e-mozi

மடல் 014: பற்றுடை அடியவர்க்கு எளியவன்

ஆழ்வார்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது. "ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்" என்று திருமூலர் பாடினால், இவர்கள்

கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தார் போலப்
புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு, என்னை
வாட்டம் தனியே வீசீரே


(ஆண்டாள்) என்று இருப்பார்கள். அதாவது ஆழ்வார்களுக்கு கண்ணன் ஒரு அனுபவம். வெறும் கருத்து அல்ல. கண்ணனை அனுபவித்தல் ஆழ்வார்கள் பாசுரங்கள் முழுவதிலும் விரவிக் கிடக்கும்.

இருமலைபோல் எதிர்ந்தமல்லர்
இருவர் அங்கம் எரிசெய்தாய்! உன்
திருமலிந்து திகழும்மார்பு
தேக்கவந்தென் அல்குலேறி
ஒருமுலையை வாய்மடுத்து
ஒருமுலையை நெருடிக்கொண்டு
இருமுலையும் முறைமுறையாய்
ஏங்கி ஏங்கி இருந்துணாயே


(பெரியாழ்வார் திருமொழி -2/8)

என்ன வர்ணனை பாருங்கள். ஒரு பெண், தன் குழந்தையுடன் அனுபவிக்கும் மிக பிரத்தியேகமான தன்னிலை அனுபவங்கள். சொல்வது பட்டர்பிரான்! தாயாக மாறினால் ஒழிய இது சாத்தியப்படாது. இப்படித்தான் ஆழ்வார்கள் கண்ணனை/வாழ்வை அனுபவித்து இருக்கிறார்கள்.இதமான நெஞ்சம் கொண்ட பேயாழ்வார் இராமனை அதிகம் பாடவில்லை. தேவியைப் பிரிந்து நிற்கும் ஒரு அவதாரம். பெருமாள் மனது எப்படி பாடுபட்டு இருக்கும் என்று அவரை நினைத்து இவரால் அவரைப் பாட முடியவில்லை! அதுதான் ஆழ்வார் மனநிலை!

இன்னொரு சுவாரசியமான விஷயம். கண்ணனின் லீலைகள் பலவற்றைப்பாடிய பாசுரத்தில் கண்ணனின் கீதோபதேசம் பற்றி ஒரு குறிப்புக் கூட கிடையாது!

ஆனால் கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பாராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான மதுரகவி எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்...

பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு


என்று சொல்லிக் கொண்டு வந்தவர் அப்படியே மெய்மறந்து இருந்துவிட்டார். அதாவது உலகேழும் ஆளும் தெய்வம். ஒரு சின்னப் பையன் போல் வந்து, யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டு.....இவ்வளவு எளியவானக ஒரு கடவுள் இருக்கமுடியுமா என்று எண்ணி மனமிக மகிழ்ந்து, மெய் மறந்து நிற்கிறார். நமெக்கெல்லாம் இப்படி எப்போதாவது சில நொடிகள் வாய்ப்பதுண்டு. உடனே நிகழ்கால நிகழ்வுகள் அடுத்த விநாடி கீழே கொண்டு வந்துவிடும். ஆனால் நம்மாழ்வார் நிற்கிறார், நிற்கிறார்...ஆறுமாதமாக அடுத்த வரி சொல்லாமல் நிற்கிறார். பாட்டு எழுதிக் கொண்டு இருக்கும் மதுரகவிக்கு எப்படி இருக்கும். இவர் பாட்டுக்கு, சரி அவருக்கு அனுபவம் முடிந்து வரட்டும் என்று இவர் கிளம்பிவிட்டால்? இவர் கிளம்பியபின் அவர் பாடலை முடித்துவிட்டால் அருமையான பாசுரம் போய்விடும்! எனவே இவரும் சளைக்காமல் ஆறு மாதங்கள் பசி, தண்ணி இல்லாமல் கூடவே நின்றாராம். இது என்ன நிலை? இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் ஆழ்வார்கள் சொல்லும் இறை நிலை. கண்ணன் வெறும் கருத்து அல்ல. அவன் ஓர் அனுபவம். ஆறு மாதம் கழித்து அடுத்த வரி இப்படி வருகிறது....

எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!

சேர்த்து பார்த்தால்:

பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு
எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!


(நம்மாழ்வார் திருவாய்மொழி 3/1).

அதாவது கண்ணன் பகவத் கீதை சொல்வதைவிட இவர்களுக்கு கண்ணன் எவ்வளவு காட்சிக்கு எளியவனாக, செளலப்பியனாக இருக்காறான் என்பதை நினைத்து மயங்குவதில்தான் இறை இன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள்.

ஆனால் இவ்வனுபவங்களையெல்லாம் பார்க்கும் போது திருமழிசை மிகவும் வித்தியாசப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம், அவர் வாழ்ந்த வாழ்வு, அவர் பெற்ற அனுபவங்கள் இவையெல்லாம் அவரை மிகவும் வித்தியாசமான ஆழ்வாராகக் காட்டுகின்றன.

Date: Sun, 26 Oct 1997 21:04:13 +0100

2 பின்னூட்டங்கள்:

  குமரன் (Kumaran)

Friday, January 16, 2009

கீதையைப் பற்றி நாலாயிரத்தில் நேரடிக் குறிப்புகள் இல்லாவிட்டாலும் மறைமுகக் குறிப்புகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன் ஐயா.

'நென்னலே வாய் நேர்ந்தான்' என்பதற்கும் கீதையில் சரம ஸ்லோகத்தில் சொன்னான் என்ற உரையைப் படித்த நினைவு.

  நா.கண்ணன்

Friday, January 16, 2009

குமரன்: அப்போதைய என் புரிதல் தவறு என்று பின்னால் திருத்தப்பட்டேன். இது குறித்து முனைவர், உ.வே.வேங்கிடகிருஷ்ணன் அவர்களிடம் பேசிய போது நிறையக் குறிப்புகள் தந்தார். ஆழ்வார்கள் நிரம்ப கீதை பற்றிப் பேசுகின்றனர்.