e-mozi

மடல் 028 - விண்ணீல மேலாப்பு!

ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து வருகிறோம்.

"எங்கள் சிற்றில் வந்து சிதையேலே" என்று கெஞ்சும் சிறுமியாக, "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்,தீக்குறளைச் சென்றோதோம்" என்று விரதமிருக்கும் விடலைப் பெண்ணாக, பின் தான் பெண் என்று உணர்ந்து வெட்கம் கொள்ளும் பருவத்தினளாக, "இனியென்றும் பொய்கைக்கு வாரோம், துகிலைப்பணிந்தருளாயே", பின் வாலைக் குமரியாக இருந்து விரகத்தில் தவிக்கும் பெண்ணாக - "கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து, ஒருநாள் தங்குமேல் என்னாவி தங்குமென்றுரையீரே", பின் "வாரணம்ஆயிரம் சூழ வலம் வந்து" நிற்கும் திருமாலை மணம் செய்யும் பெண்ணாக, "எல்லே, இளங்கிளியே!" என இதமாய் அழைத்து விழிக்க வைக்கும் தாயாக...இப்படி பல பரிமாணங்கள் ஆண்டாளுக்கு.இம்மடலில் இன்னும் சில தேமதுரத் தமிழ் பாசுரங்களை ரசிப்போம். ஆண்டாளின் தமிழ் ஆளுமை வியப்பிற்குரியது. அவள் வாக்கில் தமிழ் தவள்கிறது. பாருங்கள்,

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்,
குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.

என்ன வர்ணனை பாருங்கள். சொல்லும் போதே, எண்ணும் போதே அழகாக இல்லை? கழல் வளையை, அதாவதுபெண்கள் அணியும் கணையாழியை, "கழல் வளை" ஆக்கினாரே! அதாவது கழண்டு விழும் வளையாக மாற்றிவிட்டாராம். அவ்வளவு இளைத்து விட்டது உடம்பு! பாவம்!

கோதையின் அடுத்த கவிதையின் அழகைப் பாருங்கள்:

விண்ணீல மேலாப்பு
விரித்தாற் போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே!
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே?

"விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்காள்" ஆஹா! என்ன கற்பனை. பாரதி சொல்லுவான், "பட்டுக்கருநீலப் புடவை, பதித்த நல் வயிரம் நட்ட நடு நிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடீ" ஒரே பரம்பரை!

இன்னொரு அழகான உவமை அழகு -

கார்காலத் தெழுகின்ற
கார்முகில்காள், வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப்
பொருதவனார் பேர்சொல்லி,
நீர்காலத் தெருக்கிலம்
பழவிலைபோல் வீழ்வேனை,
வார்காலத் தொருநாள்தம்
வாசகம் தந் தருளாரே.
"நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை" - மழை காலத்தில், தெருவில் ஆறாய் பாயும் நீரில்மிதக்கும் பழம் இலையை பார்த்து ரசித்ததுண்டா? என்ன பார்வை, என்ன உவமை - அடடா!

கண்ணனுக்கு எத்தனையோ பெருமைகள். ஆழ்வாராதிகள் அப்படி பாடி ஓய்ந்திருக்கிறார்கள். ஆனால் ஓர் பெண்கொடியை வதை செய்தாக ஒரு பழி அவனுக்கு இருப்பது ஆண்டாள் மூலமாகத்தான் தெரிகிறது!

 
மதயானை போலெழுந்த
மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்!
பாம்பணையான் வார்த்தையென்னே,
கதியென்றும் தானாவான்
கருதாது, ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே


இப்படி குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் போதும் அவள் கவி மனம், "மதயானை போல் எழுந்தமேகங்களை" ரசிக்காமல் விடவில்லை (அது சரி, மேகங்களின் மாறும் வடிவை பார்த்து ரசித்ததுண்டோ? இல்லையெனில் ஜன்னலுக்கு வெளியே உடனே பாருங்கள்!).ஆண்டாள் வேண்டிய மனோ நிலை மிக உன்னதமானது. ஊன் உருக அவள் காதல் செய்தாள். அவள் காதல் ஆழ்ந்த அன்பை ஆதாரமாகக் கொண்டது. இதோ,

என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்,
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே,
பொன்புடை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்.


