e-mozi

பாகம் 2: 005 கற்கும் கல்வி செய்வேனும் யானே!

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் மேலைக் கலாச்சாரத்தில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. அது கீழைக்கலாச்சாரத்தில் இல்லை. ஏனெனில் இந்திய மரபில் இறைவனை உணர்தல் என்பது அறிவின் பாற்பட்டே உள்ளது. இதை ஞான மார்க்கம் என்பர். அறிவியலில் எத்தகை நுண்ணிய, தீர்க்கமான பார்வைகளுண்டோ, அவையனைத்தும் ஞானமார்க்கத்திலும் உண்டு. எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது. இந்த வசதி ஒரு மேலைத்திய விஞ்ஞானிக்கு இல்லை. டார்வின் தன் கோட்பாட்டை முன் வைத்த போது கிறிஸ்தவ தத்துவம் (christian doctrines) அதற்குத்தடையாக இருந்தது. விவிலிய முதல் ஏற்பாட்டின்படி, இறைவன் மனிதனைப்படைத்தது 5000 வருடங்களுக்கு முந்தி என்று இருக்கிறது. எகிப்திய கலாச்சாரம் கோலோட்சிய காலங்கள் அவை! அதே நேரத்தில், இந்தியப்பாரம்பரியத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் உயிர்கள் தோன்றி நூற்றுத்தொண்ணூத்தாறு கோடியே, எண்பத்தைந்து லட்சத்து, மூவாயிரத்து நூற்று ஒன்பது வருடங்கள் ஆகின்றன என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய 2 பில்லியன் வருடங்கள் (1,968,503,109). இது நவீன அறிவியல் பார்வையுடன் ஒத்துப்போவதாக உள்ளது. (நூல்: ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம், தஞ்சை சர்ஸ்வதி மகால் வெளியீடு, 1997. ஆசிரியர் எஸ்.சுதர்சனன்)

ஆச்சர்யம் என்னவெனில் இப்போதுள்ள நவீன வேதிம, இயற்பியல் உபகரணங்கள் இல்லாமல் இவர்களால் எப்படி? இப்படியானதொரு காலக்கணக்கைச் சொல்லமுடிந்தது? அப்படியெனில், பிரபஞ்சத்தில் மறைபொருளாய் இருக்கும் தரவுக்கிடங்கை (database) அணுகும் ஆய்வுமுறை இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக்கல்வி முறை என்ன? அது இப்போதும் சாத்தியப்படுமா?

இப்படியொரு கேள்வி கேட்டோமெனில் நமது பனுவல்களை கொஞ்சம் வெட்கமின்றி, கூச்சமின்றி அணுகும் வாய்ப்புக்கிடைக்கிறது. நவீன உலகில், விஞ்ஞானி, விஞ்ஞானம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மீகவியலர் ஆன்மீகம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டிற்குமான ஊடுபாயல் (crosstalk) இருக்கக்கூடாது என்ற எழுதாத சட்டமொன்றுள்ளது. அதனால் பலருக்கு இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதில் கூச்சம்.

விஞ்ஞானிகளிடமே கூட இது பற்றியெல்லாம் பேசுவது கூச்சமளிக்கும் செயலே. உதாரணமாக, Till Kekule என்பவர் பென்ஜீன் மூலக்கூறு கண்டு சொன்ன வரலாறு, இன்றும் அறிவியல் உலகில் விவாததிற்கு உள்ளாகும் பொருள்:

"...I turned my chair toward the fire place and sank into a doze. Again the atoms were flitting before my eyes. Smaller groups now kept modestly in the background. My mind's eye sharpened by repeated visions of a similar sort, now distinguished larger structures of varying forms. Long rows frequently rose together, all in movement, winding and turning like serpents; and see! what was that? One of the serpents seized its own tail and the form whirled mockingly before my eyes. I came awake like a flash of lightning. This time also I spent the remainder of the night working out the consequences of the hypothesis."

ஆக, இதை நம்மொழியில் சொல்வதானால் `அருளிச்செயல்`. அதாவது, பிரபஞ்ச ஆக்கம், நிர்மாணித்தல், காத்தல், அழித்தல் சம்மந்தமான எல்லா சேதிகளும் எங்கோ ஒரு மாகணினியில் (super computer), ஒரு சேவியில் (Server) உள்ளது. அதை அணுகுவதற்கான access code சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத்தெரிவதில்லை.

ஏனிப்படி சொல்ல வேண்டியுள்ளது எனில், ஒரு உயிர் உருவாகும் போது, ஆண் அணுவும், பெண் அணுவும் சேர்ந்தவுடன், ஒரு மாபெரும் transcription of code நடக்கிறது! அதாவது, உலகில் காணும் எல்லா உயிரினங்களின் வாழ்வியல் சேதி DNA, RNA எனும் மூலக்குறில் குறிமவடிவில் (encoded, enscription) உள்ளது. இருபால் உயிரினங்களின் தோற்றம் இம்மூலக்கூறு சேர்க்கையிலும், இக்குறிம மொழிபெயர்பிலும் அமைந்துள்ளது. இது அனைத்திற்கும் பொது. ஆயினும், ஒரு யானை யானையாகவும், ஒரு மனிதன் மனிதனாகவும் மாறுவது விந்தை. அது மட்டுமல்ல, முதல் சேர்க்கையில் முட்டையும், விந்துவும்தான் சேர்கின்றன. அந்நிலையில் ஒரு மாறுபடாத (undifferentiated) கரு, மெல்ல, மெல்ல ஒவ்வொரு உறுப்பாக மாறுபடுவதும் விந்தையே! அறிவியல் இது, இது, இன்னின்ன முறையில் மாறுபடுகிறது என்றளவில் சொல்லி நிறுத்திக்கொள்கிறது. ஏன்? எப்படி எனும் கேள்விகளுக்கு விடையில்லை. ஏன் ஒரு செல் பல்வேறாக பெருகுகிறது? எப்படி ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்றுக் கொள்கிறது? பல்வேறு வடிவங்கள் ஏற்றுக்கொண்டபின் இதயம், இதயமாகவும், கல்லீரல், கல்லீரலாகவும் தொடந்து செயல்பட ஆணையிடுவது யார்? எதன் கட்டளையில், இவை கட்டுப்பட்டு செயல்படுகின்றன? மேல் தோல் கிழிந்தால் ஒட்டிக்கொள்கிறது, சில நேரம் முறிந்த எலும்பு கூட ஒட்டிக்கொள்கிறது. ஆனால் நரம்பு முறிந்தால் மீண்டும் வளருவதில்லை (regeneration). ஏன்? மூளையில் கூட, பாதிக்கப்பட்ட பகுதிகளின் செயல்களை பிற பாகங்கள் ஏற்று நடத்துகின்றன!மூளை இயங்கும் விதமே இவ்வித ஆச்சர்யத்திற்குரியதுதான். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய ஒரு வீடியோயை என் கவனத்திற்கு ஒரு அன்பர் கொண்டுவந்தார். இதில் ரெக்ஸ் எனும் சிறுவன் மூளை குன்றிய நிலையில் இசையின் நுணுக்களை மிக எளிதாக அறிந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இந்த வீடியோவில் மூன்று சிறுவர்/சிறுமிகளின் வாழ்வு காட்டப்படுகிறது. தமிழகத்தில் இதை musical prodigy என்பார்கள். பாலமுரளி கிருஷ்ணா இம்மாதிரி வரம் பெற்றவர். ஆனாலும், இவர்கள் போல் அல்லாமல் உடல் ஊனமுற்ற நிலையிலும் இப்படி வரம் பெற்று வாழ்வது சிறப்பு இல்லையா?


Watch CBS Videos Online

இக்குழந்தைகளுக்கு இந்த வரம் எப்படி அமையப்பெறுகிறது? மூளை என்பதுதான் என்ன? அது சேதிகளை எப்படி சேகரிக்கிறது? எங்கு, எப்படி சேர்த்து வைக்கிறது? எப்படிப் புரிந்து கொள்கிறது? புரிந்துகொள்வது யார்? மூளை மட்டும்தானா? இசை கேட்கும் போது உடலில் புல்லரிப்பு ஏன் வருவானேன்? மூளை மட்டும் அனுபவிப்பதாகத் தெரியவில்லையே! நம்மாழ்வார் சொல்வது போல் உடலெங்கும் கரந்து பரவியிருக்கும் உயிர் அல்லவோ இசையை அனுபவிக்கிறது? இந்த இசை அனுபவம், ஒருவருக்கு மட்டும் சொந்தமா? இல்லையே! எல்லோரும் அனுபவிக்கிறோமே! மனிதர்கள் மட்டுமா? பல்வேறு விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட அனுபவிக்கின்றனவே! தாவரங்களுக்கு மூளையுண்டா? கேள்விகள்தான் நிற்கின்றன. பெரிய விஞ்ஞானி Stephen Hawking. ஐன்ஸ்டைனுக்கு அடுத்து என்கிறார்கள். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் மிகவும் ஆச்சர்யமான வகையில் பிரபஞ்ச உண்மைகள் பற்றிச் சொல்கிறார் (கணினியின் உதவியுடன்). இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்கும் போது மூளைதான் எல்லாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மூளைச்சாவு (brain death) என்பதையே உயிரின் கடைசி நிலை என்று இப்போது கணக்கிடுகிறோம். மூளை ஒரு பொறி போலும். உடற்பொறியின் சாவி அங்குள்ளது போலும். மூளை எனும் சாவி கெட்டுப்போனவுடன் உயிரியக்கம் நின்று விடுகிறது. அதுவரை அதை இயக்கியது யார் எனும் கேள்வியுடன்!

எதற்குச் சொல்ல வருகிறேன் எனில், ஆன்மீகப்பேச்சில்தான் mysticism இருக்கிறது என்றில்லை. அறிவியலிலும் mysticism உண்டு. நிறைய உதாரணங்கள் தேடி எடுக்க முடியும். நாம் இங்கு அறிவியலை mystify செய்ய வரவில்லை. பிரபஞ்ச அமைப்பே, பெரிய பிரம்மிப்பாய் உள்ளது! அதன் படி நிலைகளை, அது செயல்படும் விதத்தை என்று நாம் அறியப்போகிறோம்? எப்படி அறியப்போகிறோம்?

அறிவியல் ஒருவழி. முன்பு சொன்னது போல், அறிவியல் என்பது வேதாந்த மார்க்கமே. இங்கு எந்த முரணுமில்லை. பேச்சு முறைகள், அணுகுமுறைகள், பரிபாஷைகள் கொஞ்சம் மாறுபடும். ஆனால் பேதமற்ற நெஞ்சுடன் பார்க்கப் பழகினால் நம்மாழ்வாரகட்டும், Stephen Hawking ஆகட்டும், இவர்கள் பேசுவது பொது உண்மை பற்றியே என்பது புலப்படும். அந்த உண்மையைக் கண்டறியும் ஆர்வத்தில், இந்திய அணுகுமுறை என்ன? இதன் நோக்கு என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

அடிப்படியாக ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே!


நான் யார் என்று இது நாள் வரை அறிந்திலேன். நான் என்பது இந்த உடலும், அதன் இச்சைகளும், அதன் முரண்பாடுகளும் என்றிருந்தேன். ஆனால், ஒரு இனிய பொழுதில் நீ வந்து நான் என்பது நீயே என்று காட்டினாய். நான் உன் உடைமை என்றும் காட்டினாய். இனி, இக்கேள்விக்குள் எப்படிச் செல்வது என்பதையும் நீயே வந்து காட்டியருள வேண்டும்!

பாகம் 2: 004 இந்தியப் பரிணாம நோக்கு

அறிவியலை விஞ்ஞானிகளிடம் விட்டு, ஆன்மீகத்தை ஆச்சார்யர்களிடம் விட்டு, விட்டு நம்ம வேலையை பார்த்துக்கொண்டிராமல் ஈதென்ன விசாரம் என்று வினவலாம்.

காரணமிருக்கிறது.

விஞ்ஞானி என்பவன் எங்கோ தேவலோகத்திலிருந்து பிறந்தவன் அல்ல. அவனும் இச்சமூகம் உருவாக்கிய ஒரு பிரஜைதான். இச்சமூகத்தின் சிந்தனைக் குழம்பில் ஊறிய ஒரு துளிதான். அவனை மற்றோரிடமிருந்து பிரிப்பது, அவன், அறிவு, அவன் நெறியான செயல்பாடு, திறந்த போக்கு போன்றவை. அறிவியல் என்பதும் இச்சமூகத்தின் ஒரு நிருவனம்தான். அதன் சிறப்பு அதன் அணுகுமுறைதான். அதாவது research methodology.

விஞ்ஞானிக்கும், மெய்ஞானிக்கும் பொதுவாய் இருப்பது அறிவு (ஞானம்). அங்கிருந்துதான் இருவருக்குமே inspiration என்பது வருகிறது. மேலும், அறிவியல், தத்துவத்தின் கட்டுமானத்திலேயே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறது. நல்ல அறிவியல் வர நல்ல தத்துவக் கோட்பாடுகள் அவசியம். இந்த இடத்தில் தத்துவ ஞானி உயர் இடத்தில் உள்ளான். முனைவர் என்பதை ஆங்கிலத்தில் doctor of philosophy என்கிறோம். Doctor of Biochemistry என்றோ doctor of Cosmology என்றோ சொல்வதில்லை. எனவே தத்துவமே அறிவின் உயர்பீடம்.

மெய்ஞானவியலை தத்துவங்கள் என்றுதான் சொல்கிறோம். நாம் உருவகப்படுத்திப்பார்க்கும் அனைத்துக் கடவுளரும் அடிப்படையில் தத்துவங்களே. மும்மூர்த்திகள் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களைச் சொல்ல வந்தது. சாத்வீகம் - விஷ்ணு, தமஸ் - சிவன், ரஜோ - பிரம்மா. மேலும் இப்படி விளக்குவார்கள். எனவே அறிவியலில் research methodology இருப்பது போல் மெய்யியலில் வேதாந்தம், சித்தாந்தம் என்ற research methodology உண்டு. அங்கும் எதையும் தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்வதில்லை. அசட்டுத்தனமான தி.க பிரச்சாரங்கள் சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகளைக் கேலி செய்ய வந்தன. அதன் பின்னுள்ள தத்துவங்கள் விளக்கப்படும் போது அவை கேலிக்குரியவை அல்ல என்பது புரியும்.

விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் வாழ்வும், இயற்கையுமே பரிசோதனைக் கூடமாக, ஆய்வு பொருளாக, கற்பக தருவாக அமைகின்றன. டார்வின் H.M.S Beagle எனும் கப்பலில் பயணப்பட்ட போது கலப்பகஸ் தீவுக்கூட்டகளில் உயிரியல் பரிமாணத்திற்கான வித்து கிடைத்தது. 20 வருடங்கள் தன் கொள்கையை வெளியிடாமல் ஊறப்போட்டிருந்தார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று அவர் வாழ்ந்த எலிசபெத் அரசாட்சி காலத்தில் சொல்லமுடியவில்லை. ஆயினும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்பட்டது எனில் Alfred Russel Wallace எனும் இன்னொரு ஆங்கிலேயர் (ஆஸ்திரேலியர்) மலேரியக் காய்ச்சலில் நோவுற்ற போது கனவுபோல் பரிணாமக் கோட்பாடு அவருக்குத்தோன்ற அவர் இது குறித்து முதல் கட்டுரை வடித்துவிட்டார். ஆக, பரிணாமவியலும் ஒருவகையில் அருளிச்செயலே!

ஆழ்வார்களுக்கு பூரண அருளால் இது போன்ற பல்வேறு கோட்பாடுகள் தோன்ற அவைகளை பாசுரங்களாக வடித்து வைத்தனர்.

இரண்டு முறையிலும், அடிப்படையாக இயற்கையே ஆசானாக உள்ளது. உதாரணமாக வேதாந்த முறையில் ஈஸ்வரனைப் பற்றி விளக்க வரும் போது ஆதிசங்கர பகவத் பாதாள், நம்மை வைத்தே (அதாவது ஜீவனை வைத்தே) விளங்கச் சொல்வார். இப்படி, கண்களுக்குப் புலனாகும் பரு உலகையும்,உயிர்களையும் முதலில்சுட்டிக்காட்டி, அதற்கு ஆதாரம் எது என்பதை உணர்த்துவது உபநிஷத்தின் வழி (நன்றி தேவ்). இதைச் “சாகா சந்த்ர ந்யாயம்” என்பர்.

இதை எளிதாக விளக்கும் பாடல்:

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே.


(கைவல்ய நவநீதம்) (நன்றி. மின்தமிழ்)

எனவே ஸ்தூல உடம்பைக்காட்டி, அதன் சூட்சுமங்களை விளங்கச் செய்து சூக்கும சொரூபமான மூலத்தைக்காட்டுவது நமது சம்பிரதாயம். எனவே மெய்ஞானிகளுக்கும் முறையான methodology உண்டு. இந்த முறையை hermeneutic science என்பர்.

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே


உதாரணமாக உடலில் உயிர் எங்குள்ளது? என்று கேட்டால் எதைக் காட்டுவது? கையில் உள்ளதா? மூக்கில் உள்ளதா? இல்லை மூளையில் மட்டும் உள்ளதா? எங்குள்ளது. அது உடல்மிசை கரந்தெங்கும் பரவி இருக்கிறது. அது போல், விசும்பு, வெளி, நீர், நிலம், எரி எனும் ஐம்பூதங்களில் படர் பொருளாக உள்ளான் இறைவன்.

இதை எந்த methodology கொண்டு அறிவது? என்று கேட்போருக்கும் நம்மாழ்வார் பதில் சொல்கிறார், உளன்! யார் உளன்? உடம்பில் உயிர் எப்படிக் கரந்து பரவியுள்ளதோ, அது போல் இறைவன் பிரபஞ்சத்தில் உளன்! இதை, எதைக்கொண்டு அறிவது?

உளன்! சுடர்மிகு சுருதியுள்!!

அவன் சுருதி எனப்படும் வேதத்தின் உள்ளே methodologyயாக உள்ளான். வேதம் நன்கு கற்கும் போது அவன் இருப்பு வெளிப்படும். சரி, வேதமறியாத நம் போன்றோருக்கு கதி? சுவாமி வேதாந்த தேசிகர் சுட்டியது போல், திருவாய்மொழியே நமக்கு வேதம். இதில் இல்லாத கருத்து இல்லை. இதில் புரியாத விளக்கமில்லை! எனவே, சுடர்மிகு சுருதியான திருவாய்மொழியில் “அவன் உளன்”.

ஆகா! அதனால்தான், திருவாய்மொழி கொண்டு உலகைக்காண முயல்கிறோம். இறைவனை வேறு எங்கும் தேடவேண்டாம், “உளன்! சுடர்மிகு சுருதியுள்”. அவன் எழுத்தாகவே உள்ளான். அவன் பிரதியாகவே (text) உள்ளான். அவன் அணுகுமுறையாகவே உள்ளான்.

இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்? மெய்ஞான வழியில் விஞ்ஞான உண்மைகளுக்கு பின்புலம் காட்ட? (தொடர்வோம்)

பாகம் 2: 003 பரிணாமம் உண்மையா?

நாத்திகம் எனக்கு இயற்கையாக வந்ததொன்றில்லை. புகுத்தப்பட்ட ஒன்று. முதல் நிலையில் திராவிட கழகம் அப்பழியை ஏற்கிறது. வீட்டைவிட்டு வெளியேறினால் சண்முகப்பட்டர் வீடு. அவர் வீட்டுச் சுவரிலேயே எழுத்திருப்பான், `கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லவே இல்லை` என்று. பாவம் அவரும் வெள்ளையடிக்க, அடிக்க, இவனும் அழுத்தமாக எழுதிவைப்பான். ஒருநிலையில் `இது கடவுளுக்கே வெளிச்சமென அவரும் விட்டுவிட்டார். பள்ளி செல்லும் இளம் வயதில் இது உறுத்தியது. ஆயினும், தெருவில் உள்ள எல்லோரும், ஏன்? ஊரிலுள்ள எல்லோரும் கோயிலுக்கு வருவதாலும், பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஏறக்குறைய திருநீறு அணிந்து வருவதாலும், தி.கவின் இக்கூற்று என்னை அதிகம் பாதிக்கவில்லை.

பெரிய மனக்குழப்பம் வந்தது அமெரிக்கன் கல்லூரியில்தான். உயிரியல் எடுத்ததுதான் வம்பு. அமெரிக்கன் கல்லூரி கிறிஸ்தவக்கல்லூரி, கல்லூரிக்குள்ளே தேவாலயமுண்டு. ஆனால், உயிரியல் பேராசிரியர் ஜே.சி.பி.ஆபிரஹாம் மட்டும் நாத்திகராகவே இச்சூழலில் இருந்தார். அவர் உயிரியல் பாடமெடுக்கும் முறை அங்கு பிரசித்தம். அவ்வளவு நல்ல ஆசிரியர், ஆனால் கடவுள் வேண்டாம் என்றிருந்தார். கல்லூரிக்காலங்களில் இயல்பாக இருக்கும் மத, மதப்பு, இளமை, எதிர்க்கும் குணம் எல்லாம் சேர்ந்து அவர் சொல்வதை நம்ப வைத்தது. அதிலும் எனக்கு உயிரியல் பரிணாமம் (evolutionary biology)என்பது இயல்பாகவே பிடித்த பாடம். அதில் விற்பன்னர் ஜே.சி.பிதான்.

அவர் படித்த காலங்களில் பரிணாமவியலார் (evolutionist)என்றாலே கடவுள் வேண்டாம் என்று சொல்லுவோர் என்றிருந்தது. எனவே உயிரியல் விந்தைகள் எல்லாம், இயற்கை தானாக உருவாக்கியதே என்று சொல்லித்தந்தனர். எவ்வளவு, நம்பமுடியாத உயிரியல் எடுப்பும் (biological adaptation) நெடிய காலக்கெடுவில் தானாக சாத்தியப்படக்கூடியதே! என்று நம்பினர் இவர்கள். அது உண்மையாகவே இருக்கலாம். இயற்கைத்தேர்வு எனும் முறை நெடிய காலக்கணக்கில் கசடுகளைக் கழித்து, உயர்வானவற்றை தக்கவைக்கும் தன்மையதே. ஆயினும், இதற்காக பிரபஞ்ச காரணி என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்வதை என்னால் இப்போது கேள்வி கேட்கமுடிகிறது. அப்போது அந்த முதிர்ச்சியும், தெளிவுமில்லை.

அதுமட்டுமில்லை, அப்போது, இயற்கையை ஆராய்வதற்கு இப்போதுள்ள வசதிகளும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வழங்கியிருக்கும் அளப்பரிய வசதியால் இயற்கையின் சந்து, பொந்திற்குளெல்லாம் புகுந்து படமெடுக்க முடிகிறது. மிகவும் கொடூரமான விலங்குகள் என்று நம்பியிருந்த விலங்குகளெல்லாம் ‘இதயம்’ உடைய (ih love & compassion) விலங்குகளே. அன்பு காட்டினால், பிரதி அன்பு செய்யக்கூடியவையே என்பதை நவீன உயிரியல் ஆவணமாக்கிக் காட்டியிருக்கிறது!

உதாரணமாக சிங்கம், புலி, ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை இவையெல்லாம் வீட்டு நாய் போல் பழகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவற்றின் குடும்ப வாழ்வை நோக்கினால், தாய்மை என்பதைப் பூரணமாகக் காணமுடிகிறது. குடும்ப வாஞ்சை என்பதில் மனிதருக்கு எவ்விதத்திலும் அவை சளைத்தவை இல்லை என்று தெரிகிறது.

பின் ஏன் இந்த, Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence என்ற ஒரு அபிப்பிராயம்? காரணம் விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக இவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல.

அடுத்து, இவைகளைப்படமெடுக்கும் போதுதான் தெரிகிறது, நமக்கும் அவைகளுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன என்று. யானையைப் பலவருடங்களாக ஆவணப்படுத்தும் ஆய்வாளர் சொல்கிறார், ஒவ்வொரு யானையும் ஒருவிதம். கூச்சமான யானைகளுண்டு, சவுடால் யானைகளுண்டு, முரட்டு யானைகளுண்டு. இப்படி, எத்தனை குணங்களை நம்முள் காணமுடியுமோ அத்தனையும் அங்குண்டு. உண்மையில் அங்கிருந்துதான் நமக்கு, வழி, வழியாய் வந்திருக்கின்றன.

இயற்கையில் பிறக்கும் போதே யார் நண்பன், யார் எதிரி என்று தெரிந்துவிடுகிறது. ஒரு யானைக்குட்டி ஒரு மானை, பகைவன் என்று கருதுவதில்லை. ஒரு மான், வரிக்குதிரையை எதிரி எனக்காண்பதில்லை. ஆனால், குள்ள நரியானாலும் அது பகைவன் என்று தெரிந்துவிடுகிறது. அதன் பல்லைப் பார்த்தா தெரிகிறது? இல்லை! உள்ளுணர்வு. அது என்ன உள்ளுணர்வு?

மலேசியாவில் ஏதோவொரு அநாமத்தான கடற்கரையில் முட்டை வைத்து, குஞ்சு பொறித்துவிட்டால், இந்தக்குஞ்சு பெரிதாகி உலகில் எங்கிருந்தாலும் அதே கடற்கரைக்கு வந்து முட்டை இடுகிறது. முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு யார் சொல்லித்தந்தது? சாலமன் மீன் வருடாவருடம் சொல்லொணா இடர்களைத்தாண்டி, எதிர்நீச்சல் போட்டு கடலிலிருந்து, ஆற்றுக்கு வந்து, மலையருவி தாண்டி, எங்கு முட்டை பொறித்ததோ அதே குட்டைக்கு வந்து முட்டை பொறித்து சாகிறது. ஆம், முட்டை பொறித்தவுடன் அதுவரை உயிரைப்பிடித்துக் காத்திருந்த ஏதோவொரு வலு, போய் விடுகிறது. பட்டென மல்லாக்க செத்து மிதக்கிறது? என்ன அதிசயம்? என்ன ஒழுங்கு?

இந்த உயிரியல் ஒழுங்கு, பிற பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து மாறுபட்டிருக்கிறதா? எல்லாமே ஒரு ஒழுங்கில் ஊழி, ஊழியாக செயல்பட்டு வருகின்றன.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். உயிரியல் பரிணாமம் என்பது ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிக்கு வளர்ச்சியடைதல் என்று. ஓரரறிவுப் பிராணியிலிருந்து, ஆறறறிவுப் பிராணியாக மாறுவது பரிணாமமென்று. இத்தனை நாள் நம்பியிருந்தேன், ஆழ்வார்களை அறியும் வரை!

முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்! அப்பாடா! என்றிருக்கிறது. இதைவிட பெரிய விந்தை என்னவுள்ளது?

அறிவு என்பது பெரிய காவியம் பாடுவதில் மட்டும் உள்ளதா?
அறிவு என்பது பெரிய பாலம் கட்டுவதில் மட்டும் உள்ளதா?
அறிவு என்பது அணுகுண்டு செய்து பல்லாயிரம் மக்களை மாய்ப்பதில் மட்டுமுள்ளதா?

ஆராய்ந்து பார்த்தால் அறிவு என்பது பூரணமாக எங்கும் வியாபித்து இருப்பதே உண்மை. அது ஒரு கொசுவின் உடம்பில் சைதன்யமாக இருப்பது அதிசயம். அதே அறிவு ஒரு டைனோசார் உடம்பில் வாழ்ந்தது அதிசயம். ஒரு செல் பாக்டீரியாவிற்கு அறிவில்லையா என்ன? எங்கில்லை அறிவு.

ஒவ்வொரு உயிரும் தத்தம் விதிவகை பிரபஞ்ச ஒழுங்கில் செயல்பட்டு வருகின்றன. யானை, யானையாகவே வாழ்கிறது. கழுதைப்புலி போல் கடித்துக் கொதறுவது இல்லை. அது, அதற்கு ஒரு தர்மம். புலி கொல்லும் போது, பிராண வேதனை அதிகமில்லாமல் குரல்வளைக் காற்றை ஒரே கடியில் வாங்கிக் கொல்கிறது. ஆனால் கழுதைப்புலி கிடைத்த இடத்தில் கடித்துக்கொதறுகிறது. சாகும் மான் பாதி உடல் போன பின்னும் மிரண்டு தவிக்கிறது. சிங்கம் ஒரே அடியாக பிடறியில் அறைந்து ஒரு நொடியில் கொன்று விடுகிறது. ஆனால், குழவி ஒரு புழுவை உயிருடன் பிடித்து, அதை ஒரு ஊசி போட்டு அப்படியே பதப்படுத்தி, தன் குஞ்சு பொறித்தவுடன் சுடச்சுட சாப்பிடும்படி செய்கிறது?

இதற்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தது யார்? இவ்வளவு சூட்சுமம் உள்ளே எப்படிப் போனது?

பரிணாமம் என்ற கொள்கையே உண்மையா? என்ற கேள்வி வந்துவிட்டது இப்போது! இத்தனை நாள் நான் எழுதிவந்த மடல்களில் சொல்லிய பரிணாமம் உண்மையா? நான் படித்த பாடம் உண்மையா?

இல்லை! என்று தோன்றுகிறது. அறிவு பூரணமாக எங்கும், எப்போதுமுள்ளது. அது எடுக்கும் உயிர் நிலைக்கு ஏற்றவாறு பல்வேறுவகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறது.

அவரவர்தமதமது அறிவறிவகைவகை
அவரவரிறையவர் எனவடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலரிறையவர்
அவரவர்விதிவழி அடையநின்றனரே

எனும் திருவாய்மொழி ஏதோ நமக்குச் சொல்லியது போல் படுகிறது. ஆனால், இதையொரு பிரபஞ்ச விதிபோல் சொல்லிச்செல்கிறான் மாறன் சடகோபன். ஒவ்வொரு உயிரியும் தத்தமது அறிவு வகையென ஒரே பிரபஞ்ச அறிவைப் பிரதிபாலிக்கிறது. அறிவு வகையாக நிற்கும் போது அவையவைக்கு இட்ட கட்டளையைச் செய்து முடிக்கின்றன. முதலையாகப் பிறந்தால் கடித்துக்குதறுவதில் தவறில்லை. அது, அதன் சுயதர்மம். ஆனால், மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்கு இட்ட விதியை அறியாமல் விலங்கு போல் வாழ்வது தவறு. வேடிக்கையாகச் சொல்லுவார்கள், எறும்பாகப் பிறந்துவிட்டால் எறும்புக்கடவுளுண்டு என்று. அவரவர் இறையவர், குறைவிலர். ஆயினும் இவையெல்லாம் கடைசியில் அடைகின்ற ஒரு பாதம் இறைவன் ஒருவன்தான்.

ஏனப்படி சொல்ல வேண்டும்?

எல்லா உயிர்களின் அடிநாதமாக தழுவல், கூடல், கலத்தல், உயிர்த்தல், என்று இருக்கிறது. இவையாவும் செய்யும் போது அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறது. வாழ்வு அனைத்துமே அந்த ஒரு கணத்திற்குத்தான். அப்போது காணும் இன்பம் பல்வேறாகப் பேசபடுகிறது. வாலை இன்பம். தந்திரம் என்று. மனித வாழ்வு என்று வரும் போது தனியாக இருந்து போகக்கூட்டு இல்லாமலே இதை அடையவும் முடிகிறது. அதை யோகம், சமாதி, சத்தோரி என்கிறோம்.

எபடிச் சொன்னாலும், எல்லா இயக்கத்திற்கும் ஆதாரமாக உள்ளது, அன்பு ஒன்றுதான். இதைக் கண்டு பிடித்துவிட்டனர் நம் முன்னோர்கள்.


சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப்
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே?


இதற்கு வேறொரு வாசிப்பு கொடுத்துப் பாருங்கள். சூதனாய், கள்வனாய் என்பதை பல்வேறு பிறவி என்று கொண்டால், பல்வேறு வகையான உயிர் வலையில் பட்டிருந்த போதும், அவன் புந்தியில் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்.

விலங்கிற்கு மனது இல்லையென்று யார் சொன்னது?

நரகும் சுவர்க்கமும் நாண்மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் - துரிசற்றுச்
சாதகம் போல் நாதன் தனருளே பார்த்திருத்தல்
கோதில் அடியார் குணம்.


என்பது நமக்குச் சொன்னது? என்று எப்படிக் கொள்வது. பெரும்பாலான விலங்கு வாழ்வு அவனிட்ட வழக்காய், அவனருள் வேண்டித்தானே! இருக்கிறது திறந்த வெளியில், உண்ணக்காத்திருக்கும் விலங்கின்றும் காத்து ஒரு மான் குட்டிக்குப் பிரசவம் பார்ப்பது யார்? குட்டிக்கு பிறந்தவுடனே தத்தி, தத்தி நடக்கப்பண்ணுவது யார்? இயற்கையில் காணும் அத்தனை விலங்கியல் தந்திரங்களையும், சூட்சுமங்களையும் கற்றுக் கொடுப்பது யார? புலிக்கு கடிக்கத்தெரியுமென்றால் மானுக்கு ஓடத்தெரியும். சிங்கத்திற்கு அடிக்கத்தெரியுமென்றால் முள்ளம் பன்றிக்கு அடிக்கவிடாமல் தடுக்கத்தெரியும். கிட்ட வந்தால் ஒரு ஓட்டிற்குள் நுழைந்து கொள்ளும் தந்திரம் நத்தைக்கும், ஆமைக்கும் சொல்லித்தந்தது யார்? அவை யாரிட்ட வழக்கிற்கு வாழ்கின்றன?

அரங்கன் கோயிலில் ஒரு சிற்பி. செதுக்கிக்கொண்டிருக்கும் போது, உளி பட்டு, கல் சிதற, உள்ளிருந்து சிறு தேரை தாவி ஓடியது. அது கண்ட சிற்பி, அப்படியே விட்டான் வேலையை! கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் வாழ்வளித்து காக்கும் ரங்கன் இனி என்னையும் ரக்ஷிக்கட்டுமென்று.

”துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருக்கும் கோது இல் அடியார் குணம்".

என்பது இதுதான். நம்மைச் சூழ்ந்து அவனுள்ளான். அவனுள் ஐக்கியத்தின் ஐக்கியமாய் நாமுள்ளோம்.

இன்று, இப்பொழுதே போகட்டும் வல்லுயிர் சாபங்கள்! கலி கெடட்டும். அவை நைந்து போன நமனுக்கு. நமக்கில்லை என்று உழிகொண்டு வாழ்வோம். வாழ்க! வாழ்க!!

பாகம் 2: 002 மந்திரமாவது வாழ்வு!

Mr Magorium's Wonder Emporium எனும் படம் பார்த்தேன்.

கீழுள்ள சுட்டியில் படத்தின் முழுவிவரம் காணலாம்

http://www.magorium.com/

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் Dustin Hoffman நடித்திருக்கிறார். குடும்பத்துடன் காணவேண்டிய படம். படத்தின் கதை எளிது.

குழந்தைப்பருவத்தில் கண்ணில் தெரியும் மாந்தீரகத்தை சாகும்வரை தக்க வைத்துக்கொள்! என்பதே கதைக்கரு!

குழந்தைப்பருவம் அவ்வளவு ஆச்சர்யமான பருவம். உலகமே ஒரு மாய உலகமாக. அதீத நிகழ்வுகளை மிகச் சாதரணமாகக் கொள்ளும் பருவம்.

ஆனால் போகப்போக மனிதன் சமூகத்தால் மாற்றப்படுகிறான். மிக அழுத்தமான ஆளாக, பகுத்தறிவுப் பகலவனாக மாறிவிடுகிறான். அத்தோடு அவனது கனவுகள், கற்பனைகள், மாயாஜாலங்கள் சமாதியாகிவிடுகின்றன.

ஆனாலும், மனிதன் குழைந்தப் பருவத்திற்கு ஏங்காத பொழுதில்லை.

ஜெர்மனியில் குழந்தைப்பருவத்தை சிறப்பிக்கும் வகையில் 6-7 வயதுவரை பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை! கட்டாயமாக ரைம்ஸ் சொல்லி, 2ம் கிளாஸ் பாடத்தை கீழ்கிண்டர்கார்டனில் படித்துக்குடிக்க வேண்டியதில்லை! ஏன்? அப்பருவம், எப்பளுவுமில்லாமல், சுதந்திரமாக, தான் காணும் ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் பருவம். அது போனால் வாராது என்பதால்தான். எனவே குழந்தைப்பருவத்தை பள்ளியெனும் சிறையில் அடைக்காமல் ஜெர்மனியில் நீட்டித்துள்ளனர்.

இதை நம்மவர் புரிந்து கொண்டுள்ளனரா? நிச்சயமாக. கண்ணன் எனும் கதாபாத்திரமே குழந்தைப்பருவத்தின் மாந்தீரீகத்தன்மையை தக்கவைக்க வந்ததுதான். கண்ணனின் பாலலீலைகளில் மயங்காத கவிகளுண்டோ? காவியுடையுடுத்தி, கடும் விரதமிருக்கும் சங்கரர்கூட கிருஷ்ணலீலையில் ஈடுபடுகிறார். காஞ்சிப்பெரியர், "பகவான் எப்படி மகிழ்வாக கோகுலத்தில் ஆடுகிறான்! நாம் அழுவதற்குப் பிறந்தவர்கள்" என்பது போல் பேசியிருக்கிறார்.

கவிஞர்களுக்கு இயல்பாகவே மென்மையான உள்ளம் என்பதால் கிருஷ்ணலீலை சுவைக்கிறது. விஞ்ஞானிகளுக்கோ ஆர்வத்தின் காரணமாக குழந்தை மனம் வந்துவிடுகிறது. அவர்களைக் "குழந்தை போன்ற முதியவர்கள்" என்றுதான் மேலை உலகில் அழைக்கின்றனர். கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் (William Wordsworth ) ஒருநிலை போய் child is the father of man என்று சொல்லிவிடுகிறார். அது என்ன? என்று ஆழ்வார்களைக் கேட்டால்தான் தெரியும்!

வால்ட் டிஸ்னி குழந்தை உலகை சினிமாவில் தக்க வைக்க என்றே பிறந்தவர். இக்கருத்தை வைத்து எத்தனை அற்புதமான படங்கள் வந்துவிட்டன!

கண்ணனின் பாலலீலைகள் 10 வயதிற்குள் அது முடிந்துவிடுகின்றன. கண்ணன் கோகுலத்தை விட்டு போனபின் அவனும் ஏங்குகிறான் அப்பருவத்திற்கு.

தத்துவ சாரமாக, வாழ்வின் நிலையாமை குறித்து, மூப்பு குறித்து, பிணி குறித்து, இடும்பை இடும் பை குறித்து, பரத்துவம் குறித்து எல்லாம் பேசினாலும், ஆழ்வார்களுக்கு பிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் கிருஷ்ண லீலைதான். ஏனப்படி? அங்குதான் வாழ்வின் ரகசியமே அடங்கியிருக்கிறது.

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே

என்கிறார் திருக்குருகூர் ஞானதேசிகன். ஏதாவது புரிகிறதா? ஈடு இல்லையெனில் ஒன்றும் புரியாது. இறைவனைப்பற்றி சொல்லும்கால், 'அதனை உடையவன், இது இல்லாதவன்' என்று இருதன்மையாலும் நினைக்க முடியாதன். நிலம், விசும்பு எனும் எப்பரப்பிலும் உள்ளவன், உருவமுடையவன், அருவமானவன்,புலனொடு புலனாக உள்ளவன், ஆயினும் புலன் வழி இடர்களைச் சாராமல் இருப்பவன். இப்படிப்பரந்த நலன்களையுடைய ஒருவனை நாம் நம் வழித்துணைவனாகப் பெற்றோமே! என்கிறார். முதல் பத்து முழுவதும் இப்படி ஒரே ஞானதத்துவங்கள்தான்.

ஆனால் மூன்றாம் பத்து வருவதற்குள் பத்துடை அடியர்க்கு எளியவன் என்று கண்ணன் ஆப்புண்ட கதைக்குப்போய்விடுவார். பரம்பொருளை ஆப்பிடமுடியுமோ? யசோதையால் தாம்புக்கயிற்றை வைத்து கட்டிட முடியுமோ? ஆனால், அப்பருவத்தில்தான் அவ்வளவு எளிமை! அத்திறம் கண்டு மயங்கி நிற்கிறார் நம்மாழ்வார்.

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ

நம்ம பட்டர்பிரான் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு 'மம்மு' சாதித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று குழந்தை நிலாவைப்பார்த்து இதைக் கொண்டு வா! என்கிறது. ஏதோ வீட்டில் விளையாடும் 'சொப்பு' என்பது போல்! கேட்பவன் யார்? தெய்வீகக்குழந்தை! குழகன், சிரீதரன்!! கூவினால் வந்து சேர் என்கிறார் பட்டர்பிரான். எல்லாம் சாத்தியமே! ஈதெல்லாம் அவன் லீலாவிபூதிதானே!

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா

இவனை வெறும் பாலகனென்று பரிபாவம் செய்யாதே மாமதீ! இவன் பண்டொருநாள் உன்னையும், என்னையும், சகலலோகங்களையும் ஆலிலைச் சிறுவனாக இருந்து விழுங்கியன். எனவே மரியாதையாக நீயே கீழே வந்து விளையாடு என்கிறார். ஏன் முடியாதா? என்ன?

உண்டா யுலகேழ் முன்னமே,
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8

இவன் ஏன் கோகுலத்தில் வந்து நின்று வெண்ணெய் உண்டான் என்பதற்கு நம்மாழ்வார் ஒரு புதுக்கதை சொல்கிறார். இவன் முன்பு உலகமெல்லாம் உண்டவன். அப்போது வயிற்றில் நிறைய மண் தங்கிப்போய் சோகை பிடித்துவிட்டது. அதைப்போக்க சிறு மானுடராய் பிறந்து வெண்ணெய் உண்டு நோய் போக்கிக்கொண்டானாம்.

எவ்வளவு பேசமுடிகிறது பாருங்கள்!

மாயையை, மாயையால்தான் நீக்க முடியும். நாரண மூர்த்தி மாய வலையை விரித்து லீலாவிபூதியை உருவாக்கினால், நாமும் மாயையை உண்மை என்று நம்பி ஆனந்தித்து, குதூகலித்து மகிழும் போது 'மாயைக்கே' சந்தேகம் வந்துவிடுகிறது ;-)

கஷ்டப்பட்டு தவமிருந்து, உடலை வருத்தி, உலகே மாயம் என்று காண்பதற்குப்பதில், பசித்த போது புசித்து, வேர்த்த போது குளித்து, உலக வாழ்வை அதன் போக்கில் ஆனந்திக்கும் போது அவனின் மாயாவிபூதியை உள்ளபடி அனுபவித்ததாகிறது! பிறகென்ன? இறைவனை அனுபவிக்கத்தானே பிறப்பு?

காணும் காட்சியெல்லாம் மந்திரம், செய்யும் செய்கையெல்லாம் மந்திரம், பேசும் பேச்செல்லாம் மந்திரம், இப்படி எழுதி வீசி கணினித்திரையில் வாசிப்பதும் மந்திரம்!!

பாகம் 2: 001: குற்றம் நீங்கின வேதங்களே!

நம்மாழ்வாரை இவ்வளவு கொண்டாடக் காரணமென்ன?

ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் (ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்) ஒரு பெரிய கட்டுரையே எழுதிக் கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.
ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.
நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும் வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.
நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு இத்தொடர் உதவும்.

மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை
நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!


குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால் நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன் வாக்கால்.

இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்? நம் குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள் தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது! வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து 'தாமரைப் புரட்சியை' கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவது போல் தோன்றுகிறது.

திருக்குறளை புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப் பொருந்துவதுதான் ஆச்சர்யம்!

'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'


அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின் பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின், செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது.

மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால் வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும் (sterilize him from social stigma), தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று தெரிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவன் வேதத்தைப் பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம் என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும் அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும் காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச் செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல் சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது முக்கியமா? இல்லை அதை எடுத்துச் செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும் திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார் வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.

அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின் சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி, எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில் இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது.

எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய மின்தமிழ் முயல்கிறது!

சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால் பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர். சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும் உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில் அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின், காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்" என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது.

அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!