e-mozi

மடல் 015: திருமழிசை என்ற அதிசயம்

பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்களுக்குப் பின் வருகிறார் திருமழிசைப் பிரான். இவர் முதல்வர் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்தாக ஒரு கதை உண்டு (காரணம் பின்னால் புரியும்). இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம் திருமழிசையின் பாடலில் பதிவாகிவுள்ளன.

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று


(நான்முகன் திருவந்தாதி 6)

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன்-பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட்டாழ்வார் பலர்.


(நான்முகன் திருவந்தாதி 14)

முதல் மூவரிடம் இருந்த சமயப் பொறுமை இவரிடம் இல்லை.

நரசிம்ம பல்லவனுக்குப்பின் பல்லவ நாட்டை ஆண்டவர்கள், இரண்டான் மகேந்திரன் (கி.பி. 668- 670), முதலாம் பரமேஸ்வரன் (கி.பி. 670-680), இராஜசிம்மன் (கி.பி. 680-720). இவர்கள் அனைவரும் வீர சைவர்கள். சைவ சமய நெறியாளர்கள் அப்பர், சம்மந்தர் வாழ்ந்த காலமும் இதுதான். திருமழிசையோ வீர வைஷ்ணவராக இருந்திருக்கிறார்.

அந்தக்கால "மரியாதைப் படி" இவர் நாடு கடத்தப் பட்டு இருக்கிறார்!

இதைப் பற்றிய சுவையான குரு பரம்பரைக் கதையொன்று உண்டு.

இவருக்கு கணிகண்ணன் என்றொரு சீடன் உண்டு. இவர் நிஷ்டையில் இருந்தபோது ஒரு மாது- அவள் ஒரு காலத்தில் பல்லவனின் "கீப்"பாக இருந்தவள், தன் இளமையெல்லாம் பறிபோய், அரச மரியாதை போய் "அம்போ" என்று இருக்கும் காலையில் திருமழிசையின் தேஜசை பார்த்துவிட்டு இவரை வழிபட்டால் தன் இளமை மீண்டும் கிடைக்காதா என்ற நப்பாசையில் தினமும் இவர் இருக்கும் கோவில் திண்ணையில் கோலம் போட்டு வந்திருக்கிறாள். சீடன் இதைக் கவனித்து, திருமழிசையிடம் சிபாரிசு செய்ய அவரும் இரங்கி இவளுக்கு இளமையை திரும்ப அருளி இருக்கிறார். இவள் உடனே அரசவைக்குப் போய்விட்டாள். அரசனுக்கு பொறாமை. இவளைப் போல் தனக்கும் இளமை வராதாவென்று. அவளும் பெரியவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். சீடனைக் கேட்டால் கூடப் போதுமென்று சொல்ல கணிகண்ணன் மாட்டிக் கொண்டான். கணிகண்ணனுக்கு இந்த சித்து எல்லாம் தெரியாது. நம்மால் முடியாது என்று இவன் சொல்ல அரசன் கடைசியில் ஒரு பாட்டாவது பாடிவிட்டு போ என்று சொல்ல, அதற்கும் கணிகண்ணன் கட்டபொம்மன் போல் நீ என்ன எங்கள் பெருமாளுக்கு திருத்துழாய் பறித்துத்தந்தாயா, சந்தனம் அரைத்துத் தந்தாயா? இல்லை மலர் மாலை கோர்த்துத் தந்தாயா? மாமானா, மச்சானா? எதற்கு பாட வேண்டும் உன்னை? எனக் கேட்க. முதலாம் பரமேஸ்வரன், "அப்ப சரிதான் நடையைக் கட்டு" என்று நாடு கடத்தி விட்டான்.

சீடனைப் பிரிந்து இருக்க முடியாமல் இவரும் நாட்டைவிட்டுப் போய்விட்டார். சும்மா போக வேண்டியதுதானே? பெருமாளையும் "கூட வாரும் ஓய்!" என்று அழைத்துக் கொண்டு போய்விட்டார் . அங்குதான் ஆரம்பிக்கிறது வினை.

Date: Mon, 27 Oct 1997 11:02:34 +0000

4 பின்னூட்டங்கள்:

  Anonymous

Sunday, February 03, 2008

Quite interesting..
All fame goes to Namo Narayana.....
aswini

  N.Kannan

Monday, February 04, 2008

Thank you, Aswini.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 04, 2008

//அதற்கும் கணிகண்ணன் கட்டபொம்மன் போல் நீ என்ன எங்கள் பெருமாளுக்கு திருத்துழாய் பறித்துத்தந்தாயா, சந்தனம் அரைத்துத் தந்தாயா? இல்லை மலர் மாலை கோர்த்துத் தந்தாயா? மாமானா, மச்சானா? எதற்கு பாட வேண்டும் உன்னை? எனக் கேட்க//

ஹிஹி
இப்படி எல்லாம் நகைச்சுவையா எழுதினாக்கா, வவாச-வில் உங்களைச் சேர்த்திடுவேன்-ன்னு பணிவன்புடன் பயமுறுத்திக் கொள்கிறேன்! :-)

  N.Kannan

Monday, February 04, 2008

கண்ணபிரான்: வவாச என்றால் வயதான வாலிபர் சங்கம் என்றுதானே பொருள்! அப்ப நமக்குத் தகுதி இருக்கு. மேலும் ஸ்ரீவைஷ்ணவனுக்கு என்றும் 25 வயதுதான் :-)

But just imagine...கணிகண்ணன் situation :-))