e-mozi

மடல் 036 - கற்றினம் மேய்த்த எந்தைக் கழனினை பணிமின் நீரே!

நாம் தகவல் நிரம்பிய உலகில் வாழ்கிறோம்.

தகவல் (information) எப்போதும் நம்மைச் சூழ்ந்து, இருக்கமாய் உள்ளது. பல நேரங்களில் இதை உணர்ந்து செயல் படுகிறோம், பல நேரங்களில் இதை உணராமல் தவித்து அவதியுருகிறோம்.

தகவல் பல்வேறு உருவில் நம்மிடம் வருகிறது.

தமிழ் இணையத்தில் சேர்ந்து விட்டு வந்து குவியும் தகவல்களைத் தாங்காது அவதிப்படும் பல தமிழர் நம்மிடம் உண்டு. "ஐயோ! ஆளை விடும் ஐயா!" என்று பொது மன்றத்தில் அறை கூவி பினாத்தும் அளவுக்கு தகவல் ஆளைக் கெடுத்து விடும் தன்மையுடையது :-) கையிலுள்ள பொத்தானை அமுக்கினால் உயிர் பெரும் ஒலி/ஒளிப் பெட்டி நமக்கு தெரிந்ததே. அதுவரை தகவல் ஏதுமில்லாத ஒரு உலகம் திடுமென தகவல் களஞ்சியமாகிப் போகிறது. எந்த சானலில் எதைப் பார்ப்பது என்பது பின் பிரச்சனையாகிப் போகிறது. நாட்டு செய்திகள் என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி பற்றி, அவர் செய்யும் கலவி லீலைகள் பற்றி பொத்தாம் பொதுவாய் எல்லோருக்கும் சொல்லப் போய் குழந்தைகள் வைத்திருக்கும் தாய், தந்தையருக்கு இதென்னடா வேண்டாத தலைவலி என்றாகிப் போகின்றது. இதனால்தான் பல அமெரிக்கர்கள் இப்போது "சுதந்திரம் என்பது டிவிப் பெட்டி இல்லாமல் இருப்பதே!" என்று சொல்லும் அளவுக்கு போய் இருக்கிறது :-)

பனிப் போர் (cold war) காலங்களில் ரேடியோவைத் திருகினால் போதும் அமெரிக்கா, சோவியத்தைத் திட்டுவதும், சோவியத் அமெரிக்காவைத் திட்டுவதும் என்று அனைத்துலக சுப்ரபாதம் ஆரம்பமாகும். நடுநிலை வாதிகள் தலையிடி கண்டு மிரண்டு போவர் :-) இப்படி ரேடியோ, டிவி அலைகள் நாம் பிறந்து, வாழ்ந்து, இறக்கும் வரை நம்மைச் சூழ்ந்து இருக்கமாய் உள்ளன. சேகரிக்கும் கருவி இயங்கும் போது இவ்வலைகளுக்கு பொருள் வந்து, வாழ்வை குலைக்கவோ, குதூகலிக்க வைக்கவோ முடிகின்றன. இவ்வலைகள் என்று மட்டுமில்லாது இப்பிரபஞ்சத்தில் பல்வேறு வகையான தகவல்கள் பல்வேறு அலை வரிசைகளில் கொட்டிய வண்ணமே உள்ளன!

இப்படிக் கொட்டும் தகவல் போதாது என்று, கல்வி என்ற பேரில் நாம் தகவல் சேகரிக்கும் இயந்திரமாகிப் போகிறோம். இன்றையக் கல்வி என்பது தகவல் பரிமாற்று நிறுவனம் மட்டுமே! ஆக, தகவலில் பிறந்து, தகவலில் வளர்ந்து, தகவலுக்காய் வளர்ந்து, தகவலுக்காய் (அதாவது கொள்கைகள் தகவலினால் உருவாவதும், கொள்கைக்காய்..) உயிர் மாய்ப்பதும் மனித வாழ்வு என்றாகிப் போகிறது!

தகவலில் பிறந்து....என்பதை இன்னும் விளக்கமாய் பார்ப்போம்.

கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தகவல் பரப்பும் ஒரு நிகழ்வு நடந்தது. இத்தகவல் பரிணாம, மரபு சார்ந்த தகவல் ஆகும். இது டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ எனப்படும் மூலக்கூறுகளில் பதிந்துள்ளன. இந்த மரபணுத் தகவல்கள் செல் என்ற ஊடகத்தின் வழியாக வாழ்ந்து, பதிப்பிக்கப்படும் போது வாழ்வு என்ற இயக்கம் தொடர்ந்து நடக்கின்றது. ஒன்றாக இருந்த ஒன்று பலவாக பரிணாமிக்க இந்த இயக்கம் அவசியமாகிறது. சின்னச் சின்ன மாறுபாடுகளை தன்னுள் வாங்கி இம்மூலக்கூறுகள் பலவாய் பரிணமிக்கின்றன. ஆக, வாழ்வு என்பது தகவலின் தொடர் இயக்கம் ஆகும். தகவல் தொடர இயங்கும் இயக்கம் ஆகும். எனவே, வாழ்வு என்பதே தகவலுக்காய் உருவான ஒன்றெனத் தெளிவாகிறது.
தகவலுக்காய் இயங்கும் வாழ்வு செயல்பட தொடர்ந்து தகவல் வேண்டி இருக்கிறது. இத்தகவல்கள் வாழும் சூழலில் இருந்து வருகின்றன. இத்தகவல்கள் உணவு பற்றியதாய் இருக்கலாம் அல்லது உறவு பற்றியதாய் இருக்கலாம் அல்லது சுழல் மாற்றத்தைப் பற்றியதாய் இருக்கலாம். இந்த தகவல்களை உள் வாங்கி அதற்கேற்ற வாறு செயல் படுகிறது வாழ்வு. இத்தகவல்கள் ஒளி அலைகளாகவும், ஒலி அலைகளாகவும், மெல்லிய அதிர்வுகளாகவும் உயிர்களுக்கு வந்து சேருகின்றன.இவ்வலைகளை வாங்கும் வாங்கிகளாக ஐம்புலன்கள் அமைகின்றன. கண் பார்க்கிறது (ஒளி அலை வாங்கி), காது கேட்கிறது (ஒலி அலை வாங்கி), மூக்கும், வாயும் உணர்கின்றன (வேதிமச் செய்தி வாங்கி), உடல் உணர்கிறது (மெல்லிய அதிர்வுகளை). ஐம்புலன்கள் வழியாக உலகு மனதுடன் சம்மந்தம் வைத்துக் கொள்கிறது.ஐம்புலச் சேர்க்கையின் பலனாய் மனது செயல்படுகிறது. மனதை இவை வெகுவாய் பாதிக்கின்றன. கண்ணில் தெரியும் அழகை (உம்.பெண்) உடமை கோருகிறது மனது! சுவைக்கும் உணவு "சாப்பாட்டு ராமன்களை உருவாக்குகின்றன! கேட்கும் செய்தி கொள்கைகள் உருவாக காரணமாகின்றன. மெய் தரும் சுகம் பால் சேர்ந்த கலவிக்கு ஏங்கும் மனதை உருவாக்குகிறது. ஐம்புலன்கள் மனதை ஆட்டிப் படைக்கின்றன.
புலன் வழிச் செய்தியை மனது பதிவு செய்து, அப்படி பதிவு செய்வதின் மூலம் "தான்" இருக்கின்றோம் என்ற உணர்வினைப் பெறுகிறது. புலன் இல்லையேல் "தானும்" இல்லைதான்.

ஐம்புலன்கள் நொடிக்கு கோடி என்ற கணக்கில் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை இத்தகவலைத் தாங்கும் தளமாக அமைவதுடன், இத்தகவலின் பொருளை அறியும் நுண்ணிய கருவியாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இத்தகவல் சேகரிப்பு என்பது மிகவும் சிக்கலான(complex), மிகவும் தேர்ந்த ஒரு கட்டமைப்பு ஆகும். வரும் தகவலை பொருள் அறிந்து அதற்கேற்றவாறு உடனேயோ அல்லது பிற்பாடோ செயல்களை தர வேண்டிய பொறுப்பு மூளையது ஆகும். எனவே மூளை இத்தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறது. சேகரித்த தகவல்களை இடைக்கால, நீண்ட நாள் ஞாபகங்களாக மூளை தக்க வைத்துக் கொள்கிறது.

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்....

(திருமாலை 3)

என்கிறார் தொண்டர் அடிப்பொடி. ஏன் வாழ் நாளின் பாதிப் பொழுது உறக்கத்தில் போகிறது? சுவாரசியமான கேள்வி! மூளை தனக்கு வரும் கோடிக் கணக்கான தகவல்களை தரம் பிரித்து, தக்க வைப்பதை தக்க வைத்து, வேண்டாததை வெளியே தள்ள இந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்வதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெளியே தள்ளும் நினைவுகள் பல சமயங்களில் கனவுகளாக வந்து நிற்பதாயும் கருதுகின்றனர். எப்படி இருப்பினும் மூளைக்கு ஒழுங்கு படுத்த நேரம் தேவைதான். ஐம்புலன்தரும் தகவல்களில் பாதிக்கு மேல் குப்பைதான் என்பது நாம் அறிந்ததே (டிவி-ஒரு உதாரணம் போதாதா?).

எனவே தான் தொண்டர் அடிப்பொடி,

காவலில் புலனை வைத்துக்
கலிதனைக் கடக்கப் பாய்ந்து...
(திருமாலை 1)


என்று சொல்கிறார். புலனை காவலில் வைக்க வேண்டும் என்கிறார். இல்லாவிடில் அது சகட்டு மேனிக்கு வேண்டாத தகவல்களை மூளைக்கு தந்து மூளையை மூச்சு முட்ட வைத்து விடும் என்கிறார். இப்படியானால் வரும் துயரை அழகாக திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சொல்லுவார்:

கற்றிலேன் கலைகள்! ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை!
பெரு நிலத்து ஆருயிர்க் கெல்லாம்....

(1.1.8)

பெரு நிலத்தில் வாழ்கின்ற ஆருயிர்க்கு பயன் படும் வகையிலான கலைகள் யாதும் கற்றிலேன் என்று வாடுகிறார். ஏனெனில் மனதை ஐம்புலன் கருதி செலவழித்து விட்டேன் என்கிறார். ஐம்புலன்கள் தரும் தகவல் அதிகரிக்கும் போது மூளை வாடுகிறது. ஐம்புலன் செயல் பட, செயல் பட அவ்வியக்கத்தின் உள்ளோட்டமாய் "தான்" என்னும் உணர்வு வளர்ந்து நிலைப்படத் தொடங்குகிறது. எனவே ஆருயிர்க்கு பயன் தரத்தக்க செயல்கள் எதுவும் செய்ய நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்கிறார்.

எனவே திராவிட வேதம் என்றழைக்கப் படும் திருவாய் மொழி (வாய் மொழி-எழுதாக் கிளவி-வேதம்):

உள்ளம், உரை, செயல் - உள்ள இம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுக்கே !(1.2.8)

என்கிறது.

உள்ளம் தனக்கான கருவை (content) ஐம்புலன் வாயிலாக எடுத்துக் கொள்கிறது. வெறுப்பு, பகைமை, பிரிவு - இவை சமூகம் தரும் உபதேசங்களால் நமக்கு வந்து சேருகின்றன. ஐம்புலன் தரும் தகவலை நம்பும் உள்ளம் அதை உண்மை என்று உள்வாங்கிக் கொள்கிறது. இப்படி தவறிக் கெட்டுப் போன உள்ளம் கொள்கைகளுக்காய் தீக் குளித்து, பிரிவுகளுக்காய் குண்டு போட்டு, வெறுப்பின் காரணமாக விஷம் வைக்கிறது. இது பெரு நிலத்து ஆருயிர்க்கு பயன் தரும் செயல் அல்ல! காரணம்? உள்ளம் கெட்டு விட்டது.

உரையை இறையுள் ஒடுக்கு என்கிறது வேதம். முருகக் கடவுள் அருணகிரிக்கு, "சொல்லற சும்மா இரு!" என்ற உபதேசித்தார். இரண்டும் ஒன்றுதான். உரை எனும் சொல் மனத்தின் வழியாக வருவது. உள்ளம் கெட்டு விட்டால் உரையும் கெட்டுத்தான் வரும். எனவே உரையை உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுக்கு என்கிறார் நம்மாழ்வார்.

இறையுள்ளில் செயல் ஒடுக்கு! பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அதிகமாய் பேசியதில்லை. அவரது உள்ளம், உரை, செயல் எல்லாம் இறையுள் அடங்கிக் போனது. அவர் பேசாவிடினும் (செயலாய்) அவரைச் சுற்றி சாந்தமும், இனிமையும் சூழ்ந்திருக்கும் என்பது கண்டவர் கூற்று. இதுதான் திருவாய் மொழி சொல்லும் "இறையுள்ளில் ஒடுங்கிய நிலை".

அதாவது, மூளை அதிக பளு இல்லாமல் சாந்தமாய் இருக்கும், ஐம்புலன்கள் அருவியாய் தகவலைக் கொட்டாது, தகவல் இல்லாததால் செயல்பாடு குறையும், செயல்பாடு வழிப்படும் "தான்" எனும் உணர்வு குறையும், "தான்" இல்லாத உள்ளம் பெரு நிலத்து ஆருயிர் கருதி இளகிப் போயிருக்கும், வாய் இடையறாது பேசாது மெளனித்து இருக்கும், அப்போது செயல் இறையுள்ளில் அடங்கி இறைமையாய் இருக்கும்.

ஆக, சரணாகதி என்பது திறமையான Data Management என்பது இதனால் தெளிவாகிறது! அடடா! இவ்வளவு நாள் தெரியாமல் போய் விட்டதே என வாய் விட்டு சிரிக்கத் தோன்றுகிறதா? அவசியமில்லை, நமக்காய் தொண்டர் அடிப்பொடி விலா ஒடியச் சிரிக்கிறார்:

உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவறச் சிரித்திட் டேனே.

(திருமாலை 34)

உள்ளத்தே உரையும் திருமாலை உள்ளுணர்வு இல்லாததால் இவ்வளவு நாள் உணர்ந்தேன் இல்லை (உள்ளுணர்வு புலன் அடக்கத்தால் வரும் என்று கண்டோம்). இவ்வளவு நாள் பெரிய தொண்டன் என்று கள்ள வேடம் போட்டு அலைந்தேன் (நம்மூர் சாமியார்களும், மடாதிபதிகளும் இதை உணரும் காலம் எப்போது வரும்?), உள்ளுவார் உள்ளிலெல்லாம் உறைந்திருப்பவன் ஹரி என்ற ஞானம் இப்போதுதான் வந்ததையா! வெட்கிக் போனேன்! விலா ஒடியச் சிரிக்கின்றேன் நான்! என்று முடிக்கிறார் ஆழ்வார்.

சரி, சிரித்தது போதும் சரணாகதி செய்வோம்.

First published on: Sun, 15 Mar 1998 14:43:24 +0100

4 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Thursday, January 10, 2008

அருமை.
ஆனால் இந்த பதிவின் தகவலும் உள்ளே போகிறதே என்ற கவலையும் வருகிறது. :-))

  N.Kannan

Thursday, January 10, 2008

அடடா! இப்படி யோசிக்கவில்லையே! பெருமாள் பொறுப்பென்று விட்டுவிட வேண்டியதுதான். அவனைத் தெவிட்டாத இன்னமுது என்கிறார்கள்.

  nAradA

Saturday, June 21, 2008

Kannan:
Concise, clear, and crisp analysis of information processing from the micro to the macro levels. Thank you.

  நா.கண்ணன்

Saturday, June 21, 2008

மிக்க நன்றி. உங்களால் மீண்டும் இக்கட்டுரை தோன்றிய காலத்திற்குச் சென்று வந்தேன்.