e-mozi

மடல் 031- என் சரண் என் கண்ணன்

உப்பிலியப்பன் கோயில் என்றழைக்கப்படும் தலத்தில் தன்னொப்பார் இல்லப்பனாய் வீற்றிருக்கும் எம்பெருமானைக் கண்டு நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்:

மூவுலகங் களுமாய்
அல்லனாய் உகப் பாய், முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
தவ்வையாய்ப்புகழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
யுறைகின்ற பரஞ்சுடரே


அவன் மூவுலகங்களுமாய் இருக்கிறான், ஒன்றுமேயில்லாத வெற்றாயுமிருக்கிறான். உவப்பாய் இருக்கிறான், அவனே கோபமாயும் (முனி=சினம்) இருக்கிறான். புகழாய் நிற்கும் அவனே, பழியாயும் இருக்கிறான். இப்படி எதிர்மறைகள் சேரும் போது அவன் அவை அல்லனாய் ஆகிவிடுகிறான். இப்படி எதிர்மறைகள் இல்லாத அவன் "இப்பாவியேன்" மனத்தே உறைகின்றான் என்கிறார்."பாவியேன்" என்ற பதத்தால் இரக்கம் கொள்ளப் பட வேண்டியவன் என்று தெரிகிறது. பாவம் எங்கிருந்து வருகிறது? கற்பிதம் நிரம்பிய வாழ்விலிருந்து வருகிறது. எதைக் கற்பிதம் எனலாம்?

இந்தியாவில் பிறந்த நாலு குழந்தைகளை கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து எது எந்த சாதி என்று சொல்லச் சொன்னால் யாராலும் முடியாது. அது எந்த மதம் என்று சொல்லச் சொன்னால் அதுவும் முடியாது. ஆனால் நமக்கு சாதியும், மதமும் பெரும் அடையாளமாகிப் போகின்றன. இக்கற்பிதத்திற்காக கொலையும், பழியும் சுமக்க நாம் தயாராய் இருக்கிறோம். பிறக்கும் போது இருந்த மனது போகப் போக மாறுது. எழுதப்படாத சிலேட்டாய் இருந்த மனது போகப் போக கிறுக்கல் நிரம்பிய குப்பையாய் போய்விடுகிறது. இந்தக் குப்பைதான் நாம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குப்பை கூடும் போது குழப்பம் வந்து நிற்க வாழ்வு இன்னல் நிரம்பியதாய் போய்விடுகிறது. மனது தெளிவைத் தேடுகிறது.

பரஞ்சுடர் உடம்பாய்
அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும்
கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை
யாவர்க்கும் வன்சரணே


மனது தெளியும் போது தெரிகிறது பரஞ்சுடர் உடம்பாய் இருப்பதும் ஒன்றே, அழுக்குப் பதித்த உடம்பாய் இருப்பது அதுவே என்று. மனது தெளிவில்லாமல் குழம்பியிருக்கும் போது தேவை நிம்மதி. வரம் தருகின்ற பாதங்கள் அல்லால் யாவர்க்கும் வேறு சரண் யாது என்று கேட்கிறார் நம்மாழ்வார். ஆக இங்கு கேட்கப்படும் வரம் "தெளிவு" என்று தெரிகிறது.இப்பாடல்களில் இன்னொரு கருத்து மறைந்துள்ளது. அதாவது நாம் வாழ்வை கருப்பு-வெளுப்பு என்று எதிர்மறைகளாய்தான் பார்க்க விரும்புகிறோம். உதாரணம், இந்து அல்லது முஸ்லிம். கிருத்துவன் அல்லது பெளத்தன் இப்படி. குழந்தைக்கு பாலூட்டும் போது, சோறு–ட்டும் போதே போதனைகள் தொடங்கி விடுகின்றன - எவன் எவனிலிருந்து வித்தியாசமாக இருக்கிறான் என்று. பள்ளிக் கல்வி இதை வலுவூட்டுகிறது. நம் கல்வி அனைத்தும் மாணவர்களை அளவிடும் கருவியாக அமைந்திருப்பதை நாம் கவனிப்பதேயில்லை. அரை மார்க் வித்தியாசத்தில் வாழ்வு திசை மாறிப் போகும் அளவுக்கு அளவுகள் நமக்கு முக்கியமாக இருக்கின்றன. பிறந்ததிலிருந்து நாம் கற்பது வித்தியாசங்களை.

உலகு*சூன்யம்; உவப்பு*முனி; புகழ்*பழி; புதுமை*பழமை; பகை*நட்பு; விடம்*அமுதம்; இன்பம்*துன்பம்; கலக்கம்*தேற்றம்; தழல்*நிழல்; ஞானம்*மூடம்; சுடர்*இருள்; புண்ணியம்*பாவம்; புணர்ச்சி*பிரிவு; உண்மை*இன்மை; கருமை*வெளுமை; குறுமை*நெடுமை; சிறுமை*பெருமை....இப்படி நமது வாழ்வு, படிப்பு இவை எதிர், எதிராகத் தோன்றும் வித்தியாசங்களில் குடிகொண்டுள்ளது. இந்த வித்தியாசங்கள்தான் உண்மை என்று நம்பி ஒரு பொய்மையான, கற்பிதமான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரை முஸ்லிம் என்றோ, இந்து என்றோ ஒரு எண்ணக் குறியீட்டால் பிரித்து விடுவதால் அவர் எந்தப் பிரிவிலும் விழாத, ரத்தமும், சதையும் சேர்ந்த மனிதர் என்பதோ; இத்தகைய ஒரு உயிரை உருவாக்க பல கோடி ஆண்டுகளை இவ்வுலகம் எடுத்துக் கொண்டது என்றோ, அடிப்படை மரபுத் தொடர் மூலக்கூறுவான டி.என்.ஏ இவரை மற்ற எல்லா உயிர்களுடனும் 99.9 சதவிகிதம் சேர்த்துக் காண்கிறது என்ற உண்மையோ நமக்கு புலப்படுவது இல்லை. மனித மனதுக்கு தேவையானது "ஏதோ ஒரு சின்ன" வித்தியாசம் அவ்வளவுதான். அதை வைத்து பிரித்து, பாகுபடுத்தி, அளவிட்டு, வாழ்வை வெகுவாக சிறுமைப் படுத்தி விடுகிறது.

மனதின் இப்போக்கை கண்டனம் செய்கிறார் நம்மாழ்வார் தனது திருவாய் மொழி ஆறாம் பத்தின், மூன்றாவது பத்துப் பாடல்களில். அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், இறைமை கொண்ட உள்ளம் உலகின் தொடர்ச்சியைக் கவனிக்குமேயன்றி அதன் பிரிவுகளை அல்ல என்று. கண்ணனின் இன்னருள் கொண்டோருக்கு இந்த வித்தியாசங்கள் முக்கியமில்லை என்பதை இப்படிச் சொல்கிறார்:

புண்ணியம் பாவம்
புணர்ச்சி பிரிவு என்றிவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்
இன்மயாய் அல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணன் இன்னருளேகண்டு
கொண்மின்கள் கைதவமே


இப்படியொரு உள்ளம் அமையப் பெருமாகின் வாழ்வு பொருள் நிரம்பியதாய் போய்விடும். உலகின் தொடர்ச்சியும், அதன் உண்மை நிலையும், அதன் உறவுகளும் உண்மையாய் புரிந்து கொள்ளப்படும் போது மனது குதூகலத்தில் இருக்கும். அந்த மனோநிலையை அவரது ஒன்பதாவது பாடலில் தெளிவாய் காணலாம்:

என்னப்பன் எனக்காய் இகுளாய்
என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
தந்தனன்தன தாள்நிழலே
கண்ணனின் இன்னருள் பட்டவுடன் உலக மாயை விலகி விடுகிறது. மாயை இருந்த வரை அவர் இறைவனை இகுளாய் (செவிலித்தாயாய்) கண்டார். அவன் இன்னருளால் உண்மை விளங்கிபின் அவனே தனது உண்மையான தாய் என்றும், தந்தை என்றும் கண்டு கொண்டார். அப்போது இறைவனை அன்போடு பொன்னப்பன் மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பாரில்லப்பன் என்று அழைக்கிறார்.

இவ்வளவு பொருள் நிறைந்த ஒரு பண்பாடு இன்றுள்ள நிலமையில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை (தனி மனித விடுதலை) தவறிக் கெட்டு, பாழ்பட்டு நிற்கிறது. நம்மாழ்வார் கோடி காட்டும் புரிதல் நம்மிடமிருந்து எங்கு போனது? இப்பாசுர மடல்களே எதாவதொரு பிரிவில் வைத்து பார்க்கப் பட்டு மறுக்கப்பட்டு, மறக்கப் பட்டுதான் போகிறது என்பது நடைமுறையில் தெரிகிறது.அப்போதுதான் நம்மாழ்வார் போல் கதறத் தோன்றுகிறது:

"என் சரண் என் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே" என்று !!

பிகு: சரணாகதியின் ஒரு விளக்கம் இது. மற்றய விளக்கங்களை போகப் போகப் பார்ப்போம்.

Subject: [tamil.net] Pasura madal 31
Date: Sun, 18 Feb 1998 11:14:24 +0100

2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, January 16, 2008

சரணாகதியின் துவக்கக் கோட்டை அருமையா நூல் பிடிச்சிக் காட்டியிருக்கீங்க கண்ணன் சார்!

//மனித மனதுக்கு தேவையானது "ஏதோ ஒரு சின்ன" வித்தியாசம் அவ்வளவுதான். அதை வைத்து பிரித்து, பாகுபடுத்தி, அளவிட்டு, வாழ்வை வெகுவாக சிறுமைப் படுத்தி விடுகிறது//

எவ்வளவு உண்மை!
அதான் சரணாகதிக்குத் தேவை பூரண விசுவாசம் என்றார்கள்!
விசுவாசம் பூரணமா எப்போ வரும்?

பாகுபடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் பயம் தான் வரும்! பயத்தில் தற்காப்பு தான் மேலோங்கும்!
அவனே காப்பு-ன்னு எண்ணம் வரவே வராது!

வித்தியாசம் நீங்கினால் தானே விசுவாசம் வரும்!!
அதனால் தான் முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று இறைவனை வித்தியாசம் பாராது சட்டென்று அனைத்து தெய்வங்களின் பேர் சொல்லியும் அழைத்து விடுகிறார் நம்ம மாறன்!

அடுத்த சரணாகதிப் பதிவுகளுக்கும் காத்திருக்கேன்! :-)
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும்!

  N.Kannan

Wednesday, January 16, 2008

நன்றி! கண்ணபிரான். உங்களுக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!