e-mozi

மடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்!

சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை நாச்சியாரின் (ஆண்டாளின்) மனதைப்புரிந்து கொள்ள வேண்டுமெனில் வைணவத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்.

இந்திய மண்ணில் பல்வேறு தத்துவங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. வீடு பேறு என்ற நோக்கை குறித்ததாக அவை அமைந்தாலும் அதனதன் வழிகள் பெரிதும் வேறுபட்டு அமைகின்றன. இவ்வழிகள் எவ்வளவு வேறுபட்டவை எனக் கேட்டால் கடவுள் இல்லை என்பதிலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனச் சொல்லும் வகையில் வேறுபட்டவை.

சாக்கியர்கள் இயற்கைவாதிகள். கடவுள் என்ற கருத்து அவசியமில்லை என்பவர்கள். இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா! என்று சொல்லி கடவுளையும் அதில் சேர்த்து விடுகின்றனர்!! சூன்யவாதிகள், - "ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான், அங்குமிங்கும் எங்குளவாகும், ஒன்றேயாகினால் உலகனைத்தும் சாகும்" - போன்ற கருத்துக்கு அவசியமில்லை, படைப்பு என்பது சூன்யத்திலிருந்து வருகிறது, எனவே கடவுள் அவசியமில்லை என்று சொல்லுகிறார்கள். பின் சடங்குமயமான வேதக் கடவுளர். பலியும், படையலும் வேண்டும் தேவதா உபாசனைகள்! சமணர்கள், - இவர்கள் வாழ்வு ஐம்புலச் சேட்டையால் அலைக்கழிக்கப்படுகிறது அதனால் புலனை அடக்கு என்று சொல்லி கொடூர தபசை வலியுறுத்துகின்றனர். ஒரு ஈய்க்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்று சொல்லி கையில் துடப்பமும் கையுமாக இருக்கச் சொல்பவர்கள் இவர்கள். பின், பெளத்தம். புத்தர் கடைசிவரை கடவுளைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை. இருப்பு என்பதே புரிந்து கொள்ளமுடியாத சிக்கலாக இருக்கும் போது கடவுள் என்ற கவலை எதற்கு என்று சொல்லிவிட்டார். தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாக உதித்த சங்கரரின் அத்வைதம் ஐன்ஸைடைனின் சார்புடைமை தத்துவம் போல் பலருக்கு புரியாமலே போய்விட்டது (காஞ்சிப் பெரியவர் அருளிய "தெய்வத்தின் குரல்" புத்தகம் வாசித்தால் புரியும் இது எவ்வளவு சிக்கலான விஷயம் என்று. புரிவது மாதிரி இருக்கும், அடுத்த பக்கம் முடிந்தவுடன் முதல் பக்கத்து விஷயம் தலையைக் குழப்பும்:-) இத்தனை பகுத்தறிவான போக்குகளின் இடையில் சிக்கித் தவித்தது ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இந்தியா. இச்சிக்கலிலிருந்து முளைக்கிறது வைணவம். பாசியும், களியும் நிறைந்த குளத்திலிருந்து தாமரை பூப்பது போல்.

அப்போதைய இந்தியப் பாமரனுக்கு சமணர்கள் போல் திகம்பரர்களாக காட்டில் அலைந்து வீடு பெறுவதா? இல்லை புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லி துறவறம் கொள்வதா? இல்லை சங்கரர் சொல்வது போல் உலகே மாயை என்று வாழ்வில் பற்று இல்லாமல் இருந்து வீடுபேறு பெறுவதா? இல்லை சாக்கியர்கள் சொல்வது போல் வீடு பேறு என்பதையே விட்டு விடுவதா? என்ற பெரிய குழப்பம்! மொத்தத்தில் வாழ்வின் பொருள் தெரியாமல், அதை முறையாக இரசிக்கத் தெரியாமல் குழம்பிப் போய் இருந்தான் அவன்.

பொதுவாக இந்திய சமயச் சிந்தனையை நான்கு குறிக்கோள்களாகக் கொள்ளலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்பன அவை. அறமென்பதை வள்ளுவன்: மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பது என்கிறான். இதை தர்மம் என்பர் பெரியோர். பொருள் என்பதை: அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையால் அறியலாம். இன்பம்: அனிச்ச மலர்களும், அன்னப்பறவையின் இறகும் மாதர்தம் கால்களுக்கு நெருஞ்சிப் பழம் - என்று பாடும் மயக்க நிலை. இதை காமம் என்பர். கடைசியாக வீடு - சரிதான் இவ்வளவுதான் வாழ்வா? இதுக்கா இந்த பாடுபட்டேன்? என்ற கேள்வி கேட்டு, வாழ்வை நேர் கொண்டு அதன் உட்பொருள் அறிதல். இதை மோட்சம் என்பர். இந்த நான்கு புருஷார்த்தங்களில் சிறப்பானது எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு வீடு பேறு என, புத்தகம் படிக்கத் தெரிந்த குழந்தை கூடச் சொல்லும். ஆனால்....

காமம் என்கின்றனர் வைணவர்கள்!!

இப்படிச் சொல்வது யார்? துறவிகளின் அரசன் (யதி ராஜா) என்றழைக்கப்படும் இராமானுஜர்!

இராமானுச நூற்றந்தாதியில் வரும் பாடலைப் பாருங்கள்:

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


(திருவரங்கத்து அமுதனார் - இராமானுச நூற்றந்தாதி-40).

காமம்தான் அறம், பொருள், வீட்டைக் காட்டிலும், சிறந்தது. இந்த மூன்றுமே காமத்திற்காகத்தான் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, அக்காமம் கண்ணனை நோக்கியதாக இருக்கட்டும் என்று முடிக்கிறார். அதாவது கண்ணனுக்கே ..ஆம்..அது காமம் என்கிறார்! இதை எப்படி புரிந்து கொள்வது?

மீரா இராஜ போகத்தை விட்டு விட்டு பிருந்தாவனதாரியான கண்ணனின் மேல் மையக்காதல் கொண்டு இராஜஸ்தானிலிருந்து கால் நடையாக பிருந்தாவனம் வந்து சேர்கிறாள். பிருந்தாவனத்தில்தான், தான் சிறு குழந்தையாக இருக்கும் போது கண்ணன் விக்கிரகத்தைக் கொடுத்து இக்காதலில் ஈடுபடுத்திய துறவியும் இருப்பதை அறிகிறாள். அவரைக் காண ஆவலுடன் விரைகிறாள். வாசலில் நின்ற சீடர்கள், என்ன விஷயம் எனக் கேட்டு பின் சொல்கின்றனர், "அம்மா, துறவி பெண்களைக் கண்ணாலும் பார்ப்பதில்லை, அதனால் உன்னைப் பார்க்கமாட்டார்" என்று!

மீராவிற்கு துக்கத்தையும் விட, நகைப்பு வருகிறது. சீடர்களைப் பார்த்து சொல்கிறாள், கண்ணன் வாழும் பிருந்தாவனத்தில் தன்னை ஆண் என்று சொல்லும் உங்கள் தலைவரை நினைத்தால் சிரிப்பு வருகிறது. பிருந்தாவனத்தில் ஒரே ஆண் பிள்ளை கண்ணன்தான், மற்ற எல்லோரும் கோபிகைகள்தானே! என்று. இதைக் கேட்ட துறவி இதன் பொருள் புரிந்து ஓடிவந்து மீரா காலில் விழுகிறார். இது வைணவ நோக்கு.

இது மிகப் பண்டைய தமிழ் பக்தி நோக்கும்தான். இதை வளர்த்து எடுத்தவர்கள் ஆழ்வார்கள், பின் அதை உலகரியச் செய்தவர் ஸ்ரீராமானுஜர். நாம் முன்னைய மடல்களில் பார்த்தோம், பக்தி இலக்கியம் என்பது காதலன்-காதலி அன்பைச் சொல்லும் நிலையிலிருந்து வளர்ந்து இறைவனை நாயகனாக வைத்து, ஜீவர்களை காதலியாக வைத்து மானுட ஊற்றில் தேங்கும் அன்பு என்னும் உணர்வை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கச் செய்வது என்று. காதல் இனிது என்பான் பாரதி. இந்த இனிப்பை என்றும் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வழிதான் பக்தி. காதல் உணர்வில் ஏக்கம் முக்கியமானது.

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் - அடீ கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ
பார்த்தவிடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியுதடீ!எவ்வளவு ஏக்கம் துடிக்கும் வரிகள்! மார்பு துடிக்கும் வரிகள். இதுதான் காதலின் சுகமான சோகம்! மானுடக் காதலில் ஒரு நிலையில் ஏங்கும் பொருள் கிடைத்து விடுகிறது. அப்புறம், காதல் கசந்து விடுகிறது. அதனால் வைணவர்கள் - கண்ணனுக்கே ஆமது காமம் - என்று வைத்தனர். இதன் சூட்சுமத்தை விளக்குவது கொஞ்சம் சிக்கல், பாரதி இதை இப்படி புரிந்து கொள்கிறார்:

ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்களிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?


நினைவு முகம்! என்ன வார்த்தை! இச்சொற்பிரயோகம் தமிழின் உரைநடை வழிகாட்டிகளில் ஒருவரான லா.ச.ராமாமிருதத்தை பயித்தியமாய் அடித்திருக்கிறது. நினைவு முகம் மறத்தல்? இந்த உள்ளத்து அனுபவம் உண்டா நண்பர்களே?

வண்ணப் படமும் இல்லை கண்டாய் - தோழி என்கிறார். அது சரிதான், கண்ணனின் வண்ணப்படத்தை வரைந்தவர் யார்? இக்கவிதையால் வைணவத்தில் சொல்லும் காதலை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது (முடிகிறதா? ..மன்னிக்க நான் சாதாரணன். இவ்வுணர்வுகளை என்னால் வார்த்தைப்படுத்த முடியவில்லை).

ஆனால் வைணவர்கள் முன் வைக்கும் இக்காதல் நோக்கில் பெரிய சமூக நன்மை மறைந்துள்ளது.

ஒன்று, கண்ணன்தான் ஒரே ஆண், மற்ற எல்லோரும் பெண் பிள்ளைகள் என்னும் போது நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமில்லாமல் போகின்றன. இக்கருத்தைத்தான் திருமூலரும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிறார். நாம் எல்லோரும் ஒரே குலம். தேவன் அவன்.

இரண்டு, இப்படிச் சொல்வதால் இப்போது அமெரிக்காவில் பிரபலமாகிவரும் Promise Keepers போன்ற ஆண் ஆதிக்க இயக்கங்களின் தேவைகள் இல்லாமல் போய்விடுகிறது. இவர்கள் விவிலிய வாக்கு என்று சொல்லி ஆண் ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைகின்றனர். இது வைணவத்தில் அவசியமில்லை. அங்கு ஆண் பிள்ளைகள் இருந்தால்தானே!

மூன்று, கண்ணனுக்கே ஆமது காமம் - என்று சொல்லிவிடுவதால் பெண் பிள்ளைகளுக்கு நினைத்து பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்து விடுகிறது. இதை முழுமையாய் அனுபவித்தவர்கள் ஆண்டாளும், மீராவும்தான். ஆண்டாளின் தைர்யம் அவள் பாடல்களில் தெரிக்கிறது. அதை பிறகு பார்ப்போம். ஆக, வைணவர்கள்தான் ஒருவகையில் பெண் விடுதலையின் ஆரம்ப கர்த்தாக்கள் என்று தெரிகிறது. இது ஆண் மேலாதிக்கசமுதாயத்தில் பெரிய புரட்சிதான். அதனால்தான் வைணவம் சைவம் பிரபலமான அளவுக்கு பிரபலமாகவில்லை என்று தோன்றுகிறது;-)

தனது அகங்காரத்தை விட்டு தனக்கும் மேலுள்ள ஒரு சக்தியிடம் காதல் கொள்வதென்பது மிக, மிக விசாலமான மனதை உடையவர்களால்தான் முடியும். அவ்விசாலமான மனது வந்துவிட்டால் தனது சகியும் இத்தேடலில் பங்கு கொள்ளும் தோழியாகவே படும். அப்போது ஆண் மேலாதிக்கம் என்பது வருவதற்கு வாய்ப்பு இல்லை. சாதீய கட்டுப்பாடும், ஆண் மேலாதிக்கமும் கொண்ட இந்தியா போன்ற இருகிப் போன நாட்டில் "கண்ணனுக்கே ஆமது காமம்" என்பது கவிதை (தத்துவ) அளவிலேயே நிற்பதுதான் நிதர்சனமான உண்மை!

Date: Sun, 23 Nov 1997 21:21:01 +0100

0 பின்னூட்டங்கள்: