e-mozi

மடல் 021 -சின்னஞ்சிறு கிளியே!

செங்கண் மால் வண்ணத்தில் நிலம். சிறு குன்றுகளும், நீரோடைகளும் பாயும் பிரதேசம். அங்கங்கே கரையான்கள் புத்து கட்டி பாம்புகளுக்கு வாடகை விட்ட புத்தூர் கிராமம். விஷ்ணு சித்தர் என்ற அந்தணர் தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டு இருக்கிறார். துளசிச் செடிகள் சீராய் வளர்ந்து நிற்கின்றன.பவள மல்லியும், முல்லையும் கொட்டிச் சிதறி நந்தவனத்தை சுகந்தமாக்கி நிற்கின்றன. துளசி பறிக்க பாத்தி விட்டு பாத்தி தாண்டும் போது விஷ்ணு சித்தர் கண்களில் செளந்தர்யமான குழுந்தையொன்று கண்ணில் படுகிறது. நில மகள் அவதாரம் போல் அது சிரித்துக் கொண்டு மண்ணில் கிடக்கிறது. கரு,கரு வென்று கூந்தல். சுருள், சுருளாக முடி. சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா என்று கையில் எடுத்து உச்சி முகர்ந்து, என் "கோதைக் கண்ணே" என்கிறார் பட்டர். தமிழுலகிற்கு கோதை நாச்சியார் அறிமுகமாகிறார்.கணணன் கதை சொல்லி வளர்க்கிறார் பட்டர் குழந்தையை. அதற்கும் அந்தக் கதைகள்தான் பிடிக்கிறது இயல்பாய். அமுது ஊட்டும் போதும் அதைத் திருக்கண்ண அமுது என்றுதான் படைக்கிறார். கிருஷ்ண ஸ்மரனை இல்லம் நிறைந்து இருக்க தளர்நடை பயின்று, பாவாடைப் பெண் ஆகிறாள் கோதை.

கிராமத்து சிறுமியருடன் சின்னதாக மண் வீடு கட்டி விளையாடிக் களைத்து திண்ணையில் பூக்கட்டிக்கொண்டு இருக்கும் பட்டர் மடியில் தூங்கி விடுகிறாள் கோதை. கனவில் கண்ணன் வந்து அவள் கட்டிய சிற்றில்லத்தை கலைக்கிறான். "வேண்டாம் வேண்டாமென" கத்துகிறாள் கோதை. கண்ணன் கலைத்து நின்று சிரிக்கிறான். தோழிகள் சூழ கண்ணனை வளைத்து விடுகின்றனர் சிறுமியர். "கலைத்த வீட்டைக் கட்டித்தாடா!" என்கின்றனர் சிறுமியர். கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை. ஏழுலகம் உண்டு உமிழ்ந்தவனுக்கு மண்ணில் வீடு கட்டத் தெரியவில்லை. கை கொட்டிச் சிரிக்கின்றனர் பெண்கள். இங்கும் அங்கும் ஓடி களைத்து இவர்கள் கையில் சிறையாகிறான் பரந்தாமன். "மாட்டிக் கொண்டாயா" எனச் சிரிக்கின்றாள் கோதை. பட்டர் மடியில் உதிர்ந்த சிரிப்பு பட்டரையும் ஆட் கொள்கிறது. "கண்ணன் விளையாடுகிறான் பார்!" என இவரும் சிரிக்கிறார். குழந்தை கனவு கலைகிறது. "அப்பா, கண்ணன் எங்கே அப்பா?" என வினவுகிறாள். கண்ணன் வந்தானா அம்மா? என்ன செய்தான்? என இவர் கேட்ட இவள் அவருக்கு கண்ணன் கதை சொல்கிறாள். இப்படி கண்ணன் கதையே இவர்களுக்கு வாழ்வாகிப் போகிறது.

பாவாடை, தாவணியில் மிளிர்கிறாள் கோதை இப்போது. அப்பாவிடம் மறக்காமல் கேட்பாள் இன்றும், கனவில் வரும் கண்ணன் நினவிலும் வருவானா என்று. பட்டர் சொல்லுவார், "கோதை, இப்படித்தான் கண்ணன் என் கனவிலுன் ஒருநாள் வந்தான். பாண்டியன் சபையில் போய் பரதத்துவத்தை நிறுவி வா! என்றான். பூக்கட்டும் என்னை மற்றவர் வாய் கட்டச் செய்தான். பொற்கிழி வளைந்து என் கையில் விழுந்த போது எல்லோருக்கும் எதிரில் என் வாக்கை நிலை நாட்ட பரந்தாமனாக வந்து நின்றான். மற்றவர் கண்பட்டுவிடாதோ?"."அதனால்தான், நீ உடனே பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருகாப்பு, என்று காப்பிட்டாய், இல்லையா அப்பா? என்றாள் கோதை. அமாம், கண்ணே! பிள்ளைக் கனி அமுதல்லவோ கண்ணன். நான் காப்பிடாமல் யார் காப்பிட முடியும்" என்கிறார் பட்டர்.

தாயும், தாயும் பேசுவது போல் உள்ளது சில நேரம், பிள்ளையும், பிள்ளையும் பேசுவது போல் உள்ளது சில நேரம். அன்பு தருவதிலே யாருக்கு யார் நிகர் அங்கு?

மார்கழி பிறக்கிறது. மதி நிறைந்த நாளொன்றில் பண்டைய வழக்கமாகிய பாவை நோன்பைத் துவக்குகிறாள் கோதை. பக்கத்து வீட்டுச் சிறுமியரை அழைத்துக் கொண்டு பாவைப் பாடல்களைச் சொல்லிக் கொண்டு தூங்கும் சிறார்களை எழுப்பிக் கொண்டு நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், இளங்காலையில் நீராடி கோவில் செல்கிறாள் கோதை. அவள் செய்யும் பாவையில் மறக்காமல் இவள் முன்னோர்களான மற்றய ஆழ்வார்களையும் ஒவ்வொருவராய் எழுப்பிச் செல்கிறாள். கண்ணன் வீடு சென்று நந்தகோபனை எழுப்புகிறாள், நப்பின்னையை எழுப்புகிறாள், அண்ணன் பலதேவனை எழுப்புகிறாள். சீரியசிங்கம் விழிப்புற்று எழுந்தாற் போல் கண்ணனும் எழுகின்றான் இவள் பாடல்களால். மார்கழியில் விடிகிறது.கண்ணன் நினைவால் பசலை கொள்கிறாள் கோதைப் பெண். இவள் நோய் இன்னதென்று யாரும் அறிகிலர். இவள் மன்மதனுக்கு நோன்பு இருக்கிறாள். கரும்பு வில் கொண்டோனை கன்னல் கனி அமுதனைக் கொண்டு வா,என்கிறாள். முறத்தில் அரிசி கொட்டி கண்ணை மூடி கூடல் விளையாடுகின்றனர் இளம் பெண்கள். கண்ணன் கிடைப்பானாகில் கண்ணை மூடி வட்டம் போட்டாலும் வட்டம் சேர வேண்டும். அதுதான் விளையாட்டு. வட்டம்கூடுகிறது. கோதையின் பசலையும் கூடுகிறது.

தெருவோரம் போகும் குறத்தியைக் கூப்பிட்டு குறி சொல்லச் வைக்கின்றனர் பெண்கள். கன்னங்கரிய விழி கொண்ட குறத்தி, குச்சியை வைத்து விட்டு கோதையின் கையைத் தடவுகிறாள். பெண்ணுருக் கொண்டு பேதையின் நெஞ்சை குறி வைக்கும் இவள் உண்மைக் குறத்திதானோ? பொறுமை இழந்த பொழுதில் குறத்திகுறி சொல்கிறாள், "பெரிய இடத்து சம்மந்தம் உண்டு" என்று. சன்மானமாக அரிசியும், நெல்லும் படியளக்கும் போது, குறத்தி அவை வேண்டாம், கோதை உடுத்திக் களைந்த தாவணியே போதும் என்கிறாள். தாவணியை வாங்கி, ஆண் பிள்ளை போல் தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு கிளம்புகிறாள் குறத்தி. "எந்த ஊர் குறத்தி அம்மா?", என வினவிக் கொண்டு பட்டர் வரும் சமயம் அவள் "சோலைமலைக் குறத்தி" என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். சோலைமலை, சோலை மலை என்பது பட்டர் நினைவில் பட்டுத் தெரித்து திருமால் இரும் சோலைதானோ என வினவும் முன் அவள் முக்குத் திரும்பி மறைந்து விடுகிறாள்.கண்ணன் வரும் நாள் நோக்கி காத்து காத்து இளைத்த கோதை, "சரி, இனி அவர் வந்து மாலை போடும்முன், நானே அவருக்கு மாலை போட்டு விடுகிறேன்" என்று சொல்லி அப்பா திருமாலுக்கு கட்டி வைத்த மாலையைச் சூடி அழகு பார்க்கிறாள் கோதை. கைகள் பதற, பட்டர், "கண்ணே, கண்ணனுக்கான மாலையை கன்னிப் பெண் நீ சூடலாமா? என்ன இது அபச்சாரமென" அவசர, அவசரமாக மீண்டுமோர் மாலை கட்ட,பூசைக்கு நேரமாகிவிடுகிறது. கோவில் சென்று அர்ச்சகரிடம் புது மாலையைக் கொடுத்தால்,அர்ச்சகருக்கு அருள் வந்து விடுகிறது. "கோதை சூடிக்கொடுத்த மாலைதான் எமக்கு உவப்பு, கொண்டு வாரும் அந்த மாலையை" என அர்ச்சகர் அருள் வந்து சொல்ல ஓடுகிறார் பட்டர்பிரான் வீடு நோக்கி. அழுதுகொண்டிருக்கும் கோதையை "அன்னாய், ஆண்டாள்!" எனக் கூவுகிறார். "என்ன அப்பா? புது வழக்கமாய் ஆண்டாள் என்கிறீர்கள்?" என வினவும் மகளுக்கு சொல்கிறார், "அவன் ஆண்டவன், அவன் உள்ளம் ஆளும் நீ ஆண்டாள்!" என்று.அன்று இரவே ஆண்டாளுக்கு தெய்வ சொப்பனம் வருகிறது. வாரணங்களான யானைகள் சூழ, வண்ண நிலவனான கண்ணன் வந்து கை பற்றுவது போல்! அவள் கனவையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்கிறாள் ஆண்டாள். "கனவு! கனவு! கண்ணே...தெய்வக் கனவுகள் பொய்பதில்லை. நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு, அம்மா!" என்கிறார் கண்கள் குளமாக பட்டர்பிரான்.

கனவு நினைவாக அதிக நாள் எடுக்க வில்லை. பரிவாரம் சூழ வந்து சேர்கிறான் ஓர் இளைஞன் ஒருநாள். ஊரே திமிலோகப் படுகிறது. "என்ன அப்பா, எங்கும் இல்லாத புதுப் பழக்கமாய், பிள்ளை- பெண் வீடு தேடி வந்து பெண் கேட்பது?" என வினவுகிறார் பட்டர் சுவாமிகள். அதற்கு பிள்ளையாண்டான் சொல்கிறான், "சுவாமிகளே வைரம் இருக்கும் இடத்தைத் தேடித்தான் வியாபாரி போவது வழக்கம். வைரம் வியாபாரியை நோக்கிப் போகக் கண்டீரோ" என்று. திகைத்துப் போன பட்டர், "பிள்ளாய்! உன்பெயர் என்ன சொன்னாய்? ஊர் என்ன?" என வினவ. "என் பெயர் ரெங்க மன்னார், ஊர் திருவரங்கம்,உங்களை எனக்கு மிக நன்றாகத் தெரியும். உற்றம், உறவுகள் எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு" என்கிறான் முத்தாய்பாய்.

வெகுளியான பட்டர்பிரான் வேறு என்ன செய்வார்? இத்தனை சாமர்த்தியமாக பேசும் பிள்ளையிடம்!அடுத்த நாளே கல்யாணம் நடக்கிறது. ஆண்டாளுக்கு இச்சம்மந்தத்தில் கன குஷி!

கல்யாணம் முடிந்து பிள்ளை வீட்டார் ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர். பட்டர்பிரானும் மாப்பிள்ளை ஊர் வரை வந்து போகிறார்.

ஸ்ரீரெங்கப் பெருமாளை தரிசித்து விட்டு வீடு போகலாம் என பிள்ளை சொல்லி விட்டு, பெரிய்ய்ய்ய கோவிலான திரு அரங்கத்தின் வீதி தாண்டி, வீதி தாண்டி, பல மண்டபங்கள் தாண்டி கருவரை விரைகிறான். வயதான பட்டர் முடிந்த மட்டும் எட்டி நடை போடுகிறார். இவர் பெரிய பெருமாள் சன்னிதிக்கு வருவதற்கும், மாப்பிள்ளைப் பையன் நாகப்பை அணையில் துயில் கொள்ளவும் சரியாக இருக்கிறது. இவர் வளர்த்த சின்னஞ் சிறுங்கிளி, மெல்லப் பாம்பணையில் கால் வைத்து ஏறி, ரெங்கனுடன் சங்கமித்துவிடுகிறாள்.

எங்கும், பல்லாண்டு, பல்லாண்டு என வேத முழக்கம் ஒலிக்கிறது. பட்டர்பிரான் கண்கள் குளமாக கை கூப்பி நிற்கிறார்.


ஒரு மகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் தான்
கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெறும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறஞ் செய்யும் கோலோ!பிற்சேர்க்கை: என்னுள்ளும், உன்னுள்ளும் மறைந்திருந்து ஒவ்வொரு நொடியும் இவ்வுலகை சிருஷ்ட்டிக்கும் அக்குழந்தைக்கு இக்கதை நண்பனே/நண்பியே.படங்கள் நன்றி: ஸ்ரீவில்லிபுத்தூர்

Date: Wed, 26 Nov 1997 00:33:57 +0100

7 பின்னூட்டங்கள்:

  Kailashi

Monday, January 28, 2008

அருமையோ அருமை. நன்றி படங்களுக்கும் ஆண்டாள் நாச்சியாரின் சரிதத்திற்க்கும்

  N.Kannan

Monday, January 28, 2008

மிக்க மகிழ்ச்சி!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, January 28, 2008

கோதையின் கதையை ஒரே மூச்சில் கடகடவென்று சொல்லி அசத்தி விட்டீர்கள்! மூச்சு வாங்குதா? கொஞ்சம் சோடா குடித்துக் கொள்ளுங்கள் கண்ணன் சார்! திருவில்லிபுத்தூர் பன்னீர் சோடாவும் பால்கோவாவும் இப்பல்லாம் ரொம்பவே ஃபேமஸ்! :-))

//கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை//

இது! நச்-னு சொன்னீங்க!

கோதையின் மாலைக்கு இன்னிக்கும் திவ்யதேச எம்பெருமான்களுக்கு போட்டாபோட்டி! எத்தனை ஊருக்குன்னு தான் அவளும் அனுப்புவா?
திருவரங்கம், திருமலை, காஞ்சி, சோலைமலை, அல்லிக்கேணின்னு....
லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! :-)

  N.Kannan

Monday, January 28, 2008

//கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை//

இது! நச்-னு சொன்னீங்க!//

திருப்பாவையில் நப்பின்னையை எழும்புகின்ற பாசுரத்தில் "பேர் பாடி" என்பதற்கு அவனை வசை பாடி கேலி செய்து என்று வியாக்கியானம் செய்கின்றனர். ஏனெனில் அவன் விளையாட்டில் தோற்றுப் போய்விட்டானாம்!! ஹா..ஹா!!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, January 28, 2008

சரி...
ரங்கமன்னார் முன்னரே வில்லிபுத்தூர் வந்து மணம் பேசினாரா,
இல்லை ஆழ்வார் திருவரங்கத்தில் அரவணைக்குள் மறைந்த மகளை எண்ணி ஏங்கியதால், பின்னர் வில்லிபுத்தூர் வந்து ஊர் அறிய மணம் முடித்தார்களா?

//சன்மானமாக அரிசியும், நெல்லும் படியளக்கும் போது, குறத்தி அவை வேண்டாம், கோதை உடுத்திக் களைந்த தாவணியே போதும் என்கிறாள்//

மிக மிக ருசித்தேன்!
மீண்டும் படித்தேன்! மனதினில் திளைத்தேன்!
சிரித்தேன்! ரசித்தேன்! சில்லென வியந்தேன்!
படித்தேன்! கோதையின் தமிழோ படித்-தேன்!
களித்தேன்! கண்ணனின் ஆசையை அறிந்தேன்!
"தாவணி மாலை" தான் தலைவனின் மனத்-தேன்!

பெருமாளுக்கே தாவணிக் கனவுகளா? சூப்பர்! :-)

  N.Kannan

Monday, January 28, 2008

//சரி...
ரங்கமன்னார் முன்னரே வில்லிபுத்தூர் வந்து மணம் பேசினாரா,
இல்லை ஆழ்வார் திருவரங்கத்தில் அரவணைக்குள் மறைந்த மகளை எண்ணி ஏங்கியதால், பின்னர் வில்லிபுத்தூர் வந்து ஊர் அறிய மணம் முடித்தார்களா?//

ரங்கன் திருவரங்கத்திற்கு வருமாறு அழைத்தாகத்தான் கதை!!

//பெருமாளுக்கே தாவணிக் கனவுகளா? சூப்பர்! :-)//

பின்ன என்ன? கோதையா கொக்கானானாம்!

அது என்ன கவி கண்ணதாசன் போல், ஒரே தேனில் குழையழீர். எல்லாம் கோதை படுத்தற பாடு! அவள் கூந்தல் அழகைப் பாருங்கள். பெருமாளுக்கே பிச்சேற்றியவளாயிற்றே!

  RAMU

Friday, March 04, 2016

அற்புதம்.
வேறு என்ன சொல்ல?