e-mozi

மடல் 041: காதல் (பக்தி), களவு, கற்பு

ஆண்டாள் ஒரு வித்தியாசமான பெண்!

ஆண்களின் ஆதிக்கம் அதிகமுள்ள இவ்வுலகில் நம்மால் நமக்குப் பிடித்த ஆதர்ச புருசர்களைத்தான் (hero) எப்போதும் தெரிவுசெய்ய முடிகிறதே தவிர ஆதர்ச தலைவிகளையல்ல (heroine). அப்படியொரு பழக்கத்தை இப்போது கொண்டு வருவோம். என் ஆதர்ச தலைவி ஆண்டாள். அவள் சரியான முற்போக்குள்ள பெண்ணாக இருந்திருக்கிறாள் - அவள் காலத்தை பொருத்தவரை! (காலத்தை மீறுவதுதான் முற்போக்கு என்றாலும், காலம் எப்படியும் மனிதனை ஒரு கட்டுக்குள் வைத்துத்தான் இருக்கிறது. முழுச் சுதந்திரம் வேண்டும் மனிதன் இந்த சமூகத்தை விட்டு வெளியேற வேண்டியுள்ளது).
ஆண்டாள் நல்ல கவிஞரும் கூட. இவரது நாச்சியார் திருமொழி நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கவிதைகள்.

ஆண்டாள் காதலின் நெளிவு, சுளிவுகள் தெரிந்த பெண்ணாக இருந்திருக்கிறாள். காதல் மலரும் விதமும், காதலை எப்படி அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறாள்.

காதல் மலர்ந்த பிறகு காதலனுக்கு காதலியின் ஞாபகமும், காதலிக்கு காதலலின் ஞாபகமுமாகவே இருக்கும். எப்போதும் அதே ஞாபகத்தில் அவர்கள் இருப்பதாலும், எப்போதும் கூடல் சித்திப்பதில்லையாலும், கொஞ்சம் அவர்களுக்குள் சின்ன கோபங்கள் இருக்கும். யாரைக் கோபப்படுவது என்றெல்லாம் காரணம் இருக்காது. ஆண்டாளின் கோபத்தைப் பாருங்கள்:

பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?

(நாச்சியார் திருமொழி-590)

முதல் நான்கு வரிகளை வாசிக்கும் போது ஏதோ ஆண்டாள் திருமாலிருஞ்சோலை (மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயில்) அழகை வர்ணித்துக் கொண்டு வருகிறாள் போலும் என்று எண்ணத் தோன்றும். தீடீரென்று பஞ்சமா பாதகர்காள்! என்று நறுக்கென்று ஒரு திட்டு வைக்கிறாள். அடடா! பாவம் இந்த மலர்களும், பறவைகளும் என்ன பாதகம் செய்தன என நினைக்கத் தோன்றுகையில், பதில் கவிதையின் கடைசி வரிகளில் கிடைக்கின்றன. அவை செய்த பெரும் பாதகம் அவை, இவள் காதலனனின் நிறத்தை ஒத்து இருக்கின்றனவாம். அந்த நிறத்தைப் பார்த்தவுடன் இவளுக்கு தன் காதலன் ஞாபகம் வருகிறது. ஞாபகம் வந்தவுடன், அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, கூடல் ஆசை வருகிறது. இத்தனை அவஸ்தைக்கும் காரண கர்த்தாக்களாக அந்த மலர்களும், வண்ணப் பறவைகளும் அமைவதால் அவை பஞ்சமா பாதகர்களாகி விடுகின்றனர்!

அம்மாடி! காதல் வேகத்தைப் பாருங்கள். இது சுத்தமான அகப்பாடல். அகம் என்பது தமிழுக்கே உரிய சிறப்புக் கவிதை மரபு. அகப் பாடல்கள்தான் காலத்தால் மருவுற்று சங்க காலத்திற்குப் பின் பக்திப் பாடல்களாக தமிழகத்தில் மலர்கின்றன. எனவே அதற்கேற்றவாறு அவர்கள் பாவிக்கும் உருவகங்களும், உவமைகளும் மாறுகின்றன. ஆண்டாளும் அவளின் தந்தை விட்டுசித்தரும் கவிதை மரபைப் பேணுகின்ற அதே நேரத்தில், உள்ளக் கிடக்கையை கண்ணாடிபோல் வாசகனுக்கு காட்டுவதில் மரபை மீறவும் தயங்குவதில்லை. இந்த விதத்தில் மரபு மீறுகின்ற கவிதைகளை இவர்கள் தொகுப்பில்தான் நிறைய பார்க்க முடிகிறது (இது குறித்து மேலும் அறிய பழைய மடல்களை வாசிக்கவும்). ஒரு சின்ன உதாரணம் இதோ:

கடலே! கடலே! உன்னைக்
கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுத்தவற்கு, என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுக்கின்ற மாயற்கு என்
நடலைக ளெல்லாம் நாகணைக்
கேசென்று ரைத்தியே.

(நாச்சியார் திருமொழி-605)

இப்போது கடலை வம்புக்கு இழுக்கிறாள். முன்பொரு நாள் கடலைக் கலக்கி அமுதம் எடுத்துக் கொடுத்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. ஊறல் எடுத்தால் மாடுகள் மரத்தில் உரசிக் கொள்ளும். அது போல் கண்ணன் கலக்கிய கலக்கலில் (!) கடலின் ஊறல் தணிந்ததாம் (ஆண்டாளுக்கு வம்பு, குசும்பு ரொம்ப அதிகம்:-). பிறகு வருகிறது தனது ஆற்றாமை, "சரிதான்! உன் ஊறல் தணிந்தது, என் ஊறல் தணிப்பவர் யார்?" என்று திருமால் பள்ளி கொள்ளும் நாகணையைப் பார்த்து கோபமுறுகிறாள்.ஆண்டாளின் கிண்டல் உத்தியின் உச்சம் ருக்மணி கல்யாண வர்ணனை! நம்ம ஊரில் இன்னும் கல்யாணங்களை ஜோஸ்யர்களும், பெற்றோர்களும்தான் தீர்மானிக்கின்றனர். ஆண்டாள் காலத்தில் சொல்லவே வேண்டாம்! அவளோ அதற்கும் முன்னேயொரு காலத்தைப் பற்றி சொல்கிறாள். ருக்மணிக்கு கண்ணன் மேல் காதல். ஆனால் கண்ணனோ இடைச் சிறுவன். ருக்மணியின் தந்தை அவளை சிசு பாலனுக்கு மணமுடிக்க தீர்மானித்து விடுகிறார். கல்யாணமும் ஏற்பாடாகிவிடுகிறது. மணப் பந்தலில் சிசுபாலன், ருக்மணி. ருக்மணியின் நினைவோ கண்ணன் மேல்.

இப்போது பிரச்சனை, ஆண்டாள் எந்தப் பக்கம் நிற்பாள் என்பது. வழி, வழியாக வரும் சம்பிரதாயத்தின் பக்கமா? இல்லை முற்போக்காக நிற்கும் காதலர்களின் பக்கமா? பாம்பின் கால் பாம்பறியும் அல்லவோ? ஆண்டாள் என்ற நித்ய காதலி, வேறு எந்தப் பக்கம் நிற்பாள்?

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே.
(615)

காதல் வெல்லும் என்பதை முரசரிக்க அவள் உபயோகிக்கும் வார்த்தைகளே சாட்சி. சிசுபாலன் ஒரு மத, மதப்பில் தலை நிமிர்ந்து அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறான். அந்த சமயத்தில் நம் காதலன் கண்ணன் ருக்மணியை கிளப்பிக் கொண்டு போய் விடுகிறான். என்ன கிண்டல், என்ன கேலி பாருங்கள்!

சிசுபாலன் ரொம்ப தைர்யத்தில், ஒரு நிச்சயத்தில் திண்ணார்ந்து- நிற்கிறான். தன் வலிமையை மீறி எதுவும் அங்கு நடந்து விடாது என்ற மத, மதப்பில். மனிதனது ஆணவம் தலைக்கேறி, மதம் பிடிக்கும் போதுதானே அதன் நலிவைச் சொல்ல இறைமை வரவேண்டும். சரியாக, திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசு அழியும் வண்ணம் அவன் அண்ணார்ந்திருந்த நேரத்தில், அவன் கர்வத்தை உடைக்கிறான் இறைவன். மேலும் உண்மையான காதல்தான் பக்தி. காதல் என்ற மாபெரும் இயற்கையின் சக்திக்கு முன், தனி மனித ஆணவமும், அகங்காரமும் தூசு. சிசுபாலன், அவன் மாமன் (ருக்மணியின் தந்தை) இருவருக்கும் ருக்மணி என்பவள் ஒரு உடமை. ஒரு பண்டம். பண்டமாற்று செய்ய நினைக்கிறார்கள். ஆனால் ருக்மணி என்ற பெண்ணின் மனது காதலுக்கு ஏங்குகிறது. அவளுக்கு காதல் செய்ய உரிமையில்லையா? இல்லை வெறும் உரிமை காதலாகிவிடுமா? அவள் தந்தை, சிசுபாலன் நினைப்பது அவர்களுக்கு ருக்மணியின் மேலுள்ள உரிமை. அதை அவர்கள் காதல் என்று கற்பிதம் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்லவே! இதை சுட்டிக் காட்ட முற்படுகிறாள் ஆண்டாள்.

ஆண்டாளின் இன்னுமொரு முற்போக்கு வசனத்தைக் கேளுங்கள்:

அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.
(620)

கோவிந்தனுக்கல்லால் அவள் கொங்கை மற்றவர்க்கு இல்லை என்கிறாள். ஆனால் இந்த சிறு மானிடரோ அவளது கொங்கையையே பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
என்ன சொல்ல வருகிறாள் ஆண்டாள்?

உண்மையான காதலிலிருந்துதான் கற்பு என்ற கருப்பொருள் தமிழுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் இதய பூர்வமாக காதலிக்கும் போது, மற்றவர் இடையில் புகுந்து உரிமை கொண்டாடுவதை காதல் எப்போதும் அனுமதிப்பதில்லை. எனவே தனது, உடல், உயிர் எல்லாம் தனது காதலனுக்கு/காதலிக்கு என்று இருக்கும் நிலையே கற்பாகும். காதல் போயின், காதல் போயின்...கற்பும் போய் விடுகிறது! காதலே இல்லாமல் பெண்ணை ஒரு உடமையாக வைத்திருக்கும் தமிழகம் கற்பை மட்டும் ஒரு பாதுகாப்பு கவசமாக உபயோகித்து வருகிறது. உடமைக்கு கற்பு உண்டோ? இல்லை என்று திண்ணமாக சொல்கிறாள் ஆண்டாள். காதலுக்குத்தான் கற்பு உண்டு என்பது ஆண்டாளின் துணிபு.
இப்படிப் பட்ட அருமையான எண்ணங்களை, நம் உண்மையான மரபை இத்தனை ஆண்டுகள் போன பின்னும் நமக்கு கிடைத்து, வாசித்து புரிந்து கொள்ளுமாறு இவைகளை தொகுத்து, காத்து தந்திருக்கும் எம் முன்னோர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இவைகள் கோயிலில் வைத்து வாசிக்கப் படுவதுதான் தமிழின் பெருஞ் சிறப்பு. காதலும், தெய்வமும் ஒன்று. காதலும் பக்தியும் ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றும் உன்னத மரபு தமிழ் மரபு.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!!

First published on:Sat, 12 Sep 1998 04:39:44 -0700 (PDT)

6 பின்னூட்டங்கள்:

  Anonymous

Sunday, January 06, 2008

It was great reading through this blog. I never knew Rukmani was going to be married to somebody else or was she married to somebody else? I thought it was Radha who went through that ...

But your writing and description is fantastic, romantic and post modern.

  N.Kannan

Sunday, January 06, 2008

Thank you Madura!

Baghavadam is a fascinating tale. Only a few contemporaries of Krishna knew that he was an avatar of Vishnu. Fortunately Rukmini was one but not her brother. He wanted his sister to be married to a 'suitable boy' of his clan. But Rukmini had other plans. She sends a beautiful 'love letter' to Krishna to elope with her. HE did. And the description of that episode by Andal is superb.

Radha is HIS love in Gokulam. In fact, all the Gopis of Gokulam are HIS lovers. Radha is the jewel of all. In case of Radha, it was Krishna who fell in love with her and fought through an ardeal to win her love! That's why all the Alwars including Andal imagine themselves as Radha (nappinnai in Tamil) and not Rukmini. Alwars are a very 'proud' sort. They knew their worth. Andal knew it so clearly that she delares that no earthly human is worth for her love!! wow...It is hard to find a female like her in modern Tamilnadu.

Thanks and keep coming! My next article is on Barathi's love poem 'kARRuveLiyidai kaNNammA'.

  thiruthiru

Sunday, January 06, 2008

பெரியவர்கள் சொன்னதைப் புதிய கோணங்களில் தேவரீர் சொல்லும் அழகு ! அடடா! மாயைகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் இளைஞர் கூட்டம் படித்துத் தெளிவடைய இந்நாளில் தங்கள் வழி பலன்தர வல்லது. தங்கள் “வலை”யில் விழுபவரில் 2% ஆவது ஆழ்வார்களை முற்றிலும் அநுபவிக்க ஆரம்பிப்பார்கள். காற்றினிலே வரப்போகும் காற்று வெளியிடைக்காகக் காத்திருக்கிறேன்.

  N.Kannan

Sunday, January 06, 2008

ரகுவீர்:

நன்றி. ஆனால் இப்படி எழுதுவது கத்திமுனையில் நடப்பது போல். இதை எழுதிய காலங்களில் இவ்வெழுத்திற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. பெரியவர் டாக்டர் ஜெயபாரதி போன்றோர் கொடுத்த தைர்யத்தில் 108 கட்டுரைகள் எழுதிமுடித்தேன். அப்போது வந்த எதிர்ப்புகளையும், சமாளிப்புகளையும் பின்னால் வெளியிடுகிறேன். ஆனால் 10 வருடத்தில் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இவ்வெழுத்து ஒத்துப் போவது இறையருளே!

நம் பெரியோர் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல்தான் எழுதி வைத்துள்ளனர். காதல் முதலில் புரிந்தால்தானே அது கனிந்து பக்தியாகும். எனவே யதிராஜரே அதிசயமான விளக்கங்களெல்லாம் தந்துள்ளார். ஆயினும் மற்றோர் உள்ளம் நோகா வண்ணம் இம்மடல்கள் அமைய வேண்டுமே என்ற கவலை இன்றளவும் எனக்குண்டு.

  nAradA

Sunday, June 22, 2008

>>Radha (nappinnai in Tamil)<<

There is a school (of scholars) which does not think Radha is nappinnai. It is not clear why they used the word nappinnai (which is not known in the North) instead of irAdhai in Thamizh just like they morphed Krishna into KaNNan or vibhIshaNan into vIDaNan etc. SilappadhikAram mentions her as Ayar pAvai. ANDAL herself refers to nappinnai as the spouse of Krishna ( un maNALanai--tiruppAvai 19) and daughter-in-law of nandagOpAlan (nandagOpAlan marumagaLE--tiruppAvai 18). The term "marumagaLE" can be construed as niece which would make nappinnai as YasOdhA's brother's daughter . YasOdhA's brother had two daughters and one of them was nILA. Parasara BhaTTar also refers to nILA in his taniyan.

While some folks may take a generic gOpi as nappinnai, the Thamizh vEdams give her a special place. ANDAL never even mentions rAdhA by name although all the details of Krishna's episodes were known to her and other AzhwArs. For some thoughts on this subject please refer to:
1. http://www.chennaionline.com/columns/variety/2006/01mystery.asp
2. http://www.chennaionline.com/columns/variety/2006/01mystery01.asp
3. http://www.chennaionline.com/columns/ variety/2006/01mystery02.asp

  நா.கண்ணன்

Sunday, June 22, 2008

இன்னும் பெரிய வாசகர் வட்டத்திற்கு இறைச் செய்தியை எடுத்துச் செல்லும் தங்கள் பணி வாழ்க. நப்பின்னை என்பவளை நீளா தேவி என்று ஆச்சார்யர்களும், திருவாய்மொழியும் சுட்டுகிறது. ஆண்டாள் நீளாதேவியின் அம்சமாக உதித்தவள். ருக்மிணி லட்சுமியின் அம்சமாக உதித்தவள். ராதை, நீளாதேவி. இரண்டு தேவிமார்களுக்குப் பின்னால் வந்தவள் என்பதைச் சுட்ட 'பின்னை' என்று அழைக்கப்படுகிறாள்.

//There is no indication here that positively identifies nappinnai as Lakshmi or Radha or anybody else by a specific name. //

திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தில் மூன்று தேவிமார்கள் பற்றிய பேச்சு வருகிறது. அதில் லட்சுமி கருணை வடிவானவள், பூமாதேவி பொறுமை வடிவானவள், நீளாதேவி பிரேமை வடிவானவள் என்று வரும். இது கடைக்குட்டி என்பதால் இதன் கையில்தான் வைகுந்தக் கதவின் சாவி இருப்பதாகச் சொல்வதுண்டு. 'சுத்தப் பிரேமை' என்பது யோக சமாதி. அந்நிலை அறிதல் அரிது.