e-mozi

மடல் 046: பாவை நோன்பு

First published on: Sun, 10 Jan 1999 07:41:19 -0800 (PST)

இன்னும் பாலாறு கூட வரவில்லை. சீக்கிரமே விழிப்பு தட்டிவிட்டது. ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சூரியன் வெளிப்பாட்டிற்கு கட்டியம் கூறிகொண்டு விடிவெள்ளி கிளம்பி விட்டிருந்தது. சாதாரணமாக சூரியன் இருந்தால் கண்ணுக்குப் புலப்படாத நட்சத்திரக் கும்பல், சூரியன் இன்னும் பூமிக்குக் கீழே புதைந்து கிடக்க, 'இரவு நட்சத்திரத்தின் கடைசி காட்சியிது பார்த்துக்கோ' வென்பது போல கல, கலவெனச் சிரித்துக் கொண்டிருந்தன! கீழ் வானம் ஆரஞ்சு, சிவப்பு மஞ்சள் இவை கலந்த ஒரு வண்ணத்தில் தளிர் நடை பயில்வது அந்த காலை வேளையில் மனதுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.

ரயிலுக்கு வெளியே இன்னும் இருட்டு கவ்வியிருந்தது. மார்கழி மாதத்து பனிப்புகை இன்னும் தரையின் மேல் போர்த்தியிருக்க, பூமி சுகமாக தூங்கிக் கொண்டிருந்தது. "எல்லே இளங்கிளியே.. ஈதென்ன பேருரக்கம்" என கேலி செய்யத் தோன்றியது.கீழ் வானத்தின் உயரே இருக்கும் மேகங்களோ நொடிக்கு ஒரு உருக் கொண்டு அக் காலைப் பொழுதை மேலும் சுவாரசியமாக்கின. முதலில் பச்சோந்தி போல ஒரு மேகம், கொஞ்ச நேரத்தில் அதுவே ஆமையாகி, கடல் அலையாகி கரைந்து போனது. பனை மரங்கள் "கண்ணன் என்னும் கருந்தெய்வம்" போல் நேராக கிழக்கே பார்த்துக் கொண்டு நின்றன. ரயில் வேகத்தில் துரிதமாகக் காட்சி மாறி கீழே வாய்க்காலில், பளிச்சென்று இன்னும் நின்று கொண்டிருந்த நிலா நொடிப் பொழுது காட்சியளித்து விட்டு மறைந்தது. ஆஹா! இந்த வாய்க்கால் கொஞ்சம் நெளிவு, சுளிவு இல்லாமல் நேராக ஓடியிருந்தால் நிலாவை இன்னும் கொஞ்சம் ரசித்து இருக்கலாமேயென மனம் ஏங்கியது. பிறகுதான் புரிந்தது, நிலா ரயிலின் அந்த பக்கம் இருப்பது. அந்தப் பக்க ஜன்னலை அடைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கீழே குழந்தைகள், மனிதர்கள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு திரும்பி என்னிடத்திற்கு வந்து பார்த்தபோது, காலை வளர்ந்திருந்தது. ரயில் ஒடிக் கொண்டிருந்தது.

இடையே கொஞ்சம் இருள் மண்டிய காட்டுப் பகுதி. மீண்டும் வயல், மீண்டும் பனை மரங்கள். பனை வேகமாக மேல் நோக்கி.. மனிதனை நோக்கும் போது பனை மரம் உயரம் தான். ஆனால் அந்த மேகக் கூட்டங்களுக்குப் பனை எப்படித் தென்படும்? கருப்பாய், பூமியிலே ஏதோ திட்டு திட்டாய்.. அந்த கீழைச் சூரியனுக்கு எப்படிப் புலப்படும்? மேகமும், பூமியும், ஏதோ தொலை தூரத்திலிருக்கும் குண்டூசியின் தலை போல், சூரியனுக்கும் வெளியே இருக்கும் "பால் வெளியிலிருந்து" (Milky Way) பார்த்தால், சூரியனும் ஒரு சுண்டைக்காயே!

மீண்டும் வயல் வெளி. ஏர் கட்டிய உழவனொருவன் வயலில் உழுது கொண்டிருந்தான். உள்ளத்தை உழும் ஞானி போல்.

அமைதியான குளத்தில் சின்னதாக ஒரு கல்லைப் போட்டால் வட்ட, வட்டமாக விரியுமே தண்ணீர், அதுபோல். தாமரை மொட்டைப் பிரித்தால் வருமே இதழ்கள், மடல், மடலாக அதுபோல். வாழைப்பூவைப் பிரிக்கும் போது வருமே, ஏடு எடாக அதுபோல். பிரபஞ்சம் என் கண் முன் மடல், மடலாக விரிந்து கொண்டிருந்தது அந்தக் காலையில். வான்வெளியில் சுண்டையாக இருக்கும் பூமி. பூமியில் ஏர் உழும் மனிதன். ஏரின் அடிப் பொடி புழுக்கள். அப்புழுவின் உடலில் உறுப்புக்கள். உறுப்புகளுக்கு உருக்கொடுக்கும் "செல்"கள். செல்களின் உயிரான "நியூக்கிளியஸ்". அதன் கருவான "உயிர்த்திரிகள்" (Chromosomes). உயிர்த்திரிகளின் உள்ளே "மூலக்கூறுகள்" (Molecules). அதை உருவாக்கும் அணுக்கள். அதனுள்ளும் ஒரு உலகம். மீண்டுமொறு "நியூக்கிளியஸ்", அதை சுற்றும் "எலக்ட்ரான்ஸ்". இந்த இச்சிறியதிலும், சிறியதான நியூக்கிளியஸின் உள்ளும் ஒரு உலகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்கள்.

பிரபஞ்ச சிருஷ்டியில் வாமனன் யார்? திருவிக்கிரமன் யார்? வாழை மரத்தில் பெரிதாகத் தொங்கும் வாழைப் பூவை மஹா விஷ்ணு என்றால் உரிக்க உரிக்க வந்து கொண்டிருக்கும் பூக்களின் கடைசி சின்னப் பூவின் உள்ளிருக்கும் "கள்ளன்"தான் வாமனனோ? அதையும் வாழைப்பூ என்று தானே சொல்கிறோம்?

வெளியே இன்னும் சில நட்சத்திரங்கள், கொஞ்சம் பிரகாசமாக சூரியன், மேகங்கள் மனிதர்கள். விஸ்வரூப தரிசனம் எங்கு தானில்லை? அது பார்க்கும் விதத்தில், பார்க்கும் இடத்தில், பார்க்கும் பொழுதைப் பொருத்திருக்கிறது.

நிலத்தில் தவழும் புழுவின் கண்ணோட்டத்தில் ஏர் உழும் மனிதன் எப்படித் தெரிவான்? காளை மாடுகள் என்ற தேவ, அசுரர்களைக் கொண்டு, ஏர் என்ற மத்தை வைத்து தங்கள் உலகான வயலைக் கடையும் பிரளயகர்த்தன் போலோ? ஆனால், மனிதன் வாழ்விலோ அடை மழை பெய்தாலே போதும், உலகமே அழிந்து விடுவது போலத்தோன்றுகிறது. மனிதனை விட நூறு மடங்கு பெரியது "டைனசார்கள்". வானின் வெளியிலிருந்து வந்து தாக்கிய மாபெரும் பாறாங்கல் கிளப்பிய புழுதியில் உலகே இருண்டு போக அதன் காரணமாய் உண்ண உணவில்லாமல் மாண்டு போனதாம் இந்த "டைனசார்கள்" என்ற மாபெரும் ஜீவராசிகள்.

வனம் மீண்டும் வெளியில். சில பேர் காலைப் புலர்வதே கழிப்பதற்குத் தான் என்பதுபோல் வயல் வரப்பில்.. வயலுக்கு இது சகஜம். ஜீரணித்து விடும்! ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock) என்ற ஆங்கில விஞ்ஞானி தானே சொன்னான் உலகமே ஒரு உயிருள்ள ஜீவன்தானென்று.

யார் செய்த புண்ணியமோ, பூமி, சூரியனிலிருந்து சரியான தொலைவில் வந்து விழுந்திருக்கின்றது. சூரியனின் மற்ற குழந்தைகளெல்லாம் ஜீவன் இல்லாமல் மரித்தே கிடக்கின்றன. நமக்கு வாழ்வளிக்கும் சூரியனோ ஒரு மூன்றாம் தர நட்சத்திரமாம். இதுபோல சூரிய குடும்பங்கள் பல கோடி உண்டாம் பிரபஞ்சத்தில். மின் மினுக்கும் நட்சத்திரம் கடைசியாக கண் மூடும் போது, உயிருள்ள உலகங்களும் கூடவே அஸ்தமித்து விடுகின்றன. எல்லோருக்கும் ஒளி வழங்கி முடித்தபின்,தன்னுள் தானே அடங்கி "கருங்குழி" (Black Hole) ஆகிறது நட்சத்திரம். இந்நிலையில், எலும்பை முறித்து எண்ணெய் எடுத்து அதையும் ஆவியாக்கிவிடும் அடர்த்தியை அடைகிறது. காற்றினும் மெலிதான ஒளிகூட இதனிடமிருந்து தப்பிக்க முடியாமல், இதில் விழுந்து மறைகிறது.
ஒன்றிலிருந்து கிளம்பிய எல்லாம் (Big Bang Theory) இத்தகைய மாபெரும் கருங்குழி ஒன்றில் மீண்டும் அடங்கி ஒருமித்துவிடுமென்கிறார்கள் (Singularity). பிரபஞ்சத்தின் தொடக்கமும், முடிவும் இருமையில். ரயிலின் வேகம் கொஞ்சம் குறைந்தது, "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து.." என MLV-யை சுவீகரித்து ஆண்டாள் பாடிக் கொண்டிருந்த பாட்டு லவுட் ஸ்பீக்கரிலிருந்து வந்து ரயிலை அடைந்தது!

பாலாறு வந்து விட்டது. கட, கடா, தட, தடா. பாலாறு வைகையை விடப் பெரியதுதான். எப்போதுமே காய்ந்து போயிருக்கும் பாலாறு இந்த வருட மழையால் தலை துவட்டிய துண்டு போல் ஈரமாக நனைந்திருந்தது. மண்ணைத் தோண்டினால் ஊற்று வரும். நினைத்தாலே சந்தோஷமாக இருந்தது. இளம் காலை இனிதாகக் கிளம்ப, ஏதோவொரு வயல் நடுவே ஆவி போக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் போனால் செங்கை வந்து விடும். இறங்க வேண்டும்.

இன்னும் ஆத்ம விசாரம் முடிந்த பாடில்லை! ரயில் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. ஏனிப்படியொரு பிரபஞ்ச சிருஷ்டி? ஏன் மூலமாய் இருந்த ஒரு வஸ்து இப்படி "வண்ணக் களஞ்சியமாகி" பலப்பல உருவில்.. எது இப்படி ரயிலில் உட்கார்ந்து கொண்டு எதை ரசிக்கிறது? கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளும் போது எற்படுமே ஒரு சந்தோஷம், அது போலத்தானே இதுவும்? தன்னில் தன்னைக் காணுவதில் ஏற்படும் சந்தோஷத்திற்குத்தானே இதுவெல்லாம்!

ரயிலின் கடைசிப் பெட்டி என்னுடையது. வெளி வயற்பாதையில் சமர்த்தாக நாலு குழந்தைகள். ஒன்றுடன் ஒன்று குளிருக்கு இணைந்து ஒரே போர்வையில். உலகின் அதி அற்புதம் போல் நானிருந்த ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெதுவாக திரும்பி நடக்கத் தொடங்கின.

எனக்கோ, ஏதோ இனங்காணாத சந்தோஷத்தில் உள்ளமெல்லாம் பூரித்துப் போனது. இது தான் ஆத்ம தரிசனமா?


கணையாழி, ஜனவரி 1996 (பக்கம் 96-98)

4 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Sunday, December 23, 2007

அட

பாலாறு தாண்டி பாற்கடல் பற்றிப் பேச்சோ? :-)

//பிரபஞ்ச சிருஷ்டியில் வாமனன் யார்? திருவிக்கிரமன் யார்? வாழை மரத்தில் பெரிதாகத் தொங்கும் வாழைப் பூவை மஹா விஷ்ணு என்றால் உரிக்க உரிக்க வந்து கொண்டிருக்கும் பூக்களின் கடைசி சின்னப் பூவின் உள்ளிருக்கும் "கள்ளன்" தான் வாமனனோ? அதையும் வாழைப்பூ என்று தானே சொல்கிறோம்?//

சூப்பர் கண்ணன் சார்!
மாயா வாமனனே மதுசூதா நீயருளாய்
ன்னு வாமனனைச் சொல்லிட்டு

மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வாறு இவை என்ன நியாயங்களே?
வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன உங்க வாழைப்பூவைப் படிச்சவுடன்! - மற்றுமாய் முற்றுமாய் தான் வாழைப்பூவா? :-))

  N.Kannan

Sunday, December 23, 2007

நன்றி! கண்ணபிரான்!

எப்போது எழுதியது! எழுதிவைத்துவிட்டால் அந்தக் கணத்திற்கு போய்விட முடிகிறதே? இதுவும் 'என்ன நியாயங்களே?' கதைதான் :-)

  குமரன் (Kumaran)

Tuesday, December 25, 2007

மிக அற்புதமாக இருந்தது கண்ணன் ஐயா. எந்த எந்த வரிகள் மயக்கின என்று எடுத்துக் காட்ட நினைத்தால் முழு இடுகையையும் எடுத்துக் காட்ட வேண்டிவரும். மார்கழி மாதக் காலை நேரத்தில் படிக்க மிக நல்லதொரு இடுகை.

  N.Kannan

Tuesday, December 25, 2007

குமரன்: உங்கள் இனிய வார்த்தைகள் உள்ளத்தைக் கனிய வைக்கிறது! அந்தப் பயணம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. மதுரையிலிருந்து செங்கல்பட்டுவரை! கடைசியில் அக்குழந்தைகள் என்னைப் பார்த்தபோது எல்லாம் விளங்கிவிட்டது! Self Aware Universe!