e-mozi

மடல் 019: ஊமையின் கனவு

பாசுர மடல்கள் ஆழ்வார் மனதைப் புரிந்து கொள்ளவும், ஆழ்வார்களை நம்மிடம் கிட்டே கொண்டு வரவும், பாசுரங்கள் மூலமாக அவர்கள் தமிழுக்கு செய்திருக்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் வருகின்றன. ஆழ்வார்களை உயர்ந்த பீடத்தில் வைத்து நம்மிடமிருந்து பிரித்து மரியாதை செய்வதைவிட ஆழ்வார்கள் எப்படி கண்ணனை சகியாக வைத்தார்களோ அதே போல் ஆழ்வார்களை நம் உற்ற தோழர்களாகக் காண்பதே மேல். ஒண்ணு மண்ணா இருப்பதில் உள்ள சுகமே தனி!

நவம்பர் 13 தேதி ஒரு பாடல் இணையத்தில் உலா வந்தது. அது:

இளங்சிறாராய் இன்புற்றுத் துள்ளியோடி
இளைஞராய் இளமங்கை இணைமார்புக்கேங்கி
இங்குற்றோர் சொர்க்கமென இணைந்தனுபவித்து
இங்குமங்குமோடித் தேடித்தேடிப் பொருள் சேர்த்தே
இங்கோர் பாதிநாள் கடந்தபின்
படுத்தெழுந்தோர் பாதியிரவில்,
சற்றுமோர் சிந்தையின்றி
உண்டுகூடிக் களித்துறங்கும்
உற்றதொரு விலங்காய் வாழவே
உதித்தேனோ என்ற எண்ணம் உந்த
உணர்வார் தம் உள்ளத்தேடலை.என்று முடிந்தது. இப்பாடலில் ஒரு ஆழ்ந்த துக்கமும், தேடலும் தொக்கி நிற்கின்றன. பாலகனாய் துள்ளியோடிய நாட்கள், பின் பெண் பிள்ளைகள் மார்புக்காய் ஏங்கி நின்ற நாட்கள், பின் பெண் தரும் கலவையே (sex) சொர்க்கமென்று இருந்த நாட்கள், காசு, காசு என்று அலைந்த நாட்கள் இப்படி வாழ்வில் பாதிநாள் கழிந்த ஓர் இரவில் சட்டென ஒரு சிந்தனை, அட சேய்! இதுக்கா நான் பிறந்தேன்? கேள்வி ஆன்மீகத்தில் முடிகிறது.

இந்தத் தேடல் பொதுவாய் 40-50ல் இருக்கும் புகலிட தமிழரிடம் ஓங்கி நிற்கும். வாழ்வு வெளியிலும், உள்ளம் தமிழகத்திலும் நிற்கும். என்றாவது ஒருநாள் அங்கு நிரந்தரமாய் போய் நிற்பேன் என்ற ஏக்கம். தாயைப் பிரிந்த சேய் மனது! இந்த உணர்வை நம்மில் பலர் அனுபவித்து இருக்கக்கூடும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வாசிக்கலாம்! யாழும், பெண்ணும் துணைக்கு இல்லாவிடில் நம் துக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இவர் ஒரு கதை சொல்ல, அவர் ஒரு கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் துக்கத்தின் கனம் குறைந்து விடும். இந்த துக்கம் - கவிதை எழுதிய எல்.ஏ.சுவாமிநாதனுக்கு மட்டும் சொந்தமா? இல்லை இத்தகைய மனோநிலை ஆழ்வார்களுக்கும் வந்திருக்கிறதா? ஆழ்வார்களையே கேட்போம்:

தொண்டரடிப் பொடியாழ்வார் தம் திருமாலை 3ம் பாடலில் இத்தயை மனோநிலையைவெளிப்படுத்துகிறார். அதாவது வேதநூல் பிரகாரம் நமக்கு நூறு வயது. அதில் பாதி உறக்கத்தில் போய்விடுகிறது. மீதி ஐம்பது ஆண்டு. அதில் ஒரு பெரும் பகுதி பால பருவத்தில் போய்விடுகிறது (உலகில் உள்ள உயிரினங்களில் மிக அதிக பால பருவம் உள்ள உயிரினம் மனிதர்கள்தாம். பதினெட்டு வயது வரை பால் வடியும் முகத்துடன் அம்மா தலைப்பை பிடித்துக் கொண்டு அலையும் ஒரே உயிரினம் மனிதர்கள்தாம்:-). மீதி உள்ள நாள்களில் காய்ச்சல், கடுப்பு, பசி என்று. கடைசி நாட்கள் மூப்பில் போய்விடுகிறது. அடடா! இடையில் உள்ள நாட்களில் நாம் என்ன செய்தோம்? பொண்ணு பிண்ணால ஓடறது (பெண் வாசகர்கள் ஆண்கள் பின்னால் என்றும், ஓரினப் புணர்ச்சியுடையோர் அந்தந்த இனத்தின் பின்னால் என்றும் திருத்திவாசிக்கவும்) அப்புறம் கல்யாணம், கார்த்திகை, காசு, உறவு இப்படி... உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்...இதுவும் சிலருக்கு வருகிறது, பலருக்கு வருவதில்லை. இதை

வேதநூற் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு
பேதை பாலகன தாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகருளானே


என்று சொல்கிறார் தொண்டர் அடிப்பொடி. அதே சிந்தனை!

இதைவிட இன்னும் உருக்கமாகச் சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். ஏக்கங்கள் நிறைந்த நம் வாழ்வை ஊமை கண்ட கனவு என்கிறார். ஊமை கானும் கனவை அவனைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூட முடியாது. இதில் தொனிக்கும் தனிமையும் கழிவிரக்கமும் சொல்லில் வடிக்க முடியாது. தனிமையை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். வெறும் ஊமைக்கனவு என்று சொல்லி விட்டுப் போனாலும் பரவாயில்லை. ஊமை கண்ட கனவும் பழுதானால்? என்ன கொடுமை ஐயா!

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந் தார்மனத் திருப்பார்
நாமம்நா னுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி -3)

"உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்!" இங்குதான் ஆரம்பமாகிறது ஆன்மீகத் தேடல். இந்த முற்றுப் பெறாத தேடலில் பல உணர்ச்சிகரமான கட்டங்கள் உண்டு. ஊர், ஊராய் அலையும் மக்கள் சொல்லலாம் ஊரிலேன் (இது ஈழச் சகோதரர்களுக்கு மிகவும் பொருந்தும்); காணியில்லை - எனக்கென்று சொந்தமாக நிற்பதற்கு இடமில்லை. உறவு என்று கொண்டாடுவதற்கு யாரும் இல்லை. வாழ்வில் பற்றுவதற்கு ஒன்றுமில்லை. காசு, காசு என்ற அலைந்தாலும், பட்டிணத்து அடிகள் சொன்னது போல் காதறந்த ஊசியும் கடைசி வரை வாராதுதான்.ஊரிலேன் காணியில்லை
உறவுமற் றொருவரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன்; பரமமூர்த்தி
காரொளி வண்ண னே! என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகணம்மா!
அரங்கமா நகருளானே!


(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை -29)

கண்ணனே கதறுகிறேன் என்கிறார். என் துயர்களை களைவார் யார் உளர், அம்மா? என்றும் வினவுகிறார்.

இம்மாதிரி சுயவிசாரணை ஆரம்பிக்கும் போது உள்ளத்தின் கசடுகள் பல வெளியே வரும். பாலைக் கடையும் போது வெண்ணய் திரண்டு மேலே வருவது போல். அதன்பின் மனது எளிதாகிவிடும். பின்வரும் ஆழ்வாரின் அனுபவம் போல்:

மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோர் இன் சொலில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலை யானே!
பொன்னிசூழ் திருவரங்கா
எனக்கினி கதியென் சொல்லாய்?
என்னையா ளுடைய கோவே!

(திருமாலை 30)

எனக்கு இனி கதி என்ன? என்ற கேள்வி எப்போதாவது வரும் போது ஆழ்வார்களுக்குள் வாருங்கள். அங்கு பதில் இருக்கிறது.

Date: Sun, 16 Nov 1997 20:50:16 +0100

மடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்!

சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை நாச்சியாரின் (ஆண்டாளின்) மனதைப்புரிந்து கொள்ள வேண்டுமெனில் வைணவத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்.

இந்திய மண்ணில் பல்வேறு தத்துவங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. வீடு பேறு என்ற நோக்கை குறித்ததாக அவை அமைந்தாலும் அதனதன் வழிகள் பெரிதும் வேறுபட்டு அமைகின்றன. இவ்வழிகள் எவ்வளவு வேறுபட்டவை எனக் கேட்டால் கடவுள் இல்லை என்பதிலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனச் சொல்லும் வகையில் வேறுபட்டவை.

சாக்கியர்கள் இயற்கைவாதிகள். கடவுள் என்ற கருத்து அவசியமில்லை என்பவர்கள். இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா! என்று சொல்லி கடவுளையும் அதில் சேர்த்து விடுகின்றனர்!! சூன்யவாதிகள், - "ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான், அங்குமிங்கும் எங்குளவாகும், ஒன்றேயாகினால் உலகனைத்தும் சாகும்" - போன்ற கருத்துக்கு அவசியமில்லை, படைப்பு என்பது சூன்யத்திலிருந்து வருகிறது, எனவே கடவுள் அவசியமில்லை என்று சொல்லுகிறார்கள். பின் சடங்குமயமான வேதக் கடவுளர். பலியும், படையலும் வேண்டும் தேவதா உபாசனைகள்! சமணர்கள், - இவர்கள் வாழ்வு ஐம்புலச் சேட்டையால் அலைக்கழிக்கப்படுகிறது அதனால் புலனை அடக்கு என்று சொல்லி கொடூர தபசை வலியுறுத்துகின்றனர். ஒரு ஈய்க்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்று சொல்லி கையில் துடப்பமும் கையுமாக இருக்கச் சொல்பவர்கள் இவர்கள். பின், பெளத்தம். புத்தர் கடைசிவரை கடவுளைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை. இருப்பு என்பதே புரிந்து கொள்ளமுடியாத சிக்கலாக இருக்கும் போது கடவுள் என்ற கவலை எதற்கு என்று சொல்லிவிட்டார். தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாக உதித்த சங்கரரின் அத்வைதம் ஐன்ஸைடைனின் சார்புடைமை தத்துவம் போல் பலருக்கு புரியாமலே போய்விட்டது (காஞ்சிப் பெரியவர் அருளிய "தெய்வத்தின் குரல்" புத்தகம் வாசித்தால் புரியும் இது எவ்வளவு சிக்கலான விஷயம் என்று. புரிவது மாதிரி இருக்கும், அடுத்த பக்கம் முடிந்தவுடன் முதல் பக்கத்து விஷயம் தலையைக் குழப்பும்:-) இத்தனை பகுத்தறிவான போக்குகளின் இடையில் சிக்கித் தவித்தது ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இந்தியா. இச்சிக்கலிலிருந்து முளைக்கிறது வைணவம். பாசியும், களியும் நிறைந்த குளத்திலிருந்து தாமரை பூப்பது போல்.

அப்போதைய இந்தியப் பாமரனுக்கு சமணர்கள் போல் திகம்பரர்களாக காட்டில் அலைந்து வீடு பெறுவதா? இல்லை புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லி துறவறம் கொள்வதா? இல்லை சங்கரர் சொல்வது போல் உலகே மாயை என்று வாழ்வில் பற்று இல்லாமல் இருந்து வீடுபேறு பெறுவதா? இல்லை சாக்கியர்கள் சொல்வது போல் வீடு பேறு என்பதையே விட்டு விடுவதா? என்ற பெரிய குழப்பம்! மொத்தத்தில் வாழ்வின் பொருள் தெரியாமல், அதை முறையாக இரசிக்கத் தெரியாமல் குழம்பிப் போய் இருந்தான் அவன்.

பொதுவாக இந்திய சமயச் சிந்தனையை நான்கு குறிக்கோள்களாகக் கொள்ளலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்பன அவை. அறமென்பதை வள்ளுவன்: மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பது என்கிறான். இதை தர்மம் என்பர் பெரியோர். பொருள் என்பதை: அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையால் அறியலாம். இன்பம்: அனிச்ச மலர்களும், அன்னப்பறவையின் இறகும் மாதர்தம் கால்களுக்கு நெருஞ்சிப் பழம் - என்று பாடும் மயக்க நிலை. இதை காமம் என்பர். கடைசியாக வீடு - சரிதான் இவ்வளவுதான் வாழ்வா? இதுக்கா இந்த பாடுபட்டேன்? என்ற கேள்வி கேட்டு, வாழ்வை நேர் கொண்டு அதன் உட்பொருள் அறிதல். இதை மோட்சம் என்பர். இந்த நான்கு புருஷார்த்தங்களில் சிறப்பானது எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு வீடு பேறு என, புத்தகம் படிக்கத் தெரிந்த குழந்தை கூடச் சொல்லும். ஆனால்....

காமம் என்கின்றனர் வைணவர்கள்!!

இப்படிச் சொல்வது யார்? துறவிகளின் அரசன் (யதி ராஜா) என்றழைக்கப்படும் இராமானுஜர்!

இராமானுச நூற்றந்தாதியில் வரும் பாடலைப் பாருங்கள்:

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


(திருவரங்கத்து அமுதனார் - இராமானுச நூற்றந்தாதி-40).

காமம்தான் அறம், பொருள், வீட்டைக் காட்டிலும், சிறந்தது. இந்த மூன்றுமே காமத்திற்காகத்தான் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, அக்காமம் கண்ணனை நோக்கியதாக இருக்கட்டும் என்று முடிக்கிறார். அதாவது கண்ணனுக்கே ..ஆம்..அது காமம் என்கிறார்! இதை எப்படி புரிந்து கொள்வது?

மீரா இராஜ போகத்தை விட்டு விட்டு பிருந்தாவனதாரியான கண்ணனின் மேல் மையக்காதல் கொண்டு இராஜஸ்தானிலிருந்து கால் நடையாக பிருந்தாவனம் வந்து சேர்கிறாள். பிருந்தாவனத்தில்தான், தான் சிறு குழந்தையாக இருக்கும் போது கண்ணன் விக்கிரகத்தைக் கொடுத்து இக்காதலில் ஈடுபடுத்திய துறவியும் இருப்பதை அறிகிறாள். அவரைக் காண ஆவலுடன் விரைகிறாள். வாசலில் நின்ற சீடர்கள், என்ன விஷயம் எனக் கேட்டு பின் சொல்கின்றனர், "அம்மா, துறவி பெண்களைக் கண்ணாலும் பார்ப்பதில்லை, அதனால் உன்னைப் பார்க்கமாட்டார்" என்று!

மீராவிற்கு துக்கத்தையும் விட, நகைப்பு வருகிறது. சீடர்களைப் பார்த்து சொல்கிறாள், கண்ணன் வாழும் பிருந்தாவனத்தில் தன்னை ஆண் என்று சொல்லும் உங்கள் தலைவரை நினைத்தால் சிரிப்பு வருகிறது. பிருந்தாவனத்தில் ஒரே ஆண் பிள்ளை கண்ணன்தான், மற்ற எல்லோரும் கோபிகைகள்தானே! என்று. இதைக் கேட்ட துறவி இதன் பொருள் புரிந்து ஓடிவந்து மீரா காலில் விழுகிறார். இது வைணவ நோக்கு.

இது மிகப் பண்டைய தமிழ் பக்தி நோக்கும்தான். இதை வளர்த்து எடுத்தவர்கள் ஆழ்வார்கள், பின் அதை உலகரியச் செய்தவர் ஸ்ரீராமானுஜர். நாம் முன்னைய மடல்களில் பார்த்தோம், பக்தி இலக்கியம் என்பது காதலன்-காதலி அன்பைச் சொல்லும் நிலையிலிருந்து வளர்ந்து இறைவனை நாயகனாக வைத்து, ஜீவர்களை காதலியாக வைத்து மானுட ஊற்றில் தேங்கும் அன்பு என்னும் உணர்வை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கச் செய்வது என்று. காதல் இனிது என்பான் பாரதி. இந்த இனிப்பை என்றும் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வழிதான் பக்தி. காதல் உணர்வில் ஏக்கம் முக்கியமானது.

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் - அடீ கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ
பார்த்தவிடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியுதடீ!எவ்வளவு ஏக்கம் துடிக்கும் வரிகள்! மார்பு துடிக்கும் வரிகள். இதுதான் காதலின் சுகமான சோகம்! மானுடக் காதலில் ஒரு நிலையில் ஏங்கும் பொருள் கிடைத்து விடுகிறது. அப்புறம், காதல் கசந்து விடுகிறது. அதனால் வைணவர்கள் - கண்ணனுக்கே ஆமது காமம் - என்று வைத்தனர். இதன் சூட்சுமத்தை விளக்குவது கொஞ்சம் சிக்கல், பாரதி இதை இப்படி புரிந்து கொள்கிறார்:

ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்களிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?


நினைவு முகம்! என்ன வார்த்தை! இச்சொற்பிரயோகம் தமிழின் உரைநடை வழிகாட்டிகளில் ஒருவரான லா.ச.ராமாமிருதத்தை பயித்தியமாய் அடித்திருக்கிறது. நினைவு முகம் மறத்தல்? இந்த உள்ளத்து அனுபவம் உண்டா நண்பர்களே?

வண்ணப் படமும் இல்லை கண்டாய் - தோழி என்கிறார். அது சரிதான், கண்ணனின் வண்ணப்படத்தை வரைந்தவர் யார்? இக்கவிதையால் வைணவத்தில் சொல்லும் காதலை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது (முடிகிறதா? ..மன்னிக்க நான் சாதாரணன். இவ்வுணர்வுகளை என்னால் வார்த்தைப்படுத்த முடியவில்லை).

ஆனால் வைணவர்கள் முன் வைக்கும் இக்காதல் நோக்கில் பெரிய சமூக நன்மை மறைந்துள்ளது.

ஒன்று, கண்ணன்தான் ஒரே ஆண், மற்ற எல்லோரும் பெண் பிள்ளைகள் என்னும் போது நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமில்லாமல் போகின்றன. இக்கருத்தைத்தான் திருமூலரும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிறார். நாம் எல்லோரும் ஒரே குலம். தேவன் அவன்.

இரண்டு, இப்படிச் சொல்வதால் இப்போது அமெரிக்காவில் பிரபலமாகிவரும் Promise Keepers போன்ற ஆண் ஆதிக்க இயக்கங்களின் தேவைகள் இல்லாமல் போய்விடுகிறது. இவர்கள் விவிலிய வாக்கு என்று சொல்லி ஆண் ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைகின்றனர். இது வைணவத்தில் அவசியமில்லை. அங்கு ஆண் பிள்ளைகள் இருந்தால்தானே!

மூன்று, கண்ணனுக்கே ஆமது காமம் - என்று சொல்லிவிடுவதால் பெண் பிள்ளைகளுக்கு நினைத்து பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்து விடுகிறது. இதை முழுமையாய் அனுபவித்தவர்கள் ஆண்டாளும், மீராவும்தான். ஆண்டாளின் தைர்யம் அவள் பாடல்களில் தெரிக்கிறது. அதை பிறகு பார்ப்போம். ஆக, வைணவர்கள்தான் ஒருவகையில் பெண் விடுதலையின் ஆரம்ப கர்த்தாக்கள் என்று தெரிகிறது. இது ஆண் மேலாதிக்கசமுதாயத்தில் பெரிய புரட்சிதான். அதனால்தான் வைணவம் சைவம் பிரபலமான அளவுக்கு பிரபலமாகவில்லை என்று தோன்றுகிறது;-)

தனது அகங்காரத்தை விட்டு தனக்கும் மேலுள்ள ஒரு சக்தியிடம் காதல் கொள்வதென்பது மிக, மிக விசாலமான மனதை உடையவர்களால்தான் முடியும். அவ்விசாலமான மனது வந்துவிட்டால் தனது சகியும் இத்தேடலில் பங்கு கொள்ளும் தோழியாகவே படும். அப்போது ஆண் மேலாதிக்கம் என்பது வருவதற்கு வாய்ப்பு இல்லை. சாதீய கட்டுப்பாடும், ஆண் மேலாதிக்கமும் கொண்ட இந்தியா போன்ற இருகிப் போன நாட்டில் "கண்ணனுக்கே ஆமது காமம்" என்பது கவிதை (தத்துவ) அளவிலேயே நிற்பதுதான் நிதர்சனமான உண்மை!

Date: Sun, 23 Nov 1997 21:21:01 +0100

மடல் 021 -சின்னஞ்சிறு கிளியே!

செங்கண் மால் வண்ணத்தில் நிலம். சிறு குன்றுகளும், நீரோடைகளும் பாயும் பிரதேசம். அங்கங்கே கரையான்கள் புத்து கட்டி பாம்புகளுக்கு வாடகை விட்ட புத்தூர் கிராமம். விஷ்ணு சித்தர் என்ற அந்தணர் தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டு இருக்கிறார். துளசிச் செடிகள் சீராய் வளர்ந்து நிற்கின்றன.பவள மல்லியும், முல்லையும் கொட்டிச் சிதறி நந்தவனத்தை சுகந்தமாக்கி நிற்கின்றன. துளசி பறிக்க பாத்தி விட்டு பாத்தி தாண்டும் போது விஷ்ணு சித்தர் கண்களில் செளந்தர்யமான குழுந்தையொன்று கண்ணில் படுகிறது. நில மகள் அவதாரம் போல் அது சிரித்துக் கொண்டு மண்ணில் கிடக்கிறது. கரு,கரு வென்று கூந்தல். சுருள், சுருளாக முடி. சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா என்று கையில் எடுத்து உச்சி முகர்ந்து, என் "கோதைக் கண்ணே" என்கிறார் பட்டர். தமிழுலகிற்கு கோதை நாச்சியார் அறிமுகமாகிறார்.கணணன் கதை சொல்லி வளர்க்கிறார் பட்டர் குழந்தையை. அதற்கும் அந்தக் கதைகள்தான் பிடிக்கிறது இயல்பாய். அமுது ஊட்டும் போதும் அதைத் திருக்கண்ண அமுது என்றுதான் படைக்கிறார். கிருஷ்ண ஸ்மரனை இல்லம் நிறைந்து இருக்க தளர்நடை பயின்று, பாவாடைப் பெண் ஆகிறாள் கோதை.

கிராமத்து சிறுமியருடன் சின்னதாக மண் வீடு கட்டி விளையாடிக் களைத்து திண்ணையில் பூக்கட்டிக்கொண்டு இருக்கும் பட்டர் மடியில் தூங்கி விடுகிறாள் கோதை. கனவில் கண்ணன் வந்து அவள் கட்டிய சிற்றில்லத்தை கலைக்கிறான். "வேண்டாம் வேண்டாமென" கத்துகிறாள் கோதை. கண்ணன் கலைத்து நின்று சிரிக்கிறான். தோழிகள் சூழ கண்ணனை வளைத்து விடுகின்றனர் சிறுமியர். "கலைத்த வீட்டைக் கட்டித்தாடா!" என்கின்றனர் சிறுமியர். கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை. ஏழுலகம் உண்டு உமிழ்ந்தவனுக்கு மண்ணில் வீடு கட்டத் தெரியவில்லை. கை கொட்டிச் சிரிக்கின்றனர் பெண்கள். இங்கும் அங்கும் ஓடி களைத்து இவர்கள் கையில் சிறையாகிறான் பரந்தாமன். "மாட்டிக் கொண்டாயா" எனச் சிரிக்கின்றாள் கோதை. பட்டர் மடியில் உதிர்ந்த சிரிப்பு பட்டரையும் ஆட் கொள்கிறது. "கண்ணன் விளையாடுகிறான் பார்!" என இவரும் சிரிக்கிறார். குழந்தை கனவு கலைகிறது. "அப்பா, கண்ணன் எங்கே அப்பா?" என வினவுகிறாள். கண்ணன் வந்தானா அம்மா? என்ன செய்தான்? என இவர் கேட்ட இவள் அவருக்கு கண்ணன் கதை சொல்கிறாள். இப்படி கண்ணன் கதையே இவர்களுக்கு வாழ்வாகிப் போகிறது.

பாவாடை, தாவணியில் மிளிர்கிறாள் கோதை இப்போது. அப்பாவிடம் மறக்காமல் கேட்பாள் இன்றும், கனவில் வரும் கண்ணன் நினவிலும் வருவானா என்று. பட்டர் சொல்லுவார், "கோதை, இப்படித்தான் கண்ணன் என் கனவிலுன் ஒருநாள் வந்தான். பாண்டியன் சபையில் போய் பரதத்துவத்தை நிறுவி வா! என்றான். பூக்கட்டும் என்னை மற்றவர் வாய் கட்டச் செய்தான். பொற்கிழி வளைந்து என் கையில் விழுந்த போது எல்லோருக்கும் எதிரில் என் வாக்கை நிலை நாட்ட பரந்தாமனாக வந்து நின்றான். மற்றவர் கண்பட்டுவிடாதோ?"."அதனால்தான், நீ உடனே பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருகாப்பு, என்று காப்பிட்டாய், இல்லையா அப்பா? என்றாள் கோதை. அமாம், கண்ணே! பிள்ளைக் கனி அமுதல்லவோ கண்ணன். நான் காப்பிடாமல் யார் காப்பிட முடியும்" என்கிறார் பட்டர்.

தாயும், தாயும் பேசுவது போல் உள்ளது சில நேரம், பிள்ளையும், பிள்ளையும் பேசுவது போல் உள்ளது சில நேரம். அன்பு தருவதிலே யாருக்கு யார் நிகர் அங்கு?

மார்கழி பிறக்கிறது. மதி நிறைந்த நாளொன்றில் பண்டைய வழக்கமாகிய பாவை நோன்பைத் துவக்குகிறாள் கோதை. பக்கத்து வீட்டுச் சிறுமியரை அழைத்துக் கொண்டு பாவைப் பாடல்களைச் சொல்லிக் கொண்டு தூங்கும் சிறார்களை எழுப்பிக் கொண்டு நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், இளங்காலையில் நீராடி கோவில் செல்கிறாள் கோதை. அவள் செய்யும் பாவையில் மறக்காமல் இவள் முன்னோர்களான மற்றய ஆழ்வார்களையும் ஒவ்வொருவராய் எழுப்பிச் செல்கிறாள். கண்ணன் வீடு சென்று நந்தகோபனை எழுப்புகிறாள், நப்பின்னையை எழுப்புகிறாள், அண்ணன் பலதேவனை எழுப்புகிறாள். சீரியசிங்கம் விழிப்புற்று எழுந்தாற் போல் கண்ணனும் எழுகின்றான் இவள் பாடல்களால். மார்கழியில் விடிகிறது.கண்ணன் நினைவால் பசலை கொள்கிறாள் கோதைப் பெண். இவள் நோய் இன்னதென்று யாரும் அறிகிலர். இவள் மன்மதனுக்கு நோன்பு இருக்கிறாள். கரும்பு வில் கொண்டோனை கன்னல் கனி அமுதனைக் கொண்டு வா,என்கிறாள். முறத்தில் அரிசி கொட்டி கண்ணை மூடி கூடல் விளையாடுகின்றனர் இளம் பெண்கள். கண்ணன் கிடைப்பானாகில் கண்ணை மூடி வட்டம் போட்டாலும் வட்டம் சேர வேண்டும். அதுதான் விளையாட்டு. வட்டம்கூடுகிறது. கோதையின் பசலையும் கூடுகிறது.

தெருவோரம் போகும் குறத்தியைக் கூப்பிட்டு குறி சொல்லச் வைக்கின்றனர் பெண்கள். கன்னங்கரிய விழி கொண்ட குறத்தி, குச்சியை வைத்து விட்டு கோதையின் கையைத் தடவுகிறாள். பெண்ணுருக் கொண்டு பேதையின் நெஞ்சை குறி வைக்கும் இவள் உண்மைக் குறத்திதானோ? பொறுமை இழந்த பொழுதில் குறத்திகுறி சொல்கிறாள், "பெரிய இடத்து சம்மந்தம் உண்டு" என்று. சன்மானமாக அரிசியும், நெல்லும் படியளக்கும் போது, குறத்தி அவை வேண்டாம், கோதை உடுத்திக் களைந்த தாவணியே போதும் என்கிறாள். தாவணியை வாங்கி, ஆண் பிள்ளை போல் தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு கிளம்புகிறாள் குறத்தி. "எந்த ஊர் குறத்தி அம்மா?", என வினவிக் கொண்டு பட்டர் வரும் சமயம் அவள் "சோலைமலைக் குறத்தி" என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். சோலைமலை, சோலை மலை என்பது பட்டர் நினைவில் பட்டுத் தெரித்து திருமால் இரும் சோலைதானோ என வினவும் முன் அவள் முக்குத் திரும்பி மறைந்து விடுகிறாள்.கண்ணன் வரும் நாள் நோக்கி காத்து காத்து இளைத்த கோதை, "சரி, இனி அவர் வந்து மாலை போடும்முன், நானே அவருக்கு மாலை போட்டு விடுகிறேன்" என்று சொல்லி அப்பா திருமாலுக்கு கட்டி வைத்த மாலையைச் சூடி அழகு பார்க்கிறாள் கோதை. கைகள் பதற, பட்டர், "கண்ணே, கண்ணனுக்கான மாலையை கன்னிப் பெண் நீ சூடலாமா? என்ன இது அபச்சாரமென" அவசர, அவசரமாக மீண்டுமோர் மாலை கட்ட,பூசைக்கு நேரமாகிவிடுகிறது. கோவில் சென்று அர்ச்சகரிடம் புது மாலையைக் கொடுத்தால்,அர்ச்சகருக்கு அருள் வந்து விடுகிறது. "கோதை சூடிக்கொடுத்த மாலைதான் எமக்கு உவப்பு, கொண்டு வாரும் அந்த மாலையை" என அர்ச்சகர் அருள் வந்து சொல்ல ஓடுகிறார் பட்டர்பிரான் வீடு நோக்கி. அழுதுகொண்டிருக்கும் கோதையை "அன்னாய், ஆண்டாள்!" எனக் கூவுகிறார். "என்ன அப்பா? புது வழக்கமாய் ஆண்டாள் என்கிறீர்கள்?" என வினவும் மகளுக்கு சொல்கிறார், "அவன் ஆண்டவன், அவன் உள்ளம் ஆளும் நீ ஆண்டாள்!" என்று.அன்று இரவே ஆண்டாளுக்கு தெய்வ சொப்பனம் வருகிறது. வாரணங்களான யானைகள் சூழ, வண்ண நிலவனான கண்ணன் வந்து கை பற்றுவது போல்! அவள் கனவையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்கிறாள் ஆண்டாள். "கனவு! கனவு! கண்ணே...தெய்வக் கனவுகள் பொய்பதில்லை. நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு, அம்மா!" என்கிறார் கண்கள் குளமாக பட்டர்பிரான்.

கனவு நினைவாக அதிக நாள் எடுக்க வில்லை. பரிவாரம் சூழ வந்து சேர்கிறான் ஓர் இளைஞன் ஒருநாள். ஊரே திமிலோகப் படுகிறது. "என்ன அப்பா, எங்கும் இல்லாத புதுப் பழக்கமாய், பிள்ளை- பெண் வீடு தேடி வந்து பெண் கேட்பது?" என வினவுகிறார் பட்டர் சுவாமிகள். அதற்கு பிள்ளையாண்டான் சொல்கிறான், "சுவாமிகளே வைரம் இருக்கும் இடத்தைத் தேடித்தான் வியாபாரி போவது வழக்கம். வைரம் வியாபாரியை நோக்கிப் போகக் கண்டீரோ" என்று. திகைத்துப் போன பட்டர், "பிள்ளாய்! உன்பெயர் என்ன சொன்னாய்? ஊர் என்ன?" என வினவ. "என் பெயர் ரெங்க மன்னார், ஊர் திருவரங்கம்,உங்களை எனக்கு மிக நன்றாகத் தெரியும். உற்றம், உறவுகள் எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு" என்கிறான் முத்தாய்பாய்.

வெகுளியான பட்டர்பிரான் வேறு என்ன செய்வார்? இத்தனை சாமர்த்தியமாக பேசும் பிள்ளையிடம்!அடுத்த நாளே கல்யாணம் நடக்கிறது. ஆண்டாளுக்கு இச்சம்மந்தத்தில் கன குஷி!

கல்யாணம் முடிந்து பிள்ளை வீட்டார் ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர். பட்டர்பிரானும் மாப்பிள்ளை ஊர் வரை வந்து போகிறார்.

ஸ்ரீரெங்கப் பெருமாளை தரிசித்து விட்டு வீடு போகலாம் என பிள்ளை சொல்லி விட்டு, பெரிய்ய்ய்ய கோவிலான திரு அரங்கத்தின் வீதி தாண்டி, வீதி தாண்டி, பல மண்டபங்கள் தாண்டி கருவரை விரைகிறான். வயதான பட்டர் முடிந்த மட்டும் எட்டி நடை போடுகிறார். இவர் பெரிய பெருமாள் சன்னிதிக்கு வருவதற்கும், மாப்பிள்ளைப் பையன் நாகப்பை அணையில் துயில் கொள்ளவும் சரியாக இருக்கிறது. இவர் வளர்த்த சின்னஞ் சிறுங்கிளி, மெல்லப் பாம்பணையில் கால் வைத்து ஏறி, ரெங்கனுடன் சங்கமித்துவிடுகிறாள்.

எங்கும், பல்லாண்டு, பல்லாண்டு என வேத முழக்கம் ஒலிக்கிறது. பட்டர்பிரான் கண்கள் குளமாக கை கூப்பி நிற்கிறார்.


ஒரு மகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் தான்
கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெறும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறஞ் செய்யும் கோலோ!பிற்சேர்க்கை: என்னுள்ளும், உன்னுள்ளும் மறைந்திருந்து ஒவ்வொரு நொடியும் இவ்வுலகை சிருஷ்ட்டிக்கும் அக்குழந்தைக்கு இக்கதை நண்பனே/நண்பியே.படங்கள் நன்றி: ஸ்ரீவில்லிபுத்தூர்

Date: Wed, 26 Nov 1997 00:33:57 +0100

மடல் 022: செய்ய தாமரைக் கண்ணினாய்!

If the Great Experiment of life were re-run a million times over, chances are it would never again give rise to mammals, let alone mammals intelligent enough to invent television!

Stephen Jay Gould

இதே கருத்தைத்தான் சங்ககாலத்துப் பாட்டியொருவர், "அரிது, அரிது, மானிடராய் பிறப்பது அரிது" என்று கண்டு சொல்லியுள்ளார். இன்னும் அரிதான பல விஷயங்களை அவர் விளக்குகிறார். அப்படிப்பட்ட மனித வாழ்வில் மிகவும் அரிதான பருவம் பால பருவம். எவ்வித கள்ளமும் இல்லாமல் கலங்களற்ற தெளிந்த ஓடை போல் மனது இருக்கும் பருவம். அப்பருவத்தில் பெரியர்கள் விடாது பிடித்து நிற்கும் "நிஜம்" என்னும் நிலைக்கும், "கற்பனை" என்பதற்கும் வித்தியாசமே இல்லாமல் நிஜமும், கற்பனையும் ஒன்றாகக் கலந்து நின்று உலகு மகா அதிசயமாகத் தெரியும் பருவம்.சாக்கடையில் நெளியும் புழுவும், ஓடையில் ஓடும் மீனும், தென்னமரத்து பைங்கிளியும், வேலியின் ஓணானும் சக தோழர்களாய் இருந்து உலகை ரசிக்க வைக்கும் பருவம்.

படைப்பின் இரகசியம் அடங்கியுள்ள இப்பருவத்தை ஆழ்வார்கள் இருந்து அனுபவித்த மாதிரி அனுபவித்தவர்கள் யாரும் கிடையாது. அதிலும் மேலாக விட்டு சித்தர் என்னும் பெரியாழ்வார் அனுபவித்த விதமே அலாதி. ஆழ்வார்களின் பாசுரங்களில் மிகவும் அதிகமாக பேசப்படும் இறைமை பால பருவத்து கண்ணன்தான். கோதை நாச்சியாரான ஆண்டாளும் தனது பாசுரங்களை கண்ணனது பால பருவத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறாள். ஆண்டாளின் திருப்பாவை பிரபலமான அளவுக்கு நாச்சியார் திருமொழி அறிமுகமாகவில்லை.பெரியாழ்வார் தமிழுக்கு தந்தது இரு பெரும் கொடைகள். ஒன்று அவர் இயற்றிய பெரியாழ்வார் திருமொழி. இதில் கண்ணனின் பால பருவத்தை அவர் யசோதை பாவத்தில் அனுபவிக்கும் பாசுரங்கள்தான் பின்னால் பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியப் பிரிவாக மலர்கிறது. இரண்டாவது, ஆண்டாளை ஆளாக்கி தமிழுக்குத் தந்தது. ஆண்டாளின் பாடல்களில் தெரிக்கும் மனோதிடம் இருபதாம் நூற்றாண்டு பெண்ணியல்வாதிகளின் எழுத்தில் கூட தெரிவதில்லை. தந்தை கொடுத்த திட கிருஷ்ண பக்திதான் அதற்குக்காரணம். ஆண்டாள் குழந்தை பருவத்திலிருந்து கண்ணன் மேல் காதல் கொள்கிறாள். இக்காதல் முதலில் விளையாடும் சக தோழனாக பாவிப்பதிலிருந்து பின்னால் காளைப்பருவத்து காதலான பாவித்து உடல் உருக விரகக் கவிதைகள் செய்யும் வரை ஒரே சீராக இருக்கின்றது.

பாலபருவம் ஆண் பிள்ளைகளுக்கு சேட்டை நிரம்பிய பருவம்! குதூகலமான பருவம்! எல்லாமேவிளையாட்டுதான். ஆண்டாளது கண்ணனும் மிகவும் சேட்டை நிரம்பியவனாகவே இருக்கிறான். சின்னப்பெண்கள் "முதுகு நோவ" (ஆண்டாளின் பிரயோகம்) கட்டிய சிற்றிலை (சின்ன இல்லத்தை)சிதைக்கின்றான். சக தோழனை "தீமை செய்யும் சிரீதரா!" என்று சரியாகவே அழைக்கிறாள்ஆண்டாள் :-)

ரொம்ப, ரொம்ப அழகான பாசுரங்கள். அழகான வார்த்தைப் பிரயோகங்கள். கண்ணனை "உன் முகத்தனகண்கள் அல்லவே" என விளிக்கிறாள். குழந்தைக்கு "முகமெல்லாம் கண்" என்ற கிராமத்து வழக்கு அப்படியே விழுகிறது ஆண்டாள் பாசுரத்தில். ஆழ்வார்களிலே பெரியாழ்வாரும், ஆண்டாளும் மிக, மிக,எளிய பதங்கள், கிராமத்து வசனங்கள் போட்டு கவிதைகள் செய்திருக்கும் அழகே அழகு. இதில் பெரிய உளவியல் இரகசியம் இருக்கின்றது.கண்ணன் என்ற பரம்பொருளே மிக, மிக எளியதாக இருக்கும் என்ற நோக்கில் செய்யும் பக்தியில்,செய்யும் நபரின் மனமும் மிக, மிக எளியதாக மாறிவிடுகிறது. நாம் எப்படி நினைக்கின்றோமோஅப்படித்தான் அமையும் நம் குணமும். இந்த மனோ பாவத்தில் நக்கீரர் போல் ஆண்டாவனுடன் சண்டை போடமுடியாது. அங்கு பண்டித வல்லமையும், நேர்மை, தலை குனியாத பண்பு போன்ற வளர்ந்த ஆண் குணங்கள் அழுத்தி சொல்லப்படுகின்றன. ஆனால் ஆண்டாளின் பாசுரங்களிலோ மிக, மிக மென்மையான குணங்கள் பேசப்படுகின்றன (வண்ணதாசன் கதைகள் போல்).

பெய்யுமாமுகில் பொல் வண்ணா! உன்றன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க, உன் முகம்
மாய மந்திரம்தான் கொலோ?
நொய்யர்பிள்ளைகள் என்பதற்கு உன்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே!


என்ன அழகு பாருங்கள். சின்னச் சின்ன பதங்கள். மணல் வீடைக் கலைக்கும் கண்ணனைத் திட்டத்தோன்றுகிறது. ஆனால் அவன் பேச்சும், செய்கையும் இவர்கள் மனதை மயக்கி விடுகிறது. "என்ன மந்திரம் போட்டானோ?" என்று சாதாரணமாகச் சொல்வதில்லையா? அதே வார்த்தைகள்! திட்ட முடியவில்லை.மேலும் ஆண்டாள் மென்மையான மனத்தினள். எனவே மனது நோவாமல் சொல்கிறாள், "செய்ய தாமரைக்கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே" என்று.

அடுத்த பாடலில் கவின்மிகு அழகுடன் குழந்தை மனதைச் சொல்கிறாள்!

பேதம் நன்கு அறிவார்ளோடிவை
பேசினால் பெரிதின் சுவை
யாதும், ஒன்றும் அறியாத பிள்ளைகள்
எமை நீ நலிந்து என்ன பயன்?
ஓதமாகடல் வண்ணா! உன் மண
வாட்டிமாரோடு! சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய்! எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே


அதாவது, சின்னப் பெண்களான எங்களிடம் வந்து வம்பு பண்ணினால் எங்களுக்கு என்ன தெரியும். பேதம் நன்கு அறிந்த அறிஞர்களிடம் பேசினால் சரி! அதாவது பெரியவர்களாகிவிட்டாலே இந்த பேதம்தான் தலைதூக்குகிறது! பெரியவர்கள் கட்டிக் காக்கும் இவ்வுலகில்தான் எத்தனை பேதமைகள், பிளவுகள். பிளவு செய்யும் மனத்தை உடைய பெரியவராய் இருத்தலைக் காட்டிலும் பிள்ளைகளாய் இருத்தலே பெரிது என்பதுதான் பிருந்தாவன பருவத்தின் சாரமே.குழந்தைகளெல்லாம் ஆடைகளை கரையில் வைத்துவிட்டு குளத்து நீரில் கும்மாளமிட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்தக் குதூகலத்தில் கண்ணனால் பங்கேற்காமல் இருக்கமுடியுமா என்ன? சத்தம் போடாமல் வந்து இவர்கள் ஆடைகளைக் கவர்ந்து மரத்தில் ஏறிவிடுகிறான் (இவையெல்லாம் சகஜமாய் கிராமத்தில் பார்க்கும் நிகழ்சிகள்தான்). ஆண்டாள் முறையிடும் அழகைப் பாருங்கள்!

இதுவென் புகுந்ததிங்கு? அந்தோ!
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய்முடி மாலே!
மாயனே! எங்கள் அமுதே!
விதியின்மையாலது மாட்டோம்;
வித்தகப்பிள்ளாய்! விரையேல்
குதிகொண்ட அரவில் நடித்தாய்!
குருந்திடைக் கூறை பணித்தாய்.


எங்கேயிருந்து வந்து புகுந்தான்? இந்தப் பொய்கைக்கு எங்கு வந்தான்! சின்னச் சின்ன வார் த்தைகள்!கோபப்படும் முன் அவனது "மதுவின் துழாய் முடி" கண்ணில் பட்டு மயக்குகிறது. பாரதி "என் கண்ணின்பாவையன்றோ" என்று சொன்னது போல் இவள் "எங்கள் அமுதே!" என்கிறாள்! குதி கொண்டு அரவில் நடித்தாய்! என்கிறாள். நடிப்பு என்பது பழந்தமிழில் நாட்டியத்தைதான் குறிக்கிறது. இயல், இசை,நாடகம் என்ற முத்தமிழில் நாடகம் என்பது நாட்டிய சாஸ்திரத்தைக் குறிக்கிறது. இப்போது நாம்"நடிப்பு" என்று கொள்ளும் அர்த்தத்தில் அல்ல!கண்ணன் செய்த ஜலக்கீரிடையை நாம் எப்படி நோக்க வேண்டும் என்று சொல்கிறார் காஞ்சி முனி: "பகவான் நர்த்தனம் பண்ணுகிற காலத்தில், எல்லோருடைய சித்தம், மனசு எல்லாம் அடங்குகின்றன. குழந்தைகளுக்கு ஆனந்தம் வந்துவிட்டால் அப்படித்தான் துணிகளை எல்லாம் அவிழ்த்துப் போட்டுவிட்டு கூத்தாடும். ஒரு கட்டும் இல்லாமல் ஆனந்தம் பொங்கும் ஈசுவரனும் கூத்தாடுகின்றான். நாம் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிற சாதி!" (ஆசாரிய ஸ்வாமிகள் உபந்நியாசங்கள் - கலைமகள் காரியாலயம்)

Date: Sat, 29 Nov 1997 23:41:36 +0100

மடல் 023: செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!

பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முதல் மூன்று ஆழ்வார்கள்- இருக்குமிடத்தில் - இறைவனைக் காணும் ஆன்மீக நோக்கை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்துகின்றனர். இவர்கள் மங்களா சாசனம் செய்வித்த ஊர்கள் "திருப்பதிகள்" ஆகின்றன. மெதுவாக இந்த கோட்பாடு தமிழகம் முழுவதும் பரவுகிறது. நான் பிறந்த ஊராகிய திருப்பூவணத்தை காசியை விட வீசம் மடங்கு புண்ணியம் அதிகம் என்று சொல்லும் ஐதீகம் உண்டு. இதனால் கஷ்டப்பட்டு தீர்த்த யாத்திரை மேற் கொள்ளும் சிரமம் இல்லாமல் போய்விடுகிறது. அந்தக் காலத்தில் காசிக்கு யாத்திரை போய்த் திரும்பி வந்தால் ஆச்சர்யம்தான்! இதன் இன்னொரு பொருள் இருக்கும் இடத்தில் இறைவனைப் பார்க்கத் தெரியாத நமக்கு காசிக்கு போய் தெரியவா போகிறது? ("இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே" என்ற சித்தர் பாடல் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.)

இப்படி அறிமுகப் படுத்திய புதியநோக்கு ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் கனிந்து நின்றிருப்பது ஆண்டாளின் பாசுரங்களில் தெரிகிறது. ஆண்டாள் தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை பிருந்தாவனமாகத்தான் பார்த்திருக்கிறாள். இது நாச்சியார் திருமொழியாலும், திருப்பாவையாலும் தெரியவருகிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் கண்ணனை எங்கேயாவது பார்த்தீர்களா என கேள்வி கேட்டு, ஆமாம்! பிருந்தாவனத்தில் பார்த்தோம் என்று சொல்வது போல் அமையும் ஒரு விளையாட்டு:

கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே.


சிறுவர் பாடும் பாடலா இது? இங்கு விழும் உவமைச் சிறப்பை பெரும் புலவர்கள் கூட கொண்டுவர முடியாது. கண்ணன் கருணைத் தெய்வம். அவன் ஆயர் தம் கொழுந்து. அதாவது வேரில் புண் என்றால் இலைக் கொழுந்துவாடுவது போல் பக்தர் துயர் காணாது இரங்கும் தெய்வம். அவன் கண்களில் பின் கோபக்கனலா தெரிக்கும்? கார்மேகத்தின் குளிர்ச்சியை கண்ணில் வைத்திருப்பதாக உவமை தருகிறாள் ஆண்டாள். இத்தாமரைபோன்ற நெடிய கண்கள் (அஜந்தா, எல்லோரா சித்திரங்கள் பார்த்திருக்கிறீர்களா?) என்னும் பெருங்கயிற்றினால் இவளை கட்டி ஈர்த்து நிற்கும் இவளது ஈசன் விளையாடும் இடத்தைப் பார்த்தீர்களா என்பது கேள்வி.கண்ணன் விளைடாடி நிற்கிறான். எப்படி? வேர்த்து விருவிருத்து, வேர்வைத் துளிகள் முத்து போல் நின்றாட யானைக் கன்று போல் நிற்கிறான். இங்கு யானை உவமை கூட சிறப்பானதுதான் (வால்ட்டிஸ்னியின் "ஜம்போ" பிடிப்பவர்கள் அப்படியொரு அழகு என்றும் கொள்ளலாம்! ஆனால் நான் சொல்லவருவது..) யானை உருவத்தால், பலத்தால் மனிதனைவிட பல மடங்கு பராக்கிரமமானது என்றாலும் மனிதன் தன் தலையில் கால் வைத்து ஏறும் வண்ணம் குனிந்து கொடுத்து, அவனைத் தாங்கி நிற்கிறது. கண்ணனான தெய்வமும் தன் பலமெல்லாம் தெரிந்தும் இரங்கும் பக்தனுக்காக இறங்கி வருகிறது என்றும் கொள்ளலாம்.திருப்பாவை முழுவதும் பிருந்தாவனத்தில் நடப்பது போல்தான் ஆண்டாள் பாடியிருக்கிறாள். இரண்டுஉதாரணங்கள்:

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


பாவைப் பாடல்கள் பாடிக்கொண்டு வரும் பாவையர் (கிருஸ்துமஸ் கேரல் ஞாபகம் வரவில்லை?) கடைசியாக கண்ணன் வீட்டுக்கும் வந்து விடுகின்றனர். இவர்கள் வேண்டி நிற்கும் தெய்வம் தூங்கலாமா? அவனும் விழித்து எழுந்து அருள் செய்தால்தான் நல்லது. இவர்கள் வரும் நேரத்தில் கண்ணன் தன் காதலியான கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (ஆஹா!) கொங்கை மேல் கை வைத்து உறங்கிக் கொண்டு இருக்கிறான். ஆண்டாளுக்குத்தான் ஆண்டாவனுக்கும், தனக்கும் இடைவெளி எதுமில்லாமல் உறவு கொண்டவளாச்சே. கண்ணனது பள்ளியறைக்கே போய்விடுகிறாள். இதில் இன்னொரு ரசமுண்டு. ராதையான ஆண்டாளுக்கு எந்தப் பொறாமையும் எழவில்லை இப்போது (பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ,ஏனோ ராதா இந்தப் பொறாமை யார் தான் அழகால் மயங்காதவரோ? - இந்தப் பாடல் எழுதியவர் திருப்பாவை வாசித்ததில்லை என்று தெரிகிறது!).

மிகவும் சாவகாசமாக, நப்பின்னை (மைத்தடம்கண்ணினாய்! -மீண்டும் ஆஹா!) உன்னை விட்டால் நீ கண்ணனை எழுப்ப மாட்டாய். சுகமாக படுத்து இருக்கத்தான் பார்ப்பாய். நாங்களோ சிற்றஞ்சிறு காலை நீர் ஆடி குளிரிப் போய் வந்துள்ளோம். சட்டுப் புட்டுன்னு சுவாமியை எழுப்பும் தாயே! என்கிறாள் ஆண்டாள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா (a warm welcome..wow!). குளிரும் குழந்தைகளுக்கு வெப்பம் கொடுக்கும் கண்ணன்தானே அப்போதைய தேவையும் கூட! நப்பின்னையை மீண்டும் எந்தப் பொறாமையும் இல்லாமல் வருணிக்கிறாள். செப்பென்ன மென் முலை. செவ்வாய். சிறு மருங்குல் (சின்னஇடை.) திருவே! காலையில் எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் அந்தக்காலத்தில் உண்டு போலும். தட்ளொளி தந்து எழுப்பச் சொல்கிறாள். கண்ணாடி இன்னும் கண்டுபடிக்கப் படாத காலம். அதான் ஒளிரும் தட்டைக் காட்டச்சொல்கிறாள்.மார்கழி நோன்பு முடிந்த பின் சிறார்களெல்லாம் சேர்ந்து கூடல் விளையாடுகிறார்கள். அதாவது முறத்தில் அரிசியை பரப்பி வைத்துக் கொண்டு விரலால் வட்டமாக கோடு போட வேண்டும் - கண்களை இறுக்க மூடிய பின். வட்டம் சேர்ந்தால் (கூடினால்) நினைத்த காரியம் நடக்கும், கூடாவிடில் நடக்காது.

பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே.

வானவர் போற்றும் பூமகன் (மலரின் மேவு திருவின் மணாளன்); தேவகி மகிழும் காமகன் (காதல்நாயகன்); வசுதேவர் என்ற மாமாவின் மகன் (ஆண்டாள் முழுதும் தன்னை இடைச்சியாக பாவித்து வசுதேவரை மாமாவாக்கி விட்டாள்); என் கோமகன் (என் ராசா!) இவன் என்னிடம் வருவானென கூடிடு கூடலே என்கிறாள். கூடுவதாக கதை.

இக்கதை கேட்டதன் பலனை பின்வருமாறு சொல்கிறாள் கோதை:

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே.


ஊடல், பின் கூடல் இதுதான் காமத்திற்கு இன்பம் என்பான் வள்ளுவன். ஆண்டாளும் அதையேதான் சொல்கிறாள். புணர்தல் என்று கலவியைச் சொல்கிறாள். எத்தகைய கலவி? சாதாரண அர்த்தத்தில் - தான் காதல் கொண்டுள்ள ஒருவனுடன் கூடுவதை விட காதல் இன்பம் வேறென்னவேண்டும் ஒரு பெண்ணிற்கு. புணர்தலை - என்றும் பண்டைய தமிழன் இன்றைய "பாசாண்டித்தனத்தில்" குறைத்து மதிப்பிட்டதில்லை. அதெற்கென்று வள்ளுப் பேராசான் ஒரு காமத்துப் பாலே பாடியுள்ளான். எனவே இந்தஅர்த்தத்தில் எதுவும் சிறுமைப் பட்டு போகவில்லை. இரகசியார்த்தமாகப் பார்த்தால் - ஜீவன் பரமாத்துமாவுடன் கூடும் புணர்தலைச் சொல்லலாம்.

இன்றென்னைப் பொருளாக்கித் 
தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப்
புணர்ந்து என் செய்வான்?


என்கிறார் நம்மாழ்வார். என்னைப் புறம் போகச் சொல்லி யாரைப் புணர்வான் அவன்? நானே அவனுக்கு புணர்பொருள். என்னையும் ஒரு பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான், என்று சொல்வதால் ஆண்டாள் சொல்லும் புணர்தல் இதைத்தான் குறிக்கிறது என்றும் கொள்ளலாம்.

Date: Sun, 30 Nov 1997 17:39:46 +0100

மடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா!

[பெரியாழ்வார்தான் ஆண்டாளா ? (பகுதி ஒன்று)]

பெரியாழ்வார்தான் ஆண்டாளா ? என்றொரு கேள்வியை எழுப்பி பேராசிரியர் கார்த்திகேசு, பின் வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோர் கருத்துரைக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்று முடித்திருக்கிறார். வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோன் நானில்லை எனினும் ஒரு இலக்கிய கலந்துரையாடலாக பின் வரும் கருத்தை முன் வைக்கிறேன். இதை இரண்டு பகுதிகளாகத் தருகிறேன்.

முதல் மடலில் ரெ.கா கேட்டும் கேள்விகளுக்கு தருக்க ரீதியில் பதில் சொல்கிறேன். இதை பொதுவான பதிலாகக் கொள்க. ரெ.கா. பெரிய சுவைஞர். அவர் இலக்கிய சுவையை மனதில் வைத்து, பதில் தெரிந்தே கேள்வி கேட்கும் ஆசாமி. எனவே நான் சொல்லித்தான் அவருக்குத் தெரியும் என்று இல்லை.

இரண்டாவது மடலில் கொஞ்சம் ஐதீகம் (சரித்திரம்) சொல்லி பதிலுரைக்கிறேன். இது வாசிப்பின் வசதிக்குத்தான். வழக்கம் போல் சொல்லிக் கொள்வது, இது ஒரு இலக்கியம்/சமூகம் சார்ந்த கருத்துப்பரிமாறல். இதில் சொல்லும் கருத்து யாருடைய தனிப்பட்ட ஆன்மீக உணர்வையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படுவது அல்ல. ஆண்டாள் நான் மிகவும் போற்றும் கவி. நிற்க.

ரெ.கா: ......ஆகவே பெரியாழ்வார்தான் இளம்பெண் ஆண்டாளாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு ஒப்பீட்டுக்கு மாணிக்கவாசகர் திருவெம்பாவை முழுவதிலும் ஒரு இளம் பெண்ணாகத் தம்மைக் கற்பித்துக் கொண்டு பாடுவதைக் காணலாம்.

பதில்: திரு.ரெ.கா. மிக அழகாக இப்படியொரு வாதத்தை முன் வைக்கிறார். இவ்வாதம் நான் முன்பு அறிந்ததுதான். மிகவும் நியாயமாகத்தான் படுகிறது. ஏன் பட்டர்பிரான் நாயக-நாயகி பாவத்தை சிறப்பித்து காட்டும் வண்ணம் தனித்தனி "தலைப்பில்" பாடாமல் தனித்தனி "நபராக" மாறி பாடி இருக்கக் கூடாது என்பதுதான் வாதம்! இப்படி வைப்பதில் ஆழ்வார்களின் முற்போக்கு இரண்டு மடங்காகக் கூடுகிறது! அதாவது அதுவரை தமிழில் இருந்து வந்த இலக்கிய பாணியை மெருகு ஊட்டும் வண்ணம் பெரியாழ்வார் புதுமை செய்கிறார் என்றாகிறது. பெரியாழ்வார் நிறைய புதுமைகளைப் புகுத்தியவர்தான். பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கிய பிரிவிற்கு வழி வகுக்கிறார். இக்கால புதுக்கவிதைகள் போல் மிக, மிக எளிதான வார்த்தைகளைப் போட்டு, பழமலய் (இவர் ஒரு தலித் கவிஞர்) போல் கிராமத்து வசனங்களையும் சேர்த்து பாசுரங்கள் பாடிய கவிஞர் பட்டர்பிரான். ஏன் இவர் மேலும் ஒரு படி போய், தன்னை பெண்ணாக பாவித்து கவிதை செய்யாமல் தனக்கு பெண் பெயர் கொடுத்து கவிதை செய்திருக்கக்கூடாது? என்பது கேள்வி! பெண் பெயரில் எழுதும் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் நிறைய அறிவோம் நாம். அது இருபதாம் நூற்றாண்டு பழக்கம் என்று சொல்லாலமெனில் பெரியாழ்வார் எட்டாம் நூற்றாண்டிலேயே இப்பழக்கத்தை தொடங்கிவிட்டார் என்றாகிறது. ஆக இப்படிப் பார்த்தால் புதுமை செய்வதில் ஆழ்வார்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை போல் தோன்றுகிறது!! ஆனாலும் அப்படிக் கொள்ளாமல் ஆண்டாள் பெண் கவி என்றும் என்னால் பதில் சொல்ல முடியும்.

ரே.கா: முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய ஆசிரியர்களில் ஆண்டாள் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது. ஆண்டாளைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாகக்கொண்டு பிற பெண் பாசுர கர்த்தாக்கள் எழுந்ததாகத் தெரியவில்லை. இந்த வகையில்ஆண்டாளை unique என்று கொள்வதா அல்லது பாசுரகர்த்தாக்கள் வரிசையில் அவர் out of place என்று கொள்வதா தெரியவில்லை.

பதில்: இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் குரல் அதிகம் கேட்காததை ஆச்சர்யமாகபார்க்க வேண்டியதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இலக்கிய
கர்த்தாக்களைத்தான் தமிழ் கொண்டுள்ளது. அதில் ஆண்டாள் முதன்மை என்று தோன்றுகிறது.

ரெ.கா: கவித் திறன், சொல்லாடும் திறன் இவற்றைப் பார்க்கும்போது ஆண்டாள் பெரியாழ்வாரின் clone என்றே சொல்லிவிடலாம் போலிருக்கிறது. ஆண்டாள் பாடும்போது அவர் பாடல்களில் பெரியாழ்வார் போலவே ஒருg ay abundance இருக்கிறது.

பதில்: இதிலும் அதிக அதிசயம் இல்லை. சங்கீத கச்சேரிகளில் சிஷ்யர்களை கூட வைத்துக் கொண்டு பாடுவது, அவர்கள் பாணி அப்படியே தொடர வேண்டும் என்ற ஆசையால்தான். பெரியாழ்வாரின் பெண் பின் எப்படி இருப்பாள்? தாயைப் போல (பெரியாழ்வார் தாய்தான்!) பிள்ளை நூலைப் போல சேலை.

ரெ.கா: மேலும் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் படிப்படியாகப்பாடி (தாலாட்டு, செங்கீரை இப்படி) இந்த வாலிபப் பருவத்தை வசதியாக ஒதுக்கிவிட்டு, அப்புறம் கண்ணனின் அற்புதங்கள் (மலையைக் குடையாக்கியது) கிருஷ்ணாவதார ராமாவதாரச் சிறப்புக்கள் என்று தாவிவிடுகிறார், இடையில்உள்ள சிருங்காரங்கப் பகுதியை ஆண்டாளுக்காக முற்றாக விட்டுக் கொடுத்ததுபோல. இந்த dilineanation செயற்கையாக இருக்கிறது.

பதில்: இதிலும் பெரிய அதிசயம் இல்லை. ஆழ்வார்களை மிகவும் கவர்ந்த உருவகம் கண்ணனை குழந்தையாகப் பார்ப்பதுதான். எத்தனையோ அவதாரங்கள் இருக்க மீண்டும், மீண்டும், ஆழ்வார் மாற்றி, ஆழ்வார்கள் கண்ணனை குழந்தையாக பார்த்து இரசித்து இருக்கிறார்கள். நம்மாழ்வார் தாமோதரன் என்ற கண்ணனின் சிறப்பை சொல்ல வரும் போது "தன்னை கட்டுன்னுப் பண்ணிய பெருமாயன்" (அதாவது இறைவன் நம்முள் வந்து தங்க காத்துக் கொண்டு இருக்கிறான், ஆனால் நாம்தான் அவனை கண்டு கொள்வதில்லை என்ற பொருளில்) என்று சொல்லி அவனது எளிமையை எண்ணி உருகுகிறார். இதில் பெரியாழ்வார் செய்வித்த திருவாய்மொழி "கண்ணனின் சிறப்பை காட்டும் தமிழ் பாகவதம்" என்றுதான் பார்க்கப் படுகிறது. கண்ணன் கதையில் பிருந்தாவன பருவம்தான் மிகவும் சிறப்பானது. கண்ணனே வடமதுரைக்கு அரசனாக செல்லும் போது கோபிகைகளைப் பிரிந்து செல்வதை நினைத்து கண்ணீர் சிந்துவதாகத்தான் பாகவதம் சொல்கிறது. யாருக்கு சார் ஊழல் பிடிச்ச அரசாட்சி பிடிக்கும்? பிருந்தாவன குதூகலம் வருமா? மேலும், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழுவதும் தேடினாலும் கண்ணனின் கீதை கதை சொல்லப் படவே இல்லை.

இதற்கு, 1. கீதை ஆழ்வார்கள் காலத்திற்கு பின் தோன்றி இருக்க வேண்டும், அல்லது, 2. ஆழ்வார்களின் உள்ளம் போர்களை வருணிக்காது. அது அவர்களால் முடியாத செயல் என்று கொள்ள வேண்டும்.

ரே.கா: இன்னொரு கோணத்தில் ஆண்டாள் இந்த சிருங்காரத்தைத் தவிர வேறு எதையும் பாடவில்லை. ஆண்டாள் தன் இளம் காதல் பருவத்திலிருந்து முதிர்ந்ததாகத் தெரியவில்லை. ஆண்டாள் மார்க்கண்டேயன் போல என்றும் இளமையாக இருந்து காதல் ஒன்றையே அனுபவித்துத் திடீரென்று மறைந்துவிட்டது போல் இருக்கிறது.

பதில்: ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு பாவம் அதிகமாக பிடிக்கிறது. பெரியாழ்வாருக்கு தன்னை யசோதையாக பார்த்து கண்ணனை தன் குழந்தையாக அனுபவிப்பதில்தான் சுகம் தெரிகிறது. சேர மன்னனான திருமங்கை ஆழ்வாருக்கு இராமனின்மீது பக்தி அதிகம். இராமனுக்கு தாலாட்டுப் பாடிய ஒரே ஆழ்வார் இவர்தான்! சிவவாக்கியர் என்ற (:-) திருமழிசையோ இந்த தனிமனித அனுபங்கள் எதுவுமில்லாமல் இறைமையை ஒரு விஞ்ஞானி போல் அணுகி பாடி இருக்கிறார். எனவே யசோதையான பெரியாழ்வாரால், கண்ணனைக் காதலனாகப் பார்க்க முடியவில்லை (அதுக்கெல்லாம் ஒரு பாரதி வேண்டும்!). ஆனால் ஆண்டாளுக்கோ, கண்ணன் என்ற காதலனைத் தவிரவேறு எதுவும் தெரியவில்லை.

இந்த பாவங்கள் இந்திய சமய சிந்தனையில் மிக முக்கியமானவை. பிரம்மச்சாரிகளுக்கு ஆஞ்சநேயர் பிடிக்கும், வாழ்வின் நிலையாமையை பார்ப்பவர்க்கு சுடலை மாடனை பிடிக்கும், தத்துவ ஞானிகளுக்கு கீதையின் கண்ணனை பிடிக்கும், சிருங்காரம் பிடிப்பவர்களுக்கு கண்ணனின் இளமைப் பருவம் பிடிக்கும். இதை "இஷ்ட தெய்வ உபாசனை" என்று சொல்வர். இந்திய சமயச் சிந்தனையில் தனி மனித தேவைகளுக்கேற்றவாறு இறைமை வளைந்து கொடுக்கும் தன்மை மிகச் சிறப்பானது.

ரெ.கா: நாணம் என்பது சிறிதும் தொனிக்காத காமம் உடைய பாடல்கள்.

"காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட் டிடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய் நானிருப்பேனே"

"என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே"

"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென்றுரையீரே!"


இப்படி ஒரு பெண் வெளிப்படையாக ஏட்டில் பாடி புலவர்கள், பக்திமான்கள் நடுவில் வைக்க முடியுமா? இவை தனிப்பட்ட காதல் கடிதங்கள் அல்ல, பக்தியை வெளிப்படுத்தப் பலரும் வாய்விட்டுப் பாடும் பாடல்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்க.

பதில்:

இதை இப்படி, இப்போது எழுதுவது யார்? ஒரு ஆண்!
நாணம், கற்பு இவைகளை பெண்ணின் குணங்களாக வைத்தவர் யார், ஒரு ஆண்!
காமம் என்பது ஆண்கள் மட்டுமே சொல்லி, பேசி, எழுதி அனுபவிக்கக் கூடியது என்று சொல்பவர் யார்? ஆண்!
காமத்திற்கு பெண் வேண்டும்,ஆனால் அவள் காமத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்வது யார்? ஆண்!

இப்படிப் பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் வெடித்த புதுமைப் பெண்தான் ஆண்டாள்! இங்குதான் ஆண்டாள் ஔவையாரிடமிருந்து வேறு படுகிறாள். பெண்ணைப் பற்றி ஔவை எப்படிப் பாடுகிறாள்:

"ஏசி இடலின் இடாமையே நன்று எதிரில்
பேசும் மனையாளில் பேய் நன்று
நேசமில்லா வங்கணத்தில் நன்று
வலிய பகைவாழ்வில்லா சங்கடத்தில்
சாதலே நன்று"


"உண்ணீர், உண்ணீர் என்று உபசரியாதம் மனைவி உண்ணாமை கோடி..."

இதில் முழுமையாய் ஔவையார் ஆண்கள் எப்படி பெண் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார்களோ அப்படியேதான் அவரும் சொல்கிறார். இதை ஒரு பெண் பாடினார் என்று சொல்வது அதிசயம்தான். ஔவையார் என்பது ஆணா? பெண்ணுக்கு ஆசை இருக்கக்கூடாதா? பெண் தன் ஆசையை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று பின் ஆண் வர்க்கம் எப்படித்தான் அறிந்து கொள்ளும்? நாச்சியார் திருமொழி இதற்கு பதில் சொல்கிறது. ஆயினும் நாச்சியார் திருமொழி D.H.Lawrence- Lady Chatterly's Lover இல்லை. ஆண்டாளும் மிகவும் கட்டுப் பட்டுதான், இலக்கிய வரம்புகளுக்கு உட்பட்டுதான் எழுதியிருக்கிறாள். இந்த சமூக கட்டுகள் இல்லாத பெண்ணின் தமிழ் எழுத்து இன்னும் எழுதப் படவே இல்லை என்பதுதான் தமிழின் மிகப் பெரிய குறை!

இந்தியப் பாரம்பரியத்தின் மீது எனக்கு அளவில்லா மரியாதை வருவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வை நோக்கிய விதம்தான். கடவுள், புனிதம் அது, இதுவென்று சொல்லி இந்த பண்டிதர்களும், பூசாரிகளும் (I mean the middle men between God and men) இறைமையை நாம் தினம், தினம் அனுபவிக்கும் வாழ்விலிருந்து பிரித்து விட்டார்கள். கடவுளை இவர்கள் கோவிலில் சிறை செய்து விட்டனர். கண்ணன் என்னும் தெய்வம் ஒண்ணு மண்ணாக நம்முடன் விளையாடுவதில்தான் ஆசை கொள்கிறது. இதை நன்கு உணர்ந்துதான் ஆழ்வார்கள் கண்ணனை வாழ்வின் உருவகமாகப் பார்த்தனர். இவ்வழியில் வந்த எம் ஆசான் பாரதியும் கண்ணனைச் சொல்லும் போது " வாழ்வு நிலையே கண்ணம்மா" என்றுதான் பாடுகிறான். இதை மிகச்சரியாக புரிந்து கொண்டதால்தான் வைணவ ஆசார்யர்களில் மேரு மலையாக விளங்கும் இராமானுச முனி "கண்ணனுக்கே ஆமது காமம்" என்று காமத்தை முதன்மைப் படுத்துகிறார்.

மன்மதனை எதிர்த்த சிவனுக்கும் ஒரு பெயர் "காமேஸ்வரன்". அத்வைத ஆசார்யர்களில் சிறப்புப் பெற்ற காஞ்சிப் பெரியவர் இருக்கும் பீடத்தின் பெயர் "காமகோடி" பீடம். அத்வைத பிதாமகர் ஆதி சங்கரரும் செளந்தர்ய லகரியில் அப்படி வர்ணிக்கிறார் அம்பாளை. நம் ஆச்சார்யர்களில் யாரும் காமத்தை தவறான கண்ணணோட்டத்தில் கண்டதில்லை. காமம் அழுக்கு அல்ல! காமம் அழுக்கு எனில் நீங்களும் நானும் அழுக்குதான். காமம் என்ற வாழ்வின் அடிப்படையான ஒன்று அசிங்கமாகப் பார்க்கப் படும் பழக்கம் பின்னால் தோன்றியது.

சுவையான விஷயங்களுக்கே போதையளிக்கும் (addiction) குணம் உண்டு. காமத்தில் போதையுற்று மானுடம் போய்விடக் கூடாது என்பதற்காக காமத்தை குறைத்து சொல்லப் போய் கடைசியில் அது தீண்டப் படாத பொருள் போல் ஆகிவிட்டது. இது தமிழனின் மனநிலையில் செய்துள்ள தீங்கு அளவிட முடியாதது. பார்க்கும் இடமெல்லாம் காமம் நிறைந்து இருக்கிறது (சினிமாவை மட்டும் சொல்ல வில்லை நான்!) ஆனால் தற்கால சமய சிந்தனை அதை நிந்தனை செய்கிறது. இந்த இரு தலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கையும் நமக்கு பழகித்தான் போய்விட்டது!

: [tamil.net] Pasura madal 24 Date: Tue, 23 Dec 1997 22:26:54 +0100

மடல் 025 - வேங்கடவற்கு என்னை விதி

[பெரியாழ்வார்தான் ஆண்டாளா ? (பகுதி இரண்டு)]

பெரியாழ்வார்தான் ஆண்டாள் என்று கொள்வதில் பெரிய சமூக/சரித்திர தில்லு முல்லு இருப்பாதாக நம்ப வேண்டி வருகிறது. ஏனெனில் இது ஒரு பெரிய இலக்கிய புரட்டு என்றாகிறது. செழுமையான வைணவ பாரம்பரியம் அப்படியானதொரு பொய்யை நம்பி எழும்பி இருக்கிறது என்று சொல்வது நம்மை நாமே இழிவு படுத்துவது போலாகி விடுகிறது. குருபரம்பரை நூல்கள் ஆண்டாள் என்ற பெண் உதித்த நட்சத்திரம், ஆண்டு, மாதம் எல்லாம் சொல்லுகின்றன. ஆண்டாளும் தனது பாடல்களில் வரிக்கு ஒருமுறை பட்டர்பிரான் கோதை என்றும், குழல் கோதை என்றும், வில்லைத் தொலைத்த புருவத்தாள் என்றும், பெண்மை நிரம்பிய வரிகளால் சொல்வதைப் பார்க்கும் போது "பல ஸ்துதி" என்று சொல்லும் வரிகளில் இவ்வளவு பொய்மை இருக்கும் என்று கொண்டால், பின் அவள் சொல்லும் இறைமையில் என்ன உண்மை இருக்கும் என்ற விபரீத, விதண்டா வாதத்தில் போய் முடியும்! மேலும், பாண்டியன் சபையில் பரம் பொருள் எது என்று நிறுவி பாண்டியனை சீடனாகக் கொண்ட "வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர் விட்டு சித்தன்" எப்படி இப்படியொரு பொய்யை நிறுவ முடியும்? அப்படி நிறுவி அவர் காணும் பேறுதான் என்ன? அப்படியொரு பொய்யைச் சொல்பவர் எப்படி "விட்டுசித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே" என்று தைர்யமாகக் கூறமுடியும்?

ஆண்டாள் மேலும் தன்னைப் பற்றி இப்படி கூறுகிறாள்:

மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.


இதில் "தாழ்குழலாள் துணிந்த துணிவை" என்ற வரிகள் முக்கியமானவை. அவளுக்கே நன்கு தெரிந்து இருக்கிறது தான் மரபை மீறி துணிந்து பல விஷயங்களைச் சொல்கிறோமென்று.
தன்னை பெண்ணாக பாவித்து யசோதை போல் வாழ்ந்த பட்டர் பிரானால் தன் பெண், பெண்ணாக இருந்து கண்ணன் மேல் காதல் கொள்வதைப் பெரும் பேறாகத்தான் பார்த்திருக்க- முடிந்திருக்குமேயன்றி வேறொன்றாக அல்ல. அதனாலாயே அவள் காதல் மொழிகளை அவர் குழல் இனிது, யாழினிது என்பது போல்தான் கேட்டு அனுபவித்து இருந்திருக்க வேண்டும். அதை விரசம் என்று ஒரு காலும் அவரால் சொல்லி இருக்க முடியாது. ஆண்டாளின் தைர்யம், விட்டு சித்தர் கொடுத்தது. அப்பாவே சரி என்று சொல்லும் போது, கோதையால் ஏன் தைர்யமாக எழுத முடியாது?

இனி அகச் சான்றுகளிலிருந்து புறச் சான்றுகளுக்குப் போவோம். நாச்சியார் திருமொழித் தனியன்களைப் பார்ப்போம்:

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.


மட மயில், மெல்லியலாள், அரங்கனின் துணைவி என ஆண்டாளை விளிப்பது அவள் பெண் என்று காட்டுகிறது. மேலும், பெரியாழ்வார் காலத்தால் பின் தங்கியரானாலும், அவர் செய்வித்த பல்லாண்டு, பல்லாண்டு என்ற பாசுரத்தின் மூலம்தான் பாசுர சாற்றுமுறை ஆரம்பமாகிறது. இது எவ்வளவு பெரிய பேறு! இது போதாது என்று அவருக்கு விட்டு சித்தன் என்ற பெயர் போய் "பெரிய ஆழ்வார்" என்ற பட்டம் வேறு. இது அவருக்குப் பின் வந்தது என்று கொண்டாலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் அரசனால் சிறப்பிக்கப் பெற்றிருக்கிறார். தனியாக ஆண்டாள் என்ற பெயர் கொண்டு அவர் புகழுக்காக செய்ய வேண்டியது ஏதுமில்லை.

உய்யக் கொண்டார் வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர். அவர் நெக்குருக ஆண்டாளை நினைத்து இப்படியொரு தனியன் செய்கிறார்:

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.


பல் வளையாய் என்ற பதம், தொல் பாவை என்ற பண்டைய பெண்கள் செய்யும் நோன்பு இவைகளை செய்வித்த ஆண்டாள் - இவள் பெண் என்பது. உருக்கமான வரிகள், ஆண்டாளைப் போல் வேங்கடவற்கே என்னை விதி என்ற மாற்றம் நிகழ அவளையே சரண் புகுகிறார். வேங்கடவற்கே என்ற ஏகாரம் கவனிக்க வேண்டியது. உய்யக் கொண்டார் போன்ற ஆச்சார்யர்களே இத்தகைய உள மாற்றத்திற்கு ஆண்டாளிடம் மன்றாடும் போது, ஆண்டாள் கொண்ட பக்தி சாதாரணமாக எல்லோருக்கும் வரக் கூடிய ஒன்றில்லை என்று தெரிகிறது.
ஸ்ரீராமானுஜர் ஆண்டாளின் மேல் பேரும் பக்தி கொண்டவர். இவருக்கு "திருப்பாவை ஜியர்" என்ற பட்டப் பெயர் கூட உண்டு. இவர் திருமாலிருஞ் சோலை கள்ளழகரை சேவிக்க சென்ற போது கீழ்காணும் பாசுரத்தை (நாச்சியார் திருமொழி) சேவித்தார்:

நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.

இன்றுவந் தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்றுநூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே.


அப்போதுதான் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிறுமியான ஆண்டாள் பெருமாளுக்கு உண்மையிலேயே நூறு தடா வெண்ணெய் வார்த்து அக்கார அடிசில் செய்வித்து இருப்பாளோ என்று. இவர்தான் திருப்பாவை ஜியர் ஆச்சே, ஆளைப் பேரை பிடித்து இவர் ஆண்டாள் வேண்டிக் கொண்ட பிரகாரம் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யதாக வரலாறு.

இவ்வளவு உருக்கமாக இவர் செய்வித்த காரியம் ஆண்டாளின் மனதை நிறையச் செய்தது.இவர் ஸ்ரீவில்லி புத்தூர் க்ஷேத்திராடணம் செய்ய வந்த போது "அண்ணா!"என்று கூவியவாறு ஆண்டாள் வந்ததாகவும், அவள் வந்து இவரை வரவேற்ற இடத்திலேயே ஆண்டாளின் சன்னிதானம் இருப்பதாகவும் ஐதீகம்.

இதை சரித்திர உண்மையென்று நிறுவுவது கடினம்தான். ஆனால் இந்த ஐதீகத்தில் உள்ள உண்மை என்னவெனில் ஆண்டாள் பெண் என்பது. பெரியாழ்வார் ஓடிவந்து, ஸ்ரீராமானுஜரை "அண்ணா!" என்று அழைக்க வில்லை. அப்படி அழைத்திருந்தாலும் "தம்பி" என்றுதான் அழைத்திருப்பார். ஏனெனில் அவர்"பெரியாழ்வார்" (இதுதான் _ஆழ்வார் கடி_ என்பது:-)

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன. ஆண்டாள் பெண் என்பதை.

ஆண்டாளை பெண்தானா என கேள்வி கேட்க வைத்தது எது? அவளது விரகக் கவிதைகள். விரகக் கவிதைகளை ஆண்கள் எழுதலாம், ஆனால் பெண் எழுதினால் தப்பு என்னும் ஆணாதிக்க மனோ பாவம். இதற்கு மாற்று உண்டா? ஸ்ரீராமானுஜர் சொல்கிறார், "கண்ணனுக்கே ஆமது காமம்" எனவே நாமெல்லோரும் பெண்கள்தான் என்று!
என்ன ரெ.கா சார்? இப்போ நீங்க ஆம்பிளையா? பொம்பளையா?

Subject: [tamil.net] Pasura madal 25
Date: Tue, 23 Dec 1997 22:29:10 +0100

மடல் 026: படைப்பிலக்கியமும், சுதந்திரமும்

ஆழ்வார்களாகட்டும், ஆதி சங்கரனாகட்டும், கம்ப நாடான் ஆகட்டும் இவர்கள் அடிப்படையில் படைப்பிலக்கிய கர்த்தாக்கள். இவர்கள் கவிகள். கவிஞர்கள் அடிப்படையில் அழகின் உபாசகர்கள். அழகை ரசிக்கத் தெரிந்ததால்தான் வறுமையிலும் பாரதியால் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" எனப் பாட முடிந்தது. அழகு நிறைந்த உலகில், பெண்ணும் அழகுதான். அதனால்தான் கம்பனும், ஆதி சங்கரனும், ஆண்டாளும் பெண்ணின் அழகை விகல்பமில்லாமல் வருணிக்கின்றனர்.

படைப்பிலக்கியத்தின் தோற்றுவாய்க்கும், சமய உணர்விற்கும் அடிப்படைத் தொடர்பு இருக்கிறது.இலக்கியம் மனதில் தோன்றும் பொழுதுகள் புனிதமானவை. கொஞ்சமேனும் மன ஒழுக்கமும், அழகுணர்ச்சியும் இல்லாதவர்களால் சாகா இலக்கியம் படைக்க முடியாது. இது சரித்திரம் காட்டும் உண்மை. இதை மற்ற ஆக்கங்களுக்கும் பொது என்று சொல்லாம். 9வது சிம்பொனியை எழுதும் போது பீத்தோவனுக்கு பார்வையும், கேட்கும் திறனும் போய்விட்டது. இருந்தாலும் அவனால் உன்னத இசையை உலகிற்கு அளிக்க முடிந்தது. தியாகராஜர் ராம ஸ்மரனையில் மூழ்கி பாடத் தொடங்குமுன் ராக தேவதைகள் அவரிடம் கெஞ்சுமாம். "நேற்று கல்யாணியில் கீர்த்தனை செய்தாகிவிட்டது, இன்று சிவரஞ்சனியில் பாடுங்கள்" என்று!

ஆக்கத்தின் தோற்றுவாய் மிக, மிக பூடகமானதும், ஆச்சர்யம் நிரம்பியதும் ஆகும். இது கலைக்கு மட்டும் பொதுவன்று. அறிவியலுக்கும் இது பொருந்தும். ஆனால் அறிவியலில் இதைப் பற்றி பேசுவது மூட நம்பிக்கை என கருதப்படுவதால் இதைப் பற்றிய ஐதீகங்கள் அங்கு உருவாகவில்லை. இருப்பினும், பென்ஜீன் மூலக்கூறின் வடிவத்தை, ஒரு கனவில்தான் ஹெக்கூல் கண்டான். குவாண்டம் இயற்பியல் சூத்திரங்களை உலகிற்கு விளக்க முற்பட்ட விஞ்ஞானிகள் அது "விளக்கத்திற்கு" உட்படாத மாயமாக இருப்பதை உணர்ந்துதான், கிழக்கிந்திய மெய்யியல் உண்மைகளுடன் அவைகளை ஒப்பு நோக்கினர்.உதாரணமாக, ஒளியின் அடிப்படை அலகான ஒளிச்சான் (photon), பார்ப்பவரின் இருப்பைப் பொறுத்து தோன்றும். அதாவது பார்ப்பவர் இல்லாமல் பார்க்கப்படுவது இல்லை. எனவே ஒளிச்சானின் உண்மையான இருப்பை யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அது இருக்கிறது அதே சமயத்தில் அது இல்லை எனும் நிலை! இந்த நிச்சயமின்மை அறிவியலுக்கு புதிது. அதனால்தான் ஐன்ஸ்டைன் கூட குவாண்டம் இயற்பிலை கிண்டல் செய்யும் விதத்தில்"கடவுள் பகடை ஆடுவதில்லை" என்று சொன்னார். ஆனால் நம்மாழ்வார் என்ற தமிழ் கவி குவாண்டம் விஞ்ஞானிகளுடன் ஒத்துப் போகிறார்:

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளனலன் எனில், அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென இவை குண முடைமையில்
உளன் இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே


(நம்மாழ்வார் திருவாய்மொழி - முதல் பத்தில் ஒன்பது).

ஆக படைப்பிலக்கியதின் தோற்றுவாய் விளக்கத்திற்கு பிடிபடாத பூடகமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் அந்தக்கால கவிகள் இப்பூடகத்தை இறை உணர்வுடன் பார்த்து கவி சமைத்தனர்.

மேலும் படைப்பிற்கு அடிப்படையான தேவை சுதந்திரம். முழு சுதந்திரமில்லாமல் படைப்பு நிகழாது.சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரமற்றுமன்று, உள சுதந்திரமுமாகும். உள்ளத்தில் எந்தத் தடையுமில்லாமல் பறவை போல் பறந்து திரியும் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த அகச் சுதந்திரம், புறச் சுதந்திரத்தை சார்ந்ததுதான். இதை தமிழ் படைப்பிலக்கியவாதிகள் மிக ஆதி காலத்திலேயே உணர்ந்து விட்டனர். அதனால்தான், வெறும் குழு/இனத் தலைவனைப் பாடிக் கொண்டிருந்த வழக்கத்தை மாற்றி இறை பொருளை மாற்றாக வைத்தனர்.

குழுத்தலைவன் சமூக காரணங்களால் கட்டுப்பட்டவன். முழு சுதந்திரம் இல்லாதவன். சுதந்திரமில்லாத ஒன்றை மூலமாக வைத்து இலக்கியம் படைப்பது சாத்தியமில்லை. மேலும், அரசன் அரசியல் காரணி. அரசியலோ தனி மனித அகங்காரத்தை அடிப்படையாக் கொண்டது. அகங்காரமோ இயற்பியல் உண்மையற்ற (physical reality) மனத்தின் வெளிப்பாடு. அகங்காரமும், அரசியலும் அடிப்படையில் ஊழலை வளர்ப்பவை. இப்படி எந்த வகையிலும் புனிதமில்லாத ஒன்றை பாடு பொருளாக வைத்து கவி சமைப்பதை நிறுத்தி, ஆக்கத்தின் மூலகாரணியான சுதந்திர வஸ்துவான இறைவனை முன் வைத்து கவி சமைக்கத் தொடங்கினர்.

இதனால் இலக்கியம் முன்னெப்போதுமில்லாத சுதந்திரத்தைப் பெற்றது. இப்புதிய யுத்தியை வைத்து இவர்களால் சமூக கொடுமைகளைச் சாட முடிந்தது. துணிந்து திருநாவுக்கரசரால் "யாமார்க்கும் குடியல்லோம்" என்றும்; திருமூலரால், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்றும் சொல்ல முடிந்தது. இதை ஒரு சமூக இயக்கமாக ஆழ்வார்கள் வளர்த்திருப்பதற்கான அகச்சான்றுகள் கிடைக்கின்றன. உதாரணம், திருப்பாணாழ்வாரின் அகத்தூய்மையை உணராத ஜாதி இந்துக்கள் அவரை துன்புறுத்துகின்றனர், இது கண்டு பொறுக்காத தொண்டரடிப்பொடியாழ்வார் இப்படிப் பாடுகிறார்:

பழுதிலா வொழுகலாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழி குலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தோழுமின், கொடுமின், கொள்மின்!
என்று நின்னொடு மொக்க
வழிபட வருளினாய் போன்ம்
மதிள் திருவரங்கத்தானே!


அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!

(திருமாலை -42-43)

எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! இவர்கள் தெய்வம் என்ற கருப்பொருளை வைத்து ஒரு சம தர்ம சமூதாயத்தை உருவாக்கப் பார்த்தனர். அதே கருப்பொருளை வைத்து பெண் அடிமைத் தளையையும் எதிர்த்தனர்:

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமற்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வரக்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய், மன்மதனே


என்று நாச்சியார் திருமொழியில் கோதை நாச்சியாரான ஆண்டாள் சொல்கிறாள். இதில் உவமை அழகோடு தனக்கு நிகரான ஆண்பிள்ளை இல்லை என்பதை, காட்டில் திரியும் நரி போன்றவர் ஆடவர் என்று துணிந்து சொல்ல கடவுள் பக்தி என்ற யுத்தி பயன்படுத்தப் படுகிறது. மேலும்,

அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
.


"செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்சிறுமா னிடவரை" என்னும் வரிகள் முக்கியமானவை. பெண்ணின் மார்பு பார்த்து "சைட்டு" அடிக்கும் சிறு மானிடர் என்று ஆண்டாள் ஒரு போடு போடுகிறாள்!அதே தைர்யத்தில் தன் பாலியல் ஆசைகளையும் மறைக்காமல் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயத்தில் குடும்பப் பெண்ணான ஆண்டாளால் இப்படி சொல்ல முடிகிறது.

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகுலஞ் செய்யும்
ஆங்குயிலே! உனக்கென்ன மறைத்துறைவு?


ஆண்டாள் மிக தைர்யமாகத்தான் இதைச் சொல்கிறாள். உனக்கென்ன மறைத்துறைவு? என்ற பதத்தால் அவள் தன் உள்ளுணர்வுகளை யாரிடமிருந்தும் மறைக்க வேண்டிய தேவையில்லை என்பதை தெளிவாகச் சொல்கிறாள்.

இத்தகைய பாலியல் சுதந்திரம் தற்போதைய எழுத்துகளில் அம்பை, வாசந்தி இவர்களிடம் காணக்கிடைக்கிறது. ஆனால் அதற்கு தமிழகம் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 1200! இருபதாம் நூற்றாண்டில் பெரும் சமூக மாற்றங்களுக்குப் பிறகுதான் மேலைத்தேசத்து பெண்களாலும் இப்படிப் பட்ட துணிவுடன் இப்போது பேசமுடிகிறது, எழுத முடிகிறது. ஆனால் ஆண்டாள் இதைச் சொன்ன காலமோ எட்டாம் நூற்றாண்டு!

Date: Sun, 04 Jan 1998 13:36:01 +0100

மடல் 027 - சில்லென்று அழையேல்!

திருப்பாவை அனைத்தையும் எழுச்சி கீதங்கள் என்றால் அது மிகையல்ல. தூங்கும் அனைத்தையும் அன்பாய், இதமாய் எழுப்பும் கீதங்கள் இவை. நாச்சியாரின் பரி பக்குவம் இங்குதான் தெரிகிறது. வைணவ மரபில் அவள் திருவின் அவதாரமான ஆதித்தாய். தாய் தன் குழவியை எழுப்பும் பாங்குடன் நல் வார்த்தை சொல்லி, மெல்லமாக எழுப்புகிறாள்
கோதைத்தாய். தூக்கிவாரிப் போடுமாறு எழுப்புவது பீதியைத் தரவல்லது. அது எவ்விதத்திலும் நல்லதல்ல. அதனால்தான், தூங்கும் சிறார் களை எல்லே, இளங்கிளியே! என்றும், செல்வச் சிறுமீர்காள் என்றும், மாமன் மகளே என்று முறை சொல்லியும், குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற் கொடியே என்றும், நந்தகோபனை - எம்பெருமான் நந்தகோபாலா என்றும், யசோதையை எம்பெருமாட்டி என்றும், செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா என்றும், நப்பின்னையை கந்தம் கமழும் குழலீ! மைத்தடம் கண்ணினாய்! என்றும், நம் கண்ணனை வெப்பம் கொடுக்கும் விமலா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்றும் குழையக் குழையச் சொல்கிறாள். வாசிக்கும்போதே இதமாக இருக்கிறது.

பாவைப் பெண்டிர் என்பவர் யார்? "வையத்து வாழ்வீர்காள்" என்று கோடி காட்டுகிறாள், ஆண்டாள்! பாவைப்பெண்டிர் நாம்தான்! சிறுவர், சிறுமியர், மாமன், மைத்துனன், செல்வப் பெண்டாட்டி, மணாளன், அப்பா,அம்மா என்று யாரை விட்டாள் கோதை? ஒருவர் விடாமல் எல்லோரையும் இதமாக எழுப்புகிறாள்.

இந்த எழுச்சி எதற்காக? தூக்கத்திலிருந்து விழிக்கத்தான்! என்ன தூக்கம்? அறியாமை என்ற தூக்கம்தான். பின்வரும் பாசுரத்தைப் படியுங்கள்.

எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின், நங்கையீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(திருப்பாவை-15)என்ன இன்னும் உறக்கம்? விழிக்க வில்லையா? கேட்டால் ஆயிரம் காரணங்கள்[கட்டுக்கோப்பான பதில்கள்(கட்டுரைகள்)] சொல்லுவாய்! நீ வல்லீ (பலமுடையவள்)! கொஞ்ச நேரமாவது என்னைப் போல் ஆகி நின்றால் என்ன? எல்லோரும் விரைவாக (ஒல்லை நீ போதாய்) போங்கள். போய் எண்ணிக்கொள்ளுங்கள் - வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனை! எம் பாவையரே! இது வெளிப்படையான விளக்கம். இதுக்குப் போயா, திருப்பாவையை கோயிலில் வைத்து கும்பிடவேண்டும்? வல்லானை கொல்பவன், மாற்றழிக்க வல்லவன் இவனைப் போய் நாம் ஏன் கும்பிட வேண்டும்? இப்படித்தான் கேள்வி வரும், மேலோட்டமாக ஆண்டாளைப் புரிந்து கொண்டால். ஆனால் இப்பாடல் முழுவதும் உருவகம் நிரம்பியது.

தமிழ் மறை. மறைவான பொருள் கொண்டதால் மறை!

மானுடம் முழுதும் அறியாமை என்னும் துயிலில் (உறங்கிக்) கிடக்கிறது. தான் யார் என்பது புரியாமல்,வெறும் சமூகம் தரும் பெயர், சாதி, பட்டம் இவைதான் தான் என்று நம்பிக் கொண்டு, பட்டத்திற்காகவும், சாதிக்காகவும், பெயர்களுக்காகவும் வெட்டி சாய்த்துக் கொண்டு ஒரு மடமையான வாழ்வை நடத்திக் கொண்டுள்ளது மானுடம். இதுதான் நம் அறியாமை.
இது தூக்கத்தை போன்று வலுவுள்ளது. யாருக்குத்தான் தூக்கத்திலிருந்து விழிக்க மனம் வருகிறது? விழிப்பு என்பது மாறும் நிலை. மத, மதப்பு போய் சுறு,சுறுப்பாய் இருக்க வேண்டிய நிலை. மாற்றங்கள் எப்போதும் வரவேற்கப் படுவதில்லை. சாதீயத்தை எதிர்த்து ஆன்மீகம் எவ்வளவு முயன்றிருக்கிறது. ஆதிக்க சக்திகள் இதற்கு அசையவில்லை. மானுடத்தின் 50% சதவிகிதமாய் நிற்கும் பெண்ணின் விடுதலைக்காய் பாடிய கவிகள் எத்தனை. யாரும் கிஞ்சித்தும் மாறுவதாகத் தெரியவில்லை. மனித நேயத்தை வலியுறுத்தி சன்மார்க்க சங்கங்கள் எத்தனை தோன்றின மண்ணில். எதுவும் உறங்கும் மனிதனை எழுப்ப சக்தியில்லாமல் இருக்கின்றன.நம் உறக்கம் எத்தகையது? ஆண்டாள் வரியில், "ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ (தூங்குமூஞ்சி), ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?" அதுதான் நிலமை! மந்திரப் பட்டுப் போயிருக்கிறோம். மந்திரங்கள் என்னென்ன?

சமூகம் தரும் பெயர்கள். பிச்சை, மண்ணாங்கட்டி, கட்டாரி இவை மானிடப் பெயர்கள். அவர்கள் அவ்வாறே நடத்தப்படுகிறார்கள். இந்த மந்திரத்தில் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறது சமூகம்.

சாதி! பிறவியினால் இன்ன சாதி என்று சொல்லிவிடுகிறார்கள். மந்திரத்திற்கு கட்டுண்டவர் போல் வாழ்நாள் பூராவும் அதையே நம்பிக் கொண்டு 97 கோடி மக்கள்! பட்டங்கள், பதவிகள் கொடுத்து கெளரவிக்கிறார்கள். அப்பதவிக்காகவும் , பட்டத்திற்காகவும் கொலைகளும், ஊழலும் செய்து வாழ்கிறான்மனிதன். எத்தகைய மந்திரம் இது! இதுதான் ஆண்டாள் சொல்லும் ஏமப் பெருந்துயில்.

இதிலிருந்து நமக்கு எழுச்சி வேண்டாமா? என்றாவது யோசித்தது உண்டா? தானாக எழும்பாவிட்டால் யாராவது எழுப்பக் கூடாதா? கோதைத்தாய் அதைத்தான் இதமாய் செய்கிறாள். பாசுரங்களை வாசியுங்கள்.

"எல்லே இளங்கிளியே" என்று தொடங்கும் பாடல் கவித்தன்மையாலும், பொருள் வளத்தாலும் சிறந்து நிற்கிறது. இன்னும் உறங்குதையோ? சில்லென்று அழையேன்மின்! என்கிறாள் கோதை. சில்லென்று அழைப்பது எப்படி?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதிலே" என்றான் மகாகவி பாரதி. தேன் வந்து "காதில்" பாய்ந்தால் இனிக்குமா என்ன? "சில்லென்று" அழை என்கிறாள் ஆண்டாள்! தூக்கத்தை கலைக்க சில்லென்று தண்ணீர் அடித்தால் தகும். ஆனால் இதத் தாயான கோதை, அந்த வருத்தத்தைக் கூடத் தராமல், சில்லென்று அழைத்தால் போதுமென்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள்! இதற்கு பல அர்த்தங்கள் தரலாம்! வல்லமையான கட்டுரைகள். பதில்கள் என்று ஒருபொருள். வல்லை என்றால் காடு, கோட்டை என்றும் பொருள் உண்டு. நாம் யார் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் மிக கட்டுக் கோப்பான, வலுவான எண்ணங்கள் கொண்டுள்ளோம்.அதையேதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.

கட்டுரைகள் என்பதை நாம் நம்மைப் பற்றி கொண்டுள்ள அறிவு என்றும் கொள்ளலாம். வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்! இது புதியவிஷயமல்ல. பண்டை நாள் தொட்டு மனிதன் இப்படித்தான் அடையாளம் தவறிப் போய் உள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம்!

இது கல்வி என்றநிறுவனத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். தற்போது பிரபலமாக உள்ள மேலைக் கல்வி முறையில் "தான்" என்ற அடையாளத்தை குறித்துதான் அனைத்து கல்வியும் உள்ளது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ அமைப்பில் மனிதனது சுய நலம் மிகவும் ஜாக்கிரதையுடன் பாதுகாக்கப் படுகிறது. பண்டைய இந்தியக் கல்வியில் மனிதனது "உண்மையான அடையாளத்தை" தேடும் பாங்கு நிறைய இருந்தது. மனிதனது உண்மையான அடையாளம் அவனது உறவுகளில் உள்ளது. தன்னுடன், தன் சுற்றத்துடன், தன் சூழலுடன், தன்னுள் உறையும் இறைமையுடன் அவன் கொள்ளும் உறவின் புரிதலில் உள்ளது அவனது உண்மையான அடையாளம். இதைத்தான்ஆண்டாள் "விழித்துப் பார்" என்கிறாள். நம் வல்லமையான கட்டுரைகள் இதைப் பற்றி இருக்க வேண்டும்என்று ஆசைப்படுகிறாள். இப்புரிதல் வரும் போது "தான்" என்ற ஈகோ அழிந்து "நாம்" என்ற பன்மைஉணர்வு வரும். எதிலும், எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் தெளிவு வரும். இதைத்தான் கோதைத்தாய்,"வல்லீர்கள் நீங்களே, நானேதானாகிடுக!" என்கிறாள். இந்த "நான்" பிரபஞ்ச ஒருமை! இதில் எல்லாம் அடங்குகிறது! இதை அறிய விரையாயோ? என விரைவு படுத்துகிறாள்.

வல்லானைக் கொல்பவன் யார்? வல்லான் யார்?இப்போது புரிந்திருக்கும், வல்லான் என்பவன் வேறு யாருமல்ல, அது நம் மனம்தான் என்பது. இந்த வல்லானை வெல்லும் திறன் இறைவனுக்குத்தான் உண்டு (இதையும் உருவகமாகக் கொள்க. இங்கு இறைவன் "புரிதலாக" நிற்கிறான்). இவன் எப்பேர் பட்டவன்? மாற்றாரை மாற்றழிக்க வல்லவன்! தான்தான் தன் பெயரும்,சாதியும், பட்டமும், பதவியும் என்று இருக்கும் மாற்றானை (அதாவது, நம்மை) மாற்றழிக்க வல்லவன்.

"வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்."

இவன் வல்லான், மாற்றழிக்க வல்லான் மற்றும் "மாயன்"! திருமாலுக்கு மாயோன் என்பது பண்டையப் பெயர்."மாயோன் மேய காடுற உலகமும்" என்பது தொல்காப்பியம். உலகு உருவாகும் போது அதன் ஒரு அங்கமாக மாயையையும் வருகிறது.

இதை நவீன வாக்கில் சொல்ல வேண்டுமெனில் பரிணாமத்தில் வளர்ச்சி என்று கணக்கிடப்படுவதே உயிர்களின் நரம்பியல் வளர்ச்சிதான். அது மனித இனத்தில்தான் உச்சமுறுகிறது. நரம்பு "மண்டலமாகும்"(complexity) போது தன்னிச்சையாக அது "தான்" (ஈகோ) என்ற உணர்வையும் மனிதனிடத்தில் உருவாக்குகிறது. இந்த "தான்" க்கு இயற்பியல் ரீதியில் பொருள் பரிமாணம் கிடையாது. இது மாயையான ஒன்று. இல்லாத ஒன்று இருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும். (யாராவது ஈகோவைக் கண்டதுண்டோ?). பிறப்பில் உள்ள இந்த மாயையை அறிந்து கொள்பவர்கள் இறைவனைக் கண்டு கொண்டதுபோல் ஆகும். இந்த மாயையைக் களைய உதவுவதால் அவன் மாயன் ஆகிறான். மாயமாய் உருவானது மாயமாய் அறியப் படுகிறது. இதைத்தான் மாணிக்கவாசகர் , "அவனருளால் அவன் தாள் வணங்கி" என்கிறார். இந்தமாற்றத்தை நம்முள் கொண்டு வருபவன் அவனே. அது ஒரு மாயச் செயல்தான்! அதனால் அவன் மாயன்!

இந்த மாயம் நடந்த பின், "உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகு நீர்" இவைகூட கண்ணன் உருவமாய்தெரியும்! வெற்றிலையே கண்ணனாகத் தெரியும் போது சக மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லே, இளங்கிளியே! என மதுரமாய் அழைக்கிறாள், மானுட மேன்மைக்கு! விழித்தெழுவோம் தோழர்களே!

Subject: [tamil.net] Pasura madal 27
Date: Sat, 17 Jan 1998 21:53:39 +0100

மடல் 028 - விண்ணீல மேலாப்பு!

ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து வருகிறோம்.

"எங்கள் சிற்றில் வந்து சிதையேலே" என்று கெஞ்சும் சிறுமியாக, "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்,தீக்குறளைச் சென்றோதோம்" என்று விரதமிருக்கும் விடலைப் பெண்ணாக, பின் தான் பெண் என்று உணர்ந்து வெட்கம் கொள்ளும் பருவத்தினளாக, "இனியென்றும் பொய்கைக்கு வாரோம், துகிலைப்பணிந்தருளாயே", பின் வாலைக் குமரியாக இருந்து விரகத்தில் தவிக்கும் பெண்ணாக - "கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து, ஒருநாள் தங்குமேல் என்னாவி தங்குமென்றுரையீரே", பின் "வாரணம்ஆயிரம் சூழ வலம் வந்து" நிற்கும் திருமாலை மணம் செய்யும் பெண்ணாக, "எல்லே, இளங்கிளியே!" என இதமாய் அழைத்து விழிக்க வைக்கும் தாயாக...இப்படி பல பரிமாணங்கள் ஆண்டாளுக்கு.இம்மடலில் இன்னும் சில தேமதுரத் தமிழ் பாசுரங்களை ரசிப்போம். ஆண்டாளின் தமிழ் ஆளுமை வியப்பிற்குரியது. அவள் வாக்கில் தமிழ் தவள்கிறது. பாருங்கள்,

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்,
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.

என்ன வர்ணனை பாருங்கள். சொல்லும் போதே, எண்ணும் போதே அழகாக இல்லை? கழல் வளையை, அதாவதுபெண்கள் அணியும் கணையாழியை, "கழல் வளை" ஆக்கினாரே! அதாவது கழண்டு விழும் வளையாக மாற்றிவிட்டாராம். அவ்வளவு இளைத்து விட்டது உடம்பு! பாவம்!

கோதையின் அடுத்த கவிதையின் அழகைப் பாருங்கள்:

விண்ணீல மேலாப்பு
விரித்தாற் போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே!
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே?

"விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்" ஆஹா! என்ன கற்பனை. பாரதி சொல்லுவான், "பட்டுக்கருநீலப் புடவை, பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ" ஒரே பரம்பரை!

இன்னொரு அழகான உவமை அழகு -

கார்காலத் தெழுகின்ற
கார்முகில்காள், வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப்
பொருதவனார் பேர்சொல்லி,
நீர்காலத் தெருக்கிலம்
பழவிலைபோல் வீழ்வேனை,
வார்காலத் தொருநாள்தம்
வாசகம் தந் தருளாரே.
"நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை" - மழை காலத்தில், தெருவில் ஆறாய் பாயும் நீரில்மிதக்கும் பழம் இலையை பார்த்து ரசித்ததுண்டா? என்ன பார்வை, என்ன உவமை - அடடா!

கண்ணனுக்கு எத்தனையோ பெருமைகள். ஆழ்வாராதிகள் அப்படி பாடி ஓய்ந்திருக்கிறார்கள். ஆனால் ஓர் பெண்கொடியை வதை செய்தாக ஒரு பழி அவனுக்கு இருப்பது ஆண்டாள் மூலமாகத்தான் தெரிகிறது!

 
மதயானை போலெழுந்த
மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்!
பாம்பணையான் வார்த்தையென்னே,
கதியென்றும் தானாவான்
கருதாது, ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே


இப்படி குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் போதும் அவள் கவி மனம், "மதயானை போல் எழுந்தமேகங்களை" ரசிக்காமல் விடவில்லை (அது சரி, மேகங்களின் மாறும் வடிவை பார்த்து ரசித்ததுண்டோ? இல்லையெனில் ஜன்னலுக்கு வெளியே உடனே பாருங்கள்!).ஆண்டாள் வேண்டிய மனோ நிலை மிக உன்னதமானது. ஊன் உருக அவள் காதல் செய்தாள். அவள் காதல் ஆழ்ந்த அன்பை ஆதாரமாகக் கொண்டது. இதோ,

என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்,
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே,
பொன்புடை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்.


வேல் நெடுங் கண்கள்! அதில் இமை பொருந்தி பல நாள் ஆகிறதாம். வைத்த கண் வைத்தபடி காத்திருக்கிறாள். அவளது பொன்னான மேனிக்கு அருள, கொடியுடைய புண்ணியனான கண்ணன் வர கூவுமாறு குயிலைக் கேட்கிறாள். இப்படி என்புருகி என்றாவது ஒரு சில நொடிகளாவது நாம் பக்தி செய்தது உண்டா???

"பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழையிருக்குதடி தங்கமே தங்கம்"

என்கிறான் பாரதி,

நேர முழுவதும் அப்பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்


தங்கம் போன்ற சொற்கள். இது என்ன நோய்?

வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்,
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்,
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்


உடல் நிறம் மாறுகிறது, மனம் குழைகிறது, மானம், வெட்கம் போய் விடுகிறது (இல்லாவிடில் நாச்சியார் திருமொழியே நமக்கு கிடைத்திருக்காது!), உணவு செல்லவில்லை, உடல் மெலிகிறது....

உணவு செல்லவில்லை-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; சகியே!
மலர் பிடிக்க வில்லை.
குண முறுதியில்லை;-எதிலும்
குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்ததடீ! -சகியே!
படுக்கை நொந்ததடீ!
கோலக் கிளி மொழியும்-செவியில்
குத்தலெடுத்தடீ!
நாலு வைத்தியரும்-இனி மேல்
நம்புவதற்கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்!

ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. நோய் அதிகமாய் விட்டால் என்ன நடக்கும்?

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள்! என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்


பெண் ஓடிப் போய் விடுவாள்! பெரிய பழி வந்து சேரும். அதனால் நந்தகோபன் வாழும் ஊருக்கு விரைவில் தன்னை இட்டுச் செல்லுமாறு வேண்டுகிறாள் கோதை. ஆசை முகம் மறந்து போகுமுன் இது நடக்கவேண்டும். அடடா! எவ்வளவு சிக்கல்?இப்படி காதல் கொள்ள வைக்கும் பொருள் சிறப்புடைதாய் இருக்க வேண்டும். நிலவுக்கு குறி வைத்தால்தான் கூரைக்காவது ஏற முடியும். நோக்கே, குறியே மட்டமானதாய் இருந்தால் வாழ்வில் முன்னேற்றமில்லை.ஆண்டாள் வைக்கும் குறி இறைமை. இதில் இடைப் பேச்சுக்கு இடமேதுமில்லை. இவள் காதல் கொள்ளும் கண்ணன் எப்படிப் பட்டவன்?

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள்! உங்களுக் கேச்சுக்கொலோ,
கற்றன பேசி வசயுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து,
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்


பரம்பொருளாய் இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து நிற்கும் அவன், மாடு மேயடா, பொடியா! என்றால் மாடு மேய்கிறான்; காட்டில் வாழுடா என்றால் காட்டு ஜனங்களோட ஜனமாய் காட்டில் வாழ்கிறான்; உரலில் வைத்து கட்டி உதைத்தால் உதையும் வாங்கிக் கொள்கிறான், பசுக் கூட்டங்கள் மழையில் நனைகிறதே என்று இரக்கப் பட்டு மலையையே குடையாகப் பிடிக்கிறான். அடடா! எவ்வளவு எளிமை. எவ்வளவு காருண்யம்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!..
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரு நன்மையெல்லாம் பேசி முடியாது!
கண்ணை இமையிரண்டும் காப்பது போல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கிறான். வாய் முணுத்தல் கண்டறியேன்.
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்தமாக்குகிறான்...
பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

கவியால், கவி அழகால், காருண்யத்தால், பண்பால், பக்தியால் வழிகாட்டும் எம் ஆசான் பாரதிக்கும், எம் இதத்தாய் கோதைக்கும் எம் நன்றிகள்.

மாலைத் தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி! அவள் தூய நற்பாதம் துணை நமக்கே


Subject: [tamil.net] Pasura madal 28
Date: Sun, 18 Jan 1998 13:35:57 +0100

மடல் 029- நின்மலா! நெடியாய்!

நான்மாட கூடல், ஆலவாய் என்றெல்லாம் அழைக்கப்படும் தென் மதுரை, தமிழ் வாழ்வின் உயிர் போன்றது. சங்கம் வளர்த்து, தமிழ் காத்து தமிழர் தம் பண்பாடு கூறும் நகர் அது. இம்முது நகரில் சைவமும்,வைணவமும் தோள் கோர்த்து வளர்ந்திருக்கின்றன. ஒரு புறம் ஆலவாய் அண்ணல் திருவிளையாடினால், மறுபுறம் கருமாணிக்கச் சுடராம் கண்ணன் பெரியாழ்வாருக்காக திருக்காட்சி அளிக்கிறான். திரிபுரம் எரித்த அங்கயற்கன்னி ஆணுக்கு நிகராக ஆட்சி செய்கிறாள் அங்கே!இம்முச்சுடரும் கூடும் ஒரு நிகழ்வு தான் மீனாட்சி கல்யாணம். அன்னையின் அண்ணனாக கரிய திருமால் தாரை வார்த்துக் கொடுக்க செஞ்சுடர் வண்ணன் சொக்கன் அன்னையின் கைத்தலம் பற்றுகிறான்.முக்கிய இந்த நிகழ்வுக்கு மதுரையை சுற்றியுள்ள பெருமாள் கோவில்களிலிருந்து பெருமாள் வருவதாக சம்பிரதாயம். மதுரை வட்டாரத்தில் பெரும் புகழ் கொண்ட வைணவ திருத்தலம் திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் கோவிலாகும். அங்கிருந்து அழகரும் வருகிறார். தனி ஆளாக வந்தால்,"கிளம்பினோம் வந்து சேர்ந்தோம்" என்றிருக்கும். ஆனால் பரிவாரம் சூழ ராஜா போல் வரும் கள்ளழகரால் வழியில் விழி வைத்துக் காத்திருக்கும் தன் பக்த கோடிகளை புறந்தள்ள முடியாதலால் பல்வேறு ஊர்களில் தங்கித் தங்கி வருகிறார். அவருக்கு இந்து மதத்தினர் மட்டும் பக்தர்கள் அன்று. துருக்கநாச்சியார்களும் அவன் அழகில் அவ்வப்போது மயங்குவதுண்டு. இப்படியாக இவர் துருக்க நாச்சியார் வீட்டில் தாமதப் பட்டு போக, தங்கை கல்யாணம் ஏக அமர்க்களமாக வேறு பெருமாளை வைத்து நடத்தப் பட்டுவிடுகிறது. பெருமாளும் வந்த காரியம் மாறு பட்டு போக தன் வீடு திரும்புகிறார். வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம் :-) பெருமாள் இப்படி அடிக்கடி மாட்டிக் கொள்வதாக சம்பிரதாயம். சரித்திரப் புகழ் பெற்ற இன்னொருசம்பவம்.

நம்மாழ்வாரின் பரதத்துவத்தில் ஊறித் திளைத்த இராமானுச முனி ஸ்ரீவைணவ திருமறைகளை மீண்டும் வழக்கிற்கு கொண்டு வந்து, வைணவ சம்பிரதாயங்களை முறையாக பல்வேறு கோவில்களில் நிறுவுகிறார். அவரது தலைமைப் பீடம் திருவரங்கம். அங்குள்ள பெருமாளும் சேட்டைகளுக்கு குறைவின்றி இருக்கிறார். சரணாகதி தத்துவத்தை காலம் முழுவதும் கற்றுத் தந்த இதத்தாய் இராமானுச முனி ஒரு நாள் அனைத்து மாந்தர் சார்பாக இறைவனிடம் சராகதி பண்ண எண்ணுகிறார். அதற்கான நல்ல நாளுக்கு காத்திருக்கிறார். அப்படியொரு நாள் அமைகிறது.திரவரங்கத்து அமுதனின் கண் அழகைக் கண்டு மயங்காதவர் வெகு சிலரே. அண்டர் கோன் ஆகிய இவ்வமுதின் கண்களை ஒருமுறை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே! இப்படியான இவன் கண்ணழகில் மயங்கிய பெண்களில் உறையூர் நாச்சியாரும் ஒருவர். கள்ளனான கண்ணன் சத்தம் காட்டாமல் உறையூர் நாச்சியார்வீட்டுக்கு போய்விட்டு விடிகாலையில் திருவரங்கம் திரும்புகிறான். பெருந்தேவித் தாயார் வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார். இவன் அசர, அவசரமாகப் போன அழகை அவள் சொல்லி கேலி செய்து, நீ இனி அந்தப் பெண்டிருடனே இரும், என் பூவையும் கிளியையும் கொடுத்துவிட்டு போ! என்கிறாள்.கண்ணனும் இன்ன பிற வார்த்தை ஜாலங்கள் செய்து, ஆண்டாள் சொன்னது போல்..

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்,
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே


பெருந்தேவித் தாயாரையும் மயக்கிவிடுகிறான். இதுதான் சமயம் என்று நம் இராமானுச முனி இடை புகுந்து சராணாகதி செய்து விடுகிறார். அண்ணலும், தாயும் மகிழ்ந்து குலாவி இருக்கும் நேரம், சரணாகதி முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. கண்ணனின் திண் அருள் எல்லோருக்கும் கிடைக்கிறது.இப்படியொரு சம்பிரதாயம் இராமானுச முனிக்கு எங்கிருந்து கிடைத்தது?
சங்கத் தமிழன் கொடுத்ததுதான் அதுவும்! தொல்காப்பிய நூற்பாவில் காதலன், காதலி ஊடல் உவகை நிரம்பச் சொல்லப் படுகிறது. உள்ளது உவத்தலும், இல்லது காயலும் பண்டைத் தமிழரின் விழுமியச் செழுமைகள். அது இங்கு அப்படியே எடுத்தாளப் படுகிறது. மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி நெஞ்சு நிறுத்திய திருக்குறுகூர் கோன் மாறன் செய்வித்ததை அப்படியே கோவில் திருமுறை ஆக்குகிறார் இராமானுசர். திருவாய்மொழியில் சொல்கிறார் நம்மாழ்வார்:

மின்னிடை மடவார்கள் நின்னருள்
சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கையரண்
காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்,
இனியது கொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும் கழலும்
தந்து போகு நம்பீ!


கழறேல் நம்பீ! உன் கைதவம் மண்ணும்
விண்ணும் நன்கறியும் திண்சக்கர
நிழறு தொல்படைத்தாய்!
உனக்கொன்றுணர்த்துவன் நான்
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள்
சூடுவார் மனம்வாடி நிற்க எம்
குழறு பூவையொடும்
கிளியோடும் குழகேலே!

வேடிக்கையான சம்பிரதாயமாகத் தோன்றும். ஆனால் அதன் பின்னுள்ள யதார்த்தமான உளவியல் போக்கு அனைவரையும் ஈர்க்கக் கூடியது.

முதலில் இறைவன் என்பவன் நம்மிலிருந்து வேறுபட்டவன் அல்லன் என்பது உணரப்படும். அவன் ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடிமுயங்கப்பெறின் என்று வாழ்வதாக நோக்கப்படும் போது அவனிடம் எந்த பயமும் இல்லாமல் நெருங்க முடிகிறது. மிக உன்னத செயலான சராணாகதியை செய்விக்கும் யதி ராஜாவான இராமானுசர் தேர்ந்து எடுக்கும் நேரம் இந்த கூடி முயங்கும் நேரம். அப்போது என்ன வரம்கேட்டாலும் கிடைக்கும்! மனது இளகி, ரம்மித்து, சொக்கிப் போயிருக்கும் நேரம்.இந்த நோக்கின் இன்னொரு முக்கியமான பொருள் இறைவன் என்பவன் வெறும் தத்துவமன்று அவன் வாழும் ஒருநிலை என்பதுதான். இதை அர்ச்சாவதாரம் என்பர். இப்படி இறைவனை நம்மில் ஒருவனாக வைத்து பழகி, பக்தி செய்யும் போது மனது தன்னையறியாமலே மென்மையுற்று சக மனிதனை, தன் சூழலை அன்போடு நோக்க கற்றுக் கொள்கிறது.

இச்சம்பிரதாயத்தின் உச்சம்தான் வேற்று தேசத்தவரான முசல்மான்களையும் ஒருங்கினைத்து, துருக்கியருக்கும் நம் கோவில்களில் இடமளித்தது.

இவையெல்லாம் யதார்த்தமாக கோவில் முறைகளில் சேர்க்கப்பட்டுள்ள மாண்பு வியக்கத்தக்கது.

சங்கத்தின் ஒலி கள்ளழகர் புறப்பாட்டில் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம்தான்!

Subject: [tamil.net] Pasura madal 29
Date: Fri, 30 Jan 1998 22:20:57 +0100

மடல் 030- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!

இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின.எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த தத்துவ உள் விவகாரங்களுக்குள் புகாமல் எளிமையாய் இக்கேள்விகளை புரிந்து கொள்ளப் பார்ப்போம். இராமானுசருக்கும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் நெடியோன், திருமலை எம்பிரான் வேங்கடவன் கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறான். தமிழகத்தின் வட எல்லையாக இத்திருவேங்கடம் இருந்து வந்ததற்கான சான்றுகள் நிரம்ப உள்ளன. இத்திரு வேங்கடம் இராமானுசர் காலத்தில்(கி.பி.1017-1137) முருகன் கோவிலாகவும், சிலர் அம்பாள் சன்னிதி என்றும் வழிபட்டு வந்ததாகவும் குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இராமானுசர் புராண, இதிகாச ஆதாரங்களைக் கொண்டு அக்கோவிலை வைணவ திருத்தலமாக மாற்றிக் கொடுத்தார் என்பது வரலாறு.


இவ்வேங்கடம் 202 பாசுரங்களால் தொண்டரடிப் பொடியைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் ஏத்திபுகழப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடி அரங்கனைத் தவிர மற்றவரைப் பாடவில்லை. வைணவஆச்சார்யனாகவும், ஆழ்வாராகவும் புகழ்பெற்ற நம்மாழ்வார் (கி.பி. 765-790) வேங்கடவனை இப்படித்துதிக்கின்றார்.

உலகம் உண்ட பெருவாயா
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.
நெடியாய் அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
கூடு மாறு கூறாயே. 6.10.1

இந்த உலகம் உய்ய கால காலமாக கால்கடுக்க காத்து நிற்கும் இத்தெய்வத்திடம் "உன் பாத மலருடன்கூடும்" நாளைக் கூறாயே என்று உருகுகிறார். திருவாய் மொழியின் ஆறாம் பத்தில் முதல் பாடலாக அமையும் இப்பாடலைத் தொடர்ந்து பத்துப் பாடல்களில் அவர் வேங்கடவன் முன் சரணாகதி செய்வதை பதிவுசெய்கிறார். பத்தாவது பாடலில், சரணாகதி செய்துவிடுகிறார்.அகல கில்லேன் இறையும் என்
றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன்
றுடையாய் என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10
வேங்கடவன் அடிக் கீழ் அமர்ந்து சரணாகதி செய்வதாகச் சொல்கிறார்.
எனவே இராமானுசருக்கு முன்னோடியாக இங்கும் மாறன், பாராங்குசன் நிற்கிறார்.
சரி, தனி ஒருவர் இறைவனிடம் தஞ்சம் புகுவதை எல்லோருக்கும் சேர்த்து செய்வதாக எப்படி கொள்ளமுடியும்?


இங்குதான் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மீகப் புரிதல் நிற்கிறது. இந்திய நோக்கில் எப்போதும் தனி, தான், நான், எனது என்பது கேள்விக் குறியாகிறது. ஒரு பரந்த முழுமையான (wholistic) நோக்காகத்தான் இப்பிரபஞ்சத்தை நம் முன்னோர்கள் பார்த்து இருக்கின்றனர். இந்த பரந்த உலகு ஒன்றுடன் ஒன்று இயைந்து, பின்னிப் பிணைந்து இயல்வதை (inter-connected and interdependent) தீர்க்கமாகப் பார்த்திருக்கின்றனர் நம் தீர்க்கதரிசிகள். "நான்" என்ற உணர்வு சிக்கலான நரம்பியல் அமைப்பினால் உருவாகும் உணர்வு. அதற்கு பருப்பொருண்மை கிடையாது. இதை மாயை என்று இந்தியர் கண்டனர். என்று, நமக்கு இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து, உணர்வு பூர்வமாக இவ்வலைப் பின்னலை நம்முள் உணர்கிறோமோ அன்று தனி மனிதன் செய்யும் சரணாகதி உலகம் செய்யும் சரணாகதியாக ஆகிவிடுகிறது.


இந்தத் தொடர்பைத்தான் (அதாவது இதையேதான்) குவாண்டம் இயல்பியலும் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. ஆனால் அறிவியல் மொழியிலாகட்டும், ஆன்மீக மொழியிலாகட்டும் எப்படிச் சொன்னாலும் இவ்வுண்மை அவ்வளவு எளிதாக மனிதர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது. இவ்வுலகின் பிரிவுகளுக்கும், சமர்களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் இதுதான் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ?


இந்தநூற்றாண்டின் தனிப்பெரும் தத்துவ/சமயச் சிந்தனையாளரான கிருஷ்ணமூர்த்தி இதையே "நாம்தான் உலகம்" என்று அறைகூவுவார். மானுடம் என்றோ "நான்" என்பது உண்மை என்று நம்பி பாதை தவறிவிட்டது, அன்றிலிருந்து பிடித்தது பீடை என்பார். "தனி" (individual) என்பதே கிடையாது என்பார் இவர்.சமீபத்திய உளவியல் ஆய்வுகள் ஏறக்குறைய இதே முடிவுக்கு வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாய் உள்ளது. இவர்களது முடிவும், "நான்" என்பது மீண்டும், மீண்டும் மூளையில் நொடிப் பொழுதும் உருவாக்கப்படுவதாகவும், இந்த "நொடிகள்" சேர்ந்து ஒரு தனி "நான்" ஆக உருப்பெருகிறது என்றும் சொல்கின்றன. புத்தன் சொல்லுவான் "நான்" என்பது தீச்சுடர் போன்றது என்று. தீப்பிழம்பு பார்ப்பதற்கு ஒரே தீபம்போல் தோன்றினாலும் கிட்டே பார்த்தால் அது சின்னஞ்சிறு சுடர்கள் சேர்ந்து உருவாகும் ஒரு பிழம்பு என்று தெரியும். ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கி வருவது காணக் கிடைக்கிறது.இப்பிரபஞ்சத்திலுள்ள சங்கிலித் தொடர்பை,

வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல்உயர குடி உயரும்,
குடி உயர கோன் உயரும்


என்ற பண்டை வாக்கால் உணரலாம். ஒளவை

நெல்லுக்கிறைத்த நீர்
வாய்க்கால் வழியோடி
புல்லுக்குமாங்கே பொசியுமாம்
தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல்
அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

என்பார்.

அதாவது இவ்வுலகு இத்தகைய உண்மை உணர்ந்த நல்லவர்களால் காக்கப் படுவதாக பாடல் சொல்கிறது. அப்படியெனில் நம்மாழ்வார் செய்த சரணாகதியும், இராமானுசர் செய்த சரணாகதியும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இதே பொருளில் காஞ்சி மாமுனி, "என்னை ஜெகத்குரு என்று சொல்லி பெரும் பொறுப்பைக் கொடுத்துவிட்டீர்கள். உலகம் உய்ய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சில மணித்துளிகளாவது தினமும் தியானம் செய்தால் என் பாரம் குறையும்" என்று சொல்லியிருக்கிறார். அதாவது இவ்வுலகு என்பது நமக்கு புறத்தே, நம்மில் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு இயக்கம் போலவும், நமக்கு நம் ஜோலிகள், நம் கவலைகள், நம் ஆசாபாசங்கள் இவைதான் முக்கியமென்றும் இயங்கும் வரை உலகம் உய்யாது என்று பொருள் படுகிறது.

என்று, உலகு என்பது "நாம்"தான் என்று உணர்கிறோமோ அன்று பெரும் பொறுப்பை நாம் உணர்வதுடன், இந்த உணர்வுக்கும் உள்ளிருந்து இயங்கும் ஒரு சக்தியைக் கண்டு கொண்டவராவோம். அந்நிலையில், மனப்பூர்வமாய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உலகு தழுவிய தாக்கம் தானாகவே அமைந்துவிடுகிறது. இந்த நோக்கில்தான் நம்மாழ்வார்/இராமானுசர் செய்த சரணாகதியை பார்க்க வேண்டும்.

சரணாகதி ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அடுத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்.

Subject: [tamil.net] Pasura madal 30Date: Sun, 08 Feb 1998 11:14:24 +0100