e-mozi

மடல் 012: இதத்தாய் இராமானுசன்!

வேதங்களை காட்டிற்கு உவமை கூறும் ஒரு பழக்கம் உள்ளது. "வேதாரண்யம்" என்ற பெயர் அப்படித்தான் தோன்றுகிறது. காடு என்றால் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும். வாசனை பூச்செடிகள் இருக்கும். உயிர் காக்கும் மூலிகைகள் இருக்கும், முட் புதர்களும் இருக்கும்.
காடு இப்படி எதிர் மறையான உணர்வுகளைத் தோற்றுவிக்க கூடியது. ஆச்சர்யம்/பயம் கலந்த உணர்வுகள்.வேதங்களை தன்னிச்சையாக மனிதன் இயற்கையுடன் ஒன்றிய தருணங்களில் கிடைத்த உண்மைத் தரிசனங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேதத்தின் அடிநாதம், மனிதன் தொடங்கி உலகத்தின் அத்தனை நிகழ்வுகளுக்கும் ஓர் காரணியைக் காட்டுவதுதான். சாராம்சத்தில் வேதம் மனிதனை ஒருவருடன் ஒருவர் இணைப்பதுடன், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள ஆழ்ந்த தொடர்பை மீட்பித்து அவனை மகிழ்வாக வாழ வைக்கும் நோக்குடன்தான் எழுதி வைக்கப்பட்டது.

பயனுள்ள எதையும் மனிதன் கடைசிச் சொட்டுவரை சுவைத்து முடித்து விடுவதுதான் இதுவரை வழக்கமாய் உள்ளது. ஆயிரம் உதாரணங்கள் தரலாம். வேதத்தின் அடிப் பயனை தெரிந்து கொண்ட மனிதன் அதை அதீதமாக பயன்படுத்த, வேதம் வழிகாட்டலை விட்டு வழிபடும் பொருளாகிப்போகிறது. வழிபடுவதற்கு சடங்குகள் தேவை. ஒரு நிலையில் வேதம் மறைந்து சடங்குகள் மட்டும் நிற்கும் நிலை வந்தது. வேதம் வியாபாரம் ஆகிப் போனது. வேத வியாபாரிகள் நல்ல வாழ்வு கொண்டனர்.

இப்படி இந்திய சிந்தனை ஓட்டமும், தத்துவத் தேடலும் அற்று உறைந்து நின்ற காலத்தில் தோன்றினான் சித்தார்த்த கெளதமன் என்ற புத்தபிரான். இப்படி சடங்குகள் நிரம்பி நின்ற வேதபாராயணம் வேண்டுமா என்ற புரட்சிகர கேள்வியை முன் வைத்தான். உண்மையை வேறு வழிகளில் கண்டுகொள்ள முடியாதா என்று ஆராய்ந்து புது வழி சொன்னான். வழி வழியாக சமயத் தத்துவ விசாரணைகள் ஆரியத்தில் (சமிஸ்கிரதம்) எழுதப்பட்டு வந்த போது, மக்கள் மொழிகளில் தன் போதனைகளை எழுதிவைத்தான் புத்தன். ஆரிய மாயையை முதலில் உடைத்தவன் அவன். இவன் கற்பித்த வழிமுறை இந்தியா தாண்டி எங்கெங்கோ (ஜப்பான், சீனா...) போனது சரித்திரம்.

புத்தன் "கடவுள்" என்ற கருத்தைப் பற்றி ஆழ்ந்த மவுனம் சாதித்து இருந்த போதும், அவனே கடவுளாக்கப் பட்டான் கால ஓட்டத்தில்! மரியாதை கருதி இந்தியர்கள் செய்யும் இக்காரியத்தில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்ன பெரியாரை ஒரு வழிபடு பொருளாக மாற்றி வைத்திருக்கும் தமிழகத்தைப் பார்த்தால் அவரது அடிப்படை போதனைகளே கேள்விக்குறியாக ஆகிவிடுவது இச்செயலின் தீமை! இப்படித்தான் புத்தன் கதையும் ஆனது. புத்தம் அதன் சீர்மை கெட்டு, போதனைகள் வலுவிழந்த காலக்கட்டதில் இந்திய தத்துவ விசாரணைக்கு உரம் கொடுக்க தோன்றினான் சங்கரன் (ஆதி சங்கரர்).

புத்தரின் மீது உள்ளார்த்தமாக ஆழ்ந்த பக்தி செய்தவன் சங்கரன். பெளத்தம் விட்டுச் சென்ற இடிபாடுகளிலிருந்து ஒரு மாபெரும் மாளிகையை உருவாக்குகிறான் சங்கரன். ஒன்றிலிருந்து ஒன்று என்று இந்திய சிந்தனைகளுக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. சங்கரனின் அத்துவைத (இரண்டு இல்லை) தத்துவம் பெளத்த கருத்துக்களை உள்வாங்கி எழும்புகிறது. இதனால்தான் சங்கரனுக்கு "பிரசன்ன புத்தன்" (புத்தன் வேறு போர்வையில்) என்றொரு பட்டப் பெயர் உண்டு. ஆனால் சங்கரன் உருவாக்கிய சனாதன மதம் பண்டைய இந்திய மதங்களை ஒன்று சேர்ப்பதாக அமைகிறது. வங்காளத்தில் புழங்கிய காளி பூஜை, ஒரிசாவில் பிரபலமாயிருந்த ஞாயிறு வழிபாடு, மராட்டிய தேசத்து கணேச பூஜை (தமிழக பிள்ளையார் வழிபாடு ஔவை பிரபலப்படுத்தியது. "பிள்ளையார் எறும்பு" போல் யாருக்கும் தொந்திரவில்லாத சாத்வீகமான வழிபாடு அது. இப்போது சென்னையை பயமுறுத்துவது மராட்டிய வழிமுறை!), திராவிட தேசங்களில் இருந்த முருக, அரி, சிவ வழிபாடுகள் இவைகளை ஒன்று சேர்க்கிறார் சங்கரர். இதை இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழக மரபான ஐந்திணை வழக்கில் முல்லைக்கு கண்ணனும், குறிஞ்சிக்கு வேலனும், மருதத்தில் இந்திரனும், பாலைக்கு கொற்றவையும் (காளி), நெய்தல் தெய்வம் வருணன் என இருக்கிறது. சூரிய, கணேச வழிபாடு பண்டைய தமிழ் மரபில் இல்லை (?).சங்கரன் செய்வித்த சனாதன மதம் பண்டை வேதங்களின் அதிகாரத்தை (authority) ஏற்றுக் கொள்கிறது.சடங்குகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் வேதம் ஓதுதல் அந்தணர்களின் கடன் என்ற நிலையை மீட்டுக் கொடுக்கிறது. வேதமும், அதன் புரிதல்களும் மீண்டும் மேட்டுக்குடிக்கே போய்ச் சேர்ந்து விடுகிறது. சங்கரன் திராவிட கலாச்சாரத்தில் தோன்றினாலும் (மலையாள தேசங்களில் அரச மொழியாக தமிழ் இருந்தபோதும்), அவனுக்கு திராவிட/தமிழ் இலக்கியங்களில், அதன் மரபில் பரிச்சயமில்லை (தமிழ் நாட்டில் பிறந்து இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் மேட்டுக்குடி தமிழர்கள் போல்). அவன் செய்வித்த நூல்கள் அத்தனையும் உயர் ஆரியத்தில் நின்று போயின. "காலடி" மண்ணின் மொழியாகிய மலையாளம் நீச்ச பாஷையாக அவனுக்கு போய்விட்டது. எனவே சங்கரன் செய்வித்த மதமும் ஆரிய மதமாகவே போய்விட்டது.

இந்நிலையில் தோன்றுகிறான் ஸ்ரீபெரும்புதூரில் ஓர் தமிழன். தமிழ் மரபில் கல்வி கற்கிறான். ஈரப் பாசுரங்கள் நாலாயிரத்தையும் ஆழ்ந்து கற்கிறான். ஆழ்வார்கள் கண்ட இறை தரிசனங்களை அவர்கள் வழியில் பார்க்கிறான். இவனுக்கு தமிழ் நீச்ச பாஷையாகத் தோன்றவில்லை. தேவ பாஷையாகத் தெரிகிறது. மாறன் செய்வித்த தமிழ் இவனுக்கு அமுது. இவன் தமிழகத்தில் ஒரு சமய/சமூக புரட்சிக்கு வித்திடுகிறான், நம்மாழ்வாரின் நூற்றாண்டு அறைகூவலின் எதிரொலிபோல்:

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொண்மின்;
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோம்


(நம்மாழ்வார் திருவாய்மொழி )

இங்கு கடல்வண்ணன் பூதங்கள் என்று சொல்வது வைணவ அடியார்களை! இப்பூதங்களின் பெரும்பூதம் ஸ்ரீபெரும்புதூர் பூதம் ;-)

எனவேதான் இராமானுசர், சங்கரர் செய்வித்த அத்துவைத்திற்கு மாற்று வைக்க வேண்டி வந்தது. அடிப்படையில் இறைமை ஒன்று என்று சொல்லும் அத்துவைத கருத்துக்கள் அனைத்தும் மேட்டுக்குடியில் தங்கிவிட சாதி வேறுபாடுகள் அப்படியே நின்று இருந்தன சங்கருக்குப் பிறகும்! இராமானுசருக்கு இது பெரிய புதிராக படுகிறது. உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை (வார்த்தையைப் பாருங்கள் - "தின்னும்" என்ற colloquial usage) எல்லாம் கண்ணனாக இருக்கிற பட்சத்தில் சாதி எங்கிருந்து வரும்? சாதி என்ற பொய்மையை எதிர்க்கிறார் இராமானுசர். தனது ஆத்மார்த்த குருவான திருகச்சிநம்பி (வைசியர்) க்கு உணவிடவில்லை தன் சனாதன பத்தினி என்ற காரணத்திற்காக இல்வாழ்வைத் துறக்கிறார் இராமானுசர் (நம்மில் யாருக்கு வரும் இந்த தைர்யம்?).

வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை,
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோதில் இன் கனியை, நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுதேத்தும்.....


(பெரிய திருமொழி-திருமங்கை)

வண்ணம் வழி செய்கிறார். ஆழ்வார்கள் செய்வித்த தமிழ் வேதத்தை திருமால் கோயில்களில் வழிபாட்டு முறையாக்கி, தமிழை இறை மொழி ஆக்கி, தமிழ் வேதம் அத்தனை சாதிகளுக்கும் பொது என்றொரு புதுச் சட்டத்தை கொண்டு வருகிறார். இது சரியான புரட்சிக் குரல். சைவ மரபில் சித்தர்களுக்குத்தான் அந்தத் தைர்யம் இருந்தது.

இராமானுசர் திருவரங்கத்தில் இராமகாதை சொல்லிக் கொண்டு வருகிறார். விபீஷணன் சரண்புகும் கட்டம். இவன் எதிர் கட்சியைச் சேர்ந்தவன். ஆயிரம் கேள்விகள், விசாரணைகள் (சேர்த்துக் கொள்வதா? நம்புவதா? இது போன்ற கேள்விகள்). இந்தக்கட்டத்தில் இராமானுசரின் சீடரொருவர் (இராமானுசருக்கு பெரிய சீடர் கோஷ்டி உண்டு, அதில் பல குலத்தவர் உண்டு) பயம் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். இராமானுசர் இதை கவனித்து விட்டு, உரையை நிறுத்திவிட்டு, ஏன் கிளம்பிவிட்டீர் என்கிறார்? சீடர் கண்களில் நீர் பொங்க, சரண் என்று ஒருவன் தனது குலம், மக்கள் அனைத்தையும் விட்டு கை வணங்கி நிற்கும் நிலையில் இத்தனை கேள்விகளா? என்னால் இங்கு இனி இருக்க முடியாது என்கிறார். இராமானுசர் உணர்ச்சி மேலிட தம்பி, அது இராமன் சபை! இது இராமானுசன் சபை! இங்கு கேள்விகள் கிடையாது! எல்லோரும் ஓர் நிறை. நீர் இரும்! என்று. இந்த அன்பு உள்ளத்தை கீழ்வரும் பாடல் (பட்டர் தனியன்) மிக அருமையாக வருணிக்கிறது:

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!


[இராமானுசன் நம் தாய்! பரிவினால் எப்படி விழுகின்றன வார்த்தைகள், பாருங்கள் அன்பர்களே!]

இராமானுசரின் இந்த புரட்சிகர போக்கு அவருக்கு பல இல்லல்களைத் தந்திருக்கிறது. இராமானுசரை இருமுறை கொல்ல சதி நடந்து இருக்கிறது. இராமானுசர் பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சோழ மன்னன் அவரை நாடு கடத்தி இருக்கிறான்.

இக்கட்டுரையின் முக்கிய நோக்கு, சமயம் என்பது ஏதோ கண்ணை மூடிக் கொண்டு தியானித்து இருப்பது அல்ல, அது சமூக பிரக்ஞையுள்ள ஒரு இயக்கம் என்று சொல்லத்தான். சமயம் பல்வேறு சமயங்களில் சமூகத்தின் சவால்களை எதிர்கொண்டு இயைந்து செயல்பட்டு இருக்கிறது. வேதம் காடு என்றேன். காட்டில் வளரும் முட்செடிகள் போல்தான் சமயத்துடன் உடன்வாழும் மூடநம்பிக்கைகள். பாரதி சொல்வது போல், "திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே" என்பது போல் இம்மூடநம்பிக்கை என்ற புதர்களில் சிக்கி உண்மையை கண்டு கொள்ளாமல் தவிக்கும் லட்சோப லட்சம் மக்கள் உண்டு. கையில், வாளுடன், நெஞ்சில் ஆர்வமுடன் செல்லும் போது இப்புதர்கள் அழிந்து போகின்றன.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்


(சுப்பிரமணிய பாரதி)

Date: Sat, 18 Oct 1997 18:22:52 +0100

4 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Wednesday, February 06, 2008

அருமை! அருமை! அருமை!

உலகம் மாயை என்பது சங்கரரின் சித்தாந்தம்!
ஆனால் சமூகத்தோடு ஒட்டிய இறைமை என்பது இராமானுசரின் வழி!

சாதி ஒழிப்பிலும், தமிழ் வளர்ப்பிலும் அன்னார் ஆற்றிய அருஞ்செயல்களை அரசு கூட ஆக்கி இருக்க முடியாது!
இன்னும் தில்லையில் ஒரு மாபெரும் சக்தி படைத்த அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

ஆனால் அனைத்துச் சாதி அர்ச்சகர், பிற மதத்தவர் ஆலயம் நுழைதல், ஒதுக்கப்பட்டோர் ஆலய நுழைவு, தமிழ் வழி வழிபாடு என்று எத்தனை எத்தனை மவுனப் புரட்சிகள்!
அதுவும் தனித் தமிழ் இயக்கம் எல்லாம் தோன்றுவதற்கு அறுநூறு ஆண்டுக்கு முன்பே!

இதற்காக உயிரையும் அல்லவா விடத் துணிந்தார். எதிரியான சோழ மன்னன் சூழ்ச்சியாவது கண்ணுக்கு முன்னரே தெரிந்து விடும்! கூடவே இருந்து குழி பறிக்கும் தமிழ் வெறுப்பாளர்கள் சூழ்ச்சியையும் அல்லவா கடந்து வந்தார்! இன்றைய தமிழ்க் காப்பாளர்களுக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பு ஆச்சும் உள்ளது!
அப்போது எந்த பாதுகாப்பு?

காரேய்க் கருணை இராமானுச இக் கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை!

பல பதிவுகளாய்ச் சொல்ல வேண்டியது, கண்ணன் ஐயா! அத்தனையும் சாரமாகப் பிழிந்து வைத்து விட்டீர்கள்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

(மாதவிப் பந்தலில் ஒவ்வொன்னாகத் தான் சொல்ல முடியுது! மாதவிப் பந்தல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - ஒவ்வொன்றாகத் தான்!)

  N.Kannan

Wednesday, February 06, 2008

//பல பதிவுகளாய்ச் சொல்ல வேண்டியது, கண்ணன் ஐயா! அத்தனையும் சாரமாகப் பிழிந்து வைத்து விட்டீர்கள்! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!//

தன்யன் ஆனேன்! கண்ணபிரானே!

  குமரன் (Kumaran)

Tuesday, January 13, 2009

//ஏனெனில் தமிழக மரபான ஐந்திணை வழக்கில் முல்லைக்கு கண்ணனும், குறிஞ்சிக்கு வேலனும், மருதத்தில் இந்திரனும், பாலைக்கு கொற்றவையும் (காளி), நெய்தல் தெய்வம் வருணன் என இருக்கிறது. சூரிய, கணேச வழிபாடு பண்டைய தமிழ் மரபில் இல்லை (?).//

பிள்ளையார் வழிபாட்டின் முதல் தரவு தமிழகத்தில் பிள்ளையார்பட்டியில் தான் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு முன்னரே பழந்தமிழ் இலக்கியங்களில் 'சதுக்கப் பூதம்', 'எருக்கம்பூ விரும்பும் இறைவன்' போன்ற தொடர்களில் பிள்ளையார் குறிக்கப்படுகிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஆனால் அவை நேரடித் தரவுகள் இல்லை.

பகலவன் வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்கிறது. ஞாயிறு போற்றுதும் என்று தானே சிலப்பதிகாரமே தொடங்குகிறது?!

  குமரன் (Kumaran)

Tuesday, January 13, 2009

// அவனுக்கு திராவிட/தமிழ் இலக்கியங்களில், அதன் மரபில் பரிச்சயமில்லை (தமிழ் நாட்டில் பிறந்து இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் மேட்டுக்குடி தமிழர்கள் போல்).//

ஆதிசங்கரருக்குத் திராவிட/தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இருந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சௌந்தர்யலஹரியில் ஓர் இடத்தில் 'அன்னையின் பாலை அருந்தி பேரறிவு பெற்ற திராவிட சிசு' என்று பாடுகிறார். தன்னைத் தானே அப்படிக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்று சிலரும், திருஞானசம்பந்தரை அப்படிக் குறிக்கிறார் என்று சிலரும் சொல்கிறார்கள். அந்தக் குறிப்பு சம்பந்தரைச் சொல்வது என்றால் அவருக்கு தேவார திருவாசகங்களில் பயிற்சி இருந்ததாகத் தான் கொள்ள வேண்டும்.