e-mozi

பாகம் 2: 002 மந்திரமாவது வாழ்வு!

Mr Magorium's Wonder Emporium எனும் படம் பார்த்தேன்.

கீழுள்ள சுட்டியில் படத்தின் முழுவிவரம் காணலாம்

http://www.magorium.com/

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் Dustin Hoffman நடித்திருக்கிறார். குடும்பத்துடன் காணவேண்டிய படம். படத்தின் கதை எளிது.

குழந்தைப்பருவத்தில் கண்ணில் தெரியும் மாந்தீரகத்தை சாகும்வரை தக்க வைத்துக்கொள்! என்பதே கதைக்கரு!

குழந்தைப்பருவம் அவ்வளவு ஆச்சர்யமான பருவம். உலகமே ஒரு மாய உலகமாக. அதீத நிகழ்வுகளை மிகச் சாதரணமாகக் கொள்ளும் பருவம்.

ஆனால் போகப்போக மனிதன் சமூகத்தால் மாற்றப்படுகிறான். மிக அழுத்தமான ஆளாக, பகுத்தறிவுப் பகலவனாக மாறிவிடுகிறான். அத்தோடு அவனது கனவுகள், கற்பனைகள், மாயாஜாலங்கள் சமாதியாகிவிடுகின்றன.

ஆனாலும், மனிதன் குழைந்தப் பருவத்திற்கு ஏங்காத பொழுதில்லை.

ஜெர்மனியில் குழந்தைப்பருவத்தை சிறப்பிக்கும் வகையில் 6-7 வயதுவரை பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை! கட்டாயமாக ரைம்ஸ் சொல்லி, 2ம் கிளாஸ் பாடத்தை கீழ்கிண்டர்கார்டனில் படித்துக்குடிக்க வேண்டியதில்லை! ஏன்? அப்பருவம், எப்பளுவுமில்லாமல், சுதந்திரமாக, தான் காணும் ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் பருவம். அது போனால் வாராது என்பதால்தான். எனவே குழந்தைப்பருவத்தை பள்ளியெனும் சிறையில் அடைக்காமல் ஜெர்மனியில் நீட்டித்துள்ளனர்.

இதை நம்மவர் புரிந்து கொண்டுள்ளனரா? நிச்சயமாக. கண்ணன் எனும் கதாபாத்திரமே குழந்தைப்பருவத்தின் மாந்தீரீகத்தன்மையை தக்கவைக்க வந்ததுதான். கண்ணனின் பாலலீலைகளில் மயங்காத கவிகளுண்டோ? காவியுடையுடுத்தி, கடும் விரதமிருக்கும் சங்கரர்கூட கிருஷ்ணலீலையில் ஈடுபடுகிறார். காஞ்சிப்பெரியர், "பகவான் எப்படி மகிழ்வாக கோகுலத்தில் ஆடுகிறான்! நாம் அழுவதற்குப் பிறந்தவர்கள்" என்பது போல் பேசியிருக்கிறார்.

கவிஞர்களுக்கு இயல்பாகவே மென்மையான உள்ளம் என்பதால் கிருஷ்ணலீலை சுவைக்கிறது. விஞ்ஞானிகளுக்கோ ஆர்வத்தின் காரணமாக குழந்தை மனம் வந்துவிடுகிறது. அவர்களைக் "குழந்தை போன்ற முதியவர்கள்" என்றுதான் மேலை உலகில் அழைக்கின்றனர். கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் (William Wordsworth ) ஒருநிலை போய் child is the father of man என்று சொல்லிவிடுகிறார். அது என்ன? என்று ஆழ்வார்களைக் கேட்டால்தான் தெரியும்!

வால்ட் டிஸ்னி குழந்தை உலகை சினிமாவில் தக்க வைக்க என்றே பிறந்தவர். இக்கருத்தை வைத்து எத்தனை அற்புதமான படங்கள் வந்துவிட்டன!

கண்ணனின் பாலலீலைகள் 10 வயதிற்குள் அது முடிந்துவிடுகின்றன. கண்ணன் கோகுலத்தை விட்டு போனபின் அவனும் ஏங்குகிறான் அப்பருவத்திற்கு.

தத்துவ சாரமாக, வாழ்வின் நிலையாமை குறித்து, மூப்பு குறித்து, பிணி குறித்து, இடும்பை இடும் பை குறித்து, பரத்துவம் குறித்து எல்லாம் பேசினாலும், ஆழ்வார்களுக்கு பிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் கிருஷ்ண லீலைதான். ஏனப்படி? அங்குதான் வாழ்வின் ரகசியமே அடங்கியிருக்கிறது.

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே

என்கிறார் திருக்குருகூர் ஞானதேசிகன். ஏதாவது புரிகிறதா? ஈடு இல்லையெனில் ஒன்றும் புரியாது. இறைவனைப்பற்றி சொல்லும்கால், 'அதனை உடையவன், இது இல்லாதவன்' என்று இருதன்மையாலும் நினைக்க முடியாதன். நிலம், விசும்பு எனும் எப்பரப்பிலும் உள்ளவன், உருவமுடையவன், அருவமானவன்,புலனொடு புலனாக உள்ளவன், ஆயினும் புலன் வழி இடர்களைச் சாராமல் இருப்பவன். இப்படிப்பரந்த நலன்களையுடைய ஒருவனை நாம் நம் வழித்துணைவனாகப் பெற்றோமே! என்கிறார். முதல் பத்து முழுவதும் இப்படி ஒரே ஞானதத்துவங்கள்தான்.

ஆனால் மூன்றாம் பத்து வருவதற்குள் பத்துடை அடியர்க்கு எளியவன் என்று கண்ணன் ஆப்புண்ட கதைக்குப்போய்விடுவார். பரம்பொருளை ஆப்பிடமுடியுமோ? யசோதையால் தாம்புக்கயிற்றை வைத்து கட்டிட முடியுமோ? ஆனால், அப்பருவத்தில்தான் அவ்வளவு எளிமை! அத்திறம் கண்டு மயங்கி நிற்கிறார் நம்மாழ்வார்.

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ

நம்ம பட்டர்பிரான் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு 'மம்மு' சாதித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று குழந்தை நிலாவைப்பார்த்து இதைக் கொண்டு வா! என்கிறது. ஏதோ வீட்டில் விளையாடும் 'சொப்பு' என்பது போல்! கேட்பவன் யார்? தெய்வீகக்குழந்தை! குழகன், சிரீதரன்!! கூவினால் வந்து சேர் என்கிறார் பட்டர்பிரான். எல்லாம் சாத்தியமே! ஈதெல்லாம் அவன் லீலாவிபூதிதானே!

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா

இவனை வெறும் பாலகனென்று பரிபாவம் செய்யாதே மாமதீ! இவன் பண்டொருநாள் உன்னையும், என்னையும், சகலலோகங்களையும் ஆலிலைச் சிறுவனாக இருந்து விழுங்கியன். எனவே மரியாதையாக நீயே கீழே வந்து விளையாடு என்கிறார். ஏன் முடியாதா? என்ன?

உண்டா யுலகேழ் முன்னமே,
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8

இவன் ஏன் கோகுலத்தில் வந்து நின்று வெண்ணெய் உண்டான் என்பதற்கு நம்மாழ்வார் ஒரு புதுக்கதை சொல்கிறார். இவன் முன்பு உலகமெல்லாம் உண்டவன். அப்போது வயிற்றில் நிறைய மண் தங்கிப்போய் சோகை பிடித்துவிட்டது. அதைப்போக்க சிறு மானுடராய் பிறந்து வெண்ணெய் உண்டு நோய் போக்கிக்கொண்டானாம்.

எவ்வளவு பேசமுடிகிறது பாருங்கள்!

மாயையை, மாயையால்தான் நீக்க முடியும். நாரண மூர்த்தி மாய வலையை விரித்து லீலாவிபூதியை உருவாக்கினால், நாமும் மாயையை உண்மை என்று நம்பி ஆனந்தித்து, குதூகலித்து மகிழும் போது 'மாயைக்கே' சந்தேகம் வந்துவிடுகிறது ;-)

கஷ்டப்பட்டு தவமிருந்து, உடலை வருத்தி, உலகே மாயம் என்று காண்பதற்குப்பதில், பசித்த போது புசித்து, வேர்த்த போது குளித்து, உலக வாழ்வை அதன் போக்கில் ஆனந்திக்கும் போது அவனின் மாயாவிபூதியை உள்ளபடி அனுபவித்ததாகிறது! பிறகென்ன? இறைவனை அனுபவிக்கத்தானே பிறப்பு?

காணும் காட்சியெல்லாம் மந்திரம், செய்யும் செய்கையெல்லாம் மந்திரம், பேசும் பேச்செல்லாம் மந்திரம், இப்படி எழுதி வீசி கணினித்திரையில் வாசிப்பதும் மந்திரம்!!

9 பின்னூட்டங்கள்:

  கிருஷ்ணமூர்த்தி

Saturday, March 14, 2009

/ஆனால் போகப்போக மனிதன் சமூகத்தால் மாற்றப்படுகிறான். மிக அழுத்தமான ஆளாக, பகுத்தறிவுப் பகலவனாக மாறிவிடுகிறான். அத்தோடு அவனது கனவுகள், கற்பனைகள், மாயாஜாலங்கள் சமாதியாகிவிடுகின்றன./
நன்றாகச் சொன்னீர்கள் கண்ணன் சார்.
வைணவம் வளர்த்த தமிழில், கண்ணன் இளவயதுச் சேட்டிதங்களைச் சுவை பட நீங்களும் அனுபவித்து, எங்களையும் அதில் ஆழ்ந்துபோகச் செய்கிறீர்களே, மிகவும் ரசித்தேன். நன்றி.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, March 14, 2009

படத்தின் அறிமுகம் நல்லா இருக்கு கண்ணன் சார்! இந்த மாதம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில், Wonder Emporium-த்தை சேர்த்துக்கிடறேன்! :)

Dustin Hoffman-இன் Kung Fu Panda சூப்பரா இருக்கும்! ஆனால் குரல் நடிப்பு! அனிமேஷன் படம்-ல! :)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, March 14, 2009

//காவியுடையுடுத்தி, கடும் விரதமிருக்கும் சங்கரர்கூட கிருஷ்ணலீலையில் ஈடுபடுகிறார். காஞ்சிப்பெரியர், "பகவான் எப்படி மகிழ்வாக கோகுலத்தில் ஆடுகிறான்! நாம் அழுவதற்குப் பிறந்தவர்கள்" என்பது போல் பேசியிருக்கிறார்//

ஹிஹி!
பிரம்மனி மானச சஞ்சரரே-ன்னு பிரம்மம் பத்திப் பாட வந்த சதாசிவப் பிரம்மேந்திரர் கூட...
மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே-ன்னு பாடுகிறார்! பேரும் உருவமும் இல்லாப் பிரம்மத்துக்கு, மயிலிறகு சொருகிப் பார்க்க வேண்டிய நிலைமை! :)

அதான் கண்ணபிரானின் வசீகரம்! கண்ணபிரானின் மாயம்! கண்ணபிரானின் குழந்தைத்தனம் :)

வாழ்க குழந்தைத்தனம்! வளர்க அதன் மாயங்கள்!

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, March 14, 2009

மாயோன், மாயவன் என்று மாயம் பேரிலேயே அமைந்து விடுவது, கண்னன் எப்படிப்பட்ட வளர்கலைப் பாத்திரப் படைப்பாக நம் பண்பாட்டில் கொண்டாடப் பட்டிருக்கான் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு!

இப்படி கனவு காணும், மாயம் செய்யும் குழந்தை தான், இந்திரப் பூசையையும் தடுத்து நிறுத்தி, செய்யும் தொழிலே தெய்வம் என்று பகுத்தறிவும் பேசியது!

கனவில் கண்ட மாயம்,
கனவில் கண்ட நியாயம், நடைமுறையில் இருந்த அநியாயத்தை ஜெயித்தும் காட்டியது!

  நா.கண்ணன்

Saturday, March 14, 2009

நன்றி நண்பர்களே!

இது பற்றி சிலரிடம் பேசியபோது, எல்லோருக்கும் குழந்தைப்பருவமென்பது மந்திரம் நிரம்பிய (magical) பருவமாக இருபதில்லை என்றார்கள். உண்மையா?

இந்த மாந்த்ரீகத்தை கடைசிவரை தக்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  Anonymous

Saturday, March 14, 2009

Vanakkam sir,
Varuga,varuga engal Azhwarkkdiyane,where have you been for so long?kannan kazhalgalluku pallandu, in Thiruvaimozhi passuram (for Thiruperai perumal)vellai suri sangodu (7-3-1) kannan wants to see the childrens play so periya thiruvadi is not standing infront of him.
ARANGAN ARULVANAGA.
anbudan
k.srinivasan.

  நா.கண்ணன்

Saturday, March 14, 2009

தொண்டர்குழாமுடன் கூடி நம் கண்ணனின் லீலைகளை அனுபவிப்பது மிகவும் மகிழ்வாகத்தான் உள்ளது. கிருஷ்ணானுபவம் எப்போதும் உள்ளத்தில் ஊறியபடி இருந்தாலும், புதிய இடுகைகளை எப்படிப் போட்டால் பழைய 108 - முதல் பாகம் கெடாமல் இருக்கும் எனும் வழி இதுவரை தெரியவில்லை. அடியார் குமரன் உந்திவிட, சரி தொடர வேண்டியதுதான் என நினைத்தவுடன் வழியும் பிறந்துவிட்டது. பெரியதிருவடி நகர்ந்தது போல் :-)

  Rajesh narayanan

Monday, May 04, 2009

Dear sir,
i appreciate ur site.
fentastic marveless. what a details sir. how its. please keep it up ur great seva.

  Rajesh narayanan

Monday, May 04, 2009

i like to subscibe ur message. ammapa2000@gmail.com