e-mozi

மடல் 010: என் அமுதினைக் கண்ட கண்கள்

பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை. அழகுணர்ச்சி. வாழ்வை ரசிப்பதற்கு கண்ணனைக் கருத்தாகக் கொள்கின்றனர்,

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண் தோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.


நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி (73)

அதாவது கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும், மருவிலும், தேனிலும், தேன் சிட்டிலும், மண்ணிலும், மனிதருள்ளும் அகப்பொருளாய் (ஆந்தர்யாமியாக) அவன் இருக்கிறான்.

இந்த நோக்கின் பின்னால் கூர்ந்து கவனித்தால் பெரும் புரட்சிக்கான மனோதிடம் ஔ¢ந்து இருப்பதைக் காணலாம். அதாவது, திருப்பாணாழ்வாரை இழிசனம் என்று சாதீயம் ஒதுக்கியது. அவர் மனம் தளரவில்லை. மாசு நிறைந்த மானிடர் மேல் காதல் செய்வதற்குப் பதில் அவர் தன் காதலை மானிடர்க்கும் முதலான கண்ணனிடம் திருப்பினார். ஒன்றில்லாவிடில் மற்றொன்று! குறை ஒன்றும் இல்லை. மனம் தளர்ந்து விடுவதில்லை. இது முக்கியம்.

ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.இந்த இரண்டு புரட்சிகரமான போக்குகளுக்கும் அரங்கனின் ஆசி கிடைக்கிறது! அதுதான் இதில் விசேஷம்! அத்தனை ஆழ்வார்களிலும் இந்த இரண்டு புரட்சிவாதிகளும்தான் அரங்கனுடன் சங்கமித்தவர்கள். இதில் உள்ள நயம் உங்களுக்குப் புரிகிறதா?

திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தான் செய்வித்தார். புலவர் வழக்கபடி பத்துப் பாடல் பாடிவிட்டு, பல ஸ்துதி என்று கடைசியாக ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதில் பாடியவர் பெயர், பாட்டினால் வரும் நன்மை சொல்லப்படும். திருப்பாணாழ்வார் இம்மரபை கை விடுகிறார். முத்துப் போல் பத்துப்பாடல்களில் கண்ணன் மேல் காதல் கொண்டு அடி முதல் முடி வரை பாடி விட்டு, மெய் மறந்து, பாடியவரே இல்லாமல் செய்து விடுகிறார். இது காதலின் உயர் நிலை! காதல் "செய்பவர்" என்பது கூட இல்லாமல் வெறும் காதலே காட்சியாக நிற்பது!!

அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள ரங்கத்தம்மான் திருக்
கமல பாதம், வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே(1)

கண்ணனை விளிக்க எத்தனை சொற்களை பாவிக்கிறார் பாருங்கள்: அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர் கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், ..இப்படி. கண்ணதாசன் சொல்லுவானே," ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே" என்று. அது போன்ற ஒரு நிலை. நீதி வானவன் என்ற பதத்திலிருந்து அவருக்கு இழைக்கப் பட்ட பிழைக்கு நீதி வழங்கப்பட்டது எனத் தெரிகிறது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே (9)

ஆலை இலைக் கண்ணன் உருவகம் பாருங்கள்! உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும்உண்டான்) பாலகனாய் சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கணணன் ஊழிக் கூத்தின் கடைசியில்! பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. கள்ளமற்ற குழந்தையாக காண்பிப்பது, உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்ட. இதையே கவி கம்பன்,

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.


என்பார். இப்படி சக்தி வாய்ந்த இவனது அழகிற்கு ஓர் முடிவு உண்டோ? "முடிவில்லதோர் எழில் நீலமேனி" என்கிறார். முர்ச்சையாகும் நிலை. வார்த்தை வரவில்லை. கவிஞர் தடுமாறுகிறார். ஐயோ!என் நெஞ்சு நிறை கொண்டதே என முடித்து விடுகிறார். அவருக்கு அப்போதிருந்த அருள் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!ஆழ்வார்கள் அழகின் ரசிகர்கள். அழகை அழகுக்காகவே ரசித்தார்கள். இதன் முத்தாரமாய் விழுகிறது பத்தாவது பாடல்:

கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!(10)


ஆழ்வாரின் அருள் அனுபவம் அவர் நாவிலிருந்து பாலாய், தமிழாய், பரம கவிகளின் இசையாய் பீரிட்டுக் கொண்டு பாய்கிறது இப்பாசுரத்தில்! அழகு, இனிமை, இறைமை இவை சேர்ந்த கலப்பில் பாணரின் பாடல்கள் படிப்பவரின் உயிரை உருக்குவதாய் உள்ளன.

Date: Tue, 23 Sep 1997 19:02:49 +0000

4 பின்னூட்டங்கள்:

  Anonymous

Friday, February 08, 2008

Dear sir
The vedas has two eyes-Paraman and his devotees; This has been explained well in the above;Devarer vazhga!! ..Sreedhara

  N.Kannan

Friday, February 08, 2008

Thanks!

  enRenRum-anbudan.BALA

Friday, February 08, 2008

கண்ணன் சார்,

அமலனாதிபிரானின் பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களை, மிக அருமையாக விவரித்துள்ளீர்கள் !

திருப்பாணாழ்வார் மற்றொரு பாசுரத்திலும், அரங்கனின் பேரழகைப் பருகிய உவகையில் "ஐயோ" என்கிறார் !

கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

திருமலை நம்பிகள் அருளிய அமலனாதிபிரானின் தனியனும் அழகு !

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி,
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து,
பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே.

நண்பன் தேசிகனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பெயர் "அமுதன்" :)

வைணவம் சார்ந்த எனது இடுகைகளை இங்கு காணலாம்.

http://balaji_ammu.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

சமயம் கிடைக்கும்போது வாசிக்கவும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

  N.Kannan

Saturday, February 09, 2008

நன்றி பாலா!

இது 10 வருடங்களுக்கு முன் எழுதியது! அக்காலக்கட்டத்தில் நான் தேசிகனைப் பார்த்தபோது அவருக்கு மணமாகவில்லை. இப்போது ஆண்டாள், அமுதன் என்ற இரு தனக்காரர் ஆகிவிட்டார். வாழ்க.

உங்கள் வலைப்பதிவு சென்று பிரம்மித்தேன். எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மிக நல்ல பதிவுகள். அருமையான படங்கள். நான் தென்பாண்டி நாட்டுக்காரன். எனவே திருமோகூர் என்றவுடன் எம் காளமேகம் நோக்கிக் கைதொழுதது. தொடர்ந்து எழுதுங்கள். இதுவே நாம் செய்யும் கைங்கர்யம் (வாசக கைங்கர்யம்).