e-mozi

பாசுர மடல் - நுழை வாயில்

பாசுர மடல்கள்

000. நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை
001. ஆழ்வார்களின் அறிமுகம்
002. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
003. பாயிரம் வாயிலாகத் தமிழ் மறுமலர்ச்சி
004. ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை
005. காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ
006. விதையாக நற்றமிழை வித்திட்டாய்
007. சொல்லினில் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?
008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்
009. சாதிகள் இல்லையடி பாப்பா!

010. என் அமுதினைக் கண்ட கண்கள்
011. வேதம் தமிழ் செய்த மாறன்
012. இதத்தாய் இராமானுசன்!
013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்
014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்
015. திருமழிசை என்ற அதிசயம்
016. பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!
017. வைணவ பரிபாஷையும் பக்தி செய்தலும்
018. ஆழி மழைக் கண்ணா!
019. ஊமையின் கனவு

020. கண்ணனுக்கே ஆமது காமம்!
021. சின்னஞ்சிறு கிளியே!
022. செய்ய தாமரைக் கண்ணினாய்!
023. செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!
024. வாழ்வு நிலையே கண்ணம்மா!
025. வேங்கடவற்கு என்னை விதி
026. படைப்பிலக்கியமும் சுதந்திரமும்
027. சில்லென்று அழையேல்!
028. விண்ணீல மேலாப்பு!
029. நின்மலா! நெடியாய்!

030. எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!
031. என் சரண் என் கண்ணன்
032. கலியும் கெடும் கண்டு கொண்மின்!
033. ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்!
034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்!!
035. கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே!!
036. கற்றினம் மேய்ந்த எந்தை கழனினை பணிமின் நீரே!
037. நீராய் அலைந்து கரையன
038. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!
039. செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்?
040. காற்று வெளியிடைக் கண்ணம்மா!

041. காதல்(பக்தி)? களவு? கற்பு
042. கல்யாணக் கனவுகள்
043. அறிவின் பயனே! அரிஏறே!!
044. கனவிடை தோய்தல்
045. பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே!
046.பாவை நோன்பு
047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்
048. உறவில் உறையும் இறைவன்
049. குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!
050. உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார்!

051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்
052. உறங்குவது போலும் சாக்காடு
053. ஆலிலை மேல் ஒரு பாலகன்
054. சிங்கப் பெருமாள் கதை
055. அவதாரங்களை அணுகுவது எப்படி?
056. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!
057. மணவாள மாமுனியின் கனவு
058. காதல் விளைவித்த காரமர்மேனி !!
059. வானம் வசப்படும்!!
060. அவள் தந்த பார்வை!

061. உளகளவும் யானும் உளன்!
062. பெருமாள்
063. வணங்கும் துறைகள் பல பல ஆக்கி..
064. வாலைக்குமரியும் வண்ண நிலவனும்
065. மானிடரைப் பாடாது மாதவனை ஏத்துதல்
066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்
067. தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு
068. நரகும் சொர்க்கமும்
069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்
070. முல்லை திரிந்து பாலையாகுதல் போல

071. அடியார் தம்மடி யார்அடி யோங்களே!!
072. பட்டினம் காப்பென்று வந்த சொல்!
073. வள்ளுவமும் வைணவமும் (பகுதி ஒன்று)
074. வள்ளுவமும் வைணவமும் (பகுதி இரண்டு)
075. வறுமையும் புலமையும்
076. கலி நீக்கம் - நிழல் வெளியும் நிஜவெளியும்
077. வாழ்வின் துயரை எதிர் கொள்வது எப்படி?
078. மாறன் திருவுள்ளமும் பொய்த்துப்போன புரட்சிகளும்
079. மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ
080. புலி புலி எனும் பூசல் தோன்ற!

081. அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!
082. பெண்மை அம்பூ இது!
083: யார் துணை கொண்டு வாழ்கிறது இவ்வுலகம்?
084. அவ்வருள் அல்லன அருளும் அல்ல!
085. கண்ணன் கள்வன்
086. கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!
087. மாலையும் வந்தது மாயன் வாரான்!
088. ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம்!
089. மீட்பர் வருவாரோ?
090. அண்டம் மோழை எழ!

091. பிரபஞ்ச ஆக்கமும் பூமியைக் காத்தலும்!
092. ஊழிக்கூத்தும் மீண்டும் பிறப்பும்
093. உலகின் தோற்றமும் மழையுயிர் காத்தலும்
094. மேவி கற்பாருக்கான மாமருந்து
095. அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)
096. அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)
097. அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)
098. மச்சாவதாரமும் கருங்கடல் பெருக்கும்
099. மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!
100. பிணக்குறும் சமயங்களும் அருங்கலைப் பொருட்களும்

101. கானல்
102. கனவில் கண்டேன் கண்ணபெருமானை!
103. தாய் நாடும் கன்றே போல்
104. கொன்றை அலங்கல் மார்வன் யார் ?
105. உயர்வற உயர்நலம் உடையவன்
106. கோதை எனும் குலவிளக்கு!
107. மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!
108. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து.

எதிரொலி : பாசுர மடல் பின்னூட்டங்கள் (தமிழ்.வலை)

மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை

இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்

தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.

எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.

மேலும் வாசிக்க இங்கே சொடுக்குக!

மடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்

வைணவ சாற்றுமுறை:

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!!
--------------------------------------------------------------------------------

ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.

சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று.


(முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)
இப்படி பாடிய முதல் பாசுரங்கள் நூறு. அடுத்தவர் தொடர்கிறார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது
நான்காவதாக நிற்பது யார் என்று. அதை மூன்றாவதாக வந்தவர் விளங்கச் சொல்கிறார் இப்படி:

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.


(முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)


இவர் பாடியது நூறு பாடல்கள். பொய்கையில் தோன்றியதாக நம்பப்படுபவர் பொய்கை ஆழ்வார். பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே உணவாகக் கொள்வதால் இவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும். மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது) மூன்றாவது ஆள்வார் பேயாழ்வார். இதுவும் காரணப் பெயர். ஒரு காரியத்தில் பேயாய் அலைகின்றவர்களை நாம் கண்டதில்லையா? இவர் வேலை கண்ணன், நாரணன் என்று மெய்பொருள் கண்டு கொள்ள பேயாய் அலைவது. அதனால் அப்பெயர்.

Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000

மடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

சென்ற கட்டுரையில் பார்த்த நிகழ்வு உண்மையா, புனைவா என சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் செய்ய இயலாது. புனைவு என்றாலும் ஏதோ காரணம் இருக்கிறது.

இந்நிகழ்வு காட்டுவது என்ன?

"பகிர்தல்" என்ற பண்பைப் பற்றி. அதாவது முதலில் வந்தவருக்கு கஷ்டத்தில் தங்க ஒரு இடம் கிடைக்கிறது. அவர் செளகர்யத்தை பார்த்துக்கொண்டு இருந்து விடாமல் அடுத்து வந்தவருக்கு இருக்க இடம் கொடுக்கிறார். அடுத்து வந்தவரும், "ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக" இவரை துரத்தி விடாமல் சேர்ந்து இருந்து மூன்றாவதாக வருபவருக்கும் இடமளிக்க உதவுகிறார். மூவருக்கும் வாழ்வு என்பது "நிலையற்ற ஒட்டம்" என்றும் அதில் பகிர்தல் தரும் "இன்பமும், அனுபவமும்" நிறைவு தருவதாய் உணரும் திறனும் நிரம்ப இருப்பது தெரிகிறது.

இப்போதைய நிலமை என்ன? இங்கிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போகிறார்கள். பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் வருபவன் பிரச்சனை என்றுதான் உள்ளூரில் இருப்பவன் காண்கிறான். வந்தவன் நிலைத்து வாழ்ந்தபின் (ஒரு தலைமுறை) புதிதாக வரும் ஆசாமியைப்பார்த்து இதே அசூசை (uncomfortable, hate, indifferent) கொள்கிறான். இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழும் மனப்பக்குவம் இல்லை. உலகில் அதி பணக்காரனும் அன்னாடங்காச்சியும் பக்கத்தில் பக்கத்தில்தான் வாழ்கிறார்கள். எவ்விதப் பகிர்வும் இல்லாததால் ஒருவருக்கு சுவர்க்கமாக இருக்கும் வாழ்வு மற்றவருக்கு நரகமாக இருக்கிறது.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்" என்று பாடிய கண்ணதாசன் வேறொரு பாடலில்,"இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா" என்பான். எல்லோரும் பகிர்ந்து வாழ உலகில் அத்தனை வளங்களும் (resources), தொழில் வளர்ச்சியும் (technology) இருந்தும் - அமெரிக்காவில் அதிக உணவை கடலில் கொட்டுகிறார்கள்; எதியோப்பியாவில் பட்டினியில் சாகிறான் மனிதன். நாயினும் கீழான வாழ்வையே மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் வாழ வேண்டி உள்ளது.

எங்கு மனிதநேயம் பூரணமாகி பகிர்தலும், அன்பும் நிரம்பி வழிகிறதோ அங்கு தன்னிச்சையாக
(அதாவது அழைக்காமலே) இறைவன் வந்து சேர்கிறான். மூன்று ஆழ்வார்களும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாமென கூடியவுடனே முண்டி அடித்துக் கொண்டு தானும் உள்ளே புகுந்து விடுகிறான் இறைவன் (என் "உள்ளம் நிறையப்" புகுந்தான், என்பார் நம்மாழ்வார் ஒரு இடத்தில்) இப்பாசுரங்கள் கி.பி. எழாம் நூற்றாண்டில் மாமல்ல பல்லவன் ஆண்டு கொண்டு இருக்கும் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் (குரு பரம்பரை கதைப்படி கி.மு. நாலாயிரத்தை தாண்டி விடுகிறது). இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் தமிழ் இன்றும் வாசித்து புரிந்து கொள்ளும் படி இளமையாக இருக்கிறது. இது தமிழின் சிறப்பு."திருக்கண்டேன்" என்று தொடங்கும் பாசுரத்தில் "பொன்மேனி கண்டேன்" என்கிறார் ஆழ்வார்.பொன்னார் மேனியன், மாதர் பிறையான், அலகில் சோதியன் - கண்ணன் அன்று! அது சிவன். இருப்பினும் பேயாழ்வார் திருமாலை பொன்னனாகக்காண்கிறார். காரணம் முதல் வரியில் இருக்கிறது. ஆழ்வார் முதலில் காண்பது திருமகள். அதான் "திருக்கண்டேன்" என்று
ஆரம்பிக்கிறார். திருமகள் சொர்ணம் போல் மின்னுபவள். அவள் ஜொலிப்பு திருமால் உடம்பில் அப்படி "டால்" அடிக்கிறது!

Date: Tue, 02 Sep 1997 12:28:41 +0000

மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி

தொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது
மனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.

பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.பூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்!பேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்

"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,
பஜ கோவிந்தம் மூடமத"

என்கிறார்.

பக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நு¡ற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. "நகரேஷு காஞ்சி" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்து தான் "ஜென் மதம்" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை "தாருமா" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.

வேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.

முதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே.

பேயாழ்வார் முதல் முறையாக "ஸ்ரீ" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு "திரு" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். "திரு" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது.
வேதகாலத்து பூஜை முறைகளில் "ஸ்ரீ" , லட்சுமியாக பஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் "திரு" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.

அவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்.

இது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.

1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்.

2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்.

இது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்
ஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்.

பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது
தற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

Date: Wed, 03 Sep 1997 15:45:49 +0000

மடல் 004: ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை

ஆழ்வார்கள் தோன்றிய காலத்தில் அவைதீக மதங்களுக்கு மாற்றாக நிறையச் செய்ய வேண்டி இருந்தது. கண்ணனை காட்சிக்கு எளியனாக்கி, புதிய சம்பிரதாயங்களை செய்விக்க வேண்டி இருந்தது.


புண்ணிய வைணவ தலங்களெல்லாம் சாதாரண தமிழனால் பயணிக்க முடியாத தொலை தூரத்தில் இருந்தன. பொய்கையார் காலத்தில் பத்ரி, அயோத்தி, பிருந்தாவனம் என்று சில தலங்கள் வட நாட்டில் இருந்தன. "திருவெஃகை" என்றொரு தலத்தைப் பாடுகிறார். அவர் பிறந்த ஊர். இதற்கு முன் அதற்கு புண்ணிய அந்தஸ்து கிடையாது. உருவாக்குகிறார். கண்ணன் புவனசுந்தரன் என்று இருக்கும் போது கண்ணன் எங்கெல்லாம்
உண்டோ அதெல்லாம் பிருந்தாவனம் என்கிறார். இப்படி இவர்கள் பாடிய தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதை வைணவர்கள், "மங்கள சாசனம்" பெற்ற திருத்தலங்கள் என்று போற்றுகிறார்கள். வைணவ திருத்தலங்கள் 108-ல் முக்கால்வாசி தமிழகத்தில் இருப்பது தற்செயலாக நடந்தது அல்ல. இதே போல் நாயன்மார்களும் தலம் சென்று பாடுகிறார்கள். அப்பர் திருப்பூவணத்தாண்டகத்தில், பூவணநாதனை இப்படிப் போற்றுகிறார்:

வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே


இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாம் பிறந்த ஊர் "புண்ணிய பூமி" என்ற உள்ளத்தெம்பை உருவாக்குகிறார்கள்.


சைவ ஆகமங்களெல்லாம் தென் தமிழகத்தில்தான் உருவாகின. இச்சம்பிரதாயங்களெல்லாம்
வடக்கே கிடையாது. சைவ, வைணவப் பிரிவு கூட தெற்கே இருப்பது போல் அங்கு இல்லை. காரணம் அவை தோன்றிய இடம் தெற்கு. வடக்கு இல்லை! சைவ வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்னைமையானது. திருமால் வழிபாடும் புதிய வழி அன்று. கண்ணன் என்ற கருத்தாக்கமே தெற்கே ஆரம்பித்ததுதான். அதனால்தான் கண்ணன் இன்னும் "கருந்தெய்வமாய்" நிற்கிறான். முதல் ஆழ்வார்கள் காலத்தில் இவை இரண்டும் கொஞ்சிக் குலாவி இருந்தன.

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து


(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்).

சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான். அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான்.

பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கிறது.

திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?

இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்
வலப்பால் ஒண்கொன்றை
வடமால்; இடம் துகில் தோல் வலம்
ஆழி இடம் வலம்மான்
இடமால் கரிதால் வலம் சேது
இவனுக்கெழில் நலஞ்சேர்
குடமால் இடம், வலம் கொக்கரை
யாம் எங்கள் கூத்தனுக்கே


(பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்)

இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான்.

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து......

Date: Thu, 04 Sep 1997 09:32:20 +0000

மடல் 005: காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ

நம் ஆழ்வார் உலாவில் அடுத்து வருபவர் திருமழிசைப்பிரான்.

இவர் அருளிச் செய்தது நான்முகன் திருவந்தாதி (96 பாடல்கள்);
திருச்சந்த விருத்தம் (120 பாடல்கள்).

ஆழ்வார்கள் பாடிய பாடலை ஏன் அருளிச் செயல் என்று சொல்ல வேண்டும்?

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர்- கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறை பொருளும் அத்தனையே தான்

(நான்முகன் திருவந்தாதி -69)

இவர்கள் வெறும் கவிதை சமைக்கவில்லை. அநுபூதி நிலையில் தாம் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை கவிதை என்ற ஊடகத்தின் வழியே உலகு அறியச் செய்கின்றனர். அதனால்தான் திருமழிசை கவிக்கு நிறைபொருளாய் செங்கண்மாலைக் காண்கின்றார். இவர் அவனை நேர்கொண்ட அநுபவத்தை கவிதையாக்கித் தருகிறார். இதை "அருளிச் செயல்" என்கின்றனர்.


இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல-நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே
யாவது; ஈது அன்றென் பாரார்?

(நான்முகன் திருவந்தாதி-72)

இல்லறம், துறவறம் எனறு ஏன் அலட்டிக்கொள்ளுகிறீர்கள்? நல்லறமாவது நாராயணனே! என்று முத்தாய்ப்பு வைக்கிறார். "நால் வேத மாத்தவமும்" என்றவுடன் காஞ்சிப் பெரியவர்தான் ஞாகபத்திற்கு வருகிறார். அவர் வேதத்திற்காகத் தவமிருந்தார். வேதம்தான் தவம் என்றார். திருமழிசை சொல்லுவது போல்"நால்வேத மாத்தவமும் நாராயணனே" என்றிருந்தார். சங்கரமடத்து சம்பிரதாயத்துப்படி கையெழுத்து இட்டால் "நாராயண ஸ்மிருதி" என்றுதான் எழுதிக் கையேழுத்து இட்டார். அர்த்தம் நாராயணனே ஞாபகமா இருத்தல் என்பது.இதை நம்மாழ்வார் வழியில் சொன்னால்,

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள் நீர்மல்கி.....

-திருவாய் மொழி 6 (1)

இருக்கும் நிலை. திருமழிசைபிரான் அதையே:

தொழிலெனக்குத் தொல்லை; மால் தன்னாமம் ஏத்த
பொழுதெனக்கு மற்றதுவே போதும் - கழி சினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த
வில்லாளன் நெஞ்சத் துளன்


(நான்முகன் திருவந்தாதி -85)

என்கிறார்.

வெற்பேன்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன், நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்

(நான்முகன் திருவந்தாதி-40)


திருவேங்கடமே வீடென்று இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் புரிகிறது,
இத்தனை நாளாய் இந்த பாழாய் போன பண்டிதர் பின்னே அலைந்தது ஏன்? என்று.

இது ஒரு ஆழமான பாசுரம்.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது).

திருமழிசையின் வார்த்தைப் பிரயோகங்களைப் பாருங்கள்! "நூல் வலையில்" சிக்கி என்கிறார். நாம் படித்த படிப்பை வைத்து என்ன ஆட்டம் ஆடுகிறோம்? "நூலாட்டி கேள்வனார்" என்று கேலி செய்கிறார்! ஒரு வகையில் இது ஒரு மாபெரும் வலைதான். நாம் வலையில் விழுந்து ஆடுவதை பல சமயம் உணருவதே இல்லை!

இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்
காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!

(நான்முகன் திருவந்தாதி-96)

Date: Sat, 06 Sep 1997 20:08:10 +0000

மடல் 006: விதையாக நற்றமிழை வித்திட்டாய்!

மொழியின் பயன் என்ன என்று பார்ப்போம்!

மொழியின் தோற்றுவாயை அறிய முயலும் அறிவியலார் மானுடத்தின் மூதாதையர் புல்வெளிகளில் வேட்டையடும் போது ஒருவருக்கொருவர் சங்கேதம் சொல்லிக் கொண்டு கூட்டாக இறையாட உதவும் ஊடகம் மொழி என்கின்றனர்.

தங்களுக்குள் பேசிக் கொள்ளாமலே கூட்டாக வேட்டையாடும் கழுதைப் புலிகளுக்கு இது பொருந்தாதுதான்!

பேபில் மாளிகை கட்டத் துவங்கிய ஆதி மனிதர்கள். கட்டி முடிப்பதற்குள் பல்வேறு மொழி பேசி பிரிந்து போக கடைசிவரை அந்த மாளிகை கட்டப்படவே இல்லை என்று விவிலியம் (Bible) கூறுகிறது.

மொழி, செடிகொடி போல் வளருகிறது. மொழியின் தொற்றம் என்ன? வளர்ச்சி என்ன? என்றெல்லாம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் மொழி பேசுகின்றனர். செடி, கொடிகள் தாம் எப்படி தோன்றினோம் என்று அறிந்தா வளருகின்றன?மேலும் மக்கள் ஆதிகாலம் தொட்டு குடிபெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். போகுமிடத்திலும் மொழி வளருகிறது. போகுமிடத்து மொழி காலப்போக்கில் பொது மொழி ஆகிப் போகிறது. பொது மொழி பேசுவதால் எல்லோரும் ஒரு நிரை என்று ஆவதில்லை. பொது மொழி பேசினாலும் பேசுகிறவன் குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து, குடி பார்த்து, குடி பெயர்வின் அடி பார்த்து மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். சேர்க்க வேண்டிய மொழியே கடைசியில் மனிதர்களைப் பிரிக்கிறது. எல்லாம் மனிதனின் பார்வையைப் பொறுத்த விஷயம்!!

உண்மையைச் சொல்லப்போனால் மொழி என்பது ஊனுடன் உயிர் கலந்து இருப்பது போல் நம்மோடு கலந்து இருக்கிறது. மொழி இல்லையேல் மானுடம் இல்லை. மொழி என்ற விளை நிலத்தில் நாம் விதையாகத்தான் விழுகிறோம். மொழியில் வளர்கிறோம், மொழியால் வளர்க்கப்படுகிறோம். இந்நிலையில் மொழி என்பது வெறும் ஊடகம் என்பது போக ஒரு ஆன்மீக பரிமாணம் பெறுகிறது.

இதை திருமழிசை ஆழ்வாரின் ஒரு இயற்பாவில் காணலாம்:

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து


ஆழ்வார்கள் தமிழை எவ்வளவு உயர் நிலையில் வைத்து பார்க்கிறார்கள் என்பதற்கு விளக்கமாய் அமைகிறது இப்பாசுரம்.

இவ்வுலகிற்கும் உடலிற்கும் கதவாக மனது செயல்படுகிறது. மனது சொல்லித்தான் உலகில் எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. மனசில்லாமல் செய்யும் காரியும் உருப்படுவதில்லை. அதே நேரத்தில் மனது சொல்லும் எல்லாவற்றையும் செயல் படுத்தவும் முடிவதில்லை. அப்படியே மனது போனபடி செயல் பட்டாலும் செயலின் விளைவுகள் எப்போதும் நன்மையாய் முடிவதில்லை. எனவே மனதை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய படி. மனது நிலைப்பட்டு, தான்தோன்றித்தனமாக ஓடாமல், தன்னை தான் அறிந்து, தன் எல்லை அறிந்து நின்று விடுவது முதல்படி. அப்போது பிரபஞ்சம் அது, அது, உள்ளபடி கண்ணுக்குத்தெரியும். மனதின் வர்ணப்பூச்சு எதுவுமில்லாமல் உலகம் தெளிவாய் தெரியும் போது அதன் உள்ளுள் உறையும் உறவுகளும் சரியாய் புரியும். பிரபஞ்சம் முழுவதையும் இணைக்கும் ஒரு தொப்புள் கொடி கண்ணில் படும். இதை இறை அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்.

இதை திருமால் திருமழிசை ஆழ்வாருக்கு அருளுகிறார். எப்படி? தமிழ் என்ற மொழி மூலம்! கற்றமொழியாக இவர் ஊனுடனும் உயிரிடனும் கலந்து, இவர் உள்ளத்தை விளை நிலமாக்கி இறைமையை சாகுபடி செய்கிறார். தமிழின் பயனை இதற்கு மேலும் சொல்லமுடியுமா என்ன?

இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்.

Date: Sun, 07 Sep 1997 21:03:21 +0000

மடல் 007: சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?

பிரம்ம சூத்திர உரைகளில் திரமிடாசார்யார் (திராவிட ஆசாரியர்) ஒருவர் குறிப்பிடப்படுகிறார். இவர் திருமழிசைப்பிரானாக இருக்க வேண்டும் என்று பேரா.குப்புசாமி சாஸ்திரியார் கருதுகிறார். இவ்வாழ்வார் சமைத்துள்ள திருச்சந்த விருத்ததில் மலைக்க வைக்கும் சந்தங்களை ஆண்டுள்ள விதத்திலிருந்து இவரது ஆழமான சமிஸ்கிருத புலமையும் தெரியவருகிறது. இவர் கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி.பி.8ம் நு¡ற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.

தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதேசொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?

-திருச்சந்தவிருத்தம் 10,11

என்ன அழகான பாசுரங்கள்! சந்தத்தில், பொருளில், கவிதை அழகில்!

திரைகடலில் கிளர்த்து எழும் பேரலையானது எழுந்து, ஆர்ப்பரித்து, ஆடிக்களைத்து பின் அக்கடலிலேயே அடங்கிவிடுவது போல் இறைவன் என்ற ஒன்றில் பிறந்து, நின்று, திரிந்து,இறந்து பின் இறையினுள் அடங்கிவிடுகிறது என்கிறார்.

இது இந்திய ஞானிகளுக்கேயுரிய ஒரு பரந்த நோக்கு.

இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதை சொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!

ஊனில்மேய ஆவிநீ! உறக்கமோ டுணர்ச்சிநீ
ஆனில் மேய ஐந்தும்நீ; அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ
யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ, இராமனே!

-திருச்சந்தவிருத்தம் 94அத்தனாகி, அன்னையாகி, யாளுமெம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்து நம்மையாட் கொள்வான்
முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினா லிடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே!

-திருச்சந்தவிருத்தம் 115

என்ன எப்படி போகிறது சந்தம் பாருங்கள்! திருமழிசை - சித்தர்கள், அருணகிரி நாதருக்கு முன்னோடி! ஓடப்பர், உடையப்பர்....என்ற பராசக்தி வசனத்திற்கு முன்னோடி (சமயம் தவிர்த்து ஆழ்வார்கள் எம்மை ஆழ்பவர்களே! -கலைஞர் ஒரு பேட்டியில்)

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை
(3.77-80)

என்று பரிபாடல் திருமாலைப் பாடுகிறது (சங்கப்பாடல்). பாழ் என்றால் பூஜ்யம்; தொண்டு என்றால் ஒன்பது, பாகு என்றால் அரை. சங்கப்பாடல்களின் தொடர்ச்சிதான் பிரபந்தங்கள் என்று ஒரு கணக்கு. பரிபாடல் மாதிரியே புரியாத பாடலொன்றை (ஒன்றா?) திருமழிசையும் எழுதியுள்ளார். சாம்பிள்:

ஐந்துமைந்து மைந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே!
ஐந்துமைந்து மைந்துமாகி அந்தரத் தணைந்து நின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர் காணவல்லரே?


-திருச்சந்தவிருத்தம் 3இப்படியே ஒன்று, மூன்று, ஆறு என்று வகைக்கு ஒன்றாய் பாடி இருக்கிறார்!

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!!!

Date: Wed, 10 Sep 1997 17:01:11 +0000

மடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்

ஆழ்வார்கள் ஏன் இப்படி நெக்குருகி கண்ணா, மணிவண்ணா, முகுந்தா என்று புலம்புகிறார்கள் என்றொரு கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இதன் காரணத்தை புரிந்து கொள்ள கிமு 400- 200க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைப் பரிச்சியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியத்தையும், சமிஸ்கிருத இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்போடு இருப்பது அகத்திணை மரபாகும். சுருங்கச் சொல்லுவதானால் "அக மரபு என்பது மனித உறவுகளின் உன்னதத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்". அது காதலனைப்பிரிந்து காதலி பசலை கொண்ட செய்தியாக இருக்கலாம் அல்லது தன் அன்புக்குரிய குறுநில மன்னன் இறந்து வருந்தும் பாணனின் பாடலாக இருக்கலாம்.

இந்த இலக்கிய மரபைப்பற்றி ஆரிய மன்னன் ஒருவனுக்கு தமிழ் புலவர் ஒருவர் சொல்லுவதாக ஒரு சங்கப்பாடல்வருகிறது.

வேறு: குறுநில மன்னன் ஒருவன் இறந்து விடுகிறான். அவனது சபையில் வந்து பாடி, பொருள் பெற்று, அவன்பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த பாணனால் அத்துயரைத்தாங்கிக் கொள்ளமுடியவில்லை. புலம்புகிறான்-மல்லிகைச் செடியைப் பார்த்து! தலைவன் இறந்து விட்டான் இனி பெண்கள் வளையல் அணிய மாட்டார், மல்லிகை கொய்து பூச்சூடமாட்டர் எனவே மல்லிகையே இனி நீ பூத்து என்ன பயன்? என்று வருகிறது அப்பாடல்.

முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

இப்படி அதீத காதல் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது தமிழக மரபு. சங்கத்திற்குப் பிறகு களப்பிரர் ஆண்ட இருண்ட காலத்தில் இம்மரபு மறைந்து விடுகிறது. எழுநு¡று ஆண்டுகளுக்குப் பின் இம்மரபை உயிர்ப்பிக்கிறார்கள் ஆழ்வார்கள்.

"கோயில்" என்ற சொல்லைக்கவனியுங்கள். கோ+இல். அதாவது அரசன் வாழும் இல்லம். அரசனுக்கு உயர்ந்த இடத்தை பண்டைய தமிழகம் வழங்கியுள்ளது. காலப்போக்கில் அரசனைவிட இறைவனை அங்கு வைப்பது பொருந்தும் என்று தமிழகம் கருதுகிறது. அரசன் இருந்த இல்லம் கடவுளின் இல்லமாகிறது. அரசனைப்பாடிய புலவர்கள் இறைவனைப் பாட தலைப்படுகின்றனர். காதலன் வரவை எதிர்பார்த்து பசலை பூத்து நிற்கும் காதலிக்குப்பதில் இறைவனை நாயகனாக வைத்து காதலியாகி கசிந்து உருகுகிறார்கள். அக மரபின் தொடர்ச்சியாக"பக்தி மரபு" வருகிறது. பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடு.

சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும். இந்தக் காதல் உணர் வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி. நிரந்தரமில்லாத மனிதர்களிடம் வைக்கும் காதலை விட எப்போதும் இருக்கும் இறைவனிடம் வைக்கும் காதல் நிரந்தரமாக இருக்கிறது. அதாவது ஒருவன் சாகும் வரை காதல் செய்யலாம் (வாவ்!) இக்காதல் கவிதைகள்தான் பக்தி இலக்கியம்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் கவிதைகளுக்கும் மட்டும் "கண்" வேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. பக்தி இலக்கியத்தை இந்த நோக்கில் பார்த்தால் இரசிக்க முடியும். காதல் உணர்வு அற்றவர்களால் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்று நெக்குருக முடியாது. பாரதி "என் கண்ணின் பாவை" என்கிறான். ஆழ்வார்கள் "என் உள்ளத்தின் உயிரே!" என்கிறார்கள். ஒரே மரபு. அக மரபு. அது தமிழ் மரபு. தமிழின் மீது பற்று கொண்டவர்களால் இத்தனித்தமிழ் மரபை புறக்கணிக்க முடியாது. ஆழ்வார்களால் முடியவில்லை, பாரதியால் முடியவில்லை.

அன்று தமிழ் மண்ணில் தோன்றிய அக மரபு, பக்தி மரபாக மாறி மெல்ல, மெல்ல இந்தியாவை ஆட்கொள்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் செய்த கிருஷ்ணபக்தியை பின்னால் இராஜஸ்தானில் மீரா செய்கிறாள். வங்காளத்தில் கிருஷ்ண சைத்தன்யர் செய்கிறார். பின்னால் இராமகிருஷ்ணர் செய்கிறார். நரசிம்ஹ மேஹ்தா செய்வித்த "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை வைத்து காந்தி பக்தி செய்கிறார். சைத்தன்யரின் வழிவரும் பிரபு பாதா, இஸ்கான் இயக்கத்தை தொடங்கி உலகை பரவசப்படுத்துகிறார். இதெற்கெல்லாம் ஆதாரம் சங்ககாலத்தில் தோன்றிய அகத்திணை மரபுதான். அது தமிழ் மரபு. சமிஸ்கிருதத்தில் இல்லாத மரபு.

இம்மரபின் தொடர்ச்சி இன்றும் தமிழகத்தில் வாழ்கிறது-பல்வேறு ரூபங்களில்! ஆழ்வார் வழியில் பக்தி செய்த கடைசி தமிழ் கவிஞன் பாரதி. அதன்பின் இந்த அதீத காதல் உணர்வு சுதந்திர உணர் வுடன் சேர்த்து வைக்கப் படுகிறது (வந்தே மாதரம்!). தாய் நாட்டின் கொடிக்காக உயிர் துறக்கிறான் திருப்பூர் குமரன். இக்காதல் பின்னால் மொழியின் மீது வைக்கப்படுகிறது. தமிழுக்காக தீக்குளித்தவர்கள் பலர். கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்திற்காக தண்டவாளத்தில் தலையை வைத்து மாய்க்க தயாராக இருந்தார்கள்! அதீத காதல், அக மரபு, தமிழ் மரபு!

இந்த வீரத்தமிழர்களுக்கு முன்னோடியாக இருந்த ஒர் தமிழனின் சொல் கேளீர்:

செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்
செய்மின்; திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
நின்றார் அறியாவண்ணம்
என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு
தானேயாகி நிறைந்தானே
நம்மாழ்வார் திருவாய்மொழி
(10-1)


இது காதல், இது கவிதை, இது அகம், இதுதான் பக்தியும்!Date: Tue, 16 Sep 1997 21:46:51 +0000

மடல் 009: சாதிகள் இல்லையடி பாப்பா!

திவ்யப்பிரபந்தங்கள் ஆழ்வார்களின் ஆழ்மனக் காதலை வெளியிடும் ஊடகங்கள் என்று கண்டோம். அவை பண்டைய அக வழி மரபு என்றும் கண்டோம். சங்க கால இலக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்துபவர்கள் பாணர்கள் ஆவர். வைணவ இலக்கியங்களிலும் பாணர் ஒருவர் வருகிறார். அவர் பெயர் திருப்பாணாழ்வார் என்பதாகும். சங்ககாலத்தில் மதிப்பிற்குரியவாராக வரும் பாணர்கள் ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் இழிசனம் ஆகிவிடுகின்றனர். சாதி என்பது ஒரு சமூக அடையாளம். தன்னை யார் என்று உண்மையாய் உணராத வரைக்கும் தனி மனிதனுக்கு சாதியக் குறியீடு தேவைப்படுகிறது. ஆழ்வார்கள் தம் ஆழ்நிலை அனுபூதி நிலைகளில் மானிடத்தின் உன்னத பரிமாணத்தை கண்டவர்கள். அவர்களுக்கு எந்த சாதீய அடையாளமும் தேவையில்லைதான். எனினும் சாதீய வழிமுறைகளில் ஊறிப்போன பாழ்பட்ட சமுதாயம் அத்தகைய உன்னத மனிதர்களையும் சாதீயக் கண்ணாடி போட்டுத்தான் பார்த்தது, பார்க்கிறது. திருப்பாணாழ்வார் வாழ்விலும் இது நடந்தது.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உறையூரைச் சார்ந்தவர் திருப்பாணர். சமூக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த அவர் திருவரங்கனை மட்டும் துணையாக் கொண்டு வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு மெய்மறந்த நிலையில் வழி பட்டுக் கொண்டிருக்கும் போது லோக சாரங்கர் என்ற அந்தணர் இவரைக் காண நேரிடுகிறது. தம் வழியில் தடையாக நிற்கும் "தீண்டத்தகாதவரை" விலக்க அவர் மீது கல் எறிகிறார். நெற்றியில் கல் பட்டு இரத்தம் வழிகிறது.

இதன்பின் நடந்த சம்பவங்களை இருவேறு முறைகளில் சொல்லுகிறார்கள். சரித்திரத்தை நம் முன்னோர்கள் என்றும் நேரிடையாகச் சொன்னதில்லை. அப்பழக்கம் முகம்மதிய, ஆங்கில ஆட்சிகளுக்குப் பிறகுதான் வருகிறது. சரித்திரம், ஐதீகம் (Myth), புராணம் இவை அதிக வித்தியாசம் இல்லாமல்தான் தமிழக மண்ணில் உலாவுகின்றன. இதை ஆழ்மன வெளியீட்டின் குறியீடாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது. அரசாள்பவன் சரித்திரம் செய்வதற்கும், அடிமட்டத்து பாமரன் சரித்திரம் சொல்லுவதற்கும் இடையிலுள்ள பாரிய வித்தியாசமிது! (உம். கி.ராஜநாராயணன் - கோபல்லகிராமம்; Gabriel Garcia Marquez - One hundred years of solitude).

1. அந்தணர்கள் கோயிலுக்கு திரும்புகின்றனர். அரங்கனை நீராட்டும் போது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிகிறது. ஏதோ தவறு நடந்துவிட்டது என உணரும் தறுவாயில் அசரீரி மூலமாக அரங்கன் திருப்பாணாழ்வாரை அந்தணர் சுமந்து வர கோயில் உள் சந்நிதிக்கு வரச் சொல்லுகிறார்.

2. லோக சாரங்கர் வீடு சென்றதும் இரவில் கனவில் வந்த அரங்கன் திருப்பாணாழ்வாரை சுமந்து கொண்டு மறுநாள் கோயிலுக்கு வரச்சொல்லுகிறார். இது ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சியாகும். ஏனெனில், ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தை பாசறையாக் கொண்டு ஒரு பெரிய சமூகப்புரட்சிக்கு வேறிட்டனர். ஒன்று, "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை" என்ற முழக்கம். இரண்டாவது, தமிழ் என்பது "நீச பாஷை" அல்ல, அது வேதம் சொல்லத்தக்க செம்மொழி என நிறுவுவது (வேறொரு வகையில் பார்த்தால் தாய் மொழியில்தான் அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை முழக்கம்). திருப்பாணாழ்வாருக்கு நிகழ்ந்த இழி செயல் தொண்டரடிப்பொடியாழ்வார் என்ற "அந்தணரை" எப்படிப் பாதித்து இருக்கிறது என்பதைப் பாருங்கள்:

பழுதிலா வொழுகலாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழி குலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தோழுமின், கொடுமின், கொள்மின்!
என்று நின்னொடு மொக்க
வழிபட வருளினாய் போன்ம்
மதிள் திருவரங்கத்தானே!

அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!


எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! அங்கு சாதியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.

இக்கவிதை வரிகளை அப்படியே செயல்படுத்திய மற்றோர் உத்தம வீரர் ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1017). பஞ்சமர்கள் என்று எந்த சாதியிலும் அடங்காத அப்பாவி மக்களை "திருக்குலத்தோர்" என்றாக்கி, அவர்களை "முதல் தீர்த்தக்காரர்" களாக்கியது இராமானுஜ மாமுனி! இவர் மனித நேயம் இந்தியர்களையும் கடந்து துருக்கிய பெண்ணை தத்து எடுக்க வைத்து அவளையும் அடியார் கோஷ்டியில் சேர்த்தது (துருக்க நாஞ்சியார்). இவருக்கு மிகவும் அபிமான ஆழ்வார்கள் திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும். இவருக்கு "ஆண்டாள் ஜீயர்" என்ற பெயரும் உண்டு. இவர் காலத்தில்தான், நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் ஆண்டவன் மொழியாகி, முதல்வனுக்கு முன் செல்லும் மொழி ஆயிற்று. (இராமாநுஜரை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்கள்: இந்திரா பார்த்தசாரதி -இராமாநுஜர் நாடகம்; சாண்டில்யன் - மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்). இந்த மாமனிதனை சமூகம் காண்பது "பார்ப்பனர்" என்றுதான்!

கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ அறிஞரும், தருக்க நெறியாளரும், கவிஞருமான வேதாந்த தேசிகர் திருப்பாணாழ்வார் செய்வித்த பத்து பாசுரங்களுக்கு உரை எழுதியுள்ளார். (எல்லோரையும் விட்டு இவருக்கு உரை எழுதியது கருத்தில் கொள்ள வேண்டியது). பக்தி இயக்கத்தின் மேன்மையையும், திருமாலுக்கு அடிமை செய்யும் அடியார்களிடையே சாதீயம் கிடையாது என்பதை தொண்டரடிப்பொடி இப்படிச் சொல்லுகிறார்:

அடிமையிற் குடிமையில்லா
அயல் சதிப் பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய் கழற் கன்பு சேய்யும்
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகருளானே!


ஆழ்வார்களின் வழி சமதர்மம், சமநீதி, மானுட மேன்மை, மனித நேயம். இதற்கு அடிப்படைத் தேவை மானிடர்பால் அன்பு. அன்பு..அதுதான் இவ்வியக்கத்தின் அடிநாதம்!!

Date: Sun, 21 Sep 1997 19:47:53 +0000

மடல் 010: என் அமுதினைக் கண்ட கண்கள்

பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை. அழகுணர்ச்சி. வாழ்வை ரசிப்பதற்கு கண்ணனைக் கருத்தாகக் கொள்கின்றனர்,

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண் தோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.


நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி (73)

அதாவது கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும், மருவிலும், தேனிலும், தேன் சிட்டிலும், மண்ணிலும், மனிதருள்ளும் அகப்பொருளாய் (ஆந்தர்யாமியாக) அவன் இருக்கிறான்.

இந்த நோக்கின் பின்னால் கூர்ந்து கவனித்தால் பெரும் புரட்சிக்கான மனோதிடம் ஔ¢ந்து இருப்பதைக் காணலாம். அதாவது, திருப்பாணாழ்வாரை இழிசனம் என்று சாதீயம் ஒதுக்கியது. அவர் மனம் தளரவில்லை. மாசு நிறைந்த மானிடர் மேல் காதல் செய்வதற்குப் பதில் அவர் தன் காதலை மானிடர்க்கும் முதலான கண்ணனிடம் திருப்பினார். ஒன்றில்லாவிடில் மற்றொன்று! குறை ஒன்றும் இல்லை. மனம் தளர்ந்து விடுவதில்லை. இது முக்கியம்.

ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.இந்த இரண்டு புரட்சிகரமான போக்குகளுக்கும் அரங்கனின் ஆசி கிடைக்கிறது! அதுதான் இதில் விசேஷம்! அத்தனை ஆழ்வார்களிலும் இந்த இரண்டு புரட்சிவாதிகளும்தான் அரங்கனுடன் சங்கமித்தவர்கள். இதில் உள்ள நயம் உங்களுக்குப் புரிகிறதா?

திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தான் செய்வித்தார். புலவர் வழக்கபடி பத்துப் பாடல் பாடிவிட்டு, பல ஸ்துதி என்று கடைசியாக ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதில் பாடியவர் பெயர், பாட்டினால் வரும் நன்மை சொல்லப்படும். திருப்பாணாழ்வார் இம்மரபை கை விடுகிறார். முத்துப் போல் பத்துப்பாடல்களில் கண்ணன் மேல் காதல் கொண்டு அடி முதல் முடி வரை பாடி விட்டு, மெய் மறந்து, பாடியவரே இல்லாமல் செய்து விடுகிறார். இது காதலின் உயர் நிலை! காதல் "செய்பவர்" என்பது கூட இல்லாமல் வெறும் காதலே காட்சியாக நிற்பது!!

அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள ரங்கத்தம்மான் திருக்
கமல பாதம், வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே(1)

கண்ணனை விளிக்க எத்தனை சொற்களை பாவிக்கிறார் பாருங்கள்: அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர் கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், ..இப்படி. கண்ணதாசன் சொல்லுவானே," ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே" என்று. அது போன்ற ஒரு நிலை. நீதி வானவன் என்ற பதத்திலிருந்து அவருக்கு இழைக்கப் பட்ட பிழைக்கு நீதி வழங்கப்பட்டது எனத் தெரிகிறது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே (9)

ஆலை இலைக் கண்ணன் உருவகம் பாருங்கள்! உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும்உண்டான்) பாலகனாய் சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கணணன் ஊழிக் கூத்தின் கடைசியில்! பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. கள்ளமற்ற குழந்தையாக காண்பிப்பது, உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்ட. இதையே கவி கம்பன்,

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.


என்பார். இப்படி சக்தி வாய்ந்த இவனது அழகிற்கு ஓர் முடிவு உண்டோ? "முடிவில்லதோர் எழில் நீலமேனி" என்கிறார். முர்ச்சையாகும் நிலை. வார்த்தை வரவில்லை. கவிஞர் தடுமாறுகிறார். ஐயோ!என் நெஞ்சு நிறை கொண்டதே என முடித்து விடுகிறார். அவருக்கு அப்போதிருந்த அருள் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!ஆழ்வார்கள் அழகின் ரசிகர்கள். அழகை அழகுக்காகவே ரசித்தார்கள். இதன் முத்தாரமாய் விழுகிறது பத்தாவது பாடல்:

கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!(10)


ஆழ்வாரின் அருள் அனுபவம் அவர் நாவிலிருந்து பாலாய், தமிழாய், பரம கவிகளின் இசையாய் பீரிட்டுக் கொண்டு பாய்கிறது இப்பாசுரத்தில்! அழகு, இனிமை, இறைமை இவை சேர்ந்த கலப்பில் பாணரின் பாடல்கள் படிப்பவரின் உயிரை உருக்குவதாய் உள்ளன.

Date: Tue, 23 Sep 1997 19:02:49 +0000

மடல் 011: வேதம் தமிழ் செய்த மாறன்

தமிழ் மிகத் தொன்மையான மொழியாக உலகில் நிற்கின்றது. கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே..போன்ற அரசியல் வசனங்கள் மிகைப்படுத்தி மொழியை ஒரு வழிபடும் கருத்தாக கொண்டு சென்றாலும், உண்மையில் இம்மொழி தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றது.

இவ்வரசியல் வழிபடும் கலாச்சாரத்தில் வெறுப்புற்று இம்மொழியின் தொன்மை மீது சந்தேகம் கொண்டு மதுரைப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. ஆட்டங்களும், பாட்டங்களும், துதிகளும், தோத்திரங்களுக்குமிடையே சில நல்ல ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. அதிலொன்று முனைவர் ஐராவதம் மஹாதேவனின் கட்டுரை. இது தமிழ் மொழியை சிந்து சமவெளி நாகரீக மொழி என்று பல சான்றுகளுடன் சொன்னது. இக்கருத்தை முன்னுமே கா.நா.சுப்பிரமணியன் எழுதிய மாதவி என்ற புதினத்தில் வாசித்து இருக்கிறேன். அது ஆய்வு பூர்வமாக மதுரையில் கிடைத்தது. இதன் பின் பல, ஐரோப்பிய, அமெரிக்க ஆய்வுகள் இக்கூற்று உண்மையென நிறுவின. இதில் பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பார்ப்போலாவின் ஆய்வு முக்கியம் (Deciphering the Indus Script - Asko Parpola, Cambridge University Press. pp.374, $95). சமிஸ்கிருதம்தான் இந்திய மொழிகளில் மூத்த மொழி என்ற கருத்து மாறிவருகிறது. தமிழை Proto Indo European மொழி என்றுதான் பெரும்பாலான மொழியியலார் நம்புகின்றனர்.

இத்தொன்மையான மொழி சமிஸ்கிருதத்தில் தாக்கம் ஏற்படுத்துவது இயல்பானதே. பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி தமிழ் பீடம்) காளிதாசனின் காப்பியங்கள் சங்க மரபை ஒத்து இருக்கின்றன என்று சொல்வதில் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.

இத்தொன்மையான இந்திய மொழிகளுக்கிடையே எவ்வளவு கொடுக்கல்-வாங்கல் இருந்தனவோ, அந்த அளவுக்கு போட்டியும் இருந்திருக்கிறது. இப்போட்டியில் ஆர்யம் (இச்சொல் இங்கு உயர்வு கருதி - உயர் தனிச் செம்மொழி-சொல்லப்படுகிறது. இன அடிப்படையில் அல்ல), ஒரு மிக சமார்த்தியமான காரியம் செய்கிறது. அதாவது ஆர்யம் கோயில் மொழி ஆகிறது.

இதில் பாரிய லாபம் இருக்கிறது. சமய உணர்வு என்பது மிக, மிக தொன்மையான மனித உணர்வு. சமீபத்திய பரிணாமவியல் ஆய்வுகள் சமய உணர்வு மனித பரிணாமத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்புகின்றனர் (Appraising Grace - What evolutionary good is god? by Daniel C.Dennet, pp.39-44, The Sciences, Jan/Feb 1997). இப்படி இருக்கையில் மொழியை சமயத்துடன் சேர்த்து வைப்பது மொழியின் இருப்பிற்கும் (survival) அதன் பெருமைக்கும் வழி வகுக்கும்.

வேதங்கள் சமிஸ்கிருதத்தில் இருக்கின்றன. மிகத்தொன்மையான சமிஸ்கிருததில் உள்ள இம்மறைகள் இன்றளவும் தப்பிதம் இல்லாமல் சொல்லப்படும் வகையில் மிக நேர்த்தியான பாட முறைகளை அமைத்து எவ்வித மாற்றமும் இல்லாமல் சொல்லப்பட்டு வருகின்றன. வேதம் வாழுமளவு சமிஸ்கிருதமும் இருக்கும். இப்படி நிலை பெற்றுப் போன ஒரு ஆழமான சம்பிரதாயத்தை மாற்றி, தமிழை தேவ பாஷையாக செய்விப்பது என்பது மலையைப் பெயர்ப்பதற்கு ஒப்பான செயலாகும். ஆனால் அதைச் செய்திருக்கின்றனர், ஆழ்வார்கள்!

ஆழ்வார்கள் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட உன்னத தமிழர்கள். இவர்கள் பல குலங்களிலிருந்து வந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் தமிழின் மீது ஆறாக்காதல் இருந்திருப்பதை அவர்கள் செய்வித்த பாசுரங்களில் காணலாம். இவர்கள் அன்று இப்பெரும் முயற்சி எடுக்கவில்லையெனில் இன்று மெல்லத் தமிழ் செத்திருக்கும்.

பாசுரங்கள் தெய்வப்பாடல்கள். முழுக்க, முழுக்க இறைத்தத்துவமும், அழகியலும், கவித்துவமும் கொண்டவை. அதாவது பண்டைய பாஞ்சராத்திர ஆகமங்களெல்லாம் தமிழ் நாட்டில் உருவானாலும் அவை உயர்வு கருதி சமிஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.

இம்முறையை பின் பற்றி ஆழ்வார்களாலும் அத்தனை பாசுரங்களையும் சமிஸ்கிருதத்தில் செய்வித்து இருக்க முடியும். சமிஸ்கிரத புலவரான திருமழிசை ஆழ்வார்

...விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகக் கலந்து.


என்று எழுதக்காரணமென்ன? ஏன் ஆழ்வார்கள் பாசுரங்களை தமிழில் செய்தனர்?

இதற்கு ஆன்மீக காரணங்களைவிட சமூக காரணங்களே முக்கியம் என்று தெரிகின்றது. முதலில் ஆழ்வார்கள் பகவத் அனுபவத்தில் (இறை அநுபூதியில்) லயித்து மட்டும் இருப்பவர்களானால் கவிதையே எழுதவேண்டிய அவசியமில்லை. அப்படியே கவிதை செய்தாலும் அதை தமிழில் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஆழ்வார்களால் மொழி என்ற எண்ணத்தின் குறியீடு தோன்றும் தோற்றுவாய்க்கு முன்னமே நின்று நிலைத்து விட முடியும் என்று தெரிகிறது. நம்மாழ்வார் பிறந்து 16 வயதுவரை வாயே திறவாமல் யோகத்தில் மவுனித்து இருந்ததாக குரு பரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் தன் தெய்வீக அனுபவங்களைத் தமிழில் தரவேண்டும்?

பாசுரங்களை நாமெல்லோரும் ஆய்வு செய்யும் வண்ணம் அவைகளை மீட்டுத்தந்த நாதமுனி, மாறன் சடகோபன் (நம்மாழ்வார்) பற்றி இப்படி எழுதுகிறார்:

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு, எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார், எம்மை
ஆள்வார் அவரே சரண்


எவ்வளவு ஆசையும் அன்பும் வார்த்தையில் விழுகின்றன பாருங்கள்! நம்மாழ்வாரை குருகூர் ஏறு (சிங்கம்) என்கிறார். "ஆழ்வார்கள் எம்மை ஆள்பவர்களே" என்ற கலைஞரின் வசனமும் முன்பே சொல்லப் பட்டு இருப்பதைக் காண்க.

