e-mozi

மடல் 018: ஆழி மழைக் கண்ணா!

சூடிக் கொடுத்த சுடர் கொடி, பட்டர் பிரான் கோதை, அழகிய ஆண்டாள் - ஆழ்வார்களிலே கடைக்குட்டி! இவளைப் பற்றி கடைசியாக எழுதலாமென நினைத்தேன். ரா.பா ஆரம்பித்தவுடன் I could not resist my temptation. ஏனெனில் ஆண்டாள் is irresistable!! அத்தனை ஆழ்வார்களும் தன்னை நாயகியாக "நினைத்து" புலம்புவதற்கும் ஆண்டாள் தன்னியல்பால் நாயகியாக இருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள தொலைவுதான். அதனால்தான் ஆண்டாள் நம்மை ஆள்பவளாக உள்ளாள். அவள் விரகக் கவிகளை பின்னொரு சமயம் பார்ப்போம்

காம்போதி ராகம் அட தாளம்

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ, கை கரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழவுலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

(திருப்பாவை 4)

பாசுரங்கள் அத்தனைக்கும் பண் உண்டு. ராகங்கள் உண்டு. இப்பாடல் காம்போதி ("கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம் எதுவோ பிரபோ?" - சம்பூர்ண இராமாயணம்) ராகம். எம்.எல்.வி. பாடிய திருப்பாவையோ, இல்லை அவர் சிஷ்யை சுதா ரகுநாதன் பாடிய திருப்பாவையையோ பின்னணியாகப் போட்டுக் கொள்ளுங்கள்!

ஆழி மழைக் கண்ணா! கடலின் மழையாய் உள்ள கண்ணனே, மழைக் கண்ணன். நல்ல பிரயோகம்!"நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் சொல்லிய படி மழை இல்லையேல் உலகம் அம்பேல். மழை உயிர்களின் ஜீவ நாடி. நம் உடலின் 90% வெறும் நீர்தான். அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் கருணைத்தெய்வம். கருணை மழை பொழிபவன் அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் முல்லைத் தெய்வம். முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும். காடுகள் இல்லையேல் மழை இல்லை (sounds very familiar). மழை இல்லையேல் காடுகள் இல்லை. முல்லைத் தெய்வமான கண்ணனைத் தவிர மழையை வேறு யாரிடம் கேட்கமுடியும். அதனால் மழைக் கண்ணா!

வேறு யாரிடம் கேட்க முடியுமா? வருணன் தானே மழைத் தெய்வம்? அப்படி நினைத்துதான் ஆயர்கள் வருணனுக்கு படையல் போட அதை கண்ணன் எடுத்துக் கொண்டான். வருணனுக்கு மகாக்கோபம் (பின்ன இருக்காதா? பந்தியில் உட்கார்ந்து சாப்பாடெல்லாம் போட்ட பிறகு, போய்யா வெளியே..என்றால்?) ஒரே மழையோ, மழை என்று பொழிந்து தள்ளி விட்டான். ஆயர்பாடி வெள்ளத்தில் மூழ்கியது. ஆயர் குலக் கொழுந்து கண்ணனால் அது தாங்க முடியுமா? முடியாது ஏன்? வார்த்தையில் இருக்கிறது இரகசியம். குலக் கொழுந்து! மரம் தண்ணீர் இன்றி வாடினால் முதலில் கருகுவது கொழுந்துதான். கண்ணன் ஆயர்களுக்கு துயர் என்றால் முதலில் வாடுபவனாக இருப்பான். அதான் அவன் அவர்களின் கொழுந்து. கண்ணன் சரிதான் போடா, என்று பக்கத்திலிருந்த கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து விட்டான்!மழை காத்த தெய்வமாதலால் மழைக் கண்ணன். ஆழி மழை கண்ணன் என்கிறாள் ஆண்டாள். இந்த பூமிதோன்றிய ஐந்து பில்லியன் வருடத்தில் முதல் ஒரு பில்லியன் வருடத்தில் பாதி நாள் மழைதான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிர்வித்து (DNAs,Proteins and single cell organisms) தோன்றியிருக்கிறது. இம்மழை இல்லையேல் உலகில் உயிரே தோன்றியிருக்காது. எனவே தான் ஆழி மழைக் கண்ணன்!

ஒன்று நீ! Stop. நீதான் அந்த ஒன்று. ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழலும் அந்த ஒன்று.

ஒன்றுந் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் றன்னொடு தேவர்
உலகோடுயிர் படைத்தான்
குன்றம் போல்மணி மாடம்நீடு
திருக்குருகூரதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் நாடுதிரே


(நம்மாழ்வார் திருவாய் மொழி)

ஆதிப்பிரான். அதனால் ஒன்று நீ!

கைகரவேல் - கைவிட்டு விடாதே அப்பா! கரவு என்றால் ஏமாற்றுதல் என்று ஒரு பொருள். வானம் பாத்த பூமியாய் எங்களை ஏமாற்றி விடாதே அப்பா! மழையைத் தா!

ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

இந்த இரண்டு வரிகளில் ஆண்டாள் தன் அறிவியல் மேதமையைக் கோடி காட்டுகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரைக்கு பக்கம். கொஞ்சம் semi arid area. கரையான் (பாம்பு) புத்துக்கள் அதிகம், கடற்கரை அல்ல. இங்கு உட்கார்ந்து கொண்டு இந்தப் பெண் நீரின் சுழற்சி பற்றி சூழலியல் பாடம் தப்பாமல் சொல்கிறாள். ஆழியில் புகுந்து - அதாவது கடலுக்குப் போய், முகந்து - நீரை வாங்கி; கொடார்த்தேறி - கடலிலிருந்து நிலத்திற்கு கொண்டு வந்து தருகிறதாம் மேகங்கள். எப்படி மழை தருகின்றனவாம்? பராக்கிரமம் உடைய பத்மநாபன் தோளில் இருக்கும் சக்கிரம் மின்னுவது போல் மின்னி (அதாவது மின்னல் அடித்து), வலம்புரிச் சங்கு அதிர்வது போல் - அதாவது பாரத மகா யுத்தத்தில் பாஞ்சசன்னியம் என்ற கண்ணனின் சங்கு ஊதியவுடன் பாதிப் படை அந்த அதிர்வில் செத்து விழுந்ததாம்(super sonic waves)- இடி, இடித்து, சார்ங்கம் என்ற வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல் மழை சாரை, சாரையாக பொழியுமாம். வாவ்...என்ன வர்ணனை. எப்படி இழைக்கிறாள் பாருங்கள் உவமைகளை. ஆண்டாள் வெறும் மூடநம்பிக்கையுடன் கண்ணனை வழிபட்டாள் என்று இருந்திருந்தாள், ஆமாம்,ஏதோ மழை பெய்கிறது! பகவான் வானத்திலிருந்து கொட்டுகிறான் என்று எழுதி விட்டு போயிருப்பாள். இவ்வளவு கச்சிதமாக எந்தப் பிழையுமின்றி ஒரு அறிவியல் உண்மையை பின்னிப் பினைந்து அறிவும் தெய்வமும் ஒன்று (ஒன்று நீ) என்று எடுத்துக் காட்டுவது நம் முன்னோர்களின் (எந்தையும், தாயும் மகிழ்ந்துகுலாவி இருந்ததும் இந்நாடே, இதை வந்தனை கூறி, மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ!) திறம்.

இத்தோடு நின்றால் தேவலை! கண்ணனை "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து" என்று ஒரு உவமை கொடுத்து ஒரு போடு போடுகிறாள். கார் மேகன், கொண்டல் வண்ணன், மேக வண்ணன் என்று மற்ற ஆழ்வார்கள் சொல்வது போல் கரிய நிறமுடைய கண்ணனை உவமை படுத்தி விட்டுப் போகாமல் ஆண்டாள் ஊழி முதல்வன் என்று சொல்வானேன்? ஆண்டாளுக்கு ஊழிக்கு முன்னிருந்த நிலமை பற்றி என்ன தெரியும்? ஊழிக்கு முன் கருமை ஏன் இருக்க வேண்டும்? எல்லோரும் கடவுளை ஜோதி, ளி, சூரியக் கோடிப்பிரகாசன் என்றெல்லாம் சொல்லும் போது இவள் கடவுள் ஊழிக்கு முன்னிருந்த கருமை என்கிறாள்.இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆராதமாக ஒரு கருஞ்குழி (black hole) இருப்பதாக அறிவியல் சொல்கிறது. நம் பால்வெளி (milky way galaxy) அண்டத்தின் அச்சு இப்படியொரு கருங்குழிதான் என்றும் சொல்கிறார்கள். இக்கருங்குழியின் அடர்த்தியோ மகா பெரிது. மெலிதினும் மெலிதான ஒளிக்கீற்று கூட இதைத்தாண்டி போக முடியாத வண்ணம் இவ்வடர்த்தி விழுங்கிவிடுகிறதாம். இவ்வுண்மைகளை ஆய்ந்த பேரா.சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இவரின் மாமா, வானம் ஏன் நீலமாக இருக்கிறது என்று சொல்லி நோபல் பரிசு பெற்றார் (சர்.சி.இராமன்). இவர் ஆழ்வார்களைப் படித்தாரா என்று தெரியவில்லை. கண்ணன் நீல வண்ணன். வானம் நீலமாக இல்லாமல் பின் எப்படி இருக்கும்?இக்கருஞ்குழியில் விழும் தகவல் என்ன ஆகிறது என்பது பெரிய ஆராய்ச்சி. பருப்பொருளின் நிலைத்த தன்மை என்ற விதியை வைத்தால் (conservation of mass) எந்தப் பொருளும் பிரபஞ்சத்திலிருந்து மறைவதில்லை (ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து...நம்மாழ்வார்). எனவேகருங்குழியில் விழும் ஒளி (ஒளி என்பது தகவல்) வேறொரு அண்டத்தில் மீண்டும் தோன்றுமாம். இப்படி ஒரு பிரபஞ்சத்திலிருந்து ஒரு பிரபஞ்சமாக விரிந்து கொண்டு இருக்கிறதாம் படைப்பு. இதைப்பார்த்துவிட்டுதான் யசோதை அப்படியோ மயங்கி விழுந்துவிட்டாள். கண்ணனின் விஸ்வரூப தரிசனம்பார்த்த பார்த்தன் மெய் மயங்கி "அண்ணலே, இது போதும் இனித் தாங்காது என்றான். கீதைக்கு விளக்கம் எழுதிய மகாகவி பாரதி சொல்கிறான்:சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் - கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி, கோடி,கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந் தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை. (பகவத் கீதை-உரை விளக்கம்)
ஆக பிரபஞ்சத்தின் ஆதியுரு கருமை என்று தெரிகிறது. அது சரி, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளுக்கு இது எப்படி தெரிந்தது என்பதுதான் கேள்வி?

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய் - நாடிநீ
வேங்கடவற்கென்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணம் நல்கு.


உய்யக்கொண்டார் சொல்லும் "இம்மாற்றம்" நம்முள் நிகழ....ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Date: Sun, 09 Nov 1997 17:02:07 +0100

4 பின்னூட்டங்கள்:

  nAradA

Thursday, June 19, 2008

Your weaving of science and religion through ANDAL's pAsuram is fabulous (e.g., the relationship of rain to life and the black hole as the basis of all creation of the universe). It is amazing that religious wisdom of ANDAL trumps the science that was known at that time and equals what is known today.

Now for some discord in the article. You mention that the water content of human body is 90%. That is true only AT birth (also for watermelon). For human beings the water content varies from 43 to 73% on a total body weight basis. The average human being has 70% of body weight as water. A lean adult male has 60% water. OK that is just some trivia.

With respect to "Azhi mazhaik kaNNA.." you seem to imply Krishna by "Azhi mazhaik KaNNA". If so this is at variance with the interpretation given by others who wrote vyAkkiyAnam for tiruppAvai. They say "Azhi mazhaik KaNNA" refers to rain god VaruNan who is implored by ANDAL to gather all the water from the ocean and transport it in the form of clouds and then shower the water wherever it is needed. The phrase "Uzhi mudalvan pOl mey karuttu" refers to the dark rain clouds of VaruNan resembling the dark hue of VishNu. The appeal is also not to cause disaster. Any comments?

As for the gOvardana giri episode, the AyarpADi people do not propitiate VaruNan but Indran. Indran gets angry (when KaNNan tells the folks to offer worship to the mountain instead) and dispatches his thunderbolt and commands VaruNan to flood AyarpaDi with torrential rain. KaNnan saves everybody by lifting the giri and provides shelter to everybody thereby shaming Indiran. This is also obvious in Papanasam Sivan's song "enna tavam seydanai yasOdhA" where the line "biramanum indranum manadil poRAmai koLLa" indicates that YasOdha is able to succeed where Indran and Brahma failed against KaNNan. Your thoughts?

  நா.கண்ணன்

Thursday, June 19, 2008

நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவ சூத்திரம் நூற்றுக்கு நூறு உண்மை! மனித உடலில் நீர் பல படிகளில் அமைந்துள்ளது. குடல் நீராக, உள்ளுருப்புகளுக்கு இடையில் தவழும் நீராக, இரத்தமாக, விந்து நீராக, எச்சிலாக, ஏன் ஒவ்வொரு செல்லிலும் 90% நீர்தான். எலும்பு, நகம், தலைமுடி தவிர மிச்ச எல்லா உருப்புகளும் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதனால் அப்படிச் சொன்னேன்!

மழைத்தெய்வம் வருணன், அவனை ஆண்டாள் சுட்டுவதாகத் தான் வியாக்கியானம் அமைகிறது. ஆயினும், இன்னொரு மடலில் நான் விளக்கியுள்ளது போல், திருவாய்மொழியில் சடகோபன் "ஆழி மழைக்கண்ணா" என்ற பதத்தைக் கண்ணனுக்குச் சுட்ட பயன்படுத்துகிறார். எனவே அது கண்ணனையே சுட்டுகிறது என்று சொல்லலாம்.

இந்த poetic licence-ஐ உரையாசிரியர்கள் "பச்சை மாமலை போல் மேனி" எனும் பாசுரத்தில் வரும் "இந்திர லோகம் ஆளும்" எனும் பதத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆழ்வார் சுட்டும் 'இந்திர லோகம்' என்பது வைகுந்தமே! என்று. ஆக, அவர்கள் ஓரிடத்தில் சலுகை எடுத்துக் கொள்கின்றனர். நான் வேறொரு இடத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

இரண்டு பேர் நியாயமும் "மறந்தும் புறம் தொழா" வைணவ கொள்கையை அடிப்படையாகக் கொள்கிறது. ஆண்டாள் மன்மதனைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது வியாக்கியானச் சக்கிரவர்த்திகளே சற்று தடுமாறும் போது, இச்சின்னக்கண்ணன் ஏன் பயப்பட வேண்டும்?

ஆயர்பாடிச் சமாச்சாரம் 'இந்திரன்' செய்ததுதான். தவறு என்னுடையதே! ஆயினும், இந்திரன் தன் சபையிலுள்ள வருணனை அனுப்பியே இச்செயலைச் செய்திருக்க வேண்டும். அதனால் நியாயப்படுகிறது!

ஊழிமுதல்வன் கண்ணன்தான். இதில் யாருக்குச் சந்தேகம் வரும்? அவனைக் "கரும் தெய்வமாக" வைத்திருப்பதே இதைச் சுட்டத்தான் என்பது என் துணிபு!

[ இவ்வளவிற்கும் இடம் கொடுக்கும் பாசுரங்களை என்ன சொல்லிப் புகழ? ]

  nAradA

Friday, June 20, 2008

KaNnan:
Since you touched on the subject of DNA, water, and cells linking ANDAL's supreme hypothesis, I thought it might interest you to read a couple of articles that I wrote for chennaionline.com several years ago on the subject of DNA. The URLs are given below:


http://chennaionline.com/science/BiotechCorner/07jul-Bio01.asp
http://chennaionline.com/science/BiotechCorner/08aug-Bio02.asp

  நா.கண்ணன்

Friday, June 20, 2008

ஆக நாரத ஸ்வாமியின் பெயர்: Dr.Sethuraman Subramanian என்பதா! அருமையான கட்டுரைகள். அறியத் தந்தமைக்கு நன்றி!