e-mozi

மடல் 039: செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்?

உலகையும், அதில் குடியிருக்கும் உயிரையும் நினைத்து வியக்க ஒரு ஜென்மம் போதுமோ?

எத்தனை மனிதர்கள், அதில்தான் எத்தனை வகைகள். சில குழந்தைகள் பிறந்த சில வருடங்களில் பாகவதர் ஆலாபனை தொடங்கும் போதே பாடலின் ராகத்தைச் சொல்லி விடுகின்றன. பலருக்கு பலமுறை கேட்டாலும் அதில் சுவை வருவதில்லை. சுட்டுப் போட்டாலும் சிலருக்கு கணக்கு வருவதில்லை, ஈரோடு இராமானுசனுக்கோ கணித சூத்திரங்கள் கார் மழை போல் காத்திருந்து கொட்டுகின்றன. சிலருக்கு பிறவியிலேயே நல்ல சாந்தமும், குணமும் வந்து விடுகின்றன. சிலருக்கு கடுகு தெரிப்பது போல் பட், பட்டென கோபம் முன்னே வந்து விடுகிறது. துர்வாசருக்கு கோபமே வருவதில்லை என்கிறார் கிருபானந்த வாரியார் :-) ஏனெனில் அது அவரை விட்டு போனால்தானே மீண்டும் வருவதற்கு என்கிறார் விளக்கமாக! இரமண மகரிஷிக்கோ உண்ணும் சோறும், பருகும் நீரும் ஈசனாய் அமைந்துவிட மாதக் கணக்கில் சமாதியில் இருந்து விடுகிறார். எத்தனை வகைகள்!இவையெல்லாம் வேறு பட்டாலும், அதன் அடிப்படையான அமைப்பென்னவோ ஒன்றாய்தான் உள்ளது. மாட்டின் நிறம் வேறு பட்டாலும் பசும்பால் என்னவோ வெள்ளையாய்தான் உள்ளது. சண்டை போடுபவர்கள் வேறு, வேறாய் இருந்தாலும் அடித்துச் சிதறும் இரத்தம் ஒன்றாய்தான் உள்ளது. உணவின் சுவையும், உணவின் வகையும் நாட்டுக்கு நாடு வேறு பட்டாலும் உணவு தரும் இன்பம் ஒன்றாய்தான் உள்ளது. அடிப்படை காரணியான டி.என்.ஏ மூலக்கூறு உயிர்கள் அனைத்திலும் 99% மேலாக ஒன்றாய்தான் உள்ளது. ஒரு சதவிகித வேறுபாட்டிறிக்கே இத்தனை வகைகள்!

ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த மெய்யியல் ஞானிகள் முக்கோல் ஏந்தி உலா வந்தனர். இவர்களை "முக்கோல் பகவர்கள்" என்று சங்கத் தமிழ் சுட்டுகிறது. முக்கோல் எதற்கு? ஒரு கோல் நாம் நிதம் காணும் உடல் மற்றும் மாறுபடும் பருப்பொருளுக்கு. இதை "அசித்" என்று சொல்வார்கள். இது எப்போதும் விகாரமடைந்து கொண்டே இருக்கக் கூடியது. இதற்கு இயற்பியல் பரிணாமம் உண்டு.

அடுத்த கோல், உடலை ஆட்டுவிக்கும் உயிர்ச் சக்திக்கு. இதை "சித்" என்று சொல்வர்.

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து உலகு

என்று வள்ளுவன் சொல்வான். சித் இல்லையெனில் அசித்திற்கு ஓட்டம் இல்லை. வெளியே போன பிராணன் உள்ளே வரவில்லையெனில் உடல் தன் மதிப்பை இழந்து விடுகிறது. பெற்ற பட்டங்கள், தகுதிகள் உறவின் மேன்மைகள் எல்லாம் போய் "பிணம்" என்ற பொதுப் பெயர் வந்துவிடுகிறது. யாரும் பிணத்தை டாக்டர் பட்டம் போட்டுக் கூப்பிடுவது இல்லை. இறந்த உடலை வைத்துக் கொண்டு அப்பா, தாய் என்று உறவு கொண்டாட முடிவதில்லை. உடல் மண்ணுக்குள் போய் மீண்டும் ஒரு உயிராய் வந்து சேர்கிறது. இலைகள் உதிர்ந்து மக்கி, மண்ணாகி விதைக்கு உரமாகிறது. மண்ணை உழுது, உண்டு மண்புழு வாழ்கிறது. புழுவை உண்டு பறவை பறக்கிறது. பறவை வேடன் கை உணவாகிறது.

"ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழல்கிறது" ஒரு சக்தி! இச்சக்திக்கு ஒரு கோல்.

ஆக மூன்று கோல்கள் - இந்த பகவர்களுக்கு.

உண்ணும் உணவைப் பொறுத்து குணங்கள் மாறுபடுகின்றன. செய்யும் தொழிலை வைத்து குணங்கள் மாறுபடுகின்றன. கர்ம, காரியங்கள் உடலின் நிலைப்பாட்டை தீர்மானிக்கின்றன. உயிர் உடலோடு ஒட்டுவதில்லையெனினும் உடல் உபாதையுறும் போது வாடுவது உயிராகத்தான் இருக்கிறது. இப்படி உடல் பல்வேறு பிறவிகளை எடுத்து, அப்போது செய்யும் கர்மங்களுக்கேற்றவாறு விகாரமடைந்து, மீண்டும் பிறந்து ஒரு சுழற்சியில் உள்ளது. அத்தனை பிறவியிலும் உயிர் கூடவே அலைக்கழிகிறது. இத்தனை அலைச்சலுக்கும் ஆதாரமாக உள்ள உட்சக்தி தாமரை இலைத் தண்ணீர் போல் கலங்காமல் உள்ளே இருந்து கொண்டு உலகை ஆட்டுவித்துக் கொண்டுள்ளது.

இதை மெய்யியல் வார்த்தைகளில் சொல்வதானால், காக்கும் கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சித், அசித் இவைகளுக்கு ஆதாரமாகி, அந்தர்யாமியாக உள்ளிருந்து ஆட்டுவித்து, சித், அசித் படும் அவஸ்தைகளில் பங்கேற்காமல் நிற்கின்றது. அதாவது, உயிர் உடலை ஊடகமாக வைத்து செயல்படுகிறது. இறைவன் உயிர் (சித்), உடல் (அசித்) இரண்டையும் வைத்து செயல் படுகிறான்.நம்மாழ்வார் பிறந்த பொழுதிலிருந்து இறைத்தியானத்தில் மெய் மறந்து 16 வருடங்கள் கழித்து விடுகிறார். இவர் புகழ் கேட்டு மதுரகவி என்னும் பெரும் அறிஞர் திருக்குருகூர் வந்து சேர்கிறார். மெதுவாக நம்மாழ்வார் முன் வந்து,

"செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்கிறார்.

அது நாள் வரை வாய் திறவாத பாராங்குசன், அன்று திருவாய் அருளி, "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார். இந்திய மெய்யியல் சரித்திரத்தில் நீங்காத இடம்பெறும் இருவரின் உறவு இந்தகைய சம்பாஷனையில் தொடங்குகிறது. இங்கு செத்தது என்பது உடலைக் குறிக்கிறது. உடல் வாழும் போதே கூட செத்துத்தான் உள்ளது. மயிர், நகம் இவை செத்தவை. மேலும் உடல் செத்து, செத்து உயிராய் மலர்வதால் அதை "செத்தது" என்கிறார். சின்னது என்பது "அணுவுக்குள், அணுவாய்" இருக்கும் உயிரைக் குறிக்கும். இவ்வுயிர், செத்ததான உடலுக்குள் போன பின் அது செய்யும் கர்ம, காரியங்களில் பங்கேற்று வாழும் என்பதை "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார்.

"ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்ஆழி வண்ணம் என் அம்மான்" என்றும் சொல்கிறார் சடகோபன். அதாவது இச்சுழற்சியில் படைத்தனும் உழல்கின்றான் என்கிறார். இருந்தாலும் ஒரு சின்ன வித்தியாசத்துடன். உயிர்களான ஜீவாத்துமா (அதாவது ஜீவனில் உறைகின்ற ஆத்மா) பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவிகளை எடுக்கின்றன. (இங்கு பாவம், புண்ணியம் என்பது செய்யும் காரியங்கள் ஆகும்). இன்ப, துன்பங்களை அனுபவிக்கின்றன. ஆயின் இறைவன் இச்சுகங்களிலும், துன்பங்களிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற அவசியமில்லை.

இதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம். சிறைச் சாலையில் திருடனும் உள்ளான், சிறை நிர்வாகியும் உள்ளான். திருடன், தான் செய்த கர்ம, காரியங்களுக்காக தண்டனை அனுபவிக்க சிறைக்கு வருகிறான். ஆனால் சிறை அதிகாரி தன் இஷ்டத்தில், கடமை கருதி சிறையில் உள்ளார். இது போல்தான், இறைவனும், கடமை கருதி, தன் விருப்பத்தால் உடல், உயிர் இவையுள் உறைகிறான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்கள் அவனை அணுகும் என்று சொல்வதற்கில்லை. இந்த உறவு முறையை விளக்கத்தான் பண்டைத் தமிழர்கள் முக்கோல் பகவர்களாக தமிழ் மண்ணில் வலம் வந்தனர். சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றும் பிரபஞ்சத்தில் நிலையாக உள்ளவை. ஒன்றின் தேவை ஒன்றுக்கு உண்டு. ஒன்றில் ஒன்று கலந்து வாழும். ஆயினும், அவைகளுக்குள் உறவு, தாமரை இலைத் தண்ணீர் போன்ற உறவுதான். Independant but interactive என்கிறது வைணவம்.

யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே


(திருவாய்மொழி 3.4.10)

யாவையும் (அறிவில் பொருள்கள்), எவரும் (அறிவுடைப் பொருள்) தானாக உள்ளான். அவையவை/அவரவர் மாறும் போது (சமயம்=விகாரம், அவஸ்தை) தான் மாறுவதில்லை. நிலைத்து உள்ளான். ஐம்புலன்களால் அறியப்பட முடியாதவன். ஞான (உணர்வு) சொரூபன். ஆவிசேர் உயிர் என்பது உடலின் உயிர் என்று பொருள். ஆவியைத் தாங்குவதால் ஆகுபெயராகி வருகிறது. எப்படி உயிர் என்பது உடலில் வாழ்ந்தாலும் பற்று இல்லாமல் (ஒட்டாமல்) வாழ்கிறதோ அதுபோல், அந்தர்யாமியான இறைவன் இவையிரண்டிலும் ஒட்டிக் கொள்ளாமல் (அதாவது தனி மனித ஆசா, பாசங்களில் ஒட்டித் தவிக்காமல்) இருக்கிறான் என்கிறார் நம்மாழ்வார். இந்த பாவத்தை அறிந்து கொண்டால் நாமும் இறைவனுடன் கூடலாம் என்கிறார்.
"பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே" என்பதை மூன்று விதமாக வியாக்கியானம் செய்கிறார்கள்:

1. இறைவன் மேல் பக்தி உண்டானால் அவனைக் கூடலாம். இங்கு பக்தி என்பது இட்டுச் செல்லும் ஊடகமாக இருப்பதுடன் அதுவே பலனாகவும் அமைகிறது.

2. ஆத்மாவோடு சேர்ந்திருக்கின்ற பரமாத்வாவின் தன்மையை உணர்வதால் அவனைக் கூடலாம். அதாவது, பிரிக்கும் புறக் காரணிகளை ஒதுக்கிவிட்டு "தானாக" அமையும் அகக்காரணியை நோக்குவதால் வரும் தெளிவால் கூடுதல்.

3. உயிர் பிரியும் தருவாயில் இவ்வுண்மையை உணர்வதால் அவனுடன் கூடலாம் என்பது ஒரு கருத்து. அதாவது பற்றுவதற்கு வேறு ஒன்றுமில்லாத போதில் அவனே கதி என்று சரண் அடைதல்.

இப்படி இத்தனை வியாக்கியானங்களையும் தன்னுள் அடக்கிய கேள்விதான் மதுரகவி நம்மாழ்வாரிடம் கேட்ட கேள்வி:

செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்
எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?Wed, 27 May 1998 14:47:16 +0000

5 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Monday, January 07, 2008

மிகப் பெரிய வியாக்யாநத்தை, கடுகைத் துளைத்தது போல் மிகச் சுருக்கமாக ஆனால் எல்லார் மனதிலும் பதியும்படி விளக்கியுள்ளீர்கள். மகிழ்ச்சி

  N.Kannan

Monday, January 07, 2008

ரகுவீர்:

உங்க ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது போலுள்ளதே! இதை நாளை வெளியிடலாமென்று எடுத்து வைத்திருந்தேன். நீர் அதற்குள் பார்த்துவிட்டீர்! :-)

உங்கள் பின்னூட்டங்கள் புதுத்தெம்பை அளிக்கின்றன. இங்கு வரும் வண்டினங்கள் பல உண்டு. குமரன், கண்ணபிரான் என்று. அவர்கள் வரும் போதும் ரீங்காரம் இனிக்கும்!

  Srinivas

Sunday, August 30, 2009

Prabhu,
Just today i got opportunity to read your blog. I dont have any words to comment as my age and experience is not even you single page matter.

Being a vaishnavist, I know nothing other than Krsna Naamam. But Gnanam will come only from guru's anugiraham. But i feel your words make me more thinking and focusing towards spritual.


I pray Krsna to keep you healthy and peace in mind to continue this service.

Dasanu Dasan,
Srinivas.

  Srinivas

Sunday, August 30, 2009

Prabhu,
Just today i got opportunity to read your blog. I dont have any words to comment as my age and experience is not even you single page matter.

Being a vaishnavist, I know nothing other than Krsna Naamam. But Gnanam will come only from guru's anugiraham. But i feel your words make me more thinking and focusing towards spritual.


I pray Krsna to keep you healthy and peace in mind to continue this service.

Dasanu Dasan,
Srinivas.

  நா.கண்ணன்

Monday, August 31, 2009

Thank you Mr.Srinivas: I'm humbled by your comment. I'm no more than a simple servant of God. I try to look at Vaishnavism from a post modern perspective. Amazingly it gives room even for that! Read the other entries when you have time.