e-mozi

மடல் 034- இன்னுமோர் நூற்றாண்டு இரும்!!

எங்கள் வீட்டில் ஒரு Money Plant இருக்கிறது. இதை வைத்தால் வீட்டில் காசுக்கு குறையிருக்காது என்பது நம்பிக்கை. அது காட்டில் மரங்களில் படரும் கொடி. பெரிது, பெரிதாக இலை இருக்கும். வீட்டுத் தொட்டியில் வளருகிறது. அதற்கென பிரத்தியேகமாக தட்டி வைத்து வளர ஏற்பாடு செய்துள்ளேன். நான் தட்டி வைத்து, கீழே விழாமல் பாதுகாப்பாக அங்கங்கே கயிறு கட்டி அதை நிற்க வைத்துள்ளேன் என்பது பாவம் எனது காசு செடிக்குத் தெரியாது. அது தன் சுபாபப்படி தடித் தடியாக வேர் விட்டுக் கொண்டே வளருகிறது. செடி நினைக்கிறது (!) தான் வேர் விட்டால்தான் நின்று, படர முடியுமென்று. பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிகிறது, இது அவசியமில்லை, செடி வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டேனா என்று. நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது செடிக்கு எப்படி தெரியப் படுத்துவது? இது போல்தான் உள்ளது மனிதனது வாழ்வும்.

சராணாகதி பற்றிப் பேசும் போது மிகவும் பிரபலமான இயேசுவின் மலைப் பிரசங்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளது, மாத்யூ (6:19-34) எழுதிய ஏற்பாட்டை பின்பற்றியது. இயேசு சொல்கிறார்:

"ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன், உங்கள் வாழ்வைப் பற்றிய கவலையை இன்றோடு விடுங்கள். நாளை என்ன உன்பேன், நாளை என்ன குடிப்பேன், நாளை என்ன உடுப்பேன் என்ற கவலையை முதலில் ஒழியுங்கள். வாழ்தல் என்பது உண்ணும் சோறு, பருகும் நீர், உடுத்தும் ஆடை மட்டும்தானா? (25)

காற்றில் தவழும் பறவையைப் பாருங்கள்! அவை விதை, விதைத்தனவா? விளைச்சல் கண்டனவா? இல்லை நாளைக்கென்று சேமித்து வைக்கின்றனவா? பல்லுயுர் படைத்த பரமன் அவைகளுக்கு உணவு ஊட்டவில்லையா? அந்தப் பறவையை விடவா நீங்கள் தரத்தில் குறைந்து விட்டீர்கள்? (26)


ஓ! நம்பிக்கை குறைந்த மனிதர்களே! (30)

எனவே தேடுங்கள் அவனது ஆசியையும், ஆட்சியையும். அவனது ஆளுமைக்கு உட்படுங்கள்! மற்றவையெல்லாம் தானாய் உங்களை வந்தடையும். (34)"


மாத்யூ அவர் கேட்ட மலைப் பிரசங்கத்தை நினைவு கூர்ந்து முதல் நூற்றாண்டில் எழுதி வைத்து விடுகிறார். ஒன்பது நூற்றாண்டுக்குப் பின் திருக்குருகூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்த சடகோபன் இக்கருத்தை பின் வருமாறு எழுதுகிறார்:


அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொன்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?
(திருவாய் மொழி 3.2.6)

அற்பமான சமாச்சாரங்களுக்காக (உணவு, உடை, உறையுள்) அலைந் தொழிந்தேன். பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் பத மலர் அறியும் நாள் எந்த நாளோ? என்று அங்காலாய்கிறார். வேறொரு பாடலில் இயேசு சொன்ன மாதிரியே...

சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே

3.9.9

வானவர் நாட்டை நீ கண்டு கொள் என்கிறார். இங்கு வீடு என்பது இயேசு சொல்லும் பரமனின் இராச்சியமாகும்.
எனது வீட்டு காசுச் செடி போன்ற நிலமையை மாறன் சடகோபன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்:

யானேயென்னை யறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே


2.9.9

அதாவது, நானே என்னை அறியாது, நானே, நான் என்று இருந்தேன். என்னைப் படைத்தவன் நீயாகையால் நானே நீ என்று அறிந்து கொண்டேன். அறிந்த பின் என் உடமை நீ என்று கண்டு கொண்டேன். வானவர் போற்றும் சிங்கம் போன்றவனே!

இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள்.

இராமானுச முனி இதன் பொருளை எல்லோரும் உய்ய சொன்ன பின் பலர் சரணாகதி செய்து வாழத் தலைப்பட்டனர். அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்களின் பட்டடியலைப் பாருங்கள். ஒரு மாபெரும் உண்மை புலப்படும்!

இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்


இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?

சரணாகதி!!!படைத்தவனின் மீது பாரத்தை போட்டு, அவன் தந்த வாழ்வை, அவனை நினைத்து வாழ்ந்ததால் எளிதாக முடிந்தது. அவர்களின் மனப்பான்மையை பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது:


ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிலேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே

10.7.9

நாமோன்றும் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஊழி தோறும் ஒருவன் தன்னுள்ளே படைக்கின்றான் (note the subtle message of conservation of mass and energy), அதைக் காக்கின்றான், பின் அவனே அதை அழிக்கின்றான். அவன் கடல் வண்ணத்தவன். அவன் வாழும் இடமோ குளுமையான திருமாலிருஞ்சோலை (போயிருக்கிறீர்களோ? குழந்தையிலிருந்து போய் வருகிறேன். அதன் அழகு இன்னும் குறையவில்லை. அதே குளுமை, அதே அழகு, அதே வனங்கள். ஆண்டாள் அனுபவித்த திருமாலிருஞ்சோலை அப்படியே இன்னும் இருக்கிறது). வாழ்க மனமே! கைவிட்டு விடாதே! உடலையும் உயிரையும் மங்க ஒட்டாமல் வைத்திரு. எவ்வளவு அழகான நோக்கு பாருங்கள்!

சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்:

குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

(2) 1.1.9
இங்கு குலம் என்பது "சத் சங்கம்" ஆகும். அதாவது நல்ல சேர்க்கை. அடியார்களின் துயர் களையும். நீள் விசும்பு அருளும். அதாவது நம் பட்டியலில் காண்பது போல் நீண்ட வாழ்வு அளிக்கும். அருள் கிட்டும். பெரு நிலம் என்பது பரமபதம். அதாவது இயேசு சொல்லும் தந்தையின் இராச்சியம். வீடு பேறு. பெற்ற தாயைவிட கண் போல் பாது காக்கும்.
இவையெல்லாம் சரணாகதியின் பலன்கள்.


இயேசு பிரான் இவர்களைப் பார்த்திருந்தால் மிகவும் சங்தோசப் பட்டிருப்பார். ஏனெனில் அவர் சொன்ன மொழியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் வைணவர்கள்!!

Subject: [tamil.net] Pasura madal 34
Date: Thu, 05 Mar 1998 22:48:29 +0100

5 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Monday, January 14, 2008

"Sometimes people get confused by Hinduism and think of it as a religion that worships a lot of gods – when really all those many gods are just different manifestations of one divinity. Giving loving devotion to any of them can take you to the divine source of all of them. Just as devotion to your spouse or friend or relative can do the same – love for your fellow people, if you follow it all the way, will take you into the presence of God, who is love itself." திரு மாத்யூ எவ்வளவு சுருக்கமாக அழகாகச் சொல்லிவிட்டார்! ஆனால் நமது பெருமை நம்மவர்களுக்குப் புரியவில்லையே! அதுசரி! அது எப்படி தங்களது எழுத்தைப்போலவே தாங்கள் சுட்டும் வலைகளும் சிந்தனைக்கு விருந்தாயமைவது?

  N.Kannan

Monday, January 14, 2008

நன்றி ரகுவீர்தாள்: இது குறித்து நிரம்பப் பேசலாம். ஆனால், மத மாற்று, மதப் பூசல் நிரம்பிய உலகில் கோடி காட்டிவிட்டுச் செல்வதே மேல் :-)

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!

  அரவிந்தன் நீலகண்டன்

Monday, January 14, 2008

மதிப்பிற்குரிய ந.கண்ணன்,

மிகவும் சோர்வை தரும் ஒரு பதிவு. ஏசு என்பவர் வாழ்ந்ததற்கு அத்தாட்சி ஏதுமில்லை. இன்றைக்கு வரை மிகவும் தேர்ந்தெடுத்த மோசடி வேலைகள் மூலம் அவர் வாழ்ந்ததாக நிரூபிக்க முயல்கிறார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை அகழ்வாரய்ச்சி செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விதந்தோதும் மலைச் சொற்பொழிவு கூட வன்முறை அடங்கிய ஒன்றுதான். உதாரணமாக "But when ye pray, use not vain repetitions, as the heathen do" என மாற்றுமதத்தவர்களை ஒட்டுமொத்தமாக இழி முத்திரை குத்துவதை பாருங்கள். மேலும் ஏசு குலவெறியும் குலமமதையும் கொண்ட ஒரு காரெக்டர் ஆவார். எனவேதான் தாவீதின் வழியில் ஏசு வந்ததாக இரண்டு போலியான வம்சாவளி கதைகளை சொல்லுகிறார்கள். கீதையில் தெளிவாகவே கண்ணன் குலப்பெருமையை கண்டிக்கிறார். தயை செய்து ஏசு போன்ற அசுர பிரகிருதியுடன் கிருஷ்ணன் போன்ற பாரத தெய்வ திரு அவதாரங்களை ஒப்பிட வேண்டாம். ஏசுவுக்கு இணையாக ஒரு ஆசாமியை வரலாற்றில் காட்டவேண்டுமென்றால் ஒரு ஆள் தேறுவார். அவன் பெயர் அடால்ப் ஹிட்லர்.

  N.Kannan

Monday, January 14, 2008

அரவிந்தன்:

மன்னிக்கவும். "சொன்னால் விரதோமிது" கதைதான் :-) கிருஷ்ணரைக் கூட சரித்திர புருஷராகக் காண்பது தவறு என்று தோன்றுகிறது. அவர் ஒரு ஆழ்மன தரிசனம், புற உலகு எளிமையில் நிதர்சனம் :-) இயேசுவின் நல்லவைகளைக் கோர்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் உலகலாவிய மத மாற்ற வியாபாரத்திற்கு நான் எதிரானவன்.

  ஜடாயு

Monday, March 31, 2008

அன்புள்ள கண்ணன்,

அரவிந்தன் சுட்டிக் காட்டியது மிகச் சரி என்று நான் நினைக்கிறேன்.
மேலும், இத்தகைய ஒப்பீடுகள் விளைவிக்கும் அபாயகரமான சாத்தியக் கூறுகள் பற்றியும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(கிறிஸ்து சகாப்தம் என்று தவறாக அழைக்கப் படும்) பொது சகாப்தத்திற்குப் பிந்தைய தமிழக சைவ, வைணவ பக்தி இயகக்த்தின் வேர்கள் வேதம், உபநிஷதங்கள், இதிகாச புராணங்களில் தான் உள்ளன என்பது வெள்ளிடை மலை. ஆழ்வார்களின் தத்துவ அடித்தளம், பக்தி, சரணாகதி அனைத்திற்கும் ஆதாரம் சனாதன தர்மம் மட்டுமேயன்றி வேறு எந்த "புற"க் காரணிகளும் அல்ல.

ஆனால் இவை ஏதோ தனியாகக் கிளம்பிப் புறப்பட்டவை, வேத நெறிக்கு மாற்றாக எழுந்தவை என்றெல்லாம் புரட்டு செய்யும் சில வரலாற்று "ஆய்வு" கிரிமினல்களும், உடனடியாக அதைப் பிடித்துக் கொண்டு சைவமும், வைணவமும் வந்தே கிறிஸ்தவத்திலிருந்து தான் என்று "ஆராய்ச்சி" செய்து அறிவிக்கும் பாதகர்களுமாக, ஒரு சதிகாரக் கும்பலே இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். தங்களைப் போன்ற அறிஞர்களின் இத்தகைய சிறு "நல்லெண்ண" முயற்சிகளும் இத்தகையோரால் கண்டிப்பாக துஷ்பிரயோகம் செய்யப் படும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.