e-mozi

மடல் 016: பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!

சீடன் நாடு கடத்தப் பட்டான். குருவும் கிளம்புகிறார். பள்ளிகொண்டு சயனித்து பெருமாள் இருக்கிறார்.திருமழிசை பெருமாளைப் பார்த்து:

கணிகண்ணன் போகின்றான் காமருபூகச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்
உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்


என்கிறார். பாவம் பெருமாளும்தான் என்ன செய்வார்? சரிதான், நடையைக் கட்டும் என்று திருமழிசையுடன் தன் நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார். இவர் கிளம்பியவுடன் இவரது தங்கை தேவியும் கூட கிளம்ப, சிவனும் கிளம்புகிறார். மாமாவோடு மருமானும், மற்றைய தெய்வங்களும் கிளம்ப நாடே வெறிச்சொடிப் போய்விடுகிறது. மழை இல்லை. விளைச்சல் இல்லை. அரசன் ஆடிப்போய் விடுகிறான். தன் தவறை உணர்ந்து இவர்களைத் தேடி வருகிறான். ஓரிரிக்கை கிராமம். அங்கு பெருமாள் தன் பரிவாரங்களோடு செளக்கியமாய் இருக்கிறார்.

அரசன் திருமழிசையிடம் மன்னிப்பு கேட்க, குரு தன் சீடனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல, எல்லாம் ஒருவழியாய் சீர் அமைய பல்லவ நாட்டிற்கே திரும்புகிறார். பெருமாளும் திருவெஃகை கிராமத்திற்கு வந்து நின்று கொண்டே இருக்கிறார். பாயைச் சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்ல வேண்டாமா? திருமழிசை மீண்டும் பாடுகிறார்:

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூகச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்


என்று. அதன் பின் பெருமாள் படுத்துக் கொண்டார். மறந்து போய் திசைமாறி படுத்துக் கொண்டவிட்டதாக கதை. இப்பெருமாளுக்கு "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" என்று அதன் பின் பெயர் வழங்கலாயிற்று.திருமழிசை மற்ற ஆழ்வார்களிலிருந்து மிகவும் வித்தியாசப் படுகிறார். தன் சொந்த அனுபவங்களை பதிவு செய்யாமல் அறிவு பூர்வமாக இறைமையை அணுகுகிறார்.

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே!


(திருச்சந்த விருத்தம் 26)

என்று பாடுகிறார். இவரது சந்தங்கள் இவரை சித்தர்களோடு இனம் காட்டுகிறது. குருபரம்பரைக் கதைகள் இவர் வைணவராக மாறுவதற்கு முன் சிவவாக்கியர் என்ற பெயருடன் இருந்ததாகவும், பேயாழ்வார் இவரை ஆட்கொண்டு வைணவராக மாற்றினார் என்றும் சொல்லுகிறது.

சிவவாக்கியர் எப்படி பாடுகிறார்?

அண்ணலே அனாதியே யனாதிமுன் னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணு சுக்கிலங்கருதியோங்கு நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கனே

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே

அதே சந்தங்கள். அதே முறை. அதே எள்ளல். இவரேதான் அவரு, அவரேதான் இவரோ!

திருமழிசையின் பிறப்பும் மர்மம் நிறைந்தாய் உள்ளது. பார்கவ முனிவர்க்கும், ஊர்வசிக்கும் பிறந்த பிள்ளை இவர் என்று குருபரம்பரை கதைகள் சொன்னாலும் பாவம், மனிதர் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறார். சாதீய கொடுமைகள் இவரை தாக்கிய வரலாறு காணக்கிடைக்கிறது. இவர் சிவ வாக்கியர் என்றால் இப்படி பாடி இருப்பார்:

பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா
இறைச்சி தோலெலும்பினு மிலக்கமிட்டிருக்குமோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே


ஆனால் பாவம் ஸ்ரீவைஷ்ணவரான திருமழிசை இப்படி யெல்லாம் பாடவில்லை. ஆனாலும் இவர் வாழ்வு மர்மம் நிறைந்தாய் உள்ளது. இவர் சிவவாக்கியர் என்பது கட்டுப்பாடற்ற ஊகம் என்று பேராசிரியர். இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார்.

Subject: Date: Mon, 27 Oct 1997 17:18:02 +0000

2 பின்னூட்டங்கள்:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Monday, February 04, 2008

//அதே சந்தங்கள். அதே முறை. அதே எள்ளல். இவரேதான் அவரு, அவரேதான் இவரோ!//

சந்தங்களை மட்டும் வைத்தே, அப்படி ஒரு முடிவுக்கு வரவும் முடியாது!
இருவரின் கால கட்டங்கள் என்னவோ, கண்ணன் சார்?

இடைக்காட்டுச் சித்தர் நம்மாழ்வார், திருவாய்மொழியைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்! திருவாய்மொழிச் சந்தங்கள் சித்தர் பாட்டிலும் வரும்! ஆனால் அவரோ இவர் என்று சொல்ல முடியாது அல்லவா?

//பாயைச் சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்ல வேண்டாமா? திருமழிசை மீண்டும் பாடுகிறார்://

ஹிஹி
ஊருக்கு வந்தவுடனேயே அந்தப் பாட்டைப் பாடவில்லையாம்!
பெருமாள் கைகட்டி அருகில் நிற்பதைப் பார்த்து ஏன் இன்னும் நிற்கிறீர்கள் என்று இவர் வினவ, சுருட்டிக் கொள் என்று சொன்னீர்கள்! ஆனால் விரித்துக் கொள் என்று இன்னும் சொல்லவில்லையே என்றாராம்!

இப்படிக் கவின்தமிழால் கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள்!
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்னும் யதோத்தகாரி!

  N.Kannan

Monday, February 04, 2008

இருவரும் வெவ்வேறுதான்! ஆனால், ஒன்று என்று சொல்லும் கட்டுரைகளை வாசித்துள்ளேன். ஆழ்வார் காலம் சித்தர்கள் காலத்திற்கு முந்தியது. குருபரம்பரைக் கதைகள் இவரை சித்தர் போலவே சித்தரிக்கின்றன. இவர் சித்தர்களுக்கு முன்னோடியோ, என்னவோ? யார் கண்டது!