e-mozi

மடல் 007: சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?

பிரம்ம சூத்திர உரைகளில் திரமிடாசார்யார் (திராவிட ஆசாரியர்) ஒருவர் குறிப்பிடப்படுகிறார். இவர் திருமழிசைப்பிரானாக இருக்க வேண்டும் என்று பேரா.குப்புசாமி சாஸ்திரியார் கருதுகிறார். இவ்வாழ்வார் சமைத்துள்ள திருச்சந்த விருத்ததில் மலைக்க வைக்கும் சந்தங்களை ஆண்டுள்ள விதத்திலிருந்து இவரது ஆழமான சமிஸ்கிருத புலமையும் தெரியவருகிறது. இவர் கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி.பி.8ம் நு¡ற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.

தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதேசொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?

-திருச்சந்தவிருத்தம் 10,11

என்ன அழகான பாசுரங்கள்! சந்தத்தில், பொருளில், கவிதை அழகில்!

திரைகடலில் கிளர்த்து எழும் பேரலையானது எழுந்து, ஆர்ப்பரித்து, ஆடிக்களைத்து பின் அக்கடலிலேயே அடங்கிவிடுவது போல் இறைவன் என்ற ஒன்றில் பிறந்து, நின்று, திரிந்து,இறந்து பின் இறையினுள் அடங்கிவிடுகிறது என்கிறார்.

இது இந்திய ஞானிகளுக்கேயுரிய ஒரு பரந்த நோக்கு.

இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதை சொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!

ஊனில்மேய ஆவிநீ! உறக்கமோ டுணர்ச்சிநீ
ஆனில் மேய ஐந்தும்நீ; அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ
யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ, இராமனே!

-திருச்சந்தவிருத்தம் 94அத்தனாகி, அன்னையாகி, யாளுமெம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்து நம்மையாட் கொள்வான்
முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினா லிடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே!

-திருச்சந்தவிருத்தம் 115

என்ன எப்படி போகிறது சந்தம் பாருங்கள்! திருமழிசை - சித்தர்கள், அருணகிரி நாதருக்கு முன்னோடி! ஓடப்பர், உடையப்பர்....என்ற பராசக்தி வசனத்திற்கு முன்னோடி (சமயம் தவிர்த்து ஆழ்வார்கள் எம்மை ஆழ்பவர்களே! -கலைஞர் ஒரு பேட்டியில்)

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை
(3.77-80)

என்று பரிபாடல் திருமாலைப் பாடுகிறது (சங்கப்பாடல்). பாழ் என்றால் பூஜ்யம்; தொண்டு என்றால் ஒன்பது, பாகு என்றால் அரை. சங்கப்பாடல்களின் தொடர்ச்சிதான் பிரபந்தங்கள் என்று ஒரு கணக்கு. பரிபாடல் மாதிரியே புரியாத பாடலொன்றை (ஒன்றா?) திருமழிசையும் எழுதியுள்ளார். சாம்பிள்:

ஐந்துமைந்து மைந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே!
ஐந்துமைந்து மைந்துமாகி அந்தரத் தணைந்து நின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர் காணவல்லரே?


-திருச்சந்தவிருத்தம் 3இப்படியே ஒன்று, மூன்று, ஆறு என்று வகைக்கு ஒன்றாய் பாடி இருக்கிறார்!

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!!!

Date: Wed, 10 Sep 1997 17:01:11 +0000

12 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Monday, February 11, 2008

காலையிலேயே ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி.

ஆனால் "திருச்சந்தவிருத்தம்"- கேள்விப்பட்டதே இல்லை.

  N.Kannan

Monday, February 11, 2008

நன்றி குமார்:

காலை என்று சொல்வதால் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது:-)

திருச்சந்தவிருத்தம் முதலாயிரம் தொகையில் வருவது. "பூநிலாய வைந்துமாய்..." என ஆரம்பிக்கும் பாசுரத்துடன் ஆரம்பிக்கும்.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 11, 2008

//காலை என்று சொல்வதால் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது:-)//

குமார் அண்ணா சிங்கையின் சிங்கம்! :-)

திருமழிசைப் பாடல்களில் மட்டும் தானே கண்ணன் சார், இப்படி ஒரு சந்தம் இருக்கு? சும்மா டடங் டடங்-னு ஒலிக்குதே! திருப்பாணர் ஆச்சும் இசைக் கவிஞர், இசை ஆழ்வார்! திருமழிசையோ யோகி!! இவரு எப்படித் தான் இப்படிச் சந்தம் போட்டாரோ?

//ஐந்துமைந்து மைந்துமாகி அல்லவற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே!//

வெளக்கம் ப்ளீஸ்! :-)

  N.Kannan

Monday, February 11, 2008

ஓ! குமார் சிங்கையா? அடுத்தமுறை போகும் போது பிடித்துவிட வேண்டியதுதான் ;-)

சந்தம்...ம்ம்ம்..

இப்படியெல்லாம் மடக்குவீர்ன்னு தெரியாது ;-)

விளக்கம் 1.

பாணர் பாடியது மொத்தமே 10 தானா? கூட இருந்து கிடைக்காமல் போயிருக்கலாம். பல ஸ்துதி இல்லை பாருங்கள்.

விளக்கம் 2.

திருமழிசை காலம்?

அந்தாதி எனும் புதிய வடிவு நிலை கொள்ளும் காலம். இதை முதல் மூவரும், காரைக்கால் அம்மையாரும் சாதித்தனர் என்று சொல்வதுண்டு.

ஆனால் சந்தம்? அது பின்னாளைய பழக்கம் போல் தெரிகிறதே. சித்தர்கள் 10 நூற்றாண்டிற்குப் பின். அருணகிரி இன்னும் பின்னால்.

தமிழ் இலக்கிய வரலாறு படிக்க வேண்டும் இந்தப் புதிரை விடுவிக்க. திருமழிசையை முதல் மூவரின் சகா என்றுதான் சொல்கிறார்கள்.

  R.DEVARAJAN

Wednesday, June 11, 2008

அன்புள்ள திரு. கண்ணன் அவர்களுக்கு,
தன்னொப்பார் இல்லாத தலைவனின் தாள் இருக்கட்டும்; உங்கள் திருவடிகளை தர்சிக்க வேண்டும் போல் இருக்கிறது. அடியேனை அண்டம் கடந்து அழைத்துச் சென்று விட்டது உங்கள் எழுத்து.சிவ வாக்கியரும் சந்தத்தில் தான் பாக்களை அமைத்துள்ளார். அவரும், திருமழிசை ஆழ்வாரும் ஒன்றா? சமகாலத்தவரா?
askdevraj.blogspot க்கும் விஜயம் செய்ய வேண்டுகிறேன்.
தேவராஜன்

  நா.கண்ணன்

Wednesday, June 11, 2008

அன்பின் தேவராஜன்: மிக்க நன்றி. பாகவதர்கள் ஒருவர் பால் ஒருவர் அன்பு கொள்வது இயற்கை. வேங்கடேசனுக்கு மொவாக்கட்டையில் அடிபட்டவுடன் அதற்கான மருந்து 'பாகவத தூளி' என்றானாம், அனந்தாழ்வானிடம்! எந்த பாகவதன் பெருமாளுக்கு கால்த்தூசு தருவான்? அது அவரைக் குணப்படும் என்றாலும்!?

திருமழிசை வேறு, சிவவாக்கியர் வேறு.

உங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது.

  குமரன் (Kumaran)

Saturday, September 27, 2008

திருமழிசையாழ்வாரின் பாசுரங்களையும் பொருத்தமான மற்ற பாடல்களையும் நன்கு விளக்கினீர்கள் ஐயா. எனக்கும் திருச்சந்தவிருத்தத்தின் சந்தம் பிடிக்கும். சந்தம் மட்டுமில்லை சொல்லும் பொருளும் பிடிக்கும். :-)

திருமழிசையாழ்வார் முதல் மூவரின் தோழர்; சிறப்பாக பேயாரின் முயற்சியால் ஆழ்வார் ஆனவர் என்று தானே சொல்கிறார்கள். இவர் ஆழ்வார் ஆவதற்கு முன்னர் சிவவாக்கியராக இருந்தார் என்று சொல்லப் படித்திருக்கிறேன். சிவவாக்கியமும் இதே சந்தத்தில் அமைந்திருக்கும். அதைத் தவிர்த்து இருவருக்கும் ஒற்றுமை உண்டா என்று தெரியாது.

  நா.கண்ணன்

Saturday, September 27, 2008

திருமழிசை சிவவாக்கியராக இருக்கமுடியாது என்றும், திராவிட ஆச்சார்யரே என்றும் இப்போது விளங்குகிறது. ஏனெனில், பரம் எது என்று வேதத்தை வைத்து விளங்கிக் கொள்ள முடியாமல் விற்பன்னர்கள் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அவதரித்த இந்த மகான், "வெட்டொன்று, துண்டு இரண்டு" எனும் வகையில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் பரத்துவம் பற்றிய தெளிவைத் தமிழகத்தில் நாட்டியவர். இவருக்கு நிச்சயம் வேத பரிட்சயம் இருந்திருக்க வேண்டும். இவர் சித்தர் அல்லர். ஆச்சார்யர்.

  குமரன் (Kumaran)

Saturday, September 27, 2008

ஐயா,

சித்தர்களுக்கு வேத பரிட்சயம் இருந்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? சிவவாக்கியர் பாடல்களில் பலவும் வேதக் கருத்துகளைச் சொல்கின்றன என்றே நினைக்கிறேன்.

மரபுக் கதையின் படி சிவவாக்கியராக இருந்தவர் முன் செடியைத் தலைகீழாக நட்டு ஓட்டைப் பானையில் நீர் எடுத்து பேயாழ்வார் ஊற்றிக் கொண்டிருந்ததாகவும் அதைக் கண்டு சிவவாக்கியர் நகைக்க அந்த நகைப்புக்குப் பதிலாக பேயாழ்வார் 'நீர் செய்வதும் இப்படித் தான் இருக்கிறது' என்று சொல்லி அவரை வைணவராக்கியதாகவும் சொல்வார்கள்.

  நா.கண்ணன்

Saturday, September 27, 2008

//சித்தர்களுக்கு வேத பரிட்சயம் இருந்திருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?//

அப்படிச் சொல்ல வரவில்லை. வேதப்பொருள் பொதுவானது. அதை யாரும் கண்டு சொல்லலாம்.

ஆனால் சித்தர்களின் வரவு, நோக்கம், செயற்பாடு வித்தியாசமானது. திருமழிசையின் வரவு வேறுகாரணத்திற்காக. Popular belief ஒரு மாதிரி இருந்தாலும் வைணவ உரையாசிரிகள் திருமழிசையை வேறு கோணத்தில் காண்கின்றனர்.

  ரங்கா - Ranga

Thursday, October 09, 2008

உங்கள் பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. திருச்சந்த விருத்தத்தில் வரும்
சொல்லினால் தொடர்ச்சிநீ..." பாசுரப் பொருள்தான் லாவோ-ட்ஸேயின் புத்தகத்தில் (The Way)
முதல் செய்யுளாக வருகிறது - http://www.iging.com/laotse/LaotseE.htm#1. காலம், இடம் வேறுபட்டிருந்தாலும் இரண்டிலும் கருத்து ஒன்றே.

ரங்கா.
http://tseiching.blogspot.com/

  நா.கண்ணன்

Thursday, October 09, 2008

மிக்க நன்றி ரங்கா: மிக அழகான தொடுப்பொன்று கொடுத்து இருக்கிறீர்கள்!