e-mozi

மடல் 038:அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!

சித்தர்க்கும் வேதச் சிரந்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந் தோர்கட்கும் தொண்டுசெய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றிப் பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்தொகையே

கவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பன் நம்மாழ்வாரை இப்படிப் புகழ்கிறார்.

அதாவது சித்தர்களுக்கும், வேதம் அறிந்தோர்க்கும், வேத வாழ்வைச் செய்பவர்கட்கும், சுத்தமான நடத்தை உடையோர்கட்கும், துறவிகளுக்கும், தொண்டு செய்யும் அடியார்கட்கும், ஞான முனிவர்கட்கும், ஜீவன் முக்தர்களுக்கும் இன்னமுதம் போன்றது நம் மாறன் சடகோபன் செய்த திருவாய்மொழித் தொகையே என்பது சாரம். அதை எழுதும் எனக்கும், ரசிக்கும் உங்களுக்கும் அமுது போன்றதுதான் திருவாய்மொழி :-)

"தமிழ் நூல்களில் தோன்றுகின்ற சந்தேகங்களை வடமொழி நூல்கொண்டு தெளிக" என்றார் திருவாடுதுறை ஆதீனம் சுவாமிநாத தேசிகர். "வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகின்ற ஐயந் திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம்" என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர். தமிழின் மிகச் சிறப்பு வாய்ந்த இப் பக்தி இலக்கியம் வடமொழி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட மூத்த நூலாகும்.

வைணவ இலக்கியங்களில் மதுரை தமிழ் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெரும் தகுதியும் இந்நூலுக்கு உண்டாகும். அதனாலேயே நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையாக நிற்பதுடன், ஆச்சார்ய வரிசையிலும் முதல்வராக நிற்கிறார்.

திருவாய்மொழிக்கு எழுந்த உரைகள் "பகவத் விஷயம்" என்றே அழைக்கப்படுகின்றன. வேத, இதிகாச புராணங்கள் அனைத்தும் இறை பற்றி பேசுவனவாய் இருப்பினும் திருவாய் மொழி உரைக்கு தனித்தே "பகவத் விஷயம்" என்று அழைப்பதன் நோக்கமென்ன என்ற கேள்வி எழுதல் நியாயமானதே.

"வேதங்கள் முக்குணங்களோடு கூடியவையாய் "ஜ்யோதிஷ்டோமம்" முதலிய நிலையற்ற கர்மங்களையும், "சுவர்க்கம்" போன்ற மிகச் சிறிய புருஷார்த்தங்களையும் பரக்கப்பேசுகின்றன. உபநிடதங்களோ பேத/அபேத வாக்கியங்களால் தத்துவங்களைக் கூறுகின்றன. மேலும் - பொருள் ஒன்றோ? பலவோ? என ஐயம் தோன்றுவதற்கும் இடம் தருகின்றன. ராம காதை எழுதிய வால்மீகியோ, நாராயண காதை கூறுகிறேன் என்று தொடங்கி வீடுமன் போன்ற அரசர்களுடைய பிறப்பு முதலான வற்றைப் பேசிப் போகினார். திருவாய் மொழியும் அதன் வியாக்கியானங்களும் இத்தகைய குற்றம் ஏதும் இல்லாமல் "திருமாலவன் கவி" என்கின்ற பிரகாரம் முற்றும் பகவத் விஷயமாகவே எடுத்து இயம்புவதால், இவற்றிற்கே "பகவத் விஷயம்" என்ற சிறப்புப் பெயரை நம் பெருமக்கள் வழங்கினர்" என்கிறது ஈடு.இவ்வளவு கீர்த்தி வாய்ந்த திருவாய் மொழி செய்வித்த நம்மாழ்வாரோ தனது இறை அனுபவத்தைச் சொல்லும் காண் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன், விநயத்துடன் பகர்கின்றார்.

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1


எதைப் பற்றி பேசினாலும் எதிர்வாதம் செய்யும் மனிதர்களை நன்கு அறிந்திருந்த ஞானியான மாறன் -சொன்னால் விரோதம் இது- என்று தொடங்குகிறார்! தனது இறை அனுபவங்கள் தேனாய் தித்திப்பவையாய் இருப்பினும் அதைச் சொல்ல புகுந்தால் வம்புதான் வந்து சேர்கிறது என்கிறார். அனுபவச் சொல்! இது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சொல்!

இவ்வளவு பீடிகை எதற்கு? பின்னால் வரும் பாடலைக் கண்ணுற்றால் புரியும்.

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே.3.7.9


பகவத் விஷயமான திருவாய் மொழியில் ஒரே ஒரு பாடலில்தான் சாதி பற்றிய பேச்சு பதிவாகிறது. முற்றும் இறை சம்மந்தமான இத்தொகையில் சம்மந்தமில்லாமல் இதைப் பற்றி பேசி இருக்க மாட்டார் எம் இதத்தாய் சடகோபன்.

நம்மாழ்வார் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என நம்புகின்றனர். குவலந் தாங்கு சாதிகள் நான்கு என்கிறார். குவலம் என்பது தமிழகத்தை குறிப்பதாகவே கொள்ள வேண்டும். தமிழகத்தில் நான்கு சாதிகள் உண்டு என்பது தெரிகின்றது. இவை தற்போது வருணங்கள் என்று புரிந்து கொள்ளப் படுகின்றன. ஏனெனில் சாதிகள் எண்ணிக்கை அற்று தமிழகத்தில் பெருகிவிட்டன.

இவருக்கும் முந்திய காலத்தவரான ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியனின் காலமான சங்க காலத்திலேயும் நான்கு சாதிகள் உண்டெனப் பதிவாகிறது:

"வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பாலொருவன் அவன் கட் படுமே"


(புறநானூறு 183).

வேற்றுமை தெரிந்த சாதிகள் நான்கு என்கிறார். எனினும் இவர் காலத்தில் கல்வி என்பது எல்லோருக்கும் பொது என்பது தெரிகிறது. இல்லாவிடில் கீழ் சாதிக்காரன் படித்தவனாக இருந்தால் மேல் சாதிக்காரர்களும் அவரை மதிப்பர் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிற்க.

நம்மாழ்வார் சற்றேறக் குறைய இதே கருத்தை வேறு விதமாகக் கூறுகிறார். கல்விக்குப் பதில் பக்தியை வைத்துக் கொள்ளச் சொல்கிறார். அதாவது எந்த நலனுமில்லாத சண்டாளனுக்கும், சண்டாளனாக ஒருவன் இருப்பினும் அவன் வலக்கரத்தில் சக்கரம் ஏந்தும் மணிவண்ணன் அடியார் என்று தெரிந்தால் அவர்தம் அடியார் எமக்கு கடவுள் ஆவார் என்று பெரிய வார்த்தை போடுகிறார். எளிய வாக்கியங்களில் சொல்வதானால், திருமாலின் அடியார்கட்குள் சாதி வித்தியாசம் கிடையாது என்பதாகும். ஒரு உயர்வு சிறப்பு அணியாக (?) ஒரு ஒப்புமை தந்து இக்கருத்தை வைக்கிறார்.

இதை அதிக வியாக்கியானங்கள் இல்லாமல் விளங்கச் சொல்வதானால், சாதிகள் காலம், காலமாக இருந்து கொண்டேதான் இருக்கும், ஆனால் பகுத்தாயக் கூடிய ஒருவனுக்கு இச்சமூக பாகுபாடுகள் அதிகம் பொருள் தருவதில்லை என்பதாகும்.

ஆழ்வார்களின் வாக்கை வேதவாக்காக மதித்து நடந்தவர் ஸ்ரீராமானுஜர். நம்மாழ்வாரின் இவ்வாக்கை உறுதிப்படுத்தும் வண்ணம் கர்னாடக விஜயத்தின் போது திருநாராயணபுரம் என்றொரு ஊரை உருவாக்கி அங்கு பஞ்சமர்களான சண்டாளர்களை முதல் தீர்த்தக்காரர் ஆக்கி பெருமை கொண்டார் எம்பெருமானார்.

சாதி ஏற்றத்தாழ்வை சாடிய தொண்டர் அடிப்பொடியின் பாசுரங்களை முன்பு
கண்டோம்:

மடல் 9 : படைப்பிலக்கியமும், சுதந்திரமும்

மடல் 26: சாதிகள் இல்லையடி பாப்பா! :

இவர்களுக்கு காலத்தால் பிற்பட்ட இராமானுசர், பெரிய கோயிலின் (திருவரங்கம்) அதிகாரியாக இருந்து கொண்டு, இதை தெய்வ வாக்காக எண்ணி செயல்படுத்திக் காட்டியது இன்னும் பெருமை.

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்


என்றார் எம் காலத்து பாரதி. பக்தர்களானாலும், பகுத்தறிவாதிகளானாலும் அன்பு நிறைய உடையவர்கள் மோலோர் என்பது பாரதியின் துணிபு. அன்பு நிறைந்த உள்ளத்தில் பாகுபாடு தெரியாது என்பது நடைமுறை

Date: Wed, 15 Apr 1998 10:56:03 +0000

3 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Wednesday, January 09, 2008

இன்று தற்செயலாய் அடியேனது வலைப்பதிவிலும் மாறன்.
மாறன்பராங்கதி தந்தடியேனைமருட்பிறவி
மாறன்பரானகுழாத்துள்வைப்பான்றொல்லைவல்வினைக்கோர்
மாறன்பராமுகஞ்செய்யாமலென்கண்மலர்க்கண்வைத்த
மாறன்பராங்குசன்வாழ்கவென்னெஞ்சினும்வாக்கினுமே

மாறன் பெருமை இப்படிருக்க வலைகளில் பல மாறன்கள் அன்பிலாதாராய் விஷம் கக்குவது ஒன்றே கொள்கையாய்க் கொண்டு வலம் வருவதும் வேதனைதான்.

  N.Kannan

Wednesday, January 09, 2008

மிக்க மகிழ்ச்சி!

நம் மாறன் யாரென்று தெரியாத பல மாறன்களுண்டு :-)

  Kailashi

Wednesday, January 09, 2008

"அதை எழுதும் எனக்கும், ரசிக்கும் உங்களுக்கும் அமுது போன்றதுதான் திருவாய்மொழி "

அருமையான வரிகள், வளர்க தங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.