வேல் நெடுங் கண்கள்! அதில் இமை பொருந்தி பல நாள் ஆகிறதாம். வைத்த கண் வைத்தபடி காத்திருக்கிறாள். அவளது பொன்னான மேனிக்கு அருள, கொடியுடைய புண்ணியனான கண்ணன் வர கூவுமாறு குயிலைக் கேட்கிறாள். இப்படி என்புருகி என்றாவது ஒரு சில நொடிகளாவது நாம் பக்தி செய்தது உண்டா???

"பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழையிருக்குதடி தங்கமே தங்கம்"

என்கிறான் பாரதி,

நேர முழுவதும் அப்பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்


தங்கம் போன்ற சொற்கள். இது என்ன நோய்?

வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்,
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்,
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்


உடல் நிறம் மாறுகிறது, மனம் குழைகிறது, மானம், வெட்கம் போய் விடுகிறது (இல்லாவிடில் நாச்சியார் திருமொழியே நமக்கு கிடைத்திருக்காது!), உணவு செல்லவில்லை, உடல் மெலிகிறது....

உணவு செல்லவில்லை-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; சகியே!
மலர் பிடிக்க வில்லை.
குண முறுதியில்லை;-எதிலும்
குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்ததடீ! -சகியே!
படுக்கை நொந்ததடீ!
கோலக் கிளி மொழியும்-செவியில்
குத்தலெடுத்தடீ!
நாலு வைத்தியரும்-இனி மேல்
நம்புவதற்கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்!

ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. நோய் அதிகமாய் விட்டால் என்ன நடக்கும்?

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள்! என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்


பெண் ஓடிப் போய் விடுவாள்! பெரிய பழி வந்து சேரும். அதனால் நந்தகோபன் வாழும் ஊருக்கு விரைவில் தன்னை இட்டுச் செல்லுமாறு வேண்டுகிறாள் கோதை. ஆசை முகம் மறந்து போகுமுன் இது நடக்கவேண்டும். அடடா! எவ்வளவு சிக்கல்?இப்படி காதல் கொள்ள வைக்கும் பொருள் சிறப்புடைதாய் இருக்க வேண்டும். நிலவுக்கு குறி வைத்தால்தான் கூரைக்காவது ஏற முடியும். நோக்கே, குறியே மட்டமானதாய் இருந்தால் வாழ்வில் முன்னேற்றமில்லை.ஆண்டாள் வைக்கும் குறி இறைமை. இதில் இடைப் பேச்சுக்கு இடமேதுமில்லை. இவள் காதல் கொள்ளும் கண்ணன் எப்படிப் பட்டவன்?

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள்! உங்களுக் கேச்சுக்கொலோ,
கற்றன பேசி வசயுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து,
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்


பரம்பொருளாய் இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து நிற்கும் அவன், மாடு மேயடா, பொடியா! என்றால் மாடு மேய்கிறான்; காட்டில் வாழுடா என்றால் காட்டு ஜனங்களோட ஜனமாய் காட்டில் வாழ்கிறான்; உரலில் வைத்து கட்டி உதைத்தால் உதையும் வாங்கிக் கொள்கிறான், பசுக் கூட்டங்கள் மழையில் நனைகிறதே என்று இரக்கப் பட்டு மலையையே குடையாகப் பிடிக்கிறான். அடடா! எவ்வளவு எளிமை. எவ்வளவு காருண்யம்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!..
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரு நன்மையெல்லாம் பேசி முடியாது!
கண்ணை இமையிரண்டும் காப்பது போல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கிறான். வாய் முணுத்தல் கண்டறியேன்.
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்தமாக்குகிறான்...
பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

கவியால், கவி அழகால், காருண்யத்தால், பண்பால், பக்தியால் வழிகாட்டும் எம் ஆசான் பாரதிக்கும், எம் இதத்தாய் கோதைக்கும் எம் நன்றிகள்.

மாலைத் தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி! அவள் தூய நற்பாதம் துணை நமக்கே


Subject: [tamil.net] Pasura madal 28
Date: Sun, 18 Jan 1998 13:35:57 +0100

0 பின்னூட்டங்கள்: