e-mozi

மடல் 030- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!

இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின.எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த தத்துவ உள் விவகாரங்களுக்குள் புகாமல் எளிமையாய் இக்கேள்விகளை புரிந்து கொள்ளப் பார்ப்போம். இராமானுசருக்கும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் நெடியோன், திருமலை எம்பிரான் வேங்கடவன் கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறான். தமிழகத்தின் வட எல்லையாக இத்திருவேங்கடம் இருந்து வந்ததற்கான சான்றுகள் நிரம்ப உள்ளன. இத்திரு வேங்கடம் இராமானுசர் காலத்தில்(கி.பி.1017-1137) முருகன் கோவிலாகவும், சிலர் அம்பாள் சன்னிதி என்றும் வழிபட்டு வந்ததாகவும் குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இராமானுசர் புராண, இதிகாச ஆதாரங்களைக் கொண்டு அக்கோவிலை வைணவ திருத்தலமாக மாற்றிக் கொடுத்தார் என்பது வரலாறு.


இவ்வேங்கடம் 202 பாசுரங்களால் தொண்டரடிப் பொடியைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் ஏத்திபுகழப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடி அரங்கனைத் தவிர மற்றவரைப் பாடவில்லை. வைணவஆச்சார்யனாகவும், ஆழ்வாராகவும் புகழ்பெற்ற நம்மாழ்வார் (கி.பி. 765-790) வேங்கடவனை இப்படித்துதிக்கின்றார்.

உலகம் உண்ட பெருவாயா
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.
நெடியாய் அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
கூடு மாறு கூறாயே. 6.10.1

இந்த உலகம் உய்ய கால காலமாக கால்கடுக்க காத்து நிற்கும் இத்தெய்வத்திடம் "உன் பாத மலருடன்கூடும்" நாளைக் கூறாயே என்று உருகுகிறார். திருவாய் மொழியின் ஆறாம் பத்தில் முதல் பாடலாக அமையும் இப்பாடலைத் தொடர்ந்து பத்துப் பாடல்களில் அவர் வேங்கடவன் முன் சரணாகதி செய்வதை பதிவுசெய்கிறார். பத்தாவது பாடலில், சரணாகதி செய்துவிடுகிறார்.அகல கில்லேன் இறையும் என்
றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன்
றுடையாய் என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10
வேங்கடவன் அடிக் கீழ் அமர்ந்து சரணாகதி செய்வதாகச் சொல்கிறார்.
எனவே இராமானுசருக்கு முன்னோடியாக இங்கும் மாறன், பாராங்குசன் நிற்கிறார்.
சரி, தனி ஒருவர் இறைவனிடம் தஞ்சம் புகுவதை எல்லோருக்கும் சேர்த்து செய்வதாக எப்படி கொள்ளமுடியும்?


இங்குதான் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மீகப் புரிதல் நிற்கிறது. இந்திய நோக்கில் எப்போதும் தனி, தான், நான், எனது என்பது கேள்விக் குறியாகிறது. ஒரு பரந்த முழுமையான (wholistic) நோக்காகத்தான் இப்பிரபஞ்சத்தை நம் முன்னோர்கள் பார்த்து இருக்கின்றனர். இந்த பரந்த உலகு ஒன்றுடன் ஒன்று இயைந்து, பின்னிப் பிணைந்து இயல்வதை (inter-connected and interdependent) தீர்க்கமாகப் பார்த்திருக்கின்றனர் நம் தீர்க்கதரிசிகள். "நான்" என்ற உணர்வு சிக்கலான நரம்பியல் அமைப்பினால் உருவாகும் உணர்வு. அதற்கு பருப்பொருண்மை கிடையாது. இதை மாயை என்று இந்தியர் கண்டனர். என்று, நமக்கு இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து, உணர்வு பூர்வமாக இவ்வலைப் பின்னலை நம்முள் உணர்கிறோமோ அன்று தனி மனிதன் செய்யும் சரணாகதி உலகம் செய்யும் சரணாகதியாக ஆகிவிடுகிறது.


இந்தத் தொடர்பைத்தான் (அதாவது இதையேதான்) குவாண்டம் இயல்பியலும் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. ஆனால் அறிவியல் மொழியிலாகட்டும், ஆன்மீக மொழியிலாகட்டும் எப்படிச் சொன்னாலும் இவ்வுண்மை அவ்வளவு எளிதாக மனிதர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது. இவ்வுலகின் பிரிவுகளுக்கும், சமர்களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் இதுதான் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ?


இந்தநூற்றாண்டின் தனிப்பெரும் தத்துவ/சமயச் சிந்தனையாளரான கிருஷ்ணமூர்த்தி இதையே "நாம்தான் உலகம்" என்று அறைகூவுவார். மானுடம் என்றோ "நான்" என்பது உண்மை என்று நம்பி பாதை தவறிவிட்டது, அன்றிலிருந்து பிடித்தது பீடை என்பார். "தனி" (individual) என்பதே கிடையாது என்பார் இவர்.சமீபத்திய உளவியல் ஆய்வுகள் ஏறக்குறைய இதே முடிவுக்கு வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாய் உள்ளது. இவர்களது முடிவும், "நான்" என்பது மீண்டும், மீண்டும் மூளையில் நொடிப் பொழுதும் உருவாக்கப்படுவதாகவும், இந்த "நொடிகள்" சேர்ந்து ஒரு தனி "நான்" ஆக உருப்பெருகிறது என்றும் சொல்கின்றன. புத்தன் சொல்லுவான் "நான்" என்பது தீச்சுடர் போன்றது என்று. தீப்பிழம்பு பார்ப்பதற்கு ஒரே தீபம்போல் தோன்றினாலும் கிட்டே பார்த்தால் அது சின்னஞ்சிறு சுடர்கள் சேர்ந்து உருவாகும் ஒரு பிழம்பு என்று தெரியும். ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கி வருவது காணக் கிடைக்கிறது.இப்பிரபஞ்சத்திலுள்ள சங்கிலித் தொடர்பை,

வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல்உயர குடி உயரும்,
குடி உயர கோன் உயரும்


என்ற பண்டை வாக்கால் உணரலாம். ஒளவை

நெல்லுக்கிறைத்த நீர்
வாய்க்கால் வழியோடி
புல்லுக்குமாங்கே பொசியுமாம்
தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல்
அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

என்பார்.

அதாவது இவ்வுலகு இத்தகைய உண்மை உணர்ந்த நல்லவர்களால் காக்கப் படுவதாக பாடல் சொல்கிறது. அப்படியெனில் நம்மாழ்வார் செய்த சரணாகதியும், இராமானுசர் செய்த சரணாகதியும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இதே பொருளில் காஞ்சி மாமுனி, "என்னை ஜெகத்குரு என்று சொல்லி பெரும் பொறுப்பைக் கொடுத்துவிட்டீர்கள். உலகம் உய்ய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சில மணித்துளிகளாவது தினமும் தியானம் செய்தால் என் பாரம் குறையும்" என்று சொல்லியிருக்கிறார். அதாவது இவ்வுலகு என்பது நமக்கு புறத்தே, நம்மில் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு இயக்கம் போலவும், நமக்கு நம் ஜோலிகள், நம் கவலைகள், நம் ஆசாபாசங்கள் இவைதான் முக்கியமென்றும் இயங்கும் வரை உலகம் உய்யாது என்று பொருள் படுகிறது.

என்று, உலகு என்பது "நாம்"தான் என்று உணர்கிறோமோ அன்று பெரும் பொறுப்பை நாம் உணர்வதுடன், இந்த உணர்வுக்கும் உள்ளிருந்து இயங்கும் ஒரு சக்தியைக் கண்டு கொண்டவராவோம். அந்நிலையில், மனப்பூர்வமாய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உலகு தழுவிய தாக்கம் தானாகவே அமைந்துவிடுகிறது. இந்த நோக்கில்தான் நம்மாழ்வார்/இராமானுசர் செய்த சரணாகதியை பார்க்க வேண்டும்.

சரணாகதி ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அடுத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்.

Subject: [tamil.net] Pasura madal 30Date: Sun, 08 Feb 1998 11:14:24 +0100

5 பின்னூட்டங்கள்:

  Gopi

Thursday, January 17, 2008

Dear Sri Kannan,

Your blog entries are very interseting and though provoking, and a daily tonic for me !!

Question: If one Charanagathy is good enough for 'ALL' why should Sri. Ramanuja Acharya do when Sri. Nammazhwar's Charanagathy is good enough ?

Thaanks,

Gopi

  N.Kannan

Thursday, January 17, 2008

திரு.கோபி:

உங்கள் இனிய வார்த்தைகளுக்கு நன்றி.

ஒருவர் செய்யும் சரணாகதி உலகிற்கே பொது என்னும் போது மற்றொருவர் செய்ய வேண்டிய அவசியமென்ன? என்பது உங்கள் கேள்வி.

ரொம்ப அழகான கேள்வி, அவசியமான கேள்வியும் கூட!!

நம்மாழ்வார் செய்கிறார், இராமானுச முனி செய்கிறார் என்றார் அது அவர்களது பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. எப்படி இயேசு மானிடர்க்காய் அவர்தம் பாவங்களைத் தன் சிலுவையில் சுமந்தாரோ அது போல், நம் பாவங்களை மன்னிக்குமாறு அவர்கள் சரணாகதி செய்துவிட்டனர். சரி, பரகதி இனி நமக்கு ஆச்சே என்று சும்மா நாம் இருக்கலாமா? இவர்கள் செய்த கருணைக்கு நாம் நன்றியாக ஏதாவது செய்ய வேண்டாமா?

கொஞ்சம் யோசியுங்கள்! இந்த மண், இந்த வாண், இந்த வளி, இந்த உயிர் இவையெல்லாம் நம் சொத்து என்று தந்தவன் யார்? இந்த சுகங்களை நாம் அனுபவிக்கச் செய்பவன் யார்? இத்தனையும் அள்ளித் தந்த வள்ளலுக்கு நாம் செய்யும் காணிக்கை என்ன?

ஒரு துளி கண்ணீர்.

அதில் இறைவன் உளம் மகிழ்ந்து போகிறான்.

எனவே நம் பிறவிக் கடனே அவன் உவப்பிற்காக வாழ்தலே. நமக்கு பரகதியே நம் ஆச்சார்யர்கள் வாங்கித் தந்திருந்தாலும் நம் கடனுக்கு நாமும் சரணாகதி செய்ய வேண்டும். இது "அவன்" உவப்பிற்கு. சரணாகதி செய்வதால் பலன் நமக்குத்தான்.

இந்த பாவத்தில்தான் இராமானுசமுனி செய்திருக்க வேண்டும். அவர் தன் இயல்பாய் அதைச் செய்தார். அவர் வழியில் நாமும் செய்யலாமே! குறை என்ன?

நன்றி.

  Gopi

Friday, January 18, 2008

Beautiful, Mikka Nanri for the explanation.

Gopi

  nAradA

Friday, June 20, 2008

>>இவ்வேங்கடம் 202 பாசுரங்களால் தொண்டரடிப் பொடியைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் ஏத்திபுகழப்பட்டுள்ளது<<

Small correction! Tiruppadhi was sung about only by 10 AzhwArs while Srirangam was eulogized by 11. Madurakavi did not eulogize any deity. He eulogized only nammAzhwAr. (unless one extrapolates it to the Lord too through nammAzhwAr)

  நா.கண்ணன்

Friday, June 20, 2008

I need to check my references. Looking at your records, you may be correct! :-)

மதுரகவி ஓர் அற்புதப் பிறவி. தன் ஆச்சர்யனைத் தவிர "தேவு மற்றறியேன்" என்று இருந்தவர். ஆனாலும், இவர் ஆச்சர்யனோ கண்ணனுக்காக வாழ்பவன். எனவே அவரைப் புகழும் போதும், ஆச்சார்யனுக்கு உவப்பளிக்கும் விதத்தில் "கண்ணிநுண் சிறுத்தாம்பு கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்" என்று பெருமாளைப் பாடுவது போல் அமைக்கிறார் பாசுரங்களை!