e-mozi

மடல் 013 - பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்

அன்பர் ஒருவர் எழுப்பிய கேள்விகள் சிலவற்றிற்கு பதில் சொல்லும் கடமை உள்ளேன். அவர் இரண்டு முக்கியமான கேள்விகளை முன் வைக்கிறார். சமயப்புரட்சி என்ற வார்த்தை அவசியம்தானா? இரண்டு, மெய்ஞானத்தையும் mundane மொழி பிரச்சனையையும் சேர்த்து குழப்ப வேண்டுமா என்று?

இரண்டாவதில் ஆரம்பித்து முதலுக்கு வருகிறேன். பாசுர மடல் இதுவரை மெய்ஞான தத்துவங்களைத் தொடவில்லை. ஒருமாதிரி சமய வரலாற்றைத்தான் சொல்லி வருகிறது. வரலாறு என்னும் போது சமூகப்பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நான் சங்கரரின் அத்வைதத்தை விளக்கவில்லை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக விழுமியங்களைத்தான் (social values) சொன்னேன். மேலும் அக்கட்டுரையில் சொன்ன மாதிரி மெய் ஞானிகளும் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். புத்தன் செய்தது, சங்கரன் செய்தது, இராமானுசர் செய்தது இவையெல்லாம் அவ்வகை எதிர்கொள்ளலே. அது அவர்களின் சமூகக்கடமையும் கூட. அவர்களின் மெய்ஞானக்கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் முன்னமே சொல்லப்பட்டதுதான் என்கிறார். மறுக்கவில்லை. அதைத்தான் காலத்தின் தேவை அறிந்து அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். வரலாறு என்று பார்த்தால் இது புரியும்.

முதல் கேள்வி, ஏன் மதப் புரட்சி என்று சொல்லவேண்டும்? மெய்ஞானமும், மூட நம்பிக்கைகளும் நெல்லும், பதரும் போல சேர்ந்தே வளர்ந்து இருக்கின்றன. அவ்வப்போது களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. உளவியல் கண்ணேட்டத்தில் பார்த்தால் மனது எந்த மாற்றத்தையும் உடனே ஒத்துக் கொள்வதில்லை. மாற்றங்கள் சமூகத்தை பாதிக்கும் போது புரட்சி என்ற பெயர் பெருகிறது. இராமானுசர் செய்தது புரட்சிதான் - வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால். ஜே.கிருஷ்ணமூர்த்தி செய்தது புரட்சிதான். இந்த மனிதர்களின் சிந்தனைகள் பல லட்சக்கணக்கான மனதை தொட்டு மாற்றத்தைக் கொண்டு வரும் பொது ஒரு புரட்சி அங்கு தெரிகிறது.

பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை _தமிழ் மொழியில்_ நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம். சமிஸ்கிருதம் இந்திய பண்பாட்டைத்தாங்கி நிற்கும் பண்டைய மொழி. அதன் தாக்கம் பரவலாக எல்லா மொழிகளிலும் இருக்கிறது. தமிழிலும் அது காணக்கிடைக்கிறது. அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் தனக்கென சில விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு தனித்துவம் சொண்டு நிற்கிறது. பாசுர வரலாறு அதைத் தொட்டுச் செல்கிறது.

பாசுர வரலாறு சொல்வதால் என்னை "சுத்த வைணவன்" என்று ஒதுக்காதீர்கள். வைணவம் தமிழுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. தமிழின் இன்றைய செழுமைக்கு வைணவம் பெரும் பங்காற்றி இருக்கிறது. தனிப்பட்ட அளவில் எனக்கு எம்மதமும் சம்மதம்தான். பாசுரம் சொல்லும் போது நான் வைணவனாக இருந்தால்தான் ஆழ்வார்களின் இதயத்தை புரிந்து கொள்ள முடியும். கண்ணன் என்னும் கருத்தில் நம்பிக்கை இல்லாமல், பக்தி என்றால் என்னவென்று தெரியாமல் பாசுரம் சொல்லமுடியாது. அப்படிச் செய்வது பாவமாகும். எனவே பாசுரத்தில் மூழ்கும் பொது நான் வைணவன்தான். அது மூழ்கி இருக்கும் வரைதான் :-)
_________________________________________
சென்ற கட்டுரையில் ஐந்திணைக் கோட்பாட்டைச் சொல்லி பண்டைய தமிழர்கள் எப்படி தெய்வங்களை நிலத்தின் பண்பாக கொண்டனர் என்று பார்த்தோம். தொல்காப்பியர் நான்கு நிலங்களைத்தான் பிரதானமாகச் சொல்கிறார்:

