e-mozi

மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி

தொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது
மனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.

பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.பூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்!பேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்

"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,
பஜ கோவிந்தம் மூடமத"

என்கிறார்.

பக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நு¡ற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. "நகரேஷு காஞ்சி" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்து தான் "ஜென் மதம்" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை "தாருமா" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.

வேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.

முதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே.

பேயாழ்வார் முதல் முறையாக "ஸ்ரீ" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு "திரு" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். "திரு" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது.
வேதகாலத்து பூஜை முறைகளில் "ஸ்ரீ" , லட்சுமியாக பஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் "திரு" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.

அவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்.

இது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.

1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்.

2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்.

இது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்
ஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்.

பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது
தற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

Date: Wed, 03 Sep 1997 15:45:49 +0000

14 பின்னூட்டங்கள்:

  Kailashi

Saturday, February 16, 2008

ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அருமையாக ஆராய்ந்து எழுதுகின்றீர்கள். நன்றி.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  N.Kannan

Saturday, February 16, 2008

மிக்க நன்றி கைலாஷி

ஆழ்வார்கள் என் மனதை ஈர்த்த போது அவர்களை மேலும் புரிந்து கொள்ள எழுதினேன். அவர்களை சடங்கு முறையாக அணுகாமல், எம்மைப் போல் சகமனிதர்கள் என்று பார்த்த போது அவர்களின் சமூகப் பொறுப்பு, அரசியல் நோக்கு புரிந்தது. புளிய மரப் பொந்துக்குள் இருந்தாலும் நம்மாழ்வார் செயத புரட்சியை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது என் துணிபு.

  குமரன் (Kumaran)

Wednesday, April 23, 2008

இந்த இரு சுடர் விளக்குப் பாசுரங்களை எத்தனையோ முறை படித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பார்வை இது வரை கிட்டியதில்லை. உண்மை தானே. ஒருவர் அண்ட பகிரண்டங்களை எல்லாம் சேர்த்து விளக்கேற்றும் போது இன்னொருவர் உள்ளே திரும்பி பிண்டத்தில் விளக்கேற்றுகிறாரே. அருமையான பார்வை இது.
முதல் மூவர் பாடல்களில் தெரிபவர்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் மட்டுமே. மூவரின் காலத்திற்கு சிறிது காலம் முன் வரை வாலியோனும் (பலராமனும்) மாயோனுடன் வழிபடப்பட்டிருக்கிறான். அவனை ஏன் பாசுரங்களில் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை?
முதலாழ்வார்கள் காஞ்சிக்கு அருகில் தோன்றியது தற்செயலில்லை என்பது புரிகிறது. ஆழ்வார்கள் காலத்திற்கும் சைவக் குரவர்கள் காலத்திற்கும் தொடர்பு எப்படி? மாணிக்கவாசகர் மூத்தவர் என்று படித்திருக்கிறேன். ஆனால் அவர் காலம் முதலாழ்வார் காலத்திற்கு முன்னரா பின்னரா என்பதில் தெளிவில்லை. தங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

  N.Kannan

Wednesday, April 23, 2008

குமரன்: இக்கதை மிகப்பொருள் உள்ளது. அகத்தில் ஒளிர்பவனும், புறத்தில் ஒளிர்பவனும் ஒன்றே என்ற கருத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது.

வாலியோன் பற்றிய ஒரு அருமையான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உடன் பதில் இல்லை. தேடித்தருகிறேன்.

மாணிக்கவாசகர் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றுதான் திருமந்திரம் திருத்திய பதிப்பாசிரியர் சொல்கிறார். அவரை ஏன் 3ம் நூற்றாண்டில் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதநெறி பிறழ்ந்து சுயம்புவான மதங்கள் தோன்றிய காலத்தில் வேத வித்தகன் யார் என்று சொல்ல வந்தவர்கள் ஆழ்வார்கள். இதைக் கண்டு சொன்னவர்கள் ஆச்சார்யர்கள். ஆனால், அதற்குள் சைவக் குரவர்கள், 'சிவம் பரம்' என்ற மாற்றுக் கொள்கைக்கு பலம் சேர்த்துவிடுகின்றனர். வைதீக மார்க்கத்தின் ஆதி குருவான சங்கர பகவத் பாதாள் இப்போக்கை எல்லாம் கண்டிக்கிறார். என்ன செய்ய? வேதாந்தம், தென்னிந்திய சித்தாந்தம் என்ற பிரிவு தோன்றியே விட்டது!!

  Venkatesh

Thursday, May 22, 2008

Kannan sir,

Excellent narration and a different view point altogether. Highly enlightening!! You have said that the story of Rama has gone from South to North. This is new to me. Can you please elaborate on this? I would be greatful to you for this.

adiyEn
venkatesh

  நா.கண்ணன்

Thursday, May 22, 2008

வேங்கடேஷ்: மிக்க நன்றி. இராமாயண காதை என்பது நாட்டார் வழக்கில் பல்வேறு ரூபங்களில் சங்கத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இதனால்தான் கம்பன் சொல்லும் பாத்திர அமைப்பு வால்மீகியிடமிருந்து மாறுபடுகிறது. திருமங்கை ஆழ்வார், குலசேகரர் சொல்லும் சில காட்சிகள் எந்த இராமாயணத்திலும் இல்லாமலும் இருக்கிறது! இராமாயணம் என்பதை பின் நவீனத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், அதுவொரு குமுகாய எழுத்து (community writing). அது காலம் போகப் போக மெருகேறி, நம்மாழ்வார் காலத்தில், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" எனும் நிலைக்கு வந்து விடுகிறது. குலசேகர ஆழ்வார் இலங்கைக்கு படையுடன் புறப்பட்டு இருக்கிறார், இராமனுக்கு உதவ! அவர் காலமென்ன? இவர் காலமென்ன? கதை அவ்வளவு அழகாக வளர்ச்சியுற்று இருக்கிறது. எனவே இராமனை வட இந்தியன் என்று சொல்வது போன்ற அபத்தம் வேறெதுமில்லை. அவன் எவ்வளவு வட இந்தியத் தெய்வமோ அவ்வளவு தமிழ்த் தெய்வமும் ஆகும். இது மகாபாரத்திற்கும் பொருந்தும். பாண்டவர்கள் என்ற சொல்லே பண்டு, பாண்டிய என்ற சொற்களுடன் தொடர்புடையன. மகாபாரதத்தில் இந்த மேற்கோளுமுண்டு. சங்கப் பாண்டியன் ஒருவன் பாண்டவர்களுக்கு போர்ச் சோறு போட்டதாகச் சொல்கிறான். அது எப்படி?

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ் சொத்துக்கள். இதை ஆழ்வாராதிகளை விட அனுபவித்தர்கள் வேறொருவர் உண்டோ? ஆழ்வார்களை விட உயர்ந்த தமிழன் உலகில் வேறெங்கும் உண்டோ?

  Venkatesh

Thursday, May 22, 2008

Kannan Sir,

Thank you very much for your clarifications. That was really good. Please clarify one last doubt on this. Then how come, the place of birth of Rama is fixed as Ayodhya in north and that of Krishna as Mathura in North and so many places in north where the epic really happened.

இதோட உட்கருத்து என்ன?

  நா.கண்ணன்

Thursday, May 22, 2008

இதை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் பிழையாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இராமனையும், கிருஷ்ணனையும் நீங்கள் வெறும் சரித்திர நாயகனாகப் பார்க்கிறீர்கள். ஆனால் ஆழ்வார்கள் அப்படிப் பார்க்கவில்லை. அதற்குப் பின்னால் வருவோம்.

ஒரு கதை எனும் போது அதன் தோற்றம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அயோத்தி வட இந்தியாவிலும் இருக்கலாம் தென்னிந்தியாவிலும் இருக்கலாம். மதுரை என்னும் ஊரும் இப்படித்தான். ஆனால் community writing என்பது கதை எங்கு நடந்தது என்பதை இரண்டாம் பட்சமாக வைத்து கதையின் பாத்திர அமைப்பை மெருகேற்றுவதில் வெற்றி கொள்கிறது. அவ்வகையில் கம்பனின் காவியம் வால்மீகியின் காவியத்தை விட சிறப்பானது என்று கணிக்கிறார்கள். இதைக் காலத்தின் மெருகு என்று கூடச் சொல்லலாம்.

கடவுள் உருவகம் என்றான் ஜோசப் கேம்பல். "சோதியுருவை அங்கு வைத்து, இங்கு மாயா மானிட உருவாக வந்துத்தித்தான்" என்கின்றனர் ஆழ்வார்கள். எனவே அவன் பிறக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது அயோத்தி வட தேசம் என்று எப்படிச் சொல்ல முடியும்? (குழப்புகிறதா :-)

மேலும் கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஆழமான தொடர்புண்டு. கொரியாவில் அயூத் எனும் இடத்திலிருந்து வந்த இளவரசி கொரிய மன்னனை மணந்து கொரிய சந்திதி வளர்ந்தது என்கிறார்கள். அயுத் என்பதை வசதியாக அயோத்தி என்று சரித்திர ஆசிரியர்கள் எழுகிறார்கள். ஆனால் மொழி என்னவோ தமிழ் போல் உள்ளது. எப்படி? அயோத்தி தென்னகத்தில் இல்லையா?

  Venkatesh

Thursday, May 22, 2008

Kannan Sir,

No it is not confusing. You are saying it clearly. I agree that the Azhwars never emphasized on the historicity values, but on the personification of God.

While I find a synonymity with Mathura of North and Madurai of South, which is Ayodhya of South? Please do not think that I am doing vidhanDAvAtham here. I only want to understand further. That the stories of Rama and Krishna originated from South is a complete new theory for me.

Agreed that He was never born. The Vedas say this as "ajAyamAnO bahudhA vijAyathE" and paripAdal says this as "piRavAp piRappillai, piRappitthAr yArum illai". However He has walked in this earth in real. So he did take a birth (??) somewhere and that is to be Ayodhya or Mathura. This is why I am repeatedly asking you to understand much better. Sorry if I am troubling you.

  நா.கண்ணன்

Thursday, May 22, 2008

இராமகாதை தென்னகத்தில் நடந்ததாகவும், இலங்கை என்பது இன்னும் பல்லாயிரம் மைல்களுக்கு தெற்கே இருந்ததாகவும் உள்ள ஒரு கருத்தொன்று உண்டு. ஆனால் நான் அது பற்றி என் கட்டுரையில் சொல்ல வரவில்லை. இராமகாதை வடக்கேயே தோன்றியிருந்தது என்று வைத்துக் கொண்டாலும், பக்தி எனும் இயக்கம் தென்னகத்தில் தோன்றியபோது, இராம, கிருஷ்ண கதைகளுக்கு என்றுமில்லாத ஒரு உயர்வு ஆழ்வார்களால் அருளப்படுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஆய்வு செய்த சதுர்வேதி வேத விற்பன்னர்கள் இவை வேதங்களைக் காட்டிலும் மிக உயர்வானது எனும் கருத்திற்கு வருகின்றனர். திருவாய்மொழியை ஒப்பு நோக்கும் போது வால்மீகி, வியாசர் காவியங்கள் ஒரு மட்டுக் குறைவே என்று முடிவு கட்டுகின்றனர். ஆழ்வார்களால் உரம் பெற்ற பக்தி வடநாடு போகும் போது செழித்து வளர்கிறது. அந்த சமயத்தில்தான் இராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் முன்பு இருந்ததை விடப் பன்மடங்கு புகழ் கூடுகிறது. இந்த நோக்கில்தான் இராமாயணம் தெற்கிருந்து வடக்கே போனது என்று சொல்ல வருகிறேன். மற்றபடி, இராமன் என்ற மன்னன் வட தேசத்தில் பிறந்து ஆண்டிருக்கலாம். உண்மையில் வால்மீகி இராமனை மனிதனாகவே காட்ட முற்படுகிறார். ஆனால் நம்மாழ்வாரின் ஆளுமைக்குட்பட்ட கம்பன் இராமனை நாரணனின் தோற்றமாகவும், சீதையைப் பெருந்தேவியின் தோற்றமுமாகவே சித்தரிக்கிறார். அப்படித்தான் இன்று இராமகாதை உலகெங்கும் பார்க்கப்படுகிறது. எனவே இராமகதையை இன்றுள்ள நிலைக்கு உயர்த்திய பெருமை தென்னகத்தைச் சேரும். அயோத்தி எனும் பெயர் ஸ்ரீலங்காவில் இருப்பதாக ஒரு கொரியர் எனக்கு எழுதியுள்ளார். தென்னகத்தில் அயோத்தி எங்குள்ளது எனத்தெரியவில்லை. தேடினால் கிடைக்கும்.

கண்ணனை மனிதனாகக் காணும் ஒரு போக்கும் உளது. இல்லையெனில் மானுடர்க்காய் படாதன பட்டு என்று ஆழ்வார்கள் கவலை கொள்வரோ? ஆனால் அதை ஆச்சார்யர்கள் காணும் போக்கு அழகானது. யானையை பிடிக்க யானையை அனுப்புவது போல் சம்சாரத்தில் உழலும் மனிதர்களைப் பிடிக்க அவன் மனித அவதாரம் எடுத்தான் என்று சொல்வதுண்டு. இது இராம கிருஷ்ணாதிகளை விட ஆழ்வாராதிகளுக்கே பொருந்தும் என்றும் சொல்லலாம்.

  Venkatesh

Friday, May 23, 2008

Kannan Sir,

It is clear now. It is my small buddhi that I took the words so literally. This clears my doubt completely.

Though I have no qualifications to comment about your writing, I would still like to say that they are lucid, clear and to the point and even a novice like me can understand.

I am reading all your blogs, slowly, one-by-one. Please continue this good kainkaryam.

  நா.கண்ணன்

Friday, May 23, 2008

மிக்க நன்றி. ஏதோ எனக்குத் தோன்றியதை, கேட்டத்தை வைத்து, அதைப் புரிந்து கொண்டதை வைத்து எழுதுகிறேன். பிழைகள் இருக்கலாம். ஆனால் பாவத்தில் குறையேதுமில்லை. பகவான் விரும்புவதும் அதைத்தான். நம் மழலைச் சொல் அவனுக்கு அமிர்தம். அது அர்த்தங்கெட்டதனமாக இருந்தாலும். நாம் குறையுடையோர். அவன் பூரணன். அந்த தைர்யத்தில்தான் இந்த முயற்சியே!

  nAradA

Wednesday, June 18, 2008

A comment on the time period of mANickavAcagar. He is supposed to have lived in the 10th century CE. When SundaramUrthy nAyanAr (9th century CE) cataloged the 60 nAyanmArs before his time, he does not mention mANickavAcagar. sEkkizhAr, who wrote periya purANam, adds 3 more nAyanmArs to Sundarar's 60 (Sundarar, and his parents isaignAniyAr & caDaiyanAr). Even sEkkizhar does not include mANickavAcagar (for no obvious reason) although mANickavAcagar preceded sEkkizhAr. However mANickavAcagar has been conferred the status of 64th nAyanmAr unofficially by latter devotees.

I have another comment on the status of Rama as God which was portrayed by Kamban. During Kamban's time Rama was considered God and hence he portrayed Rama as God. But in VAlmIki's time Rama was considered as a warrior and King who was out to avenge Ravana's misdeeds. Valmiki's intent was more to preach the good qualities of a human being (righteousness, forbearance, obedience to elders, etc.) But the concept of Rama being God was recognized by Valmiki but somewhat underplayed. That is all. Remember that Rama and his brothers were conceived as avatars of VishNu in the episode of the celestial giving the pAyasam to Dasaratha's wives after the putrakAmEshTi yAgam

  நா.கண்ணன்

Thursday, June 19, 2008

திருவாசகர் காலம், திருமூலர் காலம் இவை பெறும் அலசலுக்கு உள்ளாகும் விஷயம். இந்த விஷயம் இப்படி இருப்பதால் ஒரு சரித்திர நாவலை நான் விமர்சிக்க வேண்டி வந்தது!