கவிச்சக்கிரவர்த்தி கம்பன், நம்மாழ்வார் என்ற மாத்திரத்தில் ஆரிய வேதம் சொல்லும் அந்தணர்கள் தங்கள் கரங்களை தலைமேல் வைப்பர் என்பதை:

படி எடுத்துக் கொண்ட மாறன் என்றாம் பதுமக்கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர்......


(சடகோபர் அந்தாதி 34)

என்கிறார். சமிஸ்கிருத மொழி வல்லுனரான வேதாந்த தேசிகர்:

"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" ...


என்கிறார். பாருங்கள் தேசிகர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டுக்குள் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடுகின்றனர் ஆழ்வார்கள். ஆரிய வேதங்களுக்கு பொருள் தேட திராவிட வேதத்திலிருந்து சான்றுகள் எடுக்குமாறு!

இதைத் தமிழின் மறுமலர்ச்சி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

கடைசியாக ஒரு சுவையான செய்தி கூடல் (மதுரை) புராணம் என்ற நூலில் கிடைக்கின்றது.

அண்ட கோளத்தாரென்ற ஆரியத்தமிழாலன்று
தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்...

தமிழ் என்ற வார்த்தைதான் திராவிடம் என்றாகிறது. ஆரியம் என்பது உயர்வு கருதி சமிஸ்கிருதத்திற்கு சொல்லப் படுகிறது. இப்பாடல் "ஆரியத் தமிழ்" என்றொரு பிரயோகத்தைப் போடுகிறது!!

தனித் தமிழ் இயக்கத்திற்கு தலையிடி கொடுக்கும் வார்த்தை போல் அல்லவோ தெரிகிறது இது ;-)

Date: Sun, 05 Oct 1997 11:25:12 +0100

மடல் 012: இதத்தாய் இராமானுசன்!

வேதங்களை காட்டிற்கு உவமை கூறும் ஒரு பழக்கம் உள்ளது. "வேதாரண்யம்" என்ற பெயர் அப்படித்தான் தோன்றுகிறது. காடு என்றால் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும். வாசனை பூச்செடிகள் இருக்கும். உயிர் காக்கும் மூலிகைகள் இருக்கும், முட் புதர்களும் இருக்கும்.
காடு இப்படி எதிர் மறையான உணர்வுகளைத் தோற்றுவிக்க கூடியது. ஆச்சர்யம்/பயம் கலந்த உணர்வுகள்.வேதங்களை தன்னிச்சையாக மனிதன் இயற்கையுடன் ஒன்றிய தருணங்களில் கிடைத்த உண்மைத் தரிசனங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேதத்தின் அடிநாதம், மனிதன் தொடங்கி உலகத்தின் அத்தனை நிகழ்வுகளுக்கும் ஓர் காரணியைக் காட்டுவதுதான். சாராம்சத்தில் வேதம் மனிதனை ஒருவருடன் ஒருவர் இணைப்பதுடன், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள ஆழ்ந்த தொடர்பை மீட்பித்து அவனை மகிழ்வாக வாழ வைக்கும் நோக்குடன்தான் எழுதி வைக்கப்பட்டது.

பயனுள்ள எதையும் மனிதன் கடைசிச் சொட்டுவரை சுவைத்து முடித்து விடுவதுதான் இதுவரை வழக்கமாய் உள்ளது. ஆயிரம் உதாரணங்கள் தரலாம். வேதத்தின் அடிப் பயனை தெரிந்து கொண்ட மனிதன் அதை அதீதமாக பயன்படுத்த, வேதம் வழிகாட்டலை விட்டு வழிபடும் பொருளாகிப்போகிறது. வழிபடுவதற்கு சடங்குகள் தேவை. ஒரு நிலையில் வேதம் மறைந்து சடங்குகள் மட்டும் நிற்கும் நிலை வந்தது. வேதம் வியாபாரம் ஆகிப் போனது. வேத வியாபாரிகள் நல்ல வாழ்வு கொண்டனர்.

இப்படி இந்திய சிந்தனை ஓட்டமும், தத்துவத் தேடலும் அற்று உறைந்து நின்ற காலத்தில் தோன்றினான் சித்தார்த்த கெளதமன் என்ற புத்தபிரான். இப்படி சடங்குகள் நிரம்பி நின்ற வேதபாராயணம் வேண்டுமா என்ற புரட்சிகர கேள்வியை முன் வைத்தான். உண்மையை வேறு வழிகளில் கண்டுகொள்ள முடியாதா என்று ஆராய்ந்து புது வழி சொன்னான். வழி வழியாக சமயத் தத்துவ விசாரணைகள் ஆரியத்தில் (சமிஸ்கிரதம்) எழுதப்பட்டு வந்த போது, மக்கள் மொழிகளில் தன் போதனைகளை எழுதிவைத்தான் புத்தன். ஆரிய மாயையை முதலில் உடைத்தவன் அவன். இவன் கற்பித்த வழிமுறை இந்தியா தாண்டி எங்கெங்கோ (ஜப்பான், சீனா...) போனது சரித்திரம்.

புத்தன் "கடவுள்" என்ற கருத்தைப் பற்றி ஆழ்ந்த மவுனம் சாதித்து இருந்த போதும், அவனே கடவுளாக்கப் பட்டான் கால ஓட்டத்தில்! மரியாதை கருதி இந்தியர்கள் செய்யும் இக்காரியத்தில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்ன பெரியாரை ஒரு வழிபடு பொருளாக மாற்றி வைத்திருக்கும் தமிழகத்தைப் பார்த்தால் அவரது அடிப்படை போதனைகளே கேள்விக்குறியாக ஆகிவிடுவது இச்செயலின் தீமை! இப்படித்தான் புத்தன் கதையும் ஆனது. புத்தம் அதன் சீர்மை கெட்டு, போதனைகள் வலுவிழந்த காலக்கட்டதில் இந்திய தத்துவ விசாரணைக்கு உரம் கொடுக்க தோன்றினான் சங்கரன் (ஆதி சங்கரர்).

புத்தரின் மீது உள்ளார்த்தமாக ஆழ்ந்த பக்தி செய்தவன் சங்கரன். பெளத்தம் விட்டுச் சென்ற இடிபாடுகளிலிருந்து ஒரு மாபெரும் மாளிகையை உருவாக்குகிறான் சங்கரன். ஒன்றிலிருந்து ஒன்று என்று இந்திய சிந்தனைகளுக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. சங்கரனின் அத்துவைத (இரண்டு இல்லை) தத்துவம் பெளத்த கருத்துக்களை உள்வாங்கி எழும்புகிறது. இதனால்தான் சங்கரனுக்கு "பிரசன்ன புத்தன்" (புத்தன் வேறு போர்வையில்) என்றொரு பட்டப் பெயர் உண்டு. ஆனால் சங்கரன் உருவாக்கிய சனாதன மதம் பண்டைய இந்திய மதங்களை ஒன்று சேர்ப்பதாக அமைகிறது. வங்காளத்தில் புழங்கிய காளி பூஜை, ஒரிசாவில் பிரபலமாயிருந்த ஞாயிறு வழிபாடு, மராட்டிய தேசத்து கணேச பூஜை (தமிழக பிள்ளையார் வழிபாடு ஔவை பிரபலப்படுத்தியது. "பிள்ளையார் எறும்பு" போல் யாருக்கும் தொந்திரவில்லாத சாத்வீகமான வழிபாடு அது. இப்போது சென்னையை பயமுறுத்துவது மராட்டிய வழிமுறை!), திராவிட தேசங்களில் இருந்த முருக, அரி, சிவ வழிபாடுகள் இவைகளை ஒன்று சேர்க்கிறார் சங்கரர். இதை இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழக மரபான ஐந்திணை வழக்கில் முல்லைக்கு கண்ணனும், குறிஞ்சிக்கு வேலனும், மருதத்தில் இந்திரனும், பாலைக்கு கொற்றவையும் (காளி), நெய்தல் தெய்வம் வருணன் என இருக்கிறது. சூரிய, கணேச வழிபாடு பண்டைய தமிழ் மரபில் இல்லை (?).சங்கரன் செய்வித்த சனாதன மதம் பண்டை வேதங்களின் அதிகாரத்தை (authority) ஏற்றுக் கொள்கிறது.சடங்குகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் வேதம் ஓதுதல் அந்தணர்களின் கடன் என்ற நிலையை மீட்டுக் கொடுக்கிறது. வேதமும், அதன் புரிதல்களும் மீண்டும் மேட்டுக்குடிக்கே போய்ச் சேர்ந்து விடுகிறது. சங்கரன் திராவிட கலாச்சாரத்தில் தோன்றினாலும் (மலையாள தேசங்களில் அரச மொழியாக தமிழ் இருந்தபோதும்), அவனுக்கு திராவிட/தமிழ் இலக்கியங்களில், அதன் மரபில் பரிச்சயமில்லை (தமிழ் நாட்டில் பிறந்து இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் மேட்டுக்குடி தமிழர்கள் போல்). அவன் செய்வித்த நூல்கள் அத்தனையும் உயர் ஆரியத்தில் நின்று போயின. "காலடி" மண்ணின் மொழியாகிய மலையாளம் நீச்ச பாஷையாக அவனுக்கு போய்விட்டது. எனவே சங்கரன் செய்வித்த மதமும் ஆரிய மதமாகவே போய்விட்டது.

இந்நிலையில் தோன்றுகிறான் ஸ்ரீபெரும்புதூரில் ஓர் தமிழன். தமிழ் மரபில் கல்வி கற்கிறான். ஈரப் பாசுரங்கள் நாலாயிரத்தையும் ஆழ்ந்து கற்கிறான். ஆழ்வார்கள் கண்ட இறை தரிசனங்களை அவர்கள் வழியில் பார்க்கிறான். இவனுக்கு தமிழ் நீச்ச பாஷையாகத் தோன்றவில்லை. தேவ பாஷையாகத் தெரிகிறது. மாறன் செய்வித்த தமிழ் இவனுக்கு அமுது. இவன் தமிழகத்தில் ஒரு சமய/சமூக புரட்சிக்கு வித்திடுகிறான், நம்மாழ்வாரின் நூற்றாண்டு அறைகூவலின் எதிரொலிபோல்:

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொண்மின்;
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோம்


(நம்மாழ்வார் திருவாய்மொழி )

இங்கு கடல்வண்ணன் பூதங்கள் என்று சொல்வது வைணவ அடியார்களை! இப்பூதங்களின் பெரும்பூதம் ஸ்ரீபெரும்புதூர் பூதம் ;-)

எனவேதான் இராமானுசர், சங்கரர் செய்வித்த அத்துவைத்திற்கு மாற்று வைக்க வேண்டி வந்தது. அடிப்படையில் இறைமை ஒன்று என்று சொல்லும் அத்துவைத கருத்துக்கள் அனைத்தும் மேட்டுக்குடியில் தங்கிவிட சாதி வேறுபாடுகள் அப்படியே நின்று இருந்தன சங்கருக்குப் பிறகும்! இராமானுசருக்கு இது பெரிய புதிராக படுகிறது. உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை (வார்த்தையைப் பாருங்கள் - "தின்னும்" என்ற colloquial usage) எல்லாம் கண்ணனாக இருக்கிற பட்சத்தில் சாதி எங்கிருந்து வரும்? சாதி என்ற பொய்மையை எதிர்க்கிறார் இராமானுசர். தனது ஆத்மார்த்த குருவான திருகச்சிநம்பி (வைசியர்) க்கு உணவிடவில்லை தன் சனாதன பத்தினி என்ற காரணத்திற்காக இல்வாழ்வைத் துறக்கிறார் இராமானுசர் (நம்மில் யாருக்கு வரும் இந்த தைர்யம்?).

வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை,
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோதில் இன் கனியை, நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுதேத்தும்.....


(பெரிய திருமொழி-திருமங்கை)

வண்ணம் வழி செய்கிறார். ஆழ்வார்கள் செய்வித்த தமிழ் வேதத்தை திருமால் கோயில்களில் வழிபாட்டு முறையாக்கி, தமிழை இறை மொழி ஆக்கி, தமிழ் வேதம் அத்தனை சாதிகளுக்கும் பொது என்றொரு புதுச் சட்டத்தை கொண்டு வருகிறார். இது சரியான புரட்சிக் குரல். சைவ மரபில் சித்தர்களுக்குத்தான் அந்தத் தைர்யம் இருந்தது.

இராமானுசர் திருவரங்கத்தில் இராமகாதை சொல்லிக் கொண்டு வருகிறார். விபீஷணன் சரண்புகும் கட்டம். இவன் எதிர் கட்சியைச் சேர்ந்தவன். ஆயிரம் கேள்விகள், விசாரணைகள் (சேர்த்துக் கொள்வதா? நம்புவதா? இது போன்ற கேள்விகள்). இந்தக்கட்டத்தில் இராமானுசரின் சீடரொருவர் (இராமானுசருக்கு பெரிய சீடர் கோஷ்டி உண்டு, அதில் பல குலத்தவர் உண்டு) பயம் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். இராமானுசர் இதை கவனித்து விட்டு, உரையை நிறுத்திவிட்டு, ஏன் கிளம்பிவிட்டீர் என்கிறார்? சீடர் கண்களில் நீர் பொங்க, சரண் என்று ஒருவன் தனது குலம், மக்கள் அனைத்தையும் விட்டு கை வணங்கி நிற்கும் நிலையில் இத்தனை கேள்விகளா? என்னால் இங்கு இனி இருக்க முடியாது என்கிறார். இராமானுசர் உணர்ச்சி மேலிட தம்பி, அது இராமன் சபை! இது இராமானுசன் சபை! இங்கு கேள்விகள் கிடையாது! எல்லோரும் ஓர் நிறை. நீர் இரும்! என்று. இந்த அன்பு உள்ளத்தை கீழ்வரும் பாடல் (பட்டர் தனியன்) மிக அருமையாக வருணிக்கிறது:

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!


[இராமானுசன் நம் தாய்! பரிவினால் எப்படி விழுகின்றன வார்த்தைகள், பாருங்கள் அன்பர்களே!]

இராமானுசரின் இந்த புரட்சிகர போக்கு அவருக்கு பல இல்லல்களைத் தந்திருக்கிறது. இராமானுசரை இருமுறை கொல்ல சதி நடந்து இருக்கிறது. இராமானுசர் பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சோழ மன்னன் அவரை நாடு கடத்தி இருக்கிறான்.

இக்கட்டுரையின் முக்கிய நோக்கு, சமயம் என்பது ஏதோ கண்ணை மூடிக் கொண்டு தியானித்து இருப்பது அல்ல, அது சமூக பிரக்ஞையுள்ள ஒரு இயக்கம் என்று சொல்லத்தான். சமயம் பல்வேறு சமயங்களில் சமூகத்தின் சவால்களை எதிர்கொண்டு இயைந்து செயல்பட்டு இருக்கிறது. வேதம் காடு என்றேன். காட்டில் வளரும் முட்செடிகள் போல்தான் சமயத்துடன் உடன்வாழும் மூடநம்பிக்கைகள். பாரதி சொல்வது போல், "திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே" என்பது போல் இம்மூடநம்பிக்கை என்ற புதர்களில் சிக்கி உண்மையை கண்டு கொள்ளாமல் தவிக்கும் லட்சோப லட்சம் மக்கள் உண்டு. கையில், வாளுடன், நெஞ்சில் ஆர்வமுடன் செல்லும் போது இப்புதர்கள் அழிந்து போகின்றன.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்


(சுப்பிரமணிய பாரதி)

Date: Sat, 18 Oct 1997 18:22:52 +0100

மடல் 013 - பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்

அன்பர் ஒருவர் எழுப்பிய கேள்விகள் சிலவற்றிற்கு பதில் சொல்லும் கடமை உள்ளேன். அவர் இரண்டு முக்கியமான கேள்விகளை முன் வைக்கிறார். சமயப்புரட்சி என்ற வார்த்தை அவசியம்தானா? இரண்டு, மெய்ஞானத்தையும் mundane மொழி பிரச்சனையையும் சேர்த்து குழப்ப வேண்டுமா என்று?

இரண்டாவதில் ஆரம்பித்து முதலுக்கு வருகிறேன். பாசுர மடல் இதுவரை மெய்ஞான தத்துவங்களைத் தொடவில்லை. ஒருமாதிரி சமய வரலாற்றைத்தான் சொல்லி வருகிறது. வரலாறு என்னும் போது சமூகப்பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நான் சங்கரரின் அத்வைதத்தை விளக்கவில்லை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக விழுமியங்களைத்தான் (social values) சொன்னேன். மேலும் அக்கட்டுரையில் சொன்ன மாதிரி மெய் ஞானிகளும் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். புத்தன் செய்தது, சங்கரன் செய்தது, இராமானுசர் செய்தது இவையெல்லாம் அவ்வகை எதிர்கொள்ளலே. அது அவர்களின் சமூகக்கடமையும் கூட. அவர்களின் மெய்ஞானக்கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் முன்னமே சொல்லப்பட்டதுதான் என்கிறார். மறுக்கவில்லை. அதைத்தான் காலத்தின் தேவை அறிந்து அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். வரலாறு என்று பார்த்தால் இது புரியும்.

முதல் கேள்வி, ஏன் மதப் புரட்சி என்று சொல்லவேண்டும்? மெய்ஞானமும், மூட நம்பிக்கைகளும் நெல்லும், பதரும் போல சேர்ந்தே வளர்ந்து இருக்கின்றன. அவ்வப்போது களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. உளவியல் கண்ணேட்டத்தில் பார்த்தால் மனது எந்த மாற்றத்தையும் உடனே ஒத்துக் கொள்வதில்லை. மாற்றங்கள் சமூகத்தை பாதிக்கும் போது புரட்சி என்ற பெயர் பெருகிறது. இராமானுசர் செய்தது புரட்சிதான் - வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால். ஜே.கிருஷ்ணமூர்த்தி செய்தது புரட்சிதான். இந்த மனிதர்களின் சிந்தனைகள் பல லட்சக்கணக்கான மனதை தொட்டு மாற்றத்தைக் கொண்டு வரும் பொது ஒரு புரட்சி அங்கு தெரிகிறது.

பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை _தமிழ் மொழியில்_ நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம். சமிஸ்கிருதம் இந்திய பண்பாட்டைத்தாங்கி நிற்கும் பண்டைய மொழி. அதன் தாக்கம் பரவலாக எல்லா மொழிகளிலும் இருக்கிறது. தமிழிலும் அது காணக்கிடைக்கிறது. அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் தனக்கென சில விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு தனித்துவம் சொண்டு நிற்கிறது. பாசுர வரலாறு அதைத் தொட்டுச் செல்கிறது.

பாசுர வரலாறு சொல்வதால் என்னை "சுத்த வைணவன்" என்று ஒதுக்காதீர்கள். வைணவம் தமிழுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. தமிழின் இன்றைய செழுமைக்கு வைணவம் பெரும் பங்காற்றி இருக்கிறது. தனிப்பட்ட அளவில் எனக்கு எம்மதமும் சம்மதம்தான். பாசுரம் சொல்லும் போது நான் வைணவனாக இருந்தால்தான் ஆழ்வார்களின் இதயத்தை புரிந்து கொள்ள முடியும். கண்ணன் என்னும் கருத்தில் நம்பிக்கை இல்லாமல், பக்தி என்றால் என்னவென்று தெரியாமல் பாசுரம் சொல்லமுடியாது. அப்படிச் செய்வது பாவமாகும். எனவே பாசுரத்தில் மூழ்கும் பொது நான் வைணவன்தான். அது மூழ்கி இருக்கும் வரைதான் :-)
_________________________________________
சென்ற கட்டுரையில் ஐந்திணைக் கோட்பாட்டைச் சொல்லி பண்டைய தமிழர்கள் எப்படி தெய்வங்களை நிலத்தின் பண்பாக கொண்டனர் என்று பார்த்தோம். தொல்காப்பியர் நான்கு நிலங்களைத்தான் பிரதானமாகச் சொல்கிறார்:

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே


(தொல். அகத். நூற்பா. 5)முல்லைத் தெய்வம் கண்ணன் (மாயோன்); குறிஞ்சித் தலைவன் கந்தன் (சேயோன்); மருதக் கடவுள் இந்திரன் (வேந்தன்); நெய்தற் கடவுள் வருணன் என்று அறியக்கிடைக்கிறது. "தொல்காப்பியர் பாலைக்கு தெய்வமும் வேண்டிற்றிலர்: பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்" என்று நக்கீரர் சொல்கிறார்.

ஐந்தினைக்கடவுளரைச் சொல்லும் போது, "சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்" என்னும் முறைபற்றி "மாயோன் மேய காடுறை உலகம்" எனத்துவங்குகிறார் என்று கொள்ளலாம். முல்லைக் கடவுளாக கண்ணன் நிற்பதால் இவனது கோவில்கள் முதலில் காடும் காடு சார்ந்த பகுதிகளிலுமே இருந்திருக்க வேண்டும். திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் இவைகளை நோக்குங்கால் அது புரியும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நிலங்களிலும் இவன் கோவில்கள் வந்திருக்க வேண்டும். வைணவ திருப்பதிகளின் இரத்தினமான திருவரங்கம் மருத நிலத்தில் நிற்பதே அதன் சான்று.

பக்தி இயக்கத்தின் தோற்றம் பரிபாடலில் தெளிவாய் தெரிகிறது.

தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ
அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ


(பரிபாடல் 3/63-68)சங்கத்தின் தொடர்ச்சிதான் பாசுரங்களும், பக்தி இயக்கமும். இப்பாடல் திருமழிசையின் வாயில் எப்படி வருகிறது பாருங்கள்:

ஊனில் மேய ஆவிநீ: உறக்கமோடுணர்ச்சிநீ
ஆனில் மேய ஐந்தும்நீ: அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ
யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ; இராமனே!

(திருச்சந்தவிருத்தம் 94).பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை தமிழ் மொழியில் நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம்.

Date: Sun, 26 Oct 1997 12:01:59 +0100

மடல் 014: பற்றுடை அடியவர்க்கு எளியவன்

ஆழ்வார்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது. "ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்" என்று திருமூலர் பாடினால், இவர்கள்

கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தார் போலப்
புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு, என்னை
வாட்டம் தனியே வீசீரே


(ஆண்டாள்) என்று இருப்பார்கள். அதாவது ஆழ்வார்களுக்கு கண்ணன் ஒரு அனுபவம். வெறும் கருத்து அல்ல. கண்ணனை அனுபவித்தல் ஆழ்வார்கள் பாசுரங்கள் முழுவதிலும் விரவிக் கிடக்கும்.

இருமலைபோல் எதிர்ந்தமல்லர்
இருவர் அங்கம் எரிசெய்தாய்! உன்
திருமலிந்து திகழும்மார்பு
தேக்கவந்தென் அல்குலேறி
ஒருமுலையை வாய்மடுத்து
ஒருமுலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையாய்
ஏங்கி ஏங்கி இருந்துணாயே


(பெரியாழ்வார் திருமொழி -2/8)

என்ன வர்ணனை பாருங்கள். ஒரு பெண், தன் குழந்தையுடன் அனுபவிக்கும் மிக பிரத்தியேகமான தன்னிலை அனுபவங்கள். சொல்வது பட்டர்பிரான்! தாயாக மாறினால் ஒழிய இது சாத்தியப்படாது. இப்படித்தான் ஆழ்வார்கள் கண்ணனை/வாழ்வை அனுபவித்து இருக்கிறார்கள்.இதமான நெஞ்சம் கொண்ட பேயாழ்வார் இராமனை அதிகம் பாடவில்லை. தேவியைப் பிரிந்து நிற்கும் ஒரு அவதாரம். பெருமாள் மனது எப்படி பாடுபட்டு இருக்கும் என்று அவரை நினைத்து இவரால் அவரைப் பாட முடியவில்லை! அதுதான் ஆழ்வார் மனநிலை!

இன்னொரு சுவாரசியமான விஷயம். கண்ணனின் லீலைகள் பலவற்றைப்பாடிய பாசுரத்தில் கண்ணனின் கீதோபதேசம் பற்றி ஒரு குறிப்புக் கூட கிடையாது!

ஆனால் கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பாராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான மதுரகவி எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்...

பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு


என்று சொல்லிக் கொண்டு வந்தவர் அப்படியே மெய்மறந்து இருந்துவிட்டார். அதாவது உலகேழும் ஆளும் தெய்வம். ஒரு சின்னப் பையன் போல் வந்து, யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டு.....இவ்வளவு எளியவானக ஒரு கடவுள் இருக்கமுடியுமா என்று எண்ணி மனமிக மகிழ்ந்து, மெய் மறந்து நிற்கிறார். நமெக்கெல்லாம் இப்படி எப்போதாவது சில நொடிகள் வாய்ப்பதுண்டு. உடனே நிகழ்கால நிகழ்வுகள் அடுத்த விநாடி கீழே கொண்டு வந்துவிடும். ஆனால் நம்மாழ்வார் நிற்கிறார், நிற்கிறார்...ஆறுமாதமாக அடுத்த வரி சொல்லாமல் நிற்கிறார். பாட்டு எழுதிக் கொண்டு இருக்கும் மதுரகவிக்கு எப்படி இருக்கும். இவர் பாட்டுக்கு, சரி அவருக்கு அனுபவம் முடிந்து வரட்டும் என்று இவர் கிளம்பிவிட்டால்? இவர் கிளம்பியபின் அவர் பாடலை முடித்துவிட்டால் அருமையான பாசுரம் போய்விடும்! எனவே இவரும் சளைக்காமல் ஆறு மாதங்கள் பசி, தண்ணி இல்லாமல் கூடவே நின்றாராம். இது என்ன நிலை? இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் ஆழ்வார்கள் சொல்லும் இறை நிலை. கண்ணன் வெறும் கருத்து அல்ல. அவன் ஓர் அனுபவம். ஆறு மாதம் கழித்து அடுத்த வரி இப்படி வருகிறது....

எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!

சேர்த்து பார்த்தால்:

பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு
எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!


(நம்மாழ்வார் திருவாய்மொழி 3/1).

அதாவது கண்ணன் பகவத் கீதை சொல்வதைவிட இவர்களுக்கு கண்ணன் எவ்வளவு காட்சிக்கு எளியவனாக, செளலப்பியனாக இருக்காறான் என்பதை நினைத்து மயங்குவதில்தான் இறை இன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள்.

ஆனால் இவ்வனுபவங்களையெல்லாம் பார்க்கும் போது திருமழிசை மிகவும் வித்தியாசப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம், அவர் வாழ்ந்த வாழ்வு, அவர் பெற்ற அனுபவங்கள் இவையெல்லாம் அவரை மிகவும் வித்தியாசமான ஆழ்வாராகக் காட்டுகின்றன.

Date: Sun, 26 Oct 1997 21:04:13 +0100

மடல் 015: திருமழிசை என்ற அதிசயம்

பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்களுக்குப் பின் வருகிறார் திருமழிசைப் பிரான். இவர் முதல்வர் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்தாக ஒரு கதை உண்டு (காரணம் பின்னால் புரியும்). இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம் திருமழிசையின் பாடலில் பதிவாகிவுள்ளன.

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று


(நான்முகன் திருவந்தாதி 6)

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன்-பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட்டாழ்வார் பலர்.


(நான்முகன் திருவந்தாதி 14)

முதல் மூவரிடம் இருந்த சமயப் பொறுமை இவரிடம் இல்லை.

நரசிம்ம பல்லவனுக்குப்பின் பல்லவ நாட்டை ஆண்டவர்கள், இரண்டான் மகேந்திரன் (கி.பி. 668- 670), முதலாம் பரமேஸ்வரன் (கி.பி. 670-680), இராஜசிம்மன் (கி.பி. 680-720). இவர்கள் அனைவரும் வீர சைவர்கள். சைவ சமய நெறியாளர்கள் அப்பர், சம்மந்தர் வாழ்ந்த காலமும் இதுதான். திருமழிசையோ வீர வைஷ்ணவராக இருந்திருக்கிறார்.

அந்தக்கால "மரியாதைப் படி" இவர் நாடு கடத்தப் பட்டு இருக்கிறார்!

இதைப் பற்றிய சுவையான குரு பரம்பரைக் கதையொன்று உண்டு.

இவருக்கு கணிகண்ணன் என்றொரு சீடன் உண்டு. இவர் நிஷ்டையில் இருந்தபோது ஒரு மாது- அவள் ஒரு காலத்தில் பல்லவனின் "கீப்"பாக இருந்தவள், தன் இளமையெல்லாம் பறிபோய், அரச மரியாதை போய் "அம்போ" என்று இருக்கும் காலையில் திருமழிசையின் தேஜசை பார்த்துவிட்டு இவரை வழிபட்டால் தன் இளமை மீண்டும் கிடைக்காதா என்ற நப்பாசையில் தினமும் இவர் இருக்கும் கோவில் திண்ணையில் கோலம் போட்டு வந்திருக்கிறாள். சீடன் இதைக் கவனித்து, திருமழிசையிடம் சிபாரிசு செய்ய அவரும் இரங்கி இவளுக்கு இளமையை திரும்ப அருளி இருக்கிறார். இவள் உடனே அரசவைக்குப் போய்விட்டாள். அரசனுக்கு பொறாமை. இவளைப் போல் தனக்கும் இளமை வராதாவென்று. அவளும் பெரியவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். சீடனைக் கேட்டால் கூடப் போதுமென்று சொல்ல கணிகண்ணன் மாட்டிக் கொண்டான். கணிகண்ணனுக்கு இந்த சித்து எல்லாம் தெரியாது. நம்மால் முடியாது என்று இவன் சொல்ல அரசன் கடைசியில் ஒரு பாட்டாவது பாடிவிட்டு போ என்று சொல்ல, அதற்கும் கணிகண்ணன் கட்டபொம்மன் போல் நீ என்ன எங்கள் பெருமாளுக்கு திருத்துழாய் பறித்துத்தந்தாயா, சந்தனம் அரைத்துத் தந்தாயா? இல்லை மலர் மாலை கோர்த்துத் தந்தாயா? மாமானா, மச்சானா? எதற்கு பாட வேண்டும் உன்னை? எனக் கேட்க. முதலாம் பரமேஸ்வரன், "அப்ப சரிதான் நடையைக் கட்டு" என்று நாடு கடத்தி விட்டான்.

சீடனைப் பிரிந்து இருக்க முடியாமல் இவரும் நாட்டைவிட்டுப் போய்விட்டார். சும்மா போக வேண்டியதுதானே? பெருமாளையும் "கூட வாரும் ஓய்!" என்று அழைத்துக் கொண்டு போய்விட்டார் . அங்குதான் ஆரம்பிக்கிறது வினை.

Date: Mon, 27 Oct 1997 11:02:34 +0000

மடல் 016: பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!

சீடன் நாடு கடத்தப் பட்டான். குருவும் கிளம்புகிறார். பள்ளிகொண்டு சயனித்து பெருமாள் இருக்கிறார்.திருமழிசை பெருமாளைப் பார்த்து:

கணிகண்ணன் போகின்றான் காமருபூகச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்
உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்


என்கிறார். பாவம் பெருமாளும்தான் என்ன செய்வார்? சரிதான், நடையைக் கட்டும் என்று திருமழிசையுடன் தன் நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார். இவர் கிளம்பியவுடன் இவரது தங்கை தேவியும் கூட கிளம்ப, சிவனும் கிளம்புகிறார். மாமாவோடு மருமானும், மற்றைய தெய்வங்களும் கிளம்ப நாடே வெறிச்சொடிப் போய்விடுகிறது. மழை இல்லை. விளைச்சல் இல்லை. அரசன் ஆடிப்போய் விடுகிறான். தன் தவறை உணர்ந்து இவர்களைத் தேடி வருகிறான். ஓரிரிக்கை கிராமம். அங்கு பெருமாள் தன் பரிவாரங்களோடு செளக்கியமாய் இருக்கிறார்.

அரசன் திருமழிசையிடம் மன்னிப்பு கேட்க, குரு தன் சீடனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல, எல்லாம் ஒருவழியாய் சீர் அமைய பல்லவ நாட்டிற்கே திரும்புகிறார். பெருமாளும் திருவெஃகை கிராமத்திற்கு வந்து நின்று கொண்டே இருக்கிறார். பாயைச் சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்ல வேண்டாமா? திருமழிசை மீண்டும் பாடுகிறார்:

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூகச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்


என்று. அதன் பின் பெருமாள் படுத்துக் கொண்டார். மறந்து போய் திசைமாறி படுத்துக் கொண்டவிட்டதாக கதை. இப்பெருமாளுக்கு "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" என்று அதன் பின் பெயர் வழங்கலாயிற்று.திருமழிசை மற்ற ஆழ்வார்களிலிருந்து மிகவும் வித்தியாசப் படுகிறார். தன் சொந்த அனுபவங்களை பதிவு செய்யாமல் அறிவு பூர்வமாக இறைமையை அணுகுகிறார்.

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே!


(திருச்சந்த விருத்தம் 26)

என்று பாடுகிறார். இவரது சந்தங்கள் இவரை சித்தர்களோடு இனம் காட்டுகிறது. குருபரம்பரைக் கதைகள் இவர் வைணவராக மாறுவதற்கு முன் சிவவாக்கியர் என்ற பெயருடன் இருந்ததாகவும், பேயாழ்வார் இவரை ஆட்கொண்டு வைணவராக மாற்றினார் என்றும் சொல்லுகிறது.

சிவவாக்கியர் எப்படி பாடுகிறார்?

அண்ணலே அனாதியே யனாதிமுன் னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணு சுக்கிலங்கருதியோங்கு நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கனே

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே

அதே சந்தங்கள். அதே முறை. அதே எள்ளல். இவரேதான் அவரு, அவரேதான் இவரோ!

திருமழிசையின் பிறப்பும் மர்மம் நிறைந்தாய் உள்ளது. பார்கவ முனிவர்க்கும், ஊர்வசிக்கும் பிறந்த பிள்ளை இவர் என்று குருபரம்பரை கதைகள் சொன்னாலும் பாவம், மனிதர் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறார். சாதீய கொடுமைகள் இவரை தாக்கிய வரலாறு காணக்கிடைக்கிறது. இவர் சிவ வாக்கியர் என்றால் இப்படி பாடி இருப்பார்:

பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா
இறைச்சி தோலெலும்பினு மிலக்கமிட்டிருக்குமோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே


ஆனால் பாவம் ஸ்ரீவைஷ்ணவரான திருமழிசை இப்படி யெல்லாம் பாடவில்லை. ஆனாலும் இவர் வாழ்வு மர்மம் நிறைந்தாய் உள்ளது. இவர் சிவவாக்கியர் என்பது கட்டுப்பாடற்ற ஊகம் என்று பேராசிரியர். இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார்.

Subject: Date: Mon, 27 Oct 1997 17:18:02 +0000

மடல் 017:வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்

"வியாக்யானம்" என்ற சொல்லை ஆழ்ந்து படித்து, விரிவான விளக்கம் சொல்லுதல் என்று கொள்ளவேண்டும். பாசுரங்கள் மேலோட்டமாக வெறும் கவிதைகள் போல் தெரிந்தாலும் அவை ஆழமான பொருள் கொண்டவை. பல நூல் கற்ற அறிஞர்கள் இப்பாசுரங்களுக்கு கொடுக்கும் விளக்கம் கேட்க மிக அருமையாக இருக்கும். "சும்மா" என்ற சொல்லை வைத்து நண்பர் ஜெயபாரதி எவ்வளவு சொல்லுகிறார். இதுதான் வியாக்கியானம் என்பது. ஒரு சின்ன சொல்லுக்குள் உலகத்தைக் காட்டும் செப்பிடு வித்தை!வியாக்கியானம் வாழ்வுக்கு சுவை கூட்டுவது. ரசனைக்கு விருந்து அது. வைணவ இலக்கியமான பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஆச்சர்யகரமான விளக்கங்கள் தந்துள்ளார். இதில் சமிஸ்கிருத புலமை மேலும் மெருகு கொடுக்கிறது. பல சமயங்களில் ஆவல் மிகக்கொண்டு மணிப்பிரவாளமாக இவ்விளக்கங்கள் அமைந்துவிடும் போது நாம் தடுமாறுகிறோம். எனவே எளிதான விளக்கங்கள் தேவைப் படுகின்றன.

"ஆச்சார்யன்" என்பதை ஆழ்ந்த புலமையுள்ள, மனிதநேயம் மிகக் கொண்ட மனிதர் என்று கொள்ள வேண்டும்.இவர்களிடம் உட்கார்ந்து பாடம் கேட்டால் அவர்கள் நடத்தையின் மூலமும், அவர்கள் அன்பின் மூலமாகவும்,அவர்கள் கற்ற கல்வியின் மூலமாகவும் பாசுரங்களின் உட் பொருள் தெரிய வைப்பர். வைணவ பரம்பரையில் இராமானுச முனி என்பவர் ஆசார்யர்களில் மேரு மலையாக நிற்கிறார். இன்று நாமெல்லோரும் இப்பாசுரங்களை வாசித்து அனுபவிப்பதற்கு இரண்டு பேர் முக்கிய காரணம்.

1. காலத்தால் அழிந்து போன பாசுர நூல்களை நமக்கு கிடைக்கச் செய்த நாத முனி. இவர் உ.வே.சாமிநாதையர் மாதிரி (இவர் யார் என்று கேட்டு விடாதீர்கள்!)

2. தமிழ் வேதமென்ற பெரும் பொருளை நடைமுறைக்கு கொண்டு வந்து வைணவ சம்பிரதாயத்தை நிறுவி பாசுரங்களை திருமால் கொயில்களிலெல்லாம் முழங்க வைத்தவர் இராமானுசமுனி. இதை

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணியும் பரன் தாள் அன்றி எதாரியா
மெய்யன் இராமானுசன் சரணேகதி வேறெனக்கே


(இராமானுச நூற்றந்தாதி 13)

பசுந்துளபம் -துளசி; மறைத்தமிழ் -பாசுரம்; சீரங்கத்தையன் - ஸ்ரீரங்கத்து ஐயன் ஸ்ரீராமானுஜன்என்ற பாடல் மூலம் அறியலாம். இவரது அன்புள்ளம் சரித்திரம் அறிந்தது. அரிய சில இரகசிய கிரந்தங்களை கற்கிறார் இராமானுசர். இவர் ஆச்சார்யன் சொல்லுகிறார், இதை யாருக்கும் பறை சாற்றக்கூடாது. தனக்குள்ளே வைத்து அனுபவிக்க வேண்டுமென்று. அடுத்த நாளே நம்ம இராமானுசர் கோயில் கோபுரத்தில் ஏறி எல்லோருக்கும் சொல்லி விடுகிறார். ஆச்சார்யனுக்கு கோபம். குரு வார்த்தையை மீறினால் நரகம் என்கிறார். அதற்கு நம் இராமானுசர் - வரும் நரகம் எனக்கு இருக்கட்டும். கேட்ட எல்லோருக்கும் சொர்க்கம்தானே என்கிறார். இந்த இரகசிய மந்திரம் என்ன?:

குலந்தரும்; செல்வந் தந்திடும் அடியார்
படுதுயராவின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற
தாயினுமாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


(பெரிய திருமொழி 9 - திருமங்கை ஆழ்வார்)

இப்பாட்டை வரிக்கு, வரி உண்மையென ஆக்கிய பெருமான் இராமானுச முனி (அதை வேறொரு சமயம் பார்ப்போம்).

இம்மாமனிதனிடம் மயங்காத ஆட்களே இல்லை. நம்ம பாரதிதாசன் என்ன சொல்லுகிறார் பாருங்கள்:

முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?......"வேல்ஸ் இளவரசரை வரவேற்று கவி செய்த பாரதி, மாமுனி புரட்சித் திலகம் இராமானுசனைப் பாடாதது பெரும் குறையாகப் படுகிறது

பேராசிரியர். சிற்பி பாலசுப்பிரமணியன் (இடதுசாரி?) வானம்பாடிக் கவி. அவர் இன்று இராமானுச காவியம் இயற்றிக் கொண்டு இருக்கிறார். முற்போக்காளர்கள் எல்லோரையும் - பெரியாரையும் சேர்த்து- கவர்ந்தவர் இராமானுச முனி.இத்தகைய ஆச்சார்யர்கள் நல்ல தமிழ் போல் இப்போது அரிதாகிவிட்டனர் ;-)

Date: Fri, 03 Oct 1997 20:23:45 +0100

மடல் 018: ஆழி மழைக் கண்ணா!

சூடிக் கொடுத்த சுடர் கொடி, பட்டர் பிரான் கோதை, அழகிய ஆண்டாள் - ஆழ்வார்களிலே கடைக்குட்டி! இவளைப் பற்றி கடைசியாக எழுதலாமென நினைத்தேன். ரா.பா ஆரம்பித்தவுடன் I could not resist my temptation. ஏனெனில் ஆண்டாள் is irresistable!! அத்தனை ஆழ்வார்களும் தன்னை நாயகியாக "நினைத்து" புலம்புவதற்கும் ஆண்டாள் தன்னியல்பால் நாயகியாக இருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள தொலைவுதான். அதனால்தான் ஆண்டாள் நம்மை ஆள்பவளாக உள்ளாள். அவள் விரகக் கவிகளை பின்னொரு சமயம் பார்ப்போம்

காம்போதி ராகம் அட தாளம்

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ, கை கரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழவுலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

(திருப்பாவை 4)

பாசுரங்கள் அத்தனைக்கும் பண் உண்டு. ராகங்கள் உண்டு. இப்பாடல் காம்போதி ("கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம் எதுவோ பிரபோ?" - சம்பூர்ண இராமாயணம்) ராகம். எம்.எல்.வி. பாடிய திருப்பாவையோ, இல்லை அவர் சிஷ்யை சுதா ரகுநாதன் பாடிய திருப்பாவையையோ பின்னணியாகப் போட்டுக் கொள்ளுங்கள்!

ஆழி மழைக் கண்ணா! கடலின் மழையாய் உள்ள கண்ணனே, மழைக் கண்ணன். நல்ல பிரயோகம்!"நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் சொல்லிய படி மழை இல்லையேல் உலகம் அம்பேல். மழை உயிர்களின் ஜீவ நாடி. நம் உடலின் 90% வெறும் நீர்தான். அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் கருணைத்தெய்வம். கருணை மழை பொழிபவன் அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் முல்லைத் தெய்வம். முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும். காடுகள் இல்லையேல் மழை இல்லை (sounds very familiar). மழை இல்லையேல் காடுகள் இல்லை. முல்லைத் தெய்வமான கண்ணனைத் தவிர மழையை வேறு யாரிடம் கேட்கமுடியும். அதனால் மழைக் கண்ணா!

வேறு யாரிடம் கேட்க முடியுமா? வருணன் தானே மழைத் தெய்வம்? அப்படி நினைத்துதான் ஆயர்கள் வருணனுக்கு படையல் போட அதை கண்ணன் எடுத்துக் கொண்டான். வருணனுக்கு மகாக்கோபம் (பின்ன இருக்காதா? பந்தியில் உட்கார்ந்து சாப்பாடெல்லாம் போட்ட பிறகு, போய்யா வெளியே..என்றால்?) ஒரே மழையோ, மழை என்று பொழிந்து தள்ளி விட்டான். ஆயர்பாடி வெள்ளத்தில் மூழ்கியது. ஆயர் குலக் கொழுந்து கண்ணனால் அது தாங்க முடியுமா? முடியாது ஏன்? வார்த்தையில் இருக்கிறது இரகசியம். குலக் கொழுந்து! மரம் தண்ணீர் இன்றி வாடினால் முதலில் கருகுவது கொழுந்துதான். கண்ணன் ஆயர்களுக்கு துயர் என்றால் முதலில் வாடுபவனாக இருப்பான். அதான் அவன் அவர்களின் கொழுந்து. கண்ணன் சரிதான் போடா, என்று பக்கத்திலிருந்த கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து விட்டான்!மழை காத்த தெய்வமாதலால் மழைக் கண்ணன். ஆழி மழை கண்ணன் என்கிறாள் ஆண்டாள். இந்த பூமிதோன்றிய ஐந்து பில்லியன் வருடத்தில் முதல் ஒரு பில்லியன் வருடத்தில் பாதி நாள் மழைதான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிர்வித்து (DNAs,Proteins and single cell organisms) தோன்றியிருக்கிறது. இம்மழை இல்லையேல் உலகில் உயிரே தோன்றியிருக்காது. எனவே தான் ஆழி மழைக் கண்ணன்!

ஒன்று நீ! Stop. நீதான் அந்த ஒன்று. ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழலும் அந்த ஒன்று.

ஒன்றுந் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் றன்னொடு தேவர்
உலகோடுயிர் படைத்தான்
குன்றம் போல்மணி மாடம்நீடு
திருக்குருகூரதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் நாடுதிரே


(நம்மாழ்வார் திருவாய் மொழி)

ஆதிப்பிரான். அதனால் ஒன்று நீ!

கைகரவேல் - கைவிட்டு விடாதே அப்பா! கரவு என்றால் ஏமாற்றுதல் என்று ஒரு பொருள். வானம் பாத்த பூமியாய் எங்களை ஏமாற்றி விடாதே அப்பா! மழையைத் தா!

ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

இந்த இரண்டு வரிகளில் ஆண்டாள் தன் அறிவியல் மேதமையைக் கோடி காட்டுகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரைக்கு பக்கம். கொஞ்சம் semi arid area. கரையான் (பாம்பு) புத்துக்கள் அதிகம், கடற்கரை அல்ல. இங்கு உட்கார்ந்து கொண்டு இந்தப் பெண் நீரின் சுழற்சி பற்றி சூழலியல் பாடம் தப்பாமல் சொல்கிறாள். ஆழியில் புகுந்து - அதாவது கடலுக்குப் போய், முகந்து - நீரை வாங்கி; கொடார்த்தேறி - கடலிலிருந்து நிலத்திற்கு கொண்டு வந்து தருகிறதாம் மேகங்கள். எப்படி மழை தருகின்றனவாம்? பராக்கிரமம் உடைய பத்மநாபன் தோளில் இருக்கும் சக்கிரம் மின்னுவது போல் மின்னி (அதாவது மின்னல் அடித்து), வலம்புரிச் சங்கு அதிர்வது போல் - அதாவது பாரத மகா யுத்தத்தில் பாஞ்சசன்னியம் என்ற கண்ணனின் சங்கு ஊதியவுடன் பாதிப் படை அந்த அதிர்வில் செத்து விழுந்ததாம்(super sonic waves)- இடி, இடித்து, சார்ங்கம் என்ற வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல் மழை சாரை, சாரையாக பொழியுமாம். வாவ்...என்ன வர்ணனை. எப்படி இழைக்கிறாள் பாருங்கள் உவமைகளை. ஆண்டாள் வெறும் மூடநம்பிக்கையுடன் கண்ணனை வழிபட்டாள் என்று இருந்திருந்தாள், ஆமாம்,ஏதோ மழை பெய்கிறது! பகவான் வானத்திலிருந்து கொட்டுகிறான் என்று எழுதி விட்டு போயிருப்பாள். இவ்வளவு கச்சிதமாக எந்தப் பிழையுமின்றி ஒரு அறிவியல் உண்மையை பின்னிப் பினைந்து அறிவும் தெய்வமும் ஒன்று (ஒன்று நீ) என்று எடுத்துக் காட்டுவது நம் முன்னோர்களின் (எந்தையும், தாயும் மகிழ்ந்துகுலாவி இருந்ததும் இந்நாடே, இதை வந்தனை கூறி, மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ!) திறம்.

இத்தோடு நின்றால் தேவலை! கண்ணனை "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து" என்று ஒரு உவமை கொடுத்து ஒரு போடு போடுகிறாள். கார் மேகன், கொண்டல் வண்ணன், மேக வண்ணன் என்று மற்ற ஆழ்வார்கள் சொல்வது போல் கரிய நிறமுடைய கண்ணனை உவமை படுத்தி விட்டுப் போகாமல் ஆண்டாள் ஊழி முதல்வன் என்று சொல்வானேன்? ஆண்டாளுக்கு ஊழிக்கு முன்னிருந்த நிலமை பற்றி என்ன தெரியும்? ஊழிக்கு முன் கருமை ஏன் இருக்க வேண்டும்? எல்லோரும் கடவுளை ஜோதி, ளி, சூரியக் கோடிப்பிரகாசன் என்றெல்லாம் சொல்லும் போது இவள் கடவுள் ஊழிக்கு முன்னிருந்த கருமை என்கிறாள்.இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆராதமாக ஒரு கருஞ்குழி (black hole) இருப்பதாக அறிவியல் சொல்கிறது. நம் பால்வெளி (milky way galaxy) அண்டத்தின் அச்சு இப்படியொரு கருங்குழிதான் என்றும் சொல்கிறார்கள். இக்கருங்குழியின் அடர்த்தியோ மகா பெரிது. மெலிதினும் மெலிதான ஒளிக்கீற்று கூட இதைத்தாண்டி போக முடியாத வண்ணம் இவ்வடர்த்தி விழுங்கிவிடுகிறதாம். இவ்வுண்மைகளை ஆய்ந்த பேரா.சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இவரின் மாமா, வானம் ஏன் நீலமாக இருக்கிறது என்று சொல்லி நோபல் பரிசு பெற்றார் (சர்.சி.இராமன்). இவர் ஆழ்வார்களைப் படித்தாரா என்று தெரியவில்லை. கண்ணன் நீல வண்ணன். வானம் நீலமாக இல்லாமல் பின் எப்படி இருக்கும்?இக்கருஞ்குழியில் விழும் தகவல் என்ன ஆகிறது என்பது பெரிய ஆராய்ச்சி. பருப்பொருளின் நிலைத்த தன்மை என்ற விதியை வைத்தால் (conservation of mass) எந்தப் பொருளும் பிரபஞ்சத்திலிருந்து மறைவதில்லை (ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து...நம்மாழ்வார்). எனவேகருங்குழியில் விழும் ஒளி (ஒளி என்பது தகவல்) வேறொரு அண்டத்தில் மீண்டும் தோன்றுமாம். இப்படி ஒரு பிரபஞ்சத்திலிருந்து ஒரு பிரபஞ்சமாக விரிந்து கொண்டு இருக்கிறதாம் படைப்பு. இதைப்பார்த்துவிட்டுதான் யசோதை அப்படியோ மயங்கி விழுந்துவிட்டாள். கண்ணனின் விஸ்வரூப தரிசனம்பார்த்த பார்த்தன் மெய் மயங்கி "அண்ணலே, இது போதும் இனித் தாங்காது என்றான். கீதைக்கு விளக்கம் எழுதிய மகாகவி பாரதி சொல்கிறான்:சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் - கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி, கோடி,கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந் தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை. (பகவத் கீதை-உரை விளக்கம்)
ஆக பிரபஞ்சத்தின் ஆதியுரு கருமை என்று தெரிகிறது. அது சரி, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளுக்கு இது எப்படி தெரிந்தது என்பதுதான் கேள்வி?

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய் - நாடிநீ
வேங்கடவற்கென்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணம் நல்கு.


உய்யக்கொண்டார் சொல்லும் "இம்மாற்றம்" நம்முள் நிகழ....ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Date: Sun, 09 Nov 1997 17:02:07 +0100