e-mozi

மடல் 033- ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்!

"நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்" இப்படியொரு பழமொழி தமிழில் உண்டு.

இது வாழ்வின் நிச்சியமின்மையை தெளிவாகச் சொல்கிறது. அதாவது மனித யத்தனிப்புதான் வாழ்வு என்று இருந்தால் இன்று வெறும் ஹிட்லர்கள்தான் ஆண்டு கொண்டு இருப்பார்கள். மனித ஆசைக்கு அளவேது. மரணம் என்பது மனித ஆசையில் மண்ணைப் போடுகிறது. எனவேதான் மிருத்யு என்னும் யமனை "யமராஜா" என்கிறார்கள். அவன் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. எனவேதான் நிசிகேதன் எத்தனை வரங்கள் தருகிறேன் என்றாலும் யமனை விடாது இம்சித்து இறப்பின் இரகசியத்தை கற்றுத்தா என்றான். அப்படிப் பட்ட சரிநிகர் மரணத்தையும் வெல்லும் முயற்சிகள் அறிவியலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜெர்மனியில் ஒரு விபத்தில் தாக்குண்ட பெண்ணை செயற்கை யாய் ஊசலாட வைத்து குழந்தையை பெறவைத்திருக்கின்றனர். மானுட சரித்திரத்தில் இறந்தவள் பெற்ற முதல் குழந்தையாக அது பதிவாகிறது! இப்படி மனித மனம் எல்லாவற்றையும் வென்று ஒரு கை பார்க்க விரும்புகிறது. இவர்கள் இப்பழமொழியை மாற்றப் பார்க்கின்றனர். இருப்பினும் பிரபஞ்ச ஓட்டம் நம் கைக்கு இன்னும் வசப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கனடாவின் குயூபெக் மாநிலத்தில் பனிப்புயலில் சிக்கி பல கிராமங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக மின்சாரமே இல்லாமல் தவிக்கிறது. இந்தியாவில் கூட இந்த நிலமையில்லை யென்று ஒரு நண்பர் சமீபத்தில் புலம்பினார். வட ஜெர்மனியில் பனி ஒரு நாள், சில மணி நேரங்கள் அடித்து விட்டு ஓடிப்போய்விட்டது. மரங்கள் பிப்ரவரியில் துளிர்க்க ஆரம்பித்து விட்டன. இப்படிப் பட்ட வெது, வெதுப்பான பனிக்காலத்தை நாங்கள் பார்த்ததில்லை. இது நல்லதற்கு இல்லை என்கிறார்கள் பல ஜெர்மானியர். லண்டன் தட்ப வெட்பத்தை முன் கூட்டிச் சொல்வதும் பெண்ணின் மனநிலையை முன் தீர்மானிப்பதும் ஒன்று என்றொரு பழமொழி உண்டு. அவ்வளவு தீர்மானிக்க முடியாத அளவு இயற்கை விளையாடுகிறது. ஆனாலும், நாளைய வானிலை என்று டிவியில் கேட்டவுடன் எல்லார் கண்களும் அங்கேயே நிற்கின்றன - அதை நம்புகிறோமோ இல்லையோ :-)மனித மனத்திற்கு வேலியே கிடையாது. அதன் பாய்ச்சலைக் கட்டுப்படுத்த அதற்கும் தெரிவதில்லை. மூக்கணாங்கயிறு இல்லாத மாடு கட்டுத்தெறியிலிருந்து விடுபட்டு ஓடுவது போல மனித செயல்கள் நடை பெற்று வருகின்றன. சூழலில் நாம் விடும் கரியமில வாயுவின் அளவு 23 நூற்றாண்டில 3% தாண்டிவிடும் என்கிறார்கள். மனித சுவாசம் 4% மேல் தாங்காது. அந்த அளவு வரும்போது மூச்சு முட்டி மனிதன் தெருவில் சாவான் (முன்னோடி..போபால் விபத்து). ஆனாலும் இதை எப்படி கட்டுப் படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.பணம் என்பது பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்த ஒன்று. பணம் என்பது ஒரு குறியீடு, முகமதிப்புச் சின்னம். ஆனால் பணமே ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்ட நிலையில் பணம் பேரம் பேசப் பட்டு நாடுகளின் தேசியம் சூதாடப் படுகிறது. இந்தோனிசியா ஆடிக்கொண்டு இருக்கிறது. பல கிழக்காசிய நாடுகள் ஜூரத்தில் இருக்கின்றன. அடிப்படையில் யோசித்தால் மனத்தின் பேராசையின் விளைவுதான் இது என்று புரியும். இருப்பவன் மேலும், மேலும் சுருட்டுகிறான். ஆசைக்கு அளவேது, வேலியேது?

