e-mozi

மடல் 049: குறையொன்றும் இல்லாத கோவிந்தா!

Date published in tamil.net:18 Feb. 1999

பண்டைய தமிழக நில அமைவை பல்வேறு திணைகளாகப் பிரித்த தமிழன், ஒவ்வொரு திணைக்கும் ஒரு தெய்வத்தை வைத்தான். குறிஞ்சித் தலைவன் கந்தன் தமிழ்க் கடவுள் என்று பலரும் பேசக் கேட்கிறோம். முல்லைத் தெய்வமான கண்ணன் முருகன் போல் சேயோன் அல்லன். கருத்த பயல் அவன். காடு மேடுகளில் திரிந்து அலையும் கருப்பன். காடுகள் திரித்தி கழனிகள் ஆகும் முன்பு இந்த "மாயோனும், சேயோனும்" தமிழ் நில
அமைவின் உளவியல் பரிமாணமாக உயர்வு பெற்றனர். வருணனும், இந்திரனும் கடை நிலைக்குப் போயினர். முல்லையும், குறிஞ்சியும் திரிந்து பாலையாகும் போது அதற்கும் ஓர் தெய்வம் வேண்டி இருந்தது. சுடு மணல், வெறித்த நிலம், மழை காணா மக்கள். ஆதித்தியன் என்ற கதிரோன் அல்லது கொற்றவை என்ற கொடுந் தெய்வம் இந்நில அமைவிற்கு தெய்வப் பொறுப்பேற்றனர். கொடு நிலத்தில் கண்ணனையோ, முருகனையோ தெய்வமாக வைக்காத பாங்கு நோக்கற்கு அரியது.


தெய்வம் என்பது உருவகமாக (metaphor) அமைவதால் உள்ள சிறப்பு அது காலத்தைக் கடந்து நின்று காலம் காலமாக பொருள் உள்ளதாக அமைவதுதான். கவிதை ஒரு உருவக ஊடகம். கம்பனுக்கு இன்றும்தான் பொருள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். மொழியே உருவகமாகத்தான் நிற்கிறது. அதனால்தான் தோண்டத் தோண்ட வரும் மண் ஊற்று போல்
கற்றவர்க்குப் பொருள் தருவதாய் உள்ளது உருவகம். இதை மிக அழகாகப் புரிந்து கொண்டவர்கள் ஆழ்வார்கள். இதன் வளர்ச்சி நோக்கத் தக்கது.
காடும், காடு சார்ந்த நில அமைவின் கடவுளான கண்ணனை வர்ணிக்கும் போது மரம் என்ற உருவகத்தைப் பயன் படுத்துகிறார் நம்மாழ்வார். இவர் தமிழ் வளர்த்த மதுரை சங்கத்தாரால் வணங்கப் பட்டு பெரும் புலவர், ஞானி என்று பட்டம் பெற்றவர். இவர் சங்கத்தாருக்குச் செய்வித்த பாடலில் "தொன்மிகு பெரு மர" என்று இறைவனைச் சொல்கிறார். இந்தியா போன்ற சூடான பிரதேசத்தில் மரத்தின் பயன் அதிகம். அது வருவோர்க்கு நிழல் தந்து, யார், எவர் என்ற பாரபட்சமின்றி கனி தருவது. மரம் நிலத்தில் வேர் ஊன்றி வானத்தைத் தொடுவது. வானத்தைத் தொட்டாலும் அதன் வேர் என்னவோ மண்ணில்தான். இறைவன் உச்சாணிக் கொப்பாகத் தெரிந்தாலும் அவனது உயிர் கீழ் நிலத்தில் உள்ளது. அதாவது அடி வேரில் புண் வரும் போது உச்சாணிக் கொழுந்துவாடி விடும். அதுபோல்தான் இறைவன் அடியவர்க்கு அடியனாய் கீழ் நிலை மாந்தருடன் உள்ளான் என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

இதனை பிரதிபலிக்கும் வண்ணம் கண்ணனை "பச்சை மா மலை" என்கிறார் தொண்டர் அடிப்பொடி. "ஆயர் தம் கொழுந்தே" என்றும் சொல்கிறார். ஆயர் தலைவனாக உள்ள கண்ணன் கோகுலத்தில் ஒரு சிறுவனுக்குத் துன்பம் என்றாலும் வாடிவிடும் தன்மை உடையவன். அதனால்தான் அவன் அவர்கள் கொழுந்து.

தமிழகப் பார்வைக்கும், யூதர்களின் பார்வைக்குமுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைய யூத தெய்வமான யஹோவா மேலிருந்த படியே ஆணையிடும் தெய்வம். தன் ஆணைக்கு பணியாதோரை தயங்காமல் கொன்றுவிடும் தெய்வம். உச்சாணிக் கொப்பில் உள்ள தெய்வம். அடிநிலை மாந்தரின் தெய்வமன்று. தெய்வத்தை எளிமை படுத்துவது மிக முக்கியம் என்பதை உணர்ந்துதான் பாண்டிய சபையில் பர தத்துவத்தை நிறுவிய பெரியாழ்வார், கடைசிவரை கண்ணனை "கன்னக் குடம் திறந்தால்" வழியும் சிரிப்பு கொள்ளும் சிறுவனாகப் பார்த்தார். தன்னைத் தாயாகப் பாவித்து இறைவனை தன் சேயாக வைத்தார். இறைவனை குழந்தையாகப் பார்ப்பதில் பெரிய சௌகர்யம் உள்ளது. "குழல் இனிதோ? யாழ் இனிதோ?" என்று நம்மை கேள்வி கேட்டு வளையவரும் மழழை எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. இதை நன்றாகப் பயன்படுத்தி பின் "பிள்ளைத் தமிழ்" பாடினர் பெரும் புலவர் பலர்.

பெரியாழ்வாரின் கண்ணன் காடு சுற்றும் சிறுவன். அவன் உடல் வாடுமே என்ற பரிவில்,

"ஆனிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட"


என்கிறார். கண்ணனின் கரிய திருமேனி பற்றி நிறையப் பேசுகிறார்.

"காயமலர் நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும் சுந்தர! என் சிறுவா!"

இவன் சிறுவன்தானோ? இவன் திரு உடையவன், இவன்தான் திருவரங்கத்தில் கிடக்கும் பிரான். மெல்ல, மெல்ல நம்மை இட்டுச் செல்கிறார் பெரியாழ்வார்-இறைவனை நோக்கி.

"கருவுடைமேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்.
திருவுடையாள் மணவாளா! திருவரங்கத்தே கிடந்தாய்.
மருவிமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்."


திருப்பாணாழ்வார் தனது இறுதி மூச்சு இறைவனுடன் கலக்கும் காலையும் அவனை ஹோ! ஓஹோ! என்று பராக்கிரமம் பாடாமல் வெண்ணெய் உண்ணும் சிறுவனாகவே பார்ப்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது!

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன் என் னமுதினைக்
கண்ட கண்கள், மற் றொன்றினைக் காணாவே"


இப்படி இறைவனை எளிமை படுத்தி எல்லோரிடமும் சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு அளப்பரியது. வைணவ தத்துவத்தின் ஆணிவேராய் நிற்கும் மாறன் பாராங்குசன் நாரணனின் அளப்பரிய சக்தியில் மதி மயங்க ஒட்டு, கண்ணனின் எளிமை கண்டு மதி மயங்குகிறார்."பத்துடை அடியவர்க்கு எளியவன்" என்ற பாசுரத்தைத் தொடங்கிவிட்டு ஆறு மாதம் நினைவிழந்து விட்டதாகக் கூறும் குரு பரம்பரைக் கதைகள்.

பெரியாழ்வார் கண்ணனை பிள்ளையாகப் பார்த்தால் அவர் பெண் ஆண்டாள், இறைவனைக் காதலானகவே பார்க்கிறாள்! கருநிறமுடைய எதைக் கண்டாலும் மயங்குகிறாள்!

"கருவிளை யொண்மலர்காள்!
காயாமலர் காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர்
எனக்குய்வழக் கொன்றுரையீர்,
திருவிளை யாடுதிண்டோள்
திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து
வந்திபற்றும் வழக்குளதே!"

ஆண்டாள் செய்வித்த நாச்சியார் திருமொழி வாசித்து, வாசித்து இன்புறத்தக்கது.

கிருஷ்ணமாச்சாரி என்ற "குவளைக் கண்ணனின்" தூண்டுதலின் பேரில் "கண்ணன் பாட்டு"எழுதும் சுப்பிரமணிய பாரதி ஆழ்வார்கள் வழியில் கண்ணனைத் தரிசித்து அவர்களையும் தாண்டிச் செல்கிறான். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக, தன்குல தெய்வமாகப் பார்க்கிறான். அவன் வாயால் சொல்வதானால்,

"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி என்று சொன்னான்"


தெய்வத்தின் உருவகத் தன்மையைப் பாரதியைப் போல் புரிந்து கொண்டவர் வேறு யார் உண்டு? தெய்வத்துடன் தோள் கோர்த்துச் செல்லும் அவன் பாங்கு என்னே? பாரதியின் சிந்தனைப் பரப்பு ஆச்சர்யமானது. கண்ணனை ஆண்டானாகவும், தன்னை தலித்தாகவும் பார்த்து உள்ளம் உருகியவனும் பாரதிதான்.

"பண்ணைப் பறையர்தங் கூட்டத்திலேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்
கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற்றிங்கு வந்தேன்"

என்கிறான் பாரதி. பாரதிக்குப் பின் இவ்வுருவகச் செம்மையை நன்றாகப் பயன் படுத்தியவன் கண்ணதாசன். ஆனாலும் பாரதி எட்டிய எல்லையைக் கண்ணதாசன் தொடவில்லை. ஜெயகாந்தன் சொல்வது போல் இது பாரதி யுகம். பாரதி மீண்டும், மீண்டும் பிறக்கிறான். சமீபத்தில்இது இணையத்தில் நடந்தது December 16, 1998 அன்று ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் புதிய கண்ணன் பாட்டு எழுதினார். கண்ணனின் தேவை காலத்திற்குக் காலம் வித்தியாசப் படுகிறது. பௌத்தரும், சமணரும் அறனை வலியுறுத்தி வாழ்வைப் புறம் தள்ளிய போது வாழ்வின் சிறப்புச் சொல்ல கண்ணன் காதலனாக, சேயாக வேண்டியிருந்தது. பாரதி காலத்தில் இறைவனை எல்லோரிடத்திலும், எல்லா மதத்திலும் பார்த்து, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருந்தது. ஆனால் ஜெயபாலன் காலத்தில் தலித்தியம் தலை எடுக்கிறது; ஈழம் தீப்பற்றி எரிகிறது. கவிஞனின் வார்த்தைகளில் கனல் தெரிக்கிறது.

"நீலக் கோனாரப் பயலே.
கறுத்தத் திரவிடத் தலித்தனே.
நல்லதும் கெட்டதும்
நஞ்சு வண்ணனின் அமுத நெஞ்சறியும் என
உன்னையே நம்பி
அன்னியர் புகுந்த வன்னியில் தரித்த என்
அன்னைக்கு ஏனடா ஓலம்
"

என்று கேட்க வைக்கிறது.

"ஈழத்தில் தமிழர்கள்
தாடகை வனத்துத் தேவராய் அழிதலைக் காண்டிடாது
உண்ட ஆழ்வார் அமுதுக்கும் நன்றி கெட்டவனே
அதர்மம் அழிக்க
யுகங்களைக் கடப்பேன் என்ற பொய்யா
எங்கே தொலைந்தனை
."

என்று ஒரு பழியை கண்ணனின் மீது வீசுகிறார்! ஈழம் சைவ உலகம். அங்கு கண்ணன் வழிபாடு அதிகம் கிடையாது. ஆனால் அங்கும் பழி ஏற்க கண்ணன் வருகிறான்.

"தாய்க்கு இனி மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா, கர்ணா!
நானும் உன் பழி கொள்வேனடா!

(கர்ணன் திரைப்படம்)

என்று மாபாரதத்தில் எல்லோர் பழியையும் ஏற்கும் கண்ணனால் ஜெயபாலனின் பழியை ஏற்கவா முடியாது? ஆழ்வார்களும் பழி சுமத்துகின்றனர். பெரியாழ்வார், "வாழ ஒட்டான் மது சூதனன்" என்றும், "தீமைகள் செய்யும் சிரீதரா" என்றும் பழிக்கின்றார் (அவன்செய்யும் குரும்புத்தனம் தாங்காமல்). ஆண்டாளோ, ஒரு பெண்ணை வதை செய்தான் என்ற பழி வந்து சேரும் என்று வெண் சங்கிடம் எச்சரிக்கிறாள்!

இப்படி கண்ணனிடம் வம்பு செய்வதற்குக் காரணமென்ன? அவன் காட்சிக்கு எளியவனாக இருப்பதால்தான். ஆழ்வார் வழியில் ஜெயபாலனும் அந்த உரிமையைக் கோருகிறார்,

"வேங்குழலாக இசைக்கிற அந்த
மாய இடைச் சிறான்
துயருறும் என்னுள்ளும் ஸ்வரங்களாய் நிறைகிறான்
."

என்று சொல்கிறார். ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் நஞ்சு வண்ணன் என்று கண்ணனை வர்ணித்தது தமிழுக்குப் புதிது. காலத்துக்குக் காலம் கண்ணனுக்குப் புது மெருகு கூடுகிறது. சங்கம் தொடங்கி ஜெயபாலன் வரை கண்ணன் என்னும் உருவகம் கவிஞர்கள் மனதைத் தொட்டு இருக்கிறது.

கண்ணன் வெறும் நெகிழ்சியின் உருவகம் அல்ல. வெறும் காதலின் உருவகம் அல்ல. பரம் பொருள் தோளொடு தோள் சேர்த்து வரும் தன்மையின் பிரதிபலிப்பு அவன். கண்ணன் தன் அகத்தில் கால் வைத்த பின் நடந்த விஷயங்களைப் பாரதி பட்டியல் இடுகிறான்:

"செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
சேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!"

வைணவத்தின் அடி நாதத்தை, ஆச்சர்யமாக வைரமுத்து ஒரு சினிமாப் பாடலில் (பெரிய தம்பி) பிரதிபலிக்கிறார்.

"உள்ளம் முழுதும் நேசம் வைத்தால் குறை தெரியாது"

என்பதுதான் அவ்வரி. இதையேதான் ஆண்டாள்,

"குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
"

என்று சொல்கிறாள். அவள் சொல்வது போல் தமிழ் உள்ளளவும் கண்ணனுடன் கூடிய உறவு தமிழ் மண்ணில் ஒழிவில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கும்.

பாசுர மடல் 49 நிறை கொள்கிறது.

பிகு: அகில உலக ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் (தமிழ்) - லண்டன் ரேடியோவில் 13.02.99 அன்று கொடுத்த பேட்டியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

2 பின்னூட்டங்கள்:

  Sivasubramanian Gopalakrishnan

Thursday, November 29, 2007

ஆழிம‌ழைக்க‌ண்ண‌ன்
நினைத்து நினைத்து
நெஞ்சுருக‌வேண்டிய‌ குழ‌ந்தை

  N.Kannan

Thursday, November 29, 2007

அடடா! எவ்வளவு உண்மை! "மானுடர்க்காய் படாதன பட்டு" என்று சொல்லும் படியும், "பஞ்சவர்க்காய் நடந்தானாய்" என்றும் நமக்காக அவன் எவ்வளவு கீழிறங்கி வந்து பாடுபடுகிறான். நெஞ்சு உருக வேண்டுமெனில் அவன் நம்மைக் கட்டிக் காப்பதற்காக அல்லவோ உருக வேண்டும்.