e-mozi

மடல் 032- கலியும் கெடும், கண்டு கொண்மின்!

"எல்லா ரகசியங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ரகசியமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீண்டுமொருமுறை சொல்கிறேன்; கேள், நீ எனக்கு மிகவும் இஷ்டமானதால் உனக்கு நன்மை சொல்கிறேன்"

என்ற பெரிய பீடிகையோடு பார்த்தசாரதியான கண்ணன் தன் நண்பனும், சீடனுமான பார்த்தனுக்கு பகவத் கீதையில் கீழ்க்கண்ட வழியைச் சொல்கிறான்,

" எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு.
நான் உன்னை எல்லா பாவங்களினின்றும் விடுவிக்கிறேன், துயரப்படாதே"
(கீதை 18:66).இந்த சுலோகமும் இச்சரணாகதியும் பெரும்பாலான இந்துக்களுக்கு பரிச்சியமான ஒன்று. சைவமும், வைணவமும் சரணாகதி பற்றி நிரம்பச் பேசுகின்றன:

"கண்ணன் திருவடி எண்ணுக மனமே....
சிவனும் வானோர் எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே
கண்ணன் திருவடி எண்ணுக மனமே.


என்பான் பாரதி. இதே கருத்தை நம்மாழ்வார்,

கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
யாயவர்க் கேயி றுமினே.

5.2.7

என்கிறார். ஆக இப்படி வைதீக மதங்கள் சரணாகதி பேசுகின்றன என்றால் பொது மறையென்றும், சில சமயங்களில் சமணச் சார்புடைய மறையென்றும் சொல்லப்படும் வள்ளுவம்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


முதல் பத்துப் பாடல்களில் 7 பாட்டில் சராணாகதி பேசுகிறது. கடவுளை ஒத்துக் கொள்ளாத பெளத்தமும் கடைசியில் "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" என்று வாய் கொள்ளாமல் சரணாகதி பற்றி பேசுகிறது.ஆக அது வைதீக மதமானாலும், அவைதீக மதமானாலும் சரணாகதி எல்லோருக்கும் முக்கியமாகப் பட்டிருக்கிறது. கால, காலமாக சரணம் என்பது இந்திய வாழ்வியலின் முக்கிய கோட்பாடாக வந்திருக்கிறது.

சரணம் என்பதை புரிந்து கொள்ள, வாழ்வு என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது சிக்கல்:-)

சாதாரண பார்வையில் வாழ்வு என்பது புரிந்துகொள்ள இயலாத ஒரு ஓட்டமாக தெரிகிறது. அதனால்தான் பிரெஞ்சு சிந்தனையாளர் சார்த்தர் துணிந்து, "அர்த்தமற்ற உலகில் மனிதன் அன்னியமாக உணர்கிறான் என்றார்". நமது மூதாதையர் இதை மிக நுணுக்கமாக அறிந்து கொண்டு, பிளேட்டை மாற்றிப் போட்டனர். அதாவது வாழ்வுக்கு அர்த்தம் நாம் கொடுப்பதில் இருந்ததான் வருகிறது. எனவே "நீ தான் அது" (உபநிஷம்) என்று சொல்லிப் போயினர்.
நீதான் அது என்றால்?

தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே.

10.7.2

திருவாய் மொழியின் இப்பாடல் இதை மிக அழகாக விளக்குகிறது. தானேயாகி, நிறைந்து, உலகு, உயிர் இவையாகி, தானே, யான் என்பானாகி, தன்னைத்தானே துதித்து, நமக்கு தேனே, பாலே, கரும்பே, அமுதமே என்று தித்தித்து.....இதற்கு அடுத்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள். ஒரு ecstasy...

என் கோனாகி (அதாவது என்னை ஆள்வானாகி) நின்றொழிந்தான் என்கிறார் நம்மாழ்வார். இப்படி உரிமையுடன் அவர் சில பிரயோகங்கள் செய்வார். அவை அன்பின் சொற்கள். வேறு வேலை இல்லாது அவன் இவருக்கு கோனாகி நின்று ஒழிந்தான்! அடடா! (ஏண்டா? பழியாய்கிடைக்கிறாய் என்று சொல்வதில்லையா...அது போல்தான் இதுவும்)
அதற்கு அடுத்த வரி இன்னும் மேல்..."என்னை முற்றும் உயிருண்டே!". சுத்தம்! இவரை சாப்பிட்டு விட்டார் பெருமாள். தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா என்கிறான் பாரதி. எல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! இதுதான் உப நிஷம் சொல்லும் "நீதான் அது".

இந்த வடி கட்டின அத்வைதம் சித்திப்பது துர்லபம் என்று வாழ்வு நமக்கு தினம் காட்டுகிறது.
அதனால்தான் சரணாகதி வேண்டி இருக்கிறது!


பாரதி கீதை வரியை மாற்றிப் போடுவான்:

வையகத்துக் கில்லை மனமே, உனக்கு நலஞ்
செய்யக் கருதி செப்புவேன் - பொய்யில்லை
எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்கு மென்ற
சொல்லால் அழியும் துயர்


அதாவது நாம் சொல்லி இந்த உலகம் நடக்க வில்லை. இதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. எனவே, எல்லாமளிக்கும் இறை நம்மையும் காக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை செலுத்து என்கிறார்கள் சான்றோர். இந்த நம்பிக்கையை மனதில் கொண்டுவர வேண்டும் அது மிக முக்கியம். நம்பிக்கை இழந்து விட்டால் வாழ்வு நரகமாகிப் போகிறது. அதைத்தான் இவர்கள் "கலி" என்கிறார். அதாவது இருள் சூழ்ந்த வாழ்வு/உலகு. பல பெரிய மேலைத் தத்துவஞானிகள் கலியின் கொடுமை கண்டு "சாவுதான் நிம்மதி" என்று தன்னுயிர் ஈந்து இருக்கிறார்கள்.எங்கே இந்தியத்தாயின் மைந்தர்கள் செத்தொழிந்து போவார்களோ என்ற பயத்தில் மாறன் சடகோபன் சூளுரைக்கிறார்:

பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோம்.

5.2.1

கலியும் கெடும் கண்டு கொள்ளுங்கள் நண்பர்களே என்று நம்பிக்கை ஊட்டுகிறார். "சாவு நிம்மதி" என்று சொல்லும் மேலைச் சிந்தனைக்கு மாற்றாக இவர் நலிவும், நரகமும் நமனுக்குத்தான் (அதாவது யமனுக்கு) நமக்கு இல்லை என்று துணிந்து சொல்கிறார். அதாவது சாவு யமனுக்கு உவப்பாக இருக்கலாம் நமக்கில்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை:

தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்க ளேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி,
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே
.

5.2.4

மொத்தத்தில் இறைவன் உன்னை பார்த்துக் கொள்வான் நீ ஆடிப் பாடி, பறந்து திரி என்கிறார். அடடா! இப்படியொரு அப்பா நமக்கு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? வாழ்வு வாழ்வதற்கே என்கிறார். கவலையை கண்ணனிடம் விடு என்கிறார்.

இதையே பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதியில்...

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.

59

என்கிறார். இதை எளிமைப் படுத்தி இராமானுசர், "நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கிவிடுவது போல வாழ்வு என்ற வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவரும் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு (அதாவது எல்லாப் பொறுப்பும் ஈசனுக்கே) கடவுளைச் சரண் புக வேண்டும்" என்கிறார், திரெளபதி செய்தது போல்:

மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கை தலை
வைத்தவளச் சங்கெடுத்தான் வாழ்வு


(பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்)

அதாவது மெய்மையை சங்காகக் கொண்டிருக்கும் கண்ணன், திரெளபதி தன் மேகலை விட்டு (அதாவது தான் அவமானப் படுகிறோம் என்ற "தன்" உணர்வு கெட்டு) தலையில் கைவைத்து "கோவிந்தா" என்ற போது அவள் அச்சத்தை கெடுத்தவனாகிய திருமால் வாழ்விடம் (வேங்கட மலை) என்பது இவ்வரிகளின் பொருள்.

சரணாகதி பல நிலைகளில் போகிறது. ஆழ்வார்கள் திருமாலைச் சரணடைய, அச்சரணாகதி பற்றி மெய்மை கூறிய ஆசானாகிய இராமானுச முனியை அவர் சீடர்கள் சரண் அடைகிறார்கள். (இதே வகையில்தான் "சங்கம் சரணம் கச்சாமி" என்ற பெளத்த வழக்கத்தையும் பொருள் கொள்ள வேண்டும்)

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்
காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்
கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே.


(இராமானுச நூற்றந்தாதி 45).

இப்படி சரணாகதி செய்வதால் தினப்படி வாழ்வு சலிப்பற்று, துயரற்று, சலனமில்லாமல் இருக்கிறது. அதனால்தான் சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார்:

குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.

(2) 1.1.9என்கிறார். இதையே பாரதி வேறு வரிகளில் சொல்கிறான்:

கண்ணன் திருவடி எண்ணுக மனமே...
தருமே நிதியும், பெருமை புகழும்..
மங்கும் தீமை, பொங்கும் நலமே...
தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை
ஆர்ப்பர் அமரர், பார்ப்பார் தவமே....


பிகு: சரணாகதியின் மற்ற பொருள்களைத் தொடர்ந்து தேடுவோம்...Subject: [tamil.net] Pasura madal 32
Date: Thu, 26 Feb 1998 11:14:24 +0100

4 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Tuesday, January 15, 2008

ஆழ்வார்கள் கோடிகாட்டி, ஸ்ரீபாஷ்யகாரர் சுருக்கமாக அறிவுறுத்திய ச்ரணாகதியின் மேன்மையை உலகெலாம் அறிந்து உணர்ந்து ஒழுகிட பரக்கப் பேசி, ந்யாஸதிலகம், சரணாகதி தீபிகை என ஏராளமாய் எழுதி சரணாகதி மார்க்கமே ஸ்ரீவைணவம் என நிலை நிறுத்திய ஸ்வாமி தேசிகனைப் பற்றி இனிவரும் மடல்களில் சொல்லுவீர்கள் என நினைக்கின்றேன்.

  thiruthiru

Tuesday, January 15, 2008

"ஆக இப்படி வைதீக மதங்கள் சரணாகதி பேசுகின்றன என்றால் பொது மறையென்றும், சில சமயங்களில் சமணச் சார்புடைய மறையென்றும் சொல்லப்படும் வள்ளுவம்:"

திருவள்ளுவர் வைணவரே, அவரது குறளும் வைணவ இலக்கியமே என ஆழமாக ஆராய்ந்து உறுதியாக அறிவிக்கின்ற “வள்ளுவர் உள்ளம்” (எழுதியது ஸ்ரீ கேசவ ஐயங்கார்) கண்டிப்பாய்ப் படித்துப்பாருங்கள்.

  N.Kannan

Tuesday, January 15, 2008

அன்பின் ரகுவீர்:

இம்மடல்கள் ஏற்கனவே எழுதியவை- ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு. இவைகளை வரிசைப்படுத்தி ஒருங்குறியில் இப்போது வெளியிடுகிறேன்.

ஸ்வாமி தேசிகர் பற்றிய என் கட்டுரை ஒன்றைக் காண இங்கு செல்லவும். இல்லை, கீழுள்ள முகவரியில் காணவும்: Project Madurai .

தேசிகர் இயற்றிய தமிழ் நூல்கள் உங்களிடமிருந்தால் மதுரைத் திட்டத்தில் நீங்கள் வெளியிடலாம்.

  N.Kannan

Tuesday, January 15, 2008

வள்ளுவமும் வைணவமும் பகுதி 1 எனும் கட்டுரையை வாசியுங்கள். பகுதி 2 அடுத்த கட்டுரையில் உள்ளது. ஸ்ரீகேசவ ஐயங்கார் புத்தகம் கிடைத்தால் வாசிக்கிறேன். உங்களிடமிருந்தால் அதை நாம் தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் வெளியிடலாம் (ஆசிரியர் அநுமதியுடன்).