இவையெல்லாம் மனது என்ற மாயாவிவின் செயல்கள். ஐம்புலன்கள் நமக்கு தொடர்ந்து அனுபவங்களைக் கொடுக்கின்றன. அனுபவங்கள் தொடர்ந்து நினைவுகளாகின்றன. நினைவுகள் தொடரும் போது தன்னியல்பாக மனது "தான்" என்ற ஒன்றை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் இந்த "நான்/தான்" என்பது அடிப்படையில் வெறும் நினைவுக் கொத்துதான். ஆனால் மிகப் பலம் வாய்ந்த கொத்து இது. படித்த பெரும் படிப்பாளிக்கு இந்த "நான்" அவனது கல்வி. அவனது படிப்பை யாராவது கேலி செய்தால் அது அவனது கோபத்தைக் கிளறுகிறது. இசைக் கலைஞனுக்கு அவன் வித்தை அவனது "தான்" ஆகிப் போகிறது. வித்வான்களிடம் மாறிக் கூட குறை சொல்லிவிடக் கூடாது. சுப்புடு வாசகர் களுக்கு உவப்பாக இருந்தாலும் அவர் வித்வான்களின் வேம்பு என்பதுதான் உண்மை. சாதிவெறியர்களுக்கு சாதி அடையாளம் "தான்" ஆகிப் போகிறது. அது உரசப்படும் போது தீ கக்குகிறது. மொழி வெறியர்களுக்கு மொழியும், இன வெறியர்களுக்கு இனமும் "தானா"கிப் போய் உலகை பேயாய் படுத்துவது எல்லோரும் அறிந்ததே!

சரணாகதி என்பதை விளங்கப்படுத்த இரண்டு முக்கிய உருவகங்களை பண்டைய இந்தியர்கள் வைத்தனர். ஒன்று திரெளபதி துயில் உரிதல், இரண்டு குளத்தில் நீராடும் பெண்ணின் ஆடையை களவிடுதல். இந்த இரண்டிலும் "ஆடையை" உருவகமாக வைத்தனர். ஆடை என்பது மனிதனது மானத்தை காக்கும் பொருள். மானம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடக் கூடியது. வெற்று உடம்பாய் காணப்படுவது மானமற்ற செயலென பல கலாச்சாரங்களில் காணப்படுகிறது. இங்கு ஆடை மனித மானத்தைக் காக்கிறது. ஒரு துணி மேலே போர்த்தியவுடன் மனோ நிலையே மாறி விடுகிறது. இங்கு உடம்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. உடம்புதான் ஐம்புலன்களின் அதிகாரி. ஐம்புலன்கள்தான் அனுபவங்களின் அதிகாரிகள். அனுபவங்கள்தான் அகங்காரத்தின் வித்து. எனவே உடம்புதான் அகங்காரத்தின் இருப்பிடமாகிறது.உடம்பின் சுகம் துய்க்கும் மனது அகங்கார எல்லையைத் தாண்டாமல் சிறை பட்டுப் போகிறது. இறைமை அனுபவம் என்பது இந்த குறுகிய எல்லையைக் கடந்தது. அகங்காரத்தின் எல்லை நமது அனுபங்களின் அளவைப் பொருத்தது. அனுபவங்களோ எப்போதும் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். அதனால்தான் ஔவை "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு" என்றாள். இப்படி குறுகிய எல்லை கொண்ட தனி மனித அகங்காரம் ("தான்") எல்லைகள் அற்ற பரம்பொருளை எப்போது கண்டு கொள்ளும்? தன் எல்லையின் அளவு பிடிபடும் போது, இறைமையின் விஸ்வரூபம் காணக்கிடைக்கிறது.

திரெளபதி கண்ணன்பால் பக்தி கொண்டவளாக இருந்தும், கடைசிவரை தன் மானம், தன் செயல் என்ற ஒன்று தொக்கிக் கொண்டிருந்த வரை கண்ணனின் பூரண அருள் கிட்டாமல் இருந்தாள். துக்கத்தின் முடிவில், இனியும் காத்துக் கொள்வதற்கு ஒன்று மில்லை என்ற உணர்வு வந்த போது அவள் முழுவதுமாய் தன்னை சரணம் செய்தாள். தான், தன் உடம்பு - அது அழகாக இருந்தாலும் சரி, அழுக்கு உடம்பாக இருந்தாலும் சரி - இனி இது என் சொந்தமில்லை. படைத்தவன் காப்பான் என்ற கடைசி நம்பிக்கை! அது கடைசியில் அவளைக் காத்தது.

துச்சாதனன் எழுந்தே - அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
"அச்சோ, தேவர்களே!" - என்று
அலறி அவ்விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறியவனைப் போல் - அந்தப்
பேயனுங் துகிலினை உரிகையிலே
உட்சோதியிற் கலந்தாள் - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்
என்பான் பாரதி இதை மிக அழகாக. இந்த ஒருமையுறுதலுக்குச் சாதனம் சரணாகதி.

காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி,
வேலைப் பிடித்தென்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ?
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே,
கோலங் கரிய பிரானே.
குருந்திடைக் கூறை பணியாய்


என்கிறாள் ஆண்டாள், நாச்சியார் திருமொழியில். இங்கு ஆடையைக் கவர்தல் ஆண்டாளுடன் சேட்டை செய்யும் எண்ணத்தில் அல்ல. ஆண்டாளிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் "தான்" என்ற உணர்வையும் எடுத்துவிடத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆடை இங்கு அகங்காரத்தை குறிக்கும் குறியீடு என்று கண்டு கொள்க. இன்றும் கர்நாடக மாநிலத்தில் வாழும் திகம்பரர் என்னும் சமணர்கள் ஆடை எதுவும் உடுத்து வதில்லை. ஆடையை அகங்காரத்துடன் இணைத்துப் பார்க்கும் பார்வை இது. கும்பமேளா உற்சவத்திற்கு வரும் பெரும்பான்மையான சாதுக்கள் இக்காரணத்தினாலேயே ஆடை உடுத்துவதில்லை. ஆனாலும் நடைமுறை சாத்தியக் கூறுகளை கணக்கில் கொண்டு, இதை வெறும் குறியீட்டளவிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமென்று கர்நாடக சமணர்களுக்கு ஸ்ரீராமானுஜர் போதித்தாக குரு பரம்பரைக் கதைகள் உண்டு.

மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.
உன்அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்ய னேனே


தனது அகங்காரத்தின் எல்லைகள் புலப்பட்டு, இனி நம்மால் முடிவது ஏதுமில்லை என மனது தனது இயலாமையை உணரும் போது தானாக வருகிறது சரணாகதி. தொண்டரடிப்பொடியின் திருமாலையில் ஒரு மலர் இது.

மெய் சொன்ன பாதையில் போகவிட்டு... (இதற்கு கண்ணதாசனின் பல பாடல்களை மேற்கோள் காட்டலாம்), விரிகுழலார் என்பது இங்கு இந்திரீய சுகங்களைக் குறிக்கிறது. பெண் சுகம் என்பது வாழ்வின் ஆதார சுகமாய் இருப்பதால் இது இந்திய ஆன்மீகச் சிந்தனையில் அடிக்கடி சுட்டிக் காட்டப்படும் ஒன்றாக உள்ளது. பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன் என்கிறார். ஐம்புலன் தந்த அனுபவங்களின் வாயிலாக வந்த நினைவுக் கொத்தான "தான்" என்ற பொய்யெலாம் பொதிந்து வந்தேன் என்கிறார். கடைசியில் கண்ணனின் இன்னருள் கிட்டும் போது "பொய்யனேன் பொய்யனேனே" என்று அழகாகச் சொல்கிறார். வறுமைக்கு வறுமை வைத்த மாமன்னன் என்பான் கண்ணதாசன். அதுபோல், பொய்யான "தான்" என்பது பொய்த்துப் போகும்படி கண்ணன் அருள் செய்தான் என்கிறார்.

Subject: [tamil.net] Pasura madal 33Date: Sat, 28 Feb 1998 14:49:28 +0100

0 பின்னூட்டங்கள்: