e-mozi

மடல் 047 - சங்கத்தார்க்கு ஓர் அகவல்

Date of first publication: Mon, 08 Jun 1998 10:39:52 +0000

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? - தாமம்
துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?
உளவோ பெருமான் உனக்கு?


மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாராதிகளில் நம்மாழ்வாருக்கு ஒரு பெரும் சிறப்பு. அதை இந்தத் தனியன் (திவ்யப் பிரபந்தத்தில் சேராத தனிப் பாடல்கள்) சொல்கிறது. வாழ்வது திருக்குருகூரோ? இல்லை திருப்பாற்கடலோ? உங்கள் பெயர் பாராங்குசனோ இல்லை நாராயணனோ? உங்கள் திருமாலை துளசியில் ஆனதா? இல்லை வகுள மலர்களால் ஆனதா? உங்களுக்கு மனிதர்கள் போல் தொள்கள் இரண்டோ இல்லை தேவர்கள் போல் நான்கோ? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப் போனால் திருமாலும் சடகோபனும் இருவர் அல்ல, ஒருவரே என்பது புரியும்.

(குருகூர் = நெல்லை மாவட்டத்தில் நம்மாழ்வார் பிறந்த இடம்; அவர் இயற்பெயர் - பாராங்குசன், மாறன்; அவரது முனித்தன்மையறிந்து தாய் இட்ட மாலை வகுளமாலை)

இப்படி சிறப்பித்துச் சொல்வது தமிழ் மரபு. மேலும், இறைவன் என்பவன் ஏதோ எட்டாத தொலைவில் உள்ளவன் போன்ற கருத்தை மறுத்தலிக்கும் வைணவம். இறங்கி வருதலுக்குப் பெயர்தான் அவதாரம். நாரணன் நம்பி இறங்கிவரும் போது அவனுக்கு கிடைக்கும் நாமம் சடகோபன் என்கிறது இத்தனியன்.

சடகோபன் வந்த காலம் சரித்திர காலத்திற்குள் விழுகிறது. இவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பது அறிஞர் கருத்து. வஜ்ர தந்தி என்ற சமணப் பெரியவர் நான்காம் சங்கம் அமைத்து மதுரையில் அறிவொளி பெருக்கிய காலம். புலவர் கடன் உண்மை கண்டறிந்து அதை பாக்களில் வடிப்பதாகும். காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகள் முதலில் சங்கத்தைக் கடக்க வேண்டுமென்பது அன்றைய முறை. சங்கப் புலவர்கள் சாதாரண ஆசாமிகள் இல்லை என்பது இறையனாரும், எம்பெருமானுமாகிய சிவன் இயற்றிய பாடலையே குற்றம் என்று சொல்பவர்கள் (நக்கீரர்-தருமி) என்ற கதையிலிருந்து தெரிகிறது.

நான்காம் சங்கம் அமைந்த காலத்தில் வாழ்ந்த பேரறிஞரான நம்மாழ்வார் சங்கப் புலவர்கள் தம்மை பெரிதும் மதிக்கும் படி ஒரு அகவல் செய்வித்த செய்தி கூடற்புராணத்தில் வருகிறது. இதை "அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்" என்னும் குறிப்பால் அறியலாம். மேலும், நம்மாழ்வாரிடம் பெரு மதிப்புடைய கவிச்சக்கரவர்த்தி கம்பன், அவர் சிறப்புக் கருதி செய்வித்த நூறு பாடல்கள் அடங்கிய சடகோபர் அந்தாதியில் "சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலையானை" என்னும் வரிகளால் இதைப் பதிவு செய்கிறார்.

இத்தனை சிறப்புப் பெற்ற பாடல் முந்தைய தொகுப்பாசிரியர்களால் காணக் கிடைக்காமல் 1934ம் வருடம் வெளியிடப் பெறுகிறது என்றால் தமிழ் இலக்கியம் இதுபோன்ற ஆச்சர்யங்களுக்கு எதிர்காலத்திலும் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டுமென்பது புரியும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் முறையாகத் தொகுக்கப் பட்டு, காலத்தின் அழிவை எதிர்கொள்ள சாற்றுமுறையாக கோவில் சம்பிரதாயத்தில் சேர்க்கப் பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்வார் திருநகரி (பழைய திருக்குருகூர்) என்னும் ஊரில் தாயவலந்தீர்த்தான் கவிராயர் வீட்டில் இரா.இராகவய்யங்கார் அவர்கள் இந்த அகவலைக் கண்டு எடுக்கிறார்கள். இது முதன்முறை மதுரை தமிழ் சங்கத்தின் செந்தமிழ்ப் பத்திரிக்கை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியாகிறது. திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் சேராத இந்த அகவலை பதிப்பித்து அதன் பொருள் சரியாக விளங்கவில்லை என்ற குறிப்புடன் இரா.இராகவய்யங்கார் வெளியிடுகிறார்.

