e-mozi

மடல் 045: பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே!

Date: Tue, 15 Dec 1998

ஒரு சொல்:

தெய்வம் என்ற கருத்தை நம்புவோர்க்கு இது. தெய்வத்தை உருவகமாக்கி வைத்தான் பண்டைத் தமிழன். கண்ணனைப் பாடும் நம்மாழ்வார் "கனியொன்கோ, பால் என்கோ, அறுசுவை அடிசில் என்கோ!" என்கிறார். இதுதான் உருவகம். உடனே தெய்வம் என்பது பசும் பால், அது ஒரு பழம், அது சர்க்கரைப் பொங்கல் என்று பொருள் கொள்ளல் கூடாது. கடவுள் உருவகமாய் இருப்பதால்தான் "யாவையும் எவருந்தானாய், அவரவர் சமயம் தோறும் தோய்விலனாக" உள்ளான். அதாவது, தெய்வம் ஒன்று அதை பல சமயத்தனர் பல பேர் சொல்லி அழைக்கின்றனர். இந்த அளவிற்கு புரிந்து கொள்ளக் கூடிய எவரும் இனிமேல் இம்மடலை இரசிக்க முடியும்:)
--------------------------------------------------------------------------------
நாம் பார்க்கின்ற உலகு பலவாய் இருக்கிறது. புல், செடி, மரம், பறவை, விலங்கு, மனிதன் எனப் பலவாய். ஆண், பெண்; விடம்-அமுது; வெய்யில்-நிழல் இப்படி துருவங்களாயும் இருக்கிறது. ஊன்றிக் கவனித்தால் அவையுள் ஒன்றுமையும் இருக்கிறது. புழுவாய் நெளியும் பூச்சிதான் பின் வண்ணத்துப் பூச்சியாகிறது. குரங்கும் மனிதனும் வேறு, வேறு என்றாலும் ஒரு தொடர்ச்சியும் தெரிகிறது. அறிவியல் இதை ஆய்ந்து உலக உயிர்கள் அனைத்திற்கும் உள்ள தொடர்பை பரிணாம வளர்ச்சி என்று பேசுகிறது. சேதனம் (உயிர்), அசேதனம் (உயிரற்ற) இவைக்கும் நடுவில் கூட இணைக்கும் தொடர்பு இருக்கிறது. வைரஸ் என்றும் உயிரிகள்(?) இவை இரண்டாயும் உள்ளன. அசேதனத்திலிருந்து சேதனம் வருவதை யூரி, மில்லர் இவர்களின் ஆய்வு கோடி காட்டி உள்ளது. ஆக ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது சரிதான் என்றாலும், ஊன்றிக் கவனித்தால் ஒன்றும், ஒன்றும் ஒன்று என்று தெரிகிறது. இப்படியொரு தொடர்பு இல்லையென்றால் நாய் குட்டியைக் கண்டு மோகம் ஏன் கொள்ள வேண்டும்? இல்லை கன்றுக் குட்டியின் கழுத்தை ஏன் தடவி விட வேண்டும்? ஏதோ ஒரு ஆதி தொடர்பு நம்மை ஒன்றுக்கு ஒன்று இழுக்கிறது. நம்மை அறியாமலே நீர் விழ்ச்சியின் அழகில் மயங்கி நிற்கிறோம். கரு மேகம் கண்டு ஆடும் மயிலையும், அதன் அழகில் மயங்கும் நம்மையும் பிணைக்கும் கயிறு பூடகமாய் எங்கோ தொக்கி நிற்கிறது. இது அறிவிற்கு அப்பாற்பட்ட இணைப்பாக உள்ளது. அறிவின் ஆளுமைக்குள் வரும்போது பிரித்துப் படிப்பதுதான் எளிதாக உள்ளது. மனித அறிவு (சிந்தனை) பிரிவின் ஊடாக இயங்குகிறது. முழுமையில் மூழ்கும் போது சிந்தனையின் இயக்கம் அறுந்து போகிறது. உதாரணமாக சில கீதங்கள் நினைவழிக்க வல்லன. சில அழகு சிந்தனையை நிறுத்த வல்லன. சில உணர்வுகள் (உம்.புணர்ச்சி) சிந்தனைத் தளத்தை தாண்டியதாக உள்ளன. அப்போது உண்மையில் இரண்டு கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒன்றே எங்கும் பரந்து நிற்கிறது. எனவேதான் ஆசியச் சிந்தனையில் இந்த ஒருமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

சிந்தனையை மீறும் இந்நிலையை சிந்தனைச் சிறைக்குள் கொண்டுவர முடியுமோ? இந்நிலை மனித அனுபவத்தில்தான் சாத்தியமாகிறது. இதை அநுபூதி நிலை என்று சொல்லலாம். இதை படிப்படியாக பயிற்சியின் மூலம் கொண்டுவர முடியும். இந்தப் பயிற்சிக்குப் பெயர்தான் பக்தி. பக்தி செய்து பழகும் போது மெது, மெதுவாக உள்ளத்தின் ஆணவம் கரைகிறது. ஆணவம் இருக்கும் வரை "தான்", "நான்" என்ற உணர்வு அகங்காரமாய் உயிரியில் வீற்றிருக்கிறது. ஆணவம் குறையும் போது, மெல்ல மெல்ல "நான்" மறைந்து பிற எல்லாவுமாய், தானற்ற நிலை வந்து சேர்கிறது. இக்கரைசல் நடக்க கிரியா ஊக்கி கண்ணீர். கீழைத் தேசத்தைப் பொறுத்தவரை கண்ணீர் என்பது கேவலமான ஒன்றல்ல. மேலைச் சமுதாயத்தில் அழுவது என்பது ஆண்மையின் இழுக்காக பார்க்கப் படுகிறது. இந்நோக்கில் அகங்காரம் கெட்டிப்படுகிறது. அகங்காரம் கரைய வழிகள் சொல்லப் படவில்லை.

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

(திருவாய் மொழி 3.5.10)


நாம் செய்யும் காரியங்கள், அக்காரியத்திற்கான பலனாகவும் உள்ள கண்ணனை ஒருமை கொண்ட மனத்தில் வைத்து உள்ளம் குழைய, எழுந்தாடி, "தான்" என்ற தற்பெருமை, பிறர் காண்கிறார்களே என்ற நாணம் இவை தவிர்த்து பிதற்றுவது பக்தனுக்கு அழகு என்கிறார் நம்மாழ்வார். கோயிலில் இருக்கும் போது சிந்தனை இறைவன் மேல் இருக்க வேண்டும். கண்கள் ஒருமையில் பனிக்க வேண்டும். அதைவிட்டு,

பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊன்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்க்கட் கெஞ்செய் வாரே? (3.5.7)


பரஞ்சுடரை நினைத்து கண்ணீர் மல்காமல், வெறும் ஊன் உடலை வளர்த்து பருக்க வைத்து தொந்தியும் தொப்பையுமாய் இருப்பதால் யாருக்கு என்ன பயன்? என்கிறார் சடகோபன்:-)

வார்ப்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தரென் றேபிறர் கூற,
ஊர்ப்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே. 3.5.8ஊரும், பேரும், உலகமும், சுற்றமும் மறந்து போன நிலையில் மனித பிரக்ஞை ஆதி ஒன்றுடன் ஐக்கியமாகி நிற்கிறது. அந்நிலையில் அவர் செய்யும் செய்கை சில நேரம் இவர் பித்தனோ? என்று உலகோர் சிரிக்கும் படி உள்ளது. இதைப் பயித்த நிலை என்று சிலர் சொல்லாம். ஆனால் இதை இந்திய ஆன்மீகம் அனுமதிக்கிறது. இராமகிருஷ்ணர் இப்படித்தான் சில நேரம் தேவியின் கிருபையில் மெய் மறந்து நிற்கும் போது அவரை பயித்தியக்காரர் என்று உலகு சொல்லி இருக்கிறது. இந்தப் பயித்தியம்தான் விவேகானந்தர் என்னும் சிங்கத்தை உருவாக்கி இந்தியாவிற்கு தந்தது.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் (5.8.5)

என்று பட்டியியல் இடுகிறார் நம்மாழ்வார். கிருஷ்ண சைத்தன்யர் கிருஷ்ண ஸ்மரணையில் இப்படி இருந்ததாக சமீபத்திய சரித்திரம் சொல்லும். பக்த மீராவின் கதியும் இதுவேதான்.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்கிறது மேல் நாட்டுச் சிந்தனை மரபு. ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான் என்கிறது நம் தத்துவம். மேல் நாட்டு உளவியல் பிரச்சனைக்கு இந்த துண்டிக்கப்பட்ட உணர்வுதான் காரணம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஈடன் தோட்டத்தில் இருந்த வரைக்கும் சேதனம்-அசேதன பிரிவினை கிடையாது. ஆனால் ஆப்பிள் என்ற நுகர் பொருளின் மீது ஆசை வந்த பிறகு ஆப்பிள் வேறு, தான் வேறு அல்ல என்ற ஒருமை நிலை அறுந்து விடுகிறது. விவிலியத்தின் பிரகாரம், ஆப்பிள்தான் முதல் நுகர் பொருள், சைத்தான்தான் முதல் வியாபாரி :-)

பகுத்தறிவுதான் எல்லாவற்றிற்கும் மேல்வரிச் சட்டம் என்னும் போது, யதார்த்த உலகத்தோடும் (அதில் உள்ள பிரிவினைகள், போர்கள் தரும் துன்பங்களைக் கண்ணுறும் போது) பாரம்பரிய பிரக்ஞைத் தொடர்பின் (அன்பினால் பிற உயிர்களிடத்தில் வசீகரிக்கப் படுதல், சேதன-அசேதன வேற்றுமை மறைதல்) காரணமாக உடன்பாடு செய்து கொள்ள முடியாதவர்கள் "இரட்டை மன நோய்" (schizopherenic) வியாதிக்கு உள்ளாகிறார்கள். இலக்கியத்தில் யதார்த்தத்துடன் உடன்பட முடியாமல் கனவு கண்டவர்கள் (பிளேக், நீட்சே) பித்தர்களாகக் கருதப்பட்டனர். நம் தத்துவ மரபில் இக்கனவுகள் ஆழ்மன அனுபவங்களாக (mysticism) கொள்ளப் படுகின்றன.

ஆழ்ந்த இறை அனுபவத்தில் ஆழங்காண் படுபவர்களைத்தான் நாம் "ஆழ்வார்கள்" என்கிறோம்! இரட்டை மன நிலை (நாயகி-நாயக பாவம் - bridal mysticism) நம் இலக்கிய கண்ணோட்டத்தில் மனநோய் அன்று, பக்தியின் உச்ச நிலை. ஒன்றும், ஒன்றும் பன்மையாவது மேல் நாட்டுச் சிந்தனை மரபில். நம் மரபில் ஒருமைதான்.

குலசேகரப் பெருமான் இம்மாதிரியான மனநிலைக்கு உச்ச உதாரணம். அவர் சேர அரசனாக இருந்தும் அரங்கனைக் காணும் ஆசையால் பேய் போல் பிதற்றுவாராம். இதை அவரே சொல்கிறார் தன் பெருமாள் திருமொழியில்:

பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே


"அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை" (பெருமாள் திருமொழி 7.1:8) என்கிறார். பேயாழ்வார் என்ற திருப்பதம் வந்ததற்கான காரணமும் இதுதான். திருமால் மேல் பேய் போல் கொண்ட காதல்.

இதையெல்லாம் அனுமதிக்கிறது இந்திய ஆன்மீகம். பக்தியின் தொடக்கம் கண்ணீரில் ஆரம்பிக்கிறது. இதுதான் ஆன்மாவின் மொழி. இதுதான் இறைவனின் மொழி. ஆரியமா, தமிழா கோயில் திருமொழி? என்று கேட்பாருக்கு சொல்லும் ஒரே சொல்- கண்ணீர்தான்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் உள்ளது? சிந்தித்துப் பார்த்தோமா?

நன்றி: இம்மடலில் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி கணையாழி (நவம்பர் 97) இதழில் "ஒன்றும், ஒன்றும் பன்மையா, ஒருமையா?" என்ற கட்டுரையில் சொன்ன சில வாசகங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.

0 பின்னூட்டங்கள்: