e-mozi

மடல் 048: உறவுகளில் உறையும் இறைவன்

Date published in tamil.net: 31/01/1999

நேற்று அதிசயமாக நல்ல வெய்யில். வெய்யில் என்றவுடன் தார் உருகி, கானல் நீர் காட்டும் வெய்யில் என்று எண்ண வேண்டாம். இது ஒரு குளிர் கால வெய்யில். அன்டார்ட்டிக்கில் அடிக்குமே அந்த மாதிரி வெய்யில். வெளிச்சம் இருக்கும், வெப்பம் இருக்காது. குளிர்கால கவசங்களுடன்தான் எல்லோரும் உலாவ வேண்டும். இந்திய வெய்யிலில் காலில் செருப்பில்லாமல் நடந்தால் கால் வெந்துவிடும். இங்கு உறைந்து உடைந்துவிடும். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டு வெய்யிலும் பொதுவில் காலுக்கு நல்லதில்லை! ஆனாலும் அதற்காக "காலாற" நடந்துதான் ஆக வேண்டியுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருந்தால் பயித்தியம் பிடித்துவிடும். குளிருக்குப் பயந்தால் வெளியே புல் வளருமோ? மரம் நட்டக்குத்தாய் நிற்குமோ? வெளியே போனால்தானே நீல வானையும், அந்த வானில் கோடு போடும் விமானங்களையும் கண்டு ரசிக்கலாம். சூரியனைப் பார்க்காமல் ஒரு நாள் ஓட்ட முடியுமோ? அப்படி என்ன பாசம் என்று கேட்கத் தோன்றுகிறது. ஏதோ, போன ஜென்ம உறவு! அது என்ன? அனந்த கோடி வருஷங்களுக்கு முன் வெளியில் ஒன்றுமில்லாமல் இருந்த போது... "வெளியே" இல்லா காலத்தைப் பற்றி இப்போது பேச வேண்டாம். நமக்கேன் வம்பு! வேத ரிஷிகளே கேள்வியில் விடையை வைத்து விட்டுப் போயினர்.

அதாவது,

"அப்பொழுது இல்லாமையும் இல்லை, இருத்தலும் இல்லை, விண்ணும் இல்லை, மண்ணும் இல்லை, வானமும் இல்லை, அசைவு ஏதும் இருந்ததா? எத்திசையில் எவர் இயக்கத்தில்? அப்போது சாவும் இல்லை, அழிவிலா வாழ்வும் இல்லை, இரவையும் பகலையும் பிரித்துக் காட்டும் ஒளிக்கீற்றும் இல்லை. வெறுமையில் மூழ்கியிருந்த "ஒன்று" தவ வெப்பத்தில் உயிர் பெற்றெழுந்தது. அதன் மனத்தில் முதல் முறையாக காமம் எழுந்து, உயிர் எனும் வித்து வெளி வந்தது. அதன் விளைவாக உருவான, இருத்தலும் இல்லாமையும் இணைந்த கயிற்றை ஞானிகள் அறிவார்கள். நீண்டு விரிந்திருந்த இக்கயிற்றுக்கு "கீழ்" இருந்ததா? "மேல்" இருந்ததா? யாருக்குத் தெரியும்?" (ரிக் வேதம் 10.29).

அறிவியலாகட்டும், வேதமாகட்டும் ஏதோ ஒன்றிலிருந்து நாம் உருவாகிய கதையை பிழையின்றி சொல்கின்றன. அதுதான் சொன்னேன் பூர்வ ஜென்மத் தொடர்பு என்று. எனக்கும், உங்களுக்கும், நம் தாத்தாவுக்கும், அவர் பூட்டனாருக்கும் முன்னே. வெளியில் துகளாய் இருந்த காலத்துக் கதை. துகள் சேர்ந்து, அடர்ந்து, கனன்று, வெடித்து, மலர்ந்து, உறவாகி.. ஆக, நமக்கும் சூரியனுக்கும் தொடர்பு உண்டல்லோ? மாமா பிள்ளையை, கொழுந்தனாரை வருஷத்திற்கு ஒருமுறை பார்க்கலாம். ஆனால் நமக்கு ஆதிமூலமான சூரியனையும் சந்திரனையும் தினம், தினம் பார்க்காமல் இருக்க முடியுமோ? (மன்னிக்க, இரண்டாமவர் நாம் நினைத்தாலும் பார்க்க முடியாமல் மாதத்தில் பல நாள் காணாமல் போய்விடுவார், ஒருநாள் என்பது ஒரு கணக்குக்குத்தான்!) பயித்தியம் பிடித்து விடாது.

அன்றும் அப்படித்தான். காலாற நடந்து விட்டு காரைக் கிளப்பிய போது சூரியனார் மறைந்து கொண்டிருந்தார். சந்திரனார் இருந்த திசை தெரியவில்லை (இந்த ஊரில் என்னதான் சரியாய்ப் புரிகிறது?). மெதுவாக வானின் வண்ணத்தை இரசித்துக் கொண்டு காரைத் திருப்பிய போது முக்குருணிப் பிள்ளையார் போல்! யார் என்று நினைக்கிறீர்கள்? சந்திரனார்தான்! பௌர்ணமிக்கு முந்தின நாள் (இன்று பௌர்ணமி பனிப்புகையில் எங்கோ மறைந்து போய்விட்டது:-( அட்டகாசமாக, தெரிந்தும், தெரியாமலும் வானில் மிதந்து கொண்டிருந்தார்.

இது எப்போதுமே என்னை பிரம்மிக்க வைக்கும் விஷயம். ராத்திரி தூக்கத்தைக் கெடுத்து ஆராச்சி செய்து விட்டு, ஆந்தையும், கோட்டானும் உலவும் நேரத்தில் ஹாஸ்டலுக்குப் போகும் போது சந்திரனார் மகிழ்ச்சியுடன் வெளிச்சம் காட்டிக் கொண்டு கூட வருவார். காலம், பொழுது தெரியாத பெரு நகர வாழ்வில் கார் முக்குத் திரும்பும் போது மஞ்சள் தட்டு போல் வானில் வீசப்பட்டு நிற்கும் நிலா என்றும் என்னை ஆகர்ஷிக்கத் தவறியதே இல்லை. நேற்றும் அப்படித்தான்!

இந்த அத்வைதிகள், "அட, சாம்பிராணி! எல்லாம் ஒன்றுதான்! நீதான் அது" என்று சொல்லி விட்டுப் போய் விடுகின்றனர். இதைத்தான் குவாண்டம் சூத்திரங்கள் போட்டு அமித் கோஸ்வாமியும் சொல்லுகிறார். நாம் கண் விழிக்கும் ஒவ்வொரு கணத்திலும் சந்திரனும், சூரியனும் நமக்காக "கஸ்டம் மேட்" போல் தோன்றுகிறது என்கிறார்கள். தெரியாத்தனமாக ஒருவர் இரமண மகரிஷியிடம் ஏதோ இரண்டாவது ஒன்றைப் பற்றிப் பேசப் போய், அவர் பதிலுக்கு, "எந்த இரண்டாவதைப் பற்றி பேசுகிறாய்?" என்றாராம். நமக்கு இதுவெல்லாம் எங்கே புரியப் போகிறது? சந்திரனை நான் உருவாக்குகிறேனோ, அதுவாகவே உருவாகிறதோ, இல்லை ஏதோ "ஒன்று" உருவாக்கியதோ தெரியாது, ஆனால் சந்திரனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. "அமுதைப் பொழியும் நிலவே, நீ அருகினில் வராதது ஏனோ?" என்று பாடத் தோன்றுகிறது. சில நேரங்களில் இந்த நிலா காதலிக்குக் காதலனாகவும், காதலனுக்குக் காதலியாகவும், இன்னோரன்ன பின்ன கணக்குகளாகவும் ஆகி "உறவை" ப் பேணுகிறது. அதுதான் இங்கு நமக்கு வேண்டியது.

இந்த உறவுதான் ரொம்ப முக்கியமாகப் படுகிறது. உறவுகள் இல்லையெனில் வாழ்வு இல்லை. பிறந்தவுடனே பாலூட்ட ஒரு அம்மா வேண்டியிருக்கு, பாப்பாவிற்குச் சோறு ஊட்ட, "காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா!" என்று பாட ஒரு காக்கா வேண்டியிருக்கு. அப்புறம் பசு, இலை, தழை என்று ஏகப்பட்ட உறவுகள். "முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான்" என்று தொடங்கி திருவாத ஊரார்,

"புல் ஆகிப் பூடு ஆகிப்
பல் விருகம் ஆகிப்
பறவையாய் பாம்பு ஆகிக்
கல்லாய் மனிதர் ஆய்
பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்
தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன்
எம்பெருமானே!"

என்று முடிக்கிறார். ஒண்ணுக் குள்ளே ஒண்ணு என்று பின்னிப் படரும் உறவு. ஒன்றிலிருந்து ஒன்று என்று உறவு.

இப்படிப் பட்ட வாழ்வில் நாம் உறவுக்குக் கொடுக்கும் மரியாதை என்ன? உறவு இருப்பதே கண்ணுக்குத் தெரிவதில்லை பல நேரம். தெருவில் கிடக்கும் பிச்சைக்காரனுடன் உறவு கொண்டாட யார் வருவர்? சண்டாளன் என்று ஒதுங்கச் சொன்ன சங்கரனுக்குக் காட்சி கொடுத்த ஈசன் சொல்வது என்ன? எல்லாம் பிரிக்க முடியாத உறவப்பா? இது புரியும் கணத்தில்தான் "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் " என்று நெஞ்சு உருக முடிகிறது.

நம் உறவுச் சிக்கல் பிறந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. நமது உடம்பே நமக்கு அந்நியமாகிப் போகிறது. இந்த எளிய உறவைக் கூட புரிந்து கொள்ள முடியாமல், நாம் கண்டதை வயிற்றில் திணித்து, வேண்டாததைப் போட்டுக் குடித்து, உடம்பை பூசணிக்காய் போல் ஆக்கிவிட்டு ஆயிரம் வியாதிகளுக்குத் தஞ்சம் கொடுக்கிறோம் (ஒரு அகதி வரும் போது புகல் கொடுக்க தயங்கும் மனிதன் தன் உடம்பில் வியாதிகளுக்குப் புகல் கொடுப்பதும் உறவுச் சிக்கலால்தான்). பின் தந்தை, தாய், கூடப்பிறந்தவர்கள் இப்படியே எல்லா உறவுகளையும் வாழ்கின்ற காலத்தில் ஒரு வழி செய்து விடுகிறோம். இருக்கும் போது வாழ்த்த மறந்து பிரிந்தபின் புலம்புகின்றோம். நாம் உறவை மதிக்கும் விதமே அலாதிதான். இவ்வளவுக்கும் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், மனிதன் வெறும் "மூளை உயிரி"யாக இருப்பதுதான் என்று புரியும். "தான்" என்ற தன் முனைப்பு தோன்றும் இடமான சிந்தனையின் முழு ஆளுமையில் உறவு தறி கெட்டுப் போய் "நாமும், நம் சிந்தனையும், நம் அகங்காரமும், அதனைத் தொடரும் தனி மனித வழிபாடுகளும், புகழுரைகளும் "எல்லாமே" ஆக, நம்மைச் சூழ்ந்துள்ள "உறவு" கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இந்த அகங்காரச் சிந்தனை மரபின் எச்சங்கள்தான், பிரிந்து நிற்கும் குடும்பங்கள், வளர்ந்து வரும் அனாதை ஆசிரமங்கள், ஒட்ட நிழல் தேடும் வயோதிக கும்பல்கள், நுகர் பொருள் கலாச்சாரம், ஏழை, மேலும் ஏழையாகும் அதன் பொருளாதாரம், சொட்டையாகும் நிலப்பரப்பு, சூட்டைக் கிளப்பும் கரியமில வாயு... இப்படி உறவுச் சிக்கல் கிளப்பும் பிரச்சனைகள் ஆயிரம் ஆயிரம்.

இதை அறிந்துதான் உறவிற்குள் வைத்தனன் இறை என்னும் கருப்பொருளை. இறையை உறவில் காணும் இன்பமே பேரின்பம். ஆதி, அந்தம் அற்ற ஒன்று இன்றும், நேற்றும் தந்தையாய், தாயாய், சேயாய் உலாவும் திறம் என்னே? நம்ம விட்டுசித்தருக்கு மேல் இதை அனுபவித்தவர் உண்டோ?

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.

(பெரியாழ்வார் திருமொழி 55)

உறவில் மறையும் இறையைக் காணும் திறன் மானுடத்திற்கு மறையும் போது,

நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்று உலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே.

(பெரிய திருமொழி 8.5.2)

என்று மயங்க வேண்டிவரும்.

0 பின்னூட்டங்கள்: