e-mozi

மடல் 044 - கனவிடை தோய்தல்

Subject: [tamil.net] Date: Tue, 10 Nov 1998 06:45:41 -0800 (PST)

பாசுர மடல் தொடரில் சமீபத்தில் வந்த ஆண்டாளின் கல்யாணக் கனவுகள் என்ற கட்டுரையை வாசித்து விட்டு அன்பர் ஒருவர் பத்து பாசுரங்களையும் தந்தால் நலமாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதின் பெயரில் இந்த மடல் வருகிறது.

ஆண்டாள் தமிழகத்தின் மிகச் சிறந்த சில பெண் கவிகளில் ஒருவர். ஆண்டாளின் திருப்பாவையை அறியாத தமிழர்கள் மிகக் குறைவே. பக்தி செய்வது எப்படி என்று உலகிற்கு காட்டி, பக்தி இயக்கத்தின் மூல குருவாக விளங்குகிறாள் ஆண்டாள். இவள் சூடிக் கொடுத்த மாலையை இறைவன் நாடிப் பெற்றதால் இவள் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்ற பெயரைப் பெறுகிறாள். இவள் கண்ணனுக்காகவே தவமிருந்தவள். ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பாண்டிநாட்டு கிராமத்தை பிருந்தாவனமாகக் கண்டு இவள் இயற்றிய நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும், பிருந்தாவனம் என்பது நாம் அடைக் கூடிய கிட்டத்தில் உள்ளது என்று காட்டியது மட்டுமல்லாது, பிருந்தாவனம் என்பது ஒரு உளவியல் கிராமம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அவரவர் பிருந்தாவனம் அவரவர் மனதே. எல்லோருள்ளும் அந்தர்யாமியாக இருந்து செயலாற்றும் பெருங் கருணையை பக்தி என்ற சாதனத்தின் மூலம் அனுபவிப்பதே ஆண்டாளின் பாசுரங்கள். மற்ற ஆழ்வார்கள் ஆண்களாக இருந்து கொண்டு நாயகி பாவத்தில் கண்ணனை அனுபவிப்பதற்கும், ஆண்டாள் உண்மையான காதலியாக இருந்து அனுபவிப்பதற்குமுள்ள சார வித்தியாசத்தை உணர்ந்து வைணவ ஆச்சார்யர்களில் மேரு மலையாகத் திகழும் இராமானுச மாமுனி ஆண்டாளின் தாசராகத் திகழ்ந்தார். இவரை ஆண்டாள் ஜீயர் என்று அழைப்பது அதனால்தான்.

ஆண்டாள் கண்ணனை நினைத்து பக்தி செய்த பல பாசுரங்களில் வாரணமாயிரம் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் அவள் எப்படி கண்ணனை அடைந்தாள் என்று காட்டுவதாக உள்ளன. மிக அழகான தமிழ் கவிதைகள் இவை. அந்தக் காலத்து கல்யாண வைபவத்தை பதிவு செய்பவையாகவும் உள்ளன இவை. எளிய தமிழில் உள்ள இக்கவிதைகளை எவரும் புரிந்த கொள்ளலாம். இப்பாசுரங்களை தினமும் சொல்வதால் கல்யாணத்தை வேண்டி நிற்கும் எவருக்கும் கல்யாண பிராப்தி கிடைக்கும் என்று நம்புவதால் இதை நோன்பாக சேவிக்கும் பழக்கமும் தமிழகத்தில் உள்ளது. இப்பாசுரங்கள் ஜீவாத்மா-பரமாத்மா உறவிற்கு உருவகமாக நிற்பதால் கவிதை வரிகளுக்கு அப்பாலும் ஆழ்ந்த பொருள் கொண்டு நிற்கின்றன. வைணவ ஆச்சார்யர்கள் ஆழ்ந்து பொருள் சொல்லி உள்ளார்கள். அவைகளுள் இன்று எழுத்து வடிவில் கிடைப்பவை பெரியவாச்சான் பிள்ளை என்பவர் நாலாயிரம் பாசுரங்களுக்கும் மணிப் பிரவாள நடையில் எழுதிய உரையாகும். இதன் முழுத் தமிழ் மொழி பெயர்ப்பு இன்னும் வெளி வரவில்லை. ரா.பி. சேதுப்பிள்ளை காலத்தில் திருவாய்மொழிக்கு மணிப்பிரவாளத்திலிருந்து, தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டாளின் சரிதமே ஒரு கனவு போல்தான் சொல்லப்படுகிறது தமிழகத்தில். சரித்திரத்தை உலகத்தவர் பாய்தோடும் அம்பு போல் பார்க்கும் போது, இந்தியர்கள் காலத்தை வளையம் போல் பார்த்தனர். வளையத்தில் தொடக்கம் ஏது, முடிவு ஏது? இப்படித்தான் இவர்கள் சரித்திரமும் எழுதிவைத்துள்ளார்கள். எது சரித்திரம், எது ஐதீகம், எது தொன்மம் என்று பிரித்து அறிய முடியாதபடி செய்வித்துள்ளார்கள். உலக சரித்திரமெல்லாம் வென்றவர்கள் எழுதுவது. ஆனால் மக்கள் சரித்திரம் சொல்லும் போது தொன்மம் தானாகக் கலந்து விடுகிறது. இது தவிற்க முடியாத மனிதப் பண்பு நலன் என்று சமீபத்திய சரித்திரவியலாரும் (உம். கீல் பல்கலைக் கழக சரித்திர பேராசிரியர்: ஹெர்மான் குல்க); உளவியலாரும் (உம்: ஜோசப் கேம்பல், எரிக் பிரோம்) கருதுகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் கி.ராஜநாராயணன் எழுதிய "கோபல்ல கிராமம்" நாவல்.

ஆண்டாள் துளசிச் செடியின் அடியில் கிடந்தாள் என்பது ஒரு கதை. அவள் படீரென்ற சத்தத்துடன் விட்டுசித்தர் முன் தேவியாகத் தோன்றினாள் என்றும், பிள்ளை இல்லாத அவர் அவள் குழந்தையாக தனக்கு வரவேண்டும் என்று கேட்டதற்கு இணங்க பெண் குழந்தையாக வந்ததாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மியம் சொல்லுகிறது. எனவே அவளின் தோற்றமே பூடகமாக உள்ளது. அவள் வாழ்ந்த விதம், ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகக் கண்டவிதம், கண்ணனை காதலனாகக் கொண்டு வாழ்ந்த விதம், கடைசியில் அவனோடு இரண்டறக் கலந்த விதம் இவை எல்லாவற்றிலும் பெரும் கனவுத் தன்மை உள்ளது. அதனால்தானோ என்னவோ மற்ற ஆழ்வார்களுக்கு கிடைக்காத பாக்கியமாக இவளுக்கென்றொரு கோயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது!

கனவு நிலை என்பது ஒரு சுகமான நிலை. நனவு நிலையில் சாப்பாடு பற்றிய கவலைதான் மனிதனை விரட்டுகிறது. அவனது ஆன்மா வாழும் உலகம் கனவுலகம் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் கனவு பிடித்திருக்கிறது. வாழ்வில் மூன்றில் இரண்டு பகுதி தூக்கத்தில் போய்விடுகிறது. கனவின் தொடர்ச்சியாக நனவு வருகிறதா? இல்லை நனவின் தொடர்ச்சியாக நாம் கனவு காண்கிறோமா என்று அறுதியிட்டுச் சொல்லவே முடியாது. ஏனெனில் சொல்ல முற்படும் எவரும் இந்த கனவு-நனவு வளையத்தில் இருந்து கொண்டுதான் ஆராய வேண்டும். ஆராயப்படும் பொருள் எது என்பதும், ஆராய்பவர் யார் என்பதும் விளங்காத நிலை. எனவேதான் இந்திய மெய்ஞானிகள் கனவு என்பதை மிக ஜாக்கிரதையுடன் கையாண்டுள்ளார்கள். ஆதி சங்கரர் கனவு நிலையை நன்கு ஆய்ந்துள்ளார்.
இலக்கியத்தில் கனவு நிலை உயர்ந்த இடத்தைப் பெறுகிறது. ஆண்டாள் படைப்பாளியாகவும் இருப்பதால் தனது கவிதைகளை கனவு, கனவு என்று சொல்லிச் செல்கிறாள். கனவு என்பதும் இறைமை போல் சொல்லுக்குள் அடங்குவது அல்ல. எப்படி கனவில் பிரக்ஞையின் வேறொரு கூறு வேலை செய்து நமக்கு காட்சிகளைத் தருகிறதோ அதே போல் நனவின் சிந்தனைகள் அடங்கும் போது இறைமை பற்றிய புரிதல் அதிகமாகும் என்பதைச் சுட்டுவதற்காகவோ அவள் இவைகளை கனவில் நடந்ததாக வருணிக்கின்றாள். மேலும், கனவில் நமக்கு அளப்பரிய சுதந்திரம் இருக்கிறது. எந்தக் கட்டுப் பாட்டிற்கும் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.

அவள் கண்ணனை கல்யாணம் செய்வதாக் கனவு கண்டுவிட்டு, அவள் கனவின் பலனாக வாசிப்பவர் சந்தான பாக்கியம் பெறுவர் என்று முடிக்கிறாள்! அவள் சொல்லும் பாக்கியம் வெறும் மகப்பேறு மட்டும்தானா? அல்லது அவள் பெற்றது போன்ற மகத்தான பேறா? இது, அவரவர் அனுபவித்துப் பார்க்க வேண்டியது. ஆண்டாள் சொல்லும் கனவு "Never ending story" "Alice in Wonderland" போன்றவை. நாமும் அதில் கலந்து கொள்ளும் உரிமை உள்ளது. ஒருவகையான "participatory virtual reality" தன்மை. ஆண்டாள் கல்யாணம் போல் நமக்கும் நடந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று எண்ண வைக்கும் தன்மை. இந்த எண்ணமே நம்மை உந்தும் சக்தியாக மாறும் தன்மை. ஆர்வம் கூடும் போது கனவின் கூறுகள் நனவாக மாறும் விந்தை. அதாவது, நல்ல எண்ணங்களை மனத்தில் விதையாக நடும் பயிற்சி.

இங்கு ஆண்டாள் காணும் கண்ணன், மனித நலத்தின் மொத்த வடிவமாக நிற்கிறான். குறைகள் அற்ற சுந்தரனாக, கேட்பவர் கேட்பதை அருள்பவனாக, சகல சந்தானங்களையும் கொடுப்பவனாக. இதற்கு மேல் மனித வாழ்வில் வேறென்ன வேண்டும்? ஆண்டாளுடன் சேர்ந்து கனவு காணத் தயாரா?

கலி விருத்தம்

1
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

2
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.

3
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

4
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

5
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

6
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

7
வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

8
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

9
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

10
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

11
ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

11 பின்னூட்டங்கள்:

  Kailashi

Thursday, January 03, 2008

அருமையாக கூறியிருக்கின்றிர்கள் ஆண்டாள் நாச்சியாரின் சரிதையை பாசுரத்தின் பொருலையும் கூறியிருக்கலாமே?

தங்கள் சேவை தொட்ர வாழ்த்துக்கள்.

  N.Kannan

Thursday, January 03, 2008

நன்றி கைலாஷ்!

கோதையின் கதை சொல்லியிருக்கிறேன். வரும்! வாரணமாயிரம் மூல உரை கேட்டதில்லை. பெரியவாச்சான் பிள்ளை செய்திருக்கிறார். அது தெரிந்தால் அதை அடியொட்டி விளக்கம் தரலாம்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, January 04, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்ணன் சார்.

கேளடி கண்மணி, இன்னும் சில படங்களில் வாரணமாயிரம் பாடலை இசையோடு நாடகமாக்கமும் செய்திருக்காங்க!
இளையராஜாவின் இசையில் வாரணமாயிரம் கேட்பதும் ஒரு சுகம் தான்!

ஹே ராம்-இல் பாசுரத்தின் சந்த ஓசையில் அப்படியே சில பத்திகள் பாடி இருப்பாங்க!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, January 04, 2008

//எது சரித்திரம், எது ஐதீகம், எது தொன்மம் என்று பிரித்து அறிய முடியாதபடி செய்வித்துள்ளார்கள்//

இன்றைய அறிவியற் காலகட்டத்தில் நம் முதுசொம் சரித்திரங்களை முன்னெடுத்துச் செல்லும் போது, இ்ந்தக் கலப்பு தான் பெரும் கேள்விகளை எழுப்பி மிரட்டிப் பார்க்கும்! :-)

  N.Kannan

Friday, January 04, 2008

கண்ணபிரான்:

வாழ்த்துக்கள்!

தூக்குத்தூக்கிப் படத்தில் கூட பத்மினி அற்புதமாக அபிநயம் பிடிப்பார். எம்.எல்.வி பாட்டு.

நீங்கள் கூறும் இசைத்துணுக்குகளிக்கு இணைப்பு கொடுங்கள் கேட்டு ரசிப்போம்!!

  thiruthiru

Friday, January 04, 2008

கண்ணன் ஸ்வாமின்,
இத்தனை நாள் தங்களை அறியாதிருந்து விட்டேனே! ஒரே மூச்சில் மடல்களைப் (42, 43, 44) படித்து மகிழ்ந்தேன். இனி தினமும் தொடர்ந்து வருவேன்.
தாஸன்,
ரகுவீரதயாள்
http://thiruppul.blogspot.com

  N.Kannan

Saturday, January 05, 2008

நன்றி ரகுவீரதயாள்:

உங்கள் வருகை நலன் பயக்கட்டும். தாங்கள் திருப்புல்லாணியோ? தர்பசயனம் செய்த எம் இராமபிரான் பாதம் மட்டுமல்ல, முழு உடம்பே பட்ட ஊரோ? நல்ல சேவை, வாழ்க.

தினம் வாருங்கள். பின்னூட்டம் தாருங்கள். சத்சங்கத்தில்தான் இறைவன் விருப்பமுடன் கலந்து கொள்கிறான். முதல் மூவர் சேர்ந்தவுடன் முண்டி அடித்துக் கொண்டு இடம் பிடிக்கவில்லையா? அவன்! நாம் கூடினால் 'இங்கேயும்' வருவான்!

  thiruthiru

Saturday, January 05, 2008

ஆம் ஸ்வாமின், புல்லைப்பதியில் பிறந்தேனில்லை என ஒரு பழைய பாடலில் வரும். அத்தகு பெருமைபெற்ற தலத்தில் பிறந்து வெளியேறிச் செல்லாமல் இங்கேயே வாழ்வதும் எம் பெரியோர் செய்த நல்வினைப் பயனே. இராமன் திருவடி பட்டுச் சிறந்த மண். இல்லையெனாம லிக பரமெல்லாம் தரும் எங்கள் பத்மாசனித் தாயார் அருள் பாலிக்கும் நல்ல் க்ஷேத்திரம். அந்தப் பலனால்தான் ஆழ்வார்களில் மூழ்கி முத்தெடுக்கும் தேவரீரைப் போன்றோரின் அறிமுகமும் அதன் மூலம் தெரியாத மறை நிலங்கள் தெளிகின்ற நல்வாய்ப்பும் கிட்டுகிறது. தாஸன்,
ரகுவீரதயாள்.

  N.Kannan

Saturday, January 05, 2008

ரகுவீரதயாள்:

உங்களை அறியத்தந்ததிற்கு நன்றி. திருப்புல்லாணி வந்து பெருமாளை சேவித்து இருக்கிறேன். என் பாட்டி பெயர் பத்மாசனி. அக்கா பெயரும் அதுவே. எனக்கும் பழைய இராமநாதபுரம்தான். நமக்கும் ஆழ்வாருக்கும் உள்ள உறவு ஒழிக்க ஒண்ணாதது அல்லவோ. அவன் அடிமைத்திறம் அல்லால் நம்மை இகத்தில் காப்பது எதுவோ? எம் முதல் தாய் அவனல்லவோ!

  nAradA

Saturday, June 28, 2008

>>வாழ்வில் மூன்றில் இரண்டு பகுதி தூக்கத்தில் போய்விடுகிறது.<<

Is it really true? Do most people sleep 16 hours a day? ToNDaraDippoDiyAzhwAr in his tirumAlai (874) mentions that half the life is spent on sleeping: "vEdanUl prAyam nURu manisartAm puguvarElum pAdhiyum uRangippOgum...."
Currently it is generally accepted that the average sleep hours in a day are 8. Is there evidence to indicate that in the first millenium people slept for 12 hours a day? Perhaps when it got dark at 6 PM in the tropical/equatorial region people went to bed and woke up at 6 AM when the Sun came up!

  நா.கண்ணன்

Saturday, June 28, 2008

12 மணி நேரம் தூங்குவதொன்றும் பெரிதில்லை. மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் போது கிருஷ்ணாராவ் எனும் தெலுங்குப் பையன் தினம் 10 மணி நேரம் தூங்குவான். அது அவசியம் என்று வாதிடுவான். சில பேருக்குக் கவலை இல்லாமல் தூங்க முடிகிறது என்ன செய்ய !! :-)