e-mozi

மடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

சென்ற கட்டுரையில் பார்த்த நிகழ்வு உண்மையா, புனைவா என சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் செய்ய இயலாது. புனைவு என்றாலும் ஏதோ காரணம் இருக்கிறது.

இந்நிகழ்வு காட்டுவது என்ன?

"பகிர்தல்" என்ற பண்பைப் பற்றி. அதாவது முதலில் வந்தவருக்கு கஷ்டத்தில் தங்க ஒரு இடம் கிடைக்கிறது. அவர் செளகர்யத்தை பார்த்துக்கொண்டு இருந்து விடாமல் அடுத்து வந்தவருக்கு இருக்க இடம் கொடுக்கிறார். அடுத்து வந்தவரும், "ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக" இவரை துரத்தி விடாமல் சேர்ந்து இருந்து மூன்றாவதாக வருபவருக்கும் இடமளிக்க உதவுகிறார். மூவருக்கும் வாழ்வு என்பது "நிலையற்ற ஒட்டம்" என்றும் அதில் பகிர்தல் தரும் "இன்பமும், அனுபவமும்" நிறைவு தருவதாய் உணரும் திறனும் நிரம்ப இருப்பது தெரிகிறது.

இப்போதைய நிலமை என்ன? இங்கிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போகிறார்கள். பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் வருபவன் பிரச்சனை என்றுதான் உள்ளூரில் இருப்பவன் காண்கிறான். வந்தவன் நிலைத்து வாழ்ந்தபின் (ஒரு தலைமுறை) புதிதாக வரும் ஆசாமியைப்பார்த்து இதே அசூசை (uncomfortable, hate, indifferent) கொள்கிறான். இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழும் மனப்பக்குவம் இல்லை. உலகில் அதி பணக்காரனும் அன்னாடங்காச்சியும் பக்கத்தில் பக்கத்தில்தான் வாழ்கிறார்கள். எவ்விதப் பகிர்வும் இல்லாததால் ஒருவருக்கு சுவர்க்கமாக இருக்கும் வாழ்வு மற்றவருக்கு நரகமாக இருக்கிறது.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்" என்று பாடிய கண்ணதாசன் வேறொரு பாடலில்,"இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா" என்பான். எல்லோரும் பகிர்ந்து வாழ உலகில் அத்தனை வளங்களும் (resources), தொழில் வளர்ச்சியும் (technology) இருந்தும் - அமெரிக்காவில் அதிக உணவை கடலில் கொட்டுகிறார்கள்; எதியோப்பியாவில் பட்டினியில் சாகிறான் மனிதன். நாயினும் கீழான வாழ்வையே மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் வாழ வேண்டி உள்ளது.

எங்கு மனிதநேயம் பூரணமாகி பகிர்தலும், அன்பும் நிரம்பி வழிகிறதோ அங்கு தன்னிச்சையாக
(அதாவது அழைக்காமலே) இறைவன் வந்து சேர்கிறான். மூன்று ஆழ்வார்களும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாமென கூடியவுடனே முண்டி அடித்துக் கொண்டு தானும் உள்ளே புகுந்து விடுகிறான் இறைவன் (என் "உள்ளம் நிறையப்" புகுந்தான், என்பார் நம்மாழ்வார் ஒரு இடத்தில்) இப்பாசுரங்கள் கி.பி. எழாம் நூற்றாண்டில் மாமல்ல பல்லவன் ஆண்டு கொண்டு இருக்கும் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் (குரு பரம்பரை கதைப்படி கி.மு. நாலாயிரத்தை தாண்டி விடுகிறது). இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் தமிழ் இன்றும் வாசித்து புரிந்து கொள்ளும் படி இளமையாக இருக்கிறது. இது தமிழின் சிறப்பு."திருக்கண்டேன்" என்று தொடங்கும் பாசுரத்தில் "பொன்மேனி கண்டேன்" என்கிறார் ஆழ்வார்.பொன்னார் மேனியன், மாதர் பிறையான், அலகில் சோதியன் - கண்ணன் அன்று! அது சிவன். இருப்பினும் பேயாழ்வார் திருமாலை பொன்னனாகக்காண்கிறார். காரணம் முதல் வரியில் இருக்கிறது. ஆழ்வார் முதலில் காண்பது திருமகள். அதான் "திருக்கண்டேன்" என்று
ஆரம்பிக்கிறார். திருமகள் சொர்ணம் போல் மின்னுபவள். அவள் ஜொலிப்பு திருமால் உடம்பில் அப்படி "டால்" அடிக்கிறது!

Date: Tue, 02 Sep 1997 12:28:41 +0000

2 பின்னூட்டங்கள்:

  குமரன் (Kumaran)

Tuesday, April 15, 2008

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கண்ணன் ஐயா. இறைவனின் கருணையையும் அருகாமையையும் பெற நாம் நம்மிடம் இருப்பதை எந்த வித ஒளவியமுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முதலாழ்வார்கள் திருக்கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதனை நீங்கள் நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

பொன்மேனி கண்டேன் என்றது திருமகளை என்றும் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் என்று சொன்னது திருமகளையும் அவள் கேள்வனையும் என்று முன்னோர்கள் சொன்னதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். பொன்மேனியும் பெருமாளின் திருமேனியே என்று சொல்லுவாரும் உண்டு நம் இரவிசங்கர் கண்ணபிரானைப் போல்.

  N.Kannan

Wednesday, April 16, 2008

நன்றி குமரன். பரனூர் அண்ணாவின் வழியில், ராதையை சிறப்பிக்கும் வழியில் 'பொன்மேனி' பற்றிப் பேசினேன். கண்ணனுக்கு 'மணிவண்ணன்' என்ற பெயரும் உண்டே! திருமங்கையாழ்வார் அவனை மின்னுருவாய், பொன்னுருவாய் என்றெல்லாம் பேசுவதுண்டு.