e-mozi

மடல் 005: காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ

நம் ஆழ்வார் உலாவில் அடுத்து வருபவர் திருமழிசைப்பிரான்.

இவர் அருளிச் செய்தது நான்முகன் திருவந்தாதி (96 பாடல்கள்);
திருச்சந்த விருத்தம் (120 பாடல்கள்).

ஆழ்வார்கள் பாடிய பாடலை ஏன் அருளிச் செயல் என்று சொல்ல வேண்டும்?

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர்- கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறை பொருளும் அத்தனையே தான்

(நான்முகன் திருவந்தாதி -69)

இவர்கள் வெறும் கவிதை சமைக்கவில்லை. அநுபூதி நிலையில் தாம் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை கவிதை என்ற ஊடகத்தின் வழியே உலகு அறியச் செய்கின்றனர். அதனால்தான் திருமழிசை கவிக்கு நிறைபொருளாய் செங்கண்மாலைக் காண்கின்றார். இவர் அவனை நேர்கொண்ட அநுபவத்தை கவிதையாக்கித் தருகிறார். இதை "அருளிச் செயல்" என்கின்றனர்.


இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல-நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே
யாவது; ஈது அன்றென் பாரார்?

(நான்முகன் திருவந்தாதி-72)

இல்லறம், துறவறம் எனறு ஏன் அலட்டிக்கொள்ளுகிறீர்கள்? நல்லறமாவது நாராயணனே! என்று முத்தாய்ப்பு வைக்கிறார். "நால் வேத மாத்தவமும்" என்றவுடன் காஞ்சிப் பெரியவர்தான் ஞாகபத்திற்கு வருகிறார். அவர் வேதத்திற்காகத் தவமிருந்தார். வேதம்தான் தவம் என்றார். திருமழிசை சொல்லுவது போல்"நால்வேத மாத்தவமும் நாராயணனே" என்றிருந்தார். சங்கரமடத்து சம்பிரதாயத்துப்படி கையெழுத்து இட்டால் "நாராயண ஸ்மிருதி" என்றுதான் எழுதிக் கையேழுத்து இட்டார். அர்த்தம் நாராயணனே ஞாபகமா இருத்தல் என்பது.இதை நம்மாழ்வார் வழியில் சொன்னால்,

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள் நீர்மல்கி.....

-திருவாய் மொழி 6 (1)

இருக்கும் நிலை. திருமழிசைபிரான் அதையே:

தொழிலெனக்குத் தொல்லை; மால் தன்னாமம் ஏத்த
பொழுதெனக்கு மற்றதுவே போதும் - கழி சினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த
வில்லாளன் நெஞ்சத் துளன்


(நான்முகன் திருவந்தாதி -85)

என்கிறார்.

வெற்பேன்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன், நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்

(நான்முகன் திருவந்தாதி-40)


திருவேங்கடமே வீடென்று இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் புரிகிறது,
இத்தனை நாளாய் இந்த பாழாய் போன பண்டிதர் பின்னே அலைந்தது ஏன்? என்று.

இது ஒரு ஆழமான பாசுரம்.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது).

திருமழிசையின் வார்த்தைப் பிரயோகங்களைப் பாருங்கள்! "நூல் வலையில்" சிக்கி என்கிறார். நாம் படித்த படிப்பை வைத்து என்ன ஆட்டம் ஆடுகிறோம்? "நூலாட்டி கேள்வனார்" என்று கேலி செய்கிறார்! ஒரு வகையில் இது ஒரு மாபெரும் வலைதான். நாம் வலையில் விழுந்து ஆடுவதை பல சமயம் உணருவதே இல்லை!

இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்
காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!

(நான்முகன் திருவந்தாதி-96)

Date: Sat, 06 Sep 1997 20:08:10 +0000

3 பின்னூட்டங்கள்:

  Anonymous

Thursday, February 14, 2008

I have the priviledge to come across the blog.And this also may due to the God grance.. thanks..
sreedhara

  N.Kannan

Thursday, February 14, 2008

நன்றி நண்பரே. அரிய மருந்துச் செடியான துளசி கண்ணில் படாமல் காட்டில் வளர்கிறது. ஆனால், அதுதான் இறைவன் ஆசைப்பட்டு அணிவது. இப்பாசுரமடல்கள் பொதுவாய் யார் கண்ணிலும் படுவதில்லை. பட்டாலும் ரசிப்பதில்லை, சுவை உணர்ந்து வருவோருக்கு மட்டுமே இது அருமருந்து. நம் நன்றியை நம்மை உடையவனுக்கு அல்லவோ சமர்ப்பிக்க வேண்டும்.

ஆள்கின்றான் ஆழியான்
ஆரால் குறையுடையோம்?

  குமரன் (Kumaran)

Wednesday, May 14, 2008

//இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்
காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!//

இந்த வரிகள் அப்படியே பரிபாடல் வரிகளைப் போல் தோன்றுகின்றன.