e-mozi

மடல் 004: ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை

ஆழ்வார்கள் தோன்றிய காலத்தில் அவைதீக மதங்களுக்கு மாற்றாக நிறையச் செய்ய வேண்டி இருந்தது. கண்ணனை காட்சிக்கு எளியனாக்கி, புதிய சம்பிரதாயங்களை செய்விக்க வேண்டி இருந்தது.


புண்ணிய வைணவ தலங்களெல்லாம் சாதாரண தமிழனால் பயணிக்க முடியாத தொலை தூரத்தில் இருந்தன. பொய்கையார் காலத்தில் பத்ரி, அயோத்தி, பிருந்தாவனம் என்று சில தலங்கள் வட நாட்டில் இருந்தன. "திருவெஃகை" என்றொரு தலத்தைப் பாடுகிறார். அவர் பிறந்த ஊர். இதற்கு முன் அதற்கு புண்ணிய அந்தஸ்து கிடையாது. உருவாக்குகிறார். கண்ணன் புவனசுந்தரன் என்று இருக்கும் போது கண்ணன் எங்கெல்லாம்
உண்டோ அதெல்லாம் பிருந்தாவனம் என்கிறார். இப்படி இவர்கள் பாடிய தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதை வைணவர்கள், "மங்கள சாசனம்" பெற்ற திருத்தலங்கள் என்று போற்றுகிறார்கள். வைணவ திருத்தலங்கள் 108-ல் முக்கால்வாசி தமிழகத்தில் இருப்பது தற்செயலாக நடந்தது அல்ல. இதே போல் நாயன்மார்களும் தலம் சென்று பாடுகிறார்கள். அப்பர் திருப்பூவணத்தாண்டகத்தில், பூவணநாதனை இப்படிப் போற்றுகிறார்:

வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே


இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாம் பிறந்த ஊர் "புண்ணிய பூமி" என்ற உள்ளத்தெம்பை உருவாக்குகிறார்கள்.


சைவ ஆகமங்களெல்லாம் தென் தமிழகத்தில்தான் உருவாகின. இச்சம்பிரதாயங்களெல்லாம்
வடக்கே கிடையாது. சைவ, வைணவப் பிரிவு கூட தெற்கே இருப்பது போல் அங்கு இல்லை. காரணம் அவை தோன்றிய இடம் தெற்கு. வடக்கு இல்லை! சைவ வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்னைமையானது. திருமால் வழிபாடும் புதிய வழி அன்று. கண்ணன் என்ற கருத்தாக்கமே தெற்கே ஆரம்பித்ததுதான். அதனால்தான் கண்ணன் இன்னும் "கருந்தெய்வமாய்" நிற்கிறான். முதல் ஆழ்வார்கள் காலத்தில் இவை இரண்டும் கொஞ்சிக் குலாவி இருந்தன.

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து


(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்).

சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான். அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான்.

பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கிறது.

திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?

இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்
வலப்பால் ஒண்கொன்றை
வடமால்; இடம் துகில் தோல் வலம்
ஆழி இடம் வலம்மான்
இடமால் கரிதால் வலம் சேது
இவனுக்கெழில் நலஞ்சேர்
குடமால் இடம், வலம் கொக்கரை
யாம் எங்கள் கூத்தனுக்கே


(பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்)

இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான்.

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து......

Date: Thu, 04 Sep 1997 09:32:20 +0000

2 பின்னூட்டங்கள்:

  Kailashi

Friday, February 15, 2008

அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில மண்ணு என்பதை அழகு தமிழில் விளக்கியுள்ளீர்கள். சங்கரநாராயணன் அருள் புரிக.

  N.Kannan

Friday, February 15, 2008

நன்றி கைலாஷி

இதை மிக அழகாகப் பல பாசுரங்கள் சொல்கின்றன. ஓரிடத்தில் நம்மாழ்வார் பரப்பிரம்மம் தன்னைச் சிவன், பிரம்மா, லட்சுமி இவர்களுக்குக் கூறு போட்டுக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்.