e-mozi

மடல் 006: விதையாக நற்றமிழை வித்திட்டாய்!

மொழியின் பயன் என்ன என்று பார்ப்போம்!

மொழியின் தோற்றுவாயை அறிய முயலும் அறிவியலார் மானுடத்தின் மூதாதையர் புல்வெளிகளில் வேட்டையடும் போது ஒருவருக்கொருவர் சங்கேதம் சொல்லிக் கொண்டு கூட்டாக இறையாட உதவும் ஊடகம் மொழி என்கின்றனர்.

தங்களுக்குள் பேசிக் கொள்ளாமலே கூட்டாக வேட்டையாடும் கழுதைப் புலிகளுக்கு இது பொருந்தாதுதான்!

பேபில் மாளிகை கட்டத் துவங்கிய ஆதி மனிதர்கள். கட்டி முடிப்பதற்குள் பல்வேறு மொழி பேசி பிரிந்து போக கடைசிவரை அந்த மாளிகை கட்டப்படவே இல்லை என்று விவிலியம் (Bible) கூறுகிறது.

மொழி, செடிகொடி போல் வளருகிறது. மொழியின் தொற்றம் என்ன? வளர்ச்சி என்ன? என்றெல்லாம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் மொழி பேசுகின்றனர். செடி, கொடிகள் தாம் எப்படி தோன்றினோம் என்று அறிந்தா வளருகின்றன?மேலும் மக்கள் ஆதிகாலம் தொட்டு குடிபெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். போகுமிடத்திலும் மொழி வளருகிறது. போகுமிடத்து மொழி காலப்போக்கில் பொது மொழி ஆகிப் போகிறது. பொது மொழி பேசுவதால் எல்லோரும் ஒரு நிரை என்று ஆவதில்லை. பொது மொழி பேசினாலும் பேசுகிறவன் குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து, குடி பார்த்து, குடி பெயர்வின் அடி பார்த்து மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். சேர்க்க வேண்டிய மொழியே கடைசியில் மனிதர்களைப் பிரிக்கிறது. எல்லாம் மனிதனின் பார்வையைப் பொறுத்த விஷயம்!!

உண்மையைச் சொல்லப்போனால் மொழி என்பது ஊனுடன் உயிர் கலந்து இருப்பது போல் நம்மோடு கலந்து இருக்கிறது. மொழி இல்லையேல் மானுடம் இல்லை. மொழி என்ற விளை நிலத்தில் நாம் விதையாகத்தான் விழுகிறோம். மொழியில் வளர்கிறோம், மொழியால் வளர்க்கப்படுகிறோம். இந்நிலையில் மொழி என்பது வெறும் ஊடகம் என்பது போக ஒரு ஆன்மீக பரிமாணம் பெறுகிறது.

இதை திருமழிசை ஆழ்வாரின் ஒரு இயற்பாவில் காணலாம்:

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து


ஆழ்வார்கள் தமிழை எவ்வளவு உயர் நிலையில் வைத்து பார்க்கிறார்கள் என்பதற்கு விளக்கமாய் அமைகிறது இப்பாசுரம்.

இவ்வுலகிற்கும் உடலிற்கும் கதவாக மனது செயல்படுகிறது. மனது சொல்லித்தான் உலகில் எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. மனசில்லாமல் செய்யும் காரியும் உருப்படுவதில்லை. அதே நேரத்தில் மனது சொல்லும் எல்லாவற்றையும் செயல் படுத்தவும் முடிவதில்லை. அப்படியே மனது போனபடி செயல் பட்டாலும் செயலின் விளைவுகள் எப்போதும் நன்மையாய் முடிவதில்லை. எனவே மனதை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய படி. மனது நிலைப்பட்டு, தான்தோன்றித்தனமாக ஓடாமல், தன்னை தான் அறிந்து, தன் எல்லை அறிந்து நின்று விடுவது முதல்படி. அப்போது பிரபஞ்சம் அது, அது, உள்ளபடி கண்ணுக்குத்தெரியும். மனதின் வர்ணப்பூச்சு எதுவுமில்லாமல் உலகம் தெளிவாய் தெரியும் போது அதன் உள்ளுள் உறையும் உறவுகளும் சரியாய் புரியும். பிரபஞ்சம் முழுவதையும் இணைக்கும் ஒரு தொப்புள் கொடி கண்ணில் படும். இதை இறை அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்.

இதை திருமால் திருமழிசை ஆழ்வாருக்கு அருளுகிறார். எப்படி? தமிழ் என்ற மொழி மூலம்! கற்றமொழியாக இவர் ஊனுடனும் உயிரிடனும் கலந்து, இவர் உள்ளத்தை விளை நிலமாக்கி இறைமையை சாகுபடி செய்கிறார். தமிழின் பயனை இதற்கு மேலும் சொல்லமுடியுமா என்ன?

இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்.

Date: Sun, 07 Sep 1997 21:03:21 +0000

2 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Tuesday, February 12, 2008

அட!
மொழி மூலம் இறை உணர்தலா?
புதிதாக/வித்தியாசமாக இருக்கு.

  N.Kannan

Tuesday, February 12, 2008

காலை வணக்கம் குமார்! மொழியும், இறைமையும் ஒவ்வொரு மனிதனுள்ளும் ஊறிக்கின்றன என்பது சமகால அறிவியல் புரிவு. எவ்வளவு நாத்திகம் பேசினாலும், எவ்வளவு அறிவு ஜீவியாக இருந்தாலும் இவ்விரண்டின் தாக்கத்திலிருந்தும் மீளவே முடியாது. ஏனெனில், it is built in your program. An integral part of every one of us!