e-mozi

பாகம் 2: 001: குற்றம் நீங்கின வேதங்களே!

நம்மாழ்வாரை இவ்வளவு கொண்டாடக் காரணமென்ன?

ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் (ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்) ஒரு பெரிய கட்டுரையே எழுதிக் கொண்டிருக்கிறார்.

நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.
ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.
நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும் வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.
நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு இத்தொடர் உதவும்.

மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை
நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!


குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால் நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன் வாக்கால்.

இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்? நம் குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள் தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது! வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து 'தாமரைப் புரட்சியை' கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவது போல் தோன்றுகிறது.

திருக்குறளை புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப் பொருந்துவதுதான் ஆச்சர்யம்!

'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'


அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின் பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின், செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது.

மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால் வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும் (sterilize him from social stigma), தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று தெரிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவன் வேதத்தைப் பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம் என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும் அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும் காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச் செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல் சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது முக்கியமா? இல்லை அதை எடுத்துச் செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும் திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார் வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.

அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின் சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி, எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில் இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது.

எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய மின்தமிழ் முயல்கிறது!

சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால் பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர். சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும் உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில் அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின், காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்" என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது.

அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!