e-mozi

மடல் 025 - வேங்கடவற்கு என்னை விதி

[பெரியாழ்வார்தான் ஆண்டாளா ? (பகுதி இரண்டு)]

பெரியாழ்வார்தான் ஆண்டாள் என்று கொள்வதில் பெரிய சமூக/சரித்திர தில்லு முல்லு இருப்பாதாக நம்ப வேண்டி வருகிறது. ஏனெனில் இது ஒரு பெரிய இலக்கிய புரட்டு என்றாகிறது. செழுமையான வைணவ பாரம்பரியம் அப்படியானதொரு பொய்யை நம்பி எழும்பி இருக்கிறது என்று சொல்வது நம்மை நாமே இழிவு படுத்துவது போலாகி விடுகிறது. குருபரம்பரை நூல்கள் ஆண்டாள் என்ற பெண் உதித்த நட்சத்திரம், ஆண்டு, மாதம் எல்லாம் சொல்லுகின்றன. ஆண்டாளும் தனது பாடல்களில் வரிக்கு ஒருமுறை பட்டர்பிரான் கோதை என்றும், குழல் கோதை என்றும், வில்லைத் தொலைத்த புருவத்தாள் என்றும், பெண்மை நிரம்பிய வரிகளால் சொல்வதைப் பார்க்கும் போது "பல ஸ்துதி" என்று சொல்லும் வரிகளில் இவ்வளவு பொய்மை இருக்கும் என்று கொண்டால், பின் அவள் சொல்லும் இறைமையில் என்ன உண்மை இருக்கும் என்ற விபரீத, விதண்டா வாதத்தில் போய் முடியும்! மேலும், பாண்டியன் சபையில் பரம் பொருள் எது என்று நிறுவி பாண்டியனை சீடனாகக் கொண்ட "வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லிபுத்தூர் விட்டு சித்தன்" எப்படி இப்படியொரு பொய்யை நிறுவ முடியும்? அப்படி நிறுவி அவர் காணும் பேறுதான் என்ன? அப்படியொரு பொய்யைச் சொல்பவர் எப்படி "விட்டுசித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே" என்று தைர்யமாகக் கூறமுடியும்?

ஆண்டாள் மேலும் தன்னைப் பற்றி இப்படி கூறுகிறாள்:

மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.


இதில் "தாழ்குழலாள் துணிந்த துணிவை" என்ற வரிகள் முக்கியமானவை. அவளுக்கே நன்கு தெரிந்து இருக்கிறது தான் மரபை மீறி துணிந்து பல விஷயங்களைச் சொல்கிறோமென்று.
தன்னை பெண்ணாக பாவித்து யசோதை போல் வாழ்ந்த பட்டர் பிரானால் தன் பெண், பெண்ணாக இருந்து கண்ணன் மேல் காதல் கொள்வதைப் பெரும் பேறாகத்தான் பார்த்திருக்க- முடிந்திருக்குமேயன்றி வேறொன்றாக அல்ல. அதனாலாயே அவள் காதல் மொழிகளை அவர் குழல் இனிது, யாழினிது என்பது போல்தான் கேட்டு அனுபவித்து இருந்திருக்க வேண்டும். அதை விரசம் என்று ஒரு காலும் அவரால் சொல்லி இருக்க முடியாது. ஆண்டாளின் தைர்யம், விட்டு சித்தர் கொடுத்தது. அப்பாவே சரி என்று சொல்லும் போது, கோதையால் ஏன் தைர்யமாக எழுத முடியாது?

இனி அகச் சான்றுகளிலிருந்து புறச் சான்றுகளுக்குப் போவோம். நாச்சியார் திருமொழித் தனியன்களைப் பார்ப்போம்:

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.


மட மயில், மெல்லியலாள், அரங்கனின் துணைவி என ஆண்டாளை விளிப்பது அவள் பெண் என்று காட்டுகிறது. மேலும், பெரியாழ்வார் காலத்தால் பின் தங்கியரானாலும், அவர் செய்வித்த பல்லாண்டு, பல்லாண்டு என்ற பாசுரத்தின் மூலம்தான் பாசுர சாற்றுமுறை ஆரம்பமாகிறது. இது எவ்வளவு பெரிய பேறு! இது போதாது என்று அவருக்கு விட்டு சித்தன் என்ற பெயர் போய் "பெரிய ஆழ்வார்" என்ற பட்டம் வேறு. இது அவருக்குப் பின் வந்தது என்று கொண்டாலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் அரசனால் சிறப்பிக்கப் பெற்றிருக்கிறார். தனியாக ஆண்டாள் என்ற பெயர் கொண்டு அவர் புகழுக்காக செய்ய வேண்டியது ஏதுமில்லை.

உய்யக் கொண்டார் வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர். அவர் நெக்குருக ஆண்டாளை நினைத்து இப்படியொரு தனியன் செய்கிறார்:

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.


பல் வளையாய் என்ற பதம், தொல் பாவை என்ற பண்டைய பெண்கள் செய்யும் நோன்பு இவைகளை செய்வித்த ஆண்டாள் - இவள் பெண் என்பது. உருக்கமான வரிகள், ஆண்டாளைப் போல் வேங்கடவற்கே என்னை விதி என்ற மாற்றம் நிகழ அவளையே சரண் புகுகிறார். வேங்கடவற்கே என்ற ஏகாரம் கவனிக்க வேண்டியது. உய்யக் கொண்டார் போன்ற ஆச்சார்யர்களே இத்தகைய உள மாற்றத்திற்கு ஆண்டாளிடம் மன்றாடும் போது, ஆண்டாள் கொண்ட பக்தி சாதாரணமாக எல்லோருக்கும் வரக் கூடிய ஒன்றில்லை என்று தெரிகிறது.
ஸ்ரீராமானுஜர் ஆண்டாளின் மேல் பேரும் பக்தி கொண்டவர். இவருக்கு "திருப்பாவை ஜியர்" என்ற பட்டப் பெயர் கூட உண்டு. இவர் திருமாலிருஞ் சோலை கள்ளழகரை சேவிக்க சென்ற போது கீழ்காணும் பாசுரத்தை (நாச்சியார் திருமொழி) சேவித்தார்:

நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.

இன்றுவந் தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்றுநூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே.


அப்போதுதான் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிறுமியான ஆண்டாள் பெருமாளுக்கு உண்மையிலேயே நூறு தடா வெண்ணெய் வார்த்து அக்கார அடிசில் செய்வித்து இருப்பாளோ என்று. இவர்தான் திருப்பாவை ஜியர் ஆச்சே, ஆளைப் பேரை பிடித்து இவர் ஆண்டாள் வேண்டிக் கொண்ட பிரகாரம் நூறு தடா அக்கார அடிசில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யதாக வரலாறு.

இவ்வளவு உருக்கமாக இவர் செய்வித்த காரியம் ஆண்டாளின் மனதை நிறையச் செய்தது.இவர் ஸ்ரீவில்லி புத்தூர் க்ஷேத்திராடணம் செய்ய வந்த போது "அண்ணா!"என்று கூவியவாறு ஆண்டாள் வந்ததாகவும், அவள் வந்து இவரை வரவேற்ற இடத்திலேயே ஆண்டாளின் சன்னிதானம் இருப்பதாகவும் ஐதீகம்.

இதை சரித்திர உண்மையென்று நிறுவுவது கடினம்தான். ஆனால் இந்த ஐதீகத்தில் உள்ள உண்மை என்னவெனில் ஆண்டாள் பெண் என்பது. பெரியாழ்வார் ஓடிவந்து, ஸ்ரீராமானுஜரை "அண்ணா!" என்று அழைக்க வில்லை. அப்படி அழைத்திருந்தாலும் "தம்பி" என்றுதான் அழைத்திருப்பார். ஏனெனில் அவர்"பெரியாழ்வார்" (இதுதான் _ஆழ்வார் கடி_ என்பது:-)

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன. ஆண்டாள் பெண் என்பதை.

ஆண்டாளை பெண்தானா என கேள்வி கேட்க வைத்தது எது? அவளது விரகக் கவிதைகள். விரகக் கவிதைகளை ஆண்கள் எழுதலாம், ஆனால் பெண் எழுதினால் தப்பு என்னும் ஆணாதிக்க மனோ பாவம். இதற்கு மாற்று உண்டா? ஸ்ரீராமானுஜர் சொல்கிறார், "கண்ணனுக்கே ஆமது காமம்" எனவே நாமெல்லோரும் பெண்கள்தான் என்று!
என்ன ரெ.கா சார்? இப்போ நீங்க ஆம்பிளையா? பொம்பளையா?

Subject: [tamil.net] Pasura madal 25
Date: Tue, 23 Dec 1997 22:29:10 +0100

5 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Tuesday, January 22, 2008

//விரகக் கவிதைகளை ஆண்கள் எழுதலாம், ஆனால் பெண் எழுதினால் தப்பு என்னும் ஆணாதிக்க மனோ பாவம்//

கரெக்டா புடிச்சீங்க பாயிண்ட்டை! :-)
பெண்களின் கவித்துவத்தையும், தனித்துவத்தையும் வைணவம் பிறழ்வின்றி ஏற்றுக் கொள்கிறது! அப்படி இருக்க இலக்கிய உலகமும், அறிஞர் உலகமும் இதை ஏன் ஒரு வரைமுறையாகப் பார்க்கிறது என்று தான் தெரியவில்லை!

ஆண்டாள் என்று தனியொரு பெண் கிடையாது! பெரியாழ்வார் தான் ஆண்டாள் என்று புனைபெயரில் எழுதிக் கொண்டார் என்று இராஜாஜியும் சொன்னது தான் வேதனை! ஆனால் அதற்கு ஜீயர்கள் தக்க பதில் அளித்து, அவருக்குக் குட்டு வைத்தனர் என்று கேள்விப்பட்டுள்ளேன்! :-)

மடலேறுதல் பற்றித் திருமங்கையும் சொல்லி உள்ளார்! பெண்கள் ஏறக்கூடாத மடலைப் பரகாலநாயகி ஆகிய தான் மீறி ஏறுவதாகப் புரட்சி செய்கிறார்!

கண்ணன் சார்...உங்களிடம் இன்னொரு கேள்வி.
ஆண்டாள், தன்னை பட்டர்பிரான் கோதை என்று சொல்லிக் கொள்வது போல்...
பெரியாழ்வார், ஆண்டாள் தம் திருமகள் என்று பாசுரத்தில் எங்கேயாவது கோடிக் காட்டி உள்ளாரா? - இந்தச் சர்ச்சையில் இது பெரிதும் உதவும்!

  N.Kannan

Tuesday, January 22, 2008

//ஆண்டாள், தன்னை பட்டர்பிரான் கோதை என்று சொல்லிக் கொள்வது போல்...பெரியாழ்வார், ஆண்டாள் தம் திருமகள் என்று பாசுரத்தில் எங்கேயாவது கோடிக் காட்டி உள்ளாரா? //

ஆபீஸிலிருந்து எழுதுகிறேன். மேற்கோள் எடுக்கமுடியாது. ஆனால் பெரியாழ்வாரின் புலம்பல் உண்டே. ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று வளர்த்தேன் அதை பெருமாள் அள்ளிக் கொண்டு போய்விட்டாரென்று. பெரியாழ்வார் திருமொழியைத் துளாவ வேண்டும். புறச் சான்றுகள் நிறைய உள்ளன. நான் கண்ணெடுத்த "கோதை நாச்சியார் தாலாட்டு" நல்ல உதாரணம்.

  Anonymous

Thursday, January 24, 2008

//
ஆனால் பெரியாழ்வாரின் புலம்பல் உண்டே. ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று வளர்த்தேன் அதை பெருமாள் அள்ளிக் கொண்டு போய்விட்டாரென்று.
//

ஒரு மகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் தான்
கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெறும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறஞ் செய்யும் கோலோ

- இந்த பாசுரத்தைத்தான் சொல்கிறீர்களோ? என் சந்தேகத்தை கேட்டு விடுகிறேன். இந்த பாடலே பெரியாழ்வார் நாயகி பாவத்தில் பாடுவதாக அல்லவா சொல்லியிருக்கிறது... அது ஆண்டாளை நினைத்துத்தான் பாடுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்? ஆண்டாள் - கோதை என்று வேறு எங்காவது தெளிவாக பெரியாழ்வார் சொல்லி இருக்கிறாரா?

//
செழுமையான வைணவ பாரம்பரியம் அப்படியானதொரு பொய்யை நம்பி எழும்பி இருக்கிறது என்று சொல்வது நம்மை நாமே இழிவு படுத்துவது போலாகி விடுகிறது.
//
இதற்கு இவ்வளவு உணர்ச்சி வசப்பட தேவை இல்லையோ :) ஒரு வாதத்துக்கு என்று கொண்டாலும் பெரியாழ்வார் புனைப்பெயரில் (பராங்குச நாயகி, பரகால நாயகி மாதிரி) ஏன் பாடி இருக்கக் கூடாது...

  N.Kannan

Thursday, January 24, 2008

ஸ்ரீகாந்த்:

இப்பாடல்தான். இதில் மிகத்தெளிவாக தன் பெண்ணின் கதையைச் சொல்லிவிடுகிறாரே! இது நாயகி பாவப்பாடல் இல்லை. அப்படிப் பாடியது இருவர் மட்டுமே.

அந்த இருவரையும் ஒப்பிட்டி யார் தைர்யமான நாயகி என்றெல்லாம் காலாட்சேபம் செய்யும் வழக்கமுண்டு. அதில் பெரியாழ்வாரைச் சேர்ப்பதில்லை. ஏனெனில், ஆண்டாள் வேறு, பெரியாழ்வார் வேறு. எதற்குச் சொல்கிறேன் என்றால், இதில் மறைக்க ஏதுமில்லை! அது அப்படி என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பர். எல்லோருக்கும் தெரியாத ஒரு 'திருட்டுத்தனத்தை' பெரியாழ்வார் செய்திருக்க வாய்ப்பே இல்லை.

இன்னொன்று இந்தக் கேள்விக்குக் காரணமே we can't digest andal's style of literature. இதை 21ம் நூற்றாண்டுத் தமிழனா கேட்கிறான் என்று இருக்கிறது! ஆழ்வார்கள் ஒரு secretive society of poets :-) அகமரபை நூறு விழுக்காடு உள்வாங்கி மடை மாற்றம் செய்தவர்கள். அகப்பாடல்கள் அப்படித்தான் இருக்கும், அதை யார் பாடினாலும். என் கட்டுரைகள் அனைத்தையும் வாசித்தீர்களானால் இக்கேள்விகள் எழாது.

  nAradA

Friday, June 20, 2008

>>ஒரு மகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் தான்
கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெறும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறஞ் செய்யும் கோலோ

- இந்த பாசுரத்தைத்தான் சொல்கிறீர்களோ? என் சந்தேகத்தை கேட்டு விடுகிறேன். இந்த பாடலே பெரியாழ்வார் நாயகி பாவத்தில் பாடுவதாக அல்லவா சொல்லியிருக்கிறது... அது ஆண்டாளை நினைத்துத்தான் பாடுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்? ஆண்டாள் - கோதை என்று வேறு எங்காவது தெளிவாக பெரியாழ்வார் சொல்லி இருக்கிறாரா?<<

It is my contention that PeriyAzhwAr never mentioned ANDAL in his pAsurams. The verse quoted above is from his tirumozhi 3.8.4 The decade of songs in 3.8 describes the lamentation of the mother of a gOpi and cannot be taken as a personal incident in PeriyAzhwAr's life vis-a-vis ANDAL. However, I have read other people treating this as PeriyAzhwAr's reference to ANDAL being merged with Lord Ranganatha. If that be the case this song must have been written after PeriyAzhwAr returned from Srirangam. There appears to be no chronological evidence for that.

However, this pAsuram shuld not be construed as PeriyAzhwAr assuming the nAyaki bhAvam either. It is more like a motherly lamentation.