்து
வேண்டும் உருவுகொண்டு
நக்கபிரானே டயன்முத லாகஎல்
லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுக்க விழுங்கவல்லானைப்பெற்
றொன்றும் தளர்விலனே!


(திருவாய்மொழி 3. 10.9)

காலம், வெளி கடந்து பரந்து நிற்கும் பரம் பொருளை காலம்-வெளி பரிமாணத்தில் தருசிக்க முயலும் போது உருவகங்கள் உதவுகின்றன.

உருவகங்கள் பொய் இல்லை என்று பார்த்தோம். "கன்னல் இனிய பிரானே! நாரணா!"என்று சொல்லும் போது சொல்லொணாப் பரிவும் பக்தியும் தானாக உள்ளத்துள் ஊறித் ததும்புகின்றன. ஒவ்வொரு உருவகங்களுக்கும் இத்தகைய சக்திகள் உண்டு."சுற்றி நில்லாதே! பகையே! துள்ளி வருகுது வேல்!" என்னும் போது முருகனின் அளப்பரிய காக்கும் சக்தி நம்மைக் காப்பதாய் உணர்கிறோம். "அன்பும்,சிவனும் வேறென்பர் அறிவிலார்" என்று திருமூலர் சொல்வது போல் உருவகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுபவர்களை என்ன செய்வது?

அன்புருகும் திருவாசகர் கூட ஒரு சமயத்தில் சளைத்திருப்பது "முக்தி நெறிஅறியாத மூர்க்கரோடு முயல்வேனே!" என்ற பாசுரத்தால் அறியலாம். நம்மாழ்வாரும் "சொன்னால் விரோதம் இது! ஆனாலும் சொல்லுவேன்" என்று சொல்கிறார்.

இம்மாதிரிக் கதை விவிலியத்தில் கூட உண்டு. ஏசுவின் சீடர்கள் ஒருநாள்அவரிடம் வந்து, "ஐயா! பரம பிதாவின் அருளாட்சி பூலோகத்தில் வரும் என்று சொல்கிறார்களே அது எப்போது வரும்?" என்று கேட்கின்றனர். அதற்கு ஏசு,"பரமனின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூடர்காள்! உங்களுக்குபார்க்கத் தெரியவில்லை!" என்றாராம்.
உருவகம் என்பது ஒரு "world view". மிகவும் ஜனநாயகமான பார்வை இது. முழுமையான பார்வையும் கூட. இப்பார்வை இல்லாத போதுதான் கடவுளின் பெயரால் நாம் சக மனிதனைக் கொடுமை செய்கிறோம்.

Metaphor என்ற ஆங்கில பதத்திற்கு திரு.லோகநாதன் "உவமானதீதம்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக அறிகிறேன். உவமானத்தின் அதீதம் என்ற சொல் அழகாகவே உள்ளது. ஆனாலும், உவமானம் என்பதற்கு"ஒன்றுக்கு ஒப்புமை காட்ட எடுத்துக் கொண்ட பொருள்" என்று சொல்லி "மீன்போன்ற கண்" என்று உதாரணம் காட்டுகிறது, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

அதற்குப் பதில் இறை வடிவங்களை "உருவகத்தின் அதீதம்" என்று கொள்ளலாம்தானே?

0 பின்னூட்டங்கள்: