e-mozi

மடல் 026: படைப்பிலக்கியமும், சுதந்திரமும்

ஆழ்வார்களாகட்டும், ஆதி சங்கரனாகட்டும், கம்ப நாடான் ஆகட்டும் இவர்கள் அடிப்படையில் படைப்பிலக்கிய கர்த்தாக்கள். இவர்கள் கவிகள். கவிஞர்கள் அடிப்படையில் அழகின் உபாசகர்கள். அழகை ரசிக்கத் தெரிந்ததால்தான் வறுமையிலும் பாரதியால் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" எனப் பாட முடிந்தது. அழகு நிறைந்த உலகில், பெண்ணும் அழகுதான். அதனால்தான் கம்பனும், ஆதி சங்கரனும், ஆண்டாளும் பெண்ணின் அழகை விகல்பமில்லாமல் வருணிக்கின்றனர்.

படைப்பிலக்கியத்தின் தோற்றுவாய்க்கும், சமய உணர்விற்கும் அடிப்படைத் தொடர்பு இருக்கிறது.இலக்கியம் மனதில் தோன்றும் பொழுதுகள் புனிதமானவை. கொஞ்சமேனும் மன ஒழுக்கமும், அழகுணர்ச்சியும் இல்லாதவர்களால் சாகா இலக்கியம் படைக்க முடியாது. இது சரித்திரம் காட்டும் உண்மை. இதை மற்ற ஆக்கங்களுக்கும் பொது என்று சொல்லாம். 9வது சிம்பொனியை எழுதும் போது பீத்தோவனுக்கு பார்வையும், கேட்கும் திறனும் போய்விட்டது. இருந்தாலும் அவனால் உன்னத இசையை உலகிற்கு அளிக்க முடிந்தது. தியாகராஜர் ராம ஸ்மரனையில் மூழ்கி பாடத் தொடங்குமுன் ராக தேவதைகள் அவரிடம் கெஞ்சுமாம். "நேற்று கல்யாணியில் கீர்த்தனை செய்தாகிவிட்டது, இன்று சிவரஞ்சனியில் பாடுங்கள்" என்று!

ஆக்கத்தின் தோற்றுவாய் மிக, மிக பூடகமானதும், ஆச்சர்யம் நிரம்பியதும் ஆகும். இது கலைக்கு மட்டும் பொதுவன்று. அறிவியலுக்கும் இது பொருந்தும். ஆனால் அறிவியலில் இதைப் பற்றி பேசுவது மூட நம்பிக்கை என கருதப்படுவதால் இதைப் பற்றிய ஐதீகங்கள் அங்கு உருவாகவில்லை. இருப்பினும், பென்ஜீன் மூலக்கூறின் வடிவத்தை, ஒரு கனவில்தான் ஹெக்கூல் கண்டான். குவாண்டம் இயற்பியல் சூத்திரங்களை உலகிற்கு விளக்க முற்பட்ட விஞ்ஞானிகள் அது "விளக்கத்திற்கு" உட்படாத மாயமாக இருப்பதை உணர்ந்துதான், கிழக்கிந்திய மெய்யியல் உண்மைகளுடன் அவைகளை ஒப்பு நோக்கினர்.உதாரணமாக, ஒளியின் அடிப்படை அலகான ஒளிச்சான் (photon), பார்ப்பவரின் இருப்பைப் பொறுத்து தோன்றும். அதாவது பார்ப்பவர் இல்லாமல் பார்க்கப்படுவது இல்லை. எனவே ஒளிச்சானின் உண்மையான இருப்பை யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அது இருக்கிறது அதே சமயத்தில் அது இல்லை எனும் நிலை! இந்த நிச்சயமின்மை அறிவியலுக்கு புதிது. அதனால்தான் ஐன்ஸ்டைன் கூட குவாண்டம் இயற்பிலை கிண்டல் செய்யும் விதத்தில்"கடவுள் பகடை ஆடுவதில்லை" என்று சொன்னார். ஆனால் நம்மாழ்வார் என்ற தமிழ் கவி குவாண்டம் விஞ்ஞானிகளுடன் ஒத்துப் போகிறார்:

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளனலன் எனில், அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென இவை குண முடைமையில்
உளன் இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே


(நம்மாழ்வார் திருவாய்மொழி - முதல் பத்தில் ஒன்பது).

ஆக படைப்பிலக்கியதின் தோற்றுவாய் விளக்கத்திற்கு பிடிபடாத பூடகமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் அந்தக்கால கவிகள் இப்பூடகத்தை இறை உணர்வுடன் பார்த்து கவி சமைத்தனர்.

மேலும் படைப்பிற்கு அடிப்படையான தேவை சுதந்திரம். முழு சுதந்திரமில்லாமல் படைப்பு நிகழாது.சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரமற்றுமன்று, உள சுதந்திரமுமாகும். உள்ளத்தில் எந்தத் தடையுமில்லாமல் பறவை போல் பறந்து திரியும் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த அகச் சுதந்திரம், புறச் சுதந்திரத்தை சார்ந்ததுதான். இதை தமிழ் படைப்பிலக்கியவாதிகள் மிக ஆதி காலத்திலேயே உணர்ந்து விட்டனர். அதனால்தான், வெறும் குழு/இனத் தலைவனைப் பாடிக் கொண்டிருந்த வழக்கத்தை மாற்றி இறை பொருளை மாற்றாக வைத்தனர்.

குழுத்தலைவன் சமூக காரணங்களால் கட்டுப்பட்டவன். முழு சுதந்திரம் இல்லாதவன். சுதந்திரமில்லாத ஒன்றை மூலமாக வைத்து இலக்கியம் படைப்பது சாத்தியமில்லை. மேலும், அரசன் அரசியல் காரணி. அரசியலோ தனி மனித அகங்காரத்தை அடிப்படையாக் கொண்டது. அகங்காரமோ இயற்பியல் உண்மையற்ற (physical reality) மனத்தின் வெளிப்பாடு. அகங்காரமும், அரசியலும் அடிப்படையில் ஊழலை வளர்ப்பவை. இப்படி எந்த வகையிலும் புனிதமில்லாத ஒன்றை பாடு பொருளாக வைத்து கவி சமைப்பதை நிறுத்தி, ஆக்கத்தின் மூலகாரணியான சுதந்திர வஸ்துவான இறைவனை முன் வைத்து கவி சமைக்கத் தொடங்கினர்.

இதனால் இலக்கியம் முன்னெப்போதுமில்லாத சுதந்திரத்தைப் பெற்றது. இப்புதிய யுத்தியை வைத்து இவர்களால் சமூக கொடுமைகளைச் சாட முடிந்தது. துணிந்து திருநாவுக்கரசரால் "யாமார்க்கும் குடியல்லோம்" என்றும்; திருமூலரால், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்றும் சொல்ல முடிந்தது. இதை ஒரு சமூக இயக்கமாக ஆழ்வார்கள் வளர்த்திருப்பதற்கான அகச்சான்றுகள் கிடைக்கின்றன. உதாரணம், திருப்பாணாழ்வாரின் அகத்தூய்மையை உணராத ஜாதி இந்துக்கள் அவரை துன்புறுத்துகின்றனர், இது கண்டு பொறுக்காத தொண்டரடிப்பொடியாழ்வார் இப்படிப் பாடுகிறார்:

பழுதிலா வொழுகலாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழி குலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தோழுமின், கொடுமின், கொள்மின்!
என்று நின்னொடு மொக்க
வழிபட வருளினாய் போன்ம்
மதிள் திருவரங்கத்தானே!


அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!

(திருமாலை -42-43)

எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! இவர்கள் தெய்வம் என்ற கருப்பொருளை வைத்து ஒரு சம தர்ம சமூதாயத்தை உருவாக்கப் பார்த்தனர். அதே கருப்பொருளை வைத்து பெண் அடிமைத் தளையையும் எதிர்த்தனர்:

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமற்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வரக்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய், மன்மதனே


என்று நாச்சியார் திருமொழியில் கோதை நாச்சியாரான ஆண்டாள் சொல்கிறாள். இதில் உவமை அழகோடு தனக்கு நிகரான ஆண்பிள்ளை இல்லை என்பதை, காட்டில் திரியும் நரி போன்றவர் ஆடவர் என்று துணிந்து சொல்ல கடவுள் பக்தி என்ற யுத்தி பயன்படுத்தப் படுகிறது. மேலும்,

அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
.


"செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்சிறுமா னிடவரை" என்னும் வரிகள் முக்கியமானவை. பெண்ணின் மார்பு பார்த்து "சைட்டு" அடிக்கும் சிறு மானிடர் என்று ஆண்டாள் ஒரு போடு போடுகிறாள்!அதே தைர்யத்தில் தன் பாலியல் ஆசைகளையும் மறைக்காமல் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயத்தில் குடும்பப் பெண்ணான ஆண்டாளால் இப்படி சொல்ல முடிகிறது.

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகுலஞ் செய்யும்
ஆங்குயிலே! உனக்கென்ன மறைத்துறைவு?


ஆண்டாள் மிக தைர்யமாகத்தான் இதைச் சொல்கிறாள். உனக்கென்ன மறைத்துறைவு? என்ற பதத்தால் அவள் தன் உள்ளுணர்வுகளை யாரிடமிருந்தும் மறைக்க வேண்டிய தேவையில்லை என்பதை தெளிவாகச் சொல்கிறாள்.

இத்தகைய பாலியல் சுதந்திரம் தற்போதைய எழுத்துகளில் அம்பை, வாசந்தி இவர்களிடம் காணக்கிடைக்கிறது. ஆனால் அதற்கு தமிழகம் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 1200! இருபதாம் நூற்றாண்டில் பெரும் சமூக மாற்றங்களுக்குப் பிறகுதான் மேலைத்தேசத்து பெண்களாலும் இப்படிப் பட்ட துணிவுடன் இப்போது பேசமுடிகிறது, எழுத முடிகிறது. ஆனால் ஆண்டாள் இதைச் சொன்ன காலமோ எட்டாம் நூற்றாண்டு!

Date: Sun, 04 Jan 1998 13:36:01 +0100

0 பின்னூட்டங்கள்: