e-mozi

மடல் 040 - காற்றுவெளியிடைக் கண்ணம்மா!

மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்? என்று நம்மாழ்வார் தனது பாசுரங்களைத் தொடங்குவதால், ஆழ்வார்கள் உயர் மதி நலமும், திட தன்னம்பிக்கையும், பக்தியின் நலத்தால் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் பார்வையும், அதன் விளைவாக சமூக நலம் நாடும் கருத்துக்களையும் சொல்லி வந்திருப்பது அவர்கள் செய்வித்திருக்கும் பாசுரங்களால் தெரியவருகிறது.

ஆழ்வார்களின் கடைக் குட்டியான ஆண்டாள் தோன்றி ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்குப் பின் பாரதி தமிழகத்தில் தோன்றுகிறான். பாரதியை ஆழ்வாராதிகளின் கோஷ்டியுடன் சேர்த்து அவருக்கு விக்ரகமும் செய்து வைத்து விட்டனர். பாரதிக்கு ஆழ்வார்களின் அத்தனை குணாதிசயங்களும் இருக்கின்றன. ஆழ்வார்கள் போல் முற்போக்கு பேசியவன் பாரதி.

சாதியந்தர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர்!


என்கிறார் தொண்டரடிப்பொடி. அவர் காலத்துக்கு இதுக்கு மேல் என்ன சொல்ல முடியும்? பாரதி அதே பாணியில்,

ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தியாவில் இல்லையே

என்றும்,

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே...


என்றும் சொல்கிறார். அதாவது, இது ஆணவத்திற்கு எதிரான குரல், அதிகாரத்திற்கு எதிரான குரல். ஆன்மீக ஒருமைப் பாடு கூறும் குரல். ஆனால் இதையெல்லாம் யாரும் கணக்கில் கொண்டார்களாவெனத் தெரியவில்லை. பாரதியின் கிருஷ்ணபக்தி, அவனது கண்ணன் பாட்டு அவனை ஆழ்வாராக்கிவிட்டது.

ஆனாலும் பாரதி எப்படிப் பட்ட ஆழ்வார்? மற்றவரெல்லாம் கண்ணனை கடவுளாகவும், குருவாகவும், முடிந்த போது காதலனாகவும் வைத்து பஜித்தனர். உதாரணமாக நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பாருங்கள்:

திருமால்! நான்முகன், செஞ்சடையானென் றிவர்கள் எம்
பெருமான் தன்மையை யாரறிகிற்பார்? பேசியென்?
ஒரு மாமுதல்வா! ஊழிப் பிரான்! என்னையாளுடைய
கருமா மேனியன்! என்பன் என் காதல் கலக்கவே (8.3.9)


ஆனால் பாரதி, கண்ணனை காதலியாகவும், சேவகனாகவும் வைத்துப் பார்த்து புரட்சி செய்து விடுகிறார் (புரட்சி என்ற சொல்லை தமிழுக்குத் தந்தவனே அவன்தான்!). அவனது மிகவும் பிரபலமான பாடலை கவனிப்போம்:

கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதள்களும்-நில
ஊறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப் பொன்னொத்த மேனியும்-இந்த
வையத்தில் யான் உள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே!-இந்தக் (காற்று)
நீ எனது இன்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்-துயர்
போயின, போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்றன்
வாயினிலே அமுது ஊறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொலும் போழ்திலே-உயிர்த்
தீயினிலே வளர் சோதியே-என்றன்
சிந்தனையே, எந்தன் சித்தமே-இந்தக் (காற்று)

கண்ணம்மாவின் காதல் என்று தலைப்பிட்டிருந்தாலும், இது பாரதி கண்ணம்மாவின் மீது கொண்ட காதல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கண்ணம்மாவின் மீதான காதல் என்பதுதான் சரியான தலைப்பு.

காற்று வெளியிடைக் கண்ணம்மா என்று ஆரம்பிக்கிறான். பாரதியின் காதல் எத்தன்மையது? காற்றின் இடைவெளி (மூச்சு விடும் பொழுது) நேரத்தில் கூட உன்னை மறப்பதில்லை என்கிறான். எப்படி உடல் மூச்சு விட மறப்பதில்லையோ அதுபோல் பாரதி கண்ணம்மாவை நினைக்காத பொழுதுகள் இல்லை என்பதாம். வேறு: காற்றின் இடைவெளி (மூச்சு விடும் நேரம்) எப்படி சிறியதோ அதுபோல் இடை கொண்ட கண்ணம்மா என்பது. மூன்றாவது, காற்றின் வெளி பரந்து நிற்கிறது. காற்று வெளி என்று இந்த அகிலத்தையே பாரதி கூறுகிறான். இந்த அகிலமெல்லாம் அவன் கண்ணம்மாவின் காதலை கண்டு, உணர்ந்து களிக்கின்றான். கண்ணம்மாவின் காதல் இல்லாத இடமேது என்பது பாரதியின் கேள்வி.

அமுது ஊறுகின்ற இதழ்கள். இதழ் சுவை இனிதானது. இதைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம். வள்ளுவன் தொடக்கம் பாரதி வரை.

நில ஊறித் ததும்பும் விழிகள்: கண்ணம்மாவின் விழிகள் காருண்யமிக்கவை. அதில் அன்பு மிகுதியால் நீர் பள, பளத்துக் கொண்டே இருக்கும். பார்க்கும் போதே அவளுள் ஒன்றி விட வைக்கும் விழிகள்.

பத்து மாற்றுப் பொன் போன்ற மேனி. கண்ணன் (கண்ணம்மா) கருந் தெய்வம். ஆனால் இங்கு பசும் பொன் மேனி என்கிறான். பொய்கை ஆழ்வார் கண்ணனை தரிசிக்கும் போது "திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்பதால் இங்கு கண்ணனின் இதயத்தில் இருக்கும் தேவியை தரிசித்து விட்டே அவன் பசும் பொன் மேனி என்கிறான். இது சித்தர்களின் வழியாகும். சித்தர்களுக்கு சிவத்துவம் கிடைப்பதே சக்தியின் சிபாரிசால்தான். சக்தி இன்றேல் அவர்களுக்கு சிவம் இல்லை. பாரதி தன்னை சித்தனாகவே பாவித்தவன். சித்தர்களின் தேவி வழி பாட்டில் போகம், யோகத்தின் ஒரு கூற்று ஆகும். போகம் என்பதை அவர்கள் நாம் இப்போது கண்ணுறும் வண்ணம் அசிங்கமாகப் பார்க்கவில்லை. போகத்தின் உச்ச நிலையில் சிவ தரிசனத்தை கண்டனர். போகம் பிரம்மச்சர்யத்தின் முதல் நிலை என்பான் ஒஷோ.

கண்ணம்மாவின் நினைவில் அவன் வாழும் மட்டும் இருப்பதால் அவனுக்கு வேறு கவலைகள் தெரிவதில்லை. கவலை இல்லாத மனிதனாக அவன் ஆகிவிட்டதால் அவன் தேவனாகி விடுகிறான்.

நீ எனது உயிர் என்கிறான் பாரதி. அதுவும் இன் உயிர் என்கிறான். அமுது ஊறும் வரிகள். காதலின் உச்சத்தில் கவிஞன் வார்த்தைகளுக்கு தவிக்கின்றான். உயிரை விட மேலான ஒன்று ஒருவருக்கு உண்டோ. நம்மாழ்வார், "யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே அரி ஏறே!" என்பார்.

எந்த நேரமும் கண்ணம்மாவின் நினைவாக இருக்கும் போது கவலைகள் போய்விடுகின்றன. பொன்னை எப்படி மனிதன் போற்றி, பாதுகாக்கிறானோ அது போல் கண்ணம்மாவின் நினைவை போற்றிக் காப்பதால், போயின, போயின துன்பங்கள்.

வாயினிலே அமுது ஊறுதே, கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே என்கிறான் பாரதி. பெயரை அப்படிச் சொல்லிப் பழக வேண்டும். அமுது போன்ற ஒரு பெயர். காதல் என்றால் எல்லாமே இனிப்பாக இருக்க வேண்டும். நினைவு (காதலியின்/காதலனின்), உடல், பெயர் எல்லாமே இனிப்பானவை.

கடைசி வரிகளில் பாரதி காதலின் உன்மத்த நிலையை (ecstacy, orgasm) வர்ணிக்கிறான். உயிர் தீயில் வளர் சோதி என்பது குண்டலினி சக்தி ஆகும். அதை பிறப்பிக்கும் உருப்பிலிருந்து மேலே எழுப்பும் போது பெருந் தீயாக வளர்கிறது. இந்த நெருப்பை குளிர்விக்கும் சக்தி கூடலுக்கு உண்டு. அந்த நிலையில் ஒருவனின்/ஒருவளின் சிந்தனை, சித்தம் எல்லாம் ஒன்றாய் இருக்கும். அந்தப் பொழுதுகளில் இரண்டு என்பது இல்லை. போகத்தில் எளிதாக அத்வைதம் சித்திக்கிறது. போகத்தை கவனமாக அனுசரித்தால்! உடலின் தீயை கொஞ்சம், கொஞ்சமாக கொழுந்து விட்டு எரியச் செய்து, குண்டலினி சக்தியை கிளப்பிவிட்டு அதன் மூலமாக சிவத்தை உணர்வது. அவனது ஒருமையில் கலப்பது. இது சித்தர்களின் வழி. சித்த வழி முறையை சைவத்தில் கொண்டுவந்த திருமூலர் போகத்தை போற்றிச் சொல்கிறார். பரியங்க (கட்டில்) யோகம் என்கிறார் இதை.

வைத்த இருவரும் தம்மில் மகிழ்ந்து உடன்
சித்தும் கலங்காது செல்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கண்துக்கும்
வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே
(திருமந்திரம் 828)

உயிர்த் தீயினிலே வளர் சோதியே, எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே என்று இருக்கவேண்டும் என்று பாரதி சொல்வதை ஒப்பு நோக்கவேண்டும். வாழ்வில் எதுதான் இறைமைக்கு இட்டுச்செல்லவில்லை?

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே என் கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனுர் வினவி
திண்ண மென்னிள மான் புகுமூர் திருக்கோளூரே!
(திருவாய்மொழி 6-7-1)


மனிதன் எல்லாவற்றையும் அசிங்கமாக்கி வைத்திருக்கிறான், அவனது வாழ்வை, அவனது சமூகத்தை, அவனது கடவுளரை, அதை வெறித்தனமாய் வழிபடுவதில்...இப்படி. இதற்கிடையில் காற்றுவெளியிடைக் கண்ணம்மா எங்கே? என்பது அவரவர் அனுபவம்!

ஜி.ராமநாதனின் இசையில் "கப்பலோட்டிய தமிழன்" எனும் திரைப்படத்தில் பி.சுசீலாவும், பி.பி.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்!

Subject: [tamil.net] Pasura madal 41
Date: Wed, 2 Sep 1998 21:17:55 -0700 (PDT)

4 பின்னூட்டங்கள்:

  thiruthiru

Monday, January 07, 2008

கண்ணனைத் தானே கண்ணம்மாவாக உருவகப்படுத்தி பாரதி பாடினான்?

  N.Kannan

Monday, January 07, 2008

ஆமாம்.

சம்பிரதாயப்படி, உலகில் உண்மையான "புருஷன்" என்பவன் இறைவன் ஒருவன் என்றும் ஜீவகோடிகள் அனைத்தும் "பெண்கள்" என்றும் சொல்வர். எனவேதான் ஆழ்வார்கள் நாயகி பாவத்தில் பாடிப்போயினர்.

அதே நேரத்தில் இறைவன் அணுகப்பிரியன் (சௌலப்பியம்) என்றும் சொல்வர். இதைப் பிடித்துக் கொள்கிறான் பாரதி. அணுகுவதற்கு எளியன் என்பதால் அவனைக் காதலியாக்கி, சீடனாக்கி, சேவகனாக்கி, அரசனாக்கி, குருவாக்கி மகிழ்கிறான். எந்த வடிவில் அவன் வந்தாலும் அவன் பாரதிக்கு "நன்மை" ஒன்றையே செய்கிறான்.

பாரதி கண்ணம்மா என்பது மிகப்பிரபலமாகிவிட்ட 20 நூற்றாண்டுக் குறியீடு!

  nAradA

Saturday, June 21, 2008

"KARRu veLiyiDaik kaNNammA.." is a classic song among all other classic songs of Bharathi. We all know there are what are known as distilled spirits (whisky, vodka, c ognac ) but Bharathi's words are distillates of distilled words and all the more delicious and intoxicating. What a soul and what an enjoyment to read his works!

Bharathi wrote so many songs on KaNNan under various titles: friend, mother, father, servant, king, disciple, teacher, playmate, lover, and Lord. However, from what I know and read about Bharathi's KaNNammA
he considers parAsakthi as KaNNammA and treats her as his child (cinnanjciRu kiLiyE), love (KARRu veLiyiDaik kaNNammA, suTTum vizhic cuDar tAn, tIrttak karaiyinilE, etc.,)and goddess (ninnaic caraNaDaindEn).

  நா.கண்ணன்

Saturday, June 21, 2008

பாரதி என்றாலே பராசக்தி என்பது உலகமறிந்தது. ஆனால் உலகம் அறியாதது பாரதி எப்படி வைணவனாகிறான் என்பது. திருவல்லிக்கேணியில் முதன் முதலாக திருப்பாவை கேட்டுவிட்டு சொக்கிப் போவது, பின் குவளைக் கண்ணன் மூலமாக ஆழ்வார்கள் பற்றி அறிவது, பின் ஆழ்வார்கள் வழியில் கண்ணன் பாட்டு செய்தது, மரணப்படுக்கையில் 'நாராயண நாமம்' ஜெபித்தது இப்படி. கண்ணன் பாட்டு கண்ணனுக்குத்தான். அதுவரை நல்ல பாட்டுக்கள் எழுதிக் கொண்டிருந்த பாரதி 'கவிதை' எனும் லலித உலகிற்குள் ஆழ்வார்களைத் தரிசித்த பின்னரே நுழைவதாக ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 'தமிழினி' பத்திரிக்கையில் எழுதப் போய், அது இப்போது பாரதி உலகைக் கலக்கிக்கொண்டு இருக்கிறது!