e-mozi

மடல் 009: சாதிகள் இல்லையடி பாப்பா!

திவ்யப்பிரபந்தங்கள் ஆழ்வார்களின் ஆழ்மனக் காதலை வெளியிடும் ஊடகங்கள் என்று கண்டோம். அவை பண்டைய அக வழி மரபு என்றும் கண்டோம். சங்க கால இலக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்துபவர்கள் பாணர்கள் ஆவர். வைணவ இலக்கியங்களிலும் பாணர் ஒருவர் வருகிறார். அவர் பெயர் திருப்பாணாழ்வார் என்பதாகும். சங்ககாலத்தில் மதிப்பிற்குரியவாராக வரும் பாணர்கள் ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் இழிசனம் ஆகிவிடுகின்றனர். சாதி என்பது ஒரு சமூக அடையாளம். தன்னை யார் என்று உண்மையாய் உணராத வரைக்கும் தனி மனிதனுக்கு சாதியக் குறியீடு தேவைப்படுகிறது. ஆழ்வார்கள் தம் ஆழ்நிலை அனுபூதி நிலைகளில் மானிடத்தின் உன்னத பரிமாணத்தை கண்டவர்கள். அவர்களுக்கு எந்த சாதீய அடையாளமும் தேவையில்லைதான். எனினும் சாதீய வழிமுறைகளில் ஊறிப்போன பாழ்பட்ட சமுதாயம் அத்தகைய உன்னத மனிதர்களையும் சாதீயக் கண்ணாடி போட்டுத்தான் பார்த்தது, பார்க்கிறது. திருப்பாணாழ்வார் வாழ்விலும் இது நடந்தது.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உறையூரைச் சார்ந்தவர் திருப்பாணர். சமூக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த அவர் திருவரங்கனை மட்டும் துணையாக் கொண்டு வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு மெய்மறந்த நிலையில் வழி பட்டுக் கொண்டிருக்கும் போது லோக சாரங்கர் என்ற அந்தணர் இவரைக் காண நேரிடுகிறது. தம் வழியில் தடையாக நிற்கும் "தீண்டத்தகாதவரை" விலக்க அவர் மீது கல் எறிகிறார். நெற்றியில் கல் பட்டு இரத்தம் வழிகிறது.

இதன்பின் நடந்த சம்பவங்களை இருவேறு முறைகளில் சொல்லுகிறார்கள். சரித்திரத்தை நம் முன்னோர்கள் என்றும் நேரிடையாகச் சொன்னதில்லை. அப்பழக்கம் முகம்மதிய, ஆங்கில ஆட்சிகளுக்குப் பிறகுதான் வருகிறது. சரித்திரம், ஐதீகம் (Myth), புராணம் இவை அதிக வித்தியாசம் இல்லாமல்தான் தமிழக மண்ணில் உலாவுகின்றன. இதை ஆழ்மன வெளியீட்டின் குறியீடாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது. அரசாள்பவன் சரித்திரம் செய்வதற்கும், அடிமட்டத்து பாமரன் சரித்திரம் சொல்லுவதற்கும் இடையிலுள்ள பாரிய வித்தியாசமிது! (உம். கி.ராஜநாராயணன் - கோபல்லகிராமம்; Gabriel Garcia Marquez - One hundred years of solitude).

1. அந்தணர்கள் கோயிலுக்கு திரும்புகின்றனர். அரங்கனை நீராட்டும் போது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிகிறது. ஏதோ தவறு நடந்துவிட்டது என உணரும் தறுவாயில் அசரீரி மூலமாக அரங்கன் திருப்பாணாழ்வாரை அந்தணர் சுமந்து வர கோயில் உள் சந்நிதிக்கு வரச் சொல்லுகிறார்.

2. லோக சாரங்கர் வீடு சென்றதும் இரவில் கனவில் வந்த அரங்கன் திருப்பாணாழ்வாரை சுமந்து கொண்டு மறுநாள் கோயிலுக்கு வரச்சொல்லுகிறார். இது ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சியாகும். ஏனெனில், ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தை பாசறையாக் கொண்டு ஒரு பெரிய சமூகப்புரட்சிக்கு வேறிட்டனர். ஒன்று, "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை" என்ற முழக்கம். இரண்டாவது, தமிழ் என்பது "நீச பாஷை" அல்ல, அது வேதம் சொல்லத்தக்க செம்மொழி என நிறுவுவது (வேறொரு வகையில் பார்த்தால் தாய் மொழியில்தான் அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை முழக்கம்). திருப்பாணாழ்வாருக்கு நிகழ்ந்த இழி செயல் தொண்டரடிப்பொடியாழ்வார் என்ற "அந்தணரை" எப்படிப் பாதித்து இருக்கிறது என்பதைப் பாருங்கள்:

பழுதிலா வொழுகலாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழி குலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தோழுமின், கொடுமின், கொள்மின்!
என்று நின்னொடு மொக்க
வழிபட வருளினாய் போன்ம்
மதிள் திருவரங்கத்தானே!

அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!


எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! அங்கு சாதியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.

இக்கவிதை வரிகளை அப்படியே செயல்படுத்திய மற்றோர் உத்தம வீரர் ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1017). பஞ்சமர்கள் என்று எந்த சாதியிலும் அடங்காத அப்பாவி மக்களை "திருக்குலத்தோர்" என்றாக்கி, அவர்களை "முதல் தீர்த்தக்காரர்" களாக்கியது இராமானுஜ மாமுனி! இவர் மனித நேயம் இந்தியர்களையும் கடந்து துருக்கிய பெண்ணை தத்து எடுக்க வைத்து அவளையும் அடியார் கோஷ்டியில் சேர்த்தது (துருக்க நாஞ்சியார்). இவருக்கு மிகவும் அபிமான ஆழ்வார்கள் திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும். இவருக்கு "ஆண்டாள் ஜீயர்" என்ற பெயரும் உண்டு. இவர் காலத்தில்தான், நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் ஆண்டவன் மொழியாகி, முதல்வனுக்கு முன் செல்லும் மொழி ஆயிற்று. (இராமாநுஜரை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்கள்: இந்திரா பார்த்தசாரதி -இராமாநுஜர் நாடகம்; சாண்டில்யன் - மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்). இந்த மாமனிதனை சமூகம் காண்பது "பார்ப்பனர்" என்றுதான்!

கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ அறிஞரும், தருக்க நெறியாளரும், கவிஞருமான வேதாந்த தேசிகர் திருப்பாணாழ்வார் செய்வித்த பத்து பாசுரங்களுக்கு உரை எழுதியுள்ளார். (எல்லோரையும் விட்டு இவருக்கு உரை எழுதியது கருத்தில் கொள்ள வேண்டியது). பக்தி இயக்கத்தின் மேன்மையையும், திருமாலுக்கு அடிமை செய்யும் அடியார்களிடையே சாதீயம் கிடையாது என்பதை தொண்டரடிப்பொடி இப்படிச் சொல்லுகிறார்:

அடிமையிற் குடிமையில்லா
அயல் சதிப் பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய் கழற் கன்பு சேய்யும்
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகருளானே!


ஆழ்வார்களின் வழி சமதர்மம், சமநீதி, மானுட மேன்மை, மனித நேயம். இதற்கு அடிப்படைத் தேவை மானிடர்பால் அன்பு. அன்பு..அதுதான் இவ்வியக்கத்தின் அடிநாதம்!!

Date: Sun, 21 Sep 1997 19:47:53 +0000

12 பின்னூட்டங்கள்:

  வடுவூர் குமார்

Saturday, February 09, 2008

வாவ்! அருமையாக இருக்கு.
(பயர்பாக்ஸில் உங்கள் எழுத்துக்களின் அளவு குறைவாக இருக்கு.)

  N.Kannan

Saturday, February 09, 2008

வாங்க, குமார். நலமா?

பிரச்சனை புளோக்கரில் இருக்குமோ?

  செந்தழல் ரவி

Saturday, February 09, 2008

மிக விறுவிறுப்பாக கொண்டுசொல்கிறீர்கள் கண்ணன்...

!!+

  செந்தழல் ரவி

Saturday, February 09, 2008

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலும் எழுத்துக்கள் குட்டி குட்டியாகத்தான் தெரிகின்றன...

  N.Kannan

Saturday, February 09, 2008

நன்றி ரவி!

உங்க டூப்ளிகேட் வராம இருந்தாச் சரி :-)

எனது IE-ல் ஒழுங்காகத் தெரிகிறதே! ம்...

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, February 09, 2008

சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப் பள்ளிகொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே!

பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழிகுலமும் இழி தொழிலும் படைத்தோரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்!!

அடியார்களின் குலத்தைச் சோதிப்பவன் பெற்ற தாயை யோனிப் பரிசோதனை செய்பவனுக்கு ஒப்பாவான் என்று இராமானுசர் வாயால் இப்படி ஒரு வார்த்தை சொல்லணும்னா எவ்வளவு போராடி இருக்க வேண்டும்?

திருவரங்கத்தை நடுவில் வைத்த நடந்த சாதிப் புரட்சியும், மொழிப் புரட்சியும், இரண்டு பெரும் சமயப் புரட்சிகள்!
இதைத் திருப்பாணாழ்வார் கதை கொண்டு நன்கு விளக்கியிருக்கீங்க கண்ணன் சார்!

  N.Kannan

Saturday, February 09, 2008

அருமையான சேர்க்கை கண்ணபிரான். மிக்க நன்றி.
ஸ்ரீவசன பூஷணத்திலிருந்து மற்றொரு சுவாரசியமான மேற்கோளை வேறொரு மடலில் இட்ட ஞாபகம். திரௌபதி சராணாகதி பண்ணும் போது அவளுக்கு மாதவிடாய் காலம். அதைப் பொருட்டாகக் கொள்ளாமல் பரந்தாமன் அவளுக்கு அருள் பண்ணினான் என்பதைச் சுட்டுவதன் மூலம் ஆரிய விழுமியம் என்று தலித் போராளிகள் சுட்டும் "சுத்தம்" என்பதை வைணவம் மறுதலிக்கிறது என்பதும் சுவையான விஷயம்.

  Nair

Friday, February 15, 2008

Apologies for not writing this response in Tamil as I dont know how to type in Tamil here.

When I first opened your blog and this topic, in particular, I thought you would be one of those who will try to white-wash the ignoble act of the Loga Saranga Muniver, in order to please the brahmins. I say this, because, many brahmins feel uncomfortable with the episode of Thiruppanar vs. the Chief Priest of Srirangam Temple, the said Muniver.

Whether you believe me or not, I have come across writings where some say Thondariappodi must have been born in a low caste; otherwise, he would not have written such 'offensive' paasurams!

In the episode of Thiruppanaar, the Chief Priest did not actually pelt the stones on the aazhwaar, but his disciples did at his order. He would go to the banks of Kaveri for his morning ritual bath accompanied by his disciples everyday.

We can appreciate the tragic intensity of the episode if we bear in mind that the Chief Priest was no ordinary person - not so much because he was the CP as because he was held in much reverence and esteem by the brahmins of Srirangam and the locals for his erudition and spirituality. Such a Muniver is 'used' by the Lord Ranganathar to teach a lesson to those brahmins and others who erroneously and arrogantly (as you correctly wrote) thought that God treat people inequally and our caste decide our places before God.

Please be aware of another thundering episode in Tamil Vaishnavism, which is also a good lesson to those brahmins and others. The episode involved another dalit, in this case, he is taken to be a pukka 'chandaalar' as the dalits were called in those days.

He was from the cheri of Thirukkurungudi. His time predate all aalwaars. Aaathikaalam. He used to shower the Thirukkurungudi perumaal with his paasurams everyday. But, being a chandaalar and being proscribed by the religion not to enter the town, he used to enter it when the whole town was asleep at night, and stand in front of the temple to worship the Lord with his paasurams.

He was attacked by a brahmin. But was rescued by the Perumal from being devoured by the brahmin at the last moment. It is an allegorical story involving a chandaalar and a brahmin. The story ends with a stinging lesson to those brahmins and others - the same lesson as taught in the story involving Thiruppanar. The story is recorded in Varaaha Puraanam.

I have written the story in Tamil in the Karuthu.com forum, with the nickname, Thirupathi. You could kindly go there and read. I also wrote there about the humiliation heaped on Thirumazhisai aalwaar, by the Irumbuluyoor brahmins, but they later reformed themselves and became the lovable followers of the aazhwaar. Unlike today, the caste of anyone, let alone a popular personality like an aazhwaar, could not be hidden from public sight. Thirumazhisai aazhwaar had made the mistake of revealing his caste (panchamar) by writing a paasuram, beginning:

'kulangalaaya iirirendilum...."

That was why, every brahmin of his time came to know who he was.

The name of the aazhwaar in the Thirukkurungudi episode is Nambaaduvaan.

I halted all my talk about Aaazhwaars because of the veiled and open protest by some of the brahmins writing there. One even questioned me what authority has been invested in me, and who has invested in me, to write about all these things. One fellow got so much infuriated with the Nambaaduvaan episode that he told me I am spitting at the brahmins. They thought I was using the aazhwaars to attack the brahmins as a community.

I very much appreciate your noble concern to bring 'inclusiveness' to the Tamil Vaishvaism. I also appreciate the blog run by the youngman, ravishankar. I have occasion to browse the so-called aanmigam blogs, those dwelling upon the Tamil Vaishnavism only, to see any brhamin fanatic is lurking there. Thanks to the blessings of Thirukkurungudi perumal, I am yet to see anyone. All of them are writing in their blogs with the noble intention I have ascribed to you. We dont have a community called brahmin, or dalits,or any other. As Azhwaarkalukku adiyaars, we are one community only.

Please keep it up, all of you.

  N.Kannan

Friday, February 15, 2008

நன்றி நாயர்:

விரிவாக பல கருத்துக்களைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். பிராமண சமூகம் ஏன் உங்கள் கருத்துக்களுக்குக் கோபப்பட வேண்டுமென்று தெரியவில்லை. பிறப்பால் யாரும் உயர்ந்து விடுவதில்லை. ஆனால், செயலால் உயர்ந்தோருண்டு. வேதம் ஓதி, பிரம்ம விசாரத்தில் ஈடுபட்டு இருந்தவரை அவன் உயர்ந்தோனாக இருந்தான். எப்போது அந்த உயரிய ஒழுக்கம் தவறிக்கெட்டதோ அப்போதே அவன் சுமூக மதிப்பீட்டில் வீழ்ந்துவிடுகிறான். குறைந்த பட்சம் பொன்னரங்கம் போற்றுதலாவது இருக்க வேண்டும். அதுவும் போச்சு என்கின்றபோது அவர்தாம் புலையர்தாமே! வெட்கமே படாமல் சொல்லிக் கொள்ளலாம். அதுதான் உண்மை.

  nAradA

Wednesday, June 18, 2008

It is rather strange that the casteism of the old times is rearing its ugly head in other forms too nowadays. The true identity of anybody is always in question. You are always evaluated these days by what you do for a living. That is because in the multitude of people how is one to recognize the true greatness of the individual? They don't make great souls in any quantity these days. They are all in the past. The only way to evaluate people these days is how much they make, what kind of car they drive, and what kind of house they live in. Pathetic , is it not?

Regarding the greatness of the devotee (although born in a "nIca " kulam) we have a similar pAsuram in tEvAram by appar.(tirumuRai VI , 95th decade, stanza 10) Let me reproduce it here:
sanganidhi padumanidhi iraNDum tandu
taraNiyoDu vAnALattaruvarEnum
manguvAr avar selvam madippOmallOm mAtEvark kEgAndha rallArAgil
angamellAm kuRaindazhugu tozhunOyarAy
Avurittut tinRuzhalum pulaiyarEnum
gangaivAr saDaikkarandRk kanbarAgil
avarkaNDIr nAmvaNangum kaDavuLArE

Once again this pAsuram is in simple language and so lucid that makes you cry!

  நா.கண்ணன்

Thursday, June 19, 2008

மிக்க நன்றி நாரதரே: தமிழில் உள்ளிடுவதில் என்ன பிரச்சனை? எனக்கு ஆங்கிலத்தில் எழுதினால் தமிழைப் புரிந்து கொள்ளச் சிரமம். அருமையான பாடலென்று தெரிகிறது. மெனக்கிட நேரமில்லை! மன்னிக்க.

  nAradA

Monday, July 21, 2008

I do not have a facility to type in Thamizh normally. I did this tEvAram of appar in Roman script and used a transliterator software to convert it in Thamizh script. Here you go!

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத்தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்லாராகில்
அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தாற்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே