e-mozi

மடல் 037 - நீராய் அலைந்து கரைய

நாம் இழுக்கும் ஒவ்வொரு மூச்சும் வாழ்வு நமக்குத் தரும் பரிசு ஆகும். பல வேளைகளில் இதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. உள் வரும் காற்றில் பிரபஞ்சத்தின் மூச்சு உட்புகுந்து நம்மை நாமாக வைத்திருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் சக்திக்கு ஒரு எல்லை இருப்பதாய் தெரியவில்லை. அதுவே சூப்பர் நோவாவாக வெடிக்கிறது. வெடிக்கும் அதிர்வில் பல அண்டங்கள் அலைக்கழிந்து போகின்றன. அதிர்வின் சக்தியில் அலையும் துகள்கள் ஒன்று சேர்ந்து அடர்த்தி மிகப் பெற்று அண்டங்களாகின்றன, கோளாகின்றன, நட்சத்திரம் ஆகின்றன. வின்னில் மிதக்கும் ஹப்பில் வான் நோக்கி வழிப் பார்த்தால் இந்த ஊழிக் கூத்து நடந்த வண்ணம் இருப்பது தெரிய வருகிறது. பல் உருப் பெற்ற வண்ணம் பல் நிலையில் நின்று, நின்று ஓயாமல் மாறி, மாறி, மாறுவது ஒரு வேடிக்கையாய் பிரபஞ்சம் சுழன்று கொண்டுள்ளது.இச்சுழற்சியின் ஒரு அங்கமாக உயிர் பூவுலகில் தளிர்த்து, நிலைத்து, வளர்ந்து வருகிறது. எங்கோ எப்போதோ வானில் துகளாக இருந்த கரு இன்று மண்ணில் பிறந்து, வளர்ந்து வாழ்வாகி நிற்பதுதான் எவ்வளவு விநோதம். சுழலும் காற்று உயிராய் நில்லாமல் ஓடியே போய்விட்டால் யாருக்கு நட்டம்? மூக்கை விட்டு அகன்ற காற்று மீண்டும் உயிராய் நம்மிடம் வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று எண்ணி, எண்ணி மகிழும் படி.பூவுலகில் வாழ விதி வகைகள் உள்ளன. விண்ணில் விட்ட கல் மண்ணை நோக்கி வந்தே ஆகவேண்டும். மண்ணில் விழுந்த விதை மரமாய் வளரவேண்டும். வளர்ந்த செடியை வளைத்து மடக்கி விதையாக்க முடியவதில்லை. செடி மரமாகி, மரம் பூ பூத்து, காய் விட்டு, காய் கனியாகி பின் மீண்டும் விதையாக வேண்டியுள்ளது. மண்ணில் பிறந்து விட்ட நமக்கு இவ்விதி ஒரு பொது விதி. ஒன்றாய் இருந்தது பலவாய் மாறி பூமியில் பரிமளிக்க இவ்விதிகள் உதவுகின்றன. காதலியின் கண்ணில் தெரியும் கவர்ச்சி காதலுக்கு கண் இல்லை என்று ஆக்குகிறது! ஆணுக்கும், பெண்ணுக்கும் மாளாத காதலை வைத்து பல் உருப் பெருக்கம் நடைபெருகிறது இவ்வுலகில். மண்ணாய், வளியாய் இருந்த ஒன்று ஊனாய் உடலாய் மாறும் போது விதிப் பயன் தொடர்கிறது. ஊனை உண்டு, ஊன் வளர்கிறது. உயிரை ஒட்டி உயிர் வாழ்கிறது. ஊனைப் பெற்று விட்டு நோயை வேண்டாம் என சொல்ல இயலாது. இவ்விதிகள் பொதுவானவை.ஆனால் இவ்வூனில் ஒட்டாமல் மனமும் ,உள்ளமும் தனித்து இருக்கின்றன. தாமரை இலைத் தண்ணீர் போல. கொஞ்சம் முயன்றால் தனித்திருக்கும் மனத்தின் திறம் அறியலாம். திறன் அறிந்து, சொல் அறுத்து, சும்மா இருக்கும் போது ஊன் இருப்பது கூட மறந்து விடுவது உண்டு. ஆழம் கண்டு முத்து எடுத்த பின் மீண்டும் வந்து விதிப் பயன் நோக்கும் போது மனது வருந்துகிறது. மனது அந்நிலையில் அப்படியே நிற்காதோ என்று!நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
(6.1.4)

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் சொல்கிறார். நிலவு, வெயில் தரும் சுரியன், உலகம், அதில் வாழும் உயிர் இவை அனைத்தும் உண்டு, சிறு குழந்தை போலாகி, அலை கடலில் வளர்பவனே உன்னைக் காணும் ஆசையால் வேண்டேன் மனை வாழ்க்கை என்கிறார். அதாவது ஆழங்கண்டு ஆதிப்பிரானை உணர்ந்த பின் மனது-மனைவி (கணவன்), சுற்றம், அரசியல், வம்பு, தும்பு என வாழும் வாழ்வை வெறுத்து ஒதுக்குகிறது. சுகந்தம் அறிந்தவர் வீச்சம் ஒதுக்குவது போல். திருமொழியின் இன்னொரு பாசுரத்தில்:

வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய். திருவே.என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.
(2) 3.5.1

இப்படி நம் ஆதியுரு அறிவதும் பெரும் அனுகூலம்தான். அவன் வந்து அடியார் நம் மனத்தில் புகுந்தான். புகுந்தபின் அவனை அறிந்து கொண்டமையால் அவனை வணங்குவது சிந்தனைக்கு இனியதாய் உள்ளது. [திருமங்கை ஒரு அபாரமான கவி. அவர் காணும் அழகு காட்சிகள் படித்து இன்புற வல்லன. திருவாலி எப்படி உள்ளது என்று வருணிக்கிறார். அசோக மரத்து இளந்தளிர்கள் அணிந்து செந்தழல் போல் உள்ளதாம் திருவாலி அம்மானின் காட்சி. இளம் பச்சை போல் இளஞ் சிவப்பும் வனப்பு மிக்கது. இது கவி உள்ளம்!]

நம் ஆதி அறிந்த பின். இப்படி இருந்த ஒன்று நமக்கும் வாழ்வு தந்து ரசிக்க வைக்கிறதே என்று எண்ணும் போது உள்ளம் உருகாமல் என்ன செய்யும்? இது ஒரு விசேட மனநிலை. இது வருவதற்கு மனம் பயில வேண்டும். அம்மா தரும் பருப்பு சாதத்தின் சுவை அறிய முதலில் அன்பு செய்யும் தாய் வேண்டும். அவள் அன்பில் தரும் இன் சுவை உணவின் சுவை அறிந்தபின் தாய் நமக்கு நெருக்கமாகிவிடுவாள். அன்று இட்ட இன்சுவை அமுதம் வாழ்நாள் முழுவதும் இனித்துக் கொண்டு இருப்பது போல இதத்தாயான இறைவனை கண்டு, ஆனந்திக்கப் பழகிக் கொண்டால் பின் அவன் நாமம் அமுதாய் நிற்கும் நெஞ்சில். இதற்கு மனது பழக்கப் படவேண்டும்.

விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே.
(17)

இந்த நிலைகளை அழகாக விளக்குகிறார் தொண்டர் அடிப்பொடி தன் திருமாலையில். விரும்பி இறைவன் பெயர் சொல்ல மாட்டேன் (அப்படியொரு அறியாமை, வீம்பு!), நல் விதி அற்றவன், நல்ல மதி (அறிவு) அற்றவன், போதாக் குறைக்கு இரும்பு போன்ற வலிய நெஞ்சம் வேறு. இப்படி இருந்தால் உள்ளம் எப்படி உருகும்? இப்படி வாழும் மாந்தர்கள் எத்தனை கோடி உலகில்!

அவன் அருளால் அவன் தாள் வேண்டி என்ற சொன்னபடி அவனது அருள் கிட்டும் போது இரும்பு நெஞ்சு கூட மெழுகு போல் உருகிவிடுகிறது. வண்டுகள் வலம் வரும் சோலை சூழ்ந்த அரங்கில் வாழும் கண்ணன் என்னும் கரும்பின் சுவை அறிந்த பின் மனை வாழ்வு சுவைக்குமோ (இங்கு மனை என்பது நமது சாதாரண வம்பு. தும்பான வாழ்வு எனக் கொள்ள வேண்டும். மனை என்பது மனைவி என்று கொண்டு துக்கப்படுதல் தவறு. ஏனெனில் இத்துன்பங்கள் மனைவிக்கும் சரி சமமாய் இருப்பதால். இறை உணர்வு அற்ற வாழ்வு என்பது சாதாரண வாழ்வு என்றாகிறது. இதனால்தான் குமுத வல்லி என்ற மிக அழகான மனைவியைப் பெற்றிருந்தும் திருமங்கை மன்னன் வேண்டேன் மனை வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப பத்து பாசுரங்களில் சொல்கிறார். அது அவர் மனைவிக்கும் பொருந்தும் என்ற கொள்ள வேண்டும்).

இறைவனை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாராதிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன் தன் திருவாய் மொழியில் சொல்கிறார், திருமால் என்பவன் நீராய் அலைந்து கரைய உருக்குகின்றான் என்று. அதனால் தான் அவன் அடியார்க்கு அராத அமுதாய் உள்ளான்:

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே. 5.8.1


ஆரா அமுது என்றால் உண்ண, உண்ண தெவிட்டாத அமுது என்ற பெயர். இறைவன் இங்கு ஆழ் மன நிலைக்கு குறியீடாக உள்ளான். ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது உடல் என்ற ஒன்று இருப்பது கூட தெரிவதில்லை. அது ஒரு தெவிட்டாத அமுது. திருவண்ணாமலை கோவில் குகையில் சமாதியாகி இருக்கிறார் இரமணர். உடலை பூச்சிகள் உண்டு வாழ்வது கூட அறியாமல். பூச்சிகளுக்கும் அமுது படைத்தாரோ என்னவோ?

அடியேன் என்று சொல்கிறார். அந்நிலையில் உடலே இல்லை என்று ஆகும் போது "நான்" என்பது எங்கிருந்து வரும்? எனவேதான் "அடியேன்" என்ற பிரயோகம்.

உடலே அன்பாய் நிற்கின்றான் என்கிறார். அவன் அன்பின் உரு என்கிறார். சேதனம், அசேதனம், தாழ்ந்தவன், உயர்ந்தவன் போன்ற பேதம் மனது, எண்ணங்கள் சூழ நிற்கும் போது நிகழ்வது. எண்ணங்கள் அறுந்து மனது உள்ளே சென்று ஐக்கியமாகிவிடும் போது நிற்பது அன்பு ஒன்றுதான். இதை நாம் ஒவ்வொருவரும் எளிதாக அனுபவிக்க முடியும் - முயன்றால்!

நீராய் அலைந்து கரைய உருக்குகிறான் என்கிறார். நீர் கரைக்க வல்லது. வேதிமவியல் விதிப்படி நீர் என்பது உலகின் மிகச் சிறந்த கரைப்பான். அதைக் கண்டு உவமை கூறுகிறார் நம்மாழ்வார்! நீர் எப்படி கரைக்கிறதோ அது போல் திருமால் "நான்" என்ற எனது அகங்காரத்தை கரைத்து தன்னுள்ளே ஐக்கியப் படுத்தி, தானே அன்பு என்று காட்டுகிறார் என்கிறார்.செந்நெல் கதிர் சாமரம் வீச திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளே என்று முடிக்கிறார். கிடந்தாய் என்ற கடைசி வரியில் கூட ஆழமான பொருள் உள்ளது. எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், வேண்டுதல், வினாவுதல் போன்ற எண்ணத்தின் பாற்பட்ட செயல்கள் அனைத்தும் கிடக்கும் படி "இது என் செயல்" என்ற ஒன்று இல்லாதவாறு கிடக்கும் படி செய்யக் கூடிய எம்மானே என்று முடிக்கிறார் முதல் தாய் சடகோபன்.

Subject: [tamil.net] Pasura madal 37
Date: Sat, 28 Mar 1998 21:19:49 +0100

3 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Wednesday, January 09, 2008

கோகுலத்துக் கண்ணன் குழலூதி மயக்கி மனம் கவர்ந்ததை மனதால் கற்பனை செய்து மட்டுமே இன்புற முடியும். ”என்” கண்ணனோ வலை வீசிக் கவர்ந்தது மட்டோடு நிற்காமல் சிந்தனை தெளியச் செய்து அதன் பயனாய் ஆழ்வாரில் இன்னும் ஆழங்கால்படச் செய்வார். ஸ்வாமின், யாரிடம் காலட்சேபம்? ஒருவேளை யாரிடமும் இல்லாததால்தானோ இப்படிப் பொங்கி வருகிறதோ?

  N.Kannan

Wednesday, January 09, 2008

நன்றி ரகுவீர்தயாள்!

உங்கள் சொற்கள் ஊக்கம் தருகின்றன. யாரிடமும் சிட்சை இல்லை. உட்கார்ந்து 'காலட்க்ஷேபம்' செய்ய ஆசை, கோஷ்டி கிடைத்தால். ஆனால் அது நான் வாழும் தென்கொரியாவில் சாத்தியமில்லை. பூர்வாச்சார்யர்களின் உரைகளை வாசிக்கிறேன், கேட்கிறேன். உள்வாங்கிக் கொண்டு மடல் செய்கிறேன். அவன் இன்னருள் அல்லால் வேறு துணை ஏது நமக்கு?

  Anonymous

Saturday, January 12, 2008

From Sridhar

I enjoy your explanation.
In previous postings you pour
delightful pictures which enhance
the discourse. Kindly post more with pictures -
108 divya darshanam;
Narayan thiruvatigale saranam