இந்த தயக்கத்திற்குக் காரணம், ஏற்கனவே ஸ்தாபனப் படுத்தப் பட்டுவிட்ட வைணவ திருமறையில் புதிதாக ஒன்றைச் சேர்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரிய மில்லை என்பதாகும். எப்படி விக்டோரிய அரசி காலத்தில், ஸ்தாபனப் படுத்தப் பட்டுவிட்ட கிறிஸ்தவ திருச்சபைக்கு முன் சார்லஸ் டார்வின் தன் ஆய்வு முடிவுகளை, வெளியிட தயங்கினாரோ அதுபோல்தான் இதுவும். வித்தியாசம், டார்வின் இருபது வருடங்கள் எடுத்துக் கொண்டார். வெளியிட்ட அன்றையிலிருந்து இன்றுவரை உணர்ச்சியைக் கிளப்பும் பிரச்சனையாக பரிணாமவியல் (theory of evolution) உள்ளது.

ஆனால், இரா.இராகவய்யங்கார் தயங்கியதற்குக்காரணம் நம்மாழ்வாரின் உளமறிந்து பொருள் சொல்ல வேண்டும் என்பதால். மேலைச் சிந்தனைக்கும், கீழைச் சிந்தனைக்கும், உண்மையை அணுகுவதில் உள்ள பாரிய வித்தியாசமாகப் படுகிறது இது. டார்வின் செய்தது பல வருட பெளதீக ஆய்வு. அதன் பலனாய் கண்ட உண்மையை விளக்கும் கோட்பாடு. நம் தேசத்தவரும் உண்மையை அறிய ஆய்வு செய்தனர். ஆனால் முற்றிலும் வேறான கோணத்தில். கண்டு கொள்ளப்பட வேணடிய உண்மையின் அங்கமாக நாமும் இருப்பதால் நம்மை தவிர்த்து உண்மை வேறொங்கோ இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை முதலில் தவிர்த்தனர் இந்திய ஞானிகள். அதனால் இவர்களது யாத்திரை மேலும், மேலும் உள்ளே - அகம் சார்ந்து - சென்றது.

இவர்கள் கண்ட உண்மை தரிசனங்களை, அகவல்கள், அந்தாதிகள் என்று அன்றைய நடைமுறையில் இருந்த இலக்கிய வடிவங்களில் வடித்து வைத்தனர். இலக்கியத்தின் ஊடகமாக உள்ள வார்த்தையே உருவகமாக நிற்பதுதான் அதன் சிக்கல்! உருவகம் என்பது ஒன்றை விளக்க வேறொன்றை வைத்துச் சொல்வது. "அவன் சரியான குள்ள நரி" என்னும் போது மனிதன் குள்ள நரியாக மாறிவிடுகிறான். உருவகம் புரிவதால் மனிதன் குள்ள நரியாக மாறிவிட்டான் என்பது போன்ற அபத்தப் பொருளில் நாம் புரிந்து கொள்வதில்லை. குள்ள நரியின் குறுக்கு புத்தி உடையவன் என்று புரிந்து கொள்கிறோம். இப்படி புரிந்து கொள்ள ஒரு சமூகத்தின் விழுமியங்கள் (values), ஐதீகங்கள் (myths) இவை தெரிந்திருக்க வேண்டும். ஒரு கலாச்சாரத்தின் உருவகம் இன்னொரு கலாச்சாரத்திற்கு சட்டென விளங்குவதல்ல.

மேலும் வார்த்தை என்பதே ஒரு குறியீடுதான். மரம் என்னும் சொல் மரத்தைக் குறிக்க வந்ததே தவிர அதுவே மரமல்ல. இந்தப் பெரும் உண்மையை திருமூலர் மிக அழகாக, "மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை" என்று திருமந்திரத்தில் சொல்லுவார். ஆக, நம்மாழ்வார் சங்கப் புலவர்கள் மதித்துப் போற்றும் படி ஒரு செய்யுள் செய்கின்றார் என்றால் அதன் பொருள் மிக ஆழமானதாக இருக்க வேண்டுமென்பது தமிழ் அறிஞரான இரா.இராகவய்யங்கார்க்குத் தெரியும். அதனால் பல ஆண்டுகள் யோசித்து, பல்வேறு நூல்களை வாசித்தறிந்த பின் இந்த அகவலுக்கு பொருள் சொல்கிறார். பொருள் அறிய, அறிய அப்படியே பிரம்மித்துப் போய் விடுகிறோம்.

சமணர்கள் இப்பிரபஞ்சத்தின் மூல காரணமாக இறைவனைக் கருதுவதில்லை. வஜ்ர தந்தியின் தமிழ்ச் சங்கம். தமிழின் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்குறுங் காப்பியங்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட காலம். தமிழின் இலக்கண வளமனைத்தும் சமணர்கள் வைத்திருந்த காலம். திருமாலின் அவதாரமாக வருகிறார் சடகோபன். முறையாக பள்ளி சென்று பெற்ற ஞானமல்ல நம்மாழ்வரது. மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் அவர். அப்படித்தான் அவரது திருவாய் மொழி (வாய் மொழி = எழுதாக் கிளவி = வேதம்) ஆரம்பிக்கிறது. இப்படி அருளப் பெற்ற ஞானத்தை சங்கத்தில் வைத்து புலவர் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.

இப்பாசுரத்தின் சொற் பொலிவினையும், அதனுள் அடங்கிய அரிய பெரிய வடமொழிப் பொருளின் மாட்சியையும் நோக்கி மெய் மறந்து நிற்கிறார் இரா.இராகவய்யங்கார். சடகோபன் வேதம் கற்றவர் அல்ல. வேதமாய் நின்றவர். இவர் பெயரைச் சொன்னாலே வேதம் ஓதும் அந்தணர்கள் தங்கள் தாமரைக் கரங்களை தலைக்கு மேல் தூக்கி வணங்குவர் என்கிறார் கம்பன். அப்பெருங்கவியின் அகவல் இதோ:


அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொன்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலினழுந்தி
யறுகாற் குறவனீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட்டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.


இதன் பொருளை ஆராயும் முன் ஒரு ஆசை.

இப்பாசுரத்தை வாசித்துப் பாருங்கள். எம்பெருமானை மனத்தில் கொண்டு பொருள் தேடிப் பாருங்கள். உங்கள் மனத்தில் படுவதை இணையத்தில் தாருங்கள். பெரும் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆறாவது சங்கம்தானே இணையம். வரும் கடிதங்களை வைத்து இதன் பொருளை மேல் கொண்டு செல்கிறேன்.

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் யிராமானுசன்


அஞ்சற்க....அன்பர்களே.

7 பின்னூட்டங்கள்:

  Srikanth

Friday, December 21, 2007

// ஐதீகங்கள் (myths)

I wonder whether this is right, as myth might be understood as false, baseless belief... Absense of evidence is not an evidence of absense right :)

  N.Kannan

Friday, December 21, 2007

To understand 'myth' I recommend Joseph Campbell. The world authority on myth. Myth is an expression of deeper inner understanding. A deeper realization. Myths are not false or baseless.

  குமரன் (Kumaran)

Friday, December 28, 2007

ஐயா. இந்த அகவலின் பொருளை எங்கே படிக்கலாம்?

  N.Kannan

Saturday, December 29, 2007

குமரன்: இப்பாடலை நான் திருவேங்கடமுடையான் பதிப்பகம் வெளியிட்ட நாலாயிர திய்வப் பிரபந்தம் எனும் புத்தகத்திலிருந்து எடுத்தேன். அதன் படி, "இதன் சொல்நயம், பொருள் நயங்களை விளக்கி, மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைமை ஆசிரியர் திரு.நாராயண அய்யங்கார் அவர்கள் அரிய விளக்க உரை தந்துள்ளார்" என்பது. மதுரைத் தமிழ்ச் சங்கம் போனால் கிடைக்கலாம். அதே போல் பேரா.இரா.இராகவய்யங்கார் அவர்களும் பொருள் கொடுத்து ஒரு புத்தகம் போட்டுள்ளார். அது டெக்ஸாஸ் நா.கணேசனிடம் உள்ளது. அவர் புதுவருட நட்சத்திரமாக தமிழ் மணத்தில் வருகிறார். ஞாபகப்படுத்துங்கள். அவர் வலைப்பதிவில் வெளியிடலாம்.

  N.Kannan

Tuesday, February 12, 2008

குமரன்:

ஆண்டகோளத்து மெய்ப்பொருள் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூலாகப் படிக்கக் கிடைக்கிறது.

இங்கே படிக்கலாம்!

  குமரன் (Kumaran)

Tuesday, February 12, 2008

ஆகா. மிக்க நன்றி ஐயா. ஒரு பிரதி சேமித்து வைத்துக் கொண்டேன். உடனே படித்துப் பார்க்கிறேன்.

  R.DEVARAJAN

Friday, June 20, 2008

வைணவ உலகம் இவ்வரிய புத்தகத்தின்பால் கவனம் செலுத்த வேண்டும்.
எளிய தமிழில் உரை வெளியிட்டால் அனைவரும் படித்து இன்புறலாம்.
ஸ்ரீ பாஷ்யத்தை நன்குணர்ந்த பெரியோர்கள் இன்றும் இருப்பதால் இதற்கு உரையிடுதல் எளிது என்றே நினைக்கிறேன்.
தேவராஜன்