e-mozi

மடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்

ஆழ்வார்கள் ஏன் இப்படி நெக்குருகி கண்ணா, மணிவண்ணா, முகுந்தா என்று புலம்புகிறார்கள் என்றொரு கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இதன் காரணத்தை புரிந்து கொள்ள கிமு 400- 200க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைப் பரிச்சியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியத்தையும், சமிஸ்கிருத இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்போடு இருப்பது அகத்திணை மரபாகும். சுருங்கச் சொல்லுவதானால் "அக மரபு என்பது மனித உறவுகளின் உன்னதத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்". அது காதலனைப்பிரிந்து காதலி பசலை கொண்ட செய்தியாக இருக்கலாம் அல்லது தன் அன்புக்குரிய குறுநில மன்னன் இறந்து வருந்தும் பாணனின் பாடலாக இருக்கலாம்.

இந்த இலக்கிய மரபைப்பற்றி ஆரிய மன்னன் ஒருவனுக்கு தமிழ் புலவர் ஒருவர் சொல்லுவதாக ஒரு சங்கப்பாடல்வருகிறது.

வேறு: குறுநில மன்னன் ஒருவன் இறந்து விடுகிறான். அவனது சபையில் வந்து பாடி, பொருள் பெற்று, அவன்பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த பாணனால் அத்துயரைத்தாங்கிக் கொள்ளமுடியவில்லை. புலம்புகிறான்-மல்லிகைச் செடியைப் பார்த்து! தலைவன் இறந்து விட்டான் இனி பெண்கள் வளையல் அணிய மாட்டார், மல்லிகை கொய்து பூச்சூடமாட்டர் எனவே மல்லிகையே இனி நீ பூத்து என்ன பயன்? என்று வருகிறது அப்பாடல்.

முல்லையும் பூத்தியோ?
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

இப்படி அதீத காதல் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது தமிழக மரபு. சங்கத்திற்குப் பிறகு களப்பிரர் ஆண்ட இருண்ட காலத்தில் இம்மரபு மறைந்து விடுகிறது. எழுநு¡று ஆண்டுகளுக்குப் பின் இம்மரபை உயிர்ப்பிக்கிறார்கள் ஆழ்வார்கள்.

"கோயில்" என்ற சொல்லைக்கவனியுங்கள். கோ+இல். அதாவது அரசன் வாழும் இல்லம். அரசனுக்கு உயர்ந்த இடத்தை பண்டைய தமிழகம் வழங்கியுள்ளது. காலப்போக்கில் அரசனைவிட இறைவனை அங்கு வைப்பது பொருந்தும் என்று தமிழகம் கருதுகிறது. அரசன் இருந்த இல்லம் கடவுளின் இல்லமாகிறது. அரசனைப்பாடிய புலவர்கள் இறைவனைப் பாட தலைப்படுகின்றனர். காதலன் வரவை எதிர்பார்த்து பசலை பூத்து நிற்கும் காதலிக்குப்பதில் இறைவனை நாயகனாக வைத்து காதலியாகி கசிந்து உருகுகிறார்கள். அக மரபின் தொடர்ச்சியாக"பக்தி மரபு" வருகிறது. பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடு.

சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும். இந்தக் காதல் உணர் வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி. நிரந்தரமில்லாத மனிதர்களிடம் வைக்கும் காதலை விட எப்போதும் இருக்கும் இறைவனிடம் வைக்கும் காதல் நிரந்தரமாக இருக்கிறது. அதாவது ஒருவன் சாகும் வரை காதல் செய்யலாம் (வாவ்!) இக்காதல் கவிதைகள்தான் பக்தி இலக்கியம்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் கவிதைகளுக்கும் மட்டும் "கண்" வேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. பக்தி இலக்கியத்தை இந்த நோக்கில் பார்த்தால் இரசிக்க முடியும். காதல் உணர்வு அற்றவர்களால் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்று நெக்குருக முடியாது. பாரதி "என் கண்ணின் பாவை" என்கிறான். ஆழ்வார்கள் "என் உள்ளத்தின் உயிரே!" என்கிறார்கள். ஒரே மரபு. அக மரபு. அது தமிழ் மரபு. தமிழின் மீது பற்று கொண்டவர்களால் இத்தனித்தமிழ் மரபை புறக்கணிக்க முடியாது. ஆழ்வார்களால் முடியவில்லை, பாரதியால் முடியவில்லை.

அன்று தமிழ் மண்ணில் தோன்றிய அக மரபு, பக்தி மரபாக மாறி மெல்ல, மெல்ல இந்தியாவை ஆட்கொள்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் செய்த கிருஷ்ணபக்தியை பின்னால் இராஜஸ்தானில் மீரா செய்கிறாள். வங்காளத்தில் கிருஷ்ண சைத்தன்யர் செய்கிறார். பின்னால் இராமகிருஷ்ணர் செய்கிறார். நரசிம்ஹ மேஹ்தா செய்வித்த "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை வைத்து காந்தி பக்தி செய்கிறார். சைத்தன்யரின் வழிவரும் பிரபு பாதா, இஸ்கான் இயக்கத்தை தொடங்கி உலகை பரவசப்படுத்துகிறார். இதெற்கெல்லாம் ஆதாரம் சங்ககாலத்தில் தோன்றிய அகத்திணை மரபுதான். அது தமிழ் மரபு. சமிஸ்கிருதத்தில் இல்லாத மரபு.

இம்மரபின் தொடர்ச்சி இன்றும் தமிழகத்தில் வாழ்கிறது-பல்வேறு ரூபங்களில்! ஆழ்வார் வழியில் பக்தி செய்த கடைசி தமிழ் கவிஞன் பாரதி. அதன்பின் இந்த அதீத காதல் உணர்வு சுதந்திர உணர் வுடன் சேர்த்து வைக்கப் படுகிறது (வந்தே மாதரம்!). தாய் நாட்டின் கொடிக்காக உயிர் துறக்கிறான் திருப்பூர் குமரன். இக்காதல் பின்னால் மொழியின் மீது வைக்கப்படுகிறது. தமிழுக்காக தீக்குளித்தவர்கள் பலர். கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்திற்காக தண்டவாளத்தில் தலையை வைத்து மாய்க்க தயாராக இருந்தார்கள்! அதீத காதல், அக மரபு, தமிழ் மரபு!

இந்த வீரத்தமிழர்களுக்கு முன்னோடியாக இருந்த ஒர் தமிழனின் சொல் கேளீர்:

செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்
செய்மின்; திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
நின்றார் அறியாவண்ணம்
என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு
தானேயாகி நிறைந்தானே
நம்மாழ்வார் திருவாய்மொழி
(10-1)


இது காதல், இது கவிதை, இது அகம், இதுதான் பக்தியும்!Date: Tue, 16 Sep 1997 21:46:51 +0000

7 பின்னூட்டங்கள்:

  வல்லிசிம்ஹன்

Sunday, February 10, 2008

நானும் வெகுகாலம் இதைப் பற்றி
நினைத்திருக்கிறேண். எதற்காகப் பராங்குச நாயகியாக உருமாறிக் காதலிக்க வேண்டும் என்று.

இப்போது கொஞ்சமாவது புரிகிறது.
நன்றி.

  N.Kannan

Sunday, February 10, 2008

நன்றி,

//இந்தக் காதல் உணர்வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி//

நிரந்திர வஸ்துவின் மேல் வைக்கும் காதலும் நிரந்தரமாகிவிடுகிறது. காதல் இருக்கும் வரை வாழ்வு ருசிக்கிறது. வாழ்வு ருசிக்கும் போது ஆர்வம் பிறக்கிறது. ஆர்வமிருக்கும் இடத்தில் அன்பு வந்து சேர்கிறது. அன்பு இருக்கும் இடத்தில் பகையின்றி சாந்தம் குடிகொள்கிறது. சாந்தம் இருக்கும் போது வாழ்தல் இனிக்கிறது. அப்புறம், தேனே, பாலே, கன்னலே, அமுதே...இப்படித்தான். ஆகவே, காதல் செய்வோம் வாரீர், அதாவது பக்தி செய்வோம் வாரீர். இதுதான் ஆழ்வார் பார்முலா :-)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 11, 2008

//காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும்//

ஓ...இது தான் விசயமா கண்ணன் சார்?
உன் முகத்துல அப்படி ஒரு பொலிவு-ன்னு ஊர்ல பல பேரு - குறிப்பா மாதர் குல மாணிக்கங்கள் சொல்வாய்ங்க! இது இப்போ நல்லாவே புரியுது! :-))

  N.Kannan

Monday, February 11, 2008

ஹா!ஹா!!

என் குழைந்தப் பருவம் அப்படியே கோகுலம். வாரி, வாரி அன்பு செய்தார்கள், என் பெயர் கண்ணன் என்பதால். அது மீண்டும் வாராது!!

அந்தப் பொலிவுதான் இன்னும் நிற்கிறது போலும், இந்த வரண்ட காலங்களிலும் ;-)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 11, 2008

காதல் இருக்கும் இடத்தில் மிக முக்கியமான ஒன்று....
Hate என்னும் வெறுப்பு இருப்பதில்லை!

காதலி அருகில் இருக்கும் போது பாருங்கள், மல்யுத்தப் பயில்வான் கூட ஜென்டில்மேன் தான்!

வெறுப்பின்மையால், கோபம், கொடூரம், மதம், ஆணவம் என்று எல்லா நெகட்டிவ் குணங்கள் அடங்கி உட்கார்ந்து கொள்கின்றன! உனக்கு நான் - எனக்கு நீ என்னும் அன்பு ஒன்றே தூக்கலாக இருக்கும்!

அதனால் தான்
"காதலாகி" கசிந்து கண்ணீர் மல்கி-ன்னு பக்தி இலக்கியம் பேசியது!

நாயகன்-நாயகி பாவம், காப்பு மறந்தறியேன், கண்ணனே என்றிருப்பேன்-ன்னு உருகியதெல்லாம் இதனால் தான், வல்லியம்மா!

எல்லாரும் காதலிக்கத் தொடங்கி விட்டால் சமூகத்தில் வெறுப்பின்மை போய் விடும்! ஆதலினால் காதல் செய்வீர்! :-)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 11, 2008

//அந்தப் பொலிவுதான் இன்னும் நிற்கிறது போலும்//

அலோ...
நான் என்னைச் சொன்னேன்! :-))

ப்ளஸ் டூ படித்த போதும், என்னைக் கொஞ்சி மகிழ்ந்த, இன்னும் மகிழ்ந்து கொண்டிருக்கும் மாதர் குல மாணிக்கங்களைச் சொன்னேன்! நீங்க சந்தில் சிந்து பாடக் கூடாது கண்ணன் ஐயா! :-))

  N.Kannan

Monday, February 11, 2008

ஓ..ஓ! ஹால்ட்...

அதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்தானே ;-)

போனா போறது, இரண்டு பேரிலேயும் கண்ணன் இருக்கான். அவன்தான் ஒரிஜினல் மாஸ்டர். நாமெல்லாம் டூப்ளிகேட்தான் !!