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே


(தொல். அகத். நூற்பா. 5)முல்லைத் தெய்வம் கண்ணன் (மாயோன்); குறிஞ்சித் தலைவன் கந்தன் (சேயோன்); மருதக் கடவுள் இந்திரன் (வேந்தன்); நெய்தற் கடவுள் வருணன் என்று அறியக்கிடைக்கிறது. "தொல்காப்பியர் பாலைக்கு தெய்வமும் வேண்டிற்றிலர்: பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்" என்று நக்கீரர் சொல்கிறார்.

ஐந்தினைக்கடவுளரைச் சொல்லும் போது, "சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்" என்னும் முறைபற்றி "மாயோன் மேய காடுறை உலகம்" எனத்துவங்குகிறார் என்று கொள்ளலாம். முல்லைக் கடவுளாக கண்ணன் நிற்பதால் இவனது கோவில்கள் முதலில் காடும் காடு சார்ந்த பகுதிகளிலுமே இருந்திருக்க வேண்டும். திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் இவைகளை நோக்குங்கால் அது புரியும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நிலங்களிலும் இவன் கோவில்கள் வந்திருக்க வேண்டும். வைணவ திருப்பதிகளின் இரத்தினமான திருவரங்கம் மருத நிலத்தில் நிற்பதே அதன் சான்று.

பக்தி இயக்கத்தின் தோற்றம் பரிபாடலில் தெளிவாய் தெரிகிறது.

தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ
அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ


(பரிபாடல் 3/63-68)சங்கத்தின் தொடர்ச்சிதான் பாசுரங்களும், பக்தி இயக்கமும். இப்பாடல் திருமழிசையின் வாயில் எப்படி வருகிறது பாருங்கள்:

ஊனில் மேய ஆவிநீ: உறக்கமோடுணர்ச்சிநீ
ஆனில் மேய ஐந்தும்நீ: அவற்றுள் நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ
யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ; இராமனே!

(திருச்சந்தவிருத்தம் 94).பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை தமிழ் மொழியில் நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம்.

Date: Sun, 26 Oct 1997 12:01:59 +0100

6 பின்னூட்டங்கள்:

  Anonymous

Thursday, February 07, 2008

Dear Sir,
Whatever may be the case,let us
concentrate on the studies of Pasuram in the easy way.Since all are in a hurry,your writings are immensely valuable;that is to say
kottai neekki godhu neekki godukkapadum PALAchulaikal.....
sreedhara

  N.Kannan

Thursday, February 07, 2008

நன்றி நண்பரே!

பிரபத்தி என்பதை விளக்கும் போது இறைவன் நாம் வேண்டுவதால் மட்டும் இரங்குகிறான் என்றில்லை, அவன் எப்போதும் அருள் செய்து கொண்டுதான் இருக்கிறான் என்பார்கள். ஆயின் அதை முழுமையாய் கிரகித்துக் கொள்ள முடியாதவாறு பல்வேறு உளத்தடைகளை நாம் உருவகித்துக் கொள்கிறோம். அத்தடைகள் நீங்கும் போது பலாச்சுளையின் சுவை கிடைக்கிறது.

  குமரன் (Kumaran)

Thursday, February 07, 2008

கண்ணன் ஐயா.

மடல் பதினொன்றிலோ பன்னிரண்டிலோ இந்தக் கேள்விகளை உங்கள் நண்பர் வைப்பதற்கு முகாந்திரமானதைத் தொட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. அடுத்து அந்தப் பகுதிகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். :-)

//பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை _தமிழ் மொழியில்_ நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம்.
//

அருமையாகச் சொன்னீர்கள். இதனைப் புரிந்து கொண்டவர்கள் மிகவும் குறைவு. தமிழறிவு கொண்டவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். நேரடியாக தமிழ் இலக்கியங்களிலும் இலக்கிய சமய வரலாறுகளை அறியாதவர்களும் இதனைப் புரிந்து கொள்ளுதல் கடினம்.

// "தொல்காப்பியர் பாலைக்கு தெய்வமும் வேண்டிற்றிலர்: பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்" என்று நக்கீரர் சொல்கிறார்.//

இப்படி நக்கீரர் சொன்னது எங்கே என்று சொல்லமுடியுமா ஐயா? உடனே நினைவிற்கு வந்தால் சொல்லுங்கள். தேடிப் பார்க்கவேண்டும் என்றால் சிரமம் வேண்டாம்.

//ஐந்தினைக்கடவுளரைச் சொல்லும் போது, "சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்" என்னும் முறைபற்றி "மாயோன் மேய காடுறை உலகம்" எனத்துவங்குகிறார் என்று கொள்ளலாம்.//

ஆகா. இதையே தான் நானும் என் பதிவில் இந்தத் தொல்காப்பியப் பகுதியைப் பற்றிப் பேசும் போது சொன்னேன். :-)

நீங்கள் தந்திருக்கும் பரிபாடற்பகுதியையும் படித்திருக்கிறேன்; திருச்சந்தவிருத்தப் பாசுரத்தையும் படித்திருக்கிறேன். ஆனால் அவை இரண்டிற்கும் உள்ள தொடர்பினைச் சிந்தித்ததில்லை. அருமை.

  N.Kannan

Thursday, February 07, 2008

//இப்படி நக்கீரர் சொன்னது எங்கே என்று சொல்லமுடியுமா ஐயா? உடனே நினைவிற்கு வந்தால் சொல்லுங்கள். தேடிப் பார்க்கவேண்டும் என்றால் சிரமம் வேண்டாம். //

இறையனார் அகப்பொருள்
நூற்பா 1, உரை

நன்றி குமரன்.

  குமரன் (Kumaran)

Tuesday, January 13, 2009

சென்ற இடுகையில் சூரிய வழிபாட்டைப் பற்றி கேள்விக்குறி இட்டிருந்தீர்கள். அங்கே பின்னூட்டமாக 'ஞாயிறு போற்றுதும்' பற்றி சொன்னேன். இங்கே நீங்களே நக்கீரரின் வாய்மொழியாக பாலைக்குக் கொற்றவையும் ஆதித்தனும் தெய்வங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். பாலைக்குக் கொற்றவை தெய்வம் என்று அறிந்திருந்தேன். ஆதித்தனும் என்பது எனக்குப் புதிய செய்தி. வெம்மையால் குறிஞ்சியும் மருதமும் திரிவது பாலை என்பதால் சூரியன் அதற்குக் கடவுளாக இருப்பது பொருத்தமே.

இந்த இடுகையை முன்னரே படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். இப்போது முதல் மடலிலிருந்து தொடங்கிப் படித்து வரும் போது இன்னொரு முறை இந்தப் பின்னூட்டம். :-)

  நா.கண்ணன்

Tuesday, January 13, 2009

மிக்க நன்றி குமரன். இம்மடல்கள் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன் எழுதியவை (2009). அப்போதிருந்த புரிதல் வேறு, இப்போதைய புரிதல் வேறு. நமது மரபு பற்றிய புரிதல் அறிய, அறிய விரிவடைகிறது. நீங்கள் ஓர் தும்பி. உங்களது ஆர்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளட்டும்.