e-mozi

மடல் 035- கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே!!

குழல் இனிது, யாழ் இனிது என்ற மழலை பேசும் பொற்சித்திரங்களுக்கு பெயரிடுதல் என்பது எளிதான காரியமில்லை என்று தெரிகிறது.மனித வாழ்வுக்கு அடையாளம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. மனிதன் ஒரு சமூக ஜீவி!. அவன் தனித்து வாழ்ந்தால் பெயரிடுதல் அவ்வளவு முக்கியமான நிகழ்வு அல்ல. ஆனால் சமூக மனிதனுக்கு பெயர்தான் ஒரு முக்கிய அடையாளம். தாய், தந்தையிடும் பெயரில்தான் நாம் கடைசி வரை அடையாளப் படுத்தப்படுகிறோம்.
உபநிடத்து சொல்லான "நீதான் அது" என்னும் போது பெயருக்கு இன்னும் முக்கியத்துவம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் நம் முன்னோர்கள் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளனர்.இறைவன், இறைமை என்பது ஒரு குறியீடு. இறைவனை ஒரு பெயர் சொல்லி அழைக்கும் போது அவன் அதுவாக இருப்பதுடன் அதன் மூலம் நம்மை அதற்கப்பாலும் அழைத்துச் செல்கிறான். இறைவனின் பெயர்களை கவனித்தால் அதில் பெரும் பொருள் இருக்கும். அந்தப் பெயரைச் சொல்லும் போது அது நினைவில் வரவேண்டும் என்பது குறிப்பு. அதனால்தான் இறைவனுக்கு பல்லாயிரம் நாமம் தந்தனர் நம் முன்னோர். ஒவ்வொரு பெயரிலும் ஒரு பொருள், ஒரு குணம், ஒரு செயல், ஒரு சுட்டு மறைந்திருக்கும்.
எனவே பெயர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள்! நாரணன் தம்மன்னைநரகம்புகாள்.

என்கிறார் பெரியாழ்வார் தமது பாசுரத்தில் (பெரியார் திருமொழி). நாலு நாளில் அழுகிப் போகும் பெயராக வைக்காதே என்கிறார். பெயரில் ஒரு மங்களம் இருக்க வேண்டும் என்கிறார். இறைவன் உறையும் இடமான உடல் மங்களகரமாக இருக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார்.
ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்மன்னைநரகம்புகாள்

நல்ல பெயராக வைத்து, அதைச் சொல்லிக் கூப்பிடும் போதே குழந்தைக்கும், அதைப் பெற்றோருக்கும் பெருமை வர வேண்டும் என்று சொல்கிறார் இங்கே. கோவிலுக்கு புனிதம் வழிபடுபவர்களின் தூய மனத்தால், அதைத்தரும் இறைமையின் பலத்தால் அன்றோ. அதுபோல் ஊத்தைக் குழியாக நாமிருந்தாலும் முகில் வண்ணன் பெயர் வைக்கும் போது அங்கு அமுது வந்து பாய்ந்து மூத்திர நாத்தத்தை போக்கி விடுகிறது என்கிறார்.

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர் வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம் என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல் (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார். அதற்குப் பதில் முகில் வண்ணன் பெயரிட்டு கோத்துக் குழைத்து குலாவி ஆனந்தித்து திரியுங்கள் என்கிறார்.முன்னொரு காலத்தில் தமிழகத்தில் பஞ்சமர் என்னும் நாலு வர்ணத்திலும் சேராத குடிகளுக்கு நல்ல பெயர் வைக்கும் உரிமை கூட மறுக்கப் பட்டிருக்கிறது. கிராமப் புரங்களில் கூழு, மண்ணாங்கட்டி, பிச்சை இவையெல்லாம் புழக்கத்தில் உள்ளன. இந்த பெரும் பாவத்தை 11ம் நூற்றாண்டில் இராமானுசர் மாற்றுகிறார். திருநாராயணபுரம் என்னும் ஊரை நிறுவி அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு மதுசூதனன் பெயர் வைத்து, அவர்களுக்கு கோவில் அர்ச்சனை உரிமை குடுத்து, முதல் தீர்த்தக்காரர் ஆக்குகிறார்.

தமிழகத்தில் ஐயங்கார் என்னும் பெயர் சாதிப் பெயராகிப் போய்விட்டது. உண்மையில் அது ஒரு காலத்தில் கண்ணனை வழிபடும், ஆழ்வார்வழிப்படும் அனைவருக்கும் பொதுவான பெயராகத்தான் இருந்திருக்கிறது. ஐயங்கார் என்னும் பட்டம் வைணவன் என்பதை குறிப்பதற்காகவே உபயோகப் பட்டது. ஆங்கில அரைகுறை அறிஞர்கள் இந்தியா முழுவதையும் நாலு வர்ணத்தில் பிரித்து கணக்கு வழக்கு செய்ய முற்பட்ட போது ஐயங்கார் என்பது உயர் குல பார்ப்பனரை குறிப்பதாக மாறிப் போனது. சாதியை ஒழித்து வைணவக் குடையின் கீழ் சம தர்மத்தை கொண்டு வந்த இராமானுசனின் பெரும் முயற்சி சில குறு நோக்கு, குள்ள நரிகளால் மீண்டும் தமிழகத்தில் தகர்க்கப் பட்டது வரலாற்று சோகம் ஆகும்.

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்மன்னைநரகம்புகாள்.

மண்ணோடு மண்ணாகும் மனித உடல். அதனால்தான் மரணத்தை வெல்லும் வழி தேடி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. நமது இலக்கியம், ஆன்மீகத் தேடல் இரண்டும் மனிதனை கால கண்டனாக மாற்றும் முயற்சிதான் என்பது ஊன்றிக் கவனித்தால் புரியும்.

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்படலாகாதோ?

என்று இந்த இச்சையை பாரதி அழகாகச் சொல்வான். வானம் வசப்படுதல் என்பது அமர வாழ்வாகும். அமர வாழ்வு எப்போது வரும் என்றால், நாம் மரணம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் போதுதான் என்பது விளங்கும். மனிதன் தன் படைப்பிலக்கியத்தால் அமரத்துவம் எய்தலாம். பாரதி, கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற படைப்பாளிகள் தங்கள் சாகா இலக்கியத்தின் மூலம் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். அதாவது உடலுக்குத்தான் சாவேயொழிய மனித சிந்தனைக்கு இல்லை மரணம். இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டதால்தான் நாற்பதைக் கூட தாண்டாத பாரதி அமரத்துவம் பற்றி அடிக்கடி தன் கவிதைகளில் பேசுகிறான்.காலத்தை வெல்லும் இன்னொரு வழி இறைவனைப் புரிந்து கொள்ளுதல். இறைமை என்பது ஊழி, ஊழியாக பல்லுயிர் தந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. பாரதி வாக்கில்:

ஆதியாய் அநாதியாய் அகண்ட அறிவாவள்...
மேலுமாகிக் கீழுமாகி, வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணுமான சக்தி வெள்ளம்...

அந்த அளவுக்கு புரிதல் போதாது. அடுத்த வரியைப் பாருங்கள்.

ஆதியாய் அநாதியாய் அகண்ட அறிவாவள் உன்றன்
அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை!

என்பதைப் புரிந்து கொள்வதில்தான் அமரத்துவம் வாய்க்கிறது. இதை இன்னும் அழகாக திருவாய் மொழி வாக்கால் புரிந்து கொள்ளலாம்:

ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நேய்யும் கன்னலுமமுதுமொத்தே(2.3.1)

ஊனில் வாழுகின்ற உயிர் மதுசூதனன் என்பதை புரிந்து கொண்டால் பின் நமக்கு மரணமில்லை. எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? கண்ணனும், நாமும் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் (இப்படியொரு வார்த்தையை நம்மாழ்வார் அடிக்கடி பிரயோகிக்கிறார். இன்பத்தின் உச்ச வரிகள் அவை). எப்படி? தேனும், பாலும், நெய்யும், கரும்பும், அமுதும் கலந்தது போல் அவ்வளவு இனிமையோடு கலந்துள்ளோம். இந்தப் புரிதல் வரும் போது வாழ்வு இனிப்பது மட்டுமல்ல. வாழ்வின் முடிதலும் கசப்பதில்லை. ஏனெனில் நமக்கு முடிவு என்பது உண்மையில் இல்லை.

அதனால்தான் இறைவனின் பெயரை இடுங்கள் என்கிறார் விட்டுசித்தர். மண்ணோடு மண்ணாகும் மானிடப் பெயரை வைக்காமல், வைகுந்தன் பெயராய் வையுங்கள் என்கிறார். அப்போது நம் குழந்தைக்கு அழிவில்லை என்கிறார்.

ஆக, பெயர் வைப்பதில் இவ்வளவு விஷயம் அடங்கி உள்ளது. நாமென்னவென்றால், நாராயணனை நாணு என்கிறோம், மதுசூதனனை மது என்கிறோம், கண்ணனைக் கனி என்கிறோம். வைத்த பெயரை அதன் அழகு குன்றாது, பொருள் திரியாது, குணம் விளங்கும் வண்ணம் கூப்பிட்டு பழகுவோம்.

Subject: [tamil.net] Pasura madal 35
Date: Fri, 06 Mar 1998 21:26:01 +0100

5 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Friday, January 11, 2008

தன் குழந்தைக்கு யாருமே வைக்காத புதுமையான பெயர் வேண்டுமென வலைகளில் தேடி கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக தன் வாயிலேயே சரியாக நுழையாத ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துவிட்டு அதை மற்றவர்கள் தப்பாக உச்சரிக்கும்போதும் மகிழ்கிறவர்கள் பெருகிவரும் நேரமிதில், தங்கள் எழுத்து சிலரது கண்களையாவது திறந்தால் சரி.

  N.Kannan

Friday, January 11, 2008

ரகு: மிகச்சரியாகச் சொன்னீர்கள்! அதுவும் புகலிடத்தமிழர்கள் ஐரோப்பியர் வாயில் நுழையும் பெயராக இருக்க வேண்டுமென்று சுருக்கி, மடக்கி கடைசியில் அது தமிழ்ப்பெயராகவே இருப்பதில்லை! இதற்கு மாறாக இந்தோனிசீயர்கள், முஸ்லிமாக இருந்தாலும், சீன வம்சாவளியினராக இருந்தாலும் இந்தோனிசயப் பெயர்தான் வைக்க வேண்டுமென்கின்றனர். இப்பெயர்கள் பெரும்பாலும் சமிஸ்கிருதப் பெயர்களாகவே அமைகின்றன! [ரத்னோ, ஹரி, விபீஷன், சுபத்ரா, சுமித்ரா, சுகர்னோ, சுகார்த்தோ, துவி (இரண்டு), ஏக்]

  Anonymous

Saturday, January 12, 2008

//
மண்ணோடு மண்ணாகும் மானிடப் பெயரை வைக்காமல், வைகுந்தன் பெயராய் வையுங்கள் என்கிறார். அப்போது நம் குழந்தைக்கு அழிவில்லை என்கிறார்.
//

அஜாமிளன் கதை நினைவுக்கு வருகிறது :)

  nAradA

Sunday, June 22, 2008

One does not have to name one's children the Lord's names in order to attain paramapadam. There are two other ways. Don't laugh after reading it!
1. Be a DK/DMK leader and badmouth the Lord's name. Declare there never was a "Rama" or "Krishna"in public meetings which are attended by "tOzhargaL" and "uDanpiRappugaL" Since the Lord said "anyone who utters my name shall reach me" it suits those people.
2. Do deny the existence of the Lord "kaDavuL illai, illai, illavaE illai" and then keep the pictures of various gods and goddesses at home and do pujA or instruct your spouse to go the temples and pray for you and wear yellow mEl thuNDu.

I guarantee you it works---see around the ThamizhnADu political circles.

  நா.கண்ணன்

Sunday, June 22, 2008

ha..haa! For the same reason Periyar could not quit hinduism. Nobody will, as they prefer to be Hindus than anything else! காரணம் கீழே:

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளண் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்
உளன் என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. 1.1.9