e-mozi

மடல் 043 - அறிவின் பயனே! அரிஏறே!!

Subject: [tamil.net] Pasura madal 43
Date: Sun, 8 Nov 1998 02:27:44 -0800 (PST)

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்று கொள்வீரென்றவ்
வேதமறியாதே.

நாமம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள்வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

என்று போகிறது "அறிவே தெய்வம்" என்ற பாரதியின் பாடல். அவன் சரியாகச் சொல்வது போல் அவலை நினைத்துக் கொண்டு பலர் உமியைத் தின்று கொண்டு இருப்பதால்தான் இத்தனை சமயச் சண்டைகளும், மற்ற மதத்தினரின் ஏளனங்களும்.

தெய்வம் என்பது உருவகம். ஒன்றைச் சொல்ல ஒன்று வருவது. பாரதி சொல்கிறான், தெய்வத்திற்கு ஆயிரம் பெயர்கள் உண்டு. நீங்கள் பெயர்கள்தான் உண்மை என்று சொல்லி பெயர்களுக்குப் பின்னாலுள்ள உண்மையைக் காணத் தவறுகிறீர்கள் என்கிறான். மேலும் தெய்வத்திற்கு பல்வேறு வேடங்கள் உண்டு. கண்ணனாய், சிவனாய், பிரம்மனாய், மாடனாய், ஐயப்பானாய் பல்வேறு வேடங்கள் பூண்டு வருகிறான், அவ்வேடத்தை உண்மை என்று நம்பி, வேடத்தின் பின்னுள்ள தத்துவத்தைக் காணத் தவறிவிடுகிறீர்கள் என்கிறான்.

கவலையைத் துறந்து வாழ்வதுதான் வீடுபேறு. ஆனால் தெய்வமே நமது கவலையாகிப் போகும் போது வீடுபேறு எங்கிருந்து வரும்? அதனால்தான் பாரதி சொல்கிறான், நம்மில் பெரும்பாலோர் அவலை நினைத்து உமியைத் தின்று கொண்டு இருக்கிறோமென்று. எம் கவித்தாத்தா சிந்திக்காத பொருளே கிடையாது!

பாரதிக்கு மட்டும்தானா இந்தத் தரிசனம்? இல்லை, இல்லை. பாரதிக்கு முன்பே இதைக் கண்டுணர்ந்த பெரியோர்கள் பல உண்டு. பாண்டி நாட்டுத் தங்கம் மாறன் பாராங்குசன் (நம்மாழ்வார்) என்ன சொல்கிறார்?

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே


(இயற்பா-திருவிருத்தம்)

பல்வேறு சமயங்களாக நிற்பது அவனே. மானுடரின் மதி விகற்பத்தால் இச்சமயங்களுக்குள் பல பிணக்கங்கள் வந்துள்ளன. இந்த மதி விகல்பம் என்ன செய்யும்?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப்-பல
கள்ளமதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? (பாரதி)

அதாவது நித்தம் ஒரு சாமியார்கள், நித்தம் ஒரு சமயம் என்று தோன்றும் தமிழகத்தை முன்பே கண்டு சொன்னவர்கள் மாறனும், பாரதியும்.

இந்திய ஆன்மீகச் சிந்தனைகள் அறிவிற்குப் புறம்பானாதா? பகுத்தறிவும் ஆன்மீகமும் வெவ்வேறு துருவங்களா? இல்லை, என்று அடித்துச் சொல்கிறான் பாரதி. சுத்த அறிவே தெய்வம் என்கிறான். நம்மாழ்வார் "அறிவின் பயனே" கண்ணன் என்கிறார்!

சூழ்கண் டாயென் தொல்லை வினையை
அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து
எனைநாள் அகன்றிருப்பன்?
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்.
வானோர் கோமானே,
யாழி னிசையே! அமுதே! அறிவின்
பயனே! அரியேறே.
(திருவாய்மொழி 5.8.6)

கும்பகோணம் திருமால் சந்நிதியில் உருகும் நம்மாழ்வார், தாம் பெற்ற அறிவின் பயனே அரி (திருமால்) என்கிறார். வேறு என்ன சொல்கிறார்? யாழின் இசையே, அமுதே என்கிறார் (இவையெல்லாம் உருவகங்கள் என்று கொள்க. யாழின் இசையே என்றால் அவர் யாழ் இசையில் மட்டும் இருக்கிறார் என்றோ, அமுதே என்பதால் அவர் தின்னும் பதார்த்தம் என்றோ பொருள் கொள்ளக் கூடாது)

சரி சுத்த அறிவே தெய்வமாக இருக்கும் போது ஏன் அது எல்லோருக்கும் புரிய மாட்டேன் என்கிறது என்ற கேள்வி வருகிறது. இதை விளக்கத்தான் இந்து சமயத் தத்துவங்களெல்லாம் தோன்றி இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. இந்த சுத்த அறிவை அனுபவிக்க மீண்டும் அவ்வறிவின் துணை வேண்டி இருக்கிறது. இதைச் சிவ புராணத்தில் மாணிக்க வாசகர், "அவன் அருளால் அவன் தாள் வேண்டி" என்கிறார். இதை நம்மாழ்வார்,

இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்
இருத்தும் அம்மானே!

என்கிறார். இது எப்படி நிகழ்கிறது என்பது அவரவர் அனுபவம். பாரதி சொல்கிறான்,

ஒன்று பிரம முளதுண்மை ய·துன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமமுள துண்மை ய·துன்
உணர்வெனக் கொள்வாயே
.

அதாவது, தெய்வம் உண்டா? இல்லையா என்று பேசுவதே தெய்வத்தின் செயலாகும் என்கிறான் பாரதி! அதாவது நாம் இத்தனை சர்ச்சைகள் செய்வது, நாம் நாமாக இருப்பதே அதற்கு சாட்சி என்றாகிறது. இத்தனை அண்டங்களும் ஒரு நியதியில் நடந்து கொண்டிருப்பது காணக்கிடைக்கிறது. இவ்வண்டங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக நமது பிரக்ஞை தோன்றுகிறது. இப்பிரக்ஞை இருப்பதனால் நாம் காண்கிறோம், கேட்கிறோம், விவாதிக்கிறோம். நம்மால் ஒரு சின்ன புழுவை உருவாக்க முடியுமா? ஒன்றும் இல்லாததை வைத்து ஒன்று உருவாக்க முடியுமா? எனவே நாம், நாமாக இருப்பதற்குக் காரணமே இறை நம்முள் அந்தர்யாமியாக இருந்து செயல்படுவதுதான் என்பது இந்தியர்கள் கண்ட மெய் ஞானம். அதனால்தான் நம்மாழ்வார் அறிவின் பயனே இந்த உண்மையை உணர்ந்து ஆனந்திப்பதுதான் என்கிறார்!

இறை என்பது ஒரு ஆனந்தம். அதைப் பற்றி பேசிப் பேசி, விதண்டாவாதம் செய்து வீணாக்கக் கூடாது. இதை அறிந்து கொண்டால் கிடைக்கும் நிலையை திருவாய் மொழி (வாய்-மொழி: வேதம்; எழுதாக் கிளவி) சொல்கிறது:

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை
பொருப்பே யுறைகின்றபிரான் இன்றுவந்து
"இருப்பேன்" என்றென்னெஞ்சு நிறையப்புகுந்தான்
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே (10.8.6)

என்ன அழகாகச் சொல்கிறார் பாருங்கள்! திருமாலிருஞ்சோலைக் கள்வன், தான் இவர் உள்ளத்தில் "இருப்பேன்" என்று சொல்லி வந்திருந்து... எப்படி இருந்து? நெஞ்சு நிறையப் புகுந்து..அதாவது கொஞ்ச நஞ்சமில்லை, நெஞ்சு நிறைய.......ப் புகுந்து.....

பேரே யுறைகின்ற* பிரான் இன்று வந்து
பேரேன் என்றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் (10.8.2)

(*திருமாலிருஞ் சோலைக்கு திருப்பேர் நகர் என்றொரு பெயர் உண்டு) இவர் நெஞ்சத்தை விட்டு "பேரேன்"-அதாவது பெயர்க்க முடியாத வண்ணம், சிமிண்ட் போட்டு ஒட்டியது போல! உட்கார்ந்து விட்டாராம். சரி, இனி என்ன செய்வது?

"விருப்பமுடன் இந்த இறை அனுபவம் என்ற அமுதை உண்டு களிக்கிறேன்" என்கிறார் நம் முதல்தாய் நம்மாழ்வார். (தெய்வத்தை நமக்கு காட்டுபவர் முதல்தாய், தந்தையை நமக்கு காட்டுபவர் இரண்டாம் தாய்)

இந்த இறை அனுபவம் நீங்கள் எல்லோரும் பெற்று இன்பமுடன் வாழ இறைஞ்சுகிறேன்.

2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, January 04, 2008

//ஆனால் தெய்வமே நமது கவலையாகிப் போகும் போது வீடுபேறு எங்கிருந்து வரும்?//

அருமையான பாரதி-மாறன் ஒப்புமை!
கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!
கடவுளை நம்பினார் கவலைப்படார்-னு இருக்கணும் மொதல்ல! :-)

//(*திருமாலிருஞ் சோலைக்கு திருப்பேர் நகர் என்றொரு பெயர் உண்டு//

திருப்பேர் நகர் என்று தனியாக ஒரு திவ்யதேசமும் உண்டு கண்ணன் சார்!
அப்பக்குடத்தான் என்னும் இறைவன்.
ஆழ்வார்கள் சில சமயம், ஒரு திவ்யதேசத்தில் இன்னொரு தேசப் பெருமானின் பெயரைச் சொல்லி பாடுவதும் வழக்கம்! :-))

  N.Kannan

Friday, January 04, 2008

நீங்கள் சொல்வது சரிதான். அப்போது இதை நான் அறிந்தேன் இல்லை!

திருவாய்மொழியில் இல்லாத சமாச்சாரம் ஏதுமுண்டோ? பாரதிக்கு உத்வேகம் சடகோபன் என்று எழுதும் அளவு ஒப்புமை உண